Advertisement

ஆம்… அது வருண்தான்…

அலுவலகத்தில் வருணைப் படிய வாரிய தலையுடன், சோடாபுட்டிக் கண்ணாடியுடன் தொளதொளப்பான உடையுடன் பல நாள் பார்த்துப் பழகி இருப்பவர்கள் கூட அவனை இப்படி ஒரு கோலத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இன்னின்ன வேலைக்கு இன்னின்ன மாதிரி என விதம் விதமாக மாறும் அவன் கோலம் விஜய்க்கு மட்டுமே தெரியும். 

இத்தனை நேரம் செய்த முயற்சிகளின் விளைவாக உணர்ச்சிகள் கொஞ்சம் கட்டுக்குள் வந்திருந்தாலும் சில நிமிடங்கள் ஜன்னலின் அருகே நின்று வெளியில் இருந்த இருட்டை வெறித்தவன் வருணின் “பாஸ்” என்ற அழைப்பில் திரும்பினான். 

“ஒரு வேளை இவன் பொய் சொன்னால்…”

“இல்லை வருண்! அவன் பொய் சொல்வதாக எனக்குத் தெரியல. ஆனா அவன் உண்மையே சொன்னாலும் என்னால ப்ரியாவை விட முடியாது. அதுனால இனிமே இவன் என் கண்ணில் படக் கூடாது. அதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய். அதுக்கு முன்னால அவன் இத்தனை நாளா எங்கே தங்கி இருந்தான்னு பார்த்து அங்கே ஒரு தரம் போய் செக் பண்ணிப் பாரு…இப்போ நான் கிளம்புறேன்.”

“ஓகே பாஸ்” 

அங்கிருந்து கிளம்பியவன் மனம் கொல்லன் உலைக்களம் போல் கொதித்துக் கொண்டிருந்தது.

அந்த கோபாலின் வார்த்தைகளையே மனம் வட்டமிட்டது.

அவனை மிரட்டிய போது… ஒன்று அவன் பணத்திற்காக, தானே இவ்வாறு செய்திருக்க வேண்டும் அல்லது அவன் எதிரிகள் யாராவது பண ஆசை காட்டி செய்ய வைத்திருக்கலாம் என்று நினைத்திருந்தானே ஒழிய ப்ரியம்வதாவுக்கும் இதற்கும் தொடர்பிருக்கும் என அவன் அணுவளவும் அனுமானித்திருக்கவில்லை.

அவன் சொல்வதில் உண்மை இருக்குமா?

முதல் முதலில் அவளை சந்தித்த சமயத்திலிருந்து நடந்தவைகளை மனக்கண் முன் ஓட்டிப் பார்த்தான்…

பேருந்து நிறுத்தத்தில் அவள் தன் போர்ஷ் (porsche) காரை ஆசையுடன் பார்த்தது, அன்று அவனை அடித்த போது கூட அவன் உடைகளையும் காரையும் ஆர்வமாகப் பார்த்தாளே…அந்தப் பார்வைக்கெல்லாம் அர்த்தம் இப்போது வேறு கோணத்தில் விளங்கியது அவனுக்கு…

யாரோ ஒருவன் சொன்னதைக் கேட்டு மணந்து கொள்ளப் போகும் பெண்ணை அவன் சந்தேகிக்கிறானா?

அவன் யாரோ ஒருவன் அல்ல…சொல்லப் போனால் அவன்தான் ப்ரியம்வதாவுக்கு நன்றாக அறிமுகமானவன்… விஜய்யே சில வேளைகளில் அவர்கள் இருவரையும் சாலையில் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறான்.

ஒரு வேளை இவன் சொல்வது உண்மையாக இருந்தால்…

ப்ரியம்வதாவைப் பற்றி என்ன தெரியும் அவனுக்கு?சாலைகளில் வைத்துப் பார்த்திருக்கிறான்…அவ்வளவுதான்.

உனக்கு ஒரு கெட்ட பெயர் என்றதும் ஓடோடி வந்தாளே! அவளையா சந்தேகிக்கிறாய்? 

என் கெட்ட பெயரை மாற்றுவதற்காக வந்தாளா? அல்லது அவளின் பெயர் என் பெயருடன் இணைத்துப் பேசப்பட வேண்டும் என்று வந்தாளா?

அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

ஒரு பெண்… மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவள்… தன் மேல் அபாண்டமாக ஒரு பழி வருகிறது எனத் தெரிந்தால் என்ன செய்தாகிலும் அதைத் தடுக்க முயற்சி செய்வாளா…அல்லது முதல் ஆளாகப் போய்த் தன் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்வாளா?

இப்படி ஒரு நிலைமையில் அவனே சென்று தனக்கு உதவி செய்யுமாறு கேட்டால் கூட அவள் தயங்கி… பின் ஒரு தடவைக்குப் பல தடவை யோசித்து… தன் குடும்ப அங்கத்தார்களிடம் கலந்தாலோசித்து… பின்னர் சம்மதம் சொல்வதே முறையாகப் பட்டது அவனுக்கு…

ஆனால் இங்கே அவர்கள் விஷயத்தில்  அவன் வர வேண்டாம் என்றும் தானே சமாளித்துக் கொள்வதாகவும்   சொல்லி இருக்கிறான்… அவள் தங்கையும் தடுத்திருக்கிறாள்… இத்தனைக்குப் பிறகும்… தன் குடும்பத்துடனும் கலந்தாலோசிக்காமல் கொஞ்சமும் தயக்கமில்லாமல் மீடியாவில் தன் முகம் காட்ட வருகிறாள் என்றால்…

யோசிக்க யோசிக்கத் தலை வெடிப்பது போல் இருந்தது அவனுக்கு…

வீடு திரும்பியவன் உணவை மறுத்து விட்டு நேராக அறைக்குச் சென்றான்.

மீண்டும் மீண்டும் மனம் ஒரே புள்ளியைச் சுற்றியது.

ப்ரியம்வதா எதற்காக அவனை ஏமாற்ற வேண்டும்? கோபால் சொல்வது போல் அவனைக் காதலித்துக் கொண்டிருந்தவள் வசதி வாய்ப்புக்களுடன் இவனைப் பார்க்கவும் மனதை மாற்றிக் கொண்டு விட்டாளா…?

அந்த எண்ணமே அருவருப்பாகத் தோன்றியது அவனுக்கு…

கோபாலிடம் சொன்னது போல் ப்ரியம்வதாவிடம்  இதெல்லாம் உண்மையா என நேருக்கு நேராகக் கேட்டு விட்டால்…

எந்தக் குற்றவாளியாவது தன் குற்றத்தை ஒப்புக் கொள்வானா? கோபால் ஒப்புக் கொள்ளவில்லையா? அவன் அடிக்கு பயந்து ஒப்புக் கொண்டான்…

ப்ரியாவையும் அடித்துக் கேட்டால்…சீ… சீ… ஒரு பெண்ணைக் கைதொட்டு அடிப்பதாவது…சிறு வயதில் மீண்டும் மீண்டும் கண்ணால் கண்டு வெறுப்புற்றிருந்த அந்தக் காரியத்தை அவன் வாழ்வில் ஒருநாளும் செய்ய மாட்டான்.

அவளை வேறு வகையில்தான் தண்டிக்க வேண்டும்…

ஒருவேளை அந்த கோபால் சொன்னது போல் அவன் கேட்டு அவள் மனசாட்சி உறுத்தி  ஆமாம் நான் கோபாலைத்தான் காதலிக்கிறேன்… தெரியாமல் உங்கள் பணத்தைப் பார்த்து மயங்கி விட்டேன் என்று அவன் பின்னால் சென்று விட்டால்…அவன் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று அவர்களை வாழ்த்தி வழியனுப்ப வேண்டுமா…

அவன் கண்கள் ரத்த நிறம் கொண்டன…

நடக்காது!

அவன் யோசனைக்கு அலைபேசி அழைப்பு அணை போட்டது. 

“சொல்லு வருண்”

“பாஸ்! ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன்… அதைப் பார்த்துட்டுக் கூப்பிடுங்க.”

“ம்ம்ம்…”

தன் வாட்ஸாப்பை எடுத்து வருணிடம் இருந்து வந்திருந்த காணொளியை ஓட விட்டான்.

ஒரு வீட்டின் காணொளி அது…ஒரு வேளை கோபாலின் வீடோ! 

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வருண் ஒரு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்…படுக்கை அறை போல் இருந்தது.

வருணின் அலைபேசிக்  கேமரா அந்த அறையின் சுவர்களைச் சுற்றி சுற்றிப் படமெடுத்திருந்தது.

அந்த சுவர்களைப் பார்த்த விஜய் பேச்சிழந்து அதிர்ந்து போய் நின்றான்.

அந்தப் பத்துக்குப் பத்து அறையின் சுவர்களின் ஒரு இணுக்கைக் கூட விட்டு வைக்காமல் ப்ரியம்வதா புன்னகைத்துக் கோண்டிருந்தாள். 

வேறு வேறு கோணத்தில் வேறு வேறு உடைகளில்… அந்தச் சுவர்கள் முழுவதும் ஒரு இடம் மீதம் இல்லாமல் ப்ரியம்வதாவின் புகைப்படங்கள்… 

அந்தக் காணொளி முடிந்ததும் வருணை அழைத்தான்.

தொண்டயைச் செருமிக் கொண்டவன், “வருண்…இந்த ஃபோட்டோஸ் எல்லாம்…”

“ஆமா பாஸ்…இதுதான் அந்த கோபாலோட வீடு… ஊரப்பாக்கம் பக்கத்துல ஒரு டூ பெட்ரூம் ஃப்ளாட்…ஒரு பெட்ரூமை டார்க் ரூமாப் பயன்படுத்தி இருக்கான்…    இன்னொரு பெட்ரூம் படுக்கிறதுக்கு…அந்த ரூம்தான் நீங்க இப்போ பார்த்தது… ஒரு இன்ச் கூட விடல சீலிங்க்லயும் ஒட்டி இருக்கான். அந்த டார்க் ரூம்ல ஹோட்டல் வாசல்ல எடுத்த ஃபோட்டோஸ் நிறைய இருக்கு…அது போக…”

“அது போக?”

“ஒரு ஃபைல் நிறைய ப்ரியா மேடம் நம்பருக்கு செய்த ஃபோன் கால் பில்ஸ் இருக்கு…தேதி வாரியா ஃபைல் பண்ணி வச்சுருக்கான்…சில அழைப்புக்கள் ரொம்ப சுருக்கமா இருக்கு…சில பத்து பதினைந்து நிமிஷம் கூட ஆகியிருக்கு. இதுக்கெல்லாம் மேல…”

ஏதோ வரப் போகிறது என விஜய்யின் உள்ளுணர்வு சொல்ல இதயம் துடிக்கும் சத்தத்தை அடக்க முடியாமல் “மேல?” என்றான்.

“ப்ரியா மேடம் கோபாலுக்கு  எழுதிய மூன்று காதல் கடிதங்கள் கிடைச்சுருக்கு”

சில நிமிடங்கள் விஜய்யின் புறம் இருந்து பேச்சு எதுவும் இல்லை.

பின் “அது ப்ரியா எழுதினதுதான்னு எப்பிடி கன்ஃபர்ம் பண்ணினே?”

இத்தனைக்குப் பிறகும் தன்னவளைச் சந்தேகிக்கத் தோன்றாமல் ஆதாரம் கேட்கும் அவன் அன்பை வியந்தபடி “இனிமேதான் பாஸ் கன்ஃபர்ம் பண்ணனும்…  ‘அன்புள்ள கோபிக்குன்னு ஆரம்பிச்சு உன் ப்ரியமுள்ள ப்ரீ’ ன்னு முடிச்சுருக்காங்க…அந்த லெட்டெர்ஸை உங்களுக்கு வாட்ஸாப் பண்றேன்…இப்போ நேரம் ஆயிட்டனால நாளைக்குத்தான் அவங்க கையால எழுதின ஏதாவது கிடைக்குதான்னு…”

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டான் விஜய்.

“அவசியமில்லை…அதைப் பார்க்க எனக்கு விருப்பமும் இல்ல… வாட்ஸாப் பண்ண வேண்டாம்… அப்புறம்  நீ  நேரா ப்ரியம்வதா வீட்டுக்குப் போய் கல்யாணத்தைப் பதிவு பண்ண ரெஜிஸ்ட்ரார் ஆஃபிஸ்ல கொடுக்கத் தேவைன்னு சொல்லி அவளைப் பத்தின விவரங்களை அவ கையால எழுத வச்சு வாங்கிக்கோ…அவங்க வீடு தெரியும்ல?”

“தெரியும் பாஸ்… பல்லாவரம்தானே?” 

“ம்ம்ம்…மேற்கொண்டு என்ன செய்யணும்னு உனக்கே தெரியும்”

“ஓகே பாஸ்”

இந்த மாதிரி ஒரு நிலையிலும் அவனது திட்டமிடும் திறத்தை வியந்து கொண்டே கிளம்பினான் வருண்.

விஜய் சொல்லி விட்டானே ஒழிய வருணுக்கு அந்த வேலையை முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. 

முதலில் தன் அபார்ட்மென்டுக்குச் சென்று தன் அலுவலகத் தோற்றத்துக்கு மாறி ப்ரியம்வதாவின் வீட்டிற்குச் சென்றான். 

விஜய் சொன்னது போல் சொல்லி தன் முன்னாலேயே தான் சொல்லச் சொல்லப் ப்ரியம்வதாவை எழுத வைத்தான்…பின் மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிக் கையெழுத்து நிபுணரிடம் சென்றான்.

எல்லாவற்றையும் செய்து முடிக்கக் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரங்கள் ஆகியது அவனுக்கு…ஆனால் அவனிடம் கொஞ்சமும் சுணக்கமில்லை. 

விஜய்க்காக அவன் எதுவும் செய்வான். 

விக்கிரமாதித்தனுக்குப் பட்டியைப் போல் இந்த விஜயாதித்தனுக்கு வருண்.

எல்லாம் முடித்த பிறகு விஜய்க்கு அழைத்தான். ஒரே ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட்டது.

“பாஸ்”

“சொல்லு வருண்”

“அந்தக் கடிதங்கள் ஜெனூன்(genuine)தான்…கால இடைவெளி வேணா இருக்கலாமே ஒழிய அடிப்படைக் கையெழுத்து ஒரே ஆளுடையதுதான்னு ஹேன்ட்ரைட்டிங்க் எக்ஸ்பெர்ட் சொல்லிட்டார்”

மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருந்த கடைசி நம்பிக்கையும் நசித்துப் போகத் தன் ஏமாற்றத்தைக் குரலில் காட்டாது மறைத்தவன்,

“சரி! அந்த கோபால் பத்தி நான் சொன்னதுல மாற்றம் இல்ல…அவன் என் கண்ணில் படக் கூடாது…இந்த ஊரை விட்டே… முடிஞ்சா இந்த நாட்டை விட்டே அனுப்பிரு… ப்ரியம்வதா விஷயம் இனிமே நான் பார்த்துக்கிறேன்… நீ தெரிஞ்ச மாதிரிக் கூடக் காட்டிக்காதே”

“ஓகே பாஸ்”

வருண் வைக்கவும் தன் கைபேசியைத் தாங்கியில் பொருத்தியவன் நீச்சல் குளத்தில் மல்லாந்து படுத்து வானத்தை வெறிக்க ஆரம்பித்தான்.

இப்போது என்ன செய்வது?

திருமணத்தை நிறுத்தி விடலாமா?

பெரியப்பா ஏற்கனவே திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டார். ப்ரியம்வதாவின் வீட்டில் பேசி விட்டு வந்த அன்றே அவன் சித்திகளுக்கும் மாமன்களுக்கும் அழைத்துச் சொல்லியாயிற்று. இத்தனை வருடங்கள் கழித்து  வீட்டில் ஒரு விழா என்பதால் உற்சாகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தவரின் மகிழ்ச்சி புரிந்திருந்தவனும் அவரைத் தடுக்கவில்லை. 

இந்த நிலையில் திருமணத்தை நிறுத்துவதென்றால் என்ன காரணம் சொல்வது…

அப்படி நிறுத்த முனைந்தாலும் அது அவனுக்கு அவமானம் இல்லையா?

ஆனால் ப்ரியம்வதாவைத் திருமணம் செய்து கொள்வது மட்டும் அவமானம் இல்லையா?

அது அவர்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்டது… ஆனால் திருமணத்தை நிறுத்தினால் இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வரும். 

உறவினர்களிடம் மோதலில் ஆரம்பித்துக் காதலில் முடிந்து இப்போது கல்யாணக் கட்டத்திற்கு முன்னேறி இருப்பதாகப் பெரியப்பாவைச் சொல்லச் சொல்லி இருந்தான்.

ஆம்…அனைவரும் அவர்கள் விவகாரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்திருந்த காரணத்தால் அந்தப் பெண்ணைப் பிடித்து விட்டது… கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்…பெண் வீட்டிலும் சம்மதம் சொல்லி விட்டார்கள் என்றே அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார் கண்ணபிரான்.

இந்த நிலையில் என்ன காரணம் சொல்லிப் பின்வாங்குவது?

வேண்டாம்… அது கூடாது… எந்த நிலையிலும் திருமண முடிவிலிருந்து பின்வாங்கக் கூடாது. திருமணம் நடந்தே ஆக வேண்டும்.

அப்படியானால் ப்ரியாவின் ஏமாற்று வேலைக்குத் தண்டனை? அவள் நினைத்ததைச் சாதித்துக் கொண்டு விட்டாளா?அவனும் கோபாலும் ஏமாந்தவர்களா?

அவள் எண்ணியதை எட்டுவதற்கு அவன் கௌரவத்தைப் பணயம் வைத்தாளா… 

ஹோட்டல் சம்பவத்திற்கு மறுநாள் காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணிக்குள் அவன் மதிப்பு கூவிக் கூவி ஏலம் விடப்பட்டதே…அது இல்லையென்றாகி விடுமா?

அவன் மட்டும் சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்தித் திட்டமிட்டு ஆதாரங்களை சேகரித்திருக்கவில்லையானால் அவனுக்கு என்னென்ன பட்டம் கொடுத்திருப்பார்கள்…

அந்த இடைப்பட்ட நேரத்தில் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறும் போர்வையில் கேலி செய்தவர் எத்தனை பேர்…

அழைப்புக்களை எடுக்காமல் இருப்பதும் தேவையற்ற ஊகங்களுக்கு வழி வகுக்கும் என்பதால் அனைத்து அழைப்புக்களையும் ஏற்று ‘என் மேல் தவறில்லை பிரெஸ் மீட் பாருங்கள்’ என்று சொல்லிச் சொல்லி வைப்பதற்குள்… அவன் இடத்தில் இன்னொருவன் இருந்தால் இடிந்து போய் இருப்பான்… அவளையும் இடித்துரைத்திருப்பான்.

ஆனால் அந்த நிலையிலும் தனக்காக மட்டுமல்லாமல் தன்னவள் என்று எண்ணியிருந்தவளுக்காவும் சிந்தித்து சிந்தித்து எப்படி செயல்பட்டான். 

அதை எல்லாம் செல்லாக் காசாக்கி விட்டு அவள் மட்டும் சந்தோஷமாக இருப்பதா? கூடாது!

அவன் கண்களில் மீண்டும் சிவப்பேறியது. 

அவனை ஒருவர் ஏமாற்றுவதாவது? 

இல்லை. அவளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்… மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்து…  மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்…கற்றுக் கொடுப்பேன்.

பணத்துக்கும் வசதிக்கும் ஆசைப்பட்டுத்தானே என்னை மணமுடிக்கிறாள்… அதை எல்லாம் கொடுத்துக் கணவனின் அன்பும் ஆசையும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்…அவளே இந்த வாழ்க்கை போதும் என்று தூக்கிப் போட்டுப் போக வேண்டும்…

ஆனால்…அவன் அப்படி நடந்து கொண்டால் மற்றவர்கள் அவனைத்தானே தவறாகப் பேசுவார்கள்…இல்லை அதற்கு இடம் கொடுக்கக் கூடாது…

மற்றவர்கள் முன்னிலையில் நல்ல பிரியம் உள்ள ஆதர்சக் கணவனாக நடந்து கொள்ள வேண்டும்…தனிமையில் அவளை வாட்டி வதைக்க வேண்டும்…ஏன் இப்படி நடந்து கொள்கிறான் எனப் புரியாமல் அவள் தவிப்பில் உழல வேண்டும்…அந்தத் தவிப்புத் தாள மாட்டாமல் அவனிடம் எல்லாவற்றையும் அவளே வந்து ஒத்துக் கொள்ள வேண்டும்.

இப்படித் தனக்குள் முடிவுகளை எடுத்துக் கொண்டவன்… அதன் பின் பிரியம்வதாவைத் தொடர்பு கொள்ளவே இல்லை. 

மற்றவர்  முன் மனதை மறைத்து  நடமாடிக் கொண்டிருந்தவன் உள்ளம், உடைந்து போய் சுக்குநூறாய் சிதறி இருந்ததையும் அவன் ஆற்றாமையால் அரற்றிக் கொண்டிருந்ததையும் எவரும் அறியவில்லை. 

இரத்தம் வடிந்து கொண்டிருந்த இதயத்தை முகம் என்னும் முக்காட்டின் மேல் சிரிப்பென்னும் சாயம் பூசி மறைத்து விட்டான். அதில்தான் அவன் கைதேர்ந்தவனாயிற்றே!!!

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கொண்ட இதயம் ஒரு குழந்தை போல 
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா அதில் கொள்ளை போனது என் தவறா
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா
கவிதை பாடின கண்கள்  காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள் 
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

Advertisement