Advertisement

அத்தியாயம் 19

செல்லும் வழியில் கிடைத்த நேரமெல்லாம் விஜய்யின் நம்பருக்கு முயன்றாள். ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. 

அலுவலகத்தை அடைந்தவள் செக்யூரிடியிடம் விஷயத்தைச் சொல்லவும் உடனே கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அவளை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்று விஜய்யிடம் விஷயத்தைக் கூற அவனோ திகைத்துப் போய் எழுந்தான். இப்போது அவன் வெளியே சென்றால் அனைவரது பார்வையும் அவனையே தொடரும்…வருணும் அங்கில்லை…

அதற்குள் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் பார்வையில் விழுந்திருந்தாள் ப்ரியம்வதா. கிளம்பும் அவசரத்தில் வீட்டில் கொடியில் கிடந்த முதல் நாள் அணிந்த மஞ்சள் நிறச் சுடிதாரையே அணிந்து வந்திருந்தாள்…

ஊடகவியலாளர்கள் ஒருவருக்கொருவர் அவளைச் சுட்டிக் காட்டிப் பேசத் தொடங்கக் காரியம் கை மீறிப் போவதை உணர்ந்த விஜய் தானே எழுந்து அவள் அருகில் சென்றான். 

“உன்னை யார் இங்கே வரச் சொன்னது?” கடித்துத் துப்பிய வார்த்தைகளில் அவன் கோபத்தை உணர்ந்து கொண்டவள் மிரண்டாள்.

அவள் மிரண்ட முகத்தைப் பார்த்தவன் இனி ஒன்றும் செய்வதற்கில்லை எனும் போது இவள் மீது கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது என நினைத்துக் கொண்டவன், “சரி வா” அவளை அழைத்து வந்து அமர வைத்து விட்டு மைக்கில் “இன்று காலை நீங்கள் வெளியிட்ட புகைப்படத்தில் இருந்த ப்ரியம்வதா இங்கே நம்மிடையே வந்திருக்கிறார்கள்… உங்கள் சந்தேகங்களை அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்”

‘சொல்லச் சொல்லக் கேட்காமல் வந்தாயல்லவா! அனுபவி’ என்பது போல் அவர்களிடம் அவளை மாட்டி விட்டவன் அமைதியாக அவனிடத்தில் அமர்ந்தான்.

அத்தனை பெரிய கூட்டத்தில் தனி ஒருவளாக விடப்பட்டவள் கை மீது ஒலிவாங்கி திணிக்கப்பட்டது.

“உங்கள் பெயர்?”

“ப்ரி…ப்ரியா…ப்ரியம்வதா”

“அந்தப் புகைப்படத்தில் இருப்பது நீங்கள்தானா?”

அவள் தலையாட்டினாள்.

“என்ன நடந்தது என்பதை உங்கள் பார்வையில் விளக்கிச் சொல்ல முடியுமா?”

“நான்…என்…தோழியின்…விருந்து…” அவள் தடுமாறுவதைக் கண்டவன் மனது கேட்காமல் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியைத் திறந்து அவள் கையில் திணித்தான். 

நன்றியுடன் ஓரே மூச்சில் காலி செய்தவள் தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

முதல் நாள் நடந்த விவரங்களை விளக்கியவள் ”நேற்று நடந்த விஷயங்களை முழுவதும் சொல்லி விட்டேன். அவர் மேல் எந்தத் தவறும் இல்லை.”

“நேற்றைய நிகழ்வுக்கு முன் விஜய் ஆதித்யாவுக்கும் உங்களுக்கும் பழக்கம் இருந்ததா?”

“அவர் பெயர் விஜய் ஆதித்யா என்பது இன்றைக்குப் பத்திரிக்கையில் பார்த்துதான் எனக்குத் தெரியும். அவரை நான் நேற்றுக்கு முன் பார்த்தது கூட இல்லை”

“அப்படியானால் அவர் தவறே செய்யவில்லை என்று சொல்கிறீர்களா?”

“புள்ளி ஒரு சதவிகிதம் கூட அவர் மேல் தவறில்லை… நான்தான் தவறாகப் புரிந்து கொண்டு அவசரப்பட்டு அடித்து விட்டேன். அப்படி இருந்தும் அவர் என்னைப் பெருந்தன்மையாக மன்னித்தார்”

அதே நேரம் வெளியே சென்றிருந்த வருண் வேகமாக உள்ளே வந்தான். விஜய்யின் காதில் ஏதோ கூறவும் விஜய் கையில் ஒலிவாங்கியை எடுத்தான்.

“இன்னும் உங்களுக்கு மேலும் ஒரு சாட்சியாக அந்த விடியோவில் நீங்கள் பார்த்த குழந்தையும் அதன் பெற்றோரும் வந்திருக்கிறர்கள்” என அவர்களை உள்ளே அழைத்து வரச் செய்தான். 

“இவர் மிஸ்டர். சுரேந்தர்… இது அவர் மனைவி மற்றும் குழந்தை… நேற்று நடந்ததை அவரும் அவர் மனைவியும் விளக்கிச் சொல்வார்கள்”

அந்தத் தாய் மருத்துவமனைக்கு வந்ததாகக் கூறியிருந்ததை நினைவுபடுத்தி மருத்துவமனையிலிருந்து அவர்களது முகவரியைப் பெற்று அவர்களை அழைத்து வரவே வருண் சென்றிருந்தான்.

அவர்கள் வாய்மொழி மூலமாகவும் நடந்த விவரங்களைக் கேட்டவர்கள் அவரவர் பத்திரிக்கையின் சார்பாக வருத்தம் தெரிவித்துக் கொண்டு உடனே மறுப்பு வெளியிடுவதாகக் கூறி விடைபெற்றனர்

“ஒரு நிமிடம்“ என் அவர்களைத் தடுத்து நிறுத்தியவன் ”உங்களுக்கு வரும் செய்தியில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா எனத் தெரியாமல்… விசாரிக்காமல்… சம்பந்தப்பட்டவர்களிடமும் ஒரு வார்த்தை கூட கலந்தாலோசிக்காமல் உங்கள் டிஆர்பியை ஏற்றுவதற்காக நீங்கள் செய்யும் காரியம் எத்தனை பேருக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறது பார்த்தீர்களா… இன்றைக்கு எனக்கு ஏற்பட்ட நேர விரயத்துக்கும் பொருள் நஷ்டத்துக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக மன உளைச்சலுக்கும் நான் உங்கள் ஊடகங்கள் மீது வழக்குத் தொடுக்க முடியும்… செய்யட்டுமா?” எனக் கேட்டு நிறுத்தினான். 

குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் அமைதி…  “உங்கள் கையில் கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கிறது. அதைக் கொண்டு உருப்படியாக செய்ய எத்தனையோ வேலைகள் இருக்க நீங்கள் ப்ரபலமானவர்களின் சொந்த வாழ்க்கை விவரங்களை… ஒன்றுக்கும் உதவாத பைசா பெறாத விஷயங்களைத் தேடிப் பிடித்து ஊடகங்களில் போட்டு அதன் மூலம் உங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ளப் பார்க்கிறீர்கள். இனிமேலாவது பொறுப்புடன் செயல்படுங்கள்” என அவன் கூறவும் அனைவரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியேறினர். 

அனைவரும் விடைபெறவும் வருணைப் பார்வையால் அருகில் அழைத்தவன்  “சுரேந்தர் குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதை இன்னும் ஒரு வாரம் கழிச்சு செய். அப்புறம் இன்னும் பைவ் மினிட்ஸ்ல இந்த இடம் காலியா இருக்கணும் எக்ஸப்ட் பிரியா”

“யெஸ் பாஸ்”

 ஐந்து நிமிடங்களில் அவன் கட்டளை போலவே அவனும் ப்ரியம்வதாவும் தனித்து  விடப்பட்டனர். அது அவனது தனித்தளம் என்பதால் மொத்தத் தளமுமே காலி செய்யப்பட்டிருந்தது.

தன் கோட்டைக் கழற்றி அங்கிருந்த நாற்காலியின் மீது போட்டவன் தன் டையையும் ஒரு கையால் தளர்த்தியவாறு ஒரு காலைத் தரையில் ஊன்றி அங்கிருந்த மேஜை மேல் உட்கார்ந்து அவளையே ஊடுருவுவது போலப் பார்த்தான்.

உறைந்த பனிக்கட்டிகளைத் தீண்டியது போல் உள்ளுக்குள் குளிரெடுத்தது ப்ரியம்வதாவுக்கு.அவன் விழிகளின்  தீட்சண்யம் தாங்காது தலைகுனிந்தவளின் உடல் நடுங்கியதை உணர்ந்தவன் எழுந்து  அருகே  வந்தான். 

அவள் தோள்களில் கை வைத்து லேசாக அவளை உலுக்கி “நீ என்ன காரியம் செய்துருக்கேன்னு கொஞ்சமாவது உனக்குத் தெரியுதா? நீ வர வேண்டாம்னு  நான்  சொன்னதையும்  மீறி  ஏன்  இங்கே  வந்தே?”

“இல்ல அந்த நிருபர் நான் வந்து ஒரு வார்த்தை சொன்னாதான் நம்புவேங்கிற மாதிரிப் பேசினார். அதுனால…”

“அதுனால கிளம்பி வந்துட்டீங்க தியாகம் பண்றதுக்கு…”

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் தன் தலையை அழுத்தமாகக் கோதி உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தான். 

உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் அவனுக்கு எப்போதுமே ஒரு ப்ரச்சனையாக இருந்தது இல்லை…ஆனால் ப்ரியம்வதாவிடம் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அவனது முயற்சி பலிக்கவில்லை.

“ அப்போ அதுக்கப்புறம் நடந்த எதுவும் உனக்கு தெரியாதுல்ல”

 அவள்  தெரியாது எனத்  தலையசைக்கவும் தன் கைபேசியை எடுத்தவன் மெலிஸாவை அழைத்தான்.

“ உங்க மொபைல் கொண்டு வாங்க மெலிஸா”

அவர் கொண்டு வந்து தந்து விட்டு வெளியேறவும் அதில் பதிவாகி இருந்த விடியோவை எடுத்து அவள் சொன்ன காட்சி வரை ஸ்க்ரோல் செய்து அவளிடம் கொடுத்தான்.

“இருந்தாலும் அந்தப் பொண்ணு நேர்ல வந்து ஒரு வார்த்தை சொன்னா நல்லா இருக்கும்”

சில வினாடிகள் தாமதித்தவன் “இவ்வளவு நேரம் நீங்க கேள்வி கேட்டீங்க… இப்போ நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க.இன்னிக்கு காலைல இருந்து நிறைய நியூஸ் சானல்ல இந்த போட்டோ பிளாஷ் ஆகிட்டு இருக்குது ஆனா எதுலயும் அந்தப் பொண்ணோட முகம் தெளிவா இல்லையே… ஏன்? ஃபோட்டோக்ராஃபர் என் முகத்துக்கு மட்டும் தனியா ஜூம் போட்டு எடுத்தாரா?” 

“அது… அந்தப் பொண்ணோட முகம் வெளிய தெரிஞ்சா நாளப் பின்ன அவங்களுக்குத் தொந்தரவுன்னுதான்…”

“கரெக்ட்! அப்பிடி இருக்கும் போது இப்போ அந்தப் பொண்ணு நேர்ல வரணும்னு நீங்க கோரிக்கை வைக்கிறனால அந்தப் பொண்ணோட முகம் வெளிய தெரியாதா? அதுனால அவங்க பிரைவசி பாதிக்கப் படாதா? உங்களுக்குத் தேவை என்ன நடந்துதுங்கிற விவரம்… அதை நான் கொடுத்துட்டேன். இதுக்கு மேல அந்தப் பொண்ணு நேர்ல வரணும்னு நீங்க பிடிவாதம் பிடிக்கிறதுல அர்த்தமே இல்ல”

இன்னொரு நிருபர் எழுந்தார்.

”நீங்க சொல்றது சரிதான் சார். அனாவசியமா ஒரு பெண்ணை இந்த விவகாரத்துக்குள்ள இழுத்து அவங்க முகத்தைத் திரைல காட்டுறனால அவங்களுக்குத் தேவை இல்லாத சங்கடங்கள்தான் விளையும். நீங்க சொன்னதை நாங்க நம்புறோம்”

 கை உயர்த்தி அவர் பேச்சை நிறுத்தியவன் “ஒரு சிலர் நம்பினாலும் நிறைய பேர் மனசுல சந்தேகம் இன்னும் இருக்கு. அதை முழுசாத் தீர்த்து வைத்தே அனுப்புறேன். கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க. இந்த இன்டெர்வியூல ஒரு சின்ன பிரேக் விட்டுக்குவோம். உங்க எல்லாருக்கும் டீ, பிஸ்கட்ஸ் வருது. சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க”என்று விட்டு அமர்ந்தான்.

 அவர்கள் உண்டு முடிக்கும் வேளையில்தான் ப்ரியம்வதா அங்கே நுழைந்திருந்தாள். அதன் பின் நடந்த விஷயங்கள் அவள் அறிவாள் என்பதால் காணொளியை நிறுத்தி அவன் கைகளில் கொடுத்தாள். 

அதை  வாங்கி மேஜை மீது வைத்தவன் அவள் கைகள் நடுங்குவதை உணர்ந்து அவள் இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்தான்.

“நீ இங்கே வந்தது உன் பேரன்ட்ஸ்குத் தெரியுமா?”

 அவள் கண்களில் ஒரு வித பீதி உணர்வு தோன்றியது. 

அதிலிருந்தே அவள் யோசிக்காது கிளம்பி வந்திருப்பதைப் புரிந்து கொண்டவன் இன்னும் அவள் கைகளுடன் உடலின் நடுக்கமும் குறையாதிருப்பது கண்டு ‘தான் வேறு அவளை பயமுறுத்துகிறோம்’ என்பதை உணர்ந்தவன் பற்றியிருந்த கைகளால் அவளைத் தன்னருகில் இழுத்து லேசாக அணைத்துக் கொண்டான்.

மெல்ல அவள் முதுகை வருட அவள் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.சில நிமிடங்கள் பின் தன்னுணர்வு வர முன்பின் அறியாத ஆடவனின் கைகளுக்குள் நிற்பதை உணர்ந்து மெல்ல விலகினாள்.  

“இப்போ என்ன செய்யப் போறே சொல்லு? முதல்ல உன் வீட்டுக்குக் கூப்பிட்டு அங்கே என்ன நிலவரம்னு கேளு”

அவன் சொன்னது போல் மதுவை அழைத்தாள். இணைப்புக் கிடைத்ததுதான் தாமதம் என மது படபடவெனப் பொரியத் தொடங்கி விட்டாள். 

“அக்கா என்ன காரியம் பண்ணி வச்சுருக்கிறே நீ!  டிவில பேட்டி குடுக்கிறதுக்கு முன்னால் அம்மா அப்பாகிட்டக் கலந்து பேசணும்னு தோணலையா உனக்கு? நம்ம சொந்தக்காரங்கல்லாம் இந்த பேட்டியைப் பார்த்தா என்ன சொல்வாங்களோ தெரியல. அம்மா இன்னும் வீட்டுக்கு வரலே. டிவி பார்த்தாங்களான்னு தெரியல. நீ அங்கேயேதான் இருக்கியா? சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வாயேன். எனக்குத் தனியா ரொம்பப் படபடன்னு இருக்கு”

தான் செய்து விட்ட காரியத்தின் வீரியம் புரிய ஒரு வார்த்தை கூட ப்ரியம்வதாவால் பதில் சொல்ல முடியவில்லை.

அந்த அறையில் வேறு எந்த சத்தமும் இல்லாமல் இருப்பதால் ஸ்பீக்கர் இல்லாமலே மதுவின் வார்த்தைகள் தெளிவாக விஜய்யின் காதுகளிலும் விழ பதில் கூறாமல் இருக்கிறாளே எனப் ப்ரியம்வதாவின் முகத்தைப் பார்த்தான்.

 அவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டுவதைப் பார்த்தவன் அவள் கைகளில் இருந்து அலைபேசியை வாங்கினான். அவளையும் தோளோடு அணைத்தவன் பேசத் தொடங்கினான்.

”மிஸ் மது! நான் விஜய் பேசுறேன்”

“ சார்! நீங்களா?அக்கா அங்கேதான் இருக்காளா?அவ ஏன் பேசல?

“மது கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க… பிரியா இங்கேதான் இருக்காங்க… அண்ட் ஷி இஸ் பைன். நீங்க ரொம்பப் படபடன்னு பேசினதுல கொஞ்சம் பயந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். இந்த டிவி விஷயம் நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம், நான் பார்த்துக்கிறேன். உங்க அப்பா அம்மாகிட்டயும் நான் பேசுறேன்”

ப்ரியம்வதாவைப் பார்த்து ‘சாப்பிட்டியா’ என்பது போல் சைகையில் கேட்டான் அவள் ‘இல்லை’ எனவும் “உங்க அக்கா இன்னும் லஞ்ச் சாப்பிடலைன்னு நினைக்கிறேன்.இப்போவே நேரம் ஆயிட்டுது. அதுனால இங்கே சாப்பிட வச்சுட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் நீங்க பதட்டப்படாம இருங்க. உங்க அக்காகிட்ட ஒரு வார்த்தை பேசிடுங்க”

அவன் வார்த்தைகளிலோ அல்லது குரலிலோ இருந்த ஏதோ ஒன்றில் மது இயல்புக்குத் திரும்பி இருந்தாள். 

“மது”

“அக்கா, சாரிக்கா… பதட்டத்தில் பேசிட்டேன். நீ ஒன்னும் வருத்தப்படாதே அதுதான் எல்லாம் சார் பார்த்துகிறேன்னு சொல்லிட்டாரே… நீ சாப்பிட்டுட்டுக் கிளம்பி வா! அம்மா அப்பா வந்தா நான் சமாளிச்சுக்கிறேன்“

“ம்ம்… சரி நான் போனை வைக்குறேன்”

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இருவருக்கும் உணவு சொல்லி இருந்தான். 

“என்ன இப்போ பரவாயில்லையா?”

“ ம்ம்ம்” என்றாள் வெட்கத்துடன்.

“அவசரப்பட்டு எதையாவது செய்ய வேண்டியது… அப்புறம் வருத்தப்பட்டா ஆச்சா?”

 அவள் குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்தாள். அவள் அருகில் வந்தவன் ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்தி அவள் கண்களுக்குள் பார்த்தான். 

“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?”

 எதற்குக் கேட்கிறான் எனத் தெரியாமல் மேலும் கீழும் தலையசைத்தாள். 

“என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?”

 அவள் கண்கள் வியப்பால் விரிந்தன. 

“நீங்க நிஜமாத்தான் கேட்குறீங்களா? நான் கனவு எதுவும் கண்டுகிட்டு இருக்கேனா?

 அவன் வாய் விட்டுச் சிரிக்கவும் அவள் முகம் சிவந்தது. 

“வேணும்னா அழுத்தமா ஒரு கிள்ளு கிள்ளவா?” எனக் கைவிரல்களைச் சேர்க்க…  “ம்ம்ம்…விளையாடாதீங்க” என்றவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் “விளையாடல்லாம் இல்ல… நிஜமாகத்தான்… வில் யூ மாரி மீ?” என அவள் கண்களைப் பார்த்து ஆழ்ந்த குரலில் கேட்க தலைகுனிந்தவள்,

“அது வந்து அப்பா அம்மா என்ன சொல்வாங்கன்னு தெரியல”

“எனக்கு உதவி செய்யணும்னு ஓடி வந்தப்போ அப்பா அம்மா ஞாபகம் வரலையா?”

 அவள் மீண்டும் கண்களை விரித்தாள். 

உண்மைதான்… அவனைத் தவறாக பேசுகிறார்கள் எனத் தெரிந்ததும் அவள் மனதில் இருந்ததெல்லாம்… எப்படியாவது நேரில் விஷயத்தைத் தெளிவுபடுத்தி அவன் மேல் உள்ள அவப்பெயரை நீக்க வேண்டும் என்பதுதானே தவிர அப்போது மற்ற எதைப் பற்றியும் அவள் கவலைப் படவில்லை. 

அவள் பதில் கூறாமல் விழிப்பது கண்டு,

 “என்ன ஆச்சு?” 

“நிஜமாவே நான் வீட்டை விட்டுக் கிளம்பும் போது உங்களைத் தவிர வேற ஒன்னும் ஞாபகம் இல்ல”

“பின்னே?”

 அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அவளுக்கு புரிந்தது. அவளுக்கு சரி…  அவனுக்கு?

 கேள்வியை விழிகளில் தேக்கி அவனைப் பார்த்தாள்.

சற்று முன் கண்ணீரில் நனைந்த லேசான பளபளப்புடன் அந்த கரிய பெரிய விழிகள் அவனை ஏறெடுத்துப் பார்த்த போது அந்த விழிகளுக்குள் விழுந்து தொலைந்து போய் விட மாட்டோமா என்று இருந்தது அவனுக்கு.

கடந்த மூன்று மாதங்களில் அவளைப் பார்த்ததையும் தன்னையும் அறியாமல் அவளைக் காதலிக்க ஆரம்பித்ததையும் சொல்லித் தன் காதலை அவளுக்கு உணர்த்தி விட வேண்டும் என நினைத்தவன் இல்லை இது சஸ்பென்ஸாக இருக்கட்டும் திருமணத்துக்கு பிறகுதான் இந்த விஷயம் அவளுக்குச் சொல்ல வேண்டும் என நினைத்து மனதை மாற்றிக் கொண்டான். 

அவள் கண்களில் யாசிப்புடன் பதிலுக்குக் காத்திருப்பது புரியவும் அவள் கையைப் பற்றி இன்னும் அருகில் இழுத்தான்.

குனிந்திருந்த அவள் தாடை பற்றி முகம் நிமிர்த்தியவன் அவள் நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாக ஒற்றி எடுத்தான்.

கண்களை மூடிக் கொண்டவளுக்கு அந்த ஒற்றை முத்தமே  அவன் காதலை உணரப் போதுமானதாக இருந்தது. ஆனால் முத்தமிட்டவனுக்கோ அத்துடன் நிறுத்த முடியவில்லை.

நெற்றியில் முத்தமிட்டு அவள் மென்மையை தன் இதழ்களால் உணர்ந்து விட்ட பின் மேலும் மேலும் அந்த மென்மையை உணர வேண்டும் போலத் தோன்றிய ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மூடியிருந்த கண்ணிமைகள் மீதும் இளஞ்சிவப்பாகக் கண்ணீர்க் கறைகளுடன் காணப்பட்ட கன்னங்களிலும் அடுத்தடுத்து முத்தமிட்டவன்   உணர்ச்சி வசப்பட்டதால் சிவந்து இளஞ்சிவப்பு நிறத்தில் பன்னீர் ரோஜாவைப் போல் இருந்த அவள் இதழ்களிலும் அழுத்தமாக முத்தமிட்டான்.

 படக்கென விரிந்த அவள் விழிகளில் இருந்து அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்பது தெரிந்தது. 

மெல்ல இருக்கும் நிலை உணர்ந்து அவனை நெட்டித் தள்ளியவள் “நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல” என நாணத்துடன் உரைத்துத் தலையைக் குனிந்து கொண்டாள்.

அழுத்தமாகத் தலை கோதியவன் தானும் உணர்ச்சி வசப்பட்டு விட்டதை உணர்ந்து திரும்பி வாசலைப் பார்த்தான்

கான்ஃபரன்ஸ் ஹால் என்பதால் வாசல் விரியத் திறந்து கிடந்தது. அவனுக்கு மட்டுமேயான அந்தத் தளத்தில் வேறு யாரும் வர வாய்ப்பில்லை என்றாலும் யாராவது வந்து பார்த்திருந்தால் என நினைத்தவன் கைபேசியை எடுத்து வருணை அழைத்தான்.

“சாப்பாடு” என அவன் ஆரம்பிப்பதற்குள் “கொண்டு வந்தேன் பாஸ். பூஜை வேளைக் கரடி ஆகிடுவேனோன்னு திரும்பிட்டேன்” எனவும் அடக்க மாட்டாமல் சிரித்தவன் “சரி இப்போ கொண்டு வா” என்று வைத்தான்.

கண்களும் முகமும் சேர்ந்து மலர்ந்து விகசித்த அந்த சிரித்த முகம் சித்திரம் போல் அவள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. 

அவன் சிரிப்பதை பார்த்து என்ன எனக் கண்களால் வினவியவளிடம் முத்தமிட்டதற்கே வெட்கப்பட்டவள் அதை வருண் பார்த்து விட்டான் எனத் தெரிந்தால் இங்கிருந்து ஓடி விடுவாள் என நினைத்து ஒன்றும் இல்லை என்று தலையசைத்து விட்டு அதற்குள் உணவு வரவும்  உணவருந்த அழைத்தான். 

உணவருந்தி முடித்த பின் கைகளைத் துடைத்துக் கொண்டு அருகே வந்தவன் அவளைக் கைவளையத்துக்குள் நிறுத்தி

 “உங்க அப்பா எப்போ வீட்டுல இருப்பாங்க? என் பெரியப்பாவை வீட்டுக்கு வரச் சொல்றேன்”

“ பெரியப்பாவா? உங்க அப்பா?”

“என்னோட அப்பா அம்மா உயிரோட இல்ல… எனக்கு எல்லாமே பெரியப்பாதான்” 

“ஓ” என்றவள் மனது உருகி விடக் கையை அவன் கன்னத்தில் வைத்தாள்.

 சற்று திரும்பி அந்தக் கையில் அவன் முத்தமிடவும் முகம் சிவந்து கையை விலக்கினாள். 

“கல்யாணம் வரை நீ என்கிட்டே இருந்து கொஞ்சம் விலகி இருக்கிறதுதான் நல்லது” என அவளைப் பார்த்து சிரித்தவன் “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே?” எனக் கேட்டான்.

 “அப்பா ஊருக்கு போய் இருக்கார் இன்னிக்கு நைட் வந்துருவாரு” என்று சொன்னவள் குரலில் சுருதி இறங்கி விட்டது.

“ என்னடா?”

“அப்பா இந்த விஷயத்தை எப்பிடி எடுத்துக்குவாருன்னு தெரியல… காதலுக்கு எதிரி எல்லாம் கிடையாது… ஆனா நீங்க ரொம்பப் பெரிய பணக்காரங்க அதுனால மறுப்பாரோன்னு பயமா இருக்கு. அந்த விஷயம் எனக்கே கொஞ்சம் பயமாதான் இருக்கு அது மட்டும் இல்லாம இப்போ  எனக்கு உங்களைத் தெரியுமான்னு கேட்டவங்களுக்கு நான் தெரியாதுன்னு உண்மையைத்தான் சொன்னேன்…ஆனா நம்ம கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு தெரிஞ்சா…தெரிஞ்சாத் தப்பாப் பேச மாட்டாங்களா?”

“ம்ம்ம்…பேசுவாங்கதான்… அப்போ என்ன செய்யலாம்… பேசாம அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போயிடலாமா?”

அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

“பின்ன என்னடா…அதெல்லாம் ஒரு நாள் பேசுவாங்க…ரெண்டு நாள் பேசுவாங்க…அப்புறம் காணாமப் போய்டுவாங்க” எனவும் அவள் முகம் கொஞ்சம் தெளிந்தது.

“அப்புறம் என்ன சொன்னே? பணக்காரங்கன்னா பயமா! என்ன பயம்? பணக்காரர்களும் மனுஷங்கதான்மா” என்றவன் “மத்தவங்களைப் பத்தி விட்டுடுவோம். என்னைப் பத்தி நான் உன்கிட்ட சொல்லிடறேன். மனசால நான் இதுவரை எந்தப் பெண்ணையும் நினைச்சதில்ல” எனவும் அவன் கூறாமல் கூறிய விளக்கத்தில் அவள் முகம் கூம்பிப் போனது.

அது தாளாமல் “சொல்றதை முழுசாக் கேக்கணும். இனிமே என்  வதுவைத் தவிர யார் பக்கமும் என் பார்வை போகாது” எனவும் “வதுவா?” என விழிகளை விரித்தாள். 

“ஆமா ப்ரியம்வதா… வதா… வது… என் வது” என்றவுடன் அவளுக்கு உலகமே மறந்து போனது.

கையணைந்த வேளையிலே கண்ணிரண்டும் மயங்குவதேன்
மின்சாரம் பாய்ந்தது போல் மேனியெல்லாம் நடுங்குவதேன்
என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்

Advertisement