Advertisement

அத்தியாயம் 30

காலை விழிப்பு வந்து பார்க்கையில் நேரம் பத்தை நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்து பதறி அடித்துக் கொண்டு எழப் போக 

“ஏய் ரிலாக்ஸ்! எதுக்கு இப்பிடி ஓடுறே?” என்று மீண்டும் இழுத்துப் படுக்கையில் போட்டான். 

கணவன் தூக்கக் கலக்கம் இல்லாமல் நன்றாகவே விழித்திருப்பதைப் பார்த்தவள் “ஆதி முன்னமே முழிச்சுட்டீங்களா? என்னை எழுப்பி இருக்கலாம்ல.கீழ அம்மா அப்பா எல்லாம் என்ன நினைச்சுருப்பாங்க.” 

“அலுப்பில அசந்து தூங்கிட்டு இருந்தே… அதான் எழுப்பல. அவங்க என்ன நினைச்சுருப்பாங்கன்னு அவங்க வீட்டுக்கு போய்தான் கேக்கணும்… வேணும்னா போன் பண்ணிக் கேக்குறியா?” என்றான் குறும்பாக. 

“அம்மா அப்பா வீட்டுக்குப் போயிட்டாங்களா?” 

“ஆமா காலைல 6 மணிக்கே கிளம்பிட்டாங்களாம்” 

காலை ஏழு மணிக்கு விழித்தவன் கண்ணபிரானிடம் விவரம் எல்லாம் கேட்டு விட்டு வருணையும் மெலிஸாவையும் அழைத்து செய்ய வேண்டிய வேலைகளையும் கொடுத்து விட்டு பின்பு மீண்டும் வந்து படுத்திருந்தான். 

குறும்பாகப் பார்த்து கொண்டிருந்தவனைக் கோபமாக முறைத்தவள், 

“சரி! நான் குளிக்கப் போறேன்” 

“அப்புறம் குளிச்சுக்கலாம்… நேரம் ஆச்சு கொஞ்சம் ஃப்ரஷ் அப் பண்ணிட்டு வா சாப்பிடலாம்” என அங்கே டீப்பாயில் ஹாட் பாக்ஸில் இருந்த உணவுகளைக் கண்களால் சுட்டிக்காட்டினான். 

“இத்தனை நடந்திருக்கு…இது எதுவுமே தெரியாம எப்பிடிக் கும்பகர்ணி மாதிரித் தூங்கினேன்” என மொனமொனத்துக் கொண்டே சென்று முகம் கழுவிப் பல் தேய்த்து வந்தவளுக்கு ஒரு தட்டில் பரிமாறி அவளை உண்ண வைத்தவன் அன்று மூன்று வேளை உணவையும் அங்கேயே உண்ண வைத்தான். அவளைக் கீழேயே செல்ல விடவில்லை. 

“ஆதி! என்ன இது… மாமா என்ன நினைப்பார்? நான் கீழ போறேன். வேலையாட்கள் எல்லாம் என்ன நினைப்பாங்க? எனக்கு ஒரே சங்கடமா இருக்கு… ப்ளீஸ்பா நான் கீழ போறேன்” என கெஞ்சிக் கொஞ்சி அவள் அவனைத் தாஜா செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. 

“நீ வனவாசத்துல இருந்தப்போ என்ன சொன்னே? ரெண்டு நாள் எனக்காக ஒதுக்குங்கன்னு சொன்னே! நான் ஒத்துகிட்டேன். இது ரெண்டாவது நாள் ஃபுல்லா உனக்குத்தான். இப்போ நீ மட்டும் கீழ போறேன்னா எப்பிடி?” 

“உங்க மாமாகிட்ட நான் சொல்லிட்டேன். நேத்து அலைஞ்சது ரொம்பக் களைப்பா இருக்கு. அதுனால மேலே சாப்பிட்டுகிறோம்னு… அவர் ஒன்னும் நினைக்க மாட்டார்” என அவள் எல்லா கேள்விகளுக்கும் தகுந்த பதில் கொடுத்து அவள் வாயை அடைத்து விட்டான்.

அவன் ஏன் இப்படி செய்கிறான் என அவளுக்குப் புரிந்தே இருந்தது.

வனவாசத்திலிருந்து வந்ததில் இருந்து நேரம் கிடைத்த போதெல்லாம் அவளுக்கு உடைகளும் நகைகளும் வாங்கி வந்து கொடுத்தான் விஜய்.

ஆனால் நன்றாக இருக்கிறது என அவன் தேர்வைப் பாராட்டவோ பிடித்திருக்கிறது என மகிழவோ இல்லாமல் கடமையாய் அவள் வாங்கி வைத்துக் கொண்டது அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

ஒரு நாள் மாலை மயில்கழுத்து நிற ஜார்ஜெட் புடைவையில் வெள்ளிக் கம்பிகளாய் இழையோடுவது போல் டிசைன் செய்யப்பட்டிருந்த புடைவையை அவள் கையில் கொடுத்த போது அவள் எதுவும் சொல்லாமல் வாங்கி வைக்கவும் அவளைத் தொட்டுத் தன்புறம் திருப்பியவன் “நீ இன்னும் என்னை மன்னிக்கலையா வது?” எனவும் அவசர அவசரமாக அவன் இதழ்களைத் தன் தளிர் விரல்களால் மூடியவள், “அப்பிடி எல்லாம் இல்ல ஆதி” எனவும் “அப்போ இந்த சாரி கட்டிட்டு வா! எனக்குப் பார்க்கணும்” என்றான்.

அவன் விருப்பம் போல் உடுத்தி அதற்குப் பொருத்தமான நகைகள் அணிந்து அதைப் பார்த்து மகிழ்ந்தவன் கைகளில் இழைந்தாலும் அவள் கண்களில் ஏக்கத்தைக் கண்டவன் அவள் முகம் பற்றி நிமிர்த்தி “என்னடா?” என்றான்.

“ஒன்னும் இல்ல ஆதி”

“இல்ல… ஏதோ இருக்கு சொல்லு” 

”வனவாசத்துல இருந்தப்போ நாம ரொம்ப எளிமையாதான் இருந்தோம்… இந்த நகை உடைல்லாம் இல்ல… ஆனா நாளெல்லாம் நீங்க என் பக்கத்துலயே இருந்தீங்க… இப்பவும் நீங்க அப்பிடி இருக்க மாட்டீங்களான்னுதான் என் மனசு ரொம்ப ஏங்குது…” 

“காலைல நீங்க கிளம்பினதும் எனக்கு ரொம்பக் கஷ்டமாயிடுது… நானும் உங்க கூட வந்துடலாம்னு பார்த்தா இத்தனை நாளா மாமா தனியா இருந்தார்… பாவம் அவர்… அவருக்குப் பேசவாவது நான் இருக்கணும்னு தோணுது… உங்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன் ஆதி” என்று அவள் கூற அவன் மனம் உருகிப் போயிற்று. அவனும் அவளை நினைத்துக் கொண்டேயிருந்தாலும் அவன் எண்ணத்தை  அலுவலக வேலைகள் ஆக்கிரமித்துக் கொள்வதால் அவனுக்குக் கஷ்டம் அதிகம் தெரியவில்லை.

சென்னை வந்ததில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகள் கூட அலுவலகம் சென்று கொண்டிருந்தான்.வனவாசத்தில் இருந்த போது அவன் இல்லாமல் வேலைகள் நடந்தாலும் அவன் இங்கிருக்கும் போது அப்படிச் செய்ய முடியவில்லை.

உடல்நிலையைப் பொருத்த வரை தினமும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து ப்ரியம்வதாவுக்கு அலுவலக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

கணவனும் மனைவியும் இரவு நேரங்கள் மட்டுமே அளவளாவிக் கொள்ள முடிந்ததுதான் அவள் ஏக்கத்துக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டவன் அவளுக்குக் கொடுக்கும் பொருட்களால் அவள் அடையும் மகிழ்ச்சியை விட அவளுடன் தான் நேரம் கழிப்பதையே அவள் விரும்புகிறாள் என்பதை உணர்ந்தே அன்று அவளுடன் முழு நேரமும் செலவிடத் திட்டமிட்டிருந்தான்.

முதல் நாளும் அவனுடனேயே இருந்திருந்தாலும் கோவிலில், கவனம் முழுவதும் கடவுளின் பேரிலேயே இருந்தது.

அன்று முழுவதும் அவள் பார்வையிலோ கைக்கெட்டும் தூரத்திலோ தான் இருந்தான். அவளை அருகிலேயே அமர்த்திக் கொண்டு மடிக்கணினியில் வேலைகள் பார்த்தான். 

குறுந்தகடுகளில் அவள் பதிந்து வைத்திருந்த காதல் பாடல்களைப் போட்டு விட்டு “நீயும் நானும் சேர்ந்து கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்” என்ற பாடலைக் கேட்டு விட்டு  “கைகள் கோர்த்து இல்ல கண்கள் கோர்த்து வாவ் என்ன அழகா எழுதி இருக்காங்கள்ல” என அதில் வரும் வரிகளை அவளிடம் சிலாகித்தான்.  

அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் குழந்தை போல் உறங்கினான். 

மொத்தத்தில்  ப்ரியம்வதாவிடம் உன் வாழ்க்கையிலேயே சந்தோஷமான நாள் எது என்று யாராவது கேட்டால் அந்த நாளைத்தான் குறிப்பிட்டுச் சொல்லும்படி அவளை அத்தனை  சந்தோஷமாக வைத்துக் கொண்டு மறக்க முடியாத ஒரு நாளாக மாற்றி விட்டான்.

……………………………………………………………………………………………….

மறுநாள் அலுவலகத்துக்குச் சென்றதும் விஜய் வருணை அழைத்தான். 

எதுவும் பேசாமல் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவன் கண்களை ஊடுருவுவது போல் பார்க்கவும் லேசாக முகம் சிவக்க, “என்ன பாஸ் இப்பிடிப் பார்க்குறீங்க?” என்றான்.

“உன் பாஸா இல்ல வருண்…அண்ணனாக் கேக்குறேன். உனக்கு மதுவைப் பிடிச்சிருக்கா? ப்ரியாவை அவங்க வீட்ல பேசச் சொல்லட்டுமா?”

சட்டென்று முகம் கலவரமடைய  “ஒத்துக்குவாங்களா பாஸ்?”

தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தவன் அவன் தோள்களைப் பற்றி “ஏன் ஒத்துக்க மாட்டாங்க? உன்னைய மாப்பிள்ளையாக்கிக்க கசக்குதா என்ன?”

“இல்ல பாஸ், நான் அனாதை யாரும் இல்லாதவன்…” என்றவன் விஜய்யின் முகம் மாறவும்  “அப்பிடித்தானே பாஸ் அவங்களுக்குத் தெரியும்” என்றான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்…உனக்கு சம்மதம்தானே?”

“ம்ம்ம்…சம்மதம் பாஸ்”

“இந்த பாஸை விட்டுட்டு சீக்கிரம் உன்னை அண்ணான்னு கூப்பிட வைக்குறேன்”

அந்த அறையிலிருந்து வெளியேறிய வருணின் மனம் மதுவிடம் சென்றது.

திருமண வீட்டில்தான் முதன் முதலில் மதுவைப் பார்த்தான்… அவளது எளிமையான அழகு அவனது மனதைக் கொள்ளை கொண்டது…ஆனால் அவன் இருக்கும் தோற்றத்தில் எந்தப் பெண்ணும் அவனைத் திரும்பி கூடப் பார்க்க மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். அப்படி இருந்தும் எங்காவது வெளியில் வைத்து அவளை அவன் பார்த்து கொண்டுதான் இருந்தான். 

பிரியம்வதாவின் பிறந்த நாள் அன்று அவளுக்கு, தான் பேசுவது பிடிக்காது என நினைத்தே முதலில் அவன் அவளிடம் பேசவில்லை. ஆனால் தீம் பார்க் சென்ற போது இருவரும் தனித்து விடப்பட வேறு வழி இன்றிப் பேச ஆரம்பித்தார்கள். பேசப் பேச அவள் அழகிலும் துறுதுறுப்பிலும் தன்னை மறந்தான்.

அவள் அலுவலகம் செல்லும் வழியில் மறைந்திருந்து ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளைப் பார்த்து விடுவான்.

அன்று சுந்தரம் க்ரூப் ஆஃப் கம்பனிஸ்கு சென்றிருந்தான். 

அந்த அலுவலகத்தில் சுந்தரேசனின் மகன்கள் மற்றும் அவரது பேரன் என அனைவரும் வெளியே சென்றிருக்க பெரியவர் மட்டும் தனித்திருக்கும் நேரமாகப் பார்த்து சென்றவன் தன்னை சுந்தரம் வரச் சொன்னார் என்று மொட்டையாகக் கூறி கொண்டு அவரிடம் சென்றிருந்தான். 

மல்டி ப்ளக்ஸில் டிஸ்கோதே தளம் அமைப்பது தொடர்பாகக் கலந்தாலோசிக்கத் தன்னை வரச் சொல்லி இருந்ததாகவும் தான் அவசரமாக ஊருக்கு செல்வதாகவும் மீண்டும் வர முடியாது என்றும் சொன்னதால் அவனை நேரில் பார்க்கச் சம்மதித்தார் அந்த பெரியவர். 

அவரிடம் டிஸ்கோதே தளம் அமைப்பது குறித்து விரிவாகவும் அவருக்கு தேவை இல்லாத, ஆனால் அவருக்குப் பிடிக்காத, கோபமூட்டக் கூடிய தகவல்களையும் மிக இயல்பாக அவரிடம் தெரிவித்து விட்டு அந்த மல்டிப்ளெஸிற்கு எதிராக அவரே அறியாமல் அவரை நன்றாக உருவேற்றி விட்டுவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பி கொண்டிருந்த போதுதான் மதுவைப் பார்த்தான்.

அன்று மாலை மது தன் வண்டியில் அலுவலகம் விட்டு வந்து கொண்டிருந்தாள். சிக்னலுக்காக நின்றிருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காமல் சடசடவென மழை கொட்ட ஆரம்பித்தது. 

சிக்னல் சரியாகி அவள் வண்டியை எடுப்பதற்குள்ளாகவே முழுவதும் நனைந்து விட்டாள். தொடர்ந்து வண்டியை ஓட்ட முடியாமல் மழை பெய்து கொண்டே இருக்க ஒரு வழியாக வண்டியை ஓரம் கட்டி அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே நிறுத்திப் பூட்டி விட்டு அந்த நிறுத்தத்தில் போய் நின்றாள். 

அவள் அணிந்திருந்த காட்டன் புடவை முழுக்க மழையில் நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டு பிரம்மனின் படைப்புத் திறனை பறைசாற்ற சுற்றி இருப்போர் பார்வைக்கு விருந்தானாள். 

உடலோடு பசையிட்டாற் போல ஒட்டிக் கொண்டிருந்த புடைவையை முடிந்த அளவு சரி செய்து கொண்டிருந்த போது அருகில் நிழலாட யாரென்று நிமிர்ந்து பார்த்தவள் கலர் கலரான தலை முடியும், வாயில் மெல்லும் சூயிங்கமும், உடலை இறுகக் கவ்விய உடையும், தீட்சண்யமான பார்வையுமாக அருகில் நின்றவனைப் பார்த்துத் திகைத்து ஒரு அடி பின்னெடுத்து வைத்தாள். 

அவன் பார்வை அவளைத் துளைத்தது…

அடுத்து வந்த ஒரு பேருந்தில் அந்த நிறுத்தத்தில் இருந்த பலர் ஏறிச் சென்று விட அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இப்போது இருந்தனர்.

அவளுக்கு இப்போது பயம் பிடித்துக் கொண்டது. நேரம் ஏழைத் தொட்டுக் கொண்டிருக்க நன்றாகவே இருட்டி விட்டிருந்தது.மழை பெய்தாலும் பரவாயில்லை சென்று விடலாம் என முடிவெடுத்து அவனைத் தாண்டிக் கொண்டு செல்ல முயற்சித்தவளை ஒரு கரம் நீட்டித் தடுத்தவன் “வந்து வண்டில ஏறுங்க” எனவும் தூக்கி வாரிப் போட்டு நிமிர்ந்தாள்…

ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே

Advertisement