Advertisement

இந்தக் குரல்…என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் வலது கையைப் பற்றியவன் அவளைக் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சென்று அவன் வண்டியில் ஏற்றி விட்டு சுற்றி வந்து வண்டியைக் கிளப்பப் போனான். 

பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தவள் சுய உணர்வு வந்து…. “என்  வண்டி அங்கே நிக்குது… நான் போய்…”  எனத் தடுமாறி வார்த்தைகளைக் கோர்க்க  தன் கைபேசியை எடுத்தவன் “பாண்டி! வடபழனி  விஜயா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப்ல ஒரு வண்டி நிக்குது… அதை என் அப்பார்ட்மெண்ட்ல கொண்டு வந்து விட்டுடு” என்று பேசி விட்டு வைத்தான்.

“சாவி என்கிட்ட…” என  மீண்டும் பேச ஆரம்பித்தவளைக் கண்டு கொள்ளாமல் வண்டி கிளம்பியது.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் மெல்லப் பார்வையை அவன் பக்கம் திருப்பினாள். 

அவனோ நேர்பார்வையாக சாலையைப் பார்த்து ஓட்டிக் கொண்டிருந்தான். 

கொஞ்ச நேரம் கழித்தும் அவள் பார்வையை அகற்றாமல் இருக்கவும் அவள்புறம் திரும்பியவன் சட்டென்று உதட்டைக் குவித்துக் காற்றில் ஒரு முத்தத்தைப் பறக்க விட்டான். 

அவள் திகைத்துத் தடுமாறித் தலை கவிழ்ந்து, பின் கோபம் கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்து “என்ன பண்ணினீங்க நீங்க இப்போ?” என்றாள். 

“பின்ன என்னங்க… வச்ச கண் வாங்காமப் பார்த்துட்டு வந்தா நான் எப்பிடி முன்ன பார்த்து வண்டி ஓட்டுறது…?அதுக்குத்தான் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்” என்று கண்ணடித்துச் சிரித்தான். 

அழகிய பல்வரிசை அவன் மாநிற முகத்தில் விளக்குப் போட்டதைப் போல் ஒளிர அவள் மீண்டும் அவனையே பார்க்க ஆரம்பித்தாள். 

“ப்ச்… இப்போதான் சொன்னேன்… இப்பிடிப் பார்க்காதீங்கன்னு”

 அவள் சட்டென்று பார்வையை விலக்கி வெளியே பார்த்தாள். கொஞ்ச நேரப் பயணத்துக்குப் பிறகு வண்டி ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்திருந்தது. 

மழையும் இப்போது கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க அவளை அழைத்துக் கொண்டு மின்தூக்கிக்குள் நுழைந்தான். 

பதினோராவது மாடிக்குச் சென்றவன் தன் ஃப்ளாட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றதும் அவளிடம் ஒரு துவாலையை எடுத்து நீட்டினான். 

“ம்ம்ம்… சீக்கிரம் தலையைத் துடைங்க…சளிப் பிடிக்கப் போகுது” எனவும் அவளும் வாங்கிக் கொண்டாள்.

உள்ளே சென்றவன் அவன் சட்டையையும் கைலியையும் எடுத்து வந்து கொடுத்தான்.

“என்கிட்ட வேற ட்ரெஸ் இல்ல. இப்போதைக்கு இந்த ட்ரெஸ் மாத்திட்டு உங்க ட்ரெஸ் அந்த ரூம்ல காயப் போடுங்க”

அவள் அந்த அறையில் நுழைந்து கதவை சாற்றிக் கொண்டாள்.

யோசனையுடன் உடை மாற்றி வெளியே வர சமையல் அறையில் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்டது.

அவன் தேனீர் போட்டுக் கொண்டிருந்தான். தேனீரை இரு குவளைகளில் ஊற்றி இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டு திரும்பியவனைப் பார்த்து மீண்டும் வாய் பிளந்து நின்றாள்.

முதலில் இருந்த தோற்றத்துக்கு மாறாக சாதாரண கருப்பு டி ஷர்ட், ஷார்ட்ஸ்… பல நிறக் கலவை முடி போய் விட்டது. பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றத்துடன் இருந்தவனைப் பார்த்து “எத்தனை வேஷம்தான் போடுவீங்க?” எனவும் அவன் அழகாகச் சிரித்தான்.

“சொல்றேன் முதல்ல உங்க வீட்டுக்கு போன் பண்ணி பத்திரமா இருக்கேன்னு சொல்லுங்க…”

அவளுக்கே அது தோன்றவில்லை. அவன் சொன்னது போல் செய்து முடித்தவள் விளக்கத்துக்காக அவன் முகம் பார்த்தாள்.

தான் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆபத்தான பணிகள் குறித்தும் அதனால் இப்படி நேரத்துக்குத் தகுந்த வேஷம் போடுவது குறித்தும் அவளிடம் விளக்கியவன் அவள் கைகளில் இருந்த காலிக் குவளையையும் வாங்கிக் கொண்டு சமையலறை நோக்கிச் சென்றான். 

அவன் பின்னோடு சென்றவள் “என்னதான் இருந்தாலும் இப்பிடியா பேக்கு மாதிரி வேஷம் போடுறது…?” எனவும் தன் கைகளில் வைத்திருந்த குவளைகளைக் கழுவிக் கொண்டிருந்தவன் வேலையை முடித்து விட்டு நிதானமாகத் திரும்பினான்.

“எப்பிடி வேஷம் போட்டேன்னு சொன்னே?”

அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்து கொண்டே அவன் ஒவ்வொரு அடியாக வைத்து முன்னேறியவாறு கேட்க அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.

விக்கித்துப் போய் நின்றவள் மனதுக்குள் ‘அறிவு கெட்ட மது… அவங்கியிட்டயே போய் பேக்குன்னு சொல்லி வச்சுட்டியே… அவனுக்குக் கோபம் வந்துடுச்சு போலயே…மரியாதையும் போய்டுச்சு… இப்போ என்ன செய்யப் போறே?’ என மைண்ட்வாய்ஸில் பேசிக் கொண்டிருக்க அருகில் நெருங்கி இருந்தவன் சுவரில் சாய்ந்திருந்தவளின் இருபுறமும் கை வைத்து அவளை நகர விடாமல் செய்திருந்தான். 

தலை குனிந்திருந்தவளை நோக்கி “என்னைப் பாரு மது” எனக் கிசுகிசுப்பான குரலில் சொல்லவும் அவளுக்கு உடம்பு ஒரு முறை உதறிப் போட்டது. 

அவனை நிமிர்ந்து பார்க்க… “அப்போ பேக்கு மாதிரி இருந்தேன்… இப்போ ஓகேவா?” என அவள் கண்களை பார்த்துக் கேட்க அவள் உடல் முழுவதும் வியர்த்து விட்டது. 

ஆறடி உயரத்தில் அரையடி அண்மையில் ஆளை விழுங்கும் பார்வையுடன் நின்று கொண்டு கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வதெனப் பெண்ணவளுக்குப் புரியவில்லை. 

அக்காவின் திருமணத்தன்று பார்த்தாள்…பிறகு அவள் பிறந்த நாளன்று அவன் தன்னிடம் பேசவில்லை என்றதும் ஏனோ கோபம் வந்தது அவளுக்கு…

தீம் பார்க் சென்ற போது கண்ணியவானாக அவளுக்குக் கம்பெனி கொடுத்து பொதுவான  விஷயங்களைக் கண்களைப் பார்த்து அவன் பேசிய பாங்கு அவளைக் கவர்ந்தது உண்மைதான்.ஆனால் அவன் தோற்றம் அவளைத் தீவிரமாக எதையும் நினைக்க விடாமல் தடுத்தது.

இப்போதோ அவன் இந்தத் தோற்றம் ஓகேவா எனக் கேட்டால் தன் மனதில் என்ன இருக்கிறது என்பதே அவளுக்குப் புரியவில்லை. 

அவள் திகைத்து விழிப்பதைக் கண்டவன் தலையைப் பின்னுக்கு சாய்த்து வாய் விட்டுச் சிரித்தான். 

பின் “பயமுறுத்திட்டேனா! வாங்க! வந்து உக்காருங்க… கொஞ்ச நேரத்துல மழை விட்டுடும் கிளம்பலாம்” என்று விட்டு அவள் எதிரில் இருந்த நீளிருக்கையில் அமர்ந்தான்.

அவள் தன் கைகளை மடியில் கோர்த்துக் கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் அதே சமயம் அந்த அவஸ்தையான நிசப்தத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் கடைசியில் “இது யார் வீடு?” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

“என் வீடுதான்” 

“உங்களுக்கு அம்மா, அப்பா, அண்ணா, தங்கை”

“யாரும் இல்லை…இப்போதைக்கு எனக்கு வேண்டபட்டவர்னா எங்க பாஸ் ஒருத்தர்தான்”

“நீங்க என்ன படிச்சுருக்கீங்க?”

அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன்,

“இன்டெர்வியூ நடத்துறீங்களா?” எனவும் பதறியவள் “சே சே! அதெல்லாம் இல்ல.உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்”

“என்னைப் பத்தி நீங்க ஏன் தெரிஞ்சுக்கணும்?”

அவள் அமைதியாக இருக்கவும் “சொல்லுங்க…இந்த மழை விட்டா நீங்க உங்க வழில போகப் போறீங்க…நான் என் வழில போகப் போறேன்… என்னைப் பத்தி தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப் போறீங்க?”

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவள் போல் தலை நிமிர்ந்தாள்.

“நம்ம ரெண்டு பேர் வழியும் இனி ஒண்ணா இருக்கணும்னு ஆசைப்படுறேன்”

அவளைக் கூர்ந்து நோக்கியவன்,

“புரியல” என்றான்.

எழுந்து சென்று அங்கிருந்த பால்கனி வாசலில் நின்று மழையை வேடிக்கை பார்த்தவள்,

“நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு சொல்றேன்”

“ஓ” என்றவன் சில வினாடிகள் அமைதியாய் இருந்து விட்டு, “நான் ஆஃபீஸ்ல இருக்கிற மாதிரி… உங்க வார்த்தைல சொன்னா பேக்கு மாதிரி இருந்திருந்தா இந்த முடிவு எடுத்துருப்பீங்களா மது?”

அவளுக்கு முகத்தில் அறை வாங்கிய உணர்வு ஏற்பட்டது. அவள் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவள் இல்லைதான். ஆனால் அவனைப் பிடித்திருந்தும் அவள் தயங்கியதற்குக் காரணம் அவன் தோற்றம்தானே! 

தன் காதலைச் சொல்லத் தான் தவறான நேரத்தைத் தேர்ந்தெடுத்து விட்டதைத் தாமதமாக உணர்ந்தவள் சட்டென்று தன் துணிகள் காய வைத்திருந்த அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் பழைய ஈரமான உடைகளையே அணிந்து வந்து அவன் முன் நின்றாள். 

“நான் கிளம்புறேன் வருண். மழை கூட குறைஞ்சுருச்சு”

தன் வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தி விட்டதை உணர்ந்தாலும் எதுவும் சொல்லாமல் கதவைத் திறந்து விட்டவன் அவள் சென்றதும் கதவைப் பூட்டி விட்டு அதன் மேலேயே சாய்ந்து நின்றான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் கதவு மீண்டும் தட்டப்படக் கதவைத் திறந்தவன் மது நிற்பது கண்டு விலகி வழி விட்டான். 

அவன் கதவை அடைத்ததும் அவன் முன் வந்து நின்றவள், “அதென்ன வருண் அப்பிடிக் கேட்டீங்க? நீங்க முதல் முதல்ல என்னைப் பார்த்தப்போ எண்ணை தேய்ச்சு படிய சீவிப் பெரிய கொண்டை போட்டு பெரிய பொட்டு வச்சு சோடாபுட்டிக் கண்ணாடி போட்டு நல்லா முரட்டுக் கதர் புடவையை சாக்கு மாதிரி சுத்திக்கிட்டு இருந்துருந்தா உங்களுக்குப் பிடிச்சுருக்குமா?”

அவள் சொன்ன தோற்றத்தில் அவளைக் கற்பனை செய்து பார்த்தவன் வாய் விட்டுச் சிரிக்க அவள் அவனை முறைத்தாள்.

“என்னை அழ வச்சுட்டு நீங்க சிரிக்கிறீங்களா?” என்றாள் கண்களின் கண்ணீரை உள்ளிழுக்க முயன்றபடி…

அது தாள மாட்டாமல் அவளை இழுத்து அணைத்தவன் அவள் காதருகில் “நிஜமா என்னை உனக்குப் பிடிச்சுருக்கா மது?”

“இப்பவும் பிடிச்சுருக்கு… எப்பவும் பிடிக்கும்… எப்பிடி இருந்தாலும் பிடிக்கும்”

அவனைப் போலவே கிசுகிசுப்பாக பதில் அளித்தவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் சில நிமிடங்கள் பொறுத்து விலக்கி  நிறுத்திக் குறுகுறுவெனப் பார்க்க,

அவள் விளக்கி சொல்லாமல் அவனுக்கு திருப்தி வராது என மனம் சொல்ல அவனை விட்டு விலகி நிமர்ந்தவள் அவன் கண்களை நேராக பார்த்து, 

“முதல் முதல்ல உங்களை அக்கா கல்யாணத்துலதான் பார்த்தேன். அங்கே இங்கேன்னு துறுதுறுன்னு ஓடிட்டு இருந்தீங்க… சொல்லப் போனா உங்க ட்ரெஸ்னாலதான் உங்களை கவனிச்சேன். இந்தக் காலத்துல இப்படி ஒருத்தரான்னு… ஆனா நீங்க அத்தான் பார்வையை கவனிச்சே அவருக்கு என்ன வேணும்னு கரெக்ட்டா செய்றதை நோட் பண்ணினேன். அப்போ என்ன நினைச்சேன் தெரியுமா?”

“ம்ம்ம்… என்ன நினைச்சே?”

“பாசுக்கே இப்பிடிப் பார்த்துப் பார்த்து செய்றாரே! இவர் பொண்டாட்டிக்கு எப்பிடி செய்வார்… ரொம்பக் குடுத்து வச்சவன்னு நினைச்சேன்.  அப்புறம் தீம்பார்க் போன அன்னிக்கு நீங்க நடந்துகிட்ட முறை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது… அனாவசியமா ஜொள்ளு விடாம ஆனா அதே நேரம் ரொம்ப விலகியும் நிக்காம … பக்கா டீசன்டுன்னு நினைச்சேன். அன்னிக்கும் தொள தொளன்னு எதையோ போர்த்திட்டுதானே வந்திருந்தீங்க?

அவளது வார்த்தை ப்ரயோகத்தில் அவன் வாய் விட்டு சிரித்தான்.

“சிரிக்காதீங்க…அந்த ட்ரெஸ் பார்த்து உங்க டேஸ்ட் இப்பிடி இருக்கே! உங்களுக்குக் கல்யாணம் ஆனா பொண்டாட்டி தலைலயும் அரை லிட்டர் எண்ணெய் தடவி விட்ருவீங்கன்னுதான் நினைச்சேன்.”  

“அதுக்கப்புறம் நாம பெருசா சந்திச்சுக்கல. ஆனா உங்க ஞாபகம் வராம இல்ல. எப்பவும் உங்களை நினைச்சுக்கிட்டே இருந்தேன்னு பொய்லாம் சொல்ல மாட்டேன். ஆனா அடிக்கடி நினைச்சுப்பேன்.” 

“இப்போ நீங்க என்னைக் கூட்டிட்டு வரும் போதுதான் இதை எல்லாம் நினைச்சுப் பார்த்தேன். நாம சந்திச்ச ரெண்டு சந்தர்ப்பத்துலயும் நான் உங்க வைஃப் பத்திதான் நினைச்சுருக்கேன். முதல் தடவை உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சான்னு கூடத் தெரியாது… ஆனா செகண்ட் டைம் நீங்க பாச்சலர்னு நல்லாத் தெரியும்… அப்பவும் இப்பிடி நினைச்சுருக்கேன்னா உங்க வைஃபா வர ஆசைப்பட்டிருக்கேன்னு எனக்கே இப்பதான் புரிஞ்சுது…”

படபடவென்று பேசிக் கொண்டே வந்தவள் கடைசி வார்த்தைகளில் நாணம் மேலிடத் தலை குனிந்தாள்.

மீண்டும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “நான் என் காதலை சொல்லத் தேர்ந்தெடுத்த நேரம் வேணும்னா தவறா இருக்கலாம்…ஆனா என் காதல் தவறு இல்ல”

அவள் அருகில் வந்து கைகளால் அவள் முகம் நிமிர்த்தியவன் “சாரி உன்னை ஹர்ட் பண்ணினதுக்கு”

“இல்ல அப்பிடில்லாம் இல்ல…ஆனா…”

“ஆனா…?”

அவள் முகம் சட்டென்று கலங்கியது.

அதைக் கவனித்தவன் “என்னாச்சு?” என வினவவும்

“நீங்க இப்பிடி ஆபத்தான வேலைல்லாம் பார்க்குறீங்களே… இது… இதை விட்டுட முடியாதா?”

விஜய்யைத் தவிரத் தனக்காக யோசிக்கும் முதல் ஜீவன் என்ற எண்ணம் தோன்றி விட அவன் நெஞ்சம் நெகிழ்ந்து போனது. இன்னும் அவளைக் காதலிக்கிறேன் என்றோ திருமணம் செய்து கொள்கிறேன் என்றோ கூட அவன் சொல்லி இராத நிலையில் அவள் அவனுக்காக அவன் நலத்துக்காக யோசித்தது அவன் மனதுக்கு இதமாக இருந்தது.

அவள் கை பற்றி அழைத்து சென்று சோஃபாவில் அமர்ந்து அவளையும் அருகில் இருத்தி கொண்டான். 

“கல்யாண வீட்டில் முதன்முதலில் உன்னைப் பார்த்ததுமே நீ என் மனம் கவர்ந்துட்டே மது…ஆனா பெண்கள் யாரும் என்னை ஒரு பொருட்டாக் கூட மதிக்க மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும். பிறந்த நாள் அன்னிக்கு வீட்டில் கூட, நீ என் கூடப் பேச மாட்டேன்னு நினைச்சுத்தான் நான் பேசல. ஆனா தீம் பார்க்ல நீ கலகலன்னு பேசிக்கிட்டு வந்தப்போ நீ அப்படி வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்களை மதிக்காதவ  இல்லைன்னு எனக்குப் புரிஞ்சுது. அன்னைல இருந்து இன்னை வரை தவிர்க்க முடியாத சில நேரங்கள் தவிர எல்லா நாட்களும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது உன்னை நான் பார்த்துருவேன்”

அவள் முகத்தில் வியப்பைக் கண்டவன்,

“நிஜம் மது…உனக்குக் கல்யாணம் ஆகிற வரை இப்படியே பார்த்துட்டு இருந்துட்டு அப்புறம் கல்யாணமே பண்ணாம இருந்துடணும்னு கூட நினைச்சுருந்தேன்”

“அதை விட நேர்ல உங்க ஆசையை எங்கிட்ட சொல்லி இருக்கலாம்ல”

“சொல்லி நீ மறுத்துட்டா…அப்பப்பா அதை மட்டும் என்னால தாங்கி இருக்கவே முடியாது…அது மட்டுமில்லாம நீ சொன்ன மாதிரி நான் பார்க்கிற ஆபத்தான வேலைகளும் என்னைத் தயங்க வச்சுது”

“அதெல்லாம் விட்டுட முடியாதா?”

“அது… நான்னா நான் மட்டும் இல்ல மது. என்கிட்ட ஒரு டீமே இருக்கு… சட்டுன்னு எந்த முடிவும் எடுத்துட முடியாது. சீக்கிரம் யோசிச்சு ஏதாவது முடிவு பண்ணலாம்”

“ஆனா இதெல்லாம் நடக்குமா மது…? ஊர் பேர் தெரியாத என் போல் அனாதைக்கு உங்க அப்பா அம்மா பொண்ணு குடுப்பாங்களா?”

“எங்க வீட்டுல என் விருப்பத்துக்கு மதிப்பு உண்டு… அது மட்டும் இல்லாம நீங்க புது ஆள் இல்லையே… உங்களை நம்பி எங்க வேணா அனுப்புறாங்க”

“அது வேற இது வேற மது… ஒரு இடத்துக்கு நம்பி அனுப்புறதும் வாழ்க்கையை ஒப்படைக்கிறதும் ஒண்ணா?”

இப்போது அவள் பொறுமை இழந்தாள்.

“இப்போ என்னதான் சொல்றீங்க… என் வாழ்க்கை உங்களோடதான்னு நான் முடிவு பண்ணிட்டேன். அதுல உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா சொல்லிடுங்க…நான் மேல பேசல”

முடிக்கும் போது அவள் குரல் தழுதழுத்தது.

அவள் குரலில் தன்நிலை இழந்தவன் சட்டென்று அவளை இழுத்துத் தன்னுடன்  சேர்த்து அணைத்து கொண்டான்.

அவளும் எதுவும் பேசாமல் அவன் கைகளுக்குள் அடங்கினாள்.

“இஷ்டமில்லாமத்தான் இப்பிடிக் கட்டிப் பிடிச்சுகிட்டு உக்காந்துருக்கேனா?” என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களைத் துடைத்து விட்டவன்,

“சரி! பாஸும் உங்க அக்காவும் வரட்டும் என்ன செய்றதுன்னு கேட்கலாம்”

அப்போது அமைதியாகி விட்டவள் நடுவில் அவன் போலீஸில் மாட்டிய விவரம் தெரிய வந்த போது துடித்துப் போனாள். விஜய்யிடம் அவர்கள் உறவைக் குறித்தும் அவன் வேலை குறித்தும் அவன் பேசுகிறானா இல்லை அவளே பேசட்டுமா என சண்டை  போட்டவளை சமாதானப் படுத்துவதற்குள் அவனுக்குத்தான் பெரும்பாடாகிப் போனது.

அவன் விஜய்யிடம் பேச நேரம் பார்த்துக் கொண்டிருக்க விஜய்யே அவர்களை இனம் கண்டு கொண்டது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியே… ஆனால் இது நடக்குமா என்ற கவலை அவனுக்கு இருந்து கொண்டேதான் இருந்தது.

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறி விடும் இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்
அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணிப் பாதையை அவள் பார்த்திருந்தாள்

Advertisement