Advertisement

அத்தியாயம் 12

 மறுநாள் காலை விஜய் விழித்தெழுந்த போது ப்ரியம்வதா படுக்கையில் இல்லை. 

தினமும் அவன் ஐந்தரை மணிக்கு எழுந்து விடுவான். அவன் கீழே ஜாகிங் சென்ற பிறகு ஆறு மணிக்குத்தான் ப்ரியம்வதா எழுந்து குளித்துக் கீழே செல்வாள்.

யோசனையுடன் ஜாகிங் கிளம்பியவன் திரும்பி வந்த போது பூஜை அறையில் இனிமையாகப் பாடும் குரல் கேட்டது. 

ப்ரியம்வதா பேசும் போது கம்பீரமாக இருக்கும். அவள் குரல் பாடும் போது இத்தனை இனிமையாக இருக்குமா? 

இறைவனின் பாடலைப் பாடும் போதே இத்தனை இனிமை என்றால்… பாரதியின் கண்ணம்மா பாடல்களை அவளைப் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும் எனத் தோன்றியது அவனுக்கு.

அவன் பூஜையறைக்குள் பண்டிகை நாட்கள் தவிர மற்ற நாட்களில் நுழைந்தது இல்லை.அது கூட பெரியப்பா வருத்தப்படுவாரே என்பதற்காகத்தான்.

மெல்லப் பூஜையறைப் பக்கம் எட்டிப் பார்த்தான். கண்கள் மூடி இருந்தவள்

 “மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே”

 என மனம் உருகப் பாடிக் கொண்டிருந்தாள். அருகில் கண்ணபிரானும் அந்தப் பாடலில் மெய்மறந்து கண்களில் நீர் வழிய நின்றிருந்தார்.

‘என்ன நடக்குது இங்கே’ என ஒரு கணம் யோசித்தவன் தோள்களைக் குலுக்கி விட்டு மாடிப் படிகளில் ஏறினான்.

மீண்டும் அவன் கீழே வந்த போது உணவு மேஜையில் அவனுக்குப் பரிமாறத் தயாராக நின்று கொண்டிருந்தாள் ப்ரியம்வதா.

சாப்பிட்டுக் கொண்டே “என்ன பக்தி எல்லாம் பலமா இருக்குது?”

புன்னகைத்தவள் “எப்பவும் ஐந்து நிமிஷம் கும்பிடுவேன். இன்னிக்குக் கூடக் கொஞ்ச நேரம்… அவ்வளவுதான்.”

“அதுதான் ஏன்னு கேட்குறேன்?”

ஒரு கணம் தயங்கியவள் “என் கணவர் மனது மாறனும்னு ஆண்டவன்கிட்ட கோரிக்கை வச்சுருக்கேன்… அதுக்காகத்தான்” என மெல்லிய குரலில் இயம்பினாள்.

“அதுக்குக் கணவனிடம் உண்மையா இருந்தாப் போதுமே”

அவள் புரியாமல் பார்க்கவும் அந்தப் பார்வையைக் கண்டு கொள்ளாமல் உண்டு முடித்து எழுந்து விட்டான்.

அவன் கிளம்பிய பின்னும் அவனது வார்த்தைகள் அவளது காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. 

கண்ணபிரானுக்கு உணவு பரிமாறி அவளும் உண்டு முடித்து மாடியில் அறைக்கு சென்று அமர்ந்தாள்.

‘என்ன சொல்கிறான் இவன்? தான் கணவனிடம் உண்மையாக இல்லையா… எந்த விதத்தில்? என்ன விஷயத்தை அவனிடம் மறைத்து விட்டேன்?அப்படி எதுவும் என் நினைவில் இல்லையே.’

யோசிக்க யோசிக்கக் குழப்பமாக இருந்தது…எப்போதும் புதிர் போடுவது போலவே பேசுகிறான்…விளக்கம் கேட்டால் யோசி புரியும் என்கிறான்… என்னதான் செய்வது என அவளுக்குப் புரியவில்லை.

முதல் நாள் முடிவு செய்திருந்தபடிக் கீழே நூலகத்தை நோக்கிச் சென்றாள். சில ஆன்மீகப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

ஆம். முந்தைய நாள் கணவனின் வேண்டுகோளிற்கிணங்கக் கீழே இறங்கி வந்தவள் கண்ணபிரானின் அறையை நெருங்குகையில் அவரது கணீரென்ற குரலில்,

“தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள்

தாயடித்தாற் பிடித்தொரு தந்தை அணைப்பன்

இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் 

பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனிதன் நீ ஆதலால் 

என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் 

அம்மையப்பா இனி ஆற்றேன்”

என்ற வள்ளலாரின் பாடல் வரிகளைக் கேட்டவளுக்குக் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் பெருகியது.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று விளம்பியவர் வாய்மொழி ஆயிற்றே!

தமிழார்வம் உள்ளவள் ஆதலால் அந்தப் பாடலை முதன்முறை கேட்டாலும் அதன் பொருளை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘தவறு செய்த மகனைத் தாய் அடித்தால் தந்தை அணைத்துத் தேற்றுவார்…அதே நேரம் தந்தை அடித்தால் தாய் ஆறுதல் சொல்வாள்…இங்கெனக்குத் தந்தையும் தாயும் நீயே அன்றோ…அடித்து விட்டாய் இனி அணைக்காவிட்டால் நான் தாங்கிக் கொள்ள மாட்டேன்’ என்ற பொருளில் வந்த அந்தப் பாடலைக் கண்ணபிரான் மனமுருகிப் பாடிக் கொண்டிருக்க அவளுக்கு ஏதோ வழி கிடைத்தாற் போல் இருந்தது.

தந்தை, தாய் என  மணவாழ்கை பற்றி யாரிடமும் கலந்து பேசக் கூட இயலாத நிலையில் இன்று அவள் தனித்து நிற்கும் போது கடவுளைச் சரணடையும் முடிவை எடுப்பதே சரியாகப்பட்டது அவளுக்கு.

ஆம்! திக்கற்றவனுக்கு தெய்வமே துணை அல்லவா!

அவள் ஒன்றும் பெரிய பக்தை எல்லாம் கிடையாது. காலை எழுந்தவுடன் விநாயகா சரணம் என மூன்று முறை சொல்லி அந்த நாள் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வாள்.

வெளியே  கிளம்பும் முன் திருநீறு இட்டுக் கொண்டு கிளம்புவாள். மாலை நேரங்களில் அன்னை வீட்டில் இல்லை என்றால் விளக்கேற்றுவாள்.அது தவிர கோவில்களுக்குச் செல்லும் போது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது போல் பொதுவாக ஏதாவது வேண்டிக் கொள்வாளே தவிர எனக்கு இது வேண்டும் அது வேண்டும் நீ இதை எனக்கு செய்தால் நான் அதை செய்கிறேன் என்றெல்லாம் வேண்டியதில்லை.

இப்போதும் அவள் பண்டமாற்று வேண்டுதல் எதையும் கடவுளிடம் வைக்கவில்லை.

‘என் கணவனின் மனதை மாற்று…இல்லையேல் என் மனதிற்குக் கடிவாளமிடும் சக்தியை எனக்குக் கொடு.எந்த நிலையிலும் தரம் இறங்கும் நிலையில் என்னை வைத்து விடாதே’ என்பதுதான் அவள் கடவுளிடம் வைத்த வேண்டுதல்.

அவளைப் பொருத்தவரை இந்தத் திட்டம் நன்றாகவே வேலை செய்தது. ஆனால் அதற்கு அவள் கணவனிடம் இருந்து வந்த பதிலடிதான் அவள் எதிர்பாராததாக இருந்தது. 

அன்று இரவு காதல் பாடல்களுக்கு பதிலாக ஏதோ பஜனை தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான்.

இது அடுத்தடுத்த நாட்களிலும் தொடரவும் மேலும் மற்றவர் முன்னிலையிலும் அவள் அவன் அருகில் வரத் தயங்கவும் அவன் கை பற்றி இழுத்தால் கூடப் பார்வையில் ஒரு யாசிப்புடன் விலகிச் செல்லவும் அவனுக்கு எரிச்சல் வர ஆரம்பித்தது.

மனைவியுடன் இணைந்து இல்லறம் நடத்தாவிடினும் மற்றவர் பெயரில் பழியைப் போட்டு அவள் அண்மையை அனுபவித்துக் கொண்டிருந்தவன் அவள் முற்றிலும் அருகில் வராது அவனைத் தவிர்க்கவும் அவள் தன்னைத் தவிக்க விடுவதாக எண்ணிக் கொண்டான். 

உண்மையில் அவளைத்தான் அவன் தவிக்க விட்டுக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவன் மனம் மாறி அவன் காதலைக் கோடி காட்டினால் போதும் மனைவி அவன் காதலுக்காக எதுவும் செய்வாள் என்பதும் அவன் புத்தியில் உறைக்கவே இல்லை. அவள் தன்னைத் தவிர்த்து விலகிச் செல்கிறாள் என்பது மட்டுமே அவன் மனதில் பட்டது. 

இப்படியாக ஒரு வாரமும் கடந்து விட்டிருந்தது.

அன்று அலுவலகம் செல்பவனை இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தாள் ப்ரியம்வதா.ஆனால் அவன்தான் கடுகடுத்த முகத்துடன் கிளம்பிக் காரினுள் அமர்ந்தான். அவள் உணவு பரிமாறிய போதும் அதன் பிறகும் கூட மிக அருகில் வராமல் கொஞ்சம் இடைவெளி விட்டே நின்றிருந்தது காலை நேரத்திலேயே அவன் மனத்தில் எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது.

அன்று அலுவலகத்திலும் எதிர்பாராத ப்ரச்சனைகள்…

அவன் சென்றவுடனே மெலிசா வந்து நின்றார்.

“என்ன மெலிசா?” 

“ஒரு பேட் நியூஸ் பாஸ்!”

அவன் உணர்ச்சி தொலைத்த முகத்துடன் சொல் என்பது போல் பார்க்கவும் “அந்த சுந்தரம் க்ரூப்ஸ் அவங்களோட மொத்த யுனிட்டயும் நம்மகிட்ட ஹேண்ட் ஓவர் பண்றதா சொல்லிப் பேச்சுவார்த்தை இருந்தது இல்லையா…அவங்க இப்போ நமக்கு அடுத்து நம்பர் டூ ப்ளேஸ்ல இருக்கிற கண்மணி க்ரூப்ஸ்கிட்ட அக்ரீமென்ட் சைன் பண்ணப் போறதா நியூஸ் வந்துருக்கு”

அந்த சுந்தரம் க்ரூப்ஸ் எண்பதுகளில் ஆரம்பிக்கப்பட்டு சமீப காலம் வரை வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த மிக பழைமை வாய்ந்த கடை… நகரின் முக்கியமான இடங்களில் கிளைகள் இருந்தாலும் கடந்த ஐந்து வருடங்களாக நவீன மயமாக்கலும் ஆன்லைன் வியாபாரமும் அவர்களுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது. 

மேலும் எடுத்து நடத்த இன்றைய தலைமுறைக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் மொத்தமாக விற்று விடத் தீர்மானித்திருப்பதாகத் தகவல் கிடைத்ததும் விஜய் களத்தில் இறங்கி விட்டான்.

அந்தக் கடையின் கிளைகள் இருப்பது எல்லாம் நகரின் மிக ஜனசந்தடி உள்ள பகுதிகள். அந்தக் கிளைகள் தங்களுக்குக் கிடைக்குமானால் அதிக செலவு இல்லாமல் உள் கட்டமைப்பை மட்டும் நவீனமாக மாற்றினால் போதும்.முதல் அதிகம் இல்லாமல் புதுக் கிளை திறந்து விடலாம் என அவன் எண்ணினான். 

அதனால் முதலில் அவர்களைச் சந்தித்துத் தன் மனத்தில் இருக்கும் தொகையைக் குறிப்பிட்டு அவர்களுக்கு விருப்பம் என்றால் தொடர்பு கொள்ளச் சொல்லி வந்திருந்தான். தொகை முன்பின் ஆனாலும் பரவாயில்லை எனவும் குறிப்புக் கொடுத்திருந்தான். அந்தப் பெரியவரும் மிகுந்த ஈடுபாட்டோடு பேசுவது போலத்தான் தெரிந்தது. 

ஆனால் இப்போது இப்படிச் செய்து விட்டார்களே…ஒரு மரியாதைக்காவது இவனிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.

“சரி! அந்தப் பெரியவர் சுந்தரேசனுக்கு லைன் போடச் சொல்லுங்க”

இணைப்புக் கிடைத்ததும்…

“வணக்கம் ஐயா! நான் விஜய் ஆதித்யா பேசுறேன்”

“சொல்லுங்க தம்பி! நல்லா இருக்கீகளா?”

“நான் நல்லா இருக்கேன் ஐயா. நீங்க எப்பிடி இருக்கீங்க?”

“எனக்கு என்ன தம்பி? காடு வா வாங்குது.வீடு போ போங்குது. நான் கண்ணை மூடுறதுக்கு முன்னாடி என்னோட உழைப்புல வளர்ந்த கடைய நல்ல கைல ஒப்படைச்சுட்டுப் போகலாம்னு பார்த்தா இந்தப் பேராண்டிகளுக்கு அது புரிய மாட்டேங்குதே தம்பி”

அவர் ப்ரச்சனை என்னவென்று கூறி விடவும் “பணம் அதிகமா எதிர்பார்த்தா நான் தரத் தயாரா இருக்கேன் ஐயா!”

“பணம் மட்டும் இல்ல தம்பி! அந்தக் கண்மனி க்ரூப்ஸ் ஓனர் பையன் என் பேரன் கூட வெளிநாட்டில படிச்சவனாம்…அதுனால அவங்க கூடத்தான் இந்த டீல் முடியனும்னு என் பேரன் கண்டிப்பும் கறாருமாச் சொல்லிட்டான். என்னால அதை மீறி ஒன்னும் செய்ய முடியல தம்பி.என்னை மன்னிச்சுக்கோங்க”

“ஐயா நீங்க பெரியவங்க! மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. எனக்கு உங்க நிலைமை புரியுது. ஒரு வேளை உங்க முடிவுல மாற்றம் ஏதாவது இருந்தா எனக்கு தெரியப்படுத்துங்க.நன்றி”

மெலிசா கவலையுடன் அவன் முகம் பார்த்தார்.

அவன் முகத்தில் எதுவும் தெரியவில்லை. ஆனால் உள்ளம் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது. தலை வேறு வலிக்க ஆரம்பித்தது. 

இந்தத் தலைவலி இந்தப் பத்து நாட்களாகத்தான்…அடிக்கடி முனுக் முனுக்கென ஆரம்பித்து விடுகிறது…என்னவென்று பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டவன் மெலிசாவிடம்

“வருணை வரச் சொல்லுங்க” என்றான்.

சில நிமிடங்களில் வருண் வந்திருக்க,

“உட்கார் வருண்…கண்மணி க்ரூப்ஸ் இப்போ யார் நிர்வாகத்துல வருது?”

“ராஜேந்திரன்னு ஒருத்தன் பாஸ்… அவனுக்கும் நமக்கும் ஒத்து வராது”

“ஓ! அதுதான் சுந்தரம் க்ரூப்ஸ் கூட சேர்ந்து நமக்குக் குடைச்சல் கொடுக்கப் பார்க்கிறான் போல” வருணிடம் விவரங்களைச் சுருக்கமாகத் தெரிவித்தவன் “இந்த விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறா அலசி என்னென்ன லூப் ஹோல்ஸ் இருக்குன்னு எனக்குத் தெரியப்படுத்து”

“ஓகே பாஸ்” என்றவன் கிளம்பினான்.

”ஓகே மெலிசா…லெட் அஸ் மூவ் ஆன் டூ த நெக்ஸ்ட் வொர்க்”

Advertisement