Advertisement

அத்தியாயம் 10

 மறுநாள் காலை நாதஸ்வர ஓசையுடன் பொழுது விடிந்தது ப்ரியம்வதாவுக்கு. 

அடர் பச்சை நிறத்தில் சந்தன வண்ணக் கரையும் சந்தன வண்ண முந்தானையுமாக உடலெங்கும் கொடிகளும் இலைகளும் ஓடிய பட்டுப்புடைவை அணிந்து அதற்குப் பொருத்தமாகக் கணவன் வாங்கிக் கொடுத்திருந்த பச்சை வெள்ளைக் கற்கள் பதித்த  நெக்லசும் அதனுடன் செட்டாக நீண்ட ஆரமும் ஜிமிக்கியும் வளையலும் அணிந்து தேவதை போல் வளைய வந்து கொண்டிருந்தாள்.

என்ன அலங்காரம் செய்து என்ன பயன்…பார்த்து ரசிக்க வேண்டியவன் அருகில் இல்லையே…அருகில் இருந்தால் மட்டும்… என இன்னொரு குரல் மனதுள் எழ… மற்றவர்களுக்காகவாவது பார்ப்பானே என அவனை நினைத்து அவள் மனம் வெகுவாக ஏங்கியது. 

அதே நேரம் வாசலில் ஒரே பரபரப்பு.அனைவரின் கண்களும் வாசலைப் பார்த்திருக்க அப்பாவிடம் எதையோ சொல்வதற்காக வந்த ப்ரியம்வதா சிலையெனச் சமைந்தாள்.

மெட்டாலிக் சிவப்பு நிற பிஎம்டபிள்யூ காரில் இருந்து அவளது நாயகன் இறங்கிக் கொண்டிருந்தான். 

கரும்பச்சை நிற முழுக்கை சட்டையும்…ஆஃப் வைட் நிறப் கால்சராயும் கைகளில் ரோலக்ஸும் கண்களில் அவியேட்டர் கண்ணாடியுமாக இறங்கியவன் குளிர்கண்ணாடியைக் கழற்றி சட்டைப் பையில் வைத்துக் கொண்டே நிமிர நேர் எதிரில் வாசல்படியில் நின்றிருந்த மனைவியைப் பார்த்தான். மண்டபமே அவனை வேடிக்கை பார்க்க அவனோ அவளது அலங்காரத்தில் மெய் மறந்து நின்றான்.

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க

இருவரும் ஒருவரில் ஒருவர் மூழ்கி இருக்க… 

அருகில் நின்றிருந்த மயூரி அவள் இடையில் முழங்கையால் இடித்தாள்.

“நேத்து ஒரு நாள் பார்க்கல…அதுக்கு இப்பிடி ஆளை முழுங்குற மாதிரிப் பார்க்குறாரு… என் வீட்டுக்காரரும் இருக்காரே… பத்து நாள் பார்க்கலைன்னாலும் விட்டது தொல்லைன்னு நிம்மதியா இருப்பாரு… அட மத்தவங்களுக்காக, பார்க்கற மாதிரி நடிக்கவாவது செய்யலாமில்ல…”

தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்த மயூரியின் இடியில் கூட தன் நினைவு திரும்பாதவள் அவளது கடைசி வார்த்தைகளில் சுய உணர்வு பெற்றாள்.

அதற்குள் சோமசுந்தரமும் ரவிச்சந்திரனும் அவனைத் தாங்குதாங்கென்று தாங்கி மண்டபத்துக்குள் அழைத்து வந்திருந்தனர்.

அவள் அருகில் வந்தவன் இயல்பாக இடது கையை நீட்ட அவளும் தன் வலது கரத்தை அதன் மீது வைத்தாள்…அவள் கையை விடாமல் அருகில் இழுத்துக் கொண்டு இணைந்து நடந்தான்.

“வர மாட்டேன்னு சொன்னீங்க…”முணுமுணுத்தாள்.

“வர முடியாதுன்னுதான் நினைச்சேன்…ஆனா இன்னிக்கு நடக்க இருந்த மீட்டிங் கடைசி நிமிஷத்துல கேன்சல் ஆகிடுச்சு…அதுதான்” என அவனும் மற்றவருக்குக் கேட்காத வகையில் பதிலளித்தான்.

ஆக அவளுக்காக இல்லை.அவனுக்கு மீட்டிங் இல்லை என்பதால் வந்திருக்கிறான். 

மனம் சுணங்கக் கையை இழுத்துக் கொள்ள முயன்றவளால் முடியவில்லை. சாதரணமாகப் பிடிப்பது போல் பிடித்திருந்தாலும் இறுகப் பற்றி இருந்தான். 

அவன் முகம் பார்க்கக் கண் சிமிட்டிச் சிரித்தான்.

அப்படியானால் பொய் சொன்னானா? அவளுக்காகத்தான் வந்தானா? கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளப் பிடிக்கவில்லை அவளுக்கு. இல்லையென்று விட்டானானால் என்ற பயம் வேறு…ஆனால் அவனது புன்னகையில் அவள் முகமும் மலர்ந்தது.

அருகில் வந்த மது, “என்ன அத்தான் ரெண்டு பேரும் சொல்லி வச்சு ட்ரெஸ் பண்ணிட்டு வந்தீங்களா?” எனக் கேட்க அவளும் அப்போதுதான் அவர்கள் உடைப் பொருத்தத்தைக் கவனித்தாள்.

ஆச்சர்யத்துடன் கணவனின் முகம் பார்க்க… “மனைவி எவ்வழி கணவன் அவ்வழி” எனக் கூறி அவளைச் சிவக்க வைத்தான்.

இருக்கையில் அமர்ந்த பின்… “உங்களுக்குக் குடிக்க ஏதாவது?” எனக் கேட்க அவன் மறுப்பாகத் தலையசைத்தான்.

அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக “மாமா?” என்றாள் கேள்வியாக…

“வந்துட்டு இருக்காரு…நான் இங்கே முடிச்சுட்டு அப்பிடியே ஆஃபிஸ் போகணும்கிறனால அவர் தனிக் கார்ல வர்றாரு.”

“ஓ!” என்றவள் எழுந்திரிக்க முயற்சிக்க இன்னும் அவள் கை அவன் கைகளிலே இருந்ததைப் பார்த்தவள் முகம் சிவந்தாள்.

‘ஐயோ! இதை மயூரி பார்த்தால் அவ்வளவுதான் என்னைக் கேலி செய்து கொன்று விடுவாள்’ என நினைத்துக் கொண்டவள் கெஞ்சுவது போல் அவனைப் பார்த்து “எனக்கு மணமேடைக்குப் போகணும்…மல்லிகா தேடுவா” என்றாள்.

அவன் இலகுவாகப் “போ” என்றான். 

அவள் தயக்கத்துடன் அவர்களின் இணைந்திருந்த கைகளைப் பார்க்க அவனும் அப்போதுதான் அதை உணர்ந்தவன் போல “ஓ” என்று விட்டு அவள் கைகளை விடுத்தான்.

அடுத்த சில நிமிடங்களிலேயே சடங்குகள் முடிந்து மாங்கல்யதாரணம் நல்ல முறையில் நிறைவேறியது.

ரவிச்சந்திரனும் மீனலோசினியும் கணவனும் மனைவியுமாக நின்று ஆசிர்வாதம் செய்து முடித்த கையோடு மீனலோசினி மகளிடம் வந்தார்.

“ப்ரியாம்மா! உன் பொருட்கள் எல்லாம் எடுத்து வச்சுடு… சாப்பிட்டு முடிச்சதும் கிளம்பிடலாம்”

“ஏம்மா! இத்தனை சீக்கிரம்…”

“உனக்கு ஒண்ணும் புரியாது…சொல்ற பேச்சைக் கேளு.”

கண்ணபிரானுடன் இணைந்து தங்கள் பரிசைக் கொடுத்து வாழ்த்திய பின் உணவு உண்டு முடித்ததும் விஜய் கிளம்பப் போக மீனலோசினி, “போற வழிதானே மாப்பிள்ளை… வீட்டுக்கு வந்துட்டுப் போகலாம்…நானும் உங்க கூடவே வந்துடறேன்” என்றாள்.

முதலில் மறுக்கப் போனவன் அவர் பார்வையில் எதையோ படித்து “சரிங்க அத்தை” எனவும் அன்னையும் மகளும் அனைவரிடமும் விடை பெற்று அவனுடனே கிளம்பினர்.

வீட்டுக்கு வரவும், “வாங்க மாப்பிள்ளை! காஃபி சாப்பிட்டுட்டுப் போகலாம்” எனவும் அவரது அழைப்பில் ஏதோ காரணம் இருக்கிறது என நினைத்தவன் மறுக்காமல் சம்மதித்தான்.

ப்ரியம்வதாதான்… “உங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு” என முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.

விஜய்யைச் சேரில் அமரச் சொன்னவர் “நீயும் பக்கத்துல ஒரு சேர் போட்டு உட்கார் ப்ரியாம்மா“ என்று விட்டு சமையல் அறையில் நுழைந்தார்.

சில நிமிடங்கள் பொறுத்து இடது கையை மூடியபடி வந்தவர், “தப்பா நினைச்சுக்காதீங்க மாப்பிள்ளை… இன்னிக்கு மண்டபத்துல மொத்தக் கண்ணும் உங்க ரெண்டு பேர் மேலதான்…மாப்பிள்ளை பொண்ணை யாரும் பார்த்த மாதிரித் தெரியல…ஒரு கண்ணு போல் ஒரு கண்ணு இருக்காது…அங்கே வீட்டுக்குப் போய்ட்டீங்கன்னா பெண்கள் யாரும் இல்லை…சுத்திப் போட முடியாது…அதுதான் இங்கே சுத்திப் போட்டு அனுப்பலாம்னு…முதல்லயே சொன்னா நீங்க மறுத்துட்டீங்கன்னா… அதுதான் சொல்லல” என்றவரைச் சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தவனுக்கு மனம் நெகிழ்ந்தது.

ஏனோ அவன் அன்னையின் ஞாபகம் வந்தது. 

தொண்டையைச் செருமிக் கொண்டவன் “எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது அத்தை…ஆனால் உங்க பிரியத்துக்காக சம்மதிக்கிறேன்” எனவும் கையிலிருந்த உப்பையும் மிளகாயையும் அவர்கள் இருவருக்கும் சேர்த்து சுற்றி திருஷ்டி கழித்தவர் “ப்ரியா! மாப்பிள்ளைக்குக் காஃபி போடு…நான் நாலு வீடு தள்ளி வீடு கட்டுற இடத்துல இதைப் போட்டுட்டு வந்துடறேன். அங்கே விறகடுப்பு இருக்கும்”  என்று விட்டு வெளியே சென்றார்.

‘இதுக்குத்தான் இத்தனை மூடுமந்திரமா?’ என முணுமுணுத்தபடி சமையல் அறைக்குச் சென்றாள் ப்ரியம்வதா.

சில நிமிடங்கள் பொறுத்து அறை வாயிலில் நிழலாடவும் சட்டென்று திரும்பினாள்.

அவர்கள் வீட்டில் இருக்கும் அறைகளிலேயே மிகச் சிறியது அந்த சமையலறைதான். சமையல் மேடை தவிர ஒருவர் மட்டும் புழங்கும் அளவுக்குத்தான் இடம் இருக்கும். அதுவும் அவன் வாசலில் நிற்க அந்த அறை இன்னும் சிறியதாகத் தோன்றியது அவளுக்கு.

திடீரென்று அவனை அங்கு கண்ட பதற்றத்தில் “என்ன…என்ன வேணும்…?” என அவள் தடுமாற அதை சுவாரசியமாகப் பார்த்தவன் அவளை நெருங்கினான்.

விழிகள் விரிய அவள் பார்க்க எப்போதும் போல் அந்த வெண்ணிலா விழிகளில் தன்னைத் தொலைத்தவன் அவள்  முகத்தைக் கைகளில் ஏந்திப் பதற்றத்தால் சிவந்து துடிக்கும் அவள் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தான்.

முதல் நாளிலிருந்தே அவளைக் காணாமல் தவித்து அவளைக் கண்ணால் காண்பதற்காகவே திருமணத்துக்கு வந்து அவளைக் கண்டது முதல் தன் கைகளுக்குள் அடக்கிக் கொள்ளக் காத்திருந்தவன் சந்தர்ப்பம் கிடைக்கவும் பயன்படுத்திக் கொண்டான்.

உலகை மறந்து இருவரும் நின்றிருக்க சில நிமிடங்கள் பொறுத்து உள்ளே வந்த மீனலோசினி மருமகன் சமையலறையில் இருப்பதைப் பார்த்த உடனேயே சத்தம் செய்யாமல் மீண்டும் வெளியேறி விட்டார். 

இருவரும் இடையூரற்ற தனிமையில் திளைத்திருக்க… அடுப்பில் வைத்திருந்த பால் ஸ்ஸ்ஸ்… என்ற சத்தத்துடன் பொங்க சுயநிலை பெற்றவன் சட்டென்று அவள் முகத்தை விட்டான். 

அவள் தடுமாறவும் வலது கையால் அவளை மீண்டும் அணைத்தவன் இடது கை நீட்டி பால் வழிந்து விடாமல் அடுப்பையும் அணைத்திருந்தான்.

மீண்டும் அவளை இறுக அணைத்தவன் அவள் உச்சியில் தாடையைப் பதித்து “வது!”

“ம்ம்ம்…”

“அத்தை வந்துடுவாங்க” எனவும் அவளது வீட்டில், சமையல் அறையில், அன்னை வெளியே சென்றிருக்க, காஃபி போட உள்ளே வந்தாள் என்பதெல்லாம் நினைவு வரத் துள்ளி விலகியவள் இப்படியா அவன் முத்தமிட்டதும் உலகத்தை மறப்போம் என நினைத்துக் குங்கும நிறம் கொண்டாள். 

அவளது சிவந்து விட்ட முகத்தை ரசனையுடன் பார்த்தவன் மீண்டும் அருகே வர அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினாள்.

அதையும் மீறி அவள் அருகே வந்தவன் அவளை இறுக ஒரு தரம் அணைத்து விட்டுப் பின் விடுத்துக் கூடத்தில் வந்து அமர்ந்தான்.

வேக வேகமாகக் காஃபியைக் கலந்து கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தவள் “எங்கே போனாங்க இந்த அம்மா?” என முனுமுனுத்துக் கொண்டே வெளியே சென்றாள்.

அன்னை கீழ் வீட்டின் வாசலில் அந்த வீட்டு பெண்மணியிடம் பேசிக் கொண்டிருப்பது கண்டு மீண்டும் வீட்டுக்குள்ளேயே வந்தாள்.

வாசலில் அன்னையின் செருப்புக் கிடப்பதை யோசனையுடன் பார்த்துக் கொண்டே வந்தவளின் முகம் பார்த்தவன் ‘என்ன’ எனப் பார்வையாலேயே கேட்டான்.

“இல்ல… அம்மா முதல்லயே வந்து நம்மைப் பார்த்துட்டுப் போய் இருப்பாங்களோன்னு தோணுது.”

யாருமற்ற தனிமையில் அவளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுத் தன் பலவீனத்தைத் தானே வெளிப்படுத்திக் கொண்ட நிலையில் தனது செய்கைக்கு எப்படி நியாயம் கற்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு விடை கிடைத்து விட நிதானமாகக் குடித்து முடித்த காஃபி கோப்பையைக் கீழே வைத்தவன், “நல்லதுதானே! அதுதானே எனக்குத் தேவை” எனவும் அவள் முகம் அடிவாங்கினாற் போல் கசங்கியது.

‘ஆதி… ஆதி… காலையிலிருந்து அவள் மலர்ந்த முகமாக இருந்தது உனக்குப் பொறுக்கவில்லையா’ எனத் தன்னைத்தானே கடிந்து கொண்டவன் பேச்சை மாற்ற எண்ணி” சரி நீ எப்போ வீட்டுக்கு வர்றே?” என்று கேட்டான்.

வந்த கோபத்தில் முதல் நாளிரவு அவனுக்காக ஏங்கியதெல்லாம் மறந்து விட…  “நான் ரெண்டு நாள் இங்கே இருந்துட்டு வர்றேன்” எனவும் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தாலும் நொடியில் அவள் காணாது மறைத்தவன் எழுந்து முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றான். 

அழுத்தமான நடையுடன் அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்து அவளை நெருங்கியவன் உடல் மொழியில் அவளுக்கு உள்ளூரக் குளிரெடுத்தது.

Advertisement