Advertisement

அத்தியாயம் 26

பின்வந்த நாட்களில் கண்ணபிரானின் உதவியுடன் தன் வாழ்க்கையைத் தானே செதுக்கிக் கொண்டான் விஜய்.

கல்லூரிப் படிப்பையும் ஊக்கத்தொகையின் உதவி கொண்டு படித்து முடித்தவன் சுயதொழில் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். ஆனால் என்ன முயன்றும் பணம் புரட்டத்தான் அவனால் இயலாது போயிற்று. 

தலைச்சன் பேரன் என அவன் மேல் பிரியமாயிருந்த அம்பலவாணரும் மருமகனே என நொடிக்கொருதரம் பிரியமாய் அழைக்கும் மாமன்களும் உதவி செய்வார்கள்… செய்யும் அளவுக்கு அவர்களுக்குப் பணபலமும் இருந்தது என்பதாலேயே தந்தையிடம் அப்படி  சவால் விட்டிருந்தான்.

ஆனால் தாத்தா இறந்து விட, மாமன்களும் விலகி விட, கல்லூரி காலங்களிலேயே அப்போது சுயதொழில் தொடங்குவது கடினம் என்பதைப் புரிந்து கொண்டு முதலில் எங்காவது வேலைக்கு சேரலாம் என முடிவு செய்து பகுதி நேர வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான். 

கண்ணபிரானாலும் அப்போது அவனுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது போயிற்று.

காரைக்குடி புறநகர் பகுதியில் இருந்த அந்த வீடு வெறும் சில லட்சங்கள் பெறுமானமுள்ளது.வீட்டையே விற்றாலும் கிடைக்கும் சொற்பத் தொகை கொண்டு பெரிதாக எதுவும் செய்து விட முடியாது என்ற நிலையில்தான் அம்பலவாணரின் குடும்ப வக்கீல் அவர்களைத் தொடர்பு கொண்டார்.

அம்பலவாணர் இறக்கும் முன்பு எழுதி வைத்த உயிலின் படி அவரின் மற்ற சொத்துக்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்க அவர்கள் குடியிருந்த மிகப் பெரிய வீடு விஜய்க்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்டிருந்தது.

மதுரையின் மிக முக்கியமான பகுதியில் இருந்த அந்த வீடு அன்றைய நிலைக்கு அரைக் கோடி பெறும்… இதைக் கேள்விப்பட்ட கண்ணபிரானும் விஜய்யும் வாயடைத்துப் போயினர்.

பரமேஸ்வரனின் குணம் புரிந்தவர்கள் இத்தனை நாள் விஜய் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் இனிமேலாவது அவன் ஆசைப்பட்டது போல் தொழில் செய்து நன்றாக இருக்கட்டும் என நினைத்தோ என்னவோ இப்படி ஒரு உயிலை எழுதி வைத்திருந்தனர்.

ஆனால் விஜய் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த உறவுகளே வேண்டாம் என முடிவு செய்து விட்ட பின் அவர்களின் பணம் மட்டும் எதற்கு என நினைத்தவன் தன்னால் சொந்தக் காலில் நின்று தன் திறமையைக் கொண்டே சாதிக்க முடியும் என உறுதியாகக் இருந்தான்.

ஆனால் வக்கீல் அவனிடம் வந்து இது வசந்தியின் ஆசை என்றும் “பட்டப்படிப்பை எப்படியாவது நாங்களே படிக்க வைத்து விடுவோம். அதன் பின் தொழில் தொடங்க அவன் இந்தப் பணத்தை பயன்படுத்திக் கொள்ளட்டும். அதனால் பட்டப்படிப்பு முடிந்ததும் இந்தப் பணம் அவன் கையில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் பணம் கிடைத்து விட்டால் விஜய் படிப்பை முடிக்காமல் தொழிலில் இறங்கி விடுவான்” என்ற வசந்தியின் வாரத்தைகளை அவர் அப்படியே திருப்பிச் சொன்ன போது அரை மனதாக அதைப் பெற்றுக் கொள்ள சம்மதித்தான். 

அப்போதும் அந்த வீட்டைக் கடனாகவே பெற்றுக் கொள்வதாகவும் சீக்கிரமே மீண்டும் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் உறுதி கூறி விட்டே அந்த உதவியை ஏற்றுக் கொண்டான்.

ஆனால் அந்த வீட்டுக்காகச் சித்திகளும் மாமன்களும் மீண்டும் பல்லிளித்துக் கொண்டு அவனிடம் வந்து நின்றதுதான் விஜய்க்குத் தாள முடியாததாக இருந்தது.

அந்த வீட்டை அடமானம் வைத்து பெரிய தொகை பெற்று சென்னையில் தன் தொழிலை ஆரம்பித்தவனுக்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்க மண்ணைத் தொட்டாலும் பொன்னாக மாறியது.

திறமையும் சாமர்த்தியமுமாகத் தொழிலில் ஈடுபட்டவன் இரண்டே வருடங்களில் அடமானம் வைத்த வீட்டை மீட்டு அதை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விட்டான். அவன் பெருந்தன்மை கண்டு தங்கள் தவறை உணர்ந்து திருந்தி வந்தவர்களை உதட்டளவில் மன்னித்தாலும் மனதளவில் விலக்கி நிறுத்தி விட்டான்.

விஜய் தன் வாழ்க்கையின் கறுப்புப் பக்கங்களை சொல்லி முடித்த பொழுது அவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க ப்ரியம்வதா அவன் நெஞ்சில் தலை சாய்த்து அவனை ஒட்டி அந்த ஒற்றைக் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

இப்போது அவளுக்குப் புரிந்தது ஆரம்பத்தில் விருந்துக்கு அவர்கள் அழைத்த போது வேண்டவே வேண்டாம் என விஜய் ஏன் மறுத்தான் என்பது…

நினைக்க நினைக்க அவளுக்குத் தாளவில்லை.

மனிதர்களுக்குத்தான் எத்தனை முகங்கள்…

அவளது சிறு வயதில் பணப்பற்றாக்குறை இருந்தாலும் பாசத்துக்கும் பிரியத்துக்கும் பரிவுக்கும் பஞ்சம் இருந்ததேயில்லை.அப்படி மிகையாகக் கிடைத்த பாசமும் பரிவுமே பழையதைக் கூடப் பிரியத்துடன் உண்ண வைத்ததே… ஆனால் தன் கணவன் தந்தையின் பாசத்துக்கல்லவா ஏங்கி இருக்கிறான்.

அவள் தலையை வருடியவன் மெல்ல அவள் கன்னங்களையும் தடவ அவற்றில் கண்ணீரின் ஈரம். 

“வது! எப்பயோ நடந்து போனதுக்கு இப்போ ஏன் அழறே?”

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “ஆதி! உங்க அப்பா… மாமா ஏன் இப்பிடி?”

“அவரோட குணமே அப்பிடித்தான் வதும்மா… அம்மாகிட்டயும் அப்பிடி முரட்டுத்தனமாதான் இருப்பாரு. ஆனால் கணவன் மனைவியாய் இருப்பதால் அவர்களுக்குள் சண்டைகள் சீக்கிரமே சமாதானமாகிடும்” என்று கண்ணடித்தான்.

அதில் அவள் முகம் சிவந்தது.

“நான் சின்ன வயசுல சில நேரம் யோசிச்சுருக்கேன் வது. அப்பா இப்படிப் போட்டு அடிக்கிறாரே… ஆனா மறுபடி இந்த அம்மா போய்க் கொஞ்சம் கூட வெட்கமில்லாம சிரிச்சுகிட்டே காஃபி கொடுக்கிறாங்களேன்னு… ஆனால் அம்மா முகத்தைத் தூக்கி வச்சுகிட்டு அவரை கவனிச்சாலும் அவருக்குப் பிடிக்காது… சாப்பாடு வச்சா சப்பாட்டுத் தட்டைக் கூட விசிறி அடிச்சிருவாரு. அதுனால அம்மா பக்குவமா அவர் மனசு கோணாம நடந்துக்குவாங்க. அம்மாவோட ஒரே சந்தோஷம் நாந்தான்… ‘என்னோட வாழ்க்கைல இருந்த இருளை நீக்க வந்த ஆதித்தன் நீ’ அப்பிடின்னு சொல்லி ஆதின்னு கூப்பிடுவாங்க…அம்மாவைத் தவிர யாரையும் நான் என்னை ஆதின்னு கூப்பிட விட்டது இல்ல” என்றவன் கைகள் அவள் இடையைச் சுற்றி இறுகின. 

“உங்க தாத்தா வீட்டுல யாரும் தட்டிக் கேட்க மாட்டாங்களா?”

“ம்ம்ம்…கேட்டாங்க…ஒரு தரம் எனக்கு ஏழெட்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன்…அம்மாவைப் போட்டு அடிச்சதுக்கு எங்க பெரிய மாமா அப்பாவைக் கை ஓங்கிட்டு அடிக்கப் போயிட்டார். எங்கப்பா கோவிச்சுகிட்டு எங்கேயோ போய்ட்டார்…அம்மா அழுது வீடே ரெண்டுபட்டு எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கமா அவரைப் போய்த் தேடிக் கடைசில கண்டுபிடிச்சு எங்க மாமா அப்பாவோட காலில் விழாத குறையா மன்னிப்புக் கேட்டதுக்கு அப்புறம்தான் வீட்டுக்கே வந்தார்.அதுல இருந்து எல்லாரும் அம்மாவை அவர் அடிச்சாலும் கண்டும் காணாமப் போய்ருவாங்க… எத்தனையோ தடவை இப்பிடி ஒரு அடிமை வாழ்க்கை உனக்கு வேணாம்… வந்துடுன்னு… எங்க தாத்தா அம்மாகிட்ட சொல்லிக் கேட்டிருக்கேன்… ஆனா அம்மா அதுக்கு சம்மதிக்கல… வாழாவெட்டின்னு ஊரும் உறவும் பேசும்னு பயந்தே அப்படி ஒரு புருஷனோட வாழ்ந்தாங்க.”

சில நிமிடங்கள் அமைதியிலேயே கழிந்தன.

“அப்போ நீங்க அப்படி இறுக்கமா இருந்ததுக்குக் காரணம் இதுதானா?”

“ஆமா…எங்கப்பா என்னைக் கட்டிப் போட்டு அடிச்ச அந்த சமயத்துல இறுகிப் போன என்னோட உணர்ச்சிகள் அதுக்கப்புறம் இளகவே இல்லை வது. எந்த ஒரு சந்தோஷமும் துக்கமும் என் மனசப் போய்த் தொடவே இல்ல. ஆனா ஸ்கூல்ல படிக்கும் போது யாராவது என்னைக் கேலி பண்ணி சிரிச்சா மட்டும் எனக்கு அசாத்திய கோபம் வரும். அந்த சமயம் சிரிக்கிறவங்க எங்கப்பா என்னை அடிச்சப்போ சிரிச்ச சித்தி பிள்ளைகளாதான் என் கண்ணுக்குத் தெரிவாங்க. அவங்க சின்னப் பிள்ளைகள் தெரியாம செய்ஞ்சுட்டாங்கன்னு எத்தனையோ தடவை மனசைத் தேத்திகிட்டாலும் என்னால என்னைக் கட்டுப்படுத்திக்க முடியல.”

“ஒரு தரம் ஸ்கூல்ல கூடப் படிக்கிற பையனை என்னை ஏதோ கேலி பண்ணி சிரிச்சான்னு ரத்தம் வர்ற மாதிரி அடிச்சுட்டேன். ப்ரின்ஸிபால் கூப்பிட்டு சத்தம் போட்டாரு. இன்னொரு தரம் இந்த மாதிரி நடந்துகிட்டா அப்பாவுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுவேன்னு சொன்னாரு. அதுல இருந்து கோபத்தையும் கட்டுப்படுத்த ஆரம்பிச்சேன். ஆனா என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நேருக்கு நேர் எதுவும் செய்யாம அப்புறம் எப்பிடியாவது பழி வாங்கிடுவேன்” 

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள் அவனின் பழி வாங்கிடுவேன் என்ற வார்த்தைகளால் கலவரப்பட்டு சட்டென எழுந்து அமர்ந்தாள்.

எதிர்பார்த்திருந்தவன் போல் அவன் முகத்தில் புன்னகை மலர, அவள் பொய்க் கோபம் காட்டி முறைக்கக் கண்சிமிட்டிச் சிரித்தவாறே மீண்டும் அவளைத் தன் கைவளைவிற்குள் இழுத்துக் கொண்டான்.

“பின்னே ஜீஸஸ் மாதிரி இருக்கச் சொல்றியா? உனக்குத் தவறிழைத்தவனையும் நேசின்னு…பிஸினஸ்லலாம் அப்பிடி இருக்க முடியாதும்மா… கண்ணுக்குக் கண்ணு பல்லுக்குப் பல்லுன்னு போய்ட்டே இருக்கணும்… அப்பிடி நேக்காப் பண்ணத் தெரிஞ்சனாலதான் இன்னிக்கு பிஸினெஸ்ல இந்த அளவு உயர்ந்துருக்கேன். இல்லைன்னா ஏறி மிதிச்சுட்டுப் போய்ட்டே இருப்பாங்க” என்றவன் கடிகாரத்தில் மணி பார்க்க அது இரவு ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

“ஊப்ஸ்! மணியைப் பார்த்தியா!” எனவும் அவள் வேகமாக எழப் போக “ப்ளீஸ் வது” என அவள் கைகளைப் பற்றினான்.

அவள் வியப்புடன் என்ன என்பது போல் பார்க்க  “இன்னிக்கு என் கூட இங்கேயே படுத்துக்கிறியா…இவ்வளவு நேரம் படுத்திருந்த மாதிரி… ப்ளீஸ்…நான் ஒண்ணும் பண்ண மாட்டேன். ப்ராமிஸ்!”

அவன் பள்ளிக்கூடச் சிறுவன் போல் கெஞ்சுவதைக் கண்டவள் பக்கென்று சிரித்தாள்.

அவன் அருகில் வந்து அவன் முகத்தை இரு கைகளால் தாங்கியவள், “என் ஆதி கம்பீரம் குறையாம ஆர்டர்தான் போடணும்… கெஞ்சல்லாம் கூடாது… இப்போ என்ன இங்கே படுக்கணும் அவ்வளவுதானே” என்றவள் அந்த ஒற்றைப் படுக்கையில் அவனைப் படுக்கச் செய்து அவன் மார்பில் தலை சாய்த்தாள்.

சில நிமிடங்கள் பிறகு, “அம்மா அப்பா இறந்த விஷயம் கேள்விப்பட்டப்போ ஒரு சொட்டுக் கண்ணீர் விடலே நான்… அவங்க உடல்களா இல்லாம வெறும் சாம்பலாத் திரும்பி வந்ததுனாலயா… அவங்க இறந்தது என் மனசுல பதியலையா… எனக்குத் தெரியல”

“அப்பா இறந்தது ஒரு விடுதலை உணர்வைதான் குடுத்துச்சுன்னாலும் அம்மா… அம்மாவுக்காக நான் ஏன் அழல? காலைல அந்த டாக்டர் பேசும் போது அதுதான் எனக்குத் தோணுச்சு…அப்போதான் என் ப்ரச்சனை எனக்குப் புரிஞ்சுது… உணர்ச்சிகளை அடக்கி அடக்கி அழுகைங்கிற உணர்ச்சி என்னன்னே எனக்கு மறந்து போச்சுன்னு…”

“இன்னிக்கு இந்தப் பாட்டைக் கேட்கவும் அம்மா… என் அம்மா… எனக்காக எல்லாத்தயும் பொறுத்துகிட்ட என் அம்மா இப்போ உயிரோட இல்ல… அப்பிடிங்கிற நிதர்சனம் மனசுல உறைச்சுது… அவங்களுக்கு நான் எந்த நல்லதுமே பண்ணல வதும்மா… அப்பா என்னை அடிக்க வர்றப்போ எல்லாம் பல நாள் இடையில  வந்து அடிகளைத் தான் வாங்கிட்டு இருக்காங்க… எந்த எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் வாழ்ந்தாங்க… ஒரு வேளை பையன் பெருசாகி அப்பாவைத் தட்டிக் கேட்பான்… நம்மை நல்லா வச்சுக்குவான்னு மனசுல நினைச்சாங்களோ என்னவோ”

இதைச் சொல்லும் போது அவன் குரல் தழுதழுத்தது.

அவனை ஒட்டிக் கொண்டு படுத்திருந்தவளுக்கும் கண்கள் கலங்கின. எதிலிருந்தோ அவனைக் காப்பவள் போல் அவனை அணைத்திருந்த கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டாள்.

புரிந்து கொண்டவனும் தொண்டையைச் செருமிக் குரலை சரிப்படுத்திக் கொண்டு,

“ஆனா எல்லா உணர்வுகளையும் அடக்க முடிஞ்ச எனக்கு உன்னைப் பார்த்த பிறகுதான் உண்மையான உணர்ச்சிகளை உணரத் தொடங்கினேனோன்னு தோணுச்சு கண்ணம்மா… உன் கூட இருக்கிறப்போ நான் உணர்வுகளை அடக்காமல் எல்லாத்தையும் இயல்பாப் பண்ணுறேனோன்னு தோணிகிட்டே இருந்துச்சு வது.”

அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது. மற்றவர்களுக்காக நடிப்பதாக அவன் கூறினாலும் ஒருநாளும் அவன் நடித்ததாக அவள் உணரவில்லை. அதனாலேயே அவனை வெறுப்பது அந்த நேரத்தில் அவளுக்குக் கடினமானதாகவும் இருந்தது. 

திடுமென ஏதோ தோன்ற மெல்ல அவன் கைகளை விலக்கி எழுந்து அமர்ந்தவளைக் கேள்வியாக அவன் பார்க்க, “எனக்கு ஒண்ணே ஒண்ணு கேட்கணும்… நீங்க வருத்தப்பட மாட்டீங்கன்னா…”

அவளைக் கனிவுடன் பார்த்தவன், “சும்மாக் கேளு… வருத்தமெல்லாம் பட மாட்டேன்”

“நம்ம…நம்ம ஃபர்ஸ்ட் நைட் அப்போ… அப்போ…” என அவள் தயங்க அவள் என்ன கேட்க வருகிறாள் என அவனுக்குப் புரிந்து விட்டது.

இப்போதுதான் அவள் அண்மையில் உண்மையான உணர்ச்சிகளுடன் இருந்ததாகக் கூறி இருந்தான். ஆனால் முதலிரவின் போது அவள் பண ஆசை பிடித்த பெண் என எண்ணிக் கொண்டிருந்தவன் அத்தனை ஆசையாய் அவளுடன் இணைந்தது எப்படி எனக் கேட்க நினைத்ததைக் கேட்க முடியாமல் வெட்கம் தடுக்கத் தலைகுனிந்தாள்.

ஒற்றை விரலால் அவன் முகம் நிமிர்த்தியவன் அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தான். 

“சத்தியமா நான் அன்னிக்கு நடிக்கல வது… உன் மேல தப்புன்னு என்னென்னவோ நினைச்சு  நமக்கிடையேயான இடைவெளியை நான் மெயின்டைன் பண்ணிக்கிட்டே இருந்தாலும்… உன்னை நம் அறையில் என் மனைவியாய்ப் பார்த்ததும் எனக்கு மத்த எல்லாமே மறந்து போச்சு… உன் மேல இருந்த காதல் மட்டும்தான் என் மனசு முழுக்க  நிரம்பி இருந்துச்சு. இதை நீ நம்பணும்”

‘தயவு செய்து நம்பேன்’ என்ற இறைஞ்சலைக் கண்களில் நிரப்பி அவள் சொல்லப் போகும் ஒற்றை வார்த்தை பதிலுக்காகத் தன் உயிரைக் கையில் பிடித்து அவன் காத்திருப்பது புரிய அவனை மேலும் தவிக்க விடாமல் “நம்புறேன்” என்று அவன் விரும்பிய பதிலைக் கூறியவள் மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவன் மேலே ஏதோ பேசப் போக அவன் உதடுகளைத் தன் மென்விரல்களால் மூடியவள் “நேரமாச்சு தூங்குங்க… நாளைக்குப் பேசலாம். உடம்பு கெட்டுடும்” எனவும் புன்னகையுடன் அவள் கைகளில் முத்தமிட்டு “உத்தரவு மேடம்” என்றவன் அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்தபடியே கண்ணயர்ந்தான்.

முதல் நாள் அவன் மன்னிப்புக் கேட்ட போது கூட அவன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே மன்னித்தவளுக்கு அன்று அவன் முழுக்கதையையும் கேட்ட பின் அவன் மனம் முழுதாகப் புரிந்து போனது. 

கண்ணபிரானைத் தவிர யாரையும் பெரிதாக நம்பாதவன் தன்னை நம்பி, பின் ஏதோ தப்பெண்ணத்தால் தானும் பொய்த்துப் போனதாக நினைத்ததனால்தான் அப்படி நடந்து கொண்டிருக்கிறான் என நன்றாகப் புரிந்து கொண்டாள்.

அவன் நடிக்கவில்லை என்று சொன்னதை நூறு சதவீதம் நம்பினாள். 

திருமணத்துக்குப் பிறகான காலங்களில் அவளை விலக்கி நிறுத்தும் போது வேறுபாடாக உணர்ந்திருக்கிறாளே ஒழிய அவன் அவளை நெருங்கும் வேளைகளில் அவன் கண்களில் உண்மையான காதலையே கண்டாள். 

எல்லாவற்றையும் அசை போட்டுக் கொண்டே இருந்தவள் இனி வரும் காலம் இனியதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் விழிகளை மூடினாள்.

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் உன்னிடம் என்னை
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே
ஆலமரத்தின் விழுதுகள் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே

Advertisement