Advertisement

அத்தியாயம் 3

வீட்டில் இருந்து கிளம்பும் போது அவன் தோற்றமே அவள் மனதின் நொடிப்புக்கு விடை கூறி விட்டது.

கிட்டத்தட்டக் காதுவரை இழுத்து விடப்பட்டிருந்த ஜெர்க்கின், கண்களை மட்டுமல்லாது முகத்தின் பெரும்பகுதியை மறைத்து விட்ட குளிர் கண்ணாடி… விமானம் ஏறிய பின் குளிர் போலக் காட்டிக் கொண்டு அவன் அணிந்த உல்லன் காப் எல்லாம் சேர்ந்து அவன் அடையாளத்தை முற்றாக மறைத்து விட்டன.

முகத்துக்கு முகம் பார்த்துப் பேசினால் கூட அவன் விஜய் ஆதித்யா என யாராலும் கண்டு கொள்ள முடியாதபடி இருந்தது அவன் தோற்றம்.

திருமணப் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வந்திருந்தாலும் அவனளவிற்கு அதிகம் அறிமுகமாகாத முகம் என்பதாலும் ஒப்பனைகள் இல்லாமல் சாதாரணமாக இருந்ததாலும் அவள் பெரிதாக யார் கவனத்தையும் கவரவில்லை.

முதலில் டெல்லிக்குச் சென்று அன்றைய இரவை டெல்லியில் அவர்களது விருந்தினர் மாளிகையில் கழித்து விட்டு அடுத்த நாள் காலை விமானம் மூலம் காஷ்மீருக்குக் கிளம்பினார்கள்.

 காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரைச் சென்று அடைந்தவுடன் வாடகை வாகனம் அவர்களை வரவேற்றது. ஒரு உணவகத்தில் உணவை முடித்துக் கொண்டு பகல்காம் நோக்கிப் பயணமானார்கள். 

அவர்கள் அந்த ஊருக்குள் நுழையும் போது நேரம் ஐந்தைத் தொட்டு விட்டதால் குளிர ஆரம்பித்து இருந்தது. 

வண்டி நின்றவுடன் கீழே இறங்கவும் நன்றாகவே குளிர் காற்று முகத்தில் மோதியது…அந்த உல்லாச விடுதியில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் செல்வதற்குள்ளேயே கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தாள் ப்ரியம்வதா.

அவளை வினோதமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான் விஜய்…அந்த அறை மிக அழகாக இருந்தது…

ஒரு சிறிய வரவேற்பறை… எதிர் எதிராக இருக்கைகள் போடப்பட்டு இருந்தது… கொஞ்சம் உள்ளே சென்றால் பெரிய இரட்டைக் கட்டில்… அருகிலேயே அலங்கார உபகரணங்கள் கொண்ட மேஜை… அதன் அருகிலேயே குளியலறைக்கு செல்லும் கதவு இருந்தது…

படுக்கையின் எதிரில் பெரிய தொலைக்காட்சி… இந்த மொத்த அமைப்பையும் தாண்டிக் கொண்டு போனால் பால்கனி… அதில் நின்று வெளியே பார்த்தவள் பனிமலைகளைப் பார்க்க அற்புதமாக இருந்தாலும் முகத்தில் அடித்த குளிர் காற்றால் சில வினாடிகள் கூட நிற்க முடியாமல் உள்ளே வந்து விட்டாள். 

அந்த அறையில் மின்விசிறி கூட இல்லை. கதவுகள் ஜன்னல்கள் அனைத்தும் முழுதாக மூடப்பட்டிருந்தும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது போல இருந்தது அறை… 

விஜய் தன் பெட்டியைத் திறந்து ஒரு ஸ்வெட்டரை எடுத்து அணிந்து கொண்டான்…அவள் தன்னுடைய ஷாலை இறுக்கிக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், 

“ஸ்வெட்டரை எடுத்துப் போட்டுக்கோ… இந்தக் குளிருக்கு ஷால் தாங்காது” என்றான்…

“ஸ்வெட்டர் கொண்டு வரலை”

“வாட்? நான் உன்கிட்ட குளிருக்கான உடைகள் இருக்குதான்னு கேட்டப்போ இருக்குதுன்னு சொன்னியே!”

“சம்மர்தானே… காஷ்மீர்னாலும் 25 டிக்ரீதான் இருக்கும்னு மது சொன்னா…அதுக்கு இந்த ஷால் போதும்னு நினைச்சேன்.”

“காஷ்மீர்னு சொன்னேன்தான். ஆனா இது பகல்காம். கடல் மட்டத்தில் இருந்து 7200 அடி உயரத்தில் இருக்கும் இடம் இது…கோடை காலப் பகல் வெப்பநிலையே 10 டிக்ரி செல்சியஸ்தான் இருக்கும். இரவு நேரம் ஆகிட்டா ஐந்து ஆறுன்னுதான் இருக்கும். உனக்குத் தெரியலைன்னா எங்கிட்டக் கேட்டு இருக்கலாம்ல. தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு…” பேசிக் கொண்டே வந்தவன் அவள் முகத்தைப் பார்த்து விட்டுப் பேச்சை நிறுத்தினான்.

அவள் என்ன வேண்டுமென்றா செய்தாள்? சென்னை வெயிலுக்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் கூட மின்விசிறியைக் குறைத்து வைத்து விட்டு ஒரு போர்வை போர்த்திக் கொண்டு படுத்துப் பழக்கப்பட்டவள்…

திருமணம் நிச்சயம் ஆன பிறகு இது மாதிரி செல்லும் சூழ்நிலை வரும் என்பதற்காக ஸ்வெட்டர் வாங்கலாம் எனக் கடைக்கு சென்ற போது அவள் கேட்ட கடைகளில் எல்லாம் தலை வழியாகக் கழற்றும் ஸ்வெட்டெரையே காண்பித்தார்கள்… “எனக்கு இது வேண்டாம்… பட்டன் வைத்தது வேண்டும்” என மேலும் சில கடைகளில் தேடிய போதும் அவள் தேடியது கிடைக்கவில்லை. சரி பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டாள்.

அவள் சின்னக் குரலில் நடந்ததைக் கூறிய போது கடிகாரத்தை திருப்பி மணி பார்த்தவன் நேரம் ஏழை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து… “இப்போது ஒன்றும் செய்ய முடியாது. நாளை வெளியே போகும் போது வாங்கலாம்” என்று விட்டான்.

சிறிது நேரத்தில் உணவு அறைக்கே கொண்டு வரப்பட்டது. அவர்களிடம் ரூம் ஹீட்டர் இருக்கிறதா என அவன் விசாரித்த போது… ‘இது மிக உயரத்தில் இருக்கும் ஊர் என்பதால் மின்சாரத்தைச் சிக்கனமாகவே உபயோகிப்போம்… அதனால் அந்த மாதிரி பொருட்கள் இல்லை…’என்ற பதில் கிடைத்தது…சுடுநீருக்குக் கூட கீழே மிகப் பெரிய கொதிகலன் வைத்து அதிலிருந்தே சுடுநீர் விநியோகிக்கப்படுவது தெரிய வந்தது.

ஒரு வழியாக உண்டு முடித்து விரைவிலேயே படுத்து விட்டார்கள்…குளிருக்கு அடக்கமாக அந்த ரஜாயைப் போர்த்திக் கொண்டு படுத்த போதும் இவ்வளவு நேரம் கை கால்கள் குளிருக்கு இலக்காகி இருந்ததால் சாமானியமாக அவள் உடம்பில் சூடு ஏற மறுத்தது…இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தவளை “என்ன” என்று கேட்டான்.

“இல்லை… இதைப் போர்த்தியும் குளிர் குறையவே இல்லையே…”என்றாள் 

சொல்லும் போதே பற்கள் தந்தி அடித்தது…..அவனுக்குப் பல ஊர்களுக்கு… குறிப்பாக… வெளிநாடுகளுக்கு சென்று வந்ததால் அவளது நிலை புரிந்தது.

அவள் உடலில் சூடு ஏற ஒரே ஒரு வழிதான் இருந்தது…சில வினாடிகள் யோசித்தவன்… “இப்படி என் பக்கத்தில வா” என்றான்.

அவள் புரியாமல் தயங்கியவாறு பார்க்கவும் “பரவாயில்லை வா… எனக்கு கட்டுப்பாடாக இருக்கத் தெரியும்” என்றான்…

இப்போதும் அவளுக்கு புரியவில்லை… இருந்தாலும் மெல்ல நகர்ந்து அவனருகே வந்தாள். 

அவள் கையைப் பற்றி நன்றாகத் தன் அருகே இழுத்து அவளைத் திருப்பி அவள் முதுகோடு ஒட்டிப் படுத்து அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவன்  வலது கை அவள் இடுப்பை வளைத்திருந்தது. அவன் முகம் அவள் தோள்களில் புதைந்திருந்தது…அவன் உடலின் கதகதப்பு அவள் முதுகில் தெரிந்தது. அந்த ரஜாயை இருவருக்குமாக சேர்த்துப் போர்த்தியவன் அப்படியே படுத்து விட்டான்.

ப்ரியம்வதாவுக்கு இன்ப அவஸ்தையாக இருந்தது.

கணவன்புறம் திரும்பி அவன் பரந்த நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டும் போல் ஒரு வெறி எழ…  ‘என்ன மனிதன் இவன்… திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட முடிந்திருக்காத நிலையில்… அழகான இளம் மனைவி…ஆளை மிரட்டும் குளிர்…கைகளுக்குள் சொர்க்கத்தை வைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்க எப்படி முடிகிறது இவனால்…’

ப்ரியம்வதாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை…விஜய் பழி தீர்க்க எந்த எல்லைக்கும் போவான் என்பதும் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவும் அதே கட்டுப்பாடுகளை தகர்த்தெறியவும் அவன் தயங்க மாட்டான் என்பதும்!

காலை கண் விழித்தவுடன் இன்னும் கணவனின் அணைப்பில் இருப்பதை உணர்ந்தவள் இரவு அவள் ஆசைப்பட்டபடியே அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்ததை உணர்ந்து வெட்கத்துடன் அவன் உறக்கம் கலைந்து விடாதவாறு அவன் கைகளை விலக்கி மெல்ல எழுந்தாள். 

நேரத்தைப் பார்த்தாள்… காலை ஏழு மணி…குளிர் விலக ஆரம்பித்து இருந்தது. பாத்ரூமில் சுடச் சுடக் கொதிநீர் வந்தது. காலைக் கடன்களை முடித்து வெளியே வந்தவள் கணவன் விழித்து விட்டதைப் பார்த்து “குட் மார்னிங்!” என்றாள்.

அவன் பதில் எதுவும் கூறாமல் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டுக் குளியலறைக்குள் புகுந்தான்… அப்போதுதான் மேஜை மேல் காபி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தவள்…ஒரு கோப்பையில் ஊற்றி எடுத்துக் கொண்டு அங்கிருக்கும் ஜன்னலில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டு பனி மலைகளுக்கு இடையில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கும் ஆரஞ்சு நிற சூரியனை பார்த்துக் கொண்டே துளித் துளியாய் ரசித்துக் குடிக்கலானாள். 

சில நிமிடங்கள் பொறுத்து வெளியே வந்தவன் அந்தக் காட்சியைக் கண்டு அப்படியே நின்றான். 

ஜன்னலின் வெளியே சூரிய உதயம்…

ஜன்னலின் மீது நிலவின் உதயம்.

கவிதையான அந்தக் காட்சி அவன் மனதில் ஏதேதோ உணர்வுகளைத் தோன்றச் செய்தது.

வெள்ளை நிறப் பின்னணியில் மஜெந்தா நிறப் பூக்கள் வாரி இறைத்த மேல்சட்டையும் அதே மஜெந்தா நிற நீளப்பாவாடையும் அணிந்து ஜன்னலின் ஒருபக்க சுவரில் முதுகை சாய்த்து மறுபக்க சுவரில் கால்களை நீட்டி, கைகளில் காபி கோப்பையுடன் அமர்ந்திருந்தவளைக் கண்டு உள்ளம் ஒரு கணம் தடுமாறியது.

தலையை உலுக்கித் தன்னை நிலைப்படுத்தியவன்… “ஒன்பது மணிக்குக் கார் வந்துடும். எட்டரைக்குக் கீழே போய்டலாம். சாப்பிட்டுக் கிளம்ப சரியாக இருக்கும்” என்று கண்ணாடி முன் நின்று தலையைத் துவட்டிக் கொண்டே கூறினான்.

அவன் குரல் கேட்டுத் திரும்பியவள் அவளும் பார்த்தது பார்த்தபடி நின்றாள். இடுப்பில் பெரிய பூந்துவாலையைச் சுற்றி இருந்தவன் இடை சிறியதாகவே இருந்தது…ஆனால் அதற்கு மேல் உருட்டித் திரட்டி வைத்த சதைக் கோளங்கள் கரணை கரணையாக… 

கண்ணெடுக்காமல் அவனையே பார்த்தவள் அவன் கண்ணாடி வழியாகத் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து வெட்கிப் பார்வையை மீண்டும் வெளியே திருப்பினாள்.

தோளைக் குலுக்கி விட்டு அவனும் தயாராக ஆரம்பித்தான்.  

Advertisement