Advertisement

வீட்டுக்கு வந்தவர் வழக்கம் போலத் தொலைக்காட்சியில் பாடல்கள் போடாமல் அணைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டு ஒரே நாளில் இப்படி எல்லாம் மாற முடியுமா என நினைத்துக் கொண்டே வந்து நாற்காலியில் அமர்ந்தார்.

ஏங்க சீக்கிரம் வந்துட்டீங்க?” 

பிள்ளைகள் தூங்கியாச்சா?” 

ம்ம்ம்இன்னிக்கு சீக்கிரமே படுத்துட்டாங்க” 

ஆனால் தீக்ஷிதாவைத் தவிர மதுவும் ப்ரியாவும் விழித்துக் கொண்டு படுத்திருந்தது அவர்களுக்குத் தெரியாது.

 “பக்கத்து தெரு ஸ்ரீனிவாசன் இல்ல…”

 “யாரு அவர் பையனைக் கூட ப்ரியா ஒரு நாள் வம்பு பண்ணினான்னு அடிச்சுட்டு வந்தாளேஅவரா?”

ஆமாம் அவரேதான்என்று விட்டு அவர் சொன்ன விஷயங்களை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார்.

அதுக்காக நாக்கில் நரம்பில்லாம என்ன வேணும்னாலும் பேசுவங்களா? நாளைக்கு ரோட்டில பார்த்து நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேக்குறேன்.” 

வேண்டாம் மீனா! சாக்கடைகள்கிட்ட நாமதான் ஒதுங்கிப் போகணும் இல்லைன்னா நம்ம மேலதான் அசிங்கம் தெறிக்கும். நாளைக்கு அந்தப் பெரியவர் வரட்டும். என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்பையனுக்குப் பெரிய வசதியான இடத்துல முடிக்கணும்னு நினைச்சுருப்பாங்கஆனா நம்ம நிலைமைக்கு…” எனப் பெருமூச்சு விட்டவர்,

அது மட்டும் இல்லாம இத்தனை வசதி இருக்கிறப்போ அந்தப் பையன் ஒழுக்கமானவனா இருப்பானாஇப்போ ஏதோ அவசரத்துல யோசிக்காமக் கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் ப்ரியா கண் கலங்கினான்னா நம்மால அதைத் தாங்க முடியுமா?” என்று சொல்லி விட்டு சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவர் பின்ஈஸ்வராஎன்று விட்டுப் படுத்தார்

அந்த ஸ்ரீனிவாசன் மகன் வெறுமனே சீழ்க்கை மட்டும் அடிக்கவில்லைஅவர்கள் கட்டிடத்தில் குடியிருந்த இன்னொரு பையனைப் பார்க்க வந்தவன் எதிரில் மிதிவண்டியில் நின்றவாறு பேசிக் கொண்டிருந்த கொஞ்சம் புஷ்டியான பத்து வயது பெண் குழந்தையின் உடையைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் கமென்ட் அடித்ததைக் கேட்டுக் கொண்டே படிகளில் இறங்கிய ப்ரியம்வதா இப்படி ஆட்களால்தான் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர் என்ற ஆத்திரத்தில் சென்று ஓங்கி அவன் கன்னத்தில் அடித்து விட்டாள்

பின்னாலேயே வந்த மது அவளை சமாதானம் செய்து இழுத்துச் சென்று  விட்டாள்.தந்தையிடம் இதை வார்த்தைகளால் விளக்கச் சங்கடப்பட்டுக் கொண்டு வெறுமனே சீழ்க்கை அடித்தான் எனச் சொல்லி இருந்தனர்.

தான் செய்த நல்ல விஷயம் தனக்கெதிராகத் திரும்பியதை நினைத்துப் ப்ரியாவின் கண்களில் வழிந்த கண்ணீரை மது துடைத்து விட்டாள்.

மறுநாள் பிரியா வங்கிக்கு அழைத்து விடுப்பு சொன்னாள்

கரும்பச்சை நிறப் ப்ரின்டட் சில்க் புடவையைத் தழையத் தழையக் கட்டியவள் தலை நிறைய மல்லிகையையும் வைத்துக் கொண்டாள்

அவளுக்குத் தவிப்பாகவே இருந்தது. ஒரு வேளை அவனது பெரியப்பா ரொம்பவும் அந்தஸ்து பார்ப்பவராக இருந்து தன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டால்

மீனலோசினி இனிப்புக்குக் கேசரியும் காரத்துக்குத் தூள் பஜ்ஜியும் செய்து வைத்தார்.

சரியாகப் பத்து மணிக்கு அவர்கள் வீட்டின் முன் அந்த அம்பாசிடர் கார் நின்றது

விஜய் குறிப்பாக அம்பாசிடர் காரில் ஏன் போகச் சொன்னான் என்பதை அந்தக் குடியிருப்பைப் பார்த்ததும் புரிந்து கொண்டார் கண்ணபிரான்

சுற்றுப்புறம் கண்ணியமாக தெரிந்த போதும் வீடு மிக சிறியது.இந்த வீட்டில் எப்படி ஐந்து பேர், அதுவும் பெரியவர்கள் இருக்கிறார்கள் என்று அவருக்கே ஆச்சர்யம்தான்.

அவர் கிராமத்து வீட்டில் இருந்திருந்தாலும் அது புழக்கத்துக்கு வாராசாரியாக நன்றாகப் பெரியதாகவே இருக்கும்.

ஆனால் இடம் சிறியதா பெரியதா என்பது இல்லாமல் மனம் விசாலமாக இருக்க வேண்டும் என நினைப்பவராதலால் அதைத் தன் செய்கையில் காண்பித்தார்

அவரை வரவேற்று அமர வைத்த ரவிச்சந்திரன் எப்படிப் பேச்சைத் துவங்குவது என்று  தயங்கசம்பந்திஎனப் பேச்சை ஆரம்பித்தார் கண்ணபிரான்

என்னடா இவன் விஷயம் எதுவும் முடிவாகுறதுக்குள்ள சம்பந்தின்னு கூப்பிடுறான்னு பார்க்குறீங்களா? எங்க விஜய்க்கு உங்க பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்குஉங்களுக்கும் சம்மதம் இல்லாம என்னை வரச் சொல்லி இருக்க மாட்டீங்கபின்னே உறவு முறை சொல்லிக் கூப்பிடுறதுக்கு ஏன் தயங்கணும்?” எனக் கலகலப்பாகவே பேச்சை ஆரம்பித்தார்

விஜய் உங்க வீட்டை பத்தி எல்லாம் சொன்னான். எங்க சொத்து பத்து எல்லாம் இந்த ஏழு எட்டு வருஷத்துல விஜய் சம்பாதிச்சதுதான். அதுக்கு முன்னால நாங்களும் மத்திய தர வர்க்கம்தான். விஜய்க்கும் எனக்கும் இந்த படாடோபம்லாம் பிடிக்காது  பார்க்குறவங்களுக்காகப் போடுகிற வேஷம்தானே தவிர நாங்க ஸ்டேட்டஸ் பார்க்கிற ஆட்கள் கிடையாது

விஜய்யோட அப்பா அம்மா அதாவது என் தம்பியும் அவன் மனைவியும் விஜய் பன்னிரண்டாவது படிக்கும் போது ஒரு விபத்தில் இறந்துட்டாங்க. விஜய்யோட தாய் வழிச் சொந்தத்தில் நிறைய பேர் இருந்தாலும் எனக்கு அவன், அவனுக்கு நான்கிற மாதிரி இத்தனை வருஷங்களா வாழ்ந்துட்டோம். எங்க குடும்பத்துக்கு உங்க பெண் வந்து விளக்கேத்தப் போறான்னு நினைக்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குது.” 

விஜய் பத்தி நான் உங்ககிட்டச் சொல்லிடறேன். ரொம்ப நல்ல பையன் ஆனா உறவுகள் இல்லாம தனிமையிலே வளர்ந்தனால கொஞ்சம் இறுக்கமா இருப்பான். ப்ரியாவுக்கும் அவனைப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். நீங்க நம்பி உங்க பெண்ணைத் தரலாம். நான் என் பொண்ணு மாதிரிப் பார்த்துகிறேன்இல்ல இல்ல ப்ரியாதான் என்னை அவங்க அப்பா மாதிரி பார்த்துக்கணும்என்ன நான் சொல்றது?” என்று முடித்தார்.

அவரது கலகலப்பான பேச்சில் ரவிச்சந்திரன் மீனலோசினியின் மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்திருந்தது

தொண்டையைக் கனைத்துக் கொண்ட ரவிச்சந்திரன்

எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லணும் சம்பந்தி

சொல்லுங்க சம்பந்தி

நாங்க நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவங்கஇப்போ ப்ரியாவைப் பெரிய இடத்துல கொடுக்கிறனால எங்க வாழ்க்கையில் மாற்றங்கள் வர்றதை நான் விரும்பல” 

அவரைக் கூர்ந்து பார்த்த கண்ணபிரான், “சொல்ல வர்றதை நேரடியாச் சொல்லுங்க சம்பந்தி. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்

மீண்டும் தொண்டையைச் செருமிக் கொண்டவர்

அதாவது இந்த கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க வாழ்க்கை முறை இப்படியேதான் இருக்கும்னு சொல்றேன் சம்பந்திஅது உங்களுக்கு கௌரவக் குறைச்சலாக் கூட இருக்கலாம்அதுக்காக எங்களை நாங்க மாத்திக்க முடியாதுமுன்னேறவே மாட்டோம்னு சொல்லலஆனா உங்க தயவு இல்லாம அது நடக்கணும்னு சொல்றேன்அதை நீங்க எங்க சுயமரியாதைன்னு பார்க்கணுமே ஒழிய தப்பா எடுத்துக்க கூடாதுப்ரியா உங்க வீட்டுக்கு வந்து வாழப் போறாஅவளுக்கு நீங்க என்ன வேணா செய்ங்கஆனா எங்களுக்குஅவ சந்தோஷமா இருந்தா மட்டும் போதும்” 

அவர் முடிக்கவும் கண்ணபிரானின் முகம் மலர்ந்தது.

இவ்வளவுதானே சம்பந்திஎல்லாம் உங்க விருப்பம்தான். இந்த மாதிரி  சம்பந்தம் கிடைக்க நாங்கதான் குடுத்து வச்சுருக்கணும்எனவும் ரவிச்சந்திரன்,

ப்ரியா! காப்பி பலகாரம் கொண்டு வாம்மாஎன்றார்

ப்ரியம்வதா ஒரு தட்டில் பலகாரமும் காப்பியும் எடுத்து வந்து அங்கிருந்த டீபாயில் வைத்து விட்டு அவர் முன் விழுந்து வணங்கி எழுந்தாள்

யாரும் சொல்லாமலே அவள் அவ்விதம் செய்தது கண்ணபிரானின் மனம் கவர்ந்து விட்டது

மகராசியா சகல சௌபாக்கியத்துடன் நீண்ட நாள் வாழணும்மாஎன்று ஆசிர்வாதம் செய்தார்.

பின் ரவிச்சந்திரனிடம்சம்பந்தி ஒரு வார்த்தை சம்மதம் சொல்லிப் பழத்தட்டை எடுத்துகிட்டீங்கன்னா நான் தைரியமா நம்ம வீடுன்னு கை நனைப்பேன்.” 

பெரியவங்க நீங்க இவ்வளவு தூரம் சொன்னதுக்கபுறம் நான் என்னங்க சொல்லப் போறேன்எங்களுக்குப் பூரண சம்மதம். மீனா! வந்து தட்டை வாங்கிக்கோ”.

கண்ணபிரான் தட்டை நீட்ட தம்பதி சமேதராகப் பெற்று கொண்டனர்

காப்பி பலகாரத்துக்கு பிறகு, “நான் கல்யாணம் பண்ணிக்காதனால வீட்டில் பெண்கள் யாரும் இல்ல. விஜய்யோட சித்தி, அத்தைங்க எல்லாம் வேற வேற ஊர்ங்கிறனால அவங்களை வரவழைக்க நேரம் இல்ல. சரிங்க சம்மந்தி! கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்?”

நீங்களே சொல்லுங்க சம்பந்தி” 

ப்ரியாவோட ஜாதகம் இருந்தாக் குடுங்கவிஜய் ஜாதகம் கொண்டு வந்துருக்கேன்நானே நல்லாப் பொருத்தம் பார்த்துருவேன்.” 

மீனலோசினியின் முகத்திலிருந்தே அவரது கலவரத்தைப் படித்தவர்பொருத்தம் பார்த்துட்டா ஏதாவது பிரச்சனை இருந்தாலும் பரிகாரம் பண்ணிடலாம்னுதான்மாபயப்படாதீங்க! விஜய்கும் ப்ரியாவுக்கும் தான்னு அந்த ஆண்டவன் முடிச்சுப் போட்டுட்டான்நாம யாரு அதை மாத்துறதுக்கு?” என்று அவள் வயிற்றில் பால் வார்த்தார்

இருவர் ஜாதகங்களையும் அரை மணி நேரம் அக்கு வேறு ஆணி வேறாக அலசியவர்  முடிவாகசம்பந்தி நாம குடுத்து வச்சவங்கஒன்பது பொருத்தங்கள் அம்சமாப் பொருந்தி இருக்குஎனவும் அனைவரின் முகங்களும் மலர்ந்தன

இந்தாங்க விஜய்யோட ஜாதகம்உங்களுக்குத் தெரிஞ்ச ஜோசியர் யாராவது இருந்தாலும் காட்டி விசாரிச்சுக்கோங்க. அப்புறம் நிச்சயத்தைக் கொஞ்சம் சிம்பிளா நடத்திடலாம். அன்னிக்கே கல்யாணத்துக்குத் தேதி குறிச்சுடலாம்என்றவர்அப்போ நான் கிளம்புறேன்என எழுந்தார்

நீங்க தேதி பார்த்துட்டு போன் பண்ணுங்கஎன வீட்டு எண்ணைக் கொடுத்தார்.

அனைவரையும் பார்த்து அவர் கை குவித்து விட்டுக் கிளம்ப அவர்கள் மனம் அவரது பேச்சால் நிறைந்திருந்ததுஎங்கே மகளை மற்றவர் பேச்சுக்கு பயந்து தவறான இடத்தில் கொடுக்கிறோமோ என்ற சஞ்சலமும் மறைந்தது.

அன்று  இரவு ப்ரியம்வதாவின் எண்ணிற்கு அழைத்தான் விஜய்.

ம்ம்ம்சொல்லுங்க” 

பேசலாமா?” 

முந்தைய நாள் பேசத் தயங்கியதால் கேட்கிறான் எனப் புரிந்தது 

ம்ம் அப்பா வாக்கிங் போய் இருக்கார்அம்மா கிச்சன்லதங்கைகள் ஹாலில் டிவி பாக்குறாங்கஎன்றாள் தனியாக இருப்பதைச் சொல்லும் பொருட்டு.

பெரியப்பா போயிட்டு வந்த விஷயம் சொன்னாங்க. சந்தோஷமா?” 

ம்ம்ம்

அப்புறம்

அப்புறம் ஒன்னும் இல்ல” 

சரி நான் வைக்கிறேன்” 

மறுபடி எப்போ கூப்பிடுவீங்க?”

எதுக்கு இப்போ சொன்ன மாதிரி ஒன்னும் இல்லைன்னு சொல்றதுக்கா…”

அதெல்லாம் சொல்ல மாட்டேன்.ஏதாவது பேசுவேன்…”

ம்ம்ம்பார்ப்போம்…” என்றவன்எனக்கு எப்போ நேரம் கிடைக்கும்னு தெரியாது வது. நாளை ஒரு முக்கியமான மீட்டிங்குக்காக டெல்லி போக வேண்டி இருக்குது. இடையில் நேரம் கிடைத்தால் கூப்பிடுறேன். நீ கூப்பிட்டாலும் எடுக்க முடியுமான்னு தெரியாது அதுனால நானே கூப்பிடுறேன் சரியா?” எனவும் 

ஓகே வச்சுடறேன்என வைத்தாள்

கல்யாணக் கனவுகளில் உறங்கிய இருவருக்குமே தெரியாது இனி வரும் நாட்களில் அவன் அழைக்கப் போவதேயில்லை என்பது.

நாளெல்லாம் திருநாளாகும் நடையெல்லாம் நாட்டியமாகும்
தென்றலென்னும் தேரின் மேலே சென்றிடுவோம் ஆசையாலே
காதலென்னும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி

Advertisement