Advertisement

“இப்போ எதுக்கு இப்பிடி முட்டைக் கண்ணை முழிச்சுப் பார்க்குறே?” என்றான் சிரிப்புடன்…

அவளது விழிகள் இன்னும் விரிந்தன. இப்போது அதில் வியப்புடன் கொஞ்சம் சந்தேகமும் சேர்ந்து கொண்டது. 

“உங்களுக்கு ஆபரேஷன் பண்ணினதுல எதுவும் ஆகிடலையே?” எனவும், அவன் வாய் விட்டுச் சிரித்தான்.

“நட்டு கழன்றுச்சான்னு நாசூக்காக் கேக்குறியாக்கும்?” என்றவன் மீண்டும் தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல் சிரித்தான்.

 அதைக் கண்டு அவளுக்கு சந்தேகம் இன்னும் அதிகமாகியது. 

மெல்ல எழுந்து தன் கைபேசியை எடுக்கப் போனவளை இழுத்துத் தன் பக்கத்தில் அமர்த்தி கொண்டான். 

“பைத்தியமெல்லாம் பிடிக்கல..அப்பிடியே பிடிச்சாலும் அது உன் மேலதான் பிடிக்கும். அந்த பைத்தியத்தை நீ வேணாம்னு சொல்லுவியா?” என அவன் கேட்க அவள் மயக்கம் போட்டு விழாத குறைதான்.

“ஒரு கேள்வி கேட்டேன் அதுக்கு பதில் சொல்லாம என்னைப் பக்கம் பக்கமா வசனம் பேச வைக்குறியே… இது உனக்கு நியாயமா…”

“அது சரி! பேசாம உம்மனாமூஞ்சியா இருக்கிற மனுஷன் திடீர்னு பக்கம் பக்கமாப் பேசினா எப்பிடி நம்புறது…” 

அவன் சாதாரணமாகப் பேசிய போது வியப்படைந்தவள் அவன் கேலியில் தன்னை மீட்டெடுத்து எதிர்க் கேள்வி கேட்டாள்.

“நம்பு கண்ணம்மா! நம்பித்தான் ஆகணும்…சரி என் கேள்விக்கு இன்னும் பதில் வரலையே…என்னை ஆதின்னு கூப்பிடுறியா?” 

ஒவ்வொரு வார்த்தையாகக் கேட்டான்.

இன்னும் அவளால் அவன் கேட்பதை நம்ப முடியவில்லை.

கல்யாணம் ஆன புதிதில் காஷ்மீரில் நடந்த விஷயங்கள் அவளுக்கு இன்னும் நினைவு இருந்தன.

திருமணத்திற்கு முன்பே அவனை எப்படி அழைப்பது என யோசித்திருந்தவள் மற்றவர்கள் விஜய், விஜி என அழைப்பதால் ஆதி என அழைக்கலாம் என முடிவு செய்து மனதுள் அழைத்தும் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

தனக்குள் செய்திருந்த முடிவை அவள் அவனிடம் சொல்லி இருக்கவில்லை.

திருமணம் முடிந்து அவன் என்னென்னவோ கூறி அவளை பயமுறுத்தி இருந்ததில் இந்த விஷயம் அவர்கள் இடையில் வரவும் இல்லை. 

ஒரு நாள் காஷ்மீரில் அவர்கள் கடைவீதியில் சுற்றிக் கொண்டு இருந்த போது மனதுக்குள் ‘ஆதி’ என்றே அழைத்துப் பழகி இருந்தவள் வேறு கவனமாக இருந்தவன் தோள் தொட்டு ‘ஆதி’ என அழைத்து விட திரும்பி அவன் உறுத்து விழித்ததில் அவள் சர்வாங்கமும் ஒடுங்கி விட்டது.

“நான்…நான்…இந்த கிஃப்ட்… உங்களுக்கு…நான்…” என அவள் திக்கித் திணற…அவன் முகத்தில் கடுமை கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் கடித்த பற்களுக்கிடையே… “என்னை ஆதின்னு கூப்பிடாதே” என்று விட்டுத் திரும்பி விட்டான். அவளும் விழிகளில் நிறைந்து விட்ட நீரை மறைக்க அடுத்த பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அன்று இரவு அவனிடமே அவனை எப்படிக் கூப்பிடுவது என அவள் கேட்க, “அதுதான் எத்தனையோ இருக்கே…மாமா, மச்சான், அத்தான்…இல்ல ஸ்டைலாக் கூப்பிடணும்னா டார்லிங்,டியர்…இப்பிடி அதுல ஏதாவது ஒண்ணைக் கூப்பிடு” என அவன் விட்டேற்றியாகச் சொன்ன விதத்தில் அப்படியாவது அவனைக் கூப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா எனத் தோன்றி விட்டது அவளுக்கு.

பெயரைச் சொல்லி டா போட்டுப் பேசும் காலத்தில் மாமாவாவது மச்சானாவது என்று தோன்றி விட மீனலோசினி ரவிச்சந்திரனை எப்படி அழைப்பார் என யோசிக்க அன்னை முறை வைத்து அழைக்காமல் ஏங்க…என்னங்க என்றே அழைப்பது நினைவு வந்தது.

மற்றவர்கள் போல்தானே அவளும் அதனால் மற்றவர்கள் போலவே விஜய் என்றே அழைக்க முடிவு செய்தவள் அதை அவனிடமும் கூறி அனுமதி வாங்கி அன்றிலிருந்து விஜய் என்றே அழைத்து வருகிறாள்.

இன்று திடீரென ‘ஆதி எனக் கூப்பிடுகிறாயா’ என அவன் கேட்க அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது.

அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதைக் கண்டவன், “அன்னிக்கு ஆசையாக் கூப்பிட்டப்போ வேணாம்னு சொன்னவன் இன்னிக்கு வலிய வந்து கேட்குறானேன்னு யோசிக்கிறியா?”

அவள் ஆம் என்பது போல் தலையாட்ட… “அன்னிக்கு…அன்னிக்கு…” என்றவன் எல்லா விஷயங்களையும் அவளிடம் வெளிப்படையாகக் கூறித் தான் செய்து விட்ட தவறுக்கு மன்னிப்பும் கேட்பதற்கு இதுதான் சரியான நேரம் என முடிவு செய்தான்.

எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் தயங்கிப் பின் தான் ஆரம்பித்த பெயர் விஷயத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து அவள் கையை வருடியபடியே “வது! எங்கம்மா மட்டும்தான் என்னை ஆதின்னு கூப்பிடுவாங்க…ஆனா நமக்குக் கல்யாணம் ஆனதும் நீ சட்டுன்னு அப்பிடி என்னைக் கூப்பிடவும் எனக்குக் கோபம் வந்துடுச்சு”

அவள் எதுவும் சொல்லாமல் அவனைக் கூர்ந்து பார்த்த வண்ணம் இருந்தாள். ஆனால் அவள் மனக்குரல் அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

‘அப்படிக் கோபம் வருமளவு நான் என்ன தப்பு செய்தேன்?’ என்று அவள் விழிகள் வினவிய வினாவுக்கு விளக்கமளிக்க முடியாமல்  கூனிக் குறுகிப் போனான்.

எங்கோ பார்த்துக் கொண்டே, “நீ எந்தத் தப்பும் செய்யல…நாந்தான் நீ பணத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதாத் தப்பா நினைச்சுட்டேன்” அவன் கூறி முடிக்கும் முன்னே அவள் உடல் விறைத்தது.

அவளைப் பிடித்திருந்த கையிலிருந்து அவள் உடல்மொழி மாறியதை உணர்ந்தவன் சட்டென்று திரும்பி அவள் முகம் பார்க்க அதில் தெரிந்த வேதனை அவன் மனதைக் கொன்று கூறு போட்டது.

எதுவும் பேசாமல் தன் கையை அவன் கையிலிருந்து விடுவித்துக் கொண்டவள் எழுந்து சென்று ஜன்னலின் அருகே நின்று வெளியை வெறித்தாள்.

அவளது இறுகிய தோள்களைக் கண்டு செய்கையறியாமல் சில நிமிடங்கள் நின்றிருந்தவன்… ஒரு பெருமூச்சுடன் அவள் அருகே சென்று அவள் தோள்களைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினான். 

கலங்கிய விழிகளும் துடிக்கும் உதடுகளும் விடைக்கும் நாசியும் இறுகும் தாடையும் அவள் உள்ளக் கொதிப்பைச் சொல்லாமல் சொல்லி விட அவள் தவிப்பதைத் தாள மாட்டாமல் இதற்குத் தான்தானே காரணம் எனத் தோன்றி விட அவள் மீதிருந்து கையை எடுத்தவன் அவளைத் தாண்டிச் சென்று ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டு நின்றான். 

தன்னைத் தாண்டிச் சென்றவனைத் திரும்பிப் பார்த்தவள் கண்களில் அவன் தளர்ந்திருந்த தோள்களும் ஜன்னலைப் பிடித்திருந்த இறுகிய முஷ்டியும் பட அசரீரியாய்க் கண்ணபிரானின் வார்த்தைகள் அவள் காதுக்குள் ஒலித்தன.

“ப்ரியாம்மா! அவனுக்கு மேஜர் ஆப்பரேஷன் பண்ணி இருக்கு…அதுனால அவனை அதிகம் உணர்ச்சி வசப்பட வைக்காம உங்களுக்குள்ள ஏதாவது ப்ரச்சனை வந்தாலும் நீ இப்போதைக்குக் கொஞ்சம் பொறுத்துப் போம்மா” என்று இறைஞ்சியவரிடம் ‘இதெல்லாம் நீங்க எனக்கு சொல்லணுமா மாமா’ என்பது போல் பார்த்தவள், “எல்லாம் நான் பார்த்துக்கிறேன் மாமா” என்று உறுதி அளித்து விட்டே கிளம்பினாள்.

அந்த வாக்குறுதியைத் தான் மீறிக் கொண்டிருக்கிறோம் என்று மனம் அறிவுறுத்த மெல்ல அடி எடுத்து வைத்து அவனை நெருங்கினாள்.அவன் தோளில் கை வைக்கவும் படக்கென்று திரும்பியவன் அவள் கண்களில் குற்றம் சுமத்தும் பாவனைக்கு பதிலாகத் தென்பட்ட அமைதியில் குழப்பம் அடைந்தான்.

தன் தோளில் இருந்த அவள் கையை இரு கைகள் கொண்டு  பற்றியவன்,

“சாரி! சாரி! வது! என்னை மன்னிச்சுரு…நான் ஏதோ ஒரு நினைப்புல… எப்பிடியோ அப்படி நினைச்சுட்டேன்…சாரி, சாரி! நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்… ப்ளீஸ்… ப்ளீஸ்மா…” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.

தவறு செய்து விட்டுத் தாயிடம் மன்னிப்பு வேண்டும் குழந்தையின் பாவனையை அவன் முகத்தில் கண்டவளுக்கு அவன் கெஞ்சிய விதம் இவன் தவறு செய்தோ மன்னிப்பு வேண்டிக் கெஞ்சியோ பழக்கம் இல்லாதவன் என்பதை உணர்த்த இன்னும் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கொண்டிருந்தவன் இதழ்களைத் தன் மென்விரல் கொண்டு மூடினாள்.

அந்த ஒற்றை செயலில் அவன் விழிகளில் பளபளப்பைக் கண்டவள் தொண்டையைச் செருமிக் கொண்டு,

“இடைவிடாமப் ப்ளீஸ் போட்டுட்டே இருந்தா… நான் எப்பிடி ஆதின்னு கூப்பிடறதாம்?ம்ம்ம்…” 

அவள் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தவன் அவள் கையை விலக்கி “உனக்கு…கூப்பிடப் பிடிக்கலைன்னா வேண்டா…” அவன் முடிக்கும் முன் அவன் வாயை மீண்டும்  தன்  விரல்கள் கொண்டு மூடியவள்,

“யார் சொன்னது எனக்குப் பிடிக்கலைன்னு ஆதி…நீங்களா எப்பிடி முடிவு செய்தீங்க ஆதி? இனிமே நான் உங்களை ஆதின்னுதான் கூப்பிடுவேன் ஆதி” என்று அவள் நொடிக்கொரு ஆதி போட்டதில் அவன் முகம் மலர்ந்தது.

“அப்போ என்னை மன்னிச்சுட்டியா?”

சில நிமிடங்கள் பதில் பேசாமல் இருந்தவள் ஒரு பெருமூச்சுடன், “ஆதி! நீங்க ஹாஸ்பிடல்ல பிழைப்பீங்களா மாட்டீங்களான்னு தெரியாத நிலைமைல இருந்தப்போ நீங்க பிழைச்சு வந்தாப் போதும்…நீங்க எங்கிட்ட என்ன மாதிரி நடந்துகிட்டாலும் பரவாயில்லைன்னு நான் நினைச்சேன்… அது…அதை நான் உணர்ச்சி வசப்பட்டு சொல்லி இருந்தாலும்…இப்பவும் என் எண்ணத்துல மாற்றம் இல்ல…உங்களை அப்பிடியே ஏத்துக்கத் தயாரா இருந்த எனக்கு நீங்க உங்க மனசுல என் மேல இருக்கிற தப்பெண்ணத்தை மாத்திகிட்டு மன்னிப்பும் கேட்குறப்போ இதுக்கு மேல என்ன வேணும்?”

அவள் பேசி முடிக்கும் முன் அவளை இழுத்து அணைத்திருந்தான் ஆதி…ஆம் அவள் ஆதி…

அன்று இரவு உணவுக்குப் பின் அவனுக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுத்து முடித்துப் படுக்கையை சரி செய்து விட்டுத் தன் படுக்கையைத் தட்டிக் கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்தவள், “தூக்கம் வரலே?” என்று கேட்டாள்.

“வரல…”என்றவன்… “உன்னாலதான்” எனச் சேர்த்துச் சொல்லவும் சங்கடமாகப் பார்த்தவள், “என்ன சொல்றீங்க ஆதி?” என்றாள்.

வாய் விட்டுச் சிரித்தவன், “தப்பா எதுவும் இல்லடா…நீ நம்ம வீட்டுல தூங்க முன்னால பாட்டுப் போட்டுப் போட்டு அது எனக்குப் பழகிப் போச்சு…இப்பவும் பாட்டு இல்லாமத் தூக்கம் வர மாட்டேங்குது” 

நிம்மதிப் பெருமூச்சுடன், “பாட்டுதானே! போட்டுட்டாப் போச்சு” என்றவள் தொலைக்காட்சியில் அதிகமாக ஆன்மீகம் மற்றும் செய்தி அலைவரிசைகளே இருந்ததை அறிந்திருந்ததால் தன் அலைபேசியில் யூட்யூபில் தேடி வழக்கமாகக் கேட்பது போல் பாடல்கள் தொகுப்பு ஒன்றைப் போட்டு அலைபேசியை அவனிடம் கொடுத்து விட்டுச் சென்று படுத்தாள்.

சில  நிமிடங்களிலேயே  உறங்கி விட்டவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனதிலோ எண்ணங்கள் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருந்தன. 

பாடல்களை ஒரு மனம் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு மனம் மதியம் அவர்களுக்கிடையே நடந்த உரையாடலை அசை போட்டது.

பணத்திற்காகத் தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய போது அவள் பார்த்த பார்வையும் அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளும் அவனை மேலே அந்த விஷயத்தைப் பேசவொட்டாமல் கட்டிப் போட்டன.

பண விஷயம் சொன்னதற்கே இத்தனை தூரம் வருந்துபவள் அவன் அவளைச் சந்தேகித்தான் என்று சொன்னால்…அவனால் அதன் விளைவைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. இன்னின்ன காரணங்களால் சந்தேகித்தான் என அவன் தரப்பு நியாயத்தைச் சொல்லலாம்தான்…ஆனால் அதைக் கேட்கும் அளவுக்கு அவன் மனையாளுக்குத் திடம் இருக்குமோ தெரியவில்லையே…

அவளைச் சந்தேகித்தது அவன் செய்த தவறு …அதற்கு அவன் தண்டனை அனுபவிப்பது நியாயம்…ஆனால் அதைச் சொல்வதாலேயே அவள் பாதிக்கப்படுவது எப்படிச் சரியாகும்…

இத்தனை நாட்கள் பேசாமல் இருந்து அவளைத் தான் வருத்தியது போதாதா…இப்போது இதைப் பேசி அவளை வருத்த வேண்டுமா?

எல்லா விஷயத்தையும் எடுத்துச் சொல்லி அவள் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டக் கூட அவன் தயார்தான்…மனைவியின் காலில் விழுவதில் என்ன மானக்கேடு வந்து விடப் போகிறது…இருவரும் ஓருயிர்தானே…

ஆனால் கணவன் தன்னை இப்படி நினைத்து விட்டான் என எண்ணி எண்ணி அவள் மறுகினால்…அதன் பின் அவன் என்னதான் பிரியமாக நடந்து கொண்டாலும் ஒட்ட வைத்த கண்ணாடியின் விரிசல் கண்களை உறுத்துவது போல் அவள் மனதை அது உறுத்திக் கொண்டேதானே இருக்கும்.

நீண்ட யோசனைக்குப் பின் அவளிடம் இது குறித்துப் பேச வேண்டாம் என முடிவு செய்தான்.

இனிமேல் அவளைக் கண்ணின் மணி போல் காத்து இந்த மூன்று மாதங்கள் அவர்கள் வாழ்வில் நிகழவே இல்லை என்பது போல் அவள் மனதில் நல்ல நினைவுகளை மட்டுமே பதிய வைக்க வேண்டும் என முடிவு செய்தவன் அலைபேசியை அணைத்து விட்டுப் படுத்தான்.

 நீ கண்டதோ துன்பம் வரும் நாளெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை இன்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனி எல்லாம் சுகமே

Advertisement