Advertisement

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ப்ரியம்வதாவுக்கு சட்டென்று விழிப்புத் தட்டியது.

 

விழித்துப் பார்த்தவள் எதிரில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க நேரம் ஆறைக் காட்டியது…எழுந்து அமர்ந்து ‘விநாயகா சரணம்’ என மூன்று முறை சொல்லி விட்டு எழ முயற்சிக்கும் போதுதான் இருக்கும் இடமும் சூழலும் நினைவுக்கு வந்து சென்ற நாள் நினைவுகள் மனதில் குழும முகத்தில் வெட்கச் சிரிப்பு மலரக் கணவனைத் தேடினாள்…

 

ஆனால் அந்தப் பெரிய அறையில் அவள் தனித்திருப்பது புரியவும் எழுந்து குளியலறைக்குள் சென்று பல் தேய்த்து முகம் கழுவி வந்தாள்…ஓரத்தில் அவள் துணிகள் இருக்கும் பை வைக்கப்பட்டிருப்பது கண்டு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.

 

குளியலறையிலிருந்து வெளியே வரவும்,  கட்டிலின் அருகே கிடந்த  நீளிருக்கையில் கணவன் அமர்ந்திருப்பதைக் கண்டவள் முகம் மீண்டும் நாணச் சிவப்பைப் பூசிக் கொண்டது.

 

ஓரக்கண்ணால்… பாராமல் கணவனைப் பார்த்தாள்…கருப்பு நிறத்தில் வீட்டில் இலகுவாக அணியக் கூடிய டீஷர்ட் மற்றும் கால்சராயில் இருந்தவன் ஒரு காலின் மேல் இன்னொரு கால் போட்டு அமர்ந்திருந்த கம்பீரம் அவளை மயக்கியது.

 

இவ்வளவு மிடுக்காக அமர்ந்திருப்பவனா இரவு அவ்வளவு கொஞ்சிக் குழைந்தான்…வினாடி நேரம் கூட வீணாக்காமல் அவனது அணைப்புகளும்…முத்தங்களும்…காதருகில் ஆழ்ந்த சற்றே கரகரப்புடன் கூடிய குரலில் அவனது கொஞ்சல் மொழிகளும் நினைவில் வந்து அவளை முற்றாகத் தலை நிமிர்த்த ஒட்டாமல் செய்தன.

 

அவன் எழுந்து அவள் அருகே வருவான் என அவள் எதிர்பார்த்திருக்க திடுமென…  “இங்கே வந்து உட்கார்” என அவனது கம்பீரமான கட்டளையிடும் குரல் ஒலிக்கத் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

 

அந்தக் குரல் கண்டிப்பாகக் காதலைக் காட்டவில்லை…

 

கோபமாக இருக்கிறானா…எதற்கு…அவள் ஏதாவது தவறு செய்து விட்டாளா…குழம்பிய மனதுடன் அவன் அருகே சென்றவள் அவன் எதிரில் இருந்த இருக்கையைக் கைகாட்டவும் எதுவும் பேசாமல் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே அதில் அமர்ந்தாள்.

 

அவன் முகத்தில் இருந்து அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்லைப் போல் இறுகிக் கிடந்தது அவன் முகம்.

 

“நாம் முதன் முதலில் சந்திச்சப்போ நடந்தது ஞாபகம் இருக்குதா?”

 

‘மறக்க முடியுமா? மறக்கக் கூடிய செயலையா அவள் செய்திருந்தாள்?’ தலை தானாகக் குனிய “ம்ம்ம்” என்றாள்.

 

“நீ செய்தது தவறுன்னு உனக்குப் புரிஞ்சுதா?”

 

“புரிஞ்சதால்தான் உங்ககிட்ட மட்டும் இல்ல… ஊருக்கும் முன்னால மன்னிப்புக் கேட்டேன்.”

 

“உனக்கு அந்த தண்டனை போதாதுங்கிறது என் அபிப்ராயம்…நீ என்ன சொல்றே?”

 

அவள் புரியாமல் பார்க்கவும் “உனக்குக் காலம் பூராவும் தண்டனை கொடுக்கத்தான் உன்னைத் திருமணம் செய்துகிட்டேன்…”

 

அவள் அதிர்ச்சியில் வாய் பிளந்து ‘ஆ’ என்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“உனக்கு நான் சொல்றது ஏதாவது புரியுதா? இல்லை… புரியாத குழந்தை மாதிரி அறியாத  பாவனையோடதான் உன் முகத்தை வைச்சுக்கப்  போறியா?”

 

அவள் மெல்ல “புரியுது…ஆனால் நேத்திக்கு ராத்திரி ஏன்…” ’நேற்று இரவு ஏன் அப்படிக் கொஞ்சினாய்’ என எப்படிக் கேட்பது எனப் புரியாமல் அவள் தவிக்க “நேத்து ராத்திரி ஏன் பிரியமாக நடந்துகிட்டன்னு  கேட்கிற… அப்படித்தானே!” என அவன் எடுத்துக் கொடுக்கவும்…’ஓ அதை இப்படி நாசூக்காகக் கூடக் கேட்கலாம் போல’ என நினைத்தவள் தலையை பலமாக உருட்டினாள்.

 

ஒரு கணம் அவன் இதழ்க்கடையோரம் புன்னகையின் சாயல் தெரிந்து மறைந்தது… மறுகணம் மீண்டும் முகம் கடினமுற…”நீ எதை இழக்கிறன்னு உனக்குத் தெரியணும் இல்லையா… அதற்காகத்தான் அப்படி நடந்துகிட்டேன்”

 

அவளுக்கு  இன்னும் புரியவில்லை.

 

“கண்ணிழந்தான்… பெற்றிழந்தான் அப்பிடின்னு நீ கேள்விப்பட்டதில்லை? பெற்றால்தானே இழப்பின் வலி என்னன்னு புரியும்…”

 

அவளுக்கு இப்போது கொஞ்சம் புரிவது போல் இருந்தது. ஆனால் புரிந்ததை   ஜீரணிக்க மனம் மறுத்தது.

 

‘ஒருவன் தன் மனைவியுடன் சுகித்திருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம்…ஆனால் தன் கணவன் கூறியதைப் போல் ஒரு காரணத்தை இதுவரை யாரேனும் கூறியிருப்பார்களா என  யோசனை ஓடியது அவள் மனதிற்குள்… கூடவே ஒரு அருவருப்பும்…

 

இப்படி ஒரு காரணத்திற்காக… அதாவது அவளுக்குப் பாடம் புகட்டுவதற்காகப் படுக்கையில் அப்படி நடந்து கொண்டான் என்றால் அவன் நடித்திருக்கிறான் என்றுதானே அர்த்தம்! என்ன மனிதன் இவன்’ எனத் தோன்றிய எண்ணத்தை அவன் குரல் கலைத்தது

 

“இதோ பார்! இந்த விஷயம் எல்லாம் நம் இருவர் சம்பந்தப்பட்டதுதான். வெளியே மூச்சுக் கூட விடக் கூடாது. நீ சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. ஏன்னா வெளியே நான் காட்டும் முகம் வேறு மாதிரி இருக்கும்.”

 

சட்டென்று குறும்பு தலை தூக்க “ஏன் முகத்தில் சாயம் ஏதானும் பூசிக்கப் போறீங்களா?” கேட்டு விட்டுப் பின் உதட்டைக் கடித்துக் கொண்டாள்

 

மீண்டும் அவன் முகத்தில் புன்னகையின் சாயல்…

 

வினாடியில் மாற்றிக் கொண்டவன் “உனக்கு நான் சொல்றதில உள்ள தீவிரத்தன்மை புரியலன்னு நினைக்கிறேன்.மறுபடியும் சொல்றேன்… கேட்டுக்கோ. உனக்கும் எனக்குமான இல்லற வாழ்வுக்கு நேத்தைக்கோட ஃபுல்ஸ்டாப் வைச்சாச்சு…… இந்த ரூமை விட்டு வெளியே போனால் என்னைப் போல் பிரியமான கரிசனை உள்ள கணவனை வேற எங்கேயும் பார்க்க முடியாதுன்னு மத்தவங்க எல்லாரும்  சொல்லும்படி நடந்துக்குவேன்… ஆனால் இந்த அறைக்குள் நீயும் இந்த சோஃபாவும் எனக்கு ஒன்றுதான். புரியுதா? நீ செய்த தப்புக்கு உன் வாழ்நாள் முழுவதும் நீ இந்த தண்டனையை அனுபவித்துதான் ஆகணும்” எனக் கூறியவன் எழுந்து வெளியே சென்று விட்டான்.

 

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு இயலாமையில் கண் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்தது…சுண்டி விட்டவள் இல்லை இது அழும் நேரம் இல்லை. இவன் கூறியபடி எல்லாம் நடக்காது. சும்மா அவளை பயமுறுத்துவதற்காகச் சொல்கிறான் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவள் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

 

மாடிப்படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் வந்து கீழே இறங்குவதற்காக நின்றவள் பார்வையில் கீழே சாப்பிடும் மேஜையில் அனைவரும் அமர்ந்திருப்பது பட்டது.

 

அவளது பெற்றோர், தங்கைகள், அவனது பெரியப்பா… உடன் அவனும் அமர்ந்திருந்தான்.

 

கீழே இறங்கி வருபவளை முதலில் கவனித்து விட்ட மதுமிதா “அக்கா” என்று அழைக்கவும் சட்டென்று திரும்பிய விஜய் வேகமாக எழுந்து அவள் அருகே வந்தான்.

 

அவள் தோளில் கைபோட்டுத் தன்னுடன் சேர்த்து நடத்திக் கொண்டு சென்று தன் அருகில் இருந்த நாற்காலியை வெளியே இழுத்து அவளை அமர வைத்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் முகத்தில் திருப்தியும் நிறைவும் தோன்றியது.

 

அவன் நெருக்கம் காட்டி அழைத்து வந்ததில் கூச்சத்தில் முகம் சிவக்கத் தலை குனிந்து அமர்ந்தவள் தலை நிமிர்ந்த போது பெற்றோர் முகத்தைக் கண்டவுடன் அவன் நடந்து கொண்ட முறையின் காரணம் புரிய அவன் ‘வேறு முகம்’ நினைவுக்கு வரவும் வெகுவாகக் கலங்கிப் போனாள்.

 

அவள் அருகில் அமர்ந்து தட்டை எடுத்து வைத்து அவளுக்குப் பரிமாறினான். ’உலக நடிப்புடா சாமி’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

 

“இதெல்லாம் நீ செய்யணும் ப்ரியா” என்று அம்மா குட்டிய போதும் பதிலேதும் சொல்லவில்லை. ‘நல்ல பேர் வாங்குவதற்காக செய்பவன் செய்யட்டுமே’ என மனம் நினைத்தது.

 

கண்ணபிரான் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

 

என்ன என்பது போலப் பார்த்தவனிடம், “வெளியூர் செல்லும் திட்டம் ஏதாவது இருக்குதா தம்பி?”

 

அவர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரியாமல் அவன் பார்க்கவும் “அதுதானப்பா ஹனிமூனோ எதுவோ சொல்வார்களே…” எனவும் மதுமிதாவும் தீக்ஷிதாவும் அக்காவைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரித்தனர்.

 

அவள் கையை லேசாக ஓங்கி அடிப்பது போல சைகை செய்வதை ஓரக்கண்ணால் பார்த்தவன் சிரித்துக் கொண்டே “ஆமாம் பெரியப்பா… இன்னிக்கு ராத்திரியே கிளம்புறோம் காஷ்மீருக்கு” என்றான்.

 

ப்ரியம்வதாவுக்கே இது புதுத் தகவல் என்பதால் பக்கம் திரும்பி அவனைப் பார்த்தாள்.

 

அதற்குள் மதுமிதா, “என்ன அத்தான்! உங்கள் வசதிக்கு சுவிட்சர்லாந்துக்கோ பாரிசுக்கோ போகாமல் இந்தா இருக்கும் காஷ்மீருக்குப் போறேன்னு சொல்றீங்களே!”

 

“எனக்கும் ஆசைதான் மது. ஆனால் உன் அக்காவுக்குப் பாஸ்போர்ட், விசான்னு நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்குதே!!! அதுனால இந்தியாவுக்குள்ளன்னா எளிதாகப்  போய்ட்டு வந்துடலாம்ல… பாஸ்போர்ட் எடுத்துட்டுப் பின் நிதானமாக மத்த இடங்களுக்குப் போய் வந்தால் போகுது”

 

இப்போது ரவிசந்திரன் இடையிட்டார். ”நீங்க சொல்றது சரிதான் மாப்பிள்ளை…நாங்களும் திருமணம் முடிந்ததும் ஏதேதோ காரணம் சொல்லிக்கிட்டுத் தேனிலவுக்குப் பிறகு போகலாம்னு தள்ளிப் போட்டோம். ஆனால் சீக்கிரமே ப்ரியா இவள் வயிற்றில் வந்து விட அப்புறம் தேனிலவாவது ஒன்னாவது…அதெல்லாம் சூட்டோடு சூடாகப் போய் வந்துடணும்”

 

“அனுபவஸ்தர் சொன்னால் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் மாமா” எனப் பதவிசாக அவன் கூறவும் அனைவரும் நகைத்தனர்.

 

 ஆனால் விஜய்யின் பார்வை மனைவி மேலேயே இருந்தது. ஏன் இப்படிப் பார்க்கிறான் என யோசித்தவள் பின் அதை ஒதுக்கி விட்டுத் துணிகளை எடுத்து வைக்க அவர்கள் அறைக்குச் சென்றாள்.

 

சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தவன் மீண்டும் அவளையே பார்த்திருக்க ‘அறைக்குள் நீயும் சோஃபாவும் ஒன்று’ என அவன் கூறியது நினைவில் வரத் தோளைக் குலுக்கி விட்டுச் செல்ல முயற்சித்த போது

 

”எல்லாவற்றிலும் அவசரம்தான் உனக்கு இல்லை?”

 

“என்ன சொல்றீங்க?”

 

“கீழே மாமா சொல்லலை நீ உருவாகிட்டதால் ஹனிமூன் போகலைன்னு…அப்போதே அவசரக் குடுக்கைத்தனத்தை ஆரம்பிச்சுட்டே போல”

 

எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறான் என யோசித்தவள் ”என் அவசரக் குடுக்கைத்தனத்தால் கெட்டது எதுவும் நடந்தது இல்லை… உங்க விஷயத்தைத் தவிர… அதற்கும் மன்னிப்புக் கேட்டுட்டேன்.”என்று அவனுக்கு பதில் கொடுத்து விட்டு அவன் மேலே எதுவும் குதர்க்கமாகப் பேசும் முன் ஏற்கனவே யோசித்து வைத்திருந்த கேள்வியைக் கேட்டாள்.”மற்றவரை ஏமாற்றத்தானே இந்தத் தேனிலவுப் பயணம்…அதற்கு இவ்வளவு தூரம் போவானேன்?”

 

“தூரம் என்பது ப்ரச்சனை இல்லை…மது சொன்ன மாதிரி எல்லோரும் அதாவது மீடியா மக்கள் நாம வெளிநாட்டுக்கு போவோம்னு நினைச்சுருப்பாங்க…அதுனால நாம காஷ்மீர் போனாப் பெருசா நம்மை யாரும் கண்டுக்க மாட்டாங்க…அது மட்டும் இல்லாம மது கேட்டதை கவனிச்சியா! அவர்களின் எதிர்பார்ப்பு நாம் வெளிநாடு போகணும்…அட்லீஸ்ட் காஷ்மீருக்காவது போகலைன்னா தவறாக நினைப்பாங்க… அதாவது என்னைத் தவறாக நினைப்பாங்க.”

 

அவளுக்கு  ஆயாசமாக வந்தது…காலம் முழுவதும் இவனுடன் எப்படிக் குப்பை கொட்டப் போகிறோம் என்று நினைத்தவள் ‘காஷ்மீர் போனா மட்டும் மீடியாவுக்குத் தெரியாதாக்கும்’ என மனதுக்குள் நொடித்துக் கொண்டே வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.

 

அனைவரிடமும் கூறிய படியே அன்றிரவே காஷ்மீர் கிளம்பினார்கள்.

 

கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும் பாதி
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும் கொண்ட
பள்ளியறை பெண் மனது போர்க்களம் ஆகும்

Advertisement