Advertisement

அத்தியாயம் 1

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்

திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம்

மாதுளம்போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்

குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி

என்றன் விழுத்துணையே

நெற்றியில் பட்டையாய் விபூதியும்… அதன் நடுவே சந்தனமும்… சந்தனத்தின் நடுவே குங்குமமும்… கழுத்தில் நீண்ட ருத்ராட்ச, ஸ்படிக மாலைகளும், இடையில் காவி நிற வேட்டியும் அதன் மேல் மஞ்சள் நிறத் துண்டும் அணிந்து சைவப் பழமாக நின்றிருந்தார் கண்ணபிரான்.

கல்லும் கசிந்துருகத் தொடர்ந்து நூறு பாடல்கள் கொண்ட அபிராமி அந்தாதியைப் பாடி முடித்த பிறகே பூஜையில் இருந்து எழுந்தார்.

கிழக்கு சூரியன் மேற்கே உதித்தாலும் காலையில் அபிராமி அந்தாதியைப் பாடாமல் தண்ணீர் கூட அருந்தும் பழக்கம் இல்லாதவர்.

சரியாக ஏழரை மணிக்குப் பூஜை முடித்து வெளியே வந்தவர்… அங்கே  கைகளில் செம்புத் தண்ணீருடன் நின்றிருந்த கந்தசாமியிடமிருந்து  தண்ணீரை வாங்கிக் கடகடவென்று அருந்தினார்.

“சின்ன ஐயா ஓட்டம் முடிச்சு வந்தாச்சா?”

“ஆச்சுங்க!”

“மத்தவங்க எழுந்தாச்சா?”

“இன்னும் யாரும் எழுந்து வரலேங்க”

“சரி!” என்றவர் தன் அறைக்குச் சென்று அன்றைய நாளிதழுடன் அமர்ந்தார்.

அதே நேரம் மாடியறையில் வியர்வையால் நனைந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்த தன் சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தான் விஜய்… விஜயாதித்தவர்மன்.

சோழ சாம்ராஜ்ஜியம் மீண்டும் தழைக்கக் காரணமாக இருந்த விஜயாலய சோழனின் பெயரையும்…போர்க்களத்தில் பெருவீரம் காட்டி இளம் வயதிலேயே இறந்துபட்ட ஆதித்த கரிகாலன் பெயரையும்… அவனுக்கு இளையவனும்… பிற்காலத்தில் ராஜராஜசோழன் என்ற பெயருடன் அழியாப் புகழ் படைத்த அருள்மொழிவர்மனின் பெயரில் இருந்த வர்மனையும் சேர்த்து விஜயாதித்தவர்மன் என அவனுக்குப் பெயர் வைத்தவர் கண்ணபிரான்தான்.

இருபத்தி ஏழு வயது…நெடுநெடுவென்று ஆறடிக்கும் அதிகமான உயரம்…தினமும் காலை கடற்கரைச் சாலையில் ஒரு மணி நேர ஓட்டம்…மாலை நண்பர்களுடன் ஷட்டில் அல்லது டேபிள் டென்னிஸ்…இரண்டும் முடியாத போது சொந்த ஜிம்மில் உடற்பயிற்சி என ஓயாத பயிற்சியால்   நரம்புகள் புடைத்துத் தெரியும் அளவிற்கு உரமேறியிருந்த உடல்…

கறுத்துப் பளபளக்கும் சிகை…சிவந்த நிறம்…நீளவாட்டு முகம்…அகலமான நெற்றி…எதிரில் இருப்பவரை வினாடியில் அளவிடும் தீர்க்கமான கண்கள்…விட்டால் குத்திக் கிழித்து விடுமோ என்பது போன்ற கூர்நாசி…அழுத்தமான கொஞ்சம் தடித்த உதடுகள்… மொத்தத்தில் மீசையும் தாடியுடனுமான பாலிவுட் நாயகன் சாயலில் இருந்தான்.

வியர்வை ஆற சிறிது நேரம் மின்விசிறியின் அடியில் நின்றிருந்தவன் கைகளில் அன்றைய பிசினஸ் டைம்ஸ்…

பத்து நிமிடங்கள் அதில் பார்வையை மேய விட்டவன் குளியலறைக்குள் புகுந்தான்.மேலும் பத்து நிமிடங்களில் கோட் சூட் அணிந்து கம்பீரமாகப் படிகளில் இறங்கி வந்தவனைப் பார்த்த கந்தன் சேதி சொல்லக் கண்ணபிரானின் அறைக்குள் நுழைந்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவனோடு உணவு மேஜையில் இணைந்து கொண்டார் கண்ணபிரான்.

“இன்னிக்கும் ஆஃபிஸ் போகணுமா விஜய்?”

“நான் ஏற்கனவே இந்த மீட்டிங் பத்தி உங்ககிட்ட சொன்னேன் இல்லையா பெரியப்பா”

“சொல்லி இருந்ததான்… இருந்தாலும்…நாளைக்குக் கல்யாணத்தை வச்சுகிட்டு…”

“பதினோரு மணிக்கு மீட்டிங் முடிஞ்சுரும் பெரியப்பா…அதுக்கு அப்புறம் எந்த வேலையும் இல்லை…நேரா வீட்டுக்குத்தான்”

“இருந்தாலும்… எல்லோரும் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற நேரத்தில…காலை உணவு மட்டுமாவது அவங்க கூட…”

அவன் எழுந்து விட்டான். ”அவங்களைப் பார்த்துக்கத்தான் நீங்க இருக்கிறீங்களே பெரியப்பா…பிறகென்ன?”

தன் பேச்சினால் அரைகுறை உணவுடன் மகன் எழுந்து விட்டானோ என அவசரம் அவசரமாக அவன் தட்டைப் பார்க்க… அவர் பார்வையை உணர்ந்தவன் முகம் புன்னகையில் மலர…

“சாப்பிட்டு முடிச்சுட்டேன் பெரியப்பா… கவலைப்படாதீங்க…நான் கிளம்புறேன்” என வேக எட்டுக்களுடன் வீட்டை விட்டு வெளியேறினான்.

அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணபிரானிடம் இருந்து நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

விஜய்யின் கண்களில் இருந்தோ… குரலில் இருந்தோ… அவனது செய்கைகளில் இருந்தோ கூட, அவன் மனதை யாராலும் அளவிட முடியாது. அந்த அளவிற்கு மனதை மறைப்பதில் திறமைசாலி அவன்…

எதிராளியின் ஒவ்வொரு அசைவையும் ஏன் கண்ணிமைப்பதை வைத்துக் கூட அவர்களை எடை போட்டு அதற்குத் தகுந்தபடி தன் நகர்த்தல்களைத் திட்டமிடுபவன் தன்னைக் காட்டிக் கொள்ளவே மாட்டான்.

அதற்காக அவனைப் பொறுமைசாலிகள் பட்டியலில் சேர்க்க முடியாது…பொறுமை இழந்தாலும் அதைக் காட்டிக் கொள்ள மாட்டான்…அவ்வளவே!

சிரித்துக் கொண்டே பேசினாலும் மனதில் என்ன நினைக்கிறான் என யாராலும்…அவராலுமே கணிக்க முடியாது. அதை உணர்ந்தவரானதாலேயே கவனமாக அவனிடம் பேசினார் கண்ணபிரான்.

இறுகிப் போய் இருப்பவன் மன உணர்வுகளை வெளிப்படுத்தி இயல்பாக இருக்க மாட்டானா எனப் பலமுறை அவர் யோசித்திருக்கிறார்…ஆனால் அது நிகழ்ந்ததே இல்லை… இதில் திருமணம் வேறு நிகழப் போகிறது…அதுவும் காதல் திருமணம்…மனைவி வந்தாவது மாற்றங்களை நிகழ்த்துகிறாளா பார்க்கலாம் என நினைத்துக் கொண்டே தன் காலை உணவினை முடித்து எழுந்தார்.

……………………………………………………………………………………………..

விண்ணைத் தொட்டு விடும் போல நின்றிருந்த அந்தக் கட்டிடம் நாற்பது மாடிகளுடன் கம்பீரமாகத் தோற்றமளித்தது. அதன் வாசலில் இருந்து வெளிப்பட்டான் விஜயாதித்தவர்மன்…

பிசினெஸ் வட்டாரத்தில் விஜய் ஆதித்யா…

விஜய் ஆதித்யா… “வசந்தம்” குழுமத்தின் நிறுவனர்…மற்றும் சிஇஓ…

தாய் வசந்தியின் பெயரால் ‘வசந்தம்’ எனப் பெயரிட்டுத் தனது இருபதாவது வயதில் சிறிய அளவில் வசந்தம் நிறுவனத்தை ஆரம்பித்து பின் பல கிளைகளுடன் அதை வசந்தம் குழுமமாக மாற்றி… எந்த விதப் பின்புலமும் இல்லாமல்… தன் விடாமுயற்சியாலும், திறமையாலும், தன்னம்பிக்கையாலும்  சிறிது சிறிதாக முன்னேறி… இன்று “வசந்தம்” குழுமம் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவின் பல மாநிலங்களிலும் கிளைகளை நிறுவி,  சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு அவற்றை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறான் விஜயாதித்தன்.

அடுத்த முயற்சியாக ஜப்பானின் மின்சாதனப் பொருட்களை நேரடியாக அவர்களது நிறுவனத்திற்கு இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

அதன் முதல் கட்ட சந்திப்பிற்காகத்தான் விஜய் இப்போது சென்று கொண்டிருந்தான்.

நீள நீளமாகக் கையும் கால்களும்… அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவன் பின்னே சென்று கொண்டிருந்த மிஸ் மெலிஸா…அவனது  காரியதரிசி…சராசரிப் பெண்களின் உயரத்தை விட இரண்டு இன்ச் குறைந்தவர்… இரண்டு எட்டுக்கள் எடுத்து வைக்க வேண்டியிருந்தது. முடியாத சில நேரங்களில் அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவன் பின்னோடு ஓட வேண்டியிருந்தது.

ஏதோ கேள்வி கேட்டவன் பதில் வரவில்லை எனவும் நின்றான். அவன் நிற்கவும் அடுத்த கணம் அவனோடு வந்து இணைந்து கொண்ட மெலிஸாவைப் பார்த்தவன்…முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் “கார் வரச் சொல்லியாகி விட்டதா?” என்றான்.

மெலிசாவுக்குத் தெரியும் அவனுக்குக் கோபம் என்று… கையையும் காலையும் இத்தனை நீளமாக வைத்துக் கொண்டு துடுப்புப் போடுவது போல் நடந்தால்…செப்பு சாமான் போல் உயரம் கொண்ட அவர் எப்படி அவனுக்கு இணையாக நடந்து வர முடியும்?

ஆனால் பதிலுக்கு எதுவும் சொல்ல மாட்டார். அவனும் அவரைக் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். வீட்டில் அவன் மரியாதை கொடுக்கும் ஒருவர் பெரியப்பா என்றால் அலுவலகத்தில் மெலிசா…

மெலிஸா உயரம் மட்டும்தான் குறைவு, வேலையில் படுகெட்டி. அவன் தொழிலை ஆரம்பித்த சமயத்தில் இருந்து அவனுடன் இருக்கிறார். அவனை விட ஐந்து வயது மூத்தவர். ஒருநாள் அவர் விடுப்பு எடுத்தாலும் அவனுக்குக் கை ஒடிந்தது போல் ஆகும். மெலிசாவுக்கும் உறவு என சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாததால் விடுப்பு எடுக்கும் சந்தர்ப்பங்களும் அரிதே.

கட்டிடத்தின் பின்புறமிருந்து வளைந்து  முன் வந்து நின்ற வண்டியைக் காட்டி… “இதோ!” என்றவரை மேலே எதுவும் சொல்லாமல் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு ஏறி அமர்ந்தான்…

மெலிஸா  முன்புறம் ஏறிக் கொள்ளக் வண்டி கிளம்பியது.

“நீங்கள் பேச வேண்டிய டாக்ஸ் (docs)”…என்று மெலிஸா பின்புறம் அவனிடம் ஒரு கோப்பை நீட்ட அதை வாங்கிக் கொண்டவன் சாய்ந்து அமர்ந்து அதைப் பார்வையிட ஆரம்பித்தான். பத்து நிமிடங்கள் கடந்து விட…

“இன்னும் எவ்வளவு நேரம் ட்ராவல்?” எனக் கேட்டான்.

“இதோ பாஸ்…ஐந்தே நிமிடங்கள்…”

கார் அந்தப் பெரிய நட்சத்திர உணவகத்தின் முன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவன்…மெலிஸா பின்தொடர உணவகத்தின் உள்ளே சென்றான்.

ஒரு மணி நேரம் கழித்து சந்திப்பு வெற்றிகரமாக முடிய வெளியே வந்தவன் கைபேசி ஒலிக்கவும் எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

“என்ன விஜய்! மீட்டிங் முடிஞ்சுதா?

“முடிஞ்சுது பெரியப்பா…”

“இனிமேலாவது வீட்டுக்கு வரலாம் இல்லையா!” சிறு சிரிப்புடன் கேட்டார்.

அவனும் சிரித்து கொண்டே “வந்துட்டே இருக்கேன் பெரியப்பா…”

“எனக்காக இல்ல விஜய்…உன் சித்திங்க, அத்தைங்க அவங்க பிள்ளைகள்னு வீடே நிறைஞ்சு இருக்கு. கல்யாண மாப்பிள்ளை எங்கே எங்கேன்னு ஆளுக்கு ஒரு பக்கம் கேட்டுகிட்டே இருக்காங்க…பதில் சொல்லி மாளலே… அதுனாலதான் கூப்பிட்டேன்”

“சரி பெரியப்பா… இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுல இருப்பேன்.”

மெலிசா வழியிலேயே இறங்கிக் கொள்ள… சொன்னது போலவே அரை மணி நேரத்தில் வீட்டில் இருந்தான்.

வீடு கல்யாணக் களையுடன் காட்சி அளித்தது.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவன் சித்தி சுசீலா பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள்.

“என்ன பிள்ள நீ! இப்படியா கல்யாணத்துக்கு முதல் நாள் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாம உழைப்ப! சாயந்திரம் எல்லாரும் கல்யாண மண்டபத்துக்குக் கிளம்பணும்…வா! முதலில் வந்து இந்த ஜூசைக்  குடி!”

“இதோ ஐந்து நிமிஷத்துல ட்ரெஸ் மாத்திட்டு வந்துடறேன் சித்தி” என்றவன் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறி மாடியிலிருந்த தன் அறைக்குள் நுழைந்தான்.

இதே சித்தி முன்னால் என்னவெல்லாம் பேசினாள் என்று எண்ணிப் பார்க்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

பன்னிரண்டாவது படித்துக் கொண்டிருந்தவன்… தாய், தந்தை, தாத்தா பாட்டி அனைவரையும் ஒன்றாக ஒரு விபத்தில் பறிகொடுத்த போது…எங்கே தன் பொறுப்பாகி விடுவானோ என்று ஒதுங்கி விலகியவர்கள்தானே இவர்கள் எல்லோரும்…இன்று பணம் வந்ததும் உறவுகள் ஒன்று கூடி விட்டன.

பெரியப்பா மட்டும் இல்லை என்றால் அவன் என்ன கதி ஆகி இருப்பானோ!

அதற்கு மேல் அவனைச் சிந்திக்க விடாமல் இன்டெர்காம் அழைத்தது.

இன்னொரு சித்தி மணிமேகலை… “ஜூஸ் கூட குடிக்காம மேல போய்ட்டியாமே! சீக்கிரம் கீழ வா ராஜா!”   குரலில் தேன் சொட்டியது.

மனதை மறைத்து… “இதோ வந்து விடறேன் சித்தி! ஐந்தே நிமிஷம்!” என்று முடித்தான்.

அவனுக்கு இவர்களை எல்லாம் அழைத்துச் சீராட இஷ்டம் இல்லை என்றாலும் பெரியப்பாவின் முகத்துக்காகப் பார்த்தான். இத்தனை நாட்கள் அவனுக்கு அவர்… அவருக்கு அவன்… என்று வாழ்ந்து விட்டார்கள்…இந்தக் கல்யாணத்தை முன்னிட்டாவது சொந்தபந்தத்துடன் அவன் கொஞ்சம் போக்குவரத்து வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார் அவர்.

                            ………………………………

Advertisement