Advertisement

அத்தியாயம் 25

 “ம்ம்ம்…சீக்கிரம்” விஜய்யைப் பார்த்துக் கட்டளையிட்டார்.

அவன் முகம் இறுகியது. எதுவும் பேசாமல் ட்ரௌசரையும் கழற்றினான். 

பதினைந்து வயது ஆண்மகன்…அவனை சிறு பிள்ளைகள் மத்தியில் வெறும் உள்ளாடையுடன் நிற்க வைத்திருந்தார் அந்தப் பெரிய மனிதர். அத்தோடு அவரது குரூரம் முற்றுப் பெறவில்லை.அவனை அப்படியே அமர வைத்து அவன் கைகளையும் கால்களையும் சேர்த்து வைத்துக் கட்டினார்.

விஜய் பதினைந்து வயதுக்கு ஆள் வளர்ந்திருந்தானே தவிர உடலில் சதைப் பிடிப்பு இல்லை. அதனால் அவனை எளிதாகத் தூக்கியவர் அந்த முற்றத்தில் சூரிய ஒளி நன்றாக விழுந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்று அவனைத் தரையில் படுக்க வைத்தார். இத்தனைக்கும் விஜய்யிடம் இருந்து சிறு மறுப்போ முனகலோ எதுவும் இல்லை. 

அவன் முகம் பாறாங்கல்லைப் போல் கடினமுற்றிருந்தது.

அந்த உச்சி வேளையில் சிமென்ட் தரை கொதித்துக் கொண்டிருந்தது.

அதற்கும் விஜய்யிடம் இருந்து எந்த ப்ரதிபலிப்பும் இல்லை.

அவன் ‘ஐயோ அப்பா வேண்டாம் என்னை விட்டு விடுங்கள்’ என்று கதறி இருந்தால் கூட பரமேஸ்வரன் விட்டிருப்பார். ஆனால் அவனது அழுத்தம் அவரது வன்மத்தை இன்னும் கூட்டியது. 

“கிட! அப்பத்தான் உனக்குப் புத்தி வரும். பெரியவங்ககிட்ட எப்பிடிப் பேசுறதுன்னு அறிவு வரும்” என்றவர் உள்ளே செல்லத் திரும்பினார்.

வசந்தி ஒரு புறம் கண்ணீருடன் சுவரில் சாய்ந்து கிடந்தார். சுசீலாவும் மணிமேகலையும் வெளியே  சென்றிருந்த தங்கள் கணவன்மார்களில் யாராவது திரும்பி வந்து விட மாட்டார்களா என வாசல் பக்கம் சென்று பார்க்க ஆரம்பித்தனர்.

அப்போது அங்கே நின்று கொண்டிருந்த சிறு பிள்ளைகளில் ஒன்று… விவரம் அறியாதது… தங்களின் பாதுகாப்பிற்காகப் பரிந்து பேசப் போய்தான் அண்ணனுக்கு இந்த அவமானம் என்று புரியாத அந்தப் பிஞ்சு… “ஐயே! அண்ணன் ஏன் இப்பிடி ஷேம் ஷேமாப் படுத்திருக்காரு…கொஞ்சம் கூட வெட்கமே இல்ல” எனவும் விவரம் அறியாமல் மற்ற குழந்தைகளும், கண்டிக்கவோ எடுத்துச் சொல்லித் திருத்தவோ ஆளில்லாமல் கைகொட்டி சிரித்தன.

அதே நேரம் வாசல் கம்பிக் கதவின் வழியாக உள்ளே நுழைந்த கண்ணபிரானிடம் விஷயம் தெரிவிக்கப்பட ஓடோடி வந்தார் அவர். அங்கு தன் அருமை மகன்…தம்பியின் மகனைத் தன் மகன் எனவே நினைத்திருந்தார் அவர்… தரையில் அதுவும் சுட்டெரிக்கும் மதிய  நேர வெயிலில் கிடப்பதைக் கண்டு பதைபதைத்து “விஜிம்மா… விஜி”  என்று அருகில் ஓடி வந்து அவனைத் தூக்கி நிறுத்தினார். 

“என்னடா இது…” என அவனைக் கேட்க அவன் முகம் வெய்யிலினாலும் கோபம், வெட்கம் அவமானத்தினாலும் அந்தி நேரச் சூரியனை விடச் சிவந்து கிடந்தது. 

“நான் சொல்றேன்ணே” என்று முன்னால் வந்தார் பரமேஸ்வரன்.

“இங்கே வந்ததும் இவனுக்குத் திமிர் ரொம்பத் துளிர்த்திட்டுது… பெரியவங்களை மட்டுமரியாதை இல்லாமப் பேசி இருக்கான். நான் பேசுறேன்… இடைல புகுந்து நான் சொல்றதைக் கேளுங்கன்னு சொல்றானே… எங்கே இருந்து வந்துச்சு இந்தத் தைரியம். அந்தப் புத்தி வேரத்துப் போகணும்னுதான் இப்பிடிப் பண்ணினேன்.”

அவன் முகத்தைப் பார்த்த கண்ணபிரான் “என்ன நடந்துச்சு விஜய்! நீ அப்பிடி எல்லாம் மரியாதை இல்லாமப் பேச மாட்டியே!”

விஜய் அவரை நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வை ‘உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை என் தந்தைக்கு என் மீது இல்லையே பெரியப்பா’ என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. 

“பரமு! ஏதோ நடந்துருக்கு! நீ அவசரப்பட்டுட்டேன்னு நினைக்கிறேன்”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைண்ணே! இவன் அரிவாளும் கையுமா அந்த விறகுக் கடைப் பசங்கள்ட்ட வாயாடினதைப் பார்த்துட்டேதான் நான் வந்தேன்” என்றவுடன் அந்த அரிவாள் கிடந்த இடத்தைப் பார்த்த கண்ணபிரான் அதன் அருகில் கிடந்த மட்டையைப் பார்த்ததுமே அவன் அரிவாளை எதற்காகப் பயன்படுத்தி இருக்கக் கூடும் என யூகித்துக் கொண்டார்.

“சரி! இப்போ இந்தப் ப்ரச்சனைய விடு. வசந்தி! இங்கே வாம்மா! பிள்ளையைக் கூட்டிட்டுப் போய் முதல்ல தண்ணி குடு. முதுகெல்லாம் பாரு… கொப்பளிச்சுப் போய் இருக்கு… பர்னால் இருக்கான்னு பாரு இல்லைன்னா நான் போய் வாங்கிட்டு வர்றேன்” 

வசந்தி வந்து விஜய்யை அழைத்துப் போக பரமேஸ்வரனிடம் வந்தவர் “ஆனாலும் உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது பரமு” என்று விட்டு “நீ உள்ளே போ! நான் இதோ வர்றேன்” என்று விட்டு அடுத்திருந்த விறகுக் கடைக்குச் சென்றார்.

அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது தவறு யார் மீது என்பதும் விஜய் மேல் துளியளவு கூடத் தவறு இல்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. ஆனால் பரமேஸ்வரனிடம் யார் எடுத்துச் சொல்வது? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. என்ன சொன்னாலும் யார் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று தொங்கும் அவரிடம் பேசிப் பயனில்லை என்று கண்டவர் மீண்டும் வீட்டினுள் நுழைந்தார். 

 “வசந்தி” எனக் கூப்பிட்டவர் அவர் வந்ததும் “விஜி எப்பிடி இருக்கான்ம்மா?””

“படுத்துருக்காங்க” என்று சொல்லும் போதே அவர் கண்களில் கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் பெருகியது. 

“சரிம்மா அழாதே! என்ன செய்ய! எங்க தாத்தாவைக் கொண்டு பிறந்துருக்கான் பரமன்…எங்க தாத்தா… பாட்டியை மிதிச்சே கொன்னாருன்னு சொல்லிக்குவாங்க”

“என்னை என்ன வேணா செய்யட்டுங்க…ஆனா அந்தப் புள்ளை எனக்கு மகனா வந்து பிறந்ததைத் தவிர வேற என்ன பாவம் செய்தான்…அவனை அடிச்சே கொல்றாரே!”

“கவலைப்படாதேம்மா… இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுவோம்…நீ இப்போதைக்கு அவனைப் பாரு… மருந்து தடவி விட்டியா?” 

“ம்ம்ம்… ஆச்சுங்க”

“தேவைப்பட்டா டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போறேன்…”

“இல்ல இப்போ தூங்குறான்… எழுந்ததும் தேவைப்பட்டா டாக்டர்கிட்டப் போகலாம்” என்று விட்டு உள்ளே சென்றார்.

அடுத்த இரண்டு நாட்களும் தந்தை முன் தனயன் வரவே இல்லை. அது மட்டும் இல்லாமல் அனைவரிடமும் ஒரு இறுகிய உணர்வுடனே நடந்து கொண்டான்.

யாரும் சிரித்தாலும் கடமைக்கு உதட்டை சில மில்லிமீட்டர்கள் நீட்டுபவனின் சிரிப்புக் கண்களை எட்டவே இல்லை. 

பார்த்துக் கொண்டே இருந்த வசந்தி கண்ணபிரானிடம் கதறி அழ ஒரு முடிவு செய்தவர் தன்னுடன் பரமேஸ்வரனையும் வற்புறுத்தி யாத்திரைக்கு இழுத்துச் சென்று விட்டார்.

ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்ட பிறகும் விஜய் தன் கூட்டிற்குள் இருந்து வெளியே வரவில்லை. அவன் தந்தை அவனை நடத்தும் முறையைப் பார்த்தும் மேலும் குடும்பத்தின் மூத்த பேரன் என்பதனாலும் மற்ற அனைவருமே அவனைப் பார்த்துப் பார்த்துக் கவனிப்பார்கள். 

எப்போதும் ஒரு வாரம் இருந்து விட்டுப் பரமேஸ்வரன் காரைக்குடிக்குச் சென்று விட இரண்டு மாதமும் நன்றாகக் கொட்டம் அடிப்பான் விஜய். ஆனால் இந்த முறை தந்தை சென்று விட்டதையோ மற்றவர்கள் தன்னை விழுந்து விழுந்து கவனிப்பதையோ எதையும் அவன் உணர்ந்தானில்லை. நல்ல சாப்பாடோ… திரைப்படமோ… உடைகளோ எதுவுமே அவனைக் கவரவில்லை. 

எப்போதும் ஏதாவது யோசனையில் ஆழ்ந்திருந்தான். விளையாடக் கூட வெளியே செல்லவில்லை. வசந்தி அவனிடன் கொஞ்சம் அதட்டி “ஏன் இப்படி இருக்கிறாய்?” எனக் கேட்ட போதும் “நான் நல்லாதான் இருக்கிறேன்மா” என்று பதில் கூறி அவள் வாயை அடைத்து விட்டான்.

ஆனால் அதன் பின் அவனது குணம் மாறவேயில்லை.

அந்த விடுமுறை முடிந்து காரைக்குடி திரும்பினர். 

அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்திருந்தது. 

பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்திருந்தான் விஜயாதித்தன். அதில் தலை கொள்ளாப் பெருமை பரமேஸ்வரனுக்கு… எல்லாம் தனது கண்டிப்பினால் விளைந்த நன்மை என்று பெருமிதம் கொண்டார். ஆனால் அன்றே அவர் தலையில் குண்டைப் போட்டான் விஜயாதித்தன்.

அன்று பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்தவர்,

“வசந்தி! உன் பிள்ளை வீட்டுக்கு வந்துட்டானா?”

அவரது குரலிலேயே எக்கச்சக்கக் கோபத்தில் கொதித்து கொண்டிருக்கிறார் எனக் கண்டு கொண்ட வசந்தி செம்புத் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் முன் நீட்டினார். 

“என்ன நெனச்சிட்டு இருக்கான்  உன் பிள்ளை?” அவர் அந்த தண்ணீரை வசந்தியின் முகத்திலேயே விசிறி அடித்தார்.

“ஸ்கூல்ஃபர்ஸ்ட் வாங்கி இருக்கானேன்னு ஹெட்மாஸ்டரே நேர்ல கூப்பிட்டுப் பாராட்டி மேற்கொண்டு என்ன குரூப் எடுக்க போறேன்னு கேக்குறாரு.. இவன் நாலு சப்ஜெக்ட்ல நூத்துக்கு நூறு வாங்கிட்டு நான் காமர்ஸ் குரூப் எடுக்க போறேன்னு சொல்றான். என்ன நெஞ்சழுத்தம் இருக்கும் இவனுக்கு! இதை முடிவு பண்ண இவன் யாரு? பெத்த தகப்பன் நான் செத்தா போய்ட்டேன்? என்கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசாம காமர்ஸ் குரூப் எடுக்க போறேன்… அதுவும் இந்த ஊர்ல படிக்கப் போறது இல்ல… வேற ஊர்ல இருக்குற ஸ்கூலுக்குப் போகப் போறேன்… அப்படின்னல்லாம் சொல்றான். எங்க இருந்து வந்துச்சு இந்தத் துணிச்சல் இவனுக்கு? எல்லாம் நீ கொடுக்கிற தைரியமா? நான் இல்லாதப்ப அவனுக்கு என்ன எதுத்துப் பேசச் சொல்லிக் கிளாஸ் எடுக்குறியா? வாத்தியார் வீட்டிலேயே வாத்தியார் வேலை பார்க்கிறாயா? சொல்லுடி சொல்லு” என்று மனைவியின் தோளைப் பிடித்து உலுக்கி எடுத்தார்.

மகன் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கியதற்காக சந்தோஷப்படுவதா அல்லது வேறு ஊருக்குப் போய்ப் படிக்கப் போகிறேன் என்று அவன் செய்த முடிவுக்காக வருத்தப்படுவதா என்று புரியாமல் கண்களில் நீர் வழிய நின்றிருந்தார் வசந்தி.

 அப்போது உள்ளே வந்தான் விஜயாதித்தன்.

அவனைப் பார்த்தவர் “நில்லுடா! உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே? நீ பாட்டுக்கு ஹெட்மாஸ்டர் முன்னால உன் இஷ்டத்துக்குப் பேசுற… தகப்பனுக்கு மரியாதை கிடையாதா? அவர் உன்கிட்டக் கேட்டா நீ என்ன பதில் சொல்லி இருக்கணும்? எங்க அப்பா என்ன சொல்றாரோ அதைத்தான் நான் செய்வேன் சார்னு சொல்லணுமா வேண்டாமா! நீ பாட்டுக்கு உன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுற?”

 அதே நேரம் கண்ணபிரானும் வீட்டினுள் நுழைந்தார்.

“எதுவாயிருந்தாலும் ஆற அமர உட்கார்ந்து பேசலாமே… அவன் வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே எரிஞ்சு விழற… வா இங்கே வந்து உட்காரு… இந்த தண்ணியக் குடி. விஜய்! நீயும் இங்க வாப்பா… இந்த ஸ்டூல்ல உட்காரு” 

இருவரையும் அமர வைத்து நடுவில் கண்ணபிரான் அமர்ந்து கொண்டார்.

“அண்ணா! உங்களுக்குத் தெரியாது… இவன் ஹெட்மாஸ்டர் முன்னால என்ன சொன்னான் தெரியுமா?”

“எல்லாம் எனக்குத் தெரியும் பரமு. நீ பேசினதெல்லாம் தெருமுனை வரைக்கும் கேட்டது. விஜய்! நீ என்ன நெனச்சு அப்படிச் சொன்ன… கணக்கு சயின்ஸ்ல எல்லாம் நூத்துக்கு நூறு வாங்கிட்டு  எதுக்காகக் காமர்ஸ் குரூப் எடுக்கணும்னு சொல்லுற?”

அவன் எங்கோ பார்த்தபடித் தன் பெரிய தந்தையிடம் பேச ஆரம்பித்தான்.

“எனக்கு என்ஜினியராக, டாக்டராக இஷ்டம் இல்ல பெரியப்பா. எனக்கு நானே தொழில் ஏதாவது தொடங்கி நடத்தணும்னு ரொம்ப இஷ்டம். வியாபாரத்துக்குக் காமர்ஸ் குரூப் எடுத்துப் படிச்சா வியாபாரம், பொருளாதாரம் எல்லாமே தெரிஞ்சுக்கலாம். அது பின்னாடி ரொம்ப உதவியா இருக்கும். அதனாலதான் நான் காமர்ஸ் குரூப் படிக்கிறேன்னு சொல்றேன். இன்ஜினியரிங் இல்ல டாக்டருக்குப் படிக்கணும்னு நினைக்கிறவங்கதான் கணக்கு சயின்ஸ் க்ரூப் எடுக்கணும்.”

“பார்த்தீங்களாண்ணே! எப்படிப் பேசறான் பாருங்களேன்… இவன் டாக்டராகக் கூடாதா? என்ஜினியராகக் கூடாதா? எங்களுக்கும் ஆசை இருக்காதா? எதுக்கு சொந்தத் தொழில் தொடங்கணும்? சொந்தத் தொழில் தொடங்க முதலுக்கு எங்கே போறது? இவனுக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா?”

“இன்னும் ரெண்டு வருஷம் ஸ்கூல் படிப்பே  இருக்குது. அதுக்கப்புறம் நான் காலேஜ் படிக்கணும். அதுக்கு அப்புறம்தான் தொழில் பற்றியெல்லாம் யோசிக்க முடியும். அதுக்கெல்லாம் இன்னும் வருஷங்கள் இருக்கு. அதுக்குள்ள தொழிலுக்கு என்ன செய்யணும் எப்பிடி செய்யணும்… அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்”

“சரி காமர்ஸ் க்ரூப் எடுக்கிறது இருக்கட்டும்… வீட்டைப் பிரிஞ்சு எங்களை எல்லாம் விட்டுட்டு வெளியூர் போகணும்னு ஏன் நினைக்கிறே விஜய்?”

 அவன் எதுவும் பதில் பேசவில்லை. ஆனால் நிமிர்ந்து அவரைப் பார்த்த பார்வையில் அவன் மனநிலை அவருக்கு புரிந்தது. 

அவன் பரமேஸ்வரனிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

“சரி! நான் பாத்துக்குறேன் நீ போ… போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்று அவனை அனுப்பி வைத்தார்.

பிறகு பரமேஸ்வரனிடமும் விஜய்யிடமும் மாறி மாறிப் பேசி இறுதியில் பரமேஸ்வரனைக் கரையாய்க் கரைத்து விஜய்யைப் பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற  பள்ளியில் விடுதியில் சேர்த்து விடவும் சம்மதிக்க வைத்தார்.

அதன் பிறகு இரண்டு வருடங்கள் விடுதி வாசத்திலேயே கழிந்தன. விடுமுறைகளின் போது கூட வீட்டிற்கு வருவதை முடிந்த அளவு தவிர்த்து விடுவான் விஜயாதித்தன்.

படிப்பைப் போலவே விளையாட்டிலும் முதல் மாணவனாக இருந்ததால் ஒவ்வொரு விடுமுறையிலும் ஏதாவது ஒரு பயிற்சி முகாமில் சேர்ந்து கொள்வான் அல்லது என்சிசி கேம்ப் என்று வெளியூர் சென்று விடுவான்.

இப்படியாக அவன் வீட்டை தவிர்த்தாலும் கண்ணபிரான் அவனுக்கு வாரத்துக்கு இரண்டு கடிதங்கள் எழுதுவார். அவன் உடன் இருந்தால் அவனுடன் எப்படிப் பேசிப் பழகுவாரோ அதை எல்லாம் கடிதத்தில் கொட்டி அவனுக்குத் தனிமை இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

வசந்திதான் மிகவும் கஷ்டப்பட்டார் என்றாலும் அவன் வந்து கணவனிடம் அடி வாங்கிச் சாவதற்கு அவன் விடுதியிலேயே சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டார்.

பன்னிரண்டாவது விடுமுறையிலும் அதைப் போல ஒரு பயிற்சி முகாமில் சேர்ந்து விட்டதாகவும் வீட்டுக்கு வர முடியாது என்றும் முதலிலேயே தகவல் சொல்லி விட்டான்.

வசந்தியின் பெற்றோர் ஒரு ஆன்மீகச் சுற்றுலா செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தார்கள். அதற்கு அவர்கள் வசந்தியையும் அழைத்தார்கள் வசந்தி, கணவர் தனியாகக் கஷ்டப்படுவார் என்று காரணம் சொன்ன போது விடுமுறை நேரமாதலால் அவரையும் அழைத்துச் செல்லலாம் என்று திட்டமிட்டார்கள்.

செலவில்லாமல் ஊர் சுற்றி வருவதுதானே என்று பரமேஸ்வரனும் மிக மகிழ்ச்சியாகவே சம்மதித்தார். அவர்கள் சுற்றுலாவில் திட்டமிட்டிருந்த தலங்கள் எல்லாவற்றையும் கண்ணபிரான் ஏற்கனவே தனியாகச் சென்று பார்த்து விட்டதாலும் வீட்டைப் பார்த்துக் கொள்ள யாராவது ஒருவர் பின்தங்கி இருக்க வேண்டும் என்பதாலும் அவர் அவர்களுடன் செல்லவில்லை.

ஆனால் சில நாட்களிலேயே அவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி அவர்கள் நால்வருமே வெறும் சாம்பலாக வீடு திரும்பியதை நினைத்த போது விதியை நினைத்துக் கண்ணீர் விடுவதைத் தவிர செய்வதற்கு  ஒன்றும் இல்லை.

வசந்தியின் உறவுகள் அனைத்தும் அந்த ஒரு நாளில் பொய்த்துப் போயின. அதுவரை விஜய்யைக் கண்ணே மணியே எனக் கொண்டாடியவர்கள் எங்கே தாங்கள் உடன் வைத்து உணவளித்து, கல்விக்கும் செலவழிக்க வேண்டி இருக்குமோ என நினைத்து வேறு முகம் காட்டினர். பெரியவர்களும் உயிருடன் இல்லை என்பது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

 பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா

சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்ல பந்தமில்ல

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ

ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்

தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

யாரை நம்பி நான் பொறந்தேன்

போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

Advertisement