Advertisement

அத்தியாயம் 18

காலை ஆறு மணிக்கு அவனது கைபேசி அழைத்தது. 

நல்ல உறக்கத்தில் இருந்தவன் எடுத்துப் பார்த்தால் மெலிசா…

இத்தனை காலையில் அழைக்க மாட்டாரே என்னவோ எதோ என நினைத்துக் கொண்டே காதருகில் கொண்டு சென்று “ஹலோ! “என்றான்.

“பாஸ்! டிவியை ஆன் பண்ணி நியூஸ் பாருங்க” 

அருகில் கிடந்த ரிமோட்டை இயக்கித் தொலைக்காட்சித் திரையை உயிர்ப்பித்தவன் செய்திச் அலைவரிசையைத் தேடி பிடித்துப் போட அதிர்ச்சியில் கல்லாய்ச் சமைந்தான். 

ப்ரியம்வதா அவன் முகத்தில் அறைந்த காட்சி புகைப்படமாக  உறைந்து நிற்க ப்ரியம்வதாவின் முகம் புகை போல் மறைக்கப்பட்டும் அவன் முகம் துல்லியமாகவும் காட்சியளிக்க… கீழே, 

“பாலியல் சீண்டலா பருவப்பெண்ணிற்கு?  இன்ஸ்டன்ட் தண்டனை பெற்ற தொழிலதிபர்… பெண்களுக்குத் தொடர்ச்சியாக நிகழும் பாலியல் தொந்தரவுகள்… இதன் முடிவுதான் என்ன… தொடர்ச்சி செய்தியில்…” என பிளாஷ் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது. 

தன் கைபேசியை எடுத்து மெலிசாவை அழைத்து “நான் இன்னும் அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன். வருணை ஃபோன் பண்ணி வரச் சொல்லிருங்க” என்று இறுகிய குரலில் உரைத்தவன் சொன்னது போலவே அடுத்த முப்பதாவது நிமிடம் அலுவலகத்தில் இருந்தான்.

தன் அறைக்குச் சென்று அமர்ந்தவன் தன் முன் நின்றிருந்த மெலிசாவையும் வருணையும் பார்த்து “இந்த ஃபோட்டோவை எடுத்தது யாரு? மீடியாவுக்கு யார் மூலமாப் போச்சுன்னு முதல்ல எனக்குத் தெரியணும். நம்ம லாயர்கு ஃபோன் பண்ணி உடனே வரச் சொல்லுங்க… அப்புறம் அந்த ஹோட்டல்கு ஃபோன் பண்ணி அவங்க ஹோட்டல் வாசல்ல ஃபிக்ஸ் பண்ணி இருக்கிற சிசிடிவி ஃபூட்டேஜஸ் நேத்து சாயந்திரம் ஐந்திலிருந்து ஏழு மணிக்குள்ள உள்ளது கலெக்ட் பண்ணுங்க. அப்புறம் மதியம் பன்னிரண்டு மணிக்கு ப்ரெஸ் மீட்னு மீடியா பீப்பிள்கு இன்ஃபார்ம் பண்ணிருங்க…”

வில்லிருந்து கிளம்பும் தொடர் அம்புகள் போல் சரமாரியாகக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தவன், ஒரு இடைவெளி விடவும் மெலிசா “பாஸ் நீங்க தப்பா நினைக்கலைன்னா நேத்து சாயந்திரம் என்ன நடந்துதுன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா…உங்க மேல தப்பு இருக்காதுன்னு உறுதியாத் தெரியும்…ஆனா விவரம் தெரிஞ்சா நாங்க விவரம் சேகரிக்கிறப்போ உதவியா இருக்கும்.”

அவள் சொன்னதில் உள்ள நியாயம் புரியவும் சுருக்கமாக நடந்ததை விவரித்தவன் “அந்த நேரம் அந்தப் பொண்ணு மேல இருந்த கோபத்துல எப்பவும் கவனமா இருக்கிற நான் சுத்திப் பார்க்காம விட்டுட்டேன். ஒருவேளை பார்த்துருந்தா இந்த ஃபோட்டோ எடுத்த ஆளை அப்போவே பிடிச்சிருப்பேன்.”

“ஓகே பாஸ்! நான் போய் வேண்டிய ஏற்பாடுகளைப் பண்றேன்” என அவளது தடுப்பிட்ட பகுதிக்குச் செல்லவும் அவனது மேஜை மேலிருந்த தொலைபேசி அலறியது. அதன் ரிசீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

“சார்! யாரோ ஒரு பொண்ணு… நேத்து ஹோட்டல்ல உங்களைப் பார்த்தாங்களாம்… உங்ககிட்டப் பேசியே  தீரணும்னு லைன்ல இருக்காங்க”

அழைப்பது ப்ரியம்வதா என உள்ளுணர்வு உணர்த்த ஒரு நிமிடம் தன்னவள் தன்னை முதன் முதலாக அழைக்கும் சூழலை நினைத்து ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன்  “கனெக்ட் பண்ணுங்க” என்றான்.

ப்ரியம்வதா லைனில் வரவும், “நான் விஜய் பேசுறேன்… நீங்க…”

“நான் ப்ரியம்வதா…நேத்து ஹோட்டல்ல பார்த்தோமே…”

“ம்ம்ம்…தெரியுது…சொல்லுங்க ப்ரியம்வதா”

“நான் உங்களை உடனே பார்க்கணுமே”

“மீடியாவோட மொத்த கவனமும் இப்போ என் மேலதான் இருக்கும். என்னதான் அந்த ஃபோட்டோல உங்க முகம் தெளிவா இல்லைன்னாலும் இந்த சூழ்நிலைல நாம மீட் பண்றது அவ்வளவு நல்ல யோசனை இல்ல”

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் “என்னோட அவசர புத்தியினால இப்போ நீங்க சிலுவை சுமந்துகிட்டு இருக்கீங்க…நான்… எனக்கு… என்ன செய்றதுன்னு தெரியல”

அவளது அக்கறை அவன் மனதைக் குளிர்விக்க “தேங்க்ஸ் ப்ரியா… அப்பிடிக் கூப்பிடலாம்ல”

“ம்ம்ம்…”

“இதை விடப் பெரிய ப்ரச்சனைகளை நான் ஹேண்டில் பண்ணி இருக்கேன்… இதையும் சமாளிக்க முடியும். நீங்க கவலைப்படாதீங்க… இது என்னோட செல்ஃபோன் நம்பர்… நீங்க இதுலயே இனிமே நேராக் கூப்பிடுங்க…” தன் நம்பரைக் கொடுத்தவன்… “ஓகே! இந்தப் ப்ரச்சனைகளை முடிச்சுட்டு நாம பேசலாம்”

அவன் பேசுவதைக் கேட்டிருந்த வருண் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றான். 

“என்ன பாஸ்! இப்பிடி ஆகிருச்சு…”

“இல்ல வருண்… சரி பண்ணிடலாம்… நான் கேட்ட டீடைல்ஸ் கிடைச்சாப் போதும்”

அங்கே ப்ரியம்வதாவின் வீட்டில், 

அலைபேசியை வைத்த பிறகும் காதுகளுக்குள் அவனது கம்பீரமான சற்றே கரகரப்பான குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அன்று காலை எப்போதும் போல் நன்றாகத்தான் விடிந்தது. 

காலை முதலில் அவர்கள் வீட்டில் செய்தித்தாள் படிப்பவள் தீக்ஷிதாதான்.அதில் வெளியாகி இருந்த படத்தைப் பார்த்தவள் வேகமாகச் சென்று உறங்கிக் கொண்டிருந்த மதுவை எழுப்பினாள்.

“மதுக்கா! மதுக்கா! இங்கே பாரேன்…பேப்பர்ல ஒரு நியூஸ்…”

“போ தீக்ஷி! உனக்கு வேற வேலை இல்ல…எருமை மாடு ஆட்டுக் குட்டி போட்டுச்சு…இல்ல ஒரே மொட்டுல பத்து மாங்கா காய்ச்சுதுன்னு உருப்படாம ஏதாவது நியூசைக் கொண்டு வந்து என் தூக்கத்தைக் கெடுக்காதே”

“அக்கா அதெல்லாம் இல்ல…இந்த ஃபோட்டோவைப் பாரேன்…இதுல முகம் தெளிவா இல்லைன்னாலும் பார்க்க நம்ம ப்ரியாக்கா மாதிரியே இருக்கு… நேத்து அவ இந்த ட்ரெஸ்தான் வேற போட்டுகிட்டுப் போனா… அது மட்டுமில்லாம இதுல சொல்லி இருக்கிற ஹோட்டல்லதான் நித்தி அக்கா ட்ரீட் குடுக்கிறதா சொன்னா”

மதுமிதா விசுக்கென எழுந்து அமர்ந்தாள்.

அந்த புகைப்படத்தைப் பார்த்ததுமே அவளுக்குத் தெரிந்து விட்டது…அது ப்ரியம்வதாதான் என்று.

வேக வேகமாக அந்த செய்தியைப் படித்தவள் ‘எப்பயும் போல் கையை நீட்டிட்டாளா… ஆனா இது ரொம்பப் பெரிய இடம் மாதிரித் தெரியுதே…’என நினைத்தவள் செய்தித்தாளுடன் வெளியே வந்தாள்.

ப்ரியம்வதா பால்கனியில் நின்று காஃபி குடித்துக் கொண்டிருந்தாள்.

தந்தை அவசர வேலையாக ஊருக்குச் சென்றிருந்தாலும் உள்ளே இருக்கும் அன்னைக்கு விஷயம் தெரிந்தால் அவ்வளவுதான் என்பதாலும் மெதுவாக அவளிடம் சென்ற மதுமிதா செய்தித்தாளை அவள் முன் நீட்டவும் அவள் முகம் அதிர்ச்சி அடைந்தது.

“மது… இது… நான்…”

“ஆமா… நீதான்… என்ன நடந்துச்சு?”

“ஐயோ மது…அவர் மேல எந்தத் தப்பும் இல்ல… நான்தான் அவசரப்பட்டு அடிச்சுட்டேன்… அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன்… அவரும் மன்னிச்சுட்ட மாதிரிதான் தெரிஞ்சுது…ஆனா யார் இதைப் போய் ஃபோட்டோ எடுத்து விஷயத்தை பெருசாக்கிருக்காங்கன்னு தெரியலையே… இவர் பேர் என்னன்னு கூட எனக்குத் தெரியாது மது”

அப்போது அங்கு வந்த தீக்ஷிதா அவளுக்கு பதிலளித்தாள்.

 “அக்கா அவர் பேரு விஜய்ஆதித்யா… வசந்தம் க்ரூப்ஸ் நிறுவனர்… சிஇஓ எல்லாமே அவர்தான்”

“உனக்கு எப்பிடித் தெரியும் தீக்ஷி?”

“கீழயே எல்லா விவரமும் போட்டிருக்கான் அக்கா…நல்ல வேளை உன் ஃபோட்டோவைத் தெளிவாப் போடல…இல்லைன்னா இந்நேரம் அவ்வளவுதான்”

ஆனால் அவள் மனம் ஆற மறுத்தது… வழக்கமாகத் தவறே செய்திருந்தாலும் ஆண்கள் தப்பித்துக் கொண்டு பெண்கள் அவமானப்படுத்தப்படுவர்… ஆனால் அவள் விஷயத்தில் மாற்றி நடக்கிறதே… தவறு செய்தவள் அவள்… பெண் என்பதால் அவள் செய்த தவறுக்கு மாட்டாமல் தப்பித்துக் கொள்ள… தவறே செய்யாதவன் ஆண்மகன்…அதுவும் ப்ரபலமானவன் என்ற ஒரே காரணத்துக்காக மீடியாவால் தவறாகச் சித்தரிக்கப்படுவது என்ன நியாயம்?

செய்தித்தாளில் மட்டுமா… இல்லை தொலைக்காட்சியிலும் வருகிறதா என சந்தேகம் தோன்ற மெல்லச் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.

மீனலோசினிக்குக் காலை நேரங்களில் தொலைக்காட்சி போடுவது பிடிக்காது…வேலை எல்லாம் முடித்துப் பத்து மணிக்கு மேல்தான் தொலைக்காட்சியை போட விடுவார்… விடுமுறை தினங்களில் கூட அப்படித்தான்… அதனால் அக்காவின் மனம் புரிந்த தீக்ஷிதா சமையல் அறைக்குச் சென்று அன்னையிடம் பேச்சுக் கொடுத்து அவரை வெளியே வர விடாமல் செய்தாள். 

தொலைக்காட்சியை சத்தம் இல்லாமல் வைத்து சேனலை மாற்றிப் பார்த்த ப்ரியம்வதா உள்ளூர் சேனல் ஒன்றில் இந்தப் புகைப்படத்தையும் அதன் கீழே ஓடிக் கொண்டிருந்த வாசகங்களையும் கண்டு அதிர்ந்து போய் நின்றாள்.

பின் தொலைக்காட்சியை அணைத்து விட்டு “மது! எனக்கு அவர்கிட்ட எப்பிடியாவது பேசணும்…” என்றாள்.

அவள் மனம் புரிந்தது மதுவுக்கு. ஒரு நிமிடம் உதட்டைக் கடித்து யோசித்தவள்… கணிணியை உயிர்ப்பித்து வலைதளத்தில் தேட ஆரம்பித்தாள். வசந்தம் க்ரூப்ஸ் எண்ணை எடுத்துக் கொடுத்தவள் தமக்கை பேசி முடிக்கும் வரை அருகிலேயே இருந்தாள்.

பேசி முடித்தவள் கண்களில் கண்ணீர்  துளிர்ப்பதைக் கண்டவள் “என்ன அக்கா ரொம்பத் திட்டினாரா?”

“அவர் ஒரு வார்த்தை கூட என்னைத் தப்பாப் பேசல மது… பேருக்குச் சொல்லிக் கூடக் காட்டல… அவரைப் போய் எப்பிடிப்பட்ட ப்ரச்சனைல மாட்டி வச்சுட்டேன்… இப்போ என்ன செய்றது மது?”

“நாம செய்றதுக்கு ஒண்ணும் இல்லக்கா…கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம்… டிவி பார்த்துட்டே இருந்தாத்தான் என்ன முன்னேற்றம்னு தெரியும்… ஆனா அம்மா இருக்காங்களே என்ன செய்றது?”

“அதுக்கு எங்கிட்ட ஒரு யோசனை இருக்கு… அம்மா ரொம்ப நாளா மாமா வீட்டுக்குப் போகணும்னு சொல்லிகிட்டு இருக்காங்க…அப்பா வேற ஊர்ல இல்ல…நான் இன்னிக்குக் காலேஜ் இல்லைன்னு சொல்லிட்டு அம்மாவை எப்படியாவது கரெக்ட் பண்ணி மாமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்டறேன் நீங்க இந்தப் ப்ரச்சனைய ஃபாலோ பண்ணுங்க” என்ற தீக்ஷியைக் கட்டிக் கொண்டாள் ப்ரியம்வதா.

சொன்னது போலவே அன்னையை அங்கிருந்து கிளப்பிச் சென்றாள் தீக்ஷிதா.

அங்கே விஜய்யின் அலுவலகத்தில் அவன் கேட்ட விவரங்களுடன் மெலிசா வந்து நின்றாள்.

“சொல்லுங்க மெலிசா”

“அந்த ஃபோட்டோவை எடுத்து மீடியாவுக்குக் குடுத்தது யாருன்னு இன்னும் தெரியல பாஸ்…நம்ம லீகல் டீம் டிடெக்டிவ்ஸ் ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க…சீக்கிரம் தெரிஞ்சுரும். அந்த ஃபூட்டேஜஸ் வந்துருச்சு”

அவன் அறையில் ஒரு பக்கம் இருந்த பெரிய திரையில் அந்தப் பதிவுகளை ஓட விட்டாள்.

முதலில் ப்ரியம்வதா தன் கைப்பைக்குள் எதையோ குடைந்து கொண்டே அந்த உணவக வாசலின் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியேறுவதும் சில நிமிடங்களில் அவனும் அவ்வழியே செல்வதும் ஒரு பதிவில் இருந்தது. 

அதன் பின் அந்தக் கார் தாறுமாறாக உள்ளே நுழைவதும் அந்தக் குழந்தையை அவன் ஓடிச் சென்று காப்பாற்றுவதும் அவன் பின்னோடே வந்த ப்ரியம்வதா அவனை அடிப்பதும் இன்னொரு பெண் வந்து பேசுவதுமாக எல்லாமே இன்னொரு பதிவில் பதிவாகி இருந்தது. இது எல்லாவற்றிலும் ப்ரியம்வதாவின் முதுகுப் பகுதியே பதிவாகி இருந்தது… அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆறுதலைக் கொடுத்தது. ஆனால் அவன் அவளை இடித்ததோ அவள் கீழே விழுந்த பதிவுகளோ இல்லை.

அவன் கேள்வியாக மெலிசாவைப் பார்க்க “அந்த க்ளாஸ் டோர்க்கு உள்ளே சிசிடிவி இருக்குது பாஸ்…சோ நீங்க வெளியே வர்றதும்… உங்களுக்கு முன்னால் அந்தப் பொண்ணு வெளியே வர்றதும் பதிவாகி இருக்குது… அவங்க வர்றப்போ பர்ஸ்குள்ள எதையோ தேடிகிட்டே வர்றனால அவங்க முகம் தெரியல…அந்தக் கதவுக்கும் வெளியே காரோட பாதைக்கும் இடையிலுள்ள பகுதில கேமரா இல்ல…அதுனால நீங்க இடிச்சது அவங்க விழுந்தது இதெல்லாம் ரெகார்ட் ஆகல.”

“பரவாயில்ல நல்லதுதான்…நம்மளால ஒரு பொண்ணு பேர் தேவை இல்லாம மீடியாவுக்கு வரணுமேன்னு யோசிச்சேன்…ஆனா எதுலயுமே அவ முகம் தெரியல” என்றவன் முகத்தில் நிஜமான மகிழ்ச்சி இருந்தது.

அடுத்து வக்கீலைப் பார்த்தவன் “நீங்க என்ன சொல்றீங்க சங்கர்? நம்ம சைட் தப்பு இல்லைன்னு காட்டுறதுக்கு இந்த எவிடென்ஸ் போதும் இல்லையா?”

“தாராளமாப் போதும் விஜய்… ஆனால் அந்தப் பொண்ணு வந்து ஒரு வார்த்தை சொன்னா இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கும்”

“இல்ல வேண்டாம்… இதை நாமளே பார்த்துப்போம். ப்ரெஸ்மீட் இன்ஃபார்ம் பண்ணியாச்சா மெலிசா”

“சொல்லியாச்சு பாஸ்…ஆல் மீடியா பெர்சன்ஸ் வில் அசெம்பிள் இன் அவர் கான்ஃபெரென்ஸ் ஹால் அட் எக்சேக்ட்லி ட்வெல்வ். ஆனா நம்ம பில்டிங் முன்னால மீடியா ஏதாவது நியுஸ் கிடைச்சுறாதான்னு காலைல இருந்து தவம் கிடக்குறாங்க…நான் நம்ம ஆட்கள் வச்சு சொல்லிப் பார்த்துட்டேன்… ஆனா போக மாட்டேன்றாங்க. ஒரு ஃபைவ் மினிட்ஸ் நீங்களே வந்து ரெண்டு வார்த்தை பேசிட்டா அவங்க கலைஞ்சு போய்ருவாங்க… நம்ம பில்டிங்க்குள்ள வர்ற வொர்க்கெர்ஸ்கே ரொம்ப இடைஞ்சலா இருக்கு.”

“ஓகே இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல நான் என்ட்ரன்ஸ்கு வர்றேன்.”

வக்கீல் பின்தொடர மெலிசா வெளியே செல்லவும் கைகளைப் பின்னுக்குக் கோர்த்துத் தன் சுழல் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினான்.

இந்த இரண்டு மணி நேரத்தில் கைபேசி மற்றும் தொலைபேசியில் அவனுக்கு வந்த அழைப்புக்கள் மட்டும் நூற்றுக்கு மேல் இருக்கும்.

அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் என அனைவரும் “அப்படியாமே!” எனக் குரலில் எள்ளல் தெறிக்க அவனைக் கேள்வி கேட்டனர்…

யாருக்கும் அவன் விளக்கம் சொல்லவில்லை… 

“பன்னிரண்டு மணிக்கு ப்ரெஸ்மீட் அதில் பாருங்கள்” என்று மட்டும் கூறி வைத்து விட்டான். 

பெரியப்பாவை மட்டும் அவன் அழைத்து, “ஒன்னும் ப்ரச்சனை இல்ல…நீங்க பதட்டப்படாதீங்க…பன்னிரண்டு மணிக்கு ப்ரெஸ்மீட்ல எல்லாம் க்ளியர் ஆகிடும்” என்று விளக்கி விட்டான்.

ஐந்து நிமிடங்களில் தன் ப்ரத்யேக மின்தூக்கியின் வழியாகக் கீழ் இறங்கியவன் வாசலின் முன் கூடி இருந்த ஊடக மக்களைப் பார்த்து முகம் இறுகினான். 

அடுத்த நிமிடமே முக பாவனையை மாற்றிக் கொண்டவன் தங்கள் அலுவலகத்தினால் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையின் முன்னிருந்த ஒலிவாங்கியைப் பிடித்தான்.

“ஹாய் கைஸ், ஒரு நிமிடம் என் அலுவலகத்தின் முன் ஜெமினி சர்க்கஸ் தற்காலிகமாக இடம் பெயர்ந்து விட்டார்களோ என சந்தேகம் வந்து விட்டது“ எனச் சிரித்த முகமாகப் பேச்சைத் துவக்கவும் மற்றவர்கள் முகங்களிலும் அந்தச் சிரிப்பு தொற்றிக் கொண்டது…

”எதற்கு இவ்வளவு கூட்டம்? நான்தான் பன்னிரண்டு மணிக்கு ப்ரெஸ்மீட் சொல்லி இருக்கேனே… உங்க கேள்விகளை எல்லாம் அதிலே கேட்கலாமே”

“நீங்க தைரியமாப் பேசுறதைப் பார்த்தா உங்க மேல தப்பு இல்லைன்னு சொல்றீங்களா?” ஒருவர் கேட்டார்.

“ஆமா! என் மேல துளி தவறும் கிடையாது… ஆனா வாய் வார்த்தையா இதைச் சொன்னா உங்களால நம்ப முடியாது… ஆதாரங்களோட மதியம் பன்னிரண்டு மணிக்கு நிரூபிக்கிறேன்… இப்போ நீங்க இந்த மாதிரிக் கூட்டம் போடுறது உள்ளே வர்ற வொர்கெர்ஸ்கு ரொம்ப இடைஞ்சலா இருக்கிறது மட்டும் இல்லாம வெளியே ட்ராஃபிக் ப்ரச்சனையும் ஆகுது. தயவுசெய்து இப்போ கலைஞ்சு போய்ட்டுப் பன்னிரண்டு மணிக்கு வாங்க” கை கூப்பி விட்டு உள்ளே சென்றான்.

அவனது பேட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்தவள் “என்ன ஆதாரம் வச்சுருப்பார் மது?”  

அவள் உதட்டைப் பிதுக்கவும்,

 சில நிமிடங்கள் பொறுத்து “அந்த ஹோட்டல் வாசல்ல சிசிடிவி இருந்துச்சு மது… அதைத்தான் சொல்றாருன்னு நினைக்கிறேன்”

“ம்ம்ம் இருக்கலாம்கா… அந்தக் குழந்தை அடிபட்டது பதிவாகி இருந்தாலே போதுமே”

நேரம் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து அமர சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அந்த அறைக்குள் விஜய் நுழைந்தான்.

தொலைக்காட்சியில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியம்வதாவுக்குப் படபடப்பாக இருந்தது.

அவனது சார்பில் அவனது பிஆர்ஓ மாறன் முதல் நாள் நடந்த விஷயங்கள் விவரமாக விளக்கப்பட்டிருந்த அறிக்கையைப் படித்தார். 

அவர் படித்து முடித்ததும் சிசிடிவி பதிவுகளும் அங்கிருந்த பெரிய திரையில் காட்டப்பட்டன. அதன் பின் எழுந்த விஜய் “அனைவருக்கும் வணக்கம்…இப்போ உங்கள் சந்தேகங்கள் எல்லாம் தெளிவாகி இருக்கும்னு நம்புறேன். இது யாரோ விஷமிகள் என் பேரைக் கெடுக்கணும்கிறதுக்காகவே செய்த சதி. நடந்த விஷயங்களை விளக்கிட்டேன். சிசிடிவி ஆதாரங்களையும் நீங்களே பார்த்துட்டீங்க… இதுக்கும் மேல உங்களுக்கு சந்தேகம் இருந்தா நீங்க கேட்கலாம்.”

ஒரு நிருபர் எழுந்தார். அவருடன் இதற்கு முந்தைய ஒரு விவகாரத்தில் ப்ரச்சனை எழுந்தது ஞாபகம் வந்தது விஜய்க்கு… ஏடாகூடமாக அதையோ கேட்கப் போகிறார் என உறுதியாகத் தெரிந்ததில் அவர் கேட்க வந்ததைக் கூர்ந்து கவனிக்கலானான்.

“ஆதாரங்கள் எல்லாம் சரிதான் மிஸ்டர் விஜய்…ஆனால் அந்தப் பொண்ணு வாயால ஒரு வார்த்தை கேட்டிருந்தோம்னா எங்களுக்கும் திருப்தியா இருந்திருக்கும். நீங்க இடிச்சேன்னு சொல்றதுக்கோ இல்ல அவங்க கீழே விழுந்ததுக்கோ சாட்சிகள் இல்ல. சரியான காரணம் இல்லாம ஒரு பொண்ணு அப்பிடியா வந்து அடிக்கும்… சம்திங்க் ஃபிஷி”

அவர் இப்படிச் சொல்லவுமே ப்ரியம்வதா எழுந்து விட்டாள்

“நான் அங்கே போகணும் மது”

“அக்கா, வேண்டாம்! அவசரப்படாதே… மீடியா பத்தி உனக்குத் தெரியாது. ஒன்ஸ் அதுல நம்ம முகம் வந்துட்டா ரொம்ப ஆபத்து…”

“இல்ல மது நான் பண்ணின தப்புக்கு நான்தானே தண்டனை அனுபவிக்கணும்… நீயே பார்த்தேல்ல… ஆதாரங்களை எல்லாம் பார்த்ததுக்கு அப்புறமும் அவரைச் சந்தேகப்படத்தானே செய்றாங்க… நான் போய் என் வாயால உண்மையச் சொன்னா நம்பிருவாங்க… இந்த ஆஃபிஸ் பக்கம்தான்… பத்து நிமிஷத்துல போய்டலாம்.”

“அக்கா…”      

அதற்கு மேல் மது காற்றுடன்தான் பேசிக் கொண்டிருந்தாள்.

பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மியடிக்குது
அடடா எனக்காக அருமை குறைஞ்சீக
தரும மகராசா தலையக் கவுந்தீக
களங்கம் வந்தாலென்ன பாரு
அதுக்கும் நிலான்னுதான் பேரு

Advertisement