Advertisement

அவளின் வேண்டுதலைப் பெரியவர்களிடம் சொல்லி அதைத் தடுத்து விட விஜயாதித்தன் எத்தனையோ முயற்சித்தான். ஆனால் கண்ணபிரானும், ரவிச்சந்திரனும், மீனலோசினியும் ஒரே குரலாக வேண்டிக் கொண்டால் செய்துதான் ஆக வேண்டும் என்று விட்டனர்.

இரண்டு கார்களில் குடும்பத்துடன் திருப்பதி கிளம்பினார்கள்.

ஒரு காரில் கண்ணபிரான், ரவிச்சந்திரன், மீனலோசினி மூவரும் ஓட்டுனருடன் வர இன்னொரு காரில் சிறியவர்கள் அனைவரும் ஏறப் போனார்கள்.

வருண் வண்டியை ஓட்ட விஜய், ப்ரியம்வதா, மதுமிதா, தீக்ஷிதா அனைவரும் அதில் அமருவதாக முடிவு செய்யப்பட மீனலோசினி “இந்த வண்டியில் பின்னால் நாங்க ரெண்டு பேர்தானே இருக்கிறோம்… மதுவோ தீக்ஷியோ இங்கே வந்துடுங்க… இடம் இருக்கும் போது ஏன் நெருக்கடில கஷ்டப்படணும்?” என்றார்.

“ஐயையோ! உங்க கூட வந்தா ஒரே போர்… பூஜை புனஸ்காரம்னு ஏதாவது பேசுவீங்க…அது மட்டும் இல்லாம ஒரே பக்திப் பாட்டாப் போட்டு இறங்குறதுக்குள்ள என்னை ஔவையார் ரேஞ்சுக்கு ஆக்கி விட்டுடுவீங்க…மீ எஸ்கேப்” என்று தீக்ஷிதா முதல் ஆளாக வருணின் காரில் ஏறி அமர்ந்து விட்டாள்.

“நீயாவது இங்கே வாயேன் மது” என மீனலோசினி அழைக்கவும் தயங்கித் தயங்கி மது செல்ல, விஜய்,  “நெருக்கடி எல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை. மதுவும் எங்க கூடயே வரட்டும்” என்று விட ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் மது வந்து காரின் முன்பக்கம் அமர்ந்தாள். பின்புறம் தீக்ஷிதா, ப்ரியம்வதா, விஜய் மூவரும் அமர்ந்து கொள்ள இரு வண்டிகளும் கிளம்பின.

திருப்பதியில் முதலில் மொட்டை போடும் இடத்துக்குச் சென்றார்கள்.

விஜய்யும் ப்ரியம்வதாவுடன் சேர்ந்து மொட்டை போட்டுக் கொள்வதாகச் சொல்லி இருந்தான். அறுவை சிகிச்சை முடிந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் முடிந்த நிலையில் அவன் மீண்டும் எதற்காக மொட்டையடிக்க வேண்டும் என்று ப்ரியம்வதா தடுத்தும் அவன் கேட்கவில்லை.

இருவரும் மொட்டை போட்டு முடித்ததும் அங்கிருந்த அறைகளில் குளித்து முடித்து முதலில் உடை மாற்றி வெளியே வந்த விஜய் பெரும் தவிப்பாக உணர்ந்தான். அவனால் அவள் எத்தனை கஷ்டம்தான் படப் போகிறாளோ தெரியவில்லை என தன்னைத்தானே நொந்து கொண்டவன் தூரத்தில் இலக்கற்று பார்வையைப் பதித்திருந்தான்.  

சில நிமிடங்கள் பிறகு “ஆதி” என்ற மெல்லிய குரல் அவன் பின் கேட்கப் படக்கென்று திரும்பினான். 

மொட்டைத் தலையில் சந்தனம் தடவப்பட்டிருக்க கறுத்த புருவங்களும் அவற்றின் இடையே வைத்திருந்த மெரூன் நிறப் பொட்டும் அவற்றின் கீழ் அவனை எப்போதும் மயக்கும் கரிய பெரிய வெண்ணிலா விழிகளும் பளிச்சென்று தெரிய  தன் தோற்றம் குறித்த சங்கடமோ தவிப்போ கொஞ்சமும்  இன்றி செய்ய வேண்டிய பெரிய விஷயத்தை வெற்றிகரமாக முடித்து விட்ட திருப்தி கண்களை நிறைத்திருக்கக் காதலுடன் அவனை ஏறிட்டவள் அவன் கண்களில் தவிப்பைக் காணவும் அவனை நோக்கித் தன் கையை நீட்டினாள். 

அவள் கையைப் பற்றித் தன்னுடன் சேர்த்து இறுக்கி கொண்டு அவளுக்குள்ளேயே தொலைந்து போக வேண்டும் எனத் தோன்றிய பேராவலை அடக்க விஜய் பெரும்பாடுபட்டுப் போனான். 

அவளுக்குப் பின்னால் பார்த்தவன் தங்கள் குடும்பத்தினர் அவர்களுக்குத் தனிமை கொடுக்க நினைத்தோ என்னவோ கொஞ்ச தூரத்தில் நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டான். 

ஆனாலும் அவர்களுக்குப் பாதுகாப்புக்காக வந்திருந்த ஆட்கள் சற்று தூரத்திலேயே நின்றிருந்தனர். அதிகக் கூட்டமில்லாது இருக்கும் நேரமாகப் பார்த்துத்தான் அவன் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தான். ஆனால் திருமலையில் கூட்டமில்லாத நேரம் ஏது? அதனால் சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் இருந்தனர்.

நினைத்ததைச் செய்ய முடியாமல் அவள் கையைப் பிடித்துத் தன் அருகே இழுத்து, சேர்ந்து நடக்க முயல்வது போல் அவள் தோளை சுற்றிக் கை போட்டுத் தன்னுடன் ஒரு முறை இறுக்கியவன்  பின் கையை எடுத்து விட்டு அவள் உள்ளங்கையுடன் தன் கையைப் பிணைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.  

இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை. அந்த மௌனம் கூட ஒரு  சுகமாகத் தோன்றியது அவர்களுக்கு. 

தேனிலவு சமயத்திலும் அவள் பிறந்த நாள் சமயத்திலும் பிறர் அறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக வந்தது போல் அல்லாமல் இந்த முறை, முறையாக விஜய் ஆதித்யா மற்றும் குடும்பத்தினராக சகல பந்தோபஸ்த்துக்களுடன் வந்திருந்தனர்.

அதனால் எல்லா இடத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை என மிக அருமையாக தரிசனம் முடிந்தது.

தரிசனம் செய்த போதும் பிரகாரம் சுற்றிய போதும் பிரியம்வதா ஒரு வேறுபாட்டை உணர்ந்தாள். அதைக் கணவனுடன் பகிர்ந்து கொள்வதற்காக தன் முழங்கையால் லேசாக அவன் இடுப்பில் இடித்தாள். 

இப்போது இயல்புக்குத் திரும்பியிருந்த அவனும் குறும்பு தலை தூக்க “ஐயோ! ஏண்டி இடிக்கிறே… இது கோவில்… வர வர ரொம்பக் கெட்டுப் போய்ட்டே!” என அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுக்க அவள் முகம் செக்கர்வானமாகச் சிவந்து போனது. 

“உங்களை…” என்று பல்லைக் கடித்தவள்…”எதுக்கு கூப்பிட்டேன்னா… அங்கே பாருங்க” என்று கண்களால் சுட்டிக் காட்டினாள். 

அங்கே இவர்களை விட மிக முன்னேற்றத்துடன் தெளிவாக ஒரு பார்வைப் பரிமாற்றம் அரங்கேறிக் கொண்டிருந்தது. 

ஆம் வருணும் மதுமிதாவும் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டும் முடிந்த போது நேராகப் பார்த்தும் ஒருவரை ஒருவர் கண்களால் விழுங்கி கொண்டிருந்தனர். 

விஜய் லேசாக பிரியம்வதாவின் புறம் சாய்ந்து “ஆமா வது! காலைலயே நான் கவனிச்சேன். நாம கிளம்பும் போது அத்தை அவங்க காருக்கு வரச் சொன்னப்போ தயங்கித் தயங்கி வருணைதான் பார்த்தா மது. அப்போவே நினைச்சேன் இதுங்களை நோட் பண்ணனும்னு. ஆனா வர வர உன்னை பார்த்துட்டா எல்லாமே மறந்து போய்டுது.” 

“க்கும்… உங்க மறதிக்கு என் தலைய உருட்டுறீங்களா… இருங்க… நான் போய் மதுவை ஓரம் கட்டுறேன்.”

மதுவின் அருகில் சென்றவள் “க்கும்” என்று கனைத்தாள். 

அவளும் சட்டென்று வருணின்புறம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டு “என்ன அக்கா?” என்று கேட்டாள். 

“என்ன நடக்குது இங்கே…?”

“ஹான்… ஆடு நடக்குது மாடு நடக்குது… ஏன் நீயும் நானும் கூடத்தான் நடக்குறோம்…” 

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியுது… உனக்கும் வருணுக்கும் இடையில் என்ன நடக்குதுன்னு கேட்டேன்?” 

தமக்கை தன்னைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டதை உணர்ந்து கொண்டவள் முகம் சிவந்து விட, “அது… வந்து… வந்து…”

அதற்குள் கண்ணபிரான் அவளை எதற்கோ அழைக்க “இரு… இரு… உன்னை ஊருக்கு வந்து பேசிக்கிறேன்.” என்று விலகினாள்.

எல்லா இடங்களிலும் தரிசனம் முடித்துக் கிளம்பிய போது ப்ரியம்வதா மிகுந்த சோர்வுற்றிருந்தாள். அதிகாலையில் எழுந்தது… கோவிலில் குளிர் காற்றில் சுற்றியது என அவளுக்குத் தலை வேறு வலிக்க ஆரம்பித்திருந்தது. அவள் நிலையைப் பார்த்த மீனலோசினி தீக்ஷிதாவைக் கட்டாயப்படுத்தித் தங்களுடன் அழைத்துக் கொண்டார்.

காரில் பின்புறம் கணவனின் கைகளுக்குள் சுருண்டு படுத்தவள்தான் மலையிறங்கும் வரை ஆழ்ந்து உறங்கி விட்டாள்.

சென்னை எல்லைக்குள் நுழைந்ததும் எங்காவது இரவு உணவு அருந்தி விட்டுப் போகலாம் என முடிவு செய்யப்பட விஜய் ப்ரியம்வதாவை எழுப்பினான்.

“எனக்குத் தூக்கம் வருது ஆதி! சாப்பாடெல்லாம் வேண்டாம்”

“அப்புறம் பசிக்கும்டா”

“பசிச்சாப் பழம் சாப்பிட்டுக்குறேன்”

பாதுகாப்புக்காக தனிக் காரில் வந்திருந்த ஆட்கள் அங்கங்கே நின்றிருந்தாலும் அவளைத் தனியாகக் காரில் விட்டுச் செல்ல மனமில்லாமல் அவன் உண்பதற்கு இலகுவாக ஏதாவது வாங்கி வரும் படி வருணிடம் கூறி விட்டுக் காத்திருந்தான்.

உணவு வந்ததும் அவளுக்கு ஊட்ட முற்பட்ட போதும் மறுத்து உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

அவர்கள் வீடு திரும்ப இரவு பன்னிரண்டுக்கும் மேல் ஆகி விட்டது. 

கீழே இருந்த விருந்தினர் அறைகளில் ப்ரியம்வதாவின் குடும்பம் தங்கிக் கொள்ள வருண் பிடிவாதமாகத் தன் வீட்டிற்குக் கிளம்பி விட்டான். போகும் முன் மதுமிதாவிடம் கண்களால் விடைபெற்றவனை விஜய், ப்ரியா இருவருமே கவனித்தனர். 

எல்லாம் முடிந்து தங்கள் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்த நிமிடம் விஜய் பிரியம்வதாவை இறுக அணைத்திருந்தான். 

“ஆதி! என்ன இது கதவைக் கூட சாத்தல” என அவள் சிணுங்கவும் கால்களால் பின்னிருந்த கதவை தள்ள அவன் எண்ணம் புரிந்து அது சமர்த்தாக போய் மூடிக் கொண்டது. 

அவன் மனம் புரிந்தவளும் மேலே எதுவும் பேசாமல் அவன் அணைப்பில் அடங்கினாள். அவளுக்குள்ளேயே புதைந்து விட முயல்பவன் போல கொஞ்சம் கொஞ்சமாக அவன் அணைப்பு இறுகிக் கொண்டே போனது. 

சில நிமிடங்கள் பின் மெதுவாக “வலிக்குது ஆதி” என்று அவள் சொல்லவும்தான் எலும்புகள் வலிக்கும் அளவுக்கு அவளை இறுக்கி அணைத்திருப்பது புரிந்தவன் சட்டென்று விட்டு விட்டு “ஸாரிடா! ஐ…ஐ… கான்ட் கன்ட்ரோல் மைசெல்ஃப்” என்றவன் அவளைப் படுக்கையில் அமர்த்தி விட்டுக் குளியலறைக்குள் சென்றான்.

சில நிமிடங்கள் கழித்து அவளும் குளித்து விட்டு வர படுக்கையில் படுத்து அவளைக் கைவளைவில் இருத்திக் கொண்டு கண்களை மூடினான்.

அவன் அணைத்த வேகத்தில் என்னென்னவோ எதிர்பார்த்திருந்தவள் ஆச்ச்ரயத்துடன் “ஆதி” என “என்ன ஆதி” எனக் குறும்புடன் பதிலுக்குக் கேட்டான்.

எப்படி சொல்வதென எப்போதும் போல் தயங்கியவள் “இல்ல… ஒன்னும் இல்ல” எனவும் அவளை அணைத்து ஒரு விரலால் அவள் நாடி பற்றித் தன் முகம் பார்க்கச் செய்தவன் “ஏற்கனவே ரொம்ப டயர்டா இருக்கே… தூங்கு” எனவும் சந்தோஷமாகவே அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவள் மனம் புரிந்து கொண்டவனும் அவள் தோள்களை வருடிக் கொண்டே படுத்திருந்தான். 

நிமிடங்கள் கழிந்தும் உறங்காமல் அசைந்து கொண்டே அவள் இருக்கவும் கண்விழித்தவன் 

“என்ன வது? தூக்கம் வரலையா?” 

“வருது…” 

“பின்னே தூங்காம அசங்கிகிட்டே இருக்கே? உடம்பு எதுவும் வலிக்குதா? பிடிச்சு விடவா?”

“ம்ம்ஹூம்…பசிக்குது ஆதி” என்றாள் பரிதாபமாக…

அவள் முகம் போன போக்கைக் கண்டவனுக்கு சிரிப்பு வந்தது. வேண்டுமென்றே “பழம் நறுக்கித் தரவா?” என்றான்.

“ம்ம்ஹூம்… ரொம்பப் பசிக்குது”

“கார்ல எத்தனை தடவை கேட்டேன்…” என்று செல்லமாகக் கன்னத்தில் இடித்தவன் “இரு வர்றேன்” எனக் கதவைத் திறக்கப் போக “எங்கே போறீங்க ஆதி? நானே கீழ போய்…”

“மூச்! பேசாமப் படுத்திரு” என்று விட்டுப் போனான்.

பத்து நிமிடங்களில் திரும்பியவன் கைகளில் இருந்த தட்டில் இரண்டு தோசைகளும் ஒரு கிண்ணத்தில் எண்ணை கலக்கிய பொடியும் ஒரு சிறிய தட்டில் ஆம்லேட்டும் இருக்கக் கண்டு விழி விரிய அவனை  நோக்கினாள்.

“நீங்களா செஞ்சீங்க?”

“இல்ல உங்க பாட்டி செய்ஞ்சாங்க”

“சும்மா சும்மா என் பாட்டியை ஏன் இழுக்குறீங்க?”

“பின்ன நம்பிக்க இல்லாமக் கேட்டா…”

“உங்களுக்கு சமைக்க தெரியும்னு எனக்குத் தெரியாதே!”

“இன்னும் எனக்கு என்னல்லாம் தெரியும்னு உனக்கு முழுசாத் தெரியல!”என்று கண்ணடிக்க அவள் முகம் சிவந்தாள்.

ஒரு கையால் தோசையை விண்டு பொடியில் தோய்த்து ஊட்ட முற்பட்டவனிடம் “நானே சாப்பிடுறேன்” என்று மறுத்தவளை “ம்ம்ஹூம் சாப்பிடு” என்று விட்டுத் தொடர்ந்தான். 

“சென்னை வந்த புதுசுல ஒரு மேன்ஷன்ல தங்கி இருந்தேன்… அங்கே சமையல் படு மோசம் அதை விட சுத்தம்னா என்ன விலைன்னு கேப்பாங்க. அப்புறம் கடைலயே தங்கிக்க ஆரம்பிச்சேன். வருணும் வந்துட்டதுனால ரெண்டு பேரும் சேர்ந்து சமைப்போம்” 

“வருணும் நல்லா சமைப்பாரா?”

“எனக்கு சொல்லிக் கொடுத்ததே அவன்தான்”

“வீட்டுல அவங்கம்மா மட்டும்தான்…அதுவும் அவங்களும் வேலைக்குப் போயிடுவாங்ககிறனால சின்ன வயசுலயே சமைக்கக் கத்துகிட்டானாம். நான் சுமார்தான்… அவன் சூப்பரா சமைப்பான்”

கேட்டுக் கொண்டே ஒரு தோசை உண்டு முடித்தவள் போதும் எனக் கை காட்ட இன்னும் கொஞ்சம் என்று கட்டாயப்படுத்தி அரை தோசையையும் அரை ஆம்லெட்டையும் ஊட்டி முடித்தவன் மீத உணவைத் தான் உண்டு முடித்தான்.

“அச்சோ! நீங்களும் சரியா சாப்பிடலையா? நான்தான் ஒரு தோசையோட போதும்னு சொன்னேனே! நான் வேணா கீழ போய் இன்னொரு தோசை சுட்டு எடுத்துட்டு வரவா?”

“ம்ம்ஹூம்… எனக்கு பசி இல்ல. வீணா போகுதேன்னு சாப்பிட்டேன்” என்றவன் அவளுக்குத் தண்ணீர் கொடுத்து வாயை துடைத்து விடவும்,

“நான் என்ன குழந்தையா ஆதி… கொஞ்சம் அலுப்பு அவ்வளோதான் நீங்க என்னன்னா…” என்றாள் வெட்கச் சிரிப்புடன்

“எனக்கு நீ குழந்தை…உனக்கு நான் குழந்தை” என்றவன் அவளை அள்ளி எடுத்து மடியில் வைத்து கொண்டு அப்படியே படுத்து விட்டான்.

அவள் முதுகை வருடி கொண்டிருந்தவன் அவள் உறங்கவில்லை என உணர்ந்து “என்னடா இன்னும் தூக்கம் வரலையா?”

“ம்ம்ம்… சாப்பிட்டது தூக்கம் போயிருச்சு”

“டீவில பாட்டுப் போடவா”

“ம்ம்ஹூம்… வேணாம்” 

“இல்ல நான் வேணா ஒரு பாட்டுப் பாடவா?”

“பாட்டா! நீங்களா! நீங்க பாட்டெல்லாம் பாடுவீங்களா? நீங்க பாடி நான் கேட்டதே இல்லையே! ப்ளீஸ் பாடுங்களேன்”

“உன் அளவுக்கெல்லாம் இல்ல ஏதோ சுமாராப் பாடுவேன்”

அவன் அருகில் படுத்துத் தோளில் சாய்ந்து கொண்டவளின் தலையை வருடிக் கொண்டே பாடினான்.

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் –

அமுதூற்றினை ஒத்த இதழ்களும் – 

நிலவூறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவனாகப் புரியுமே!
நீயெனதின்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமுதூறுதே – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
உயிர்த்தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! 

கொஞ்சம் கரகரப்பான குரல் என்றாலும் ராகத்துடன் அவன் பாடிய விதம் இனிமையாகவும் மனதிற்கு இதமாகவும் இருந்தது. அதிலும் ‘நீ எனதின்னுயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனை போற்றுவேன் துயர் போயின போயின துன்பங்கள் நின்னை பொன் எனக் கொண்ட பொழுதிலே’ எனப் பாடும் போது அவன் குரல் சற்று தழுதழுக்க அவள் கண்களும் கசிந்தன. 

முழுப் பாடலும் பாடி முடிக்கையில் அவள் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றிருந்தாள்.

சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில் தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்
உன்னை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்
கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்
எண்ணென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்
பொன்னென்பேன் சிறுபூவென்பேன்
காணும் கண்ணென்பேன் வேறு என்னென்பேன்

Advertisement