Advertisement

அத்தியாயம் 15

கார் சேலத்தைத் தாண்டிப் போய்க் கொண்டு இருந்தது. அதிகாலை நான்கு மணிக்குச் சென்னையை விட்டுக் கிளம்பி இருந்தார்கள். நேரம் இப்போது ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கு நோக்கினும் பசுமையே கண்ணில் பட்டது. லேசான மழைத் தூறல் சூழ்நிலையை இன்னும் குளுமையாக்கியது. 

கணவனின்புறம் திரும்பிய ப்ரியம்வதாவின் பார்வையில் கனிவு கூடியது. பின்னால் குஷனில் தலை சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்தவன் முகம் இறுக்கம் தளர்ந்து இயல்பாக இருந்தது. 

குஷனைத் தலைக்கு கொடுத்து சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.  தையல் பிரித்த பிறகு எந்நேரமும் தொப்பி அணிந்து கொண்டிருந்தவன் உறங்கும் போது அசைந்து கொடுத்ததில் அது பின்னால் விழுந்திருக்க மொட்டைத் தலை பளீரென்று தெரிந்தது.

 அவனது கேசம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். 

அலுவலகம் செல்லும் போது கைக்கு அடங்காத கேசத்தை ஜெல் தடவி வாரிக் கொண்டு சென்றாலும் வீட்டில் இருக்கும் சமயங்களில் அடர்ந்த கேசம் தளர்ந்து அவன் நெற்றியைத் தாண்டிப் புருவங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும். அதை அவ்வப்போது ஒரு கையால் கோதி நெற்றிக்கு மேல் ஏற்றி விடும் அழகை எத்தனையோ முறை பார்த்து ரசித்திருக்கிறாள்.

உறக்கத்தில்தான் மனிதர்களின் உண்மையான அழகு வெளிப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அவள் கணவன் ஏற்கனவே அழகன்தான்…இப்போது அவன் முகம் கல்லூரியில் படிக்கும் வாலிபனின் முகம் போல் அத்தனை களையுடன் இருந்தது. 

அவனை நெஞ்சோடு அள்ளி அணைத்துத் தாய் குழந்தையைக் கொஞ்சுவது போல் கொஞ்ச வேண்டும் போல் ஓர் உணர்வு தோன்றவும் ஒரு வெட்கப் புன்னகையுடன் திரும்பி வெளியே பார்த்தாள்.

அவளது அசைவில் விழித்துக் கொண்ட விஜய் அவன் படுத்திருந்த நிலையில் மனைவியின் பக்கவாட்டுத் தோற்றத்தையும் இளம் புன்னகை படர்ந்திருந்த அவள் முகத்தையும் பார்த்துக் கொண்டே “ரொம்ப அழகு இல்ல” என்றான்.

படக்கென அவன்புறம் திரும்பியவள், “எழுந்துட்டீங்களா?“ என்று கேட்டுக் கொண்டே வெளிப்புறம் பார்த்து விட்டு “ஆமா ரொம்ப அழகா இருக்குல்ல இந்த ஏரியா” என்று கூறிக் கொண்டே மீண்டும் கணவனைப் பார்க்க அவன் பார்வை சென்ற இடம் புரிந்து முகம் சிவக்க, “உங்களை…” என்று விட்டு முன்னால் அமர்ந்திருப்பவர்களைக் கண்களால் சுட்டிக் காட்டினாள்.

மருத்துவமனையில் இருந்த இந்த ஒரு வாரத்தில் முன்னைப் போல் அல்லாமல் அவளுடன் வெகு இயல்பாகப் பேச ஆரம்பித்திருந்தான் விஜய். எப்போதும் கண்களில் கவனத்துடன் இல்லாமல் அவன் சரளமாகப் பேசியதில் ப்ரியம்வதாவும் அவனுடன் நன்றாக வாயாட ஆரம்பித்திருந்தாள்.

அவளது பதிலில் பல் தெரிய அழகாக சிரித்தவன் முன்புறம் அமர்ந்திருந்தவனிடம் “வருண்! இன்னும் எவ்வளவு நேரம்?” என்று கேட்டான்.

“இன்னும் அரை மணில வந்துரும் பாஸ்”

 வருண் சொன்னது போலவே அரை மணி நேரத்தில் கருப்பு நிறப் பின்னணியில் தங்க நிறத்தில் “வனவாசம்” என்ற கொட்டை எழுத்துக்கள் மின்னிய மிகப் பெரிய கம்பிக் கதவுக்குள் கார் நுழைந்தது.

மருத்துவமனையில் நடந்த உரையாடல் அவளுக்கு நினைவு வந்தது. கண்ணபிரான் வனவாசம் போகலாமே எனக் கூறவும் அவள் திடுக்கிட்டுப் போனாள்.

“மாமா! என்ன சொல்றீங்க?”  

“பதறாதேம்மா! வனவாசம்கிறது கொல்லி மலை அடிவாரத்துல இருக்கிற ஒரு ரிசார்ட். வயதானவங்களுக்காக நடத்தப்படுறதுன்னாலும் உடல்நிலை சரி இல்லாதவங்களும் அங்கே தங்கி ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம். போன வருஷம் விஜய் கொஞ்சம் அதிக நாட்கள் வெளியூர்ல தங்க வேண்டியதாப் போய்ருச்சு…அப்போ வேலைகள் மட்டும் இல்லாமத் தனிமையும் ரொம்ப என்னை வாட்டுச்சு. பல வருஷங்களாக் காரைக்குடியிலேயே இருந்துட்டேங்கிறனால இங்கே எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது…அப்போதான் கோவில்ல சந்திச்ச ஒரு நண்பர் இந்த வனவாசம் பத்திச் சொன்னார். விஜய் ஊர்ல இருந்து வந்ததுக்குப் பிறகு ஒரு மாசம் அங்கே போய் இருந்துட்டு வந்தேன்… ஒரே மாசத்துல உடல் சோர்வு, மனச்சோர்வு எல்லாம் போய் உடம்பு கலகலன்னு ஆகிடுச்சு.”

அவளுக்கும் இந்த யோசனை நல்லதாகவே பட்டது. இங்கே வீட்டில் இருந்தால் தொழிலில் ஏதாவது ப்ரச்சனை என்றால் அதைப் பார்க்க, தீர்த்து வைக்க என அவன் வேலை செய்து கொண்டேதான் இருப்பான். அதுவே வேறு இடம் எனும் போது அதைத் தவிர்க்கலாம். 

மிக மிக அத்தியாவசியம் என்றால் மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். மேலும் வீட்டில் இருந்தால் பார்க்க வருபவர்களையும் தவிர்க்க முடியாது…அவளது பெற்றோர், நண்பர்கள் யாராவது எனக் கண்டிப்பாக வருவார்கள். இது என்றால் ட்ரிப் போய் இருக்கிறார்கள் என்பதோடு முடித்துக் கொள்ளலாம்.

“அப்படியே செய்யலாம் மாமா!” என்றவள் கணவனிடம் “நீங்க என்ன சொல்றீங்க? டாக்டர்கிட்ட வேற கலந்து பேசணும்” எனவும், விஜய்யும் பெரிதாக மறுத்துப் பேசவில்லை. 

“உங்களால் சமாளிக்க முடியும்னா எனக்கு ஒண்ணும் ப்ரச்சனை இல்ல பெரியப்பா. டாக்டர்கிட்டப் பேசிட்டு முடிவு செய்யலாம்”

“சரி! நான் போய் டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்” என்று கண்ணபிரான் கிளம்பினார்.

மருத்துவரும் தையல் பிரித்த பிறகு பொதுவான உடல்நிலை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்… அதிலும் மன அழுத்தத்துக்கு இடமாற்றம் நல்ல மருந்து  என்று கூறி விட வீட்டிற்கு சென்றால் அலைச்சல் என்பதோடு ரகசியம் காப்பதும் கடினம் என்பதால் தையல் பிரிக்கும் வரை மருத்துவமனையிலேயே இருந்து விட்டு நேராகக் கொல்லிமலை கிளம்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

அவளது வீட்டில் கூட சொல்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டதைச் செயல்படுத்தும் விதமாக வீட்டுக்கு அழைத்து அவசரமாகத் தாங்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா போவதாகவும் நேரம் கிடைக்கும் போது அவளே தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்தாள்.

விஜய், வருணுக்கும் மெலிசாவுக்கும் அவர்களுக்கான வேலைகளைப் பகிர்ந்தளித்தான். 

முக்கிய முடிவுகள் கண்ணபிரானைக் கலந்து கொண்டு செய்யப்பட வேண்டும் என்றும் அவருக்கு முடிவெடுக்க சிரமமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவனைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஏக மனதாகத் தீர்மானித்தார்கள்.

திட்டமிட்டபடி தையல் பிரித்து அவனுக்கு மருந்துகளும் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளையும் கேட்டுக் கொண்ட பிறகு இதோ இப்போது வனவாசத்திற்கும் வந்தாகி விட்டது.  

மனிதனின் வாழ்க்கை நான்கு நிலைகளைக் கொண்டது.

முதல் நிலை  இளமைநோன்பு அல்லது பிரம்மச்சரியம் என்பது மனிதன் கல்வி கற்க வேண்டிய நேரம். 

அடுத்து இல்லறம் அல்லது கிரகஸ்தம் என்பது ஒரு பெண்ணை மணந்து நல்லறமாய் இல்லறம் நடத்தி நன்மக்களைப் பெற்று வாழ்வது.

மூன்றாவது வனவாசம் அல்லது வானப்ரஸ்தம் என்பது இல்லற வாழ்வின் கடமைகளை முடித்த பின் மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல்… பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே நோக்கமாய் இருக்க வேண்டும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, துறவறத்துக்கு  ஆயத்தப்படுத்துதல் ஆகும். 

இறுதியாக துறவறம்  அல்லது சன்னியாசம் பந்த பாசங்களினின்று முற்றிலும் விடுபட்டு தன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல்

சில நாட்களுக்கு முன் வீட்டில் படித்த ஆன்மீகப் புத்தகங்களில் இருந்து அவள் அறிந்து கொண்ட விஷயங்கள்தான் இவை.

இல்லறத்துக்கு முன்பே வனவாசம் வந்து விட்ட விசித்திர தம்பதிகள் என எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டாள் ப்ரியம்வதா. 

வருண் இறங்கிச் சென்று அங்கிருந்த காவலாளிடம் தங்கள் அனுமதிக் கடிதத்தின் பிரதியை அலைபேசியில் காண்பிக்க அதை சரி பார்த்து விட்டு உள்ளே அனுப்பினர். 

கிட்டத்தட்ட ஐநூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த அந்தப் பகுதி அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

எங்கு பார்த்தாலும் பசுமை பசுமை…கண்களுக்கு அத்தனை குளுமையாய் இருந்தது. கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் அவர்கள் காரிலேயே பயணம் செய்துதான் வனவாசத்தின் அலுவலகப் பகுதியை அடைய வேண்டி இருந்தது.

மேலே மேலே என்று கட்டிக் காற்றின் போக்கைத் தடுக்காமல் தரை தளத்திலேயே அதிக விஸ்தீரணத்தில் அமைந்திருந்த அந்த அலுவலகக் கட்டிடத்தின் முகப்புப் பகுதியில் ஒரு மனிதன் தியானம் செய்யும் சிலையின் பின்புறம் வெட்டவெளியை உருவகிக்கும் வண்ணம் சுவரில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. 

முன்னிருந்து பார்க்க நிஜமாகவே ஏதுமற்ற வெட்டவெளியில் ஒருவர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருப்பது போல் தெரிந்தது…அதுவும் அந்த சிலை அமைந்திருந்த பீடமும் பின்புலத்தின் நிறத்திலேயே அமைந்திருக்க காற்றில் அந்தரத்தில் பறந்து மிதந்து கொண்டே தியானம் செய்வது போலிருந்ததை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டே உள்நுழைந்தனர். 

அலுவலக அறையில் அந்த ஆசிரம நிர்வாகி பரந்தாமன் முழு வெள்ளை உடையில் புன்னகை முகமும் கனிந்த கண்களுமாக இருந்தார்.

“வாங்க மிஸ்டர். விஜய்! மிஸ்டர் கண்ணபிரான் ஃபோன் செய்து எல்லா விவரமும் சொன்னார். நீங்கள் இங்கே தங்கப் போற நாட்கள் உங்களுக்கு நல்ல பலன் தரணும்னு நான் வாழ்த்துறேன்” என்றவர் கைகளில் ஒரு சிறிய புத்தகம் ஒன்றைக் கொடுத்தார்.

“இந்த ஆசிரமத்தில் நித்ய கடமைகளின் நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் இதுல இருக்கு…இதுல எல்லாம் நீங்க கலந்துகிட்டுதான் ஆகணும்னு கட்டாயம் ஒண்ணும் கிடையாது…உங்கள் விருப்பம் போல் செய்யலாம்… இங்கேயே மருத்துவமனையும் மருத்துவர்களும் இருக்காங்க…ஆனால் வெளியில் இருந்து அவரவர்களுக்கு இஷ்டமான மருத்துவர்கள் வந்து பார்க்கிறதையும் நாங்க ஆட்சேபிக்கிறது இல்ல.”

“உங்களுக்கு 318 எண் உள்ள குடில் ஒதுக்கப் பட்டிருக்கு… உங்க வீடு போல் நீங்க அதுல இருக்கலாம்…அங்கே இருந்து இங்கே வர்றதுக்கு ஃபோன் செய்ஞ்சா இங்கே இருந்து வண்டி அனுப்புவாங்க… உங்களுக்கு வேற ஏதாவது எங்கிட்டக் கேட்கணுமா?” 

ஆரம்பத்திலேயே ‘என்னாச்சு உடம்புக்கு? அடடா! இந்த சின்ன வயசுல இப்படி ஆகிடுச்சே’ என்பது போல் வழக்கமான உரையாடல்கள் தவிர்த்து பொதுவாக அவர் பேசியது விஜய், ப்ரியம்வதா இருவருக்குமே மிகவும் பிடித்து விட்டது. அதனால் அவன் வேறு எதுவும் சொல்லாமல் “இன்டெர்காம் வசதி இருக்குல்ல” என்று மட்டும் கேட்டான்.

“இருக்கு மிஸ்டர். விஜய்…அந்த புக்லெட்ல விவரங்கள் இருக்கு”

“அப்போ ஏதாவது தேவைன்னா ஃபோன் பண்ணிக் கேட்டுக்கிறோம்” என்று அவன் முடித்து விடவும் அவர் எழுந்து கைகூப்பி அவர்களுக்கு விடை கொடுத்தார்.

அவர்களது குடிலின் முன் வந்து இறங்கியவர்களுக்கு அது நிஜமாகவே குடில் போன்ற தோற்றத்துடன் இருந்தது ஆச்சர்யம் அளித்தது. 

கேரளா பாணியில் ஓடுகள் வைத்து அமைக்கப்பட்ட குடில் அது. வழியெங்கும் அதைப் போல் நிறைய குடில்கள் அமைந்திருந்தன.

அவர்களுக்காக வாசலில் காத்திருந்த பணியாள் அவர்கள் வந்ததும் கதவைத் திறந்து அவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

ஒரு சிறிய வெராண்டா…அதில் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

அதைத் தாண்டிச் சென்றால் பெரிய அறை… அதிலேயே ஒரு ஓரத்தில் ஒற்றைக் கட்டில் மெத்தையுடன் போடப்பட்டிருந்தது. கட்டிலை ஒட்டியே குளியலறையுடன் இணைந்த கழிவறை அமைந்திருந்தது. கட்டிலுக்கு நேர் எதிரில் சுவரில் 40 இன்ச் எல்ஈடி தொலைக்காட்சி மாட்டப்பட்டிருந்தது.

கட்டிலுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் இடையில் அறை நடுவில் ஒரு டீப்பாயும் அதன் மீது பத்திரிக்கைகளும் தொலைக்காட்சியின் ரிமோட்டும் இருந்தது.

அறைக்குள் நுழையும் இடத்தில் சுவரை ஒட்டி லேசான குஷன் வைத்து இன்னொரு ஒற்றைப் படுக்கை இருந்தது. 

அந்தப் பெரிய அறையின் வலது கோடியில் சுவரை ஒட்டி ஒரு சிறிய சதுர மேசையும்  அதைச் சுற்றி இரண்டு மர ஸ்டூல்களும் போடப்பட்டிருந்தன.

அந்த அறைக்கு அடுத்ததாக இருந்த சிறிய அறையில் உடைகள் மற்றும் பொருட்கள் வைத்துக் கொள்ள அலமாரிகள் இருந்தன. அதற்கு அடுத்ததாக சமையலறை… அதனுள் சமையல் மேடையில் இண்டக்‌ஷன் அடுப்பும் சில பாத்திரங்களும்  இருந்தன.மேடையிலேயே ஒரு ஓரத்தில் நீர் நிறைந்த மண்பானை வைக்கப்பட்டு இருந்தது.

மொத்தத்தில் சிறிய ஆனால் கச்சிதமான வீடு.

அவர்களுக்குக் கதவைத் திறந்து விட்டவர்… “காலைல பால் பாட்டில் வெளியே வச்சுருவாங்கம்மா…காஃபிப் பொடி, டீதூள் ஏதாவது வேணும்னா சொன்னீங்கன்னா பாக்கெட் கொண்டு வந்து தந்திடுவாங்க… சாப்பாடு என்ன வேணும்னு சொல்லிட்டீங்கன்னா நேரத்துக்கு வந்துடும்…அசைவம் கிடையாது…ஆனால் காய்கறிகள் எல்லாம் இயற்கை உரம் போட்டுத் தயாரிக்கப்பட்டு உடம்புக்கு ஆரோக்யமானதுதான். பால் கூட பசும் பால்தான்…உங்களுக்கு என்ன வேணும்னாலும் இன்டெர்காம் மூலம் தொடர்பு கொள்ளுங்க“ என்று விட்டுக் கிளம்பினார்.

வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டுக் கட்டிலில் வந்து அமர்ந்தான் விஜய்.கட்டிலின் அருகே வராந்தாவில் இருந்த ஒரு சேரைப் போட்டு அமர்ந்த வருண், “இதெல்லாம் தேவையா பாஸ்? அங்கே சென்னையில் ராஜா மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இப்பிடி ஆரம்பிக்கிறதுக்குள்ள முடியுற ஒரு வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துகிட்டு… அந்தக் கிழவருக்குதான் புத்தி கெட்டுப் போச்சுன்னா…”

“வருண்” குரலில் கண்டிப்பைக் காட்டி அடுத்த அறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த ப்ரியம்வதாவைக் கண்களில் சுட்டி அமைதியாக இருக்குமாறு கூறினான்.

“சரி பாஸ், அடுத்து என்ன?”

“நீ கிளம்பு. அங்கே நான் சொன்ன மாதிரி மத்த விஷயங்கள்ளாம் கவனமாப் பார்த்துக்கோ…இப்போ நாம சொன்னதை நம்பி அமைதியா இருந்தாலும் இன்னும் சில நாட்கள்ல நான் எங்கேன்னு மறுபடி ப்ரச்சனையைக் கிளப்புவாங்க. அதையும் பார்த்துப் பக்குவமா ஹேண்டில் பண்ணு. நான் ஒரு வாரத்துல ஒரு வீடியோ அனுப்பறேன்… அதை நம்ம வொர்க்கெர்ஸ் பார்த்தாங்கன்னா அப்புறம் அவங்களுக்கு எந்த சந்தேகமும் வராது…அவங்களே மத்தவங்களை சமாளிச்சுடுவாங்க.நீ இப்போ கிளம்பு”

“ஓகே பாஸ்!” என்றவன் ப்ரியம்வதாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

அவர்கள் சொல்லி விட்டு வந்திருந்ததால் காலை உணவு கொஞ்ச நேரத்திலேயே வந்து விட்டது. உணவுக்குப் பின் அவனுக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுத்து முடித்தவளுக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. 

அவன் ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதால் காரில் வரும் போது தன்னை மறந்து உறங்கி விட்டான். ஆனால் ப்ரியம்வதா எங்கே கணவனின் தூக்கத்தைக் கெடுத்து விடுவோமோ என பயந்து கொண்டே அமர்ந்திருந்ததால் சரியாக உறங்காததால் அந்த குஷன் படுக்கையில் படுத்தவள் அடுத்த வினாடியே உறங்கி விட்டாள்.

கட்டிலில் ஒரு தலையணையை முதுகுக்குக் கொடுத்து சாய்ந்து அமர்ந்திருந்தவன் அவள் முகத்தையே இமைக்காது பார்த்திருந்தான்.

நிர்மலமான முகம்…இந்த முகத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்ப்பவர்கள் கூடத் தவறு செய்யத் தயங்குவார்களே! அவள் தவறு செய்திருப்பாள் என நீ எப்படி நினைத்தாய் ஆதி? தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் அவன்… தன்னை மணந்து இவள் இப்படிக் கஷ்டப்பட வேண்டும் என்பதுதான் விதியோ…

விதியா! மதியில்லா மனிதர்கள் தாங்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்த உருவாக்கிய விஷயமே விதி என்று கூறுபவன்தான் அவன்…

கேட்பார் பேச்சைக் கேட்டுத் தாலி கட்டிய மனைவியைத் தவறாக நினைக்கச் சொல்லி விதியா சொன்னது… திருமணமான இத்தனை நாட்களில் அவளைப் புரிந்து கொள்ளாமல் விலக்கி வைத்துத் தண்டிக்கச் சொல்லி விதியா சொன்னது…நேரடியாக அவளிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டாம் என விதியா சொன்னது…பண விஷயத்தில் அவள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்த பிறகும் அவளைப் புரிந்து கொள்ளாத தனது மடத்தனத்திற்கு விதியையா பொறுப்பாகுவது… அவனுக்குத் தன்னை நினைத்தே வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது.

ப்ரியம்வதாவை முதன் முதலில் சந்தித்த நாள் இன்னும் பசுமையாக அவன் நினைவில் இருந்தது.

இந்த தேவதை அவன் வாழ்வில் நுழைந்த நாள்…அதுவரை இயந்திரம் போல் வாழ்ந்து வந்தவன் வாழ்வில் வசந்தம் வந்த நாள்… அவன் வாழ்வில் மறக்க முடியாத அந்த நாள்…

உத்தரவே இன்றி உள்ளேதான் நீ வந்த நேரத்தில் நானில்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன் வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் ஞாபகம்
முதன்முதலில் பார்த்தேன் காதல் வந்தது

Advertisement