Advertisement

அன்று பகெல்காம் வியூபாய்ன்ட் பார்க்கப் போவதாக ஏற்பாடு. வாடகை வாகனத்தில் பகெல்காம் நகர்ப்பகுதியை அடைந்த பிறகு அங்கிருந்து வியூ பாய்ன்டுக்குக் குதிரையிலேயே செல்ல வேண்டும் என்று விட்டார்கள்.

குதிரை ஏற மிகவும் பயந்தவளை தைரியம் சொல்லி இடையில் கை கொடுத்துத் தூக்கிக் குதிரையில் அமர வைத்தான். மேலே சென்று மிக அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்தார்கள்.நிறைய புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்கள். 

இறங்கும் போது மிகவும் குறுகலான பாதையில் அந்தக் குதிரை கால் வைத்து நடக்க நடக்க ப்ரியம்வதாவுக்கு இதயம் வாய் வரை வந்து துடித்தது. அவளுக்கு உயரம் என்றால் கொஞ்சம் பயம்தான். 

கீழே இறங்கியதும் முதல் வேலையாகக் கணவனை இறுகக் கட்டிக் கொண்டாள். அந்த அணைப்பில் அவள் இதயத் துடிப்பை அறிந்து கொண்டவனும் “ஈஸி! ஈஸி!!” என அவள் தோளைத் தடவிக் கொடுத்தான்.

அன்று தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பும் முன் அவளைக் கடைக்கு அழைத்துச் சென்றவன் அவளுக்குத் தேவைப்படும் விதத்தில் ஸ்வெட்டெர், மஃப்ளர், கைகளுக்கு க்ளௌஸ், காலுக்கு சாக்ஸ், இதெல்லாம் போதாதென்று தோலின் நிறத்திலேயே தெர்மல் வேர் என்று சொல்லப்படும் உடலை ஒட்டி அணியும் உள்ளாடையும் வாங்கிக் கொடுத்தான்.

“சே! இது என்ன நிறம்… எனக்குப் பிடிக்கல…இதைப் போட்டா ட்ரெஸ்ஸே போடாத மாதிரி இருக்கும்.அது மட்டும் இல்லாம இந்த ஒரு வாரத்துக்கப்புறம் இதெல்லாம் பெட்டிலதான் பூட்டி வைக்கணும் அதுனால வேண்டாம்” என்றாள்.

“இந்த கலர்ல இருந்தாதான் உள்ளே போட்டு வெளியே நீ வேற ட்ரெஸ் போட்டாலும் வித்யாசமாத் தெரியாது. புடைவை கட்டுறதா இருந்தாக் கூட இதைப் போட்டு நீ கட்டலாம்.மேலும் நாம ஃபாரின் ட்ரிப் எல்லாம் போகும் போது பயன்படும். அதுனால எடுத்துக்கோ” என அவள் வாயை அடைத்து விட்டான்.

ஆனால் அன்று இரவு அவன் வாங்கிக் கொடுத்ததை எல்லாம் அணிந்து கொண்டு குளிரின் தாக்கம் சற்றும் இல்லாமல் படுத்த போதும் முதல் நாள் இரவு கணவனின் கைகளில் உறங்கிய நிம்மதியான உறக்கம் வர மறுத்து அவளுக்குக் கண்ணாமூச்சி காட்டியது. 

இவனுக்கு கொஞ்சம் கூட அந்த ஏக்கமே இருக்காதோ என நினைத்தவள் சாந்தி முகூர்த்தத்தின் போது அவன் வார்த்தைகளை மனதில் கொண்டு வந்து அவள் ஏங்கித் தவிக்க வேண்டும் என்றுதானே செய்கிறான் என நினைத்துக் கொண்டே அவன்புறம் பார்க்க சீரான மூச்சு அவனது ஆழ்ந்த உறக்கத்தைக் காட்டியது. 

ஒரு பெருமூச்சுடன் அவன்புறம் திரும்பிப் படுத்தவள் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே உறங்க முயற்சித்தாள். 

மறுநாள் பகெல்காமிலிருந்து ஸ்ரீநகருக்கு வந்திருந்தார்கள். 

அன்று குல்மார்க் போவதாகத் திட்டம்.

குல்மார்க் என்பதற்குப் பூக்களின் சமவெளி(meadow of flowers)என்று பொருள். முகலாயர் ஆட்சி காலத்தில் ஜஹாங்கிர் என்னும் மன்னரால் அரிய பூவகைகள் இந்த இடத்தில் பயிரிடப்பட்டதாம். அதன் பின் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோடை வாசஸ்தலமாகப் பயன்பட்டது. அங்கிருந்த பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்ததைப் படித்துத் தெரிந்து கொண்டாள் ப்ரியம்வதா.

ரோப்காரில் செல்வதற்காக வரிசையில் நின்றிருந்த போது கொஞ்சம் முன்னால் நின்றிருந்த பெண்ணை ஒருவன் சீண்டுவதைப் பார்த்தாள் ப்ரியம்வதா…சீண்டல் என்றால் சாதாரணமாக அல்ல. 

அந்தப் பெண் வட இந்திய பாணியில் புடைவை அணிந்திருந்தாள். முகமும் தலையும் முக்காட்டினால் முழுவதுமாக மறைக்கப்பட்டிருக்க வெள்ளை வெளேரென்ற குழைந்த வெண்ணை போன்ற இடுப்பு பளீரென்று பிறர் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தது. அந்த இடுப்பில் கை போட்டுத்தான் அவன் சீண்டிக் கொண்டிருந்தான். அந்தப் பெண் அவன் கையைக் கோபத்துடன் தட்டி விடுவதும் தெரிந்தது. 

வரிசை வளையும் இடத்தில் அவர்கள் நின்றிருந்ததால் இது மற்றவர் கண்களைக் கவரவில்லை.வரிசை அடுத்ததாக வளையும் இடத்தில் நின்றிருந்த ப்ரியம்வதாவின் கண்களில் இந்தக் காட்சி தெளிவாக விழுந்தது.

அவள் கை முஷ்டிகள் இறுகின. ஓடிச் சென்று அவன் சட்டையைப் பிடித்து உன் தங்கையிடமோ அம்மாவிடமோ இப்படித்தான் நடந்து கொள்வாயா என நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் கேட்க வேண்டும் எனத் தோன்றியது அவளுக்கு.

பின்னால் நின்றிருந்த கணவன் அவள் தோள்களை திடீரென்று பற்றவும் படக்கெனத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“எதுக்கு இத்தனை டென்ஷன்?” அவள் தோள்களை வருடிக் கொண்டே மெல்லிய குரலில் கேட்டான்.

அவனுக்கு வாயால் காரணம் கூறாமல் அந்த நிகழ்வைக் காட்ட எண்ணி அந்தப் பக்கம் திரும்பியவள் அங்கு கண்ட காட்சியில் வாயைப் பிளந்து கொண்டு நின்றாள். காரணம்… இப்போது அந்தப் பெண் அவளைச் சீண்டிய அந்த ஆண்மகனின் கை வளைவுக்குள் நின்று கொண்டு உரிமையோடு அவன் தோள்களில் சாய்ந்திருந்தாள்.

மீண்டும் கணவனைப் பார்க்க அவன் கண்களிலே கேலியைக் கண்டவளுக்கு சுறுசுறுவெனக் கோபம் வந்தது.

“பொது இடத்துல எப்பிடி பிஹேவ் பண்றதுன்னு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல. கணவன் மனைவியாவோ இல்ல லவர்ஸா இருந்தாக் கூட இப்பிடியா நடந்துக்கிறது…” என்று விட்டு அதற்கு மேல் மனிதர்களின் பக்கமே பார்வையைச் செலுத்தாமல் மரம், மட்டை என்று பார்த்துக் கொண்டு வந்தாள்.

ரோப் காரில் மேலே செல்லும் போதே அந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கோப மனநிலையிலிருந்து மாறி விட்டவளுக்கு மேலே இருந்து மற்ற மலைகளைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை. 

இரண்டு மலைகளுக்கு இடையில் கட்டிய கயிற்றில் ரோப் ஸ்லைடிங் போனவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து “போகிறாயா?” என விஜய் கேட்க “ஐயோ! நான் மாட்டேன்” என்று அலறியவளை வினோதமாகப் பார்த்தான்.

ரோப் காரிலேயே கீழே வந்து சேர்ந்தவர்கள் அங்கு ஒரு சிறிய கடையில் உட்கார்ந்து சூடாகத் தேநீர் குடித்தார்கள்.

அவளையே பார்த்த வண்ணம் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவன் அவள் அவன் பார்வையை உணர்ந்து கேள்வியாக அவனைப் பார்க்க “உங்க மூணு பேர்ல யாருக்கு தைரியம் அதிகம்?” 

“தைரியம்னெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கண்ணில் தப்பான காரியம் பட்டால் அதுவும் பெண்களுக்கு எதிரான விஷயம்னா முடிந்த வரை அதைத் தடுக்க என்னால் ஆனதைச் செய்வேன். எங்க வீட்டுல நான் கொஞ்சம் படபடப்பா இருப்பேன். நினைச்சா சட்டுன்னு செய்து முடிச்சுடணும் எனக்கு. தீக்ஷி அப்பிடியே எனக்கு எதிர். ரொம்ப நிதானமா இருப்பா…எங்க அப்பா அடிக்கடி அவளைப் பத்தி அடிக்கிற கமென்ட்…பின்னால இடியே விழுந்தாக் கூட நிதானமாத் திரும்பிப் பார்த்து என்ன ஆச்சுன்னு கேட்பான்னு…”

சிரிப்புடன் சொல்லியவளைப் பார்த்து,  “அப்போ மது…?” எனக் கேட்க…

“மதுதான் எல்லா விஷயத்துலயும் ரொம்பக் கரெக்டா இருப்பா…ரைஸிங் டு த அக்கேஷன்னு சொல்வாங்களே… அது மாதிரித் தேவையான நேரங்கள்ல வேகமாகவும் செயல்படுவா…யோசிச்சு செயல்படுற நேரங்கள்ல நிதானமாவும் செயல்படுவா”

“ஆனா உன்னோட இந்த குணத்துக்கு எதிரிகள் நிறைய இருக்கணுமே!”

“எதிரின்னு சொல்லிக்கிற அளவுக்கெல்லாம் யார் மேலயும் பகை இல்ல எனக்கு. நானும் எல்லாத்தயும் தட்டிக் கேக்குறேன்னு போய் மாட்டிக்கிற அளவுக்கு முட்டாள் இல்ல. என் சக்திக்கு உட்பட்டதைத்தான் செய்வேன்”

“என்னை மாதிரி இளிச்சவாயனா யாராவது மாட்டினா மட்டும் தட்டிக் கேப்பே”

பேச்சு இலகுவாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் அவன் சட்டென்று கேட்டு விட அவள் அப்படியே அமைதியானாள்.

தலை குனிந்து மடியில் கரங்களைக் கோர்த்து அமர்ந்திருந்தவள் இயலாமையாலும், இவனுக்கு எப்படிப் புரிய வைப்பது என விளங்காமலும் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு, 

“நான் செய்தது தப்புன்னு உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுட்டேன். ஊருக்கு முன்னாடியும் மன்னிப்புக் கேட்டுட்டேன்.இனியும் என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?அதுவும் பத்தாதுன்னா இப்பவும் உங்ககிட்ட நான் அவசரப்பட்டு செய்துட்ட தப்புக்கு மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.என்னை உங்களால மன்னிக்கவே முடியாதா!”

அவள் கண்களில் இருந்த ஏக்கமும் கலக்கமும் கண்டு அவளை அள்ளி எடுத்து ஆறுதல்படுத்த அவன் கைகள் துடித்தன. ஆனால் அடுத்த கணமே ‘இல்லை இன்னும் அவள் முழுவதுமாக எல்லாவற்றையும் சொல்லவில்லை. அப்படி அவள் சொல்லும்  காலம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இவளுக்கு இந்த தண்டனைதான் சரி’ என்று தோன்றி விட அவளது ஏக்கம் நிறைந்த முகத்திலிருந்து பார்வையைத் திருப்பியவன் பின் சட்டென்று எழுந்தான். 

ஏமாற்றமும் இயலாமையும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அவளைத் தாக்கக் கண்களில் துளிர்த்த நீரைப் பிறர் அறியாமல் சுண்டி விட்டவள் அவளும் அவனுடன் எழுந்தாள்.

என் மனதில் நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில் ராகங்களாய் ஒலிப்பதுன் மூச்சல்லவா
என் இதயம் உன் உடைமை உனக்கது புரியாதா
இன்னுமதை நீ மிதித்தால் உனக்கது வலிக்காதா
மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும்! போதும்!

தொடரும்

Advertisement