Advertisement

அத்தியாயம் 21

 இரண்டு நாட்கள் கழித்து டெல்லியிலிருந்து திரும்பி வந்தவன் கைபேசி அழைக்க எடுத்துக் காதில் வைத்தான். 

“ம்ம்ம்…சொல்லு ” 

“அந்த போட்டோக்ராஃபர் கிடைச்சுட்டான்” 

“வெரி குட்! இப்போ எங்கே இருக்கே?” 

“நம்ம ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸ்ல”

“ஓகே! இன்னும் அரை மணி நேரத்துல நான் அங்கே இருப்பேன்”

 தனது விருந்தினர் விடுதியின் முன் காரை நிறுத்தியவன்  குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும்  நிசப்தமான சூழ்நிலையில் தன் காலணி சப்திக்க நடந்து சென்று தரைதளத்திற்கும் கீழிருந்த மறைவான இருண்ட பகுதியை அடைந்தான்.

அங்கே நாற்காலியில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் இருந்தான் அவன்.

அமைதியாக அவனைச் சில நிமிடங்கள் பார்த்தவன் அருகில் நின்றிருந்தவன் பக்கம் திரும்பினான்.

உடற்பயிற்சியால் உரமேறியிருந்த உடற்கட்டை வெளிப்படுத்தும்  உடலை இறுக்கிக் கவ்விய கறுப்பு நிற டீஷர்ட், அதைப் போலவே உடலோடு ஒட்டிய கறுப்புக் கால்சராய், தலையில் ஏதேதோ நிறத்தில் செய்யப்பட்டிருந்த ஸ்பைக் ஹேர்ஸ்டைல், கண்களில் பல நிறம் காட்டும் குளிர் கண்ணாடியை புருவங்களுக்கு மேல் ஏற்றிச் செருகி இருந்தான். ஒற்றைக் காதில் சிறிய தோடு, கழுத்தில் சிறிய வித்யாசமான டாலர் வைத்த கறுப்பு நிறக் கயிறு…

“இவன் பிரியா கூட அந்த போட்டோல இருந்தவன்தானே?”

“யெஸ் பாஸ் அவனேதான்”

“இவன் பேரு?”

“கோபால்”

“இவனை எப்பிடிப் பிடிச்சே?”

“இவன் ஒரு போட்டோக்ராபர்னு எனக்குத் தெரியும் பாஸ்… ப்ரியா மேடம் இதுல சம்பந்தப்பட்டு இருக்கிறனால ஆரம்பத்துல இருந்தே இவன் மேல எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு. அதனால நம்பிக்கையான ஆட்களை வைத்து இவன் எங்கேயாவது தலையைக் காட்டறானான்னு வாட்ச் பண்ணச் சொல்லி இருந்தேன்.”

அவனது துப்பறியும் குழு ஹேண்ட்பிக்கட் என்று சொல்வார்களே அதைப் போல் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலரைக் கொண்ட அவனது நேரடிப் பார்வையில் இயங்கக் கூடியது. 

வசந்தம் நிறுவனத்துக்கோ அவர்களுக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது. அதில் இருப்பவர்களை விஜய்க்குக் கூடத் தெரியாது. வேறு வேறு அலுவலகங்களில் பணி புரியும் முகம் தெரியாத மனிதர்களை இணைத்து நிற்பவன் அவன் ஒருவனே. ஒருமுறை ஒருவருக்கு வேலை கொடுத்து விட்டால் அடுத்து இரண்டு மாதங்களுக்கு மீண்டும் அவர்கள் உதவியை நாட மாட்டான்.

அவன் அன்று காலை நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்.

அன்று காலை  கோபாலின் நடமாட்டத்தைக் கண்காணிக்கச் சொல்லி இருந்தவரிடம் இருந்து தகவல் வரத் தானே கிளம்பிச் சென்றான். 

மத்திய சென்னையில் கூவம் ஆற்றைச் சுற்றி அமைந்திருந்த குடிசைப் பகுதிகள் இருக்கும் இடத்தை அடைந்து அங்கிருந்த ஒரு சந்துக்குள் முன்னேறிச் சென்றான்.

அவனுக்குக் கிடைத்த தகவலின் படி அந்தச் சந்தில் ஏழாவது வீடு. 

அந்த வீட்டுக்கு சென்று கதவைத் தட்ட கொஞ்சம் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி கதவைத் திறந்தாள்.

”இங்கே கோபால்ங்கிறது…” 

“அப்பிடி யாரும் இல்லையே “

“போட்டோ எல்லாம் எடுப்பார்” 

“அதுதான் தெரியாதுன்னு செல்றேனே “

“இந்த அட்ரஸ்தான் கொடுத்தாங்க.”

“யாரு குடுத்தா?”

“மோகன்னு ஒருத்தர்.” 

மோகனின் பெயர் சொன்னால் அவன் வெளியே வருவான் என  அவனுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அதைப் போலவே அவன் வெளியே வந்தான். 

“நான்தான் கோபால்… என்ன வேணும் உங்களுக்கு?”

“ஒரு ஃபங்க்ஷன். போட்டோ எடுக்கணும்” 

“எனக்கு உடம்பு சரி இல்ல.வெளி ஃபங்க்ஷன்கெல்லாம் போறது இல்ல.”

கண்ணிமைக்கும் நேரத்தில் தன் பின்னிருந்த துப்பாக்கியை  எடுத்தவன்,

“இப்போ உடம்பு வசதி எப்பிடி?” 

அவன்  அதிர்ந்து போய் செய்வதறியாது… வாசலை மறைத்துக் கொண்டு கிங்கரன் போல் நின்றிருந்தவனைத்  தாண்டி செல்லவும் முடியாமல் நின்றான்.

துப்பாக்கியைக் கொஞ்சமும் நகர்த்தாமல் தன் கால்சராய்ப் பையில் கை விட்டு ஒரு இரண்டாயிரம் ரூபாய்  நோட்டை எடுத்தவன்  கொஞ்சம் மிரட்சியாக நின்றிருந்த அந்தப் பெண்ணின் கையில் திணித்தான். 

“இந்த விஷயத்தை நீ இதோட மறந்துடணும்… யாராவது கேட்டா யாரோ வந்தாங்க… அவங்க கூட வெளிய போயிட்டான்… அவ்வளவுதான் சொல்லணும்… அப்பிடி செய்ஞ்சியானா இன்னும் இது போல நிறையத் தருவேன் . இல்ல உன் உயிர் உன்னுது இல்ல”

அவள் வாய் திறக்காமல் தலையாட்டினாள்.

கோபாலின்  தோளில் கையிட்டு அவன் இடுப்பில் யாரும் அறியாத வண்ணம் துப்பாக்கியால் அழுத்தி நகர்த்தி வந்து வண்டியையும் அவனையே ஓட்ட வைத்து அங்கு வந்து சேர்ந்தான்.

அவன் சொல்லி முடித்ததும் விஜய் அவன் எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

“சொல்லு! எதுக்காக இந்த வேலை பண்ணின?” 

“அது வந்து…”

அருகில் நின்றிருந்தவனை ஒரு விரலால் சுட்டிக் காட்டி, “அவனைப் பார்த்தேல்ல…  அவன் கைக்கு ரெண்டு அடி தாங்க மாட்டே… இத்தனை  நேரம் என்ன விஷயம்னு தெரியாம உன்னை அடிக்க கூடாதுன்னு நினைச்சனாலதான்  நீ இன்னும் முழுசா இருக்க… இப்போ நீ வாயைத் திறக்கலைன்னா பின்விளைவுகள் வேற மாதிரியா இருக்கும். மரியாதையா உண்மையச் சொல்லிரு”

தொண்டையில் எச்சிலை விழுங்கியவன் பரிதாபமாக அந்தக் கிங்கரனை ஒரு பார்வை பார்த்தான். அவன் வலது முஷ்டியை மடக்கி இடது உள்ளங்கையில் குத்த,

இதற்கு மேல் தாமதித்தால் அவன் என்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அந்தச் செய்கை தவறாது அவனுக்கு உணர்த்த அவன் சொல்ல ஆரம்பித்தான். 

“ஃபோட்டோ எடுத்தது என்னவோ நாந்தான் சார். ஆனால் அதை மீடியாவுக்குக் குடுக்கலாம்னு யோசனை சொன்னது…”

“சொன்னது?”

“ப்ரியாதான் சார்”

“வாட்? கம் அகைன்?”

“மீடியாவுக்கு ஃபோட்டோ குடுக்கலாம்னு யோசனை சொன்னது ப்ரியாதான்”

என்ன சொல்கிறான் இவன்…ஒரு கணம் மூளை மரத்துப் போன உணர்வு வந்தது விஜய்க்கு… ப்ரியாவாவது… மீடியாவுக்கு ஃபோட்டோவைக் கொடுக்கச் சொல்வதாவது… இல்லை இவன் உளறுகிறான்…

சட்டென்று எழுந்து சென்றவன் சில நிமிடங்கள் அங்கிருந்த சுவற்றை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்…மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்து.

“நீ சொல்றது உண்மையா?”

“சத்தியம் சார்”

“உனக்குப் ப்ரியாவை எப்பிடித் தெரியும்?”

“நானும் பிரியாவும் ஒரே செட் சார். நான் அவளை விட வயசுல மூத்தவன்னாலும் படிப்புல அடிக்கடி ஃபெயில் ஆனானால ஒரு டியூஷன் சென்டர்ல சேர்ந்து ப்ளஸ்டூ பாஸ் பண்றதுக்காகப் படிச்சுட்டு இருந்தேன். அதே டியூஷன் சென்டர்ல காமர்ஸ் டியுஷன் படிக்கிறதுக்காகப் பிரியாவும் சேர்ந்துருந்தா… அங்கேதான் எங்களுக்குப் பழக்கம் ஆச்சு.” 

“கிளாஸ் முடிஞ்சு நாங்க ரெண்டு பேரும் ஒரே வழியாகத்தான் வருவோம்…அவ  வீடு முதல்ல வரும்… சின்ன சிரிப்புல ஆரம்பிச்ச எங்க பழக்கம் உயிர் நேசமா மாறிப் போச்சு. ஆனா வெளியே எங்கே பார்த்தாலும் தெரியாத மாதிரித்தான் காட்டிக்கிருவா ப்ரியா. நாங்க பேசுறது எல்லாம் போன் மூலம்தான்.”

“அவளுக்கு வேலை கிடைச்சதுக்கு அப்புறமும் எங்க பழக்கம் தொடர்ந்துச்சு… நீங்க இல்லைன்னா நான் செத்துருவேன் கோபால்னெல்லாம் சொல்லி இருக்கா சார்…  அவளோட அழகுக்கும் திறமைக்கும் தைரியத்துக்கும் நான் கொஞ்சம் கூடப் பொருத்தமே இல்லாதவன்னுதான் நினைச்சேன்.ஆனா அவதான் என் மேல ரொம்பப் பிரியமா இருந்தா…”

கையை உயர்த்தி அவன் பேசுவதை நிறுத்தியவன் “இனிமேல் ப்ரியம்வதாவை அவங்கன்னு சொல்றே”

அவன் முகம் மாறினாலும் “சரிங்க சார்” என்று விட்டுத் தொடர்ந்தான்.

“நாலு நாள் முன்னால ஹோட்டல்ல அந்த சம்பவம் நடந்தப்போ நான் எதேட்சையாதான் அங்கே வந்தேன். ப்ரியா அந்த ஹோட்டல்குள்ள இருந்து வெளியே வர்றதைப் பார்த்தேன். அவ…அவங்ககிட்டப் பேசலாம்னு நான் நினைச்சப்போதான் நீங்க வந்து அவங்க மேல இடிச்சீங்க. எனக்கு திடீர்னு தோணின உள்ளுணர்வுனால நான் கேமராவை எடுத்து ரெடியா வச்சுகிட்டேன். என் உள்ளுணர்வு பொய் சொல்லல. ப்ரியா உங்களை அடிச்சதை சரியான கோணத்துல நான் எடுத்துட்டேன்.”

“நீங்க அங்கே இருந்து போன பின்னால நான் பிரியாவுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். முதல்ல அதிர்ச்சி அடைஞ்சவ… அப்புறம்தான் அந்த யோசனையைச் சொன்னா. நாங்க ரெண்டு பேரும் ஒன்னு சேரக் கிடைச்ச நல்ல வழின்னு இதைச் சொன்னா. இதை மீடியாவுல குடுத்தா அவ பேர் கெட்டுப் போயிரும். அப்போ வந்து பொண்ணு கேட்டா அவங்கப்பா குடுத்துருவாங்கன்னு சொன்னா. இல்லைனா நிரந்தர வேலையில்லாத எனக்குப் பொண்ணு குடுக்க யோசிப்பாங்கன்னு சொன்னா”

“எனக்கும் அது நல்ல யோசனைன்னு தோணுச்சு. ஆனா நான் போட்டோவைத் தெரிஞ்சவங்க மூலமா மீடியாவுக்குக் கொடுக்கும் போது என் மனசு கேட்கலை. அதுனால அவ…அவங்க முகத்தை மறைச்சுதான் காட்டணும்னு வாக்குறுதி வாங்கிக்கிட்டுத்தான் குடுத்தேன். நீங்கதான் பிரபலம்கிறனால ப்ரியா முகத்தை மறைக்க அவங்க தடை ஒன்னும் சொல்லல.”

“அடுத்த நாள் அந்த போட்டோ எல்லா பக்கமும் ரீச் ஆனப்புறம் சாயந்திரமா அவங்க அப்பா அம்மாகிட்டப் போய் அதுல இருக்கிறது ப்ரியாதான்… அவங்களை எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுக்கலைன்னா அவங்க முகத்தை வெளி உலகுக்குக் காட்டிருவேன்னு பயமுறுத்தலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள அவங்க தன்னை வெளிப்படுத்திக்குவாங்கன்னு நான் நினைக்கல சார்.”

“அதுக்கப்புறம் அவங்களுக்கு எத்தனையோ தடவை போன் பண்ணிப் பார்த்துட்டேன் எடுக்க மாட்டேன்றாங்க.நான் எப்பவுமே செல்லில இருந்து பண்ணாம பப்ளிக் நம்பர்ல இருந்துதான் கூப்பிடுவேன். அப்படி வேற வேற நம்பர்ல இருந்து கூப்பிட்டுப் பார்த்துட்டேன். அவங்க எடுக்கல. என்ன இதுன்னு புரியாம எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்துச்சு.”

“அடுத்த நாள் அவங்களைப் பார்க்கலாம்னு போனேன். அவங்க  அப்பாவும் ஒரு பெரியவரும் பேசிக்கிட்டே அவங்க அபார்ட்மெண்ட் விட்டு வெளியே வந்தாங்க. மெதுவா அவங்களுக்குத் தெரியாம ஒட்டுக் கேட்டேன். கல்யாணத்துக்கு நாள் பார்க்குறது பத்திப் பேசிக்கிட்டாங்க.”

“அந்தப் பெரியவர் கார்ல ஏறிக் கிளம்பினதும் அவரைத் தொடந்து போனேன்…அப்போதான் அவர் உங்க வீட்டுக்குப் போனது தெரிஞ்சுது… அப்போதான் ப்ரியாவுக்கும் உங்களுக்கும் கல்யாண ஏற்பாடு பண்றாங்கன்னு எனக்குப் புரிஞ்சுது. அப்போவே நான் பாதி செத்துட்டேன் சார். ப்ரியாவை அவ வீட்டுலயே போய்ப் பார்த்துறலாம்னு நான் நினைச்சப்போதான்  என்னை உங்க ஆட்கள் தேடுறது தெரிய வந்துச்சு.”

“நான் ஃபோட்டோக்ராஃபரா இருக்கிறனால இப்படி அடிக்கடிப் ப்ரபலங்களை மறைஞ்சு நின்னு வேவு பார்த்து அவங்களோட ரகசிய வாழ்க்கை பற்றின ஃபோட்டோஸை எடுத்து மீடியாவுக்குக் கொடுப்பேன். மீடியாக்காரங்க என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாங்க… நானும் கொஞ்ச நாள் மறைஞ்சு இருந்துட்டு அந்த ப்ரச்சனையோட பரபரப்பு தணிஞ்சதும் வெளிய வந்துருவேன்…இதுவரை மாட்டினதேயில்ல. ஆனா உங்க ஆட்கள் எப்பிடி என்னைக் கண்டுபிடிச்சாங்கன்னு தெரியல.அதுனால கொஞ்சம் நாள் மறைஞ்சு இருக்கலாம்னு முடிவு பண்ணிப் பதுங்கிட்டேன்.. ஆனா…” என்றவன் அந்தக் கிங்கரனை ஒரு பார்வை பார்த்து விட்டு “மாட்டிக்கிட்டேன்” என்றான்.

மறுபடி விஜய்யைப் பார்த்தவன்,

“சார்! ப்ரியா என்னை உயிருக்கு உயிராக் காதலிச்சா சார் . ஒருவேளை உங்களையும் உங்க பணத்தையும் பார்த்ததும் மனசு மாறிட்டாளோ என்னவோ… ஆனா என் ப்ரியா அப்பிடிப்பட்டவ கிடையாதே சார். எனக்கு அவ…அவங்க வேணும் சார். ப்ளீஸ் சார் ஒருவேளை நீங்க ஒதுங்கிட்டீங்கன்னா அவ…அவங்க என்கிட்டயே வர வாய்ப்பு இருக்கு சார். பிளீஸ் சார்! எனக்காக விட்டுக் குடுங்க சார். நீங்க என்ன கேட்டாலும் செய்றேன் சார். நான்தான் போட்டோ எடுத்தேன்னு மீடியா முன்னால சொல்லணும்னாலும் சொல்றேன் சார்.எல்லார் முன்னாலயும் உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்குறதுன்னாலும் கேட்குறேன் சார்”

 “ப்ரியா என் உயிர் சார்… கிட்டத்தட்ட  ஏழு வருஷம் சார்… அவங்களைக் காதலிச்சுருக்கேன். அவங்க இல்லைன்னா செத்துருவேன் சார்.  நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துகிறேன் சார். கொஞ்சம் கருணை காட்டுங்க சார்.”

அவன் கதறியது கல்லையும் உருக்குவதாக இருந்தது.

சொல்லாவிட்டால் பின் விளைவுகளை அனுபவிப்பான் என அவனை மிரட்டியவர்கள் அவன் சொல்லச் சொல்ல அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளால் திகைத்துப் போய் நின்றிருந்தனர். 

விஜய்க்குத் திடுமென ஏதோ தோன்ற,

“ப்ரியம்வதாகிட்ட நீ சொன்னதை எல்லாம் சொல்லி விசாரிச்சா உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும் தெரியும்ல”

அந்த கோபால் கொஞ்சமும் அசரவில்லை…

“தாராளமாக் கேளுங்க சார்…அப்படியாவது அவ…அவங்க மனசு மாறி எங்கிட்ட வந்துட்டாங்கன்னா என்னைப் போல் சந்தோஷப்படுறவங்க இந்த உலகத்திலேயே இல்ல.”

அவன் பதிலைக் கேட்டவனுக்கு அந்த அறையில் மூச்சு முட்டுவதாகத் தோன்றவே அறையை விட்டு வெளியேறினான். 

மேலே வந்தவன் தன் அறையின் பால்கனிக்குள் நுழைந்து கடல் காற்று முகத்தில் மோத ஆழ மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தான். 

இல்லை இதெல்லாம் நிஜமில்லை. ஏதோ ஒரு கெட்ட கனவுக்குள் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்தக் கனவு விரைவில் முடிந்து விடும் என்றெல்லாம் மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டிருந்தவனுக்கு அது கனவல்ல  கண் முன் நடப்பது என்பதை உணர்த்துமாறு வருண் வந்து நின்றான். 

Advertisement