Advertisement

அத்தியாயம் 28

அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே அவன் கேட்க அவன் பார்வையில் கொஞ்சம் பயந்துதான் போனாள்.

அவள் பதில் பேசாமல் நிற்கவும், “இது என்ன பைத்தியக்காரத்தனம் வது…என்னதான் உடம்பு சரியில்லாமப் படுத்திருந்தாலும் அதுக்காக திருப்பதி வந்து மொட்டை அடிச்சுக்கிறேன்னா ஒரு பொண்ணு வேண்டுவா? நோ! ஐ கான்ட் அலோ திஸ்.”

அவன் சொன்னதில் உடம்பு சரியில்லாமல் படுத்திருந்தான் என்ற வார்த்தைகள் மனதில் தைக்க, ஒரு மாதம் முந்தைய நிகழ்வுகள் அவள் கண்ணில் நிழலாடின.

எப்படிக் கிடந்தான்… அவள் எப்படித் தவித்தாள்… அறுவை சிகிச்சைக்குப் பின்னும் கண் விழிக்காமல் கிடந்தவன் கோமாவுக்குச் சென்று விடக் கூடாது என எத்தனை தெய்வங்களை வேண்டினாள். 

டாக்டர் அவளை ‘ஐசியூவிற்குள் சென்று உங்கள் கணவரிடம் பேசுங்கள்… அது அவர் ஆழ்மனதைத் தொட்டு நினைவுகளை மீட்டுக் கொண்டு வரும்’ என்று கூறிவிட இஷ்ட தெய்வமான பிள்ளையாரின் நாமத்தை இடைவிடாது ஜெபித்துக் கொண்டே உள்ளே சென்றவளின் கண்களில் அவனது கட்டிலின் தலைமாட்டில் இருந்த ஏழுமலையானின் திருவுருவப் படம்தான் முதலில் பட்டது. வினாயகனோ வேங்கடவனோ எல்லாம் ஒருவர்தானே…அந்தக் கணம் தன்னை அறியாமல் பின்விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல் அவள் மனதில் அந்த வேண்டுதல் பிறந்தது.

“அப்பா ஏழுமலையானே! என் புருஷன் நல்லபடியா எழுந்துட்டா உன் மலைக்கு வந்து நான் மொட்டை போட்டுக்கிறேன்பா” என வேண்டுதல் வைத்த பின்தான் அவன் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.

ஆனால் அப்போது இதைப் பற்றிக் கணவன் என்ன சொல்வான் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை. அவன் பிழைத்தெழுந்து வந்தால் போதுமென்றிருந்தது.

அவள் பேசாமலே நின்று கொண்டிருக்கவும் “ஏய்! என்னடி நான் கேட்டுட்டே இருக்கேன்… பதில் சொல்லாம வெறிச்சுப் பார்த்துட்டு இருக்கே…ஏன் இதை விட புத்திசாலித்தனமா வேண்டலையேன்னு யோசிச்சுகிட்டு இருக்கியா? கையைக் காலை வெட்டிக்கிறேன்னு வேண்ட வேண்டியதுதானே… இல்லையே… அப்பிடி வேண்டினா அது திருப்பி வளருமா என்ன… முடிதானே… வெட்டினாத் திருப்பி வளர்ந்துட்டுப் போகுதுன்னு தைரியம்”

மக்கள் மூட நம்பிக்கையில் இப்படி எல்லாம் வேண்டுதல் செய்து கொள்கிறார்களே என அவன் மனதில் பதிந்திருந்த துவேஷம் எதிரில் நிற்பவள் தன் மனைவி, தன் உயிருக்காகத்தான் இப்படி வேண்டினாள், என்பதையெல்லாம் கணப்பொழுது மறைத்து விட வார்த்தைகள் நெருப்புத் துண்டங்களாய் வெளிப்பட்டன. 

அவன் அவளை வருத்த வேண்டும் என நினைத்துச் சொல்லவில்லை.  ஆனால் அவன் வார்த்தைகளால் காயம்பட்டவளின் கண்களில் நீர் நிறைந்து விட உதடு துடிக்கக் கண்களின் நீரினூடாக அவனைப் பார்த்தவள், “ஒருவேளை உங்க உடம்பு குணமாக என் கையையோ, காலையோ, கண்ணையோ இல்ல எந்த உடல் உறுப்பையோ கேட்டிருந்தாலும் அதுனால நீங்க குணமாவீங்கன்னு உறுதியாத் தெரிஞ்சுருந்தாக் குடுத்திருப்பேன் ஆதி” என்றாள்.

கன்னத்தில் சுளீரென்று அறை வாங்கியவன் போல் நிமிர்ந்தவன் அப்போதுதான் தான் சொல்லி விட்ட வார்த்தைகளின் வீரியத்தையும் அதில் தொனித்த அர்த்தம் அவளைக் காயப்படுத்தி விட்டதையும் உணர்ந்தவன் ஒரே எட்டில் அவளை அணுகித் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

அவன் மார்பில் சாய்ந்து அவள் விசும்பவும் அவளை இன்னும் இறுக்கி அணைத்தவன் அவள் கூந்தலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு “ சாரி… சாரிடி… சாரி கண்ணம்மா நான் உன்னைச் சொல்லணும்னு நினைச்சு சொல்லல. ப்ளீஸ்… ப்ளீஸ்டா மன்னிச்சுரு” என்றவன் அவள் விசும்பிக் கொண்டே இருக்கவும் அவளை விலக்கி “நான் வேணும்னா தோப்புக் கரணம் போடவா…அப்புறம் போஸ் குடுக்கிறேன்னு சொல்லக் கூடாது… இதோ பாரு” என்று அவன் காதுகளைப் பிடிக்கப் போக கண்ணீருடனேயே புன்னகைத்தவள் “ஆதி” எனச் சிணுங்க அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் அமர்ந்து அவளையும் மடியில் இருத்திக் கொண்டான்.

அவள் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டவன் “சொல்லு ஏன் இப்பிடி வேண்டிக்கிட்ட?”

“அது… எனக்கு வேற வழி தெரியல ஆதி… நீங்களோ உணர்வில்லாம இருந்தீங்க… டாக்டர் உங்களுக்கு நினைவு திரும்பலைன்னா கோமாக்குப் போக வாய்ப்பு இருக்குதுங்கிறாரு… நான் சோர்ந்து போய்ட்டேன்.எனக்கு… எனக்குள்ளேயே ஒரு நம்பிக்கை வேண்டி இருந்துச்சு… அந்த நம்பிக்கை… ஒரு பற்றுக்கோடாத் தேவைப்பட்டுச்சு… என்னை யாராவது தூக்கி நிறுத்த மாட்டாங்களான்னு இருந்துச்சு. அப்போதான் ஸ்வாமி படத்தைப் பார்த்ததும் என்னை அறியாமல் வைத்த வேண்டுதல்தான் அது…” என சொல்லிக் கொண்டே வந்தவள் “அது என்ன அப்பிடி சொல்றீங்க ஆதி… கை காலை வெட்டிக்குவியான்னு… முடிங்கிறது கை கால்க்கு மேல தெரியுமா?”

“இது என்ன புதுக்கதையா இருக்கு?”

“கதையெல்லாம் இல்ல. முடிங்கிறது அழகு…நீங்களே சொல்லுங்க ஹாஸ்பிடல்ல இருந்து வந்து இத்தனை நாளா காப் வச்சுக்காம வெளியே போனீங்களா நீங்க…?யோகா பண்ணும் போது கூட தலைல ஸ்கார்ஃப் மாதிரி ஏதோ கட்டிக்கிட்டீங்கதானே…அப்போ முடியை இழக்குறனால எந்த இழப்பும் இல்லைன்னு  நீங்க எப்பிடி சொல்லலாம்? ரெண்டு மூணு மாசம்னாலும் மொட்டைத் தலையோட இருக்கவும் ஒரு தைரியம் வேணும்பா”

அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அது உண்மைதான் எனத் தோன்றி விட மனதுள் தோன்றிய அவளது கூந்தலிழந்த தோற்றத்தில் அவன் உடல் சிலிர்த்தது.

பற்றியிருந்த கைகளில் அழுத்தத்தைக் கூட்டியவன் அவள் கண்களுக்குள் பார்த்துத் தழுதழுத்த குரலில் “நீ அத்தனை செய்றதுக்கு நான் தகுதியானவனா வது?” எனவும் சட்டென்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 

அவளுக்கும் கண்கள் நிறைந்தது.

“என் உடல் பொருள் ஆவி எல்லாம் நீங்கதான் ஆதி… நீங்களும்  நானும் வேறன்னு நான் நினைக்கல. நீங்க பிழைக்க என் உயிரைத் தர வேண்டி இருந்தாலும் நான் தந்திருப்பேன்”

சொன்னவளைத் தன்னுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டவன் அதன் பிறகு அதைப் பற்றிப் பேசவில்லை.

அடுத்த நாள் சித்த மருத்துவரைப் பார்த்து அவர் அறிவுரைகளையும் பெற்றுக் கொண்ட பின் ‘வனவாசம்’ அமைப்புக்கு ஒரு பெரிய தொகையைக் காசோலையாக எழுதிக் கொடுத்து விட்டு அழைத்துச் செல்ல வந்திருந்த வருணுடன் இருவரும் கிளம்பினர்.

சென்னையிலும் மருத்துவமனை சென்ற போது டாக்டர் ராமலிங்கம் தனது திருப்தியை வார்த்தைகளில் வெளியிட்டார்.

“கங்க்ராட்ஸ் யங் மேன்… யூ ஆர் கம்ப்ளீட்லி ஆல்ரைட் நௌ. உங்க வைஃபோட ப்ரேயெர்ஸ்… அப்பா… வாய்ப்பே இல்ல.இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்க நிஜமாவே குடுத்து வைத்திருக்கணும் மிஸ்டர். விஜய்”

“உண்மைதான் டாக்டர்” அவன் பெருமிதத்துடன் மனைவியைப் பார்க்க அவள் முகம் சிவந்தது.

“இனிமே ஏதாவது மருந்துகள் சாப்பிடணுமா டாகடர்…?அது போக டூஸ் அண்ட் டோன்ட்ஸ் என்னென்ன?” என்று பேச்சை மாற்றினாள்.

“ஸீ… இப்பவும் பாருங்க… உங்க ஹெல்த் மேலதான் அவங்க எண்ணம் பூராவும் இருக்கு” என சிலாகித்தவர், “இல்ல ப்ரியம்வதா…இனி மருந்துகள் இல்லாமக் கொஞ்ச நாள் அப்செர்வ் பண்ணிப் பார்க்கலாம்… பட் பிபி மானிடரிங்க் மட்டும் டெய்லி பண்ணனும். அதுதான் உங்க ஆஃபிஸ்லயே ஹாஸ்பிடல் விங்க் இருக்கே அதுல பண்ணிக்கிட்டா போதும்… அப்புறம் இந்த யோகா தியானம் இத எல்லாமும் தொடர்ந்து பண்ணுங்க… நல்ல விஷயங்கள்தானே…” என்று முடிக்கவும் இருவரும் கிளம்புவதற்கு அறிகுறியாக எழுந்தனர்.

“ப்ரியா! ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய வெயிட் பண்ணு. இதோ வந்துடறேன்” என்று விஜய் கூறவும் தயக்கத்துடன் வெளியில் வந்து நின்றாள். 

தனக்குத் தெரியாமல் அவனுக்கு ஏதோ ப்ரச்சனை இருக்கிறது போல என நினைத்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

மருத்துவமனையிலிருந்து நேராக அலுவலகத்துக்கும் பின் ப்ரியம்வதாவின் வீட்டிற்கும் சென்றனர். அவளை வாசலில் இறக்கி விட்டு விட்டுப் பக்கத்தில் ஒரு வேலை முடித்து வருவதாகச் சென்றான் விஜய்.

அன்று சனிக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருக்க “அக்கா ஃபாரின்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தே” என்று கேட்ட மதுவை அடக்கி அனைவரையும் அமர வைத்து நடந்த விஷயங்களைக் கூறினாள்.

ரவிச்சந்திரன் அதிர்ச்சியில் விழித்தார் என்றால் மீனலோசினி சேலையைச் சுருட்டி வாயில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.

“அம்மா! இதுக்குத்தான் நான் சொல்ல வேணாம்னு பார்த்தேன்… ஆனா கண்ணன் மாமாதான் அப்பிடி சொல்லாம இருக்கக் கூடாது ப்ரியா…இப்போதான் எல்லாம் சரி ஆகிடுச்சே…இனிமே ஒன்னும் பயம் இல்லைல்ல… ஒரு வார்த்தை சொல்லிடுன்னாரு” என்று சமாதானம் செய்த பிறகும் மீனலோசினியின் அழுகை நிற்கவில்லை.

ரவிச்சந்திரன், “மீனு போதும்…அதுதான் பெரியவரா சம்பந்தி எல்லாம் செய்து கூடவே இருந்திருக்காரே…இத்தனை பெரிய விஷயத்தைத் தனியா சமாளிச்சு சத்தியவான் உயிரை மீட்ட சாவித்ரி மாதிரி புத்திசாலித்தனமாப் புருஷன் உயிரை மீட்டு வந்திருக்கா நம்ம பொண்ணுன்னு நாம பெருமைப்படனும்.“ 

ப்ரியம்வதாவின் அருகில் வந்தவர் அவள் தலையைத் தடவிக் கொடுத்து “எல்லாம் நல்லா ஆகிடும்மா… உனக்கு ஒரு குறைவும் வராது” எனவும் “அப்பா” என அவர் தோள் சாய்ந்தாள்.

“ம்ம்ம்… ம்ம்ம்… எல்லாம் எழுந்திரிங்க! மாப்பிள்ளை வந்துடுவாரு… இப்பிடி அழுமூஞ்சியா இருந்தா அவருக்கு மனசு கஷ்டப்படாதா? போங்க… போய் வேலையைப் பாருங்க… மீனு! மாப்பிள்ளைக்கு சமையல் பக்குவம் ப்ரியாகிட்டக் கேட்டு செய்.”எனவும் இயல்பு நிலை திரும்பியது.

நிதானமாக அங்கே உண்டு முடித்து மதியமும் தங்கி விட்டு மாலையே வீடு வந்தனர். 

இரவு உணவு முடிந்ததும் தங்கள் அறைக்கு வந்தவள் எப்போதும் போல் பாடல் போடுவதற்காகத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து ரிமோட்டுடன் போராடிக் கொண்டிருக்க அவளைப் பின்னிருந்து அணைத்தான் விஜய்.

அவள் கழுத்து வளைவில் தாடையைப் பதித்தவன், “என்ன செய்றீங்க மேடம்?” எனக் கேட்க,

“உங்களுக்குத்தான்  பாட்டு தேடிகிட்டு இருக்கேன்… பாட்டுப் போடலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே!” எனத் தீவிரத்துடன் பதில் சொன்னாள் அவள்.

“தூக்கம் வர்றதுக்குத்தானே பாட்டு… நாந்தான் தூங்கப் போறது இல்லையே”

“தூங்கப் போறது இல்லையா? என்ன சொல்றீங்க ஆதி?நேரா நேரத்துக்குத்  தூங்கலைன்னா உடம்பு கெட்டுடும்”

“அதெல்லாம் ஒன்னும் கெடாது… இன்னிக்கு சிவராத்திரிதான்” என்றவாறு படுக்கையில் படுத்து அவளையும் தன்னை நோக்கி இழுத்தவனை வினோதமாகப் பார்த்தவள்…  “ஆதி அதெல்லாம் முடியாது… டாக்டர்கிட்டக் கலந்து பேசாம…”   எனச் சொல்லிக் கொண்டே வந்தவள் சட்டென்று பேசுவதை நிறுத்தி விட்டு விழிகளை விரித்தாள்.

“நீங்க…பேசிட்டீங்க?”

கண்களில் குறும்புடன் இதழ்களில் புன்னகையுடன் ஆம் என்பது போல் விழிகளை மூடித் திறந்தான்.

“காலைல அதுக்குத்தான் என்னை ஃபைவ் மினிட்ஸ் வெளிய போய் இருக்க சொன்னீங்க?”

அதற்கும் அவன் விழிகளை மூடித் திறந்தான்.

அவள் பொய்க் கோபத்துடன் தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள். 

“சரியான திருட்டுப் பையன்…காலைல கார்ல வந்து உட்கார்ந்ததுல இருந்து எத்தனை தடவை கேட்டிருப்பேன்… எதுக்குத் தனியாப் பேசினீங்கன்னு… ஒரு வார்த்தை இப்பிடின்னு சொல்லி இருக்கலாம்ல… நான் என்னென்னமோ நினைச்சு பயந்து…” என்றவள் வாய் பேசிக் கொண்டே இருந்தாலும் கை மட்டும் அவனைத் தலையணையால் மொத்திக் கொண்டே இருக்க, சிரித்துக் கொண்டே அவள் அடிகளை வாங்கிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் ஒரு கையால் தலையணையைப் பிடுங்கித் தூரப் போட்டு இன்னொரு கையால் அவள் இடுப்பை வளைத்துத் தன் மேல் போட்டிருந்தான்.

அவன் நெஞ்சில் மாலையென விழுந்தவள் கைகள் அவன் தோள்களில் பதிந்திருக்க இதழ்கள் அவன் கன்னத்தில் பதிந்திருந்தன.

“வாவ் சூப்பர்டி பொண்டாட்டி…அடி அடின்னு அடிச்சாலும் கடைசில பச்சக்னு குடுத்து அடிச்சதுக்கு மேக்கப் பண்ணிட்டே” எனவும் அவனிடம் இருந்து மீண்டும் அடிப்பதற்காக விலகப் போனாள்.

“ஏய்! உன் டைம் முடிஞ்சது…இனி என் டைம்… காலை வரை இந்த ஜெயில்ல போட்டு இத்தனை நேரம் என்னை அடிச்சதுக்கு தண்டனை குடுக்க போறேன் உனக்கு…”எனக் கைகளை விரித்து உதட்டைக் குவித்து காட்டியவன் “இந்த ஜெயிலை மீறி வெளிய போய்ப் பாரு பார்ப்போம்” என சவால் விட்டான்.

அவன் பாவனையிலும் வார்த்தைகளிலும் வஞ்சியவள் வதனம் செவ்வண்ணக் குழம்பாகச் சிவந்து விட, கண்களில் காதலுடன் கணவனைப் பார்த்தவள், அவன் காதோரம் குனிந்து “காலை வரை மட்டுமில்ல காலமெல்லாம் இந்த ஜெயில்தான் வேணும்” எனவும் அவன் மனதும் உடலும் பரபரப்பாக அவளை இறுக்கி அணைத்து அவள் கேட்ட சிறைக்குள் போட்டது மட்டுமல்லாமல் அவள் இதழ்களில் முத்த தண்டனையை மொத்தமாக வழங்க ஆரம்பித்தான். 

நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன.

விஜயாதித்தன் ஆசைப்பட்டபடி சுந்தரம் க்ரூப்ஸின் மொத்தக் கிளைகளும் அவன் கையில் வந்து சேர்ந்தன. அதனால் வேலைகள் இரட்டிப்பாயின. 

ஆனால் கணவனைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்ட ப்ரியம்வதாவின் அன்பில் அவன் ஆரோக்கியமும் இரட்டிப்பாகியது. 

அது மட்டும் அல்லாமல் அலுவலக விஷயங்களில் அவளும் கவனம் எடுத்து அதன் மூலம் எல்லா விஷயங்களையும் அவனுடன் கலந்துரையாடித் தனக்குத் தெரிந்த தீர்வுகளைக் கூறி அவளுக்குத் தெரியாமல் அவன் எதுவும் சிரமப்படவில்லை என்பதையும் உறுதிப் படுத்திக் கொண்டாள்.

முக்கியமாக மனைவியுடன் கழிக்கும் தனிமைக் கணங்கள் அவனது எந்த மன அழுத்தத்தையும் இறுக்கத்தையும் போக்க வல்லதாக இருந்தன.

இத்தனைக்கும் மத்தியில் அவள் கேட்ட இரண்டு நாட்களை ஒதுக்கத்தான் அவனால் இயலாது போய்க் கொண்டு இருந்தது. இயலவில்லை என்பதை விட, மனமில்லாமல் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான்.

மங்கல குங்குமம் நெஞ்சிலேமல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலேபொழுதும் புலரும் அணைப்பிலே
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
மடிமீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறுநாள் எழுந்து பார்ப்போம்

Advertisement