Advertisement

அத்தியாயம் 14

 அவள் முகத்தில் அதிர்ச்சியைக் கண்டவர் “பயப்படாதீங்க ப்ரியம்வதா…டீப் ஸ்டிமுலஸ்கு ரெஸ்பாண்ட் பண்ணுறாரு இருந்தாலும்…” என்றவர்  சில நிமிட யோசனைக்குப் பிறகு “நீங்க ஒண்ணு செய்ங்க… அவருக்குக் கேட்குது கேட்கலைங்கிறதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம அவர்கிட்ட ஏதாவது பேசிக்கிட்டே இருங்க. அது ஆழ்மனதை எட்டி அதன் மூலமா அவருக்கு நினைவு சீக்கிரம் திரும்புறதுக்கான வாய்ப்புக்கள் இருக்கு”

“சரிங்க டாக்டர்” எனவும் மருத்துவர் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

அவளுக்கு லேசாக மயக்கம் வருவது போல் இருந்தது. 

கண்ணபிரான் காலை அவளுக்கு உணவு கொண்டு வந்த போது மறுத்து விட்டு அவரது வற்புறுத்தலின் பேரில் பழச்சாறை மட்டுமே அருந்தினாள். அவரும் வேறு வழியின்றி அலுவலகத்தில் நிலைமையைத் தொலைபேசி மூலம் சமாளிப்பதற்காக மீண்டும் அறைக்குச் சென்று விட்டார்.

தடுமாறியபடி கணவனின் படுக்கையின் அருகில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தாள்.

ஏனோ திக்குத் தெரியாத காட்டில் தனித்து நிற்கும் உணர்வு தோன்ற அந்த அறை முழுவதையும் பார்வையால் ஒரு தரம் வலம் வந்தாள். 

கணவனின் கட்டிலின் தலைப்பக்கம் இருந்த சுவரில் கடவுளின் படத்தைக் கண்டவள் தன்னை அறியாமல் கண்களை மூடி மனம் உருகப் ப்ரார்த்தித்துப் பின் கண்களைத் திறந்தாள்.

அந்த ஐசியூவில் மூன்று படுக்கைகள் இருந்தாலும் விஜய் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தான். ஏன் அந்தத் தளம் முழுவதுமே அவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இல்லாமல் அவனுக்கு இப்படி நேர்ந்திருப்பது வெளியே தெரிய வேண்டாம் என நினைத்தே கண்ணபிரான் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

யாருமில்லா அந்த அறையில் செவிலியர்கள் கூட வெளியில் காத்திருக்க ப்ரியம்வதா தன் கணவனின் நிச்சலனமான முகத்தில் பார்வையைப் பதித்தாள்.

தலையில் வெள்ளை வெளேரென்ற பெரிய கட்டு…அதில் அங்கங்கே லேசான ரத்தக் கசிவுகள்…முகத்தில் பெரும்பகுதியை மறைத்து விட்ட சுவாசிக்கும் குழாய்…

அவன் முகத்தை முழுமையாகப் பார்க்கக் கூட முடியவில்லையே அவளால்…எத்தனை ஆசை ஆசையாக அவன் முகத்தைப் பார்த்திருப்பாள்…மற்ற நேரங்களில் இறுக்கமாக இருந்தாலும் அவளுடன் வெளி இடங்களுக்குச் செல்லும் போது… மாலை வந்ததும் அவள் முகம் பார்க்கும் போது எனத் தன்னை அறியாமல் மலரும் அவன் முகத்தை எத்தனை முறை ஆசை தீரக் கண்களால் பருகி இருப்பாள்…

பொங்கி வந்த துக்கத்தை அடக்கியபடி மெல்லிய குரலில் அவனுடன் பேச ஆரம்பித்தாள்.

“ஆதி…நான் பேசுறது உங்களுக்குக் கேட்குதான்னு எனக்குத் தெரியல…ஆனாக் கேட்கும்னு ஒரு நம்பிக்கையோடதான் பேசுறேன்…”

“ஆதி! அப்பிடிக் கூப்பிட்டா உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். ஆனா அப்பிடிக் கூப்பிடாதேன்னு சொல்றதுக்காவது நீங்க எழுந்துட மாட்டீங்களான்னு நினைச்சுதான் அப்பிடிக் கூப்பிடுறேன்” 

“நான் உங்களை முதல் முதல்ல பார்த்தப்போ உங்க முகத்துல முதல்ல ஆச்சர்யம்… அப்புறம் சந்தோஷம்… அப்புறம் அதிர்ச்சி… அப்புறம் கோபம்…இப்பிடி வினாடிக்கு வினாடி மாறின உணர்வுகளைப் பார்த்தேனே ஆதி…ஆனா மாமா நீங்க உணர்வுகளைக் காட்டவே மாட்டீங்கன்னு சொல்றாரே… சில நேரங்கள்ல நானும் நீங்க உணர்வுகளை மறைக்கிறதைப் பார்த்துருக்கேன்…ஆனா இப்ப எதையுமே உணராமப் படுத்துருக்கீங்களே ஆதி” அவள் குரல் தழுதழுத்தது. 

முயன்று மருத்துவர் சொன்னதை மனதில் இருத்தியவள் செருமிக் கொண்டு தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.

“இன்னிக்கு டாக்டர்கிட்டப் பேசினப்போ மாமா சொன்னார்… நீங்க கல்யாணத்தின் போது இறுக்கம் தளர்ந்து கொஞ்சம் மாறினீங்க…ஆனா அது தொடரலைன்னு…ஏன் ஆதி?”

“நீங்க நம்ம முதல் இரவுக்குப் பிறகு பேசிய வார்த்தைகளை முதல்ல நான் சீரியஸா எடுத்துக்கல ஆதி…ஆனா அதுக்கப்புறம் நீங்க உண்மையாதான் சொல்றீங்கன்னு தெரிஞ்சப்போ எனக்கு மனசு ரொம்ப வலிச்சுது…இப்போ ஏன்னு கேட்கிற நான் அப்போவே உங்க சட்டையைப் பிடிச்சு ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டீங்க…இப்போ ஏன் என்னை விலக்கி நிறுத்துறீங்கன்னு கேட்டிருக்கணும் ஆதி…”

“நீங்க என்னை விலக்கி நிறுத்தினப்போக் கூட என்னால உங்க மேல கோபப்பட முடியல ஆதி…ஏன்னா உங்க மேல அத்தனை பிரியம் வச்சுருக்கேன் நான். உங்க பிரியத்துக்காகவும் காதலுக்காகவும் என் தன்மானத்தை விட்டுக் கீழே இறங்கவும் நான் தயாரா இருந்தேன்… ஆனா நான் அப்பிடிச் செய்றதை எங்கே வெறும் உடல் இச்சைக்கு ஆசைப்பட்டு  உங்ககிட்ட வர்றேனோன்னு நீங்க நினைச்சுருவீங்களோ… இல்ல சொல்லிக் காட்டிருவீங்களோன்னு பயந்துகிட்டுதான் நான் தயங்கினேன் ஆதி…”

“ஆனா நீங்க என்னை நெருங்க நெருங்க என் மனசுல உங்க மேல இருந்த காதலால என் மனசும் உடம்புமே என்னோட கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பிச்சுருச்சு…ஒரு கட்டத்துல எங்கே கொஞ்சம் கூட வெட்கம், மானம் பத்தி யோசிக்காம உங்ககிட்ட வந்து என்னை ஏத்துகோங்கன்னு கெஞ்ச ஆரம்பிச்சுருவேனோன்னு எனக்கு பயம் கூட வந்துருச்சு.”

“மத்த பெண்கள் இந்த விஷயத்துல எப்பிடி நடந்துக்குவாங்கன்னு எனக்குத் தெரியல ஆதி…நான்தான் வித்யாசமா இருக்கேனோ… கணவனின் அன்புக்காக ரொம்ப ஏங்குறேனோன்னு எனக்கு சந்தேகமா இருந்துச்சு… ஆனா யார்கிட்டயும் கேட்டுத் தெளிய முடியல… எனக்குள்ளயே நான் போராடிகிட்டு இருந்தேன்… சில நேரம் என்னை நினைச்சு எனக்கே ரொம்பக் கேவலமா இருந்துச்சு… கொஞ்சம் கூட மன உறுதி இல்லாம இருக்கேனோன்னு… அந்த உறுதி வேணும்னுதான் கடவுளை நாடினேன்… கடவுள் பேரச் சொல்லி எனக்கு நானே கட்டுப்பாடுகள் விதிச்சேன்… உங்ககிட்ட இருந்து விலகினேன்.” 

“ஆனா அப்பிடி விலகி நான் பெரிய தப்பு செய்துட்டதா இப்போ உணர்றேன்…நான் மட்டும் உங்ககிட்ட இருந்து விலகிப் போகாம  கொஞ்சம் முயற்சி பண்ணி உங்களைப் பேச வச்சு என் மேல உங்களுக்கு அப்பிடி என்ன கோபம்னும் வெறுப்புன்னும் கண்டுபிடிச்சிருந்தா இன்னிக்கு உங்களுக்கு இந்த நிலை வந்துருக்காதுல்ல…”

“தப்புப் பண்ணிட்டேன் ஆதி… தப்புப் பண்ணிட்டேன்… நான் பண்ணின தப்புக்கு நீங்க தண்டனை அனுபவிக்கிறதே வழக்கமாப் போச்சு…”

வாய் விட்டுக் கதறியவள் ஒரு முடிவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“இனிமேல் நான் உங்களை விட்டு விலக மாட்டேன். எப்போவும் இருக்கிற மாதிரி இருக்கேன். நீங்களும் கல்யாணத்துக்கப்புறம் எங்கிட்ட எப்பிடி நடந்துகிட்டீங்களோ அது மாதிரி உங்க விருப்பம் போல் நடந்துக்கோங்க… காலம் முழுமைக்கும் இப்படியே உங்க கூட நான் வாழ்ந்துருவேன்… ஆனா நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை பண்ணிக் கூட என்னால பார்க்க முடியல.”

அதன் பின்னான சொற்களை உதிர்க்கையில் அவள் குரலில் தீவிரம் கூடித் தெரிந்தது.

“அப்பிடி ஒருவேளை உங்களுக்கு நினைவு திரும்பலைன்னா நானும் ஏதாவது செய்துகிட்டு இங்கேயே உங்க பக்கத்துப் படுக்கைல விழுந்துருவேன்…வீட்டுலதான் சேர்ந்து வாழ முடியல… ஹாஸ்பிடல்லயாவது சேர்ந்து வாழ்வோம்…”

“ப்ளீஸ் ஆதி! என்னைத் தனியாத் தவிக்க விடாதீங்க…  எங்கிட்டத் திரும்பி வந்துருங்க…எனக்கு நீங்க வேணும்… நீங்க இல்லாம அடுத்த நிமிஷத்தை நினைச்சுப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல… எனக்காக வந்துருங்க…ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…” 

சித்தம் கலங்கியவளைப் போல் பிதற்றிக் கொண்டிருந்தவள் கண்களில் அருவிப்புனலென அழுகை வழிந்தோட… இரவு முழுவதும் ஒரு பொட்டுக் கண் மூடாத களைப்பும் சேர… உறக்கமும் மயக்கமுமான ஒரு நிலைக்கு அவளையும் அறியாது சென்று விட்டிருந்தாள்.

எத்தனை நேரம் அந்த நிலை நீடித்ததோ திடீரென்று விழிப்புத் தட்ட விலுக்கென்று எழுந்தவள் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டே உறங்கி இருந்ததையும் கணவனின் கைகளில் ஏற்பட்ட லேசான அசைவே தன்னை எழுப்பி இருந்ததையும் உணர்ந்தாள்.

அந்த உணர்வு உண்மைதானா… தான் உணர்ந்த அசைவு நிஜமா… உண்மையாகவே கையை அசைத்தானா… இல்லை அவளது ப்ரம்மையா…

விழிகளில் ஆசையும் நம்பிக்கையுமாகத் தன்னவனின் முகம் பார்த்தாள். 

அவனது கண்ணிமைகளில் அசைவு தெரிந்தது… அத்துடன் அவன் முகம் லேசாக வலியில் சுருங்கவும் சட்டென்று அருகில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினாள்.

அடுத்த வினாடி நர்ஸ் உள்ளே வந்தார்கள்.

“ஸிஸ்டர்! என் கணவர்…அவர் கண்…கை அசைஞ்சுது…”

தன் நம்பிக்கையை யாராவது உறுதிப்படுத்தி விட மாட்டார்களா என்ற தவிப்புடன் படபடவெனப் பேசியவளைக் கண்ட நர்ஸ் “ரிலாக்ஸ் மேடம்! நான் பார்த்துக்கிறேன்…கொஞ்சம் தள்ளுங்க…” என்று விட்டு விஜய்யின் அருகில் நெருங்கி அவன் கைகளைப் பிடித்து நாடி பார்த்தாள். பின் கண்களில் டார்ச் அடித்துப் பார்த்தாள்.

“ஓகே! நான் டாக்டர்க்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன்” என்று விட்டு வெளியேறினாள்.

சில நிமிடங்களில் மருத்துவர் ராமலிங்கம் ஐசியூவிற்குள் நுழைய ப்ரியம்வதா வெளியே காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டாள். மேலும் நிமிடங்கள் கடக்க மருத்துவர் புருஷோத்தமனும் ஐசியூவிற்குள் சென்றிருந்தார்.

பதற்றத்துடன் நின்றிருந்தவளின் அருகே வந்த கண்ணபிரானிடம் நடந்த விவரங்களை அவள் எடுத்துரைக்க அவரையும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

மேலும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்த டாக்டர் ராமலிங்கம் முகத்தில் விரிந்த புன்னகையுடன், “இனி ஒண்ணும் பயமில்ல கண்ணன். ஹி இஸ் சௌண்ட் அண்ட் சேஃப்” எனவும் அந்தப் புன்னகை அவர்கள் முகத்திலும் எதிரொலித்தது.

“உங்க ட்ரீட்மென்ட் நல்லாவே வேலை செய்திருக்கு போல…” என்று ப்ரியம்வதாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவர் கூற ஏற்கனவே அவள் மூலம் விவரம் அறிந்திருந்ததால் “ப்ரியா எங்க வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி டாக்டர்” என்றார்.

“வெரி குட்… வெரி குட்” என்றவர் “இன்னிக்கு சாயந்திரமே அவர் ஸ்டேபிள் ஆன பின்னால ரூமுக்கு மாத்திடலாம்… சியர் அப் ப்ரியம்வதா…இனிமே எமனால கூட உங்க ஹஸ்பண்ட்கிட்ட வர முடியாது” என்று அவள் முகத்தில் நன்றாகவே மலர்ச்சியை வரவழைத்து விட்டுச் சென்றார்.

அவர் சொன்னது போலவே மாலையில் தனி அறைக்கு விஜய் மாற்றப்பட அப்போதும் உறக்கத்தில் இருந்தவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள் ப்ரியம்வதா.

உணவு, பானங்கள் என கண்ணபிரான் மாத்திரம் அவளைப் பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்ளவில்லையானால் அவள் தன் உடல் என்று ஒன்று இருக்கிறது என்பதையே மறந்து போய் இருப்பாள்.

விஜய்யைத் தனி அறைக்கு மாற்றின கொஞ்ச நேரத்திலேயே அவன் கண் விழித்தான். அதே நேரம் மருத்துவர் ராமலிங்கமும் மருத்துவர் புருஷோத்தமனும் அறையினுள் நுழைந்தனர். 

டாக்டர் ராமலிங்கம் விஜய்யைப் பார்த்து,

“ஹல்லோ மிஸ்டர்.விஜய்! எப்பிடி இருக்கீங்க…ஹவ் ஆர் யூ ஃபீலிங் நவ்?”

“ம்ம்ம்…ஆனால் தலை வலிக்குது டாக்டர்… ஒரு மாதிரி மயக்கமா…” என்றவன் மேலே சொல்ல இயலாது தடுமாற ராமலிங்கம்… “ரிலாக்ஸ், மிஸ்டர் விஜய்… இது டாக்டர் புருஷோத்தமன். உங்களுக்கு சர்ஜரி பண்ணின நியூரோசர்ஜன். இவர் உங்களைப் பரிசோதிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம். ப்ளீஸ் கோ ஆப்பரேட் வித் ஹிம்.”

டாக்டர் புருஷோத்தமன் அவனைப் பரிசோதித்துக் கொண்டே தன் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார்.

“சமீபத்துல எப்போ பிபி பார்த்தீங்க விஜய்?”

நெற்றி சுருக்கி யோசித்தவன், “என் நினைவு தெரிஞ்சு நான் சமீபமாப் பார்க்கல டாக்டர்”

“தலைவலி ஏதாவது இருந்துச்சா?”

“ஆமா டாக்டர் கொஞ்ச நாளாகவே தலைவலி இருந்துச்சு…காஃபி குடிச்சாலோ…இல்ல ஃப்ரெஷ் ஏர்ல இருந்தாலோ சரி ஆன மாதிரி இருந்துச்சு…”

“அதுக்கு நீங்க ட்ரீட்மென்ட்னு எதுவும் பார்க்கலையா?”

“பார்க்கணும்னு நினைச்சேன்…ஆனா மத்த வேலைகள்ல இது பின்னுக்குப் போயிருச்சு”

கொஞ்சம் தடுமாறிப் பேசினாலும் தெளிவாகவே பேசினான் விஜய்.

எல்லா பரிசோதனைகளையும் முடித்துக் கொண்ட மருத்துவர் புருஷோத்தமன் அங்கிருந்த உயரமான ஸ்டூலை  இழுத்துப் போட்டுக் கொண்டு விஜய் முன் அமர்ந்தார்.

Advertisement