Advertisement

அத்தியாயம் 2

 

அடையாறில் அந்த மிகப் பெரிய பங்களாவிற்குள் கார் நுழைந்தது.

 

கொஞ்சம் பதற்றத்துடன் இறங்கிய ப்ரியம்வதா அந்த மாளிகையின் அழகை ரசிக்கும் மனநிலையில் இல்லை.

 

விஜய்யின் பெற்றோர் உயிருடன் இல்லை என அவளுக்குத் தெரியும்…அப்படியானால் இங்கே யார் வரவேற்பார்கள் என அவள் யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

 

வாசலில் மணமக்களை நிற்க வைத்து சுசீலாவும் மணிமேகலையும் இன்னும் விஜைய்யின் அத்தைமார்களுடன் அவர்கள் உறவினர் பெண்களும் சேர்ந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர்.

 

 

பூஜையறையில் விளக்கேற்றிய கையோடு வரவேற்பறையில் நீளிருக்கையில்  இருவரும் அமர வைக்கப்படத் தயக்கத்துடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவனும் அவளைப் பார்த்தாலும் அந்தப் பார்வையில் கனிவோ, காதலோ கொஞ்சமும் தெரியவில்லை. இயந்திரம் போல் பால், பழம் சாப்பிட்டு முடித்த பின் மாடியில் ஏறும் படிகளில் காலை வைத்த விஜய்யை சுசீலாவின் குரல் தடுத்து நிறுத்தியது.

 

“அப்போ நாங்க கிளம்புறோம் விஜய்”

 

“ம்ம்ம்…சரி சித்தி…” என்றவன் வேறு ஏதும் சொல்லாமல் படிகளில் ஏறிச் சென்று விட்டான்.

 

ப்ரியம்வதாவின் அருகில் வந்த சுசீலா “நாங்க கிளம்புறோம்மா”

 

“மத்தவங்க எல்லாம்…”

 

“எல்லாம் கல்யாண மண்டபத்துல இருந்து நேரா ஏர்போர்ட் போயாச்சும்மா… நாங்களும் பொருட்களை எடுக்கத்தான் வந்தோம்.

“இருந்து போகலாமே…”

 

“இல்லம்மா! அங்கே நிறைய வேலைகள் இருக்கு…நீங்க உங்க வேலைகள் எல்லாம் முடித்த பின்னால ஒருநாள் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும்…நான் விஜய்கிட்டயும் சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணிமேகலையும் வந்து சேர்ந்தார்.

 

“ஆமாம்மா எங்க வீட்டுக்கும் வரணும்” என்றவர் கண்ணபிரானிடம் “அத்தான்! ஞாபகப்படுத்தி அனுப்பி வைங்க” எனச் சொல்ல,

 

“ம்ம்ம்… ஞாபகப்படுத்துறேன்ம்மா” என்று முடித்துக் கொண்டார் அவர். பின்னே அவரால் ஞாபகப்படுத்த மட்டுமே முடியும்…போவது விஜய்யின் கையில் அல்லவா இருக்கிறது.

 

அனைவரும் விடைபெற்றுக் கிளம்ப இப்போது இரண்டு குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டுமே மீதம் இருந்தனர்.

 

திருமணம் முடிந்த அன்று இரவு அவர்கள் இருவர் ஜாதகத்துக்கும் நேரம் சரியில்லை என்பதால் அதற்கு மறுநாளுக்கு மறுநாள் சாந்தி முகூர்த்தம் வைப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

அன்னையின் எச்சரிக்கை அவள் காதுகளில் ஒலித்தது.

 

“ப்ரியாம்மா! மாப்பிள்ளைக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதாத் தெரியல…அதனால நீ மாடிக்குத்  தனியாகப் போக வேண்டாம். கீழேயும் மதுவை எப்பவும் கூட வச்சுக்க”

 

அவள் காதோடு அன்னை சொன்ன வார்த்தைகள் அவளுக்கு சிரிப்பை உண்டாக்கின. அவன் என்னவோ அவளைத் தனியே காண வேண்டும் எனத் துடிப்பது போல அன்னை பேசியது என்ன… அவனோ அவளைத் திரும்பிக் கூடப் பாராமல் போவது என்ன…

 

ஒருவேளை இதனால்தான் கோபமாக இருக்கிறானோ…அப்படியே கோபப்பட்டாலும் அவன் பெரியப்பா மீதுதானே கோபப்பட வேண்டும்…ஜோசியர்களுடன் சேர்ந்து நாள் குறித்தது அவர்தானே!!!

 

காலையில் மூன்று மணிக்கு விழித்தது கண்ணைச் சுழற்றிக் கொண்டு வர…மற்ற நினைவுகளை ஒதுக்கி விட்டுக் கீழே அவர்கள் தங்கிக் கொள்வதாக இருந்த விருந்தினர் அறையிலேயே படுத்து விட்டாள் ப்ரியம்வதா…மதிய உணவுக்குக் கூட எழுந்திருக்கவில்லை.

 

பெண்கள் இல்லாத வீடு என்பதால் மீனலோசினி எல்லாவற்றையும் முன்னின்று பார்த்துக் கொண்டார்.

 

மாலை எழுந்து உடை மாற்றி முகம் கழுவி வெளியே வந்தவள் கண்களால் கணவன் எங்கும் தென்படுகிறானா எனத் தேட அவள் பார்வையைப் புரிந்து கொண்ட கண்ணபிரான் “விஜய் எங்கேயோ வெளிய போய் இருக்கிறானம்மா” என்றார்.

 

மனதில் ஏமாற்றம் மெல்லப் படர ஆரம்பித்தது.

 

நிச்சயம் முடிந்த நாள் முதற்கொண்டே இப்படித்தான் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறான் அவள் கணவன். இரவு வரை அவன் அவள் கண்ணில் படவேயில்லை.

 

மறுவீட்டிற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக இரவு அன்னையும் தந்தையும் தீக்ஷிதாவுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று விட விருந்தினர் அறையில் மதுவுடன் படுத்துக் கொண்டாள் ப்ரியம்வதா.

 

மறுநாள் அவளது வீடு சென்றார்கள். மாளிகை போன்ற கணவனின் வீட்டைக் கண்டதில் இருந்தே தன் வீட்டின் பொருளாதார நிலை குறித்தும், கணவன் அங்கு எப்படிப் பொருந்துவான் என்பது குறித்தும் கவலை கொண்டிருந்தாள் ப்ரியம்வதா…

 

உண்மையில் அவன் உயரத்திற்கு, அவன் நின்றிருந்தாலே அவர்கள் வீடு சிறியதாகிப் போய் விட்டது போல் இருந்தது அவளுக்கு.

 

ஆனால் அவளைத் தவிர மற்றவர்கள் அனைவருடனும் அவரவருக்கு ஏற்றாற் போல் பேசியபடித் தங்கள் வீட்டில் இயல்பாகப் பொருந்திப் போன கணவனைப் பார்த்து ஏற்பட்ட மகிழ்ச்சியில் அவன் தன்னிடம் மட்டுமே ஒதுக்கம் காட்டுகிறான் என்பது கூட பெரிதாகப் படவில்லை அவளுக்கு.

 

ஆனால் எவ்வளவு இயல்பாகப் பொருந்தினானோ அதைப் போலவே நாசூக்காக சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த வீடு வசதிப்படாது என மாமனாரின் மனம் கோணாமல் எடுத்துரைத்து அதைத் தன் வீட்டில் ஏற்பாடு செய்து கொள்வதாகக் கூறி அவரைச் சம்மதிக்கவும் வைத்து விட்டான்.

 

ப்ரியம்வதாவிற்குத்தான் வருத்தமாக இருந்தது.

 

இருக்கும் இரண்டு படுக்கை அறைகளில் ஒன்றை உடன்பிறப்புக்கள் மூவரும் பயன்படுத்திக் கொள்வார்கள். ரவிச்சந்திரன் வரவேற்பறையில் மடக்கி வைக்கப்பட்டிருக்கும் நாடாக்கட்டிலை விரித்துப் போட்டும்  மீனலோசினி தரையிலும் என அங்கேயே படுத்துக் கொள்வார்கள்…

 

ஒருமுறை… இன்னொரு படுக்கை அறையில் படுத்தால் என்ன என்று ப்ரியம்வதா வாக்குவாதம் செய்த போது மீனலோசினி ”ப்ரியாம்மா! இதெல்லாம் உனக்குப் புரியாது. வளர்ந்த பிள்ளைகள் நீங்க இருக்கும் போது அப்படித் தனிப் படுக்கை அறையில் எல்லாம் படுக்க முடியாது” என முடித்து விட்டார்.

 

அதனால் அந்த அறை பொருட்கள் வைத்துக் கொள்ளவும் யாராவது விருந்தினர் வந்தால் தங்குவதற்கும் என்றே பயன்பட்டு வந்தது.

 

திருமணம் நிச்சயம் ஆனவுடன் விசேஷம் நடத்தவென அந்த அறையில் புதுக் கட்டில்…மரக் கட்டில் இடத்தை அடைக்கும் என்பதால் இரும்புக் கட்டில்… வாங்கிப் போடப்பட்டது.

 

 

முதலிலேயே சொல்லி இருந்தால் அந்த செலவைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. அடுத்து மதுவும் தீக்ஷியும் இருக்கிறார்களே…அவர்களுக்கு சேமிக்க வேண்டாமா? இனிமேல் அவளது சம்பளமும் இல்லை எனும் போது…எதற்கு அனாவசிய செலவு?

 

இதை அவள் ஜாடையாக அன்னையிடம் தெரிவித்த போது மகளின் பாசத்தில் கண்கலங்கினார் அவர்.

 

”இதெல்லாம் ஒரு செலவுன்னு நினைக்க முடியுமா ப்ரியா! இப்போ இல்லைன்னா என்ன…அடுத்தடுத்து நீயும் மாப்பிள்ளையும் நாள் கிழமைக்கு வராமலா போய்ருவீங்க” எனவும்தான் அவளுக்கு மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.

 

சம்பிரதாயத்திற்காக மறுவீட்டை முடித்துக் கொண்டு அன்று இரவே விஜய்யின் வீட்டிற்குத் திரும்பி இருந்தனர். அன்றும் அவளுக்கு மதுவே துணை இருந்தாள்.

 

அடுத்த நாள் ரவிச்சந்திரன், மீனலோசினி என அனைவருமே வந்திருந்தனர். சாந்தி முகூர்த்தத்திற்கு அறை தயார் செய்வது தங்கள் செலவு என ரவிச்சந்திரன் கூறியதற்கு விஜய் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை.

 

அதனால் இரவிற்கு மேல் அனைவரும் அவர்கள் வீட்டிற்கு செல்லத் தேவை இல்லை என்றும் அங்கேயே தங்கி மறுநாள் காலை கிளம்பலாம் என அவன் கூறிய போது ரவிச்சந்திரனும் மறுத்துப் பேசவில்லை.

 

சடங்கு சம்பிரதாயங்கள் மக்களின் மகிழ்ச்சிக்காக ஏற்பட்டவையே… அதனால், சிரமப்பட்டு அவைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்பதில் மாமனும் மருகனும் ஒத்த கருத்துடையவராக இருந்தனர்.

 

முதல் இரவு…கையில் பால் செம்புடன் அவன் அறையில் நுழைந்தாள் ப்ரியம்வதா…தன் பின்னே கதவைச் சாற்றித் தாழிட்டு விட்டு நிமிர்ந்து அறைக்குள் நோக்கினாள்.

 

இன்சுக்கு இன்சு பணச் செழுமை நிறைந்திருந்த அந்த ஒற்றை அறையினுள் தங்கள் மொத்த வீட்டையும் அடைத்து விடலாம் எனத் தோன்றியது அவளுக்கு…ஆனால் அது எதிலும் அவள் கவனம் அப்போது செல்லவில்லை.

 

மெதுவாகக் கணவனைத் தேடியவள்…அவன் பால்கனியில் இருந்து உள்ளே வரவும் மீண்டும் தலை குனிந்தாள்…ஆனால் சில நிமிடங்கள் பின்னும் அவன் அவளருகில் வராது போகவே…மீண்டும் நிமிர்ந்து பார்த்தாள்.

 

பால்கனியில் இருந்து அறைக்குள் வந்திருந்தவன் பால்கனி கதவை சாற்றி விட்டு அந்தக் கதவின் மேலேயே சாய்ந்து நின்று மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் நின்றிருக்கும் பகுதி இருளாக இருந்ததால்…அவன் முகத்தில் தோன்றும் உணர்வுகளை அவளால் இனம் காண முடியவில்லை. அவள் பார்ப்பதை உணர்ந்ததும்…தனது கைகளை விலக்கி அவளை நோக்கி விரித்து “வா” என்றான் ஒற்றைச் சொல்லாக.

 

மெல்ல நடந்து சென்றவள் வழியில் கிடந்த மேஜை மீது பால் செம்பை வைத்து விட்டு அவனை நோக்கிச் சென்றாள்… அருகில் வந்தவள் கைகளைப் பற்றித் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

“கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாமே…”

 

அவளுக்கு அவனிடம் நிறைய கேட்க வேண்டி இருந்தது… நிச்சயத்துக்கும் திருமணத்துக்குமான இந்த இடைப்பட்ட நாட்களில் ஏன் ஒரு முறை கூட அவளைப் பார்க்க வரவில்லை…ஏன் அலைபேசியில் அழைக்கக் கூட இல்லை… முகூர்த்தப் புடைவை எடுக்கக் கூட வரவில்லை… கணவன் மனைவி என்றாகி விட்ட இந்த இரண்டு நாட்களில் கூடத் தனிமையில் அவளைப் பார்த்துப்  பேச ஏன் அவன் முயற்சிக்கவில்லை…இப்படிப் பல கேள்விகள் இருந்தன அவளுக்கு…

 

ஆனால் அவனோ… “ம்ஹூம்…பேச்செல்லாம் நாளைக்குத்தான்…”என்று குனிந்து அவள் செவ்விதழ்களை சிறை செய்து அதற்கு மேல் அவள் வாய் திறக்காதது போலவும் பார்த்துக் கொண்டான்…

 

 

Advertisement