Advertisement

அத்தியாயம் 27

மறுநாளிலிருந்து விஜய்யின் நடவடிக்கைகளில் அபார மாற்றம் தெரிய ஆரம்பித்தது. இறுக்கம் தளர்ந்து மிக மிக இயல்பாக இருந்தான். ப்ரியம்வதாவைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவளிடம் பழைய பள்ளிக் கதைகள் கல்லூரிக் கதைகளை எல்லாம் பகிர்ந்து கொண்டான்.

அன்று காலை அவர்கள் யோகப் பயிற்சிக்குச் சென்றிருந்த போது நிர்வாகி அவர்களிடம் வந்து, “இன்னிக்கு டாக்டர் ஆனந்த் உங்க குடிலுக்கு வருவாரும்மா” எனச் சொல்லி விட்டுச் செல்லவும் அவள் சட்டென்று திரும்பி விஜய்யைப் பார்த்தாள். 

அவனிடம் அவள் டாக்டரிடம் அப்பான்ட்மென்ட் வாங்கியதைப் பற்றிக் கூற முற்றிலும் மறந்து விட்டாள். 

அவள் கையைப் பிசைவதைப் பார்த்தவன், “என்ன ஆச்சு? எதுக்கு டாக்டர்? ஓ! பெரியப்பா வரச் சொன்னாரா?” எனக் கேட்க…

அவள் நடந்த விஷயங்களை அவனிடம் கூறினாள்.

அவளைக் கனிவுடன் பார்த்தவன் அவள் தோளில் கையிட்டு, “இதுக்கு ஏன் இத்தனை கஷ்டப்படுறே வதும்மா? டாக்டர் பார்க்க வர்றாருன்னு சொன்னா வந்து உட்கார்ந்துட்டுப் போறேன்”

“உங்ககிட்ட சொல்லாம செஞ்சதுல உங்களுக்குக் கோபம் இல்லையே?”

“எனக்காக நீ பார்த்துப் பார்த்து எல்லாம் செய்யுறே…உன் மேல கோபப்பட நான் என்ன மடையனா?”

நிர்வாகி சொன்னது போலவே காலை பத்து மணிக்கு டாக்டர் ஆனந்த் அவர்கள் குடிலுக்கு வந்திருந்தார்.

அவரை இன்முகமாக வரவேற்ற விஜய் அவர்கள் அமர்ந்த பிறகு, “நான் உங்களுக்குத்தான் பெரிய நன்றி சொல்லணும் டாக்டர்.”

“எனக்கா? என்ன மிஸ்டர் விஜய்… நான் இன்னும் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கவேயில்ல…அதுக்குள்ள நன்றி சொல்றீங்க”

தன்னைப் பற்றியும் தன் குணம் பற்றியும் சுருக்கமாகத் தேவையானவற்றை அவரிடம் தெரிவித்தவன், “உங்க பேச்சு எனக்கு ஒரு கண்திறப்பு டாக்டர். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருஷங்களாக உணர்ச்சிகளை அடக்கி அடக்கிக் கல் மாதிரி இறுகி இருந்தவனை உங்க பேச்சால கரைச்சுட்டீங்க.”

உள்ளிருந்து ட்ரேயில் காஃபியுடன் வந்த ப்ரியம்வதாவும் “ஆமா டாக்டர்…நாங்க உங்களுக்கு ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கோம்.”

“ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் விஜய். நீங்க எதுக்காக என்னைப் பார்க்க விரும்பினீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“இவருக்கு ரத்த அழுத்தம் இருந்ததால் அதற்கான மருந்துகளை டாக்டர்கள் குடுத்திருக்காங்க. நானும் தினமும் அதைக் கொடுத்துட்டு வர்றேன். ஆனால் இந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துட்டு இருக்கிறனால ப்ரச்சனைகள் ஏதாவது ஏற்படாதா? இப்படித் தொடர்ந்து மருந்துகள் எடுக்காமல் சாதாரணமாகவே ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாதா? இதைக் கேட்கிறதுக்காகத்தான் நான் உங்களைப் பார்க்க விருப்பப்பட்டேன் டாக்டர்.”

“ஏன் வைக்க முடியாது? தாராளமாக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். சில யோகப் பயிற்சிகளை சொல்றேன்… நீங்க காலையில யோகா மாஸ்டர்கிட்ட அதைத் தெளிவாக் கத்துக்கோங்க.” 

“அது போக நானும் சில மருந்துகளைக் கொடுக்கிறேன். அதையும் தொடர்ந்து சாப்பிட்டு இருக்கணும்னு இல்ல. பிரஷர் மருந்துகளை நிப்பாட்டறதுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து காலை மாலை இரண்டு வேளையும் பிரஷர் பாக்கணும். அப்படி பார்க்குறதுல பிரஷர் இல்லாமல் அதாவது மருந்துகள் இல்லாமல் பிரஷர் இல்லாமல் இருந்தா  நம்ம தைரியமா பிரஷர் மாத்திரைகளை  நிப்பாட்டலாம்.” 

 “என் மருந்துகளும் கொஞ்ச நாளைக்குதான். யோகப் பயிற்சிகள் மற்றும் உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமா சீக்கிரமே பிளட் பிரஷர் கண்ட்ரோல்குள்ள கொண்டு வரலாம் அதுக்கப்புறம் நீங்க மருந்துகள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. நடுநடுவுல உங்களால முடிஞ்சப்போ பிரஷர் செக் பண்ணிக்கிட்டீங்கன்னாப் போதும்”

இதைக் கேட்டதும் விஜய்க்கும் மிகவும் சந்தோஷமாகி விட்டது. ஏனென்றால் ப்ரியம்வதாவிற்கு ஏற்பட்ட சந்தேகம் அவனுக்கும் ஏற்பட்டு இருந்தது. இப்படித் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் எத்தனை வருடங்களுக்கு சாப்பிடுவது என்று அவனும் மனதில் நினைத்துக் கொண்டுதான் இருந்தான்.

“முதல்ல நான் உங்களை சில சோதனைகள் செய்யணும். அதுக்கப்புறம்தான் நான் அந்த மருந்துகள் தர முடியும்”

முதலில் அவனது நாடியைப் பரிசோதித்தார். பிறகு கண்கள், நாக்கு தொண்டை என்று பல பரிசோதனைகளை செய்தார்.

எல்லாம் செய்து முடித்த பிறகு சில யோகாசனப் பயிற்சிகளின் பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். மற்றும் அவர் கையில் கொண்டு வந்திருந்த சில மருந்துகளை சிறு சிறு பொட்டலமாகக் கட்டிப் பிரியாவின் கையில் கொடுத்தார்.

“எப்படி சாப்பிடணும்…எத்தனை வேளை… எல்லாமே இந்த பேப்பர்ல விவரமா எழுதி இருக்கேன் இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க குடுங்க. ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் இவரைப் பார்க்கிறேன்.

அவர் சென்ற பிறகு “இப்ப  என் பிரஷர் நார்மலாதானே இருக்கு”

“ஆமா! ஆனா இப்பயும் மருந்துகள் கொடுத்துட்டுதானே இருக்கோம். மருந்து கொடுக்காமலேயே பிரஷர் நார்மலா இருந்தாதான் நமக்கு நிம்மதி”

“அப்போ இன்னும் ஒரு வாரத்துல இந்த மருந்துகளை எல்லாம் சாப்பிட்டு உடம்பு சரியானதுக்கு அப்புறம் சென்னைக்கு கிளம்புவோமா? நாம் இங்கே வந்து இதோட பதினைஞ்சு நாள் ஆயிடுச்சு. அங்க எல்லாம் போட்டது போட்டபடி வந்திருக்குது. என்னதான் பெரியப்பா பார்த்துக்கிட்டாலும் பாவம் அவரை எத்தனை நாட்களுக்குக் கஷ்டப்படுத்துறது?”

பிரியம்வதா இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

ப்ரியம்வதாவுக்குப் புடைவை கட்ட மிகவும் பிடிக்கும். ஆனால் கல்லூரிக்கு… வேலைக்கு செல்லும் காலங்களில் வசதிக்காக சுடிதாரே அணிவாள். திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலும் புடைவையே அணிந்து கொண்டிருந்தாள். 

வனவாசத்துக்கு வரும் போது யோகா பயிற்சி வகுப்புக்கள் இருக்கும் எனக் கண்ணபிரான் முதலிலேயே சொல்லி விட்டதால் ஒன்றிரண்டு புடைவைகளும் நிறைய சுடிதார்களுமே எடுத்து வந்திருந்தாள். அன்று அவள் அணிந்திருந்த சுடிதார் கொஞ்சம் சிக்கென்று இருந்தாலும் அதில் மொத்தமாக மறைந்திருந்த உடல் வடிவம் இப்போது இரு கைகளையும் இடுப்பில் வைத்திருக்க வடிவாகத் தெரிந்தது.

எதுவும் பேசாமல் அவளை நோக்கி எட்டெடுத்து வைத்தவன் பார்வை மாற்றத்தை நொடியில் புரிந்து கொண்டாளவள். 

அவன் விழிமொழி அறியாதவளா அவள்? அவன் வாய்மொழியை விட விழிமொழியைதானே அவள் நன்கறிவாள்…

தான் சொல்ல வந்ததை மறந்தவளாய், அவளை நெருங்கியிருந்தவனிடமிருந்து பின்னடைந்து கொண்டே, “ஆதி என்ன பண்ணுறீங்க?” என்று வினவினாள்.

அதற்குள் அவள் இடையை வளைத்திருந்தான் அவன்.

இத்தனை  நாட்களில் இருவரும் எத்தனையோ முறை அருகருகில் அமர்ந்து கைகளைக் கோர்த்துக் கொண்டு தோளோடு ஒட்டிக் கொண்டு என்றுதான் இருந்திருக்கிறார்கள். அதிலெல்லாம் ஒரு நட்புணர்வு மட்டுமே இருந்தது. அவ்வளவு ஏன் அன்றைக்கு அவன் கேட்டதற்குப் பிறகு இருவரும் அந்த ஒற்றைப் படுக்கையில்தான் உறங்குகிறார்கள். ஆனால் இத்தனை நாட்களில் இல்லாத வகையில் அவனது பார்வையில் கனிவையும் காதலையும் தாண்டி ஆசையின் சாயலைக் கண்டாள் ப்ரியம்வதா…

அதுவே அவளுக்கு பயத்தையும் கொடுத்தது.அவள் உடல்மொழியில் இறுக்கத்தை உணர்ந்தவன் மெல்லச் சிரித்தவாறே,

“புருஷன் கட்டிப்பிடிச்சாக் காதல் பார்வை பார்க்கலாம்…ஏன் கோபமாக் கூட பார்க்கலாம்…ஆனா நீ என்ன இப்பிடி பயந்து போய்ப் பார்க்குறே”

காதருகில் கிசுகிசுப்பாக ஒலித்தது அவன் குரல்.

“அது… வந்து… நீங்க… டாக்டர்…” 

முழுதாக வார்த்தைகள் வராமல் தந்தி அடித்தன. அவர்கள்  நெருக்கம் வேறு உடலில் ஏதேதோ மாற்றங்களை உண்டாக்கி இருந்தது. அவனது ஒரு பார்வைக்கு இத்தனை சக்தியா என அவளுக்கு வியப்பாக இருந்தது.

“நானும் அதைத்தான் சொல்றேன்… சீக்கிரம் சென்னை போய் டாக்டரைப் பார்க்கணும்… அவர்கிட்ட சில பல விஷயம்லாம் டிஸ்கஸ் பண்ணனும்… அப்புறம்…” 

அடுத்து என்ன சொல்லப் போகிறான் எனப் புரிய சட்டென்று அவன்  வாயை விரல்கள் கொண்டு மூடியவள்…  “ஆதி ப்ளீஸ்” என்று சிணுங்க…ஒரு முறை இறுக்கி அணைத்து விட்டுப் பின் அவளை விடுவித்தான்.

இரு கைகளையும் சரண்டர் என்பது போல் மேலே தூக்கியவன், “எனக்கு உடம்பு இப்போ முழுசா சரியாகிட்ட மாதிரிதான் இருக்குது.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணபிரான் அலைபேசியில் அழைத்தார்.

 “விஜய்! ஒரு சந்தோஷமான விஷயம்”

 “என்ன பெரியப்பா?”

“அந்த சுந்தரம் க்ரூப்ஸ் சேர்மன் போன் பண்ணி இருந்தார் ராஜா…அவரு அவரோட மொத்த பிஸினஸையும் நம்மகிட்ட ஹேண்டோவர் பண்றதா சொல்லிட்டாரு”

அவனுக்கு ஒரு கணம் மூச்சு நின்று பின் துடித்தது.

அவன் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்து போன விஷயம். அன்று இதில்தானே தொடங்கியது எல்லாம்… இன்று காரியம் கனிந்திருக்கிறது.

“எப்படி பெரியப்பா… என்ன ஆச்சு? அவர் பேரன் ஏதோ  ஆசைப்படுறான்னு சொன்னாரே”

“ஆமாம் அவர் பேரன் அங்கு ஒரு மல்டிபிளக்ஸ் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டணும்னு ஆசைப்பட்டிருக்கான். அப்படிக் கட்டற இடத்துல பப், டிஸ்கொதே இப்படியெல்லாம் வைக்கணும்னு அவன் சொன்னது அவருக்குப் பிடிக்கல. நான் காலங்காலமாக் கோவில் மாதிரி வச்சிருந்த இடத்தில டாஸ்மாக் கடை வைக்கப் போறியா… பொம்பளைங்களை வச்சுக் கூத்தடிக்கப் போறியான்னு  கேட்டுப் பேரனுடன் தகராறு செய்திருக்கிறார். அதனால் பேரன் கோவிச்சுக்கிட்டு நீங்க எல்லா விஷயத்துலயும் தலையிட்டுகிட்டே இருந்தா என்னால பிஸினெஸ் பண்ண முடியாது. எல்லாம் நீங்களே பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு மறுபடியும் ஃபாரின் கிளம்பிப் போயிட்டானாம். அதனால உன்கிட்டப் பேசணும்னு கூப்பிட்டாரு. நான் நீ பாரின் போயிருக்கிறேன்னு சொன்னேன். அதனால நீ வந்த உடனேயே அதற்கான அக்ரிமென்ட் போட்டு சைன் பண்ணிடலாம்னு  சொல்லிட்டார்.”

கண்டிப்பாக இதன் பின்னணியில் வருண் இருப்பான் என்பது தெரிந்திருந்தாலும் அவரிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்,

“ரொம்ப சந்தோஷம் பெரியப்பா” என்றவன் சித்த மருத்துவர் வந்த விவரங்களையும் தெரிவித்தான்.

“ஒருவேளை அவர் கொடுக்கிற மருந்துகளையும் சாப்பிட்டு உடல்நிலை சீக்கிரம் எல்லாம் நார்மல் ஆயிடுச்சின்னா நாங்க இங்கிருந்து கிளம்பலாம்னு நினைக்கிறோம் பெரியப்பா”

“நீங்க போயி ரெண்டு வாரம்தான் ஆகுது ராஜா… ஒன்னும் பிரச்சனை இல்ல… இன்னும் ரெண்டு வாரம் இருந்துட்டு உடம்பு முழுசா சரி பண்ணிட்டு வாங்க. அதுவரைக்கும் நான் பார்த்துக்குறேன். இங்க வருணும் மெலிசாவும் எல்லா விஷயங்களையும் பார்த்துகிட்டு இருக்காங்க. எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை.”

அலைபேசியின் ஒலிபெருக்கியில் அவன் பேசிக் கொண்டிருந்த விஷயங்களின் பின்பாதியைக் கேட்டுக் கொண்டே அங்கே வந்த பிரியம்வதா கண்ணாலேயே அவனிடம் ‘பாத்தீங்களா பாத்தீங்களா மாமாவே நீங்க வர வேண்டாம்கிற மாதிரி சொல்லிட்டாரில்லை’ என்பது போல அவனைப் பார்த்துக் கொண்டே அறை வாயிலில் நிலையில் சாய்ந்து நின்றாள்.

“சரி பெரியப்பா! நான் யோசிச்சு முடிவு பண்றேன்” என்று விட்டு அலைபேசியை அணைத்து அங்கிருந்த படுக்கையில் போட்டவன் ‘வா’ என்பது போல் கைகளை விரித்தான்

அவள் அருகில் வரவும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.எலும்புகள் நொறுங்கி விடும் போன்ற அந்த இறுகிய அணைப்பில் பயந்தாலும் அவன் கவனமாகத்தான் இருக்கிறான் என்பது நினைவு வர, புன்னகைத்தவள் அவன் கழுத்தையும் முதுகையும் வருடிக் கொண்டே   “என்னாச்சு ஆதி?” என்று கேட்டாள்.

கண்ணபிரான் கூறிய செய்தியை அவளுடன் பகிர்ந்து கொண்டான். 

அவளுக்கும் அது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்படியே எல்லாம் சரியாகி விட வேண்டும் ஆண்டவா என்று மனதில் நினைத்துக் கொண்டவள் விலக முயற்சிக்க அவளை விடுவித்து நிமிர்ந்தவன் “ம்ஹூம்… ரொம்ப நாளைக்குத் தாங்காது…சீக்கிரம் ஏதாவது செய்தே ஆகணும்“ என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றது தெளிவாக அவள் காதுகளில் விழுந்து அவளையும் புன்னகைக்க வைத்தது.

டாக்டர் ஆனந்த் சொன்னதை போல் யோகா பயிற்றுவிப்பாளரிடம் கேட்டு சில யோகப் பயிற்சிகளை மாலை நேரத்திலும் செய்ய ஆரம்பித்தான் விஜயாதித்தன். அது போக மனதை ஒரு நிலைப்படுத்தி தியானமும் செய்தான்.

தினமும் இரு வேளை பதிவு செய்யப்பட்ட ரத்த அழுத்த அளவுகளும் நல்ல முடிவுகளையே காட்டின. அடுத்த ஒரு வாரத்தில் முந்தைய விஜயாதித்தனாகவே மாறி விட்டதாகச் சொல்லும் அளவிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் பிரியம்வதாவிடம் சென்னை திரும்பும் முடிவைப் பற்றிக் கலந்து பேசினான்.

“என்ன ஆதி நீங்க… இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்க முடியாதா?”

“எதுக்காகப் பொறுத்திருக்கணும்? ஐ அம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் நௌ. அப்படி இருக்கும் போது, செய்ய அங்கே ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்க இங்கே ஒன்னும் செய்யாம உட்கார்ந்துட்டு இருக்கிறதுதான் எனக்கு டென்ஷனா இருக்கு.” 

அவனது டென்ஷன் என்ற வார்த்தைப் ப்ரயோகத்தில் பிரியம்வதா பயந்து போனாள். வேகமாக அவன் அருகில் வந்தவள் அவன் முகத்தை உற்று பார்த்தாள்.

“ஆதி! உங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல… இல்ல எதையாவது என்கிட்ட மறைக்கிறீங்களா?”

அவள் தவிப்புடன் கேட்ட விதத்திலேயே அவள் பயத்தை உணர்ந்து கொண்டவன் மெல்ல அவளை அருகில் இழுத்து அணைத்தான். 

“ரிலாக்ஸ்டா… ஒன்னும் இல்ல. என்னை டென்ஷன் ஆகாதேன்னு சொல்லிட்டு இப்போ நீதான் டென்ஷன் ஆகுற” என்றவன் குரலைக் கிசுகிசுப்பாக மாற்றி “நிஜமாவே ரொம்ப டென்ஷனா இருக்கிறது என்னன்னா இப்பிடிக் கைக்குள்ள உன்னை வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ணாம இருக்கிறதுதான். அப்புறம் ஒருநாள்… பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு பொங்கிருவேன். அப்புறம் என்னைக் குறை சொல்லிப் பிரயோஜனம் இல்ல”

அவன் வார்த்தைகளிலும் குரலிலும் பாவனையிலுமாக அவள் முகம் சிவந்து செங்கொழுந்தாகிப் போனாள்…

“இன்னும் ஒரே வாரம் ஆதி ப்ளீஸ்”

“நோ வே… நான் இன்னிக்கே பெரியப்பாகிட்டப் பேசப் போறேன்”

அவள் கோபத்துடன் அவனை விட்டு விலகி விசுக் விசுக்கென நடந்து சென்று படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.

சின்ன குழந்தை போல் அவள் செய்கையில் வாய் விட்டுச் சிரித்தவன் அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் இடையில் கையிட்டுத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.

அவள் முகவாய் பற்றித் தன்புறம் திருப்பி “ப்ளீஸ் புரிஞ்சுக்கடி” எனவும் அவள் விழிகளை விரித்தாள். 

“டி யா?”

 “ஆமாடி… டி தான்டி பொண்டாட்டி… நீ என் பொண்டாட்டிதானேடி அதான் டி போட்டேன்டி.”

“எனக்கும் புருஷன் பொண்டாட்டியை டி போட்டுக் கூப்பிடுறது பிடிக்கும்…ஆனா இத்தனை நாள் இந்தப் பிரியத்தை, குறும்பை எல்லாம் எங்கே ஒளிச்சு வச்சுருந்தீங்க ஆதி?”

அவள் கையைப் பற்றித் தன் தொடையில் வைத்து வருடிக் கொண்டே “கல்யாணம் ஆனதுல இருந்தே உன்கிட்ட  இப்பிடி எல்லாம் விளையாடனும்னு ஆசையா இருக்கும். எங்கப்பா எங்கம்மாவை டி போட்டுதான் கூப்பிடுவாரு. அவர் அகங்காரமாக் கூப்பிடுவாருன்னாலும் எனக்கு உன்னை உரிமையா டி போட்டுக் கூப்பிடணும்னு ஆசையா இருக்கும். ஆனா…” என்றவன் சில நிமிடங்கள் அமைதியாக அவள் கைகளை வருடிக் கொண்டே இருந்தான்.

பின் “எனக்கு நானே என்னென்னவோ நினைச்சு…ச்சு… பழைய கதை இனிமே வேணாம். போனை எடு. பெரியப்பாகிட்டப் பேசலாம்.”

அவளும் அவன் சொன்னதை செய்தாள். 

கண்ணபிரானிடம் பேசி இரண்டு நாட்களில் சென்னை கிளம்புவதை உறுதி செய்தவன் அடுத்த நாள் டாக்டர் ஆனந்த் வருகிறாரா என்றும் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்கள் அதிர்ஷ்டம் அடுத்த நாளே அவர் வருவதாக இருந்தது. போவதற்கு முன் அவரிடமும் கலந்து பேசி விட்டுச் செல்ல வேண்டும் என பிரியம்வதாவும் நினைத்திருந்தாள்.

அவன் பேசி முடிக்கவும் அருகில் வந்தவள் “உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் ஆதி”

“என்னடா?”

“நம்ம ஊருக்குப் போனதுக்கப்புறம் உடனடியா செய்ய வேண்டிய வேலைகள் முடிச்சதுக்கப்புறம் நீங்க  எனக்காக ரெண்டு நாள் ஒதுக்கணும்”

எதற்காக இப்படிக் கேட்கிறாள் என்ற யோசனையில் புருவங்கள்  நெரிந்தாலும் கண்களில் குறும்பு தவழ “என் எல்லா நேரமும் உனக்காகத்தாண்டா…எத்தனை நாள் வேணுமோ எடுத்துக்கோ…உன் கூட நம்ம ரூம்குள்ளயே உட்கார்ந்து இருக்கணும்னாலும் இருக்கிறேன்” என்று கண்ணடித்தான்.

அவள் முகம் சிவக்க, “ம்ம்ம்… ஆசை தோசை அப்பள வடை” எனவும் அவளை இடையிட்டு, “ரூம்குள்ளயே உட்கார்ந்து எல்லாம் சாப்பிடலாம்கிறியா டபிள் ஓகே” எனவும் “ஆதி” எனச் சிணுங்கியவள்… “சொல்ல வந்ததை முழுசாச் சொல்ல விடுறீங்களா? எனவும் “சரி சொல்லு” எனக் கை கட்டி வாய் பொத்தி நின்றான்.அவன் கையில் ஒன்று போட்டவள் அவன் கையை எடுக்கவும், தலையைக் குனிந்து கொண்டே,

“அது வந்து…வந்து… நாம ஊருக்குப் போகணும்”

“ஊருக்கா! எந்த ஊருக்கு?”

அவள் போக வேண்டிய ஊரையும் செய்ய வேண்டிய காரியத்தையும் மென்று விழுங்கிச் சொல்லி முடிக்க அவன் முகம் மாறியது.

“உனக்கென்ன பைத்தியம் ஏதாவது பிடிச்சிருக்கா?”

நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள்மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் இன்பம்

Advertisement