Advertisement

அத்தியாயம் 32

வருண், மதுமிதா திருமணம் குறித்துப் பேசுவதற்காக விஜய், வருண், பிரியம்வதா, மதுமிதா நால்வரும் விஜய்யின் அலுவலக அறையில் கூடி இருந்தனர்.

விஜய்யின் இருக்கையில் ப்ரியம்வதா அமர்ந்திருக்க மேஜையின் விளிம்பில் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி அமர்ந்திருந்தான் விஜய். மதுவும் வருணும் எதிரில் இருந்த  நீளிருக்கையில் அமர்ந்திருந்தனர்.

“இப்போ என்னதான் சொல்றே மது?”

“இப்போ எங்க ஆஃபீஸ்ல பண்ணிக்கிட்டிருக்கிற ப்ராஜெக்ட் முடிஞ்சப்புறம் எங்க வீட்ல பேசலாம்னு சொல்றேன் அத்தான்”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் மது? முதல்ல நீ அங்கே வேலை பார்த்துதான் ஆகணுமா? பேசாம ஜாப் ரிசைன் பண்ணிட்டு இங்கே ஜாயின் பண்ணிக்கோ”

 சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் “இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிச்ச சமயம் உங்க கல்யாணம் அப்போதான் முடிஞ்சுருந்துச்சு. ஆரம்பிச்சுட்டு நான் பாதில போயிருவேனான்னு கேட்ட எங்க பாஸ்கு மாட்டேன்னு பிராமிஸ் பண்ணி இருக்கேன் அத்தான். அதை மீற முடியாது.”

“ப்ராஜக்ட் பத்தின சீக்ரெட் டிடைல்ஸ் எல்லாம் எனக்கும் பாசுக்கும் மட்டும்தான் தெரியும்.இந்த நிலைமைல நான் வெளிய வந்தா நல்லா இருக்காது. இன்னும் மூணு மாசம்தான். ப்ராஜெக்ட் முடிஞ்சுரும். இந்த ஒர்க் முடிஞ்சதும் நீங்க சொல்ற மாதிரியே செய்றேன். கல்யாணம் பத்திப் பேசும் போது மெண்டலா கொஞ்சம் ரிலீவ்டா இருக்கணும்னு நினைக்கிறேன் அத்தான்…”

“அதுக்கில்ல மது… உங்க வீட்ல  பேசிட்டு அப்புறம் கல்யாணம் மெதுவாக் கூட வச்சுக்கலாமே!”

“ம்ம்ஹூம்…பேசிட்டா அப்புறம் அவசரப்படுத்துவாங்க அத்தான். பெரியவங்க மைன்ட்செட் அப்பிடி… அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்களோன்னு யோசிக்கிறீங்களா? கண்டிப்பா சம்மதிப்பாங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்குது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வருண் புராணம்தான் பாடுறாங்க… பொண்ணைக் குடுக்க மாட்டாங்களா? ஒருவேளை அப்பிடி சம்மதிக்காட்டி நீங்களும் அக்காவும் விட்டுடுவீங்களா என்ன?  எனக்காகப் பேச மாட்டீங்களா?”

வருண் விஜய்யின் தம்பி என்ற விவரம் தெரியாத நிலையிலேயே மது பேசிக் கொண்டிருந்தாள். அது வருணின் ரகசியம் என்பதால் அவனே சொல்லிக் கொள்ளட்டும் என்றிருந்தனர் தம்பதியர். ப்ரியம்வதாவுக்கு விவரம் தெரியும் என்பது கூட வருணுக்குத் தெரியாது. அந்த அளவு வருணின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தான் விஜய்.

“கண்டிப்பாப் பேசுவோம் மது…அதெல்லாம் ஒரு ப்ரச்சனையே இல்ல”

“அது மட்டும் இல்ல அத்தான்… உங்க கல்யாணம் முடிஞ்சு 6 மாசம்தான் ஆகுது. அம்மா அப்பாவுக்கு எனக்குக் கல்யாணம் பண்ற எண்ணம் இப்போ சுத்தமா இல்ல. எனக்கும் இப்போதான் 22 கம்ப்ளீட் ஆகி இருக்கு. அப்பிடி இருக்கும் போது ஏன் அவசரப்படனும்? கொஞ்ச நாள் ஜாலியா லவர்ஸா இருக்கோமே!”

ஓரக்கண்ணால் வருணைப் பார்த்துக் கொண்டே அவள் பேச அவள் பிடிவாதத்தைக் கண்ட வருண் கோபத்துடன் எழுந்து, 

“இவ கேக்க மாட்டா பாஸ். விடுங்க! நடக்கிறபடி நடக்கட்டும்” என்று விட்டு விறுவிறுவென வெளியே சென்றான். 

மதுமிதா அவனைச் சமாதானப்படுத்தப் பின்னோடு ஓடினாள்.

தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவனருகில் நின்ற பிரியம்வதா “இது என்ன ஆதி இவ இப்பிடி சொல்லிட்டா… அப்பா! என்னா கோபம் வருது வருணுக்கு?”

ப்ரியம்வதா நின்றிருந்த நிலையில் அவள் பக்கவாட்டுத் தோற்றம் அவனை உசுப்பி விட “அவனுக்குக் கைக்கெட்டினது வாய்க்கு எட்டாத கோபம். ஆனா எனக்குக் கைக்கும் எட்டும் வாய்க்கும் எட்டுமே!” என்றவன் அவன் வார்த்தைகளை அவள் புரிந்து கொள்ளும் முன் அவளைத் தன்புறம் திருப்பி அவள் அமுதூறும் அல்லிமலர் இதழ்களில் அழுத்தமாகத் தன் அதரங்களைப் பதித்திருந்தான்.

திகைத்துத் தடுமாறிப் பின் நெகிழ்ந்து குழைந்தவள் சில நிமிடங்கள் பொறுத்து அவன் அவளை விடுவிக்க “போங்க ஆதி! வர வர உங்களுக்குக் குறும்பு கூடிப் போச்சு. திடீர்னு யாராவது வந்தா…”

“தலைவனும் தலைவியும் தனித்திருக்கத் தலைநுழைக்கும் தைரியம் யாருக்கு இருக்கு இங்கே?”

“ம்ம்ம்… தலைவனும் தலைவியும் தனிச்சு இருக்கிறது அந்தப்புரமா இருந்தாப் பரவாயில்லை…இது ஆஃபீஸ் ரூமாச்சே…”

அவனுக்குக் குறைவில்லாமல் அவளும் மோனை நயத்தில் பின்னி எடுக்க வாய் விட்டு சிரித்தவன் பார்வை அவளையே வருடியது.

“ஏன் ஆதி அப்பிடிப் பார்க்குறீங்க?”

“உனக்கு நிஜமாவே கஷ்டமா இல்லையாடா?”

கூந்தல் இழந்த தோற்றத்தில் அவள் வெளியே வருவது குறித்துக் கேட்கிறான் எனப் புரிந்தது அவளுக்கு…

திருப்பதியில் இருந்து வந்ததில் இருந்து அவன் அவளை அதிகம் வெளியே அழைத்துச் செல்லவில்லை.

அன்று காலை கூட வீட்டில் கண்ணபிரான் இருப்பதால் வருண் மது விஷயம் அலுவலகத்தில் பேசலாம் என முடிவு செய்து அவளிடம் தயங்கித் தயங்கிக் கேட்டான்.

அவள் சந்தோஷமாகவே சம்மதிக்கவும் “நான் வேணா உனக்கு ஒரு விக் வாங்கிட்டு வந்து தரட்டுமா?”

கேட்டவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.

“இப்படி என்னைப் பார்க்க அசிங்கமா இருக்கா ஆதி?”

சட்டென்று அவள் வாயில் ஒன்று போட்டவன், “இனிமே இப்பிடிப் பேசினா உதை விழும் உனக்கு…என் பொண்டாட்டிதான் உலகத்துலயே அழகு… அவ எப்பிடி இருந்தாலும் எனக்கு அவ அழகுதான்… அவதான் அழகு… அவ மட்டும்தான் அழகு” என்று சொல்லி முத்தமிட்டது அவள் நினைவில் வந்தது.

அவன் பதிலுக்காகக் காத்திருப்பது புரியவும் “கஷ்டம்கிறது நம்ம மனசைப் பொருத்ததுதான் ஆதி…நீங்க சொல்ற மாதிரி நான் விக் வச்சுகிட்டா அது கடவுளை ஏமாத்துற மாதிரி ஆகாதா? அதுக்கு நான் மொட்டை அடிக்காமலேயே இருந்திருக்கலாமே!”

அவள் சொல்வது அவன் அறிவுக்கு எட்டினாலும் மனது கேட்கவில்லை.

கணவனைச் சமாதானப்படுத்தும் முகமாக அவன் அருகில் வந்து அணைத்துக் கொண்டவள் அவன் கையை எடுத்துத் தன் தலையில் வைத்து விட்டுப் பின் அதே கையை அவன் தலையில் வைத்துத் தடவினாள்.

கேள்வியாகப் பார்த்தவனிடம், “உங்களை விட எனக்கு வேகமா வளருது முடி…சீக்கிரம் வளர்ந்துடும்” எனவும் கலக்கம் போய் விட, கண்களில் குறும்புடன் “ஆமா உன்னை மாதிரியே ‘அனா…குனா’ உன் முடியும்” என்றான்.

“என்னது…நான் அனா…குனா வா…”

“பின்ன இல்லையா…சரியான அவசரக் குடுக்கை…உன்னைப் போலவே இருக்கு உன் முடியும்?”

“ஆதி!” எனக் கால்களைத் தரையில் உதைத்துச் சின்னப் பிள்ளை போல் அவள் சிணுங்க அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் கிசுகிசுப்பான குரலில் “இப்படி எல்லாம் சிணுங்கி மனுஷனைப் படுத்தாதடி…அப்புறம் ஆஃபிஸ்ரூம் நிஜமாவே அந்தப்புரமா மாறிடும்” எனவும் செம்பஞ்சுக் குழம்பாக சிவந்து விட்ட முகத்தை அவன் நெஞ்சினில் புதைத்துக் கொண்டாள்.

“சரி! தலைவன் தலைவி கலந்துரையாடலை நைட் அந்தபுரத்துலயே வச்சுக்குவோம். இப்போ மது விஷயத்துக்கு வருவோம். என்ன செய்யலாம் இப்போ?”

அவன் கைகளில் இருந்து நிமிர்ந்தவள், “என்ன செய்றது! அவதான் பிடிவாதமா இருக்காளே… இப்போதைக்குக் கிடப்பில் போட வேண்டியதுதான். பார்ப்போம் வருண் சமாதானப்படுத்துறாரான்னு… இல்லைன்னா அவளா வந்து சொல்ற வரை நாமா ஒன்னும் செய்ய வேண்டாம்”

அப்போதைக்கு அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

காலம் யாருக்காகவும்  காத்திருக்காமல் ஓடிக் கொண்டிருந்தது. 

திருப்பதி சென்று வந்து மூன்று மாதங்கள் முடிந்து விட்டன. கண்கள் கலந்து, கைகள் கலந்து, உடலோடு உயிர் கலந்து ஒன்றி விட்ட விஜய் ப்ரியம்வதாவுக்கும், கண்கள் மட்டும் கலந்து கைகள் கலக்கக் காத்திருக்கும் வருண் மதுவுக்கும் வாழ்க்கை வண்ண மயமாகவே இருந்தது

……………………………………………………………………………………..

அன்று காலை மிக அழகாக விடிந்தது ப்ரியம்வதாவிற்கு. 

எழும் முன் ஒரு அழகான கனவு… அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்… வயிற்றில் ஏதோ குறுகுறுப்பு அவளை விழிக்க வைக்கிறது. 

விழித்துப் பார்க்கிறாள்… அவள் அருகில் குட்டிக் கண்ணன் மயில்பீலியோடும் இடையில் பட்டும் அதில் செருகிய புல்லாங்குழலுமாக அமர்ந்திருக்கிறான்… அவள் வியப்போடு பார்க்கிறாள்… கண்ணன் மெல்ல எழுந்து அவளை விட்டு விலகிச் செல்கிறான்… அவள் போகாதே எனச் சொல்ல முயற்சிக்கிறாள்… வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொள்கின்றன. 

கதவருகே சென்றவன் திரும்பிப் பார்க்கிறான்… என்ன ஆச்சர்யம், அவன் முகம் அவள் கணவனின் முகம் போல் அவளது ஆதியின் முகம் போல் தெரிகிறது. 

சட்டென்று விழிப்புத் தட்டுகிறது அவளுக்கு… சுற்றும் முற்றும் பார்க்கிறாள்… கண்ணனும் இல்லை, அவள் கணவனும் இல்லை. 

விஜய் எப்போதும் போல் ஐந்தரைக்கு எழுந்து ஜாக்கிங் போய் இருப்பான். ஆனால் அந்தக் கனவு…ஏதோ தோன்ற எழுந்து சென்று அங்கிருந்த நாட்காட்டியில் நாட்கணக்குப் பார்த்தாள்… அப்படி என்றால்… அவள் முகம் மலர்ந்தது. 

அந்த மலர்ச்சியுடனே “கண்ணன் வருவான் கதை சொல்லுவான்” என முணுமுணுத்துக் கொண்டே சென்று குளித்து முடித்து வந்த போது விஜய் ஜாக்கிங் முடித்து வந்திருந்தான். மின்விசிறியின் அடியில் நின்று வியர்வை ஆறிக் கொண்டே ஏதோ கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்தான்.

அவள் எப்படிச் சொல்வது எனத் தயங்கி… இப்போது சொல்வதா இல்லை  சோதனை செய்து உறுதிப்படுத்திய பின் சொல்லலாமா எனக் குழம்பி பின் சோதனை செய்து வந்த பின்பே சொல்லிக் கொள்ளலாம் என முடிவு செய்தாள்.

ஆனால் அவன் அலுவலகம் போன பின் கிட் வரவழைத்து சோதனை செய்து பார்த்து விடலாம். கணவன் மதியம் வருவானோ தெரியவில்லையே என நினைத்தவள்… அவனிடமே கேட்டு விட எண்ணி… 

“ஆதி!” 

“ம்ம்ம்…”

“இன்னிக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வருவீங்களா?”

அவள் குரல் குழைவாக ஒலிப்பதைக் கேட்டவன் படித்துக் கொண்டிருந்ததில் இருந்து தலையை நிமிர்த்தி அவள் முகம் பார்த்தான்.

அவன் மனைவி எப்போதும் அழகுதான்…ஆனால் இப்போது ஏதோ அவள் முகம் பளபளப்பதைப் போல் தோன்றியது அவனுக்கு.அதுவும் அவள் குரலில்… குறும்பு தலை தூக்க,

“வரணுமா?” என அவனும் மெல்லிய புன்னகையுடன் குழைவாகவே கேட்டான்.

அவன் குறும்பைப் புரிந்து கொண்டவள்  “ம்ஹூம் ஆதி! நான் அதுக்கு ஒண்ணும் சொல்லல”

அவன் முகத்தில் புன்னகை மேலும் விரிந்தது. அவள் அருகில் நெருங்கியவன் “எதுக்கு சொல்லல கண்ணம்மா?” எனவும் அவனை முறைத்தாள்.

“மதியம் சாப்பிட வருவீங்களான்னு கேட்டா அதுக்கு பதில் சொல்லாம என்ன விளையாட்டு இது?”

“விளையாடுற ஐடியா இதுவரை இல்லை…ஆனா உன்னைப் பார்க்கும் போது விளையாண்டா என்னன்னு தோணுது” என்றவாறே அவளைக் கைபற்றி இழுத்துக் கைவளைவிற்குள் நிறுத்தினான்.

மனைவியின் முகத்தை அன்றுதான் புதிதாகப் பார்ப்பவன் போலப் பார்த்தான். அவள் நெற்றி, கண்கள், கன்னம், உதடு என வருடியவன் “ஃபேஷியல் ஏதாவது பண்ணினியா?இல்லையே… நீ அதெல்லாம் பண்ண மாட்டியே…ஆனா முகம் திடீர்னு டாலடிக்குது…” என அவள் முகத்தை வருடியபடியே அவன் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனான். 

“அது…வந்து…”என அவள் தடுமாறவும் அவள் முகம் பற்றி நிமிர்த்தினான். 

செக்கர்வானம் போல் சிவந்து கிடந்த அந்த முகம் அவனைத் தூண்டி விட அவள் முகம் நோக்கிக் குனிந்தான். அவனுடன் இழைந்தவள் சில நிமிடங்கள் கழித்து அவன் நிமிர்ந்த போது அவன் மார்பில் சாய்ந்து “இன்னும் நீங்க எனக்கு பதில் சொல்லல ஆதி”

அவள் தலையை வருடியபடி  “என்ன தெரியணும் உனக்கு?”

“மதியம்… சாப்பிட… வருவீங்களா?” வேண்டுமென்றே ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்திக் கேட்டாள்.

“இன்னிக்கு புதன்கிழமைதானே! இன்னிக்கு முத்து க்ரூப்ஸ் சேர்மேனோட லன்ச்டா… கண்டிப்பா வர முடியாது… வேணும்னா சாயந்திரம் சீக்கிரம் வர்றேன்”

பெரியவளான பருவம் முதற்கொண்டு அவளுக்கு இதில் நாள் தள்ளியதே இல்லை.அதனால் குழந்தையாகத்தான் இருக்கும் என்பதில் அவள் மிக உறுதியாக இருந்தாள்.

ஒருவேளை தன் சந்தேகம் உண்மையாய் இருந்தால் கணவனிடம் சொல்வதற்கு மாலை வரை காத்திருக்க வேண்டுமே என நினைத்தவள் முகம் கூம்பிப் போனது.

“என்ன செல்லம்… எதுக்கு இத்தனை வருத்தம்? ஏய்! ஏதாவது புது ரெசிபி  ட்ரை பண்ணப் போறியா?சோதனை எலியா இருக்கத்தான் என்னை வரச் சொல்றியா?” என பயந்தவன் போல் கேட்க அவன் தோளில் ஒரு அடி வைத்தாள்.

“ஆமா அப்பிடி ட்ரை பண்ணினாலும் இங்கே சாப்பிட ஆளே இல்ல பாருங்க… உங்களைத்தான் தேடுறாங்க”

“அப்போ வேற எதுக்கு என்னைத் தேடுவ வதும்மா?” மீண்டும் குறும்பு பேச அவள் முகம் சிவந்தது.

பேச்சை மாற்றும் விதமாக “உங்களுக்கு ஆஃபிஸ்கு நேரம் ஆகல?”என அவனிடம் இருந்து விலகிப் போனாள்.

“பார்றா! வருவியா வர மாட்டியான்னு இவ்வளவு நேரம் என்னைக் குளிக்கப் போக விடாம நிறுத்திட்டு இப்போ ப்ளேட்டை மாத்துறியா…உன்னை…” என அவளைப் பிடிக்கப் போக… “ஆமா நீங்கதான் வர முடியாதுன்னு சொல்லிட்டீங்கள்ல… அப்புறம் என்ன” என பதில் கூறியபடி போக்குக் காட்டிக் கொண்டே அறையை விட்டு வெளியேறி விட்டவளைக் கண்டு சிரித்துக் கொண்டே குளியலறைக்குள் புகுந்தான்.

உணவு மேஜையிலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே பரிமாறியவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே உணவருந்தியவன்… கிளம்பும் போது உடன் வந்தவளின் தோள்களை அணைத்தபடியே நடந்து, “சாரிடா!ரொம்ப முக்கியமான மீட்டிங் அது…அது முடிஞ்ச பின்னால வேணும்னா கிளம்பி வரப் பார்க்குறேன்” எனவும் அவள் முகம் மலர்ந்தது.

சுற்றிலும் ஒரு முறை பார்த்து யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பிறகு அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவளை முகம் சிவக்க வைத்து விட்டே கிளம்பினான்.

முன்பு யாராவது பார்த்தால்தான் அவளிடம் நெருங்குவேன் என்றது என்ன… இப்போது சுற்றிலும் பார்த்து விட்டு அவளை முத்தமிடுவது என்ன எனக் கணவனிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கிட்டு மனம் மகிழ்ந்தவள் திட்டமிட்டிருந்தபடி வேலைகளை முடித்து விட்டு அருகிலிருந்த மருந்துக் கடை எண்ணுக்கு அழைத்து கர்ப்பத்தைப் பரிசோதிக்கும் கருவியை வரவழைத்தாள்.

அவள் கர்ப்பம் தரித்திருப்பது உறுதியாகவும் வானத்தில் பறக்கும் உணர்வுடன் இந்த விஷயத்தைக் கணவனிடம் எப்படிச் சொல்லலாம் எனக் கற்பனை செய்து கொண்டிருந்தவளின் உற்சாகம் சிறிது நேரம் கழித்து அழைத்துக் கணவன் பிறப்பித்த கட்டளையில் காற்றுப் போன பலூனாய் வடிந்தது.

“என்ன சொல்றீங்க ஆதி!”

“சாரிம்மா! ரொம்ப அவசரமா டெல்லி கிளம்ப வேண்டி இருக்குது. மதியம் மீட்டிங்கைக் கூடக் கேன்சல் பண்ணிட்டேன். ஆள் அனுப்புறேன். ரெண்டு செட் ட்ரெஸ் இன்னும் தேவையானது எல்லாம் பேக் பண்ணிக் குடுத்து விட்டுடு.”

“என்ன ஆதி இப்பிடி சொல்றீங்க…ம்ஹூம் நான் மாட்டேன்…எனக்கு இப்போவே உங்களைப் பார்க்கணும்… உடனே வீட்டுக்கு வாங்க.”

“ஏய்! பிடிவாதம் பிடிக்காதடி…நான் அமைச்சரோட மீட்டிங்க்காக போறேன். அடுத்த வாரம் ஷெட்யூல் பண்ணின மீட்டிங்…அந்த அமைச்சர் திடீர்னு ஃபாரின் போறாராம். இன்னிக்கு சாயந்திரமே அப்பாய்ன்ட்மென்ட் கிடைச்சிருக்கு”

அவளுக்குப் புரிந்தது அவன் நிலைமை. 

கொஞ்சம் யோசித்தவள் சட்டென்று, “ஒண்ணு செய்யலாம் ஆதி…நீங்க யாரையும் அனுப்ப வேண்டாம்…நானே உங்க பாக்ஸ் தயார் பண்ணி அங்கே கொண்டு வந்து தந்துடறேன். அப்பிடியே உங்களைப் பார்த்த மாதிரியும் இருக்கும்” என்று யோசனை கூறவும் “ஏன்தான் இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கிறியோ தெரியல…சரி பத்திரமா வா” என அவனும் ஒத்துக் கொண்டான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் அவனுக்குப் பிடித்த  நிறத்தில் உடை அணிந்து அவனுக்குத் தேவையானவற்றையும் தயார் செய்து எடுத்துக் கொண்டு கண்ணபிரானிடம் சொல்லிக் கொண்டு காரில் ஏறி இருந்தாள்.

‘இப்போது நேரம் பத்து ஆகிறது… இரண்டு மணிக்கு ஃப்ளைட் என்று சொன்னார். ஒரு மணிக்குக் கிளம்பினால் கூட இடைப்பட்ட மூன்று மணி நேரத்தில் ஐந்து நிமிடத் தனிமை கூடவா கிடைக்காமல் போய் விடும்’ என நினைத்துக் கொண்டே வந்தவளுக்கு அப்போது தெரியவில்லை அந்த ஐந்து நிமிடத் தனிமை கிடைத்த போது அவளால் அதைப் பயன்படுத்த முடியாமல் போகப் போகிறது என்பது.

அவள் தாம்பரத்தில் இருக்கும் அலுவலகத்தை அடைந்த போதே நேரம் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. வழியில் எல்லோரின் முகமன்களை ஏற்றுக் கொண்டு கணவனின் அறைக்குள்  நுழைந்த போதுதான் அவன் எத்தனை அவசரத்தில்  இருக்கிறான் என்பது புரிந்தது அவளுக்கு. அவனைத் தவிர இன்னும் நான்கு பேர் அந்த அறையில் ஆளுக்கொரு வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்தது தவிர அவளது இருப்பை அவன் பொருட்படுத்தவேயில்லை. அவளுக்கு மனம் மேலும் கனத்தது. பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என அவள் நினைத்த  நேரம் அவன் இருக்கையில் இருந்து எழுந்தான்.

அப்பாடா எல்லோரும் போய் விடுவார்கள், பேசி விடலாம் என அவள் நினைக்கும் நேரம் “மெலிசா! கார் வரச் சொல்லிட்டீங்களா! ப்ரியா அந்த பாக்ஸ் குடு” என அவள் கையிலிருந்த ப்ரீஃப்கேசை வாங்கியவன் அவனும் வெளியேறத் தயாரானது கண்டு அவள் முகம் விழுந்து விட்டது.

ஒவ்வொருவராக வெளியேற மெலிசா வெளியே சென்றவுடன் மனைவியின் தோளை அணைத்த வண்ணமே அவனும் வெளியேறினான்.

வலது கையில் பெட்டியும் இடது கையில் மனைவியுமாகத் தனது தனி மின்தூக்கிக்குள் நுழைந்தவன்  கதவு மூடிய மறுகணம் அவளை முன்னுக்குக் கொண்டு வந்து இறுக அணைத்து அவள் உதடுகளைத் தன்வசப்படுத்தினான்.

கணவனுடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லையே எனக் குமைந்து கொண்டிருந்தவள் அவனுடன் தனியாகத்தான் மின்தூக்கிக்குள் போகிறோம் என்பதை உணரவேயில்லை. அவன் முத்தமிடவும்தான் அவர்களது தனிமையை உணர்ந்தவளை மேலும் பேச விடாது செய்து விட்டது அந்த முத்தம்.

அவள் வந்ததில் இருந்தே வேலைக்கு இடையிலும் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தவன் இரண்டு நாள் பிரிந்திருக்க இத்தனை கவலைப்படுகிறாளே என நினைத்து அவளை ஆறுதல்படுத்த, அணைத்து முத்தமிட்டவனுக்கு அவள் காலையில் வைத்த கோரிக்கை சற்றும்  நினைவில் இல்லை.

தரைத்தளம் வந்து விட்டதை உணர்ந்து அவளை விடுவித்தவன் அவள் காதுகளில் “சாரிடா! ரெண்டே நாள்… பறந்து வந்துடறேன்…சியர் அப்” என்று கூறிய கணம் கதவு திறந்தது.

அவளை அணைத்தவாறே கார் வரை சென்றவன் அவள் தோள்களை ஒரு முறை அழுத்தி விட்டுக் காருக்குள் ஏறினான். 

அவள் முகவாட்டத்தைப் பார்த்தவனுக்கு அப்படியே எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு மனைவியிடம் செல்ல வேண்டும் போலத் தோன்றியது… ஆனால் அனைவரும் சூழ்நிலைக் கைதிகள்தானே என நினைத்து மனதைச் சமனப்படுத்திக் கொண்டான்.

கண்களில் கலக்கமும் காதலும் போட்டி போடக் கணவனுக்கு விடை கொடுத்தாள். எங்கே போகிறார்… டெல்லிக்குத்தானே… இரண்டு நாட்கள் கழித்து வந்தவுடன் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டால் போகிறது எனத் தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டவள் இந்த விஷயத்தை அவனிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத சூழ்நிலையும் வரும் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

முத்துச் சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து
மழை முத்தம் வந்து விழுந்தது  வண்ணம் பூத்து
பித்தம் ஒன்ற வளர்ந்தது முத்தம் கேட்டு
அவன் நெஞ்சில் வந்து பிறந்தது தொட்டில் பாட்டு
அங்கு தென்பொதிகை தென்றல் வந்து ஆரிராரோ பாடும்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்

Advertisement