Advertisement

அத்தியாயம் 24

அங்கு வந்த அன்று விஜய்யின் ஆசைக்கிணங்க ப்ரியம்வதா அலைபேசியில் வைத்துக் கொடுத்தது என்னவோ காதல் பாடல்கள்தான்… ஆனால் ஆட்டோப்ளே ஆப்ஷன் இருந்ததால் அடுத்தடுத்துப் பாடிக் கொண்டிருந்த பாடல்கள் ஒரு கட்டத்தில் பழைய தத்துவ பாடல்களுக்குச் சென்றிருந்தது. கேட்க நன்றாகவே இருந்ததால் விஜய்யும் அதை மாற்றவில்லை.

தெளிவில்லாமல் குழப்பத்தில் இருந்தவன் மனது அப்போது பாட ஆரம்பித்த பாடலைக் கேட்கவும் மெல்ல அசைந்து கொடுக்க ஆரம்பித்தது.

“ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி

 

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்தனக்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

 

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள

தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ

மானே எனஅழைத்த வாய்க்கு

(பத்து மாதம் உடலெல்லாம் நொந்து பெற்று, பசியென்ற போது பரிவாய்க் கையில் ஏந்திப் பாலூட்டிய தாயை எந்தப் பிறவியில் இனிக் காண்பேன்?  கூடையிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்து என் மீது அன்பு செலுத்தி முந்தானை சிறகிலிட்டுக் காப்பாற்றிய தாயின் உடலிற்கோ விறகிட்டுத் தீமூட்டுவேன்? ருசியுள்ள தேனே திரவியமே பூமானே என அழைத்த வாய்க்கு வரிசையிட்டு மகிழாமல் வாய்க்கரிசி இடுவேனோ?)

அந்த நிலையில்தான் ப்ரியம்வதா எழுந்து அவனைப் பார்த்தாள்.

விடிவிளக்கின் வெளிச்சத்திலும் கைபேசியில் இருந்து அவன் முகத்தில் அடித்த வெளிச்சத்திலும் அந்த முகத்தில் உயிரைக் கசக்கிப் பிழியும் வேதனையை கண்டுகொண்டவள் அவனருகில் ஓடிச் சென்று அவன் தோளில் கை வைத்து “ஆதி என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

 அவன் அமர்ந்திருக்க அவள் நின்றிருக்க அவளை இடையோடு கட்டிக் கொண்டான். சில நிமிடங்களில்  அவன் உடல் குலுங்கவும்தான் அவன் அழுகிறான் என உணர்ந்தாள்.

அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

“என்ன ஆச்சு? ஆதி! ஏன் இப்படி அழறீங்க?” என்றவள் அவன் அவளை இன்னும் இறுக்கிக் கொள்ளவும் பயந்து போய் அவன் முகத்தின் இருபுறமும் தன் கைகளை கொடுத்து அவன் முகத்தை தன் முகத்தைப் பார்க்க வைத்தாள்.

“என்னப்பா?” என்ற அவளது குரலில் மீண்டும் அவளை இறுக்கி அவளுள்ளேயே புதைந்து விடுபவன் போல் கட்டிக்கொண்டான்.

ஏதோ பாடிக் கொண்டிருந்த கைபேசியை எடுத்து அணைத்து விட்டு மீண்டும் அவனிடம் “என்னாச்சு ஆதி? உங்களுக்கு ஆப்பரேஷன் பண்ணி இருக்கு…இப்பிடில்லாம் உணர்ச்சி வசப்படக் கூடாது…இப்போ என்ன ஆச்சுன்னு சொல்லப் போறீங்களா இல்லையா?” எனக் கொஞ்சம் கடுமையான குரலில் கேட்க, நிமிர்ந்தவன் அவள் கையிலிருந்து கைபேசியை வாங்கி அந்த பாடலை கொஞ்சம் முன்னாலிருந்து ஒலிக்க விட்டான்.

அது பாட ஆரம்பிக்கவும் கட்டில் மேலேயே வைத்து விட்டு மீண்டும் அவளைக் கட்டிக் கொண்டான்.

அது என்ன பாடல் என்று அவளுக்கு தெரியவில்லை. கருப்பு வெள்ளை காலப் பாடல்கள் கேட்பாள் என்றால் கூட இது மிகப் பழையதாக இருந்தது

”இந்த பாட்டை கேட்டு வருத்தம் ஆயிடுச்சா ஆதி?” எனவும் அவன் தலை ஆம் என்பது போல் அசைந்தது. பாடல் வரிகளில் அவள் கவனம் சென்றது. 

“முன்னை இட்ட தீ முப்புரத்திலே

பின்னை இட்ட தீ  தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்

குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை”

(பரமசிவன்  நெற்றிக் கண் தீ முப்புரத்தை எரித்தது, அனுமாரின் வாலில் இட்ட தீ தென்னிலங்கையை எரித்தது. அன்னை என் அடிவயிற்றில் தீயிட்டு  என்னை நீங்கி விட்டாள்…நான் அவளுக்கு இடும் தீயும் மூண்டு நன்றாக எரியட்டுமே…குருவியைப் போல் நான் பறந்து போகாமல் கருத்தோடு என்னை வளர்த்தெடுத்த என் தாயின் கை தீயில் வெந்து சாம்பலாகுதே)

 என்று பாடிய அந்தப் பாடலை கேட்டு அதன் பொருளை உணர்ந்து கொள்ளவும் அவளுக்குத் திக்கென்று இருந்தது.

 இது தாயின் சிதைக்குத் தீ வைக்கும் பாடல் அல்லவா? இதைக் கேட்டு விட்டு அழுகிறான் என்றால் ஒருவேளை கண்ணபிரான் அவனது தந்தை தாய் இறந்த போது கூட அவன் அழவில்லை என்று சொன்னாரே அந்த நினைவு வந்து விட்டதோ என மனதில் எண்ணி அவள் அவன் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தினாள். 

“அம்மா ஞாபகம் வந்திருச்சா?”

அவன் ஆம் என்பதுப் போல் தலையசைத்துவிட்டு அவளைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டு அவள் மடியில் தலைவைத்துப் படுத்தான்.

அவனைப் பார்க்க வளர்ந்த குழந்தை போல் தோன்றியது அவளுக்கு… தன்னை அறியாமல் அவன் தலையை வருடிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

வனவாசத்திற்கு வந்ததில் இருந்தே தன் இயல்புக்கு மாறாக அவன் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தவள் இந்த மாற்றம் நல்லதற்காக இருக்குமோ என்றும் எண்ண ஆரம்பித்திருந்தாள்.

காரணம் அவர்கள் அங்கு கிளம்பி வரும் முன்பு டாக்டர் க்ருஷ்னவேணி அவளிடம் தனியாகப் பேசிய போது,

“மிஸஸ். ப்ரியம்வதா! நானும் டாக்டரும் உங்க ஹஸ்பண்ட் கேஸ் பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணினோம். இப்போ வந்த இந்த ஆபத்தில் இருந்து அவரைக் காப்பாத்திட்டோம். ஆனால் இனிமே இது மாதிரி  நடக்காதுன்னு உறுதியாச் சொல்ல முடியாது.”

“டாக்டர்! என்ன சொல்றீங்க?” அதிர்ச்சியில் ப்ரியம்வதா கத்தியே விட்டாள்.

“அவரோட ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கணும்… அவரோட வயதை வைத்தும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை வைத்தும் பார்க்கும் போது அவர் தன்னை ஒரு சில விஷயங்கள்ல மாத்திக்கிட்டாலே அதாவது வாழ்க்கையை ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா வச்சுகிட்டாலே அதிகம் மருந்துகள் இல்லாம இந்த பிபி(BP)யை சமாளிக்க முடியும்.அது உங்க கைலதான் இருக்கு”

“என் கைலயா?”

“ஆமா மனைவியால முடியாத காரியம் ஏதாவது இருக்கா?”

புன்னகை முகமாக வினவியவரைப் பார்த்தவளின் முகத்திலும் தெளிவு தோன்றியது.

“நான் என்ன செய்யணும் டாக்டர்?”

“முதல்ல அவர் உங்ககிட்ட ஃப்ரீயாப் பேசிப் பழகணும்… அவருக்கு ஏதாவது ப்ரச்சனைன்னா…அது உங்களால தீர்த்து வைக்க முடியாததாக் கூட இருக்கலாம்…ஆனாலும் அவர் உங்ககிட்ட அதைப் பத்திப் பேசணும்…ஒரு தோழிகிட்டப் பேசுறது மாதிரி”

“அவர் இதுநாள் வரை இருந்த மாதிரி இல்லாம எல்லா விஷயத்தையும் மனம் விட்டுப் பேசணும்னு சொல்றீங்க”

“எக்ஸாக்ட்லி! ரத்த அழுத்தம் அடிக்கடி உச்சத்தைத் தொட்டு வர்றது நல்லது இல்ல.சோ மனசை அந்த மாதிரி உணர்ச்சிவசப்படாம இருக்க வைக்க தியானப் பயிற்சி செய்யலாம். முக்கியமா மனசுல வச்சுக் குமையாமப் ப்ரச்சனைகளைத் தள்ளி வச்சுக் கையாளணும். இதுக்கெல்லாம் நீங்க அவருக்கு உதவியா இருக்கணும். முதல்ல அவரை, அந்தக் கூட்டுக்குள்ள அடையுற பழக்கத்துல இருந்து வெளிய கொண்டு வாங்க…உங்ககிட்டா ஃப்ரீயாப் பேச வைங்க”

டாக்டரின் வார்த்தைகள் அவள் காதுக்குள் எதிரொலித்தன.

அவளே நேரம் பார்த்து அவனுடன் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தாள். அந்த வாய்ப்பு அந்த சித்த மருத்துவரின் புண்ணியத்தில் தானாகவே கிடைத்திருக்கிறது. ஆம். அவர் இன்று கண்ணீரை அடக்குவது பற்றிப் பேசியது விஜய்யின் மனதைக் கரைத்திருக்க வேண்டும்…இல்லையென்றால் தன் கணவனாவது அழுவதாவது…

சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அவன் தலையையும் கழுத்தையும் முதுகையும் ஆறுதலாக வருடிக் கொண்டிருந்தவள் மெல்லிய குரலில் “என்னாச்சுப்பா?” என்றாள்.

“எங்க அம்மா அப்பா பத்தி பெரியப்பா உன்கிட்ட ஏதாவது சொல்லி இருக்கிறாரா?

“இல்ல ஆதி, நான் முன்னாடி ஒரு தரம் கேட்டு இருக்கேன். ஆனா அதைப் பத்தி பேசறது உங்களுக்குப் பிடிக்காதுன்னு மாமா சொல்லிட்டாரு”

“அப்பா பத்திப் பேசப் பிடிக்காதுதான். ஆனால் அம்மாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அம்மா பத்திப் பேச ஆரம்பிச்சா அப்பாவைப் பற்றியும் நினைக்காமல் இருக்க முடியாது இல்லையா… அதனால்தான் இரண்டு பேரைப் பற்றியுமே நினைக்கவே மாட்டேன்.”

“எங்க அம்மா உன்னை மாதிரியே ரொம்ப அழகு…  நல்ல சிவப்பு நிறம் தாமரைப்பூல ஒரு இளம் சிவப்பு நிறம் இருக்குமே… அந்த மாதிரி இருப்பாங்க…என்னோட கலர் கூட அம்மாகிட்ட இருந்துதான் வந்துச்சுன்னு பெரியப்பா சொல்வாரு… அழகு மட்டும் இல்ல…ரொம்பப் பொறுமை… ரொம்பத் திறமைசாலியும் கூட… அதிர்ஷ்டலட்சுமின்னு எங்க தாத்தா வீட்ல அவங்களத் தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுவாங்க”

அவன் தன் நினைவுகளில் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தான்…

விஜய்க்கு சொந்த ஊர்… காரைக்குடிப் பக்கம் ஒரு சிறிய கிராமம்… அவன் தந்தை பரமேஸ்வரன் அந்த ஊரில் ஆண்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் விடுதி காப்பாளராகப் பணிபுரிந்து வந்தார்…

இளம் வயதிலேயே தாயை ஏதோ மர்மக் காய்ச்சலுக்குப் பலி கொடுத்து விட்ட கண்ணபிரானையும் பரமேஸ்வரனையும் அவர்கள் தந்தை ஷண்முகம் தனியாளாய் வளர்த்து வந்தார்.

தாய் வசந்திக்கு சொந்த ஊர் மதுரை… தாய் வீடு நல்ல வளம் நிறைந்தது. வசந்தியின் தந்தை அம்பலவாணர், தாய் பார்வதி. வசந்தியுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்…மொத்தம் மூன்று ஆண்கள் மூன்று பெண்கள்… வசந்திதான் அனைவருக்கும் மூத்தவர்…

வசந்திக்கு மணமுடிக்க முயற்சி செய்த போது வரன் தகையவில்லை.வருகின்ற மணமகன் பெண்ணைப் பிடித்திருப்பதாகக் கூறிச் சென்றாலும் சில நாட்களில் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் எனத் தகவல் வந்து விடும். 

பின்னொரு நாளில் வசந்தியின் சித்தப்பா… அம்பலவாணரின் தம்பிதான் வசந்தியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வரும் வரன்களைத் தன் பெண்களைப் பார்க்க அழைத்துச் செல்கிறார் எனத் தெரிய வந்தது.

எப்படியாவது மகளுக்கு மணம் முடித்து விட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்ட அம்பலவாணர் காரைக்குடியில் ஒரு வரன் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றார். 

அவர் கேள்விப்பட்டது கண்ணபிரானைப் பற்றியே. பையன் மிக நல்லவன்… கடவுள் நம்பிக்கை உடையவன்… அதிர்ந்து பேச மாட்டான் என்றெல்லாம் கேள்விப்பட்டுத் தானே சென்று பேசி வரலாம் எனக் கிளம்பினார்.

ஆனால் கண்ணபிரான் தனக்குத் திருமண ஆசை இல்லையென்றும் இறைவன் திருவடியையே தன் மனம் நாடுகிறது என்றும் அம்பலவாணருக்கு விருப்பம் இருந்தால் தன் தம்பிக்கு வசந்தியை மணம் செய்து தரும்படியும் கேட்டார். 

அம்பலவாணருக்கும் அந்த ஏற்பாட்டில் மகிழ்ச்சியே…

காரணம் கண்ணபிரான் அவர்களின் தந்தையின் கறுப்பு நிறத்தையும் தாயின் குள்ள உயரத்தையும் கொண்டு பிறந்தவர். அதிலும் சிறு வயதிலேயே கடவுள், பக்தி என்று எந்த நேரமும் அமர்ந்திருக்கும் பழக்கம் உடையவராதலால கொஞ்சம் உருண்டு திரண்டு இருப்பார். 

ஆனால் பரமேஸ்வரன் நல்ல உயரமும் மாநிறமும் தினமும் விடுதி மாணவர்களுக்கு உடற்பயிற்சி பயிற்றுவித்துத் தானும் தவறாமல் செய்பவராதலால் உரமேறியிருந்த உடற்கட்டுமாக வாட்டசாட்டமாக இருப்பார். 

மகளுக்கு மாப்பிள்ளை கண் நிறைந்து இருக்க வேண்டும் எனப் பெற்றவர் எதிர்பார்ப்பது இயற்கைதானே!

எனவே அண்ணனைப் போலத் தம்பியும் நல்ல குணமாகவே இருப்பார் என நினைத்து பரமேஸ்வரனைப் பற்றி எதுவுமே விசாரிக்காமல் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார். 

திருமணத்திற்குப் பிறகு பரமேஸ்வரனின் முரட்டு சுபாவம் தெரிய வந்த போது மகளின் நிலை பார்த்து மௌனக் கண்ணீர் வடிக்க மட்டுமே அவரால் முடிந்தது.

வீட்டுக்கு முதல் மாப்பிள்ளையான பரமேஸ்வரன்… அந்த பந்தாவைக் காட்ட  ஒரு போதும் தவறியதில்லை…

சிறு வயதில் இருந்தே விடுதியில் பதின்பருவ இளைஞர்களை அடக்கி ஆண்டு பழகியதில் அவரிடம் ஒரு முரட்டு சுபாவம் குடி கொண்டிருந்தது… நாட்கள் செல்லச் செல்லத்தான் வசந்தியின் குடும்பம் அதைப் புரிந்து கொண்டது.

விஜய் பிறந்திருந்த போது… கண்ணபிரானும் பரமேஸ்வரனும் குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தனர்…

மாப்பிள்ளைகளை வீட்டின் ஸ்வாமி அறையில் தங்க வைப்பது அவர்கள் வீட்டு வழக்கம்…பிள்ளை பெற்றிருந்ததனால் தீட்டு என்று இருவருக்கும் கொண்டு வந்த காஃபியை வெளியில் இருந்தே நீட்டியதற்காக  மரியாதை தெரியாமல் நடந்து கொண்டாள் என வசந்தியை இழுத்துப் போட்டுப் பச்சை உடம்பு என்றும் பாராமல் மிதி மிதி என மிதிக்க ஆரம்பித்தார் பரமேஸ்வரன்.

பாத்ரூம் சென்றிருந்த கண்ணபிரான் சரியான நேரத்தில் வந்து தடுக்கவில்லையானால் அன்றே உயிரை விட்டிருப்பாள் வசந்தி…அப்படி ஒரு மூர்க்கம்… கோபம்.

தன் பிள்ளையிடமும் அதே முரட்டு சுபாவத்துடன் பழகினார் பரமேஸ்வரன்…அவனுக்கு வேண்டியது வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பதும்… அவனை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சுவதுமாக இருப்பவர்…அவன் சிறிய தவறு செய்து விட்டாலும் ருத்ரமூர்த்தியாக மாறி விடுவார்.

வசந்தியோ விஜயாதித்தனோ அடி வாங்காத நாள் இருந்ததேயில்லை. கண்ணபிரான் அங்கே இருந்தால் பரமேஸ்வரனைத் தடுக்க முடியும் இல்லையென்றால் அவர்கள் கதி அதோகதிதான். 

ஒருநாள் கோடை விடுமுறைக்காக மதுரைக்குச் சென்றிருந்தனர் குடும்பத்தோடு…அப்போது விஜய் பத்தாம் வகுப்பு முடித்திருந்தான்.

கண்ணபிரானும் குடும்பம்… குழந்தை… என்று எதுவும் இல்லாமல் ப்ரம்மச்சாரியாகத் திரிந்தவர் ஆதலால் அவர்களுடன் சில நாட்கள் தங்கி விட்டுப் பின் அவர் மட்டும் சில தெய்வஸ்தலங்களுக்குச் சென்று விட்டு காரைக்குடி திரும்புவதாக ஏற்பாடு. 

அவர்கள் மதுரை சென்ற மூன்றாவது நாள். 

வசந்தியின் வீட்டிற்கு அடுத்த படியாக ஒரு மொத்த விலை விறகுக் கடை இருந்தது.

அங்கு லாரி போன்ற வாகனங்களில் சரக்கு வரும் போது திறந்த வெளியாக இருக்கும் கோடவுனுக்குள்ளயே லாரியைக் கோண்டு சென்று சரக்கை இறக்கிய பின் லாரி வெளியே செல்லுமாறு அமைக்கப்பட்டு இருந்த கடை அது. 

வீட்டிற்கும் கடைக்கும் இடையில் ஒரே சுவர்தான்.

அன்று லாரி… நிரம்பி வழியும் அளவிற்கு விறகுக் கட்டைகளுடன் உள்ளே நின்றிருந்தது. விடுமுறை காலமாதலால் வசந்தியின் தங்கைகள் சுசீலா மற்றும்  மணிமேகலையின் பிள்ளைகள்… என நண்டு சிண்டுகள் அந்த திறந்த வெளி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். இரண்டு அத்தைமார்களும் பிள்ளைகளுடன் அவர்கள் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

விஜய்யின் வயதுச் சிறுவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்… அவனுடன் விளையாட வருவர். அவர்களுடன் சேர்ந்து க்ரிக்கெட்  விளையாடுவதற்காக ஒரு கட்டையை எடுத்து அதை க்ரிக்கெட் மட்டை போல் அரிவாள் மற்றும் கத்தி கொண்டு செதுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் விஜய். இன்னும் அவன் நண்பர்கள் வந்திருக்கவில்லை. 

அப்போது அடுத்த கடையில் நின்றிருந்த லாரியில் இருந்து மொத்தமாக விறகுகள் சரிந்து, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் நடுவில் தபதபவென விழுந்து சிதறின. குழந்தைகள் வீல் வீலென அலறி ஆளுக்கு ஒரு புறம் சிதறி ஓடினர். 

தந்தை, பெரியப்பா, மாமன்மார்கள் என யாரும் வீட்டில் இல்லை. அம்மா சித்திமார்கள்…என அனைவரும் பின்கட்டில் சமையலில் ஈடுபட்டிருந்தனர். 

பதினைந்து வயதில் மீசை அரும்பத் தொடங்கியிருந்த பருவத்தில் தன்னைப் பொறுப்பில் இருக்கும் ஆண்மகனாகக் கருதிய விஜய் லாரி மேல் நின்றிருந்த விறகுக் கடைத் தொழிலாளர்களிடம் சண்டைக்குப் போனான். 

“ஏன்ணே! பார்த்து செய்ய மாட்டீங்க!சின்னப் பிள்ளைகள் விளையாண்டுட்டு இருக்காங்கள்ல… யார் தலைலயாவது விழுந்து பெரிய காயம் ஆகிருச்சுன்னா யார் பதில் சொல்றது? என்னைத்தானே கேப்பாங்க?” என்று அவன் நீளமாகப் பேசி முடிக்க… 

ஆள் வளர்ந்திருந்தாலும் முகம் பால் வடிய இருப்பதைக் கண்டவர்கள்… ‘யாரடா இவன் கையில் அரிவாளை வேறு வைத்துக் கொண்டு பெரிய மனிதன் மாதிரிப் பேசுகிறான்’ என மனதில் நினைத்துக் கொண்டாலும் வெளியே கொஞ்சம் திமிராக… 

“அதுதான் யாருக்கும் ஒண்ணும் ஆகலைல்ல தம்பி! நீ ஏன் இப்பிடித் துள்ளிகிட்டு வர்றே?” என்று கொஞ்சம் அலட்சியத்துடன் பதிலளிக்க விஜய்க்கு இப்போது நிஜமாகவே கோபம் வந்து விட்டது. 

“என்னன்ணே இப்பிடிப் பேசுறீங்க! எல்லாம் சின்னப் பிள்ளைங்க. நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா…கொஞ்சம் கவனமா இருக்கக் கூடாதான்னுதானே கேக்குறேன்?”

“அட அதுதான் ஒன்னும் ஆகலைன்னு சொல்றேனே! திரும்பத் திரும்ப அதையே பேசிகிட்டு… போ! போய் வேற பொழப்பு இருந்தாப் பாரு! வந்துட்டான் பெரிய மனுஷனாட்டம்!”

இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்த வேளையில் கொஞ்சம் தூரத்தில் பரமேஸ்வரன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவருடன் சென்றிருந்த கண்ணபிரான் வழியில் தெரிந்தவர் ஒருவரைப் பார்த்து விட ‘நான் பேசி விட்டு வருகிறேன் நீ முன்னே போ’ என அனுப்பி இருந்ததால் அவர் மட்டும் தனியாக வந்து கொண்டிருந்தார்.

தூரத்தில் வரும் போதே மகன் கையில் அரிவாளை வேறு வைத்துக் கொண்டு ஏதோ வாதாடிக் கொண்டிருப்பது தெரிய அவசரம் அவசரமாக ஓடி வந்தவர் என்ன ஏது என மகனை விசாரிக்காமல் அங்கே வண்டியில் நின்று கொண்டிருந்தவர்களிடம் “என்னங்க! என்ன ப்ரச்சனை? என் பையன் ஏதாச்சும் தப்புப் பண்ணிட்டானா?” 

“ஏதோ கொஞ்சம் விறகு தெரியாம விழுந்துருச்சுங்க… அதுக்குக் கொஞ்சம் கூடப் பெரியவங்கன்னு மட்டு மரியாதை இல்லாமப் பேசுறான் இந்தப் பையன்”

தன் மேல் தவறு இல்லையெனக் காட்டிக் கொள்வதற்காகச் சிறுவன் மேல் பழியைத் தூக்கிப் போட்டான் அந்த மனிதன்.

பரமேஸ்வரனின் கோபம் எப்போதும் போல் மகன் பக்கம் திரும்பியது.

“ஏன்டா இப்பிடிப் பண்ணினே?”

“அப்பா! நான் தப்பா எதுவும் சொல்லலைப்பா!”

“உனக்கு என்னடா பெரியவங்ககிட்ட பேச்சு? உள்ளே இருந்து யாரையாவது கூப்பிட வேண்டியதுதானே! மீசை முளைக்க ஆரம்பிச்சுட்டா நீ பெரிய மனுஷன் ஆகிருவியோ!” 

அதற்குள் அவரது பெரிய குரலைக் கேட்டுப் பின்கட்டில் இருந்த பெண்களும் என்ன ஆச்சு எனப் பதறியபடி ஓடி வந்தனர்.

“அவங்ககிட்ட மன்னிப்புக் கேள்!”

“நான் எந்தத் தப்பும் செய்யலைப்பா…முதல்ல நான் சொல்றதை முழுசாக் கேளுங்க…”

பளார்!

பொறி கலங்கும்படி விழுந்த அந்த அறையில் அனைவருமே ஒரு கணம் ஸ்தம்பித்தனர்.

கன்னத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு பரிதாபமாக நின்றிருந்தவனை நோக்கி,

“ஓ! நீங்க சொல்றதை நாங்க கேக்கணும்… நாங்க சொல்றதை நீங்க கேக்க மாட்டீங்க”

அந்தக் கடை ஆட்களுக்கே பரிதாபமாகப் போய் விட முதலில் பேசிய பேச்சை மாற்றவும் முடியாமல் “சின்னப் பையன் ஏதோ தெரியாமப் பண்ணிட்டான் விட்டுடுங்க.”

அவர்களுக்குத் தெரியாது… பரமேஸ்வரனின் ருத்ரதாண்டவம் எப்படிப்பட்டது என்பதும்… ஒரு முறை மலை ஏறி விட்டார் என்றால் யாராலும் அவரை சாமானியமாக மலையிறக்க முடியாது என்பதும்…

“உங்க வேலயப் பாத்துகிட்டு நீங்க போகலாம். என் பையனை எப்பிடிக் கண்டிக்கிறதுன்னு நீங்க எனக்கு சொல்லிக் கொடுக்கத் தேவை இல்லை”

இதற்கு மேல் அங்கு நின்றால் தங்களுக்கும் அடி விழுந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என நினைத்தவர்கள் வண்டியில் இருந்து இறங்கி விட்டனர்.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறு பிள்ளைகளுக்கும் நடந்த விவரத்தை எடுத்துச் சொல்லி… அண்ணன் மேல் தவறு இல்லை என்று விளக்கும் அளவிற்குப் பக்குவம் இல்லை. மேலும் பரமேஸ்வரனைப் பார்த்தாலே அந்தக் குழந்தைகள் எங்காவது இடம் தேடி ஒளிந்து கொள்ளும் அளவிற்கு அவரிடம் பயம் உண்டு.

பரமேஸ்வரனைத் தடுப்பதற்கான சக்தி அங்கு யாருக்கும் இல்லை.

உள்ளே சென்ற பரமேஸ்வரன் ஒரு தாம்புக் கயிறை எடுத்து வந்தார்.

“மதுரை வந்து மூணு நாள் கூட ஆகல. அதுக்குள்ள அப்பாவை எதிர்த்துப் பேச ஆரம்பிச்சுட்டேல்ல. இனிமே உன்னை இப்பிடியே விட்டா நீ சரிப்பட மாட்டே” என்றவர்… 

“சட்டையக் கழட்டு!”

“வேண்டாம்பா!”

“நீ கழட்டப் போறியா… இல்ல நான் கிழிக்கட்டுமா?”

அவன் மௌனமாக சட்டையைக் கழற்றினான்…

“ம்ம்ம்…ட்ரௌசரயும்…”

அவன் அதிர்ந்து போய் அவரைப் பார்த்தான்.

முதல் முறையாக வசந்தி வாயைத் திறந்தார்.

“என்னங்க… வேண்டாம்ங்க…”

அவர் திரும்பி முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டார். ஆனால் கண்களில் அருவியாக நீர் வழியலாயிற்று.

தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே
தலையில எழுதி வச்ச அந்த விரல் பார்த்தேனா
சொல்லத்தான் வார்த்தையின்றி தாய்மனசு நோகுமங்கே
சொல்லவே வார்த்தையின்றி ஓர் மனசு வாடுமங்கே
தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்ல
தோளில வாழும் வரை துன்பமுன்னு ஒன்ணுமில்ல
சட்டை கிழிஞ்சுருந்தாத் தைச்சு உடுத்திரலாம்
நெஞ்சு கிழிஞ்சுருக்கே எங்கே முறையிடலாம்
காவிரி கங்கை ஆறுகள் போலே கண்களும் இங்கே நீராக

Advertisement