Advertisement

அத்தியாயம் 20

அந்த சந்தோஷத்திலேயே வீட்டுக்கு வந்தவள் முகம் எல்லாம் அழுது கலங்கி சிவந்து போன முகத்துடன் இருந்த அன்னையை எதிர்கொண்டாள். 

தன் மகிழ்ச்சியில் பெற்றோரின் மனநிலையை மறந்து போன மடத்தனத்தை நினைத்து வருந்தியவாறு அன்னையின் அருகில் வந்து அமர்ந்தாள்.

”அம்மா என்னை மன்னிச்சுருங்கம்மா. உங்ககிட்ட சொல்லாம நான் டீவி யில போய்ப் பேசினது தப்புத்தான்”

 அதே நேரம் வாசலில் அழைப்பு மணி அடிக்க மது ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். 

ரவிச்சந்திரன்தான் வந்திருந்தார். உள்ளே நுழைந்தவர் பார்வையில் முதலில் பட்டது மனைவிதான். அழுது கொண்டிருந்தவளைப் பார்த்து விவரம் புரியவும் எதுவும் பேசாமல்  நாற்காலியில் சென்று அமர்ந்தார். மது ஒரு குவளையில் நீர் கொண்டு வந்து கொடுத்தாள். குடித்து முடித்தவர் ப்ரியம்வதாவை நிமிர்ந்து பார்த்தார். 

“என்னடாம்மா இதெல்லாம்?”

 ரவிச்சந்திரன் எப்போதுமே அப்படித்தான்… மகள்களை அதட்டி ஒரு வார்த்தை பேச மாட்டார்.மீனலோசினி ப்ரியம்வதாவிடம் எப்போதும் கத்திக் கொண்டே இருப்பார். ஆனால் ரவிச்சந்திரன் ஒரு கண்டனப் பார்வை கூடப் பார்க்க மாட்டார். அவருக்கு மகளின் தைரியத்தையும் நல்ல குணத்தையும் நினைத்து அத்தனை பெருமை. 

அதனால் மீனலோசினி வந்து அவரிடம் புலம்பினால் கூட “என்னடா இது” என்ற கேள்வி மட்டுமே அவர் வாயிலிருந்து பிறக்கும். அதுவும் இல்லையென்றால் மனைவி  கோபித்து கொள்வாள் என்றுதான்.

பின் “போ போ இனி அம்மா சொல்ற மாதிரி வச்சுக்காதே” என ஒப்புக்காக ஒரு சமாதானம்…அவ்வளவுதான். இப்போதும் அதே கேள்வியைத்தான் கேட்டார். ஆனால் அவர் முகத்தில் தெரிந்த வருத்தமும் சோர்வும்  ப்ரியம்வதாவை ஆட்டம் கொள்ளச் செய்தன.

 அந்த அதிர்வுடனே தந்தையின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவர் மடியில் தலை சாய்த்தாள்.அவள் தலையை ஆதுரத்துடன் வருடிக் கொடுத்தவர்,

 “எப்பவும் என் மகள் மேல தப்பு இருக்காதுன்னு நினைச்சுதான் உங்க அம்மாவை நான் சமாதானப்படுத்துவேன்… ஆனா இப்போ…” என நிறுத்தவும் கண்களின் நீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தவள் “தப்புதான் அப்பா… அதுவும் என் மேலதான்… டிவில…”

“நான் பஸ்ஸை விட்டு இறங்கினப்போ உங்க சித்தப்பா ஃபோன் பண்ணினான்மா… அவன் சொன்னதை வச்சு நான் பக்கத்துல ஒரு டீவி ஷோரூம்ல நின்னு பார்த்தேன்” 

“ஆனாலும் நானும் எல்லாத்தையும் விளக்கமா சொல்லிடறேன்பா” என ஆரம்பித்து முதல் நாள் நடந்த அனைத்து விவரங்களையும் கூறி முடித்தாள். 

“விஜய் என்னை வர வேணாம்னுதான் சொன்னார். நான்தான்…”

“நாமெல்லாம் மிடில் கிளாஸ் ப்ரியா… மீடியா வெளிச்சம் நம்ம மேல விழுந்தா நம்மைச் சுத்தி இருக்கிற மக்கள் நம்மளை வினோத ஜந்துவைப் பார்க்கிற மாதிரிப் பார்ப்பாங்க.மீடியாக்காரங்க நாளைக்கே வேற ஒருத்தர் பின்னால மைக்கைத் தூக்கிட்டுப் போய்ருவாங்க. ஆனா நம்மைச் சுத்தி இருக்கிற ஜனங்கள் இதையே பண்ணிப் பண்ணிப் பேசுவாங்க… அதுவும் நல்ல விஷயமா இருந்தாப் பரவாயில்ல… அப்படி இல்லாம இந்த மாதிரி ஒரு விஷயத்துக்கு மீடியா முன்னால போறதுக்கு முன்னாடி அப்பா அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலையா ப்ரியா உனக்கு?ஃபோன் பண்ணியாவது பேசி இருக்கலாம்தானே”

 அவர் சரியான இடத்தில் அடித்து விடவே தலை குனிந்தாள்.

“தப்புதான்பா… ஆனா அந்த நேரம் என்னால… என்னோட அவசர புத்தியால் ஒரு நல்ல மனுஷனை நிக்க வச்சுக் கேள்வி கேக்குறாங்க… அதைப் பார்த்துட்டு சும்மா உட்கார்ந்து இருக்க முடியல… ஆனாலும் நான் பண்ணினது தப்புதான்… விஜய்யும் அதையேதான் சொன்னாரு… நீ ஏன் வந்தேன்னு திட்டக் கூட செய்தாரு”

 மகள் உரிமையாக அந்தப் பெயரைச் சொல்வதைப் பார்த்து அவருக்குள் வேறு ஒரு யோசனை ஓடியது. 

“அம்மா ப்ரியா! இங்கே என்னைப் பாரு” அவள் நிமிர்ந்து பார்க்க “உனக்கு அந்தப் பையனைப் பிடிச்சிருக்கா?” 

முகத்தில் லேசான சிவப்பு எட்டிப் பார்க்கத் தலை குனிந்தவள் “எனக்கு மட்டும் இல்லப்பா… அவருக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. உங்ககிட்ட அனுமதி கேட்டுச் சொல்லச் சொன்னாரு.அவங்க பெரியப்பாவைப் பெண் கேட்டு நேரில் அனுப்புறாராம்.”

ஒரு கணம் கண்களை மூடித் திறந்த ரவிச்சந்திரன் “இதெல்லாம் சரியா வருமா ப்ரியா?”

“எனக்கும் தெரியலப்பா… ஆனா எனக்கு விஜய்யைப் பிடிச்சிருக்கு. அவர் நல்லவர்… நிச்சயமா என்னைக் கண் கலங்க விட மாட்டாருப்பா”

“வாயிலயே போடுவேன்… மாப்பிள்ளையைப் பேர் சொல்லியா கூப்பிடுறே?”

இத்தனை நேரம் அமைதியாக இருந்த மீனலோசினி பேசவும், அதுவும் அவள் பேசியதைக் கேட்டு அனைவருக்குமே ஆச்சர்யம்.

தொலைக்காட்சியில் ஊரறிய யாரென்று தெரியாத ஒரு ஆணுக்கு சாதகமாகப் போய்ப் பேசி விட்டு வந்திருக்கிறாளே!  இனிமேல் இவளையும் அவனையும் இணைத்து சமூகம் பேசி விடாதா… ஏன்… தன் தம்பி மனைவி இன்று என்ன பேசி விட்டாள்!

அவருக்குத் தம்பி வீட்டில் நடந்தது நினைவு வந்தது.

எப்போதும் போல் பேசிக் கொண்டிருந்தவர்கள், தீக்ஷிதாவும் தம்பி மகன் நகுலனும் கம்ப்யூட்டரில் கேம் விளையாடப் போக தொலைக்காட்சியைப் போட்டுக் கொண்டு அமர்ந்தனர்…

ஏதாவது தொடர்தானே பார்ப்பார்கள் என நினைத்த தீக்ஷிதாவும் பெரிதாக அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

குளிர்சாதன அறையில் கதவை மூடி விட்டுக் கணிணி விளையாட்டில் மூழ்கியவர்கள் அதன் பின் வெளியே வரவேயில்லை.

சேனல் மாற்றும் போது “அண்ணி இங்கே பாருங்க… நம்ம ப்ரியா மாதிரி இருக்கே”

அந்த நேரம்தான் ப்ரியம்வதா கையில் ஒலிவாங்கியுடன் பேச முடியாமல் நடுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள். விஜய் நீரை எடுத்துக் கொடுத்தது… அதைக் குடித்து விட்டு நன்றியுடன் அவள் அவனைப் பார்த்தது… தொடர்ந்து அவனுக்கு சாதகமாகப் பேசியது… என எல்லாவற்றையும் பார்த்த்து முடித்த பின் “அண்ணி! எனக்கென்னவோ அந்தப் பையனுக்கும் ப்ரியாவுக்கும் ஏதாவது கசமுசா இருக்குமோன்னு தோணுது. எதுக்கும் கொஞ்சம் பொறுமையா விசாரிங்க” எனவும் ஆத்திரத்துடன் தீக்ஷிதாவைக் கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

தீக்ஷிதாவிடமோ மதுமிதாவிடமோ ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்களைப் பேசவும் விடவில்லை. 

இன்று தம்பி மனைவி… நாளை யாரெல்லாம் என்னவெல்லாம் பேசுவார்களோ என்ற பயம் அந்தத் தாயின் வயிற்றைப் பிசைந்து கொண்டிருந்த போதுதான் அதே பையனுடன் திருமணம் எனக் கூறி ப்ரியம்வதா அவர் வயிற்றில் பாலை வார்த்தாள்.

மாப்பிள்ளை என அன்னையின் வாயால் கேட்கவும் ப்ரியம்வதா ஓடிச் சென்று அவரைக் கட்டிக் கொண்டாள் “அப்பிடின்னா உங்களுக்குச் சம்மதமாம்மா?”

“வேற என்ன செய்யச் சொல்றே ப்ரியாம்மா? இந்தப் பேட்டியைப் பார்த்த உடன் உங்க அத்தை எப்பிடிப் பேசினா தெரியுமா? இப்பிடித்தானே நாளைக்கு எல்லாரும்… அப்புறம் உனக்கு வேற வரன் வருமா?” எனக் கேள்வியை மகளிடம் கேட்டு விட்டுக் கணவரின் முகம் பார்த்தார்.

ரவிச்சந்திரன் ஒரு முடிவு செய்து விட்டவராக எழுந்தார்.

”இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வர வேண்டாம் மீனு! அவங்க பெரியப்பாகிட்டப் பேசிட்டு முடிவு பண்ணலாம்… மத்தவங்க பேசுறாங்கங்கிறதுக்காக குடும்பத்தைப் பத்தி சரியாத் தெரியாம பெண் குடுக்க முடியாது”

“அவரை எப்போ வரச் சொல்ல அப்பா?”

 நாட்காட்டியை எடுத்துப் பார்த்தவர் “நாளைக்கே நாள் நல்லாதான் இருக்கு. பத்து மணில இருந்து பதினொன்றரைக்குள்ளே வரச் சொல்லு ப்ரியா”

தந்தை சொல்லவும் விஜய்யை அலைபேசியில் அழைக்க நினைத்தவள் ஏனோ வெட்கம் வந்து விட மதுவை அழைத்தாள்.

“மது! இதுல விஜய் நம்பர் இருக்கு…நீயே ஃபோன் செய்து அப்பா சொன்னதைச் சொல்லிடறியா…ப்ளீஸ்”

மதுமிதா அவளை வித்யாசமாகப் பார்த்து கொண்டே அலைபேசியில் எண்களை அழுத்தினாள்.

இரண்டாவது ரிங்கிலேயே எடுக்கப்பட அவன் ஆர்வம் புரிந்து விட நமட்டுச் சிரிப்புடன் ப்ரியாவைப் பார்த்து கொண்டே பேச ஆரம்பிக்கும் முன் “என்ன சொன்னாங்க வது?” என்று அவன் பக்கமிருந்து கேள்வி பிறக்க “வதுவா!” என வாயைப் பிளந்தவள் குறும்பாக “நான் உங்க வது இல்ல… அவ தங்கை மது” என்றாள்.

“ஓ! மதுவா… சாரி நான் ப்ரியான்னு நினைச்சேன்”

“ம்ம்ம்… நினைப்பீங்க நினைப்பீங்க இனிமே அவளைப் பத்தி மட்டும்தானே நினைப்பீங்க”

அதற்குள் ப்ரியம்வதா “ஏய்! விஷயத்தைச் சொல்லுன்னு சொன்னா அதைச் சொல்லாமக் கதை பேசிகிட்டு இருக்கே” என அவள் தோளில் ஒன்று போட்டாள்.

“இந்த பாருக்கா… இனிமே இந்த அடிக்கிற வேலை எல்லாம் அத்தான்கிட்ட வச்சுக்கோ… எங்கிட்ட வேண்டாம்.” என்றாள்.

அக்கா தங்கையின் பேச்சில் விஷயத்தை ஊகித்தவன்  “அப்புறம் சண்டை போடலாம்…முதல்ல பெரியப்பாவை எப்போ வரச் சொல்றதுன்னு சொல்லுங்க.”

“அதைத்தான் சொல்லச்  சொன்னா திடீர்னு என் அக்காவுக்கு வெட்கம் வந்துடுச்சு… நாளைக்கே நாள் நல்லா இருக்காம், காலை பத்து, பதினொன்றரைக்குள்ளே வரச் சொன்னாங்க அப்பா” என்று அவனிடம் கூறியவள் தமக்கையின் கையில் அலைபேசியைத் திணித்து விட்டு “இந்தா அக்கா! இனிமே உன் பாடு அத்தான் பாடு” என்று ஓடி விட்டாள்.

அவர்களது வீட்டின் அளவிற்கு ஒரு அறையில் இருந்து பேசினாலே எல்லா பக்கமும் கேட்கும் .அதனாலேயே விஷயத்தை மட்டும் தங்கையின் மூலம் தெரிவிக்க நினைத்தவளுக்குத் தங்கை செய்த காரியத்துக்கு அவளைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் போல் இருந்தது.

காத்திருக்கிறான் என்பது புரிய கைபேசியைக் காதில் வைத்து “ஹலோ!” என்றாள்.

“நாளைக்கு பத்து மணிக்குப் பெரியப்பாவை வந்துடச் சொல்றேன்… இப்போ வச்சுடட்டுமா?” என அவளைப் புரிந்து அவன் கேட்க அவள் அது புரியாமல் அவனுக்குக் கோபம் வந்து விட்டதோ என பயந்து போனாள்.

“நீங்க… நீங்க தப்பா ஒண்ணும் நினைச்சுக்கலையே!”

அந்தப் பக்கம் சிரிக்கும் சத்தம் கேட்க அவளுக்கு நிம்மதியானது.

“இல்ல… என் வதுவை நான் தப்பா நினைக்க மாட்டேன்” என்றான் இன்னும் சில நாட்களில் இந்த வார்த்தைகளைத் தான் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போவது தெரியாமல்…

அன்று இரவு உணவு முடிந்ததும் ரவிச்சந்திரன் வழமையான நடைக்குக் கிளம்பினார்.

“நண்பு பெற உண்ட பின்பு குறு நடையும் கொள்வோம்” 

அதாவது  உணவு முடித்து மெல்ல நடந்து கொடுப்பது நல்ல சீரணத்துக்கு வழி வகுக்கும் என்ற சித்தர்கள் வாக்கைப் பின்பற்றுபவர் அவர். 

அதனால் அதிக வேகமாக இல்லாமல் இலகுவாக அருகில் இருக்கும் பூங்கா வரை ஒரு நடை சென்று விட்டு வருவார்.

அன்றும் அதே போல் கிளம்பிச் சென்றவருக்கு மனம் தளர்ந்திருந்த காரணமோ என்னவோ நடக்கவே மனம் வரவில்லை ‘சரி சிறிது நேரம் அமர்ந்து விட்டுப் போகலாம் ‘என நினைத்து அங்கிருந்த  கல் இருக்கையில் அமர்ந்தார்.

 அந்தப் புறம் சாலையிலும் இதே போன்ற கல் இருக்கை போடப்பட்டு இரண்டுக்கும் இடையில் தொட்டி போல் அமைக்கப்பட்டு அதில் செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அதனால் அந்தப் புறம் உள்ளவர்களை பார்க்க முடியாது ஆனால் பேசுவது கேட்கும். அவர் அமர்ந்த நேரம் அடுத்த பக்கத்தில் இருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். 

“இப்போ என்னதாங்காணும் சொல்றீர்?”

“அந்தப் பொண்ணுக்கும் அந்தப் பையனுக்கும் கண்டிப்பாத் தொடர்பு இருந்திருக்கணும்னு சொல்றேங்காணும் வேறென்ன?” 

“அதெப்படி அத்தனை நிச்சயமா சொல்றீர்?” 

“நிச்சயமா சொல்றதுக்கு நான் என்ன நேர்ல பார்த்தேனா? எல்லாம் ஒரு ஊகம்தான்” 

“என்னதான் சொல்லும் உம் ஊகத்தை “

“அதாவது அந்த ப்ரியம்வதா அந்தப் பையனோட ஏற்கனவே பழகி இருந்திருக்கா… ரெண்டு பேருக்குள்ள பழக்கம் முத்தி வயத்துல எதுவும் வாங்கிண்டாளோ என்னவோ… இப்போ பிள்ளையாண்டான் கையைக் கழுவிட்டன்… அது சம்பந்தமா ரெண்டு பேரும்  பார்த்துப் பேசும் போது இவ வழக்கம் போலக் கையை நீட்டிட்டள்… அதை எவனோ போட்டோ எடுத்துப் போட்டுட்டன்… விவகாரம் பெருசாயிடுத்து… இதுதான் சுவாமி என் ஊகம்.”

இத்தனை நேரம் பேசியதில் இருந்து பேசியவர் ஸ்ரீநிவாசன் என்பதும் அவரது மகனை சில மாதங்கள் முன்பு தெருவில் பார்த்து சீழ்க்கை அடித்தான் என்பதற்காக  ப்ரியம்வதா அடித்து விட்டு வந்ததும் அவருக்கு நினைவில் வந்தன.

நேரம் பார்த்துப் பழி தீர்த்துக் கொள்கிறார் போல மனிதர் என நினைத்தவர் மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

Advertisement