Advertisement

அத்தியாயம் 29

இரவு ஒன்பது மணி. 

மெலிஸாவிடமிருந்து கைபேசியில் அழைப்பு வந்தது. 

மனைவியுடன் சரசமாகப் பேசிக் கொண்டிருந்தவன் கைபேசி ஒலிக்கவும் சலித்துக் கொண்டேதான் எடுத்தான்.

“இனிமே பெட்ரூம்குள்ள வந்துட்டா செல்லை ஆஃப் பண்ணி வச்சுடப் போறேன்…எப்போ பாரு பூஜை வேளைல கரடி மாதிரி” என்று சொல்லிக் கொண்டே அதை எடுத்துப் பார்த்தவன் புருவம் சுருக்கினான்.

மெலிசாவா… அவசரம் என்றால் ஒழிய இந்த நேரம் கூப்பிட மாட்டார்களே என மனதில் நினைத்துக் கொண்டே  காதில் வைத்தவன், 

“சொல்லுங்க மெலிசா”

“பாஸ்! வருணைப் போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்”

“வாட்…எப்போ… எப்பிடி… என்ன ஆச்சு?”

“தெரியல பாஸ்! போலிஸ் ஸ்டஷன்ல இருந்து ஃபோன் வந்துச்சு. லாயர்கிட்டப் பேச முன்னால உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாமேன்னுதான் கூப்பிட்டேன். உங்க பேர் வெளிய வர வேணாம்னுதான் வருண் என் நம்பர் குடுத்திருப்பான். நான் லாயர் கூடப் பேசிட்டு சொல்றேன் பாஸ்” என வைத்து விட்டார்.

அவன் என்ன எனக் கேட்டது முதற்கொண்டு அவனையே பார்த்திருந்தவள் கடைசியில் அவன் பேசி முடிக்கும் முன்பு அருகில் வந்து அவன் தோளைப் பிடித்திருந்தாள்.

அவன்  வைக்கவும், “என்னாச்சு? ஏதாவது ப்ரச்சனையா?” என அவன் முகத்தை ஆராய்ச்சிப் பார்வையுடன் வினவவும், “ம்ம்ம்…வருணைப் போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்”

“அய்யையோ!” என்றவள், மற்ற விஷயங்களைக் கூறிக் கொண்டே கணவன் உடை அலமாரியைத் திறந்து உடை மாற்றப் போகவும் திடுக்கிட்டாள்.

“இப்போ எங்கே போறீங்க ஆதி?”

“போலிஸ் ஸ்டஷன்க்கு”

“இன்னேரத்துலயா?அதுதான் மெலிஸா லாயர்கிட்டப் பேசுறேன்னு சொன்னாங்கள்ல…அதுக்குள்ள நீங்க எதுக்குப் போறீங்க…?அதுவும் போலீஸ் ஸ்டஷனுக்கு”

“இல்ல வது…எனக்கு மனசு சரி இல்ல. வருணைப் பார்த்தால்தான் நிம்மதி”

“வேணாம்னு சொல்லல ஆதி! காலைல போகலாமே… மெலிஸாவும் லாயரும் பார்த்துப்பாங்க…அவரே உங்க பேர் சொல்லாம இருக்கும் போது நீங்க ஏன் போகணும்கிறீங்க… ம்ம்ஹூம் ஏதோ ப்ரச்சனை இருக்கு…நீங்க போக வேணாம்”

“ப்ளீஸ் வது…புரிஞ்சுக்கோ…எனக்கு வருணைப் பார்க்கணும்”

அவன் குரலில் நடுக்கத்தை உணர்ந்தவளுக்கு பயம் வந்து விட்டது. 

அருகில் வந்து அவன் தோளைத் தடவியவள், “ரிலாக்ஸ் ஆதி! வருண் உங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கலாம்…நாமும் அவருக்கு வேண்டியது பண்ணுவோம்…ஆனா அதை நீங்க நேர்ல… அதுவும் இந்த நேரத்துல போய்த்தான் பண்ணனும்னு அவசியம் இல்ல… நம்மகிட்ட வேலை பார்க்கிற ஒரு சாதாரண எம்ப்ளாயீக்காக நீங்க ஏன் இப்பிடி டென்ஷன் ஆகுறீங்க?”

கண்களை இறுக்கத் மூடித் திறந்தபடி தன் தோளில் இருந்த அவள் கையைப் பற்றியவன், “வருண் சாதாரண எம்ப்ளாயீ இல்ல வது… அவன்… அவன் என் தம்பி”

அதிர்ச்சியில் வாய் பிளந்தவளுக்குச் சற்று நேரம் பேச்சு வரவில்லை.

அதிர்ச்சி மாறி பின் மெல்லத் தன்னிலைக்குத் திரும்பியவள், “என்ன சொல்றீங்க ஆதி?” என்று கேட்டாள்.

“ஆமா வது…அவன் என் அப்பாவோட இன்னோரு மனைவிக்குப் பிறந்தவன்…இந்த விஷயம் என்னையும் வருணையும் தவிரப் பெரியப்பாவுக்குக் கூடத் தெரியாது. மத்த விஷயம் எல்லாம் நான் வந்து சொல்றேன்…எப்படியும் அவன் எங்கே வேலை பார்க்கிறான்னு கேட்டா என் பேர் இதுல வந்துதான் ஆகும். அதுனால நான் போறதுல ஒண்ணும் ப்ரச்சனை இல்ல. நான் போய்ட்டு சீக்கிரம் வந்துடறேன்” என்று அவள் கன்னத்தைத் தட்டி விட்டுக் கிளம்பி விட்டான். 

திரும்பி அவன் வந்த போது நேரம் பன்னிரண்டரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவன் ஏதோ சொல்ல வந்த போது “காலையில் பேசிக்கலாம்…படுங்க” என்று விட்டாள்.

காலை அவனுக்கு சத்துமாவுக் கஞ்சி கொண்டு வந்தவளிடம் இரவு நடந்ததை எடுத்துரைத்தான்.

“நேத்து நம்ம கோடௌன்ல சரக்கு ஏத்திட்டு இருந்தப்போ புதுசா ஒரு ரௌடிக் கும்பல் வந்து ப்ரச்சனை பண்ணி இருக்காங்க… நம்ம எப்பவுமே இந்த மாஃபியா க்ரூப்கெல்லாம் கரெக்டா பணம் செட்டில் பண்ணிடறனால நம்ம கூடப் ப்ரச்சனை வச்சுக்க மாட்டாங்க…ஆனா இந்த க்ரூப் புதுசு போல…அதுனால பொதுவா ஒருத்தரை வச்சு மத்தியஸ்தம் பேசுறதுக்காக வருண் போறேன்னு சொல்லி இருந்தான்.” 

“இந்த புதுசா வந்த கும்பலைப் பிடிக்கிறதுக்குப் போலீஸ் ஸ்கெட்ச் போட்டு இருப்பாங்க போல…அவங்க கூட இவனும் இருந்தனால அரெஸ்ட் பண்ணிட்டாங்க…விவரம் தெரிய வரவும் நானும் போய் சொல்லவும் உடனே விட்டுட்டாங்க”

அவன் இன்னும் ஏதோ யோசனையிலேயே பேசுவது தெரியவும், “அதான் விட்டுட்டாங்கள்ல… இன்னும் ஏன் கவலைப்படுறீங்க?”

“இல்ல வது… அவனை ரௌடி கெட்அப்ல இதுவரை யாரும் என்னோட பார்த்தது இல்ல…ரெண்டு ஐடென்டிடிலயும் வருண் ரொம்ப கவனமா இருப்பான்…ஆனா இன்னிக்கு ரௌடிங்க போலீஸ் எல்லாரும் எங்களை சேர்த்து வச்சுப்  பார்த்துட்டாங்க…அதுனால வருணுக்குக் கொஞ்சம் கோபம் என் மேல”

“நேத்து அவர் அவ்வளவு யோசிச்சு உங்க பேர் சொல்லாம வெளிய வந்துடலாம்னு யோசிச்சுருப்பாரு…ஆனா நீங்க மனசு கேட்காம நேர்ல போய்ட்டீங்க…சரி விடுங்க… நடந்து முடிஞ்சதைப் பத்தி இனிமே யோசிக்க வேண்டாம்”

ப்ரியம்வதா ஒரு வார்த்தை ‘நான் நேத்தே சொன்னேன் நீங்க கேட்கல’ என்று சொல்லவில்லை… யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு மனைவி?

அவன் தன் இடது கையை அவளை நோக்கி நீட்ட புரியாமல் பார்த்துக் கொண்டே அதில் தன் கையை வைத்தாள்.

அவளை தன் அருகில் இழுத்துப் பக்கத்தில் அமர்த்தி அவள் தோளில் கையிட்டவன் மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தான்

“வருணோட அம்மா ஒரு அனாதை இல்லத்துல வளர்ந்து அங்கேயே படிச்சு டீச்சராகி எங்க அப்பா வேலை பார்த்த ஸ்கூல்ல வேலை பார்த்தவங்க.அப்பாவோட முரட்டுத்தனம் பார்த்தே அவரை ஒரு தலையாய்க் காதலிச்சிருக்காங்க.” என்றவன் “மனைவியா வந்தா என்ன கதி ஆகும்னு அவங்களுக்குப் புரியல பாவம்” என்றான் விரக்திச் சிரிப்புடன்…

 “அவர்கிட்டத் தன் மனசைச் சொல்லத் தயங்கிட்டு இருந்துருக்காங்க… எப்படியும் அண்ணன் ஒருத்தர் இருக்காரு அவருக்குக் கல்யாணம் முடிஞ்சதும் பேசலாம்னு நினைச்சுருக்காங்க… ஆனா திடீர்னு அப்பாவுக்குக் கல்யாணம் நடந்துட்டதுல அவங்களுக்கு ஏக அதிர்ச்சி”

“கல்யாணத்துக்கு அப்புறமும் அவரையே நினைச்சுட்டு இருந்துருக்காங்க… ஒரு நாள் தனிமை கிடைச்சப்போ அடக்கி வைக்க முடியாம அவர்கிட்ட எல்லா விஷயத்தயும் சொல்லி அழுதுருக்காங்க. அவர் இல்லாம வாழ முடியாதுன்னும் ஊருக்குத் தெரியாமலாவது அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கெஞ்சி இருக்காங்க”

ப்ரியம்வதா முகம் சுளித்தாள்.

“இல்லடா! அவங்களைத் தப்பா நினைக்காதே! அவங்க செய்தது சரின்னு  நான் சொல்லல. ஆனா மனசுக்குப் பிடிச்சவரோட வாழ ஒரு வாய்ப்பு கிடைச்சுறாதான்னு நினைச்சுருக்காங்க…கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டாங்க… கல்யாணம் ஆனவர்கிட்ட அவங்க இப்படிப் பேசினது தப்புதான்”

“அதுல விஷயம் என்னன்னா எங்க அப்பாவும் ஒத்துக்கிட்டார்.”

“என்னது மாமா ஒத்துக்கிட்டாரா? சே!”

“நான் என்ன நினைக்கிறேன்னா அப்போ அப்பா மட்டும்தான் வேலை பார்த்துகிட்டு இருந்தார். பெரியப்பா நல்லா படிச்சுருந்தாலும் வேலைக்கு போனா நினைச்ச நேரம் கோவில் குளத்துக்குப் போக முடியாதுன்னே வேலைக்குப் போகல. இருந்த கொஞ்சம் நிலம், தோப்பு அதை இதைப் பார்த்துகிட்டு இருந்துட்டாரு.தேவைக்கு பணம் இருந்தனால யாரும் அதைப் பெருசா நினைக்கல… வருண் அம்மாவும் அரசாங்க வேலை… ரெண்டு வருமானம் நல்லதுன்னு நினைச்சு அப்பா சரின்னு சொல்லி இருப்பாரோன்னு தோணுது”

“அதுக்காக அத்தைக்கு துரோகம் செய்ய எப்பிடி மனசு வந்துச்சோ?”

“அவர் அப்பிடி எல்லாம் யோசிக்கிற பிறவி இல்லடா.தனக்கு இதுல என்ன லாபம் கிடைக்கும்னு பார்த்துருப்பாரு. தானா வர்றதை ஏன் விடணும்னு நினைச்சுருப்பாரு… உறுதியாத் தெரியல… ஒரு யூகம்தான்…”

“ரகசியமாக் கல்யாணம் செய்ஞ்சுட்டு ஒரு மாசம் வரை வாழ்ந்துருக்காங்க. ஒரு நாள் கோவில்ல வச்சு அம்மாவைக் கர்ப்பிணியாப் பார்த்ததும் வருண் அம்மாவுக்கு மனசு உறுத்த ஆரம்பிச்சுருச்சு.”

“அதுக்கப்புறம் குற்ற உணர்ச்சியினால ரொம்பத் தவிச்சுருக்காங்க. அங்கே இருக்கப் பிடிக்காம அப்பாவுக்குக் கூடத் தெரியாம மாற்றல் வாங்கிட்டு வேற ஊருக்குப் போய்ட்டாங்க. கொஞ்ச நாளுக்கப்புறம்தான் தான் கர்ப்பமாயிருக்கிறதை உணர்ந்துருக்காங்க… கொஞ்ச கால வாழ்க்கையின் மிச்சமாவும் இனி வாழப் போற வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் குழந்தை கிடைச்சுருக்குன்னு சந்தோஷப்பட்டுத் தனியாவே வருணைப் பெத்தெடுத்து வளர்த்துருக்காங்க”

“எங்கப்பா அம்மா இறந்து கொஞ்ச நாள்லயே அவங்களுக்கும் உடம்பு சரியில்லாமப் போய் இருக்கு… வருணுக்கும் எனக்கும் ஆறு மாசம் வித்யாசம்தான்… அப்போ அவன் லெவென்த் படிச்சுட்டு இருந்திருக்கான்.”

“அவங்க இறக்குறதுக்கு முன்னால எல்லா விஷயத்தயும் வருண்கிட்ட சொல்லி இருக்காங்க…எப்பவும் அப்பாவைத் தப்பா நினைக்கக் கூடாதுன்னும் தப்பெல்லாம் அவங்க மேலதான்னும் சொல்லிட்டு இறந்துட்டாங்க…சாகும் முன்னால இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னும் எந்தக் காலத்துலயும் எங்கப்பாகிட்ட மகன்னு சொல்லி உரிமை கேட்டோ சொத்துல பங்கு கேட்டோ போகக் கூடாதுன்னும் சத்தியம் வாங்கி இருக்காங்க.” 

“மறைஞ்சிருந்தாவது அப்பாவைப் பார்க்கலாம்னு ஆசையா வந்த  வருணுக்கு அவர் உயிரோட இல்லைன்னு தெரிஞ்சதும் என்ன செய்யன்னு தெரியாமத் திரும்பிப் போய்ட்டான். ஆனா அதுக்கப்புறம் தள்ளி நின்னு நான் என்ன செய்றேன்னு பார்த்துட்டே இருந்திருக்கான். சென்னை வந்து நான் பிஸினஸ் ஆரம்பிச்ச சமயம் என் கூட வந்து சேர்ந்துகிட்டான்.” 

“பார்க்க முரட்டாளா இருப்பான். எனக்கும் அந்த சமயம் அப்பிடி ஒரு ஆள் தேவைப்பட்டுச்சு. அப்போல இருந்து இப்போ வரை பொறுப்பா எல்லாத்தையும் பார்த்துகிட்டு என் கூட இருக்கான். இந்த கெட்டப் சேஞ்ச்லாம் கூட அவன் யோசனைதான்… இல்லீகலா வர்ற ப்ரச்சனை எல்லாத்தயும் அவன்தான் பார்த்துக்கிறான்.”

அவன் சொல்லி முடிக்க நம்ப முடியாதவளாக அமர்ந்திருந்தாள் ப்ரியம்வதா.

“இந்த விஷயம்லாம் எப்பிடி உங்களுக்குத் தெரிய வந்துச்சு ஆதி?”

“வருண் ஆரம்பத்துல சொல்லல வது… ஆனா ஒரு நாள் பேச்சு வாக்கில காரைக்குடில என்னை மறைஞ்சுருந்து பார்த்தேன்னு உளறிட்டான். நான் உண்மையைச் சொல்லுன்னு மிரட்டினப்போ கூட அவன் சொல்லல. ஆனா எதிராளியோட ஆளு…எனக்கு துரோகம் செய்ய வந்துருக்கிறான்னு வேணும்னே பழி சொல்லி இனிமே என் கூட இருக்க வேண்டாம்னு அவன் வழியைப் பார்த்து போக சொல்லிட்டேன்… அப்போதான் வேற வழி இல்லாம எல்லா விஷயத்தையும் சொன்னான்.”

“எனக்கே அதிர்ச்சிதான். இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது முக்கியமாப் பெரியப்பாவுக்குன்னு சொல்லிட்டான்.  நானும் அதுக்கு ஒத்துகிட்டேன்.”

“ஏன்னா பெரியப்பாவுக்கும் எங்க அப்பாவுக்கும் வயசு வித்யாசம் கொஞ்சம் அதிகம். சின்ன வயசுலையே அம்மாவை இழந்துட்டனால அப்பா பெரும்பாலும் பெரியப்பா பொறுப்பிலதான் இருந்துருக்காரு… அதுனால அவர் சரியா கவனிக்காமதான் அப்பா குணம் இப்பிடி ஆயிடுச்சுன்னு அப்பப்போ புலம்புவார். கோபக்காரர்னாலும் ஒழுக்கம் தவறாதவன்னு தம்பியை நினைச்சுருக்கார்… இதுல இந்த விஷயம் அவருக்குத் தெரிய வராம இருக்கிறதே நல்லதுன்னுதான் எனக்கும் தோணுச்சு” 

“வருணும் அவங்கம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாத்தணும்னு நினைச்சான். ஒருவேளை யாருக்காவது தெரிஞ்சா என்னை விட்டு எங்கேயாவது சொல்லாமக் கொள்ளாமப் போய்டுவேன்னு சொன்னான். தம்பின்னு தெரிஞ்சப்புறம் நான் எப்பிடி விடுவேன்? அதுனால யாருக்கும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன்… ஆனா நீயும் நானும் வேற இல்லையே… அதுனாலதான் இப்ப உங்கிட்ட சொல்லிட்டேன். ஆனா இந்த விஷயம் நம்மைத் தவிர யாருக்கும் தெரியக் கூடாது கண்ணம்மா… தெரிஞ்சா வருண் வருத்தப்படுவான்”

“நிச்சயமா நான் யாருக்கும் சொல்ல மாட்டேன் ஆதி… ஆனா உங்க தம்பி… இத்தனை உழைக்கிறார்… ஆனா நம்மை மாதிரி வசதியா இல்லாம…”

“ஆமாடா! அது எனக்கு எப்பவுமே உறுத்தல்தான்… கோயம்பேடுல ஒரு ஃப்ளாட் மட்டும்தான் அவன் பேர்ல இருக்குது. அதுவும் கட்டாயப்படுத்தி வாங்க வச்சேன். எத்தனையோ தடவை சொல்லிட்டேன்… ஷேர்ஸ் மட்டுமாவது அவன் பேர்ல மாத்தி எழுதுறேன்னு… அம்மா… சத்தியம்… காப்பாத்தணும்… பெரியப்பாவுக்குத் தெரிஞ்சுரும்… அது இதுன்னு ஏதாவது சொல்லி வேணாம்னு சொல்லிடறான். சில  நேரங்கள்ல அவனை ரொம்ப வேலை வாங்குறேன்னும் அவனை ரொம்ப சார்ந்து இருக்கேன்னும் தோணும்…ஆனா என் சம்பந்தப்பட்ட வேலைகளை வேற யார்கிட்டயாவது ஒப்படைச்சா வருண் ரொம்பக் கோச்சுப்பான். அதுக்கு ஈடு கட்டுற மாதிரி கூட ஒண்ணும் செய்யாம இருக்கேனேன்னு சில சமயம் மனசு கிடந்து அடிச்சுக்கும்”

“ம்ம்ம்…யோசிச்சு ஏதாவது பண்ணலாம் ஆதி”

அந்த வார இறுதியில் அவர்கள் திருப்பதி செல்வதென முடிவு செய்யப்பட்டது. 

Advertisement