வானவில் கோலங்கள்-17(2)

அத்தியாயம் -17(2)

வீட்டிற்கு வந்த மதுவுக்கு பொழுது போகவில்லை. பொன்னுத்தாயி சமைக்க வந்துவிட, சமையல் செய்யவும் தோன்றவில்லை. தன் மடிக்கணினியை எடுத்து வைத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தாள்.

இடையிலேயே பொன்னுத்தாயி சமைத்துவிட்டு சொல்லிக் கொண்டு சென்றுவிட்டார். மது படம் பார்த்து முடிக்கும் பொழுது நன்றாக இருட்டிவிட்டது. சக்தி இன்னும் வரவில்லை. மதுவுக்கு தனியாக இருக்க பயமாக இருந்தது. பின்னே மது பார்த்தது ‘பிசாசு’ திரைப்படம் ஆயிற்றே.

சக்தி எப்பொழுது வருவான் என மது எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவளை அதிகம் சோதிக்காமல் வந்து சேர்ந்தான்.

வந்தவன் குளிப்பதற்காக குளியலறை செல்ல, வீட்டில் இருக்க பயந்து போன மது குளியல் அறைக்கு வெளியில் வந்து நின்று கொண்டாள். குளித்து வெளியே வந்த சக்தி அவளை பார்த்து விட்டு “என்னடி?” எனக் கேட்டான்.

“ஈவ்னிங் போரடிக்குதுன்னு படம் பார்த்தேன். அதிலேருந்து பயமாயிருக்கு” என்றாள்.

“அப்படி என்ன படம் பார்த்த?”

“பிசாசு” என்றாள்.

“அது நல்ல பிசாசு ஆச்சே. அதுக்கு ஏன் பயப்படுற?” எனக் கேட்டான்.

“எனக்கு பயமாயிருக்கு” என்றாள்.

“சரி நான்தான் இருக்கேனே, பயப்படாத வா” என வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

இவன் பின்னேயே ஒட்டிக் கொண்டு நடந்தாள். அவன் ஆடை மாற்ற, மது திரும்பி நின்று கொண்டாள்.

“இதுல மட்டும் விவரமா இரு” என்றவன் ஆடை மாற்றிவிட்டு, “மாத்திட்டேன் திரும்பு” என்றான்.

உணவருந்திவிட்டு முற்றத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

“சரி மது எனக்கு தூக்கம் வருது நீ போய்ப் படு” என்றவன், கிசுகிசுப்பாக “பயமா இருந்தா சொல்லு, மாமன் வந்து பக்கத்துல படுத்துக்கிறேன்” என்றான்.

சக்தியை முறைத்தவள் “ஒன்னும் தேவையில்லை, நான் லைட் போட்டுக்கிட்டே படுத்துக்கிறேன்” என கூறியவள் “ரெஸ்ட் ரூம் போகணும். துணைக்கு வாங்க” என்று அழைத்தாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன், “சுண்டெலிக்கு இப்படி ஒரு வீக்னெஸா?” என கேட்டுக் கொண்டே எழுந்தான்.

மது ஓய்வறை சென்றுவிட்டு வர, “ஏய் சுண்டலி நல்லா யோசிச்சு சொல்லு. மாமா உன் பக்கத்துல படுத்துக்கட்டா?” எனக் கேட்டான்.

“நீங்க நினைக்கிறது ஒன்னும் நடக்காது” எனக் கூறி முறுக்கிக்கொண்டு அவளது அறைக்கு சென்றாள்.

“போடி போ… போன வருஷம் செத்துப்போன செல்லத்தாயி இங்கதான் பேயா அலையுதாம். எதுக்கும் நல்லா யோசிச்சிக்கோ” என்றான்.

“பொய் சொல்லி என்னை ஏமாத்த பார்க்காதீங்க” எனக் கூறி படுக்கையில் படுத்து விட்டாள்.

“என்ன சொன்னாலும் ரொம்ப தெளிவா இருக்காளே” என புலம்பிக்கொண்டே முற்றத்தில் பாய்விரித்து படுத்தவன் சிறிது நேரத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டான்.

மது உறங்க முற்பட அவளுக்கு உறக்கம் வருவேனா என்றது. காற்று வீச அதில் மரங்களின் கிளைகள் அசையும் சத்தம் வேறு பயத்தை அதிகப்படுத்தியது.

ஜன்னல் வழியாக மரங்கள் அசையும் நிழல் அறையின் சுவர்களில் தெரிய, பயந்துபோன மது ஜன்னலை சாத்தினாள். ஜன்னலுக்கு வெளியே யாரோ நிற்பது போலவே அவளுக்கு இருக்க கூடத்தை எட்டிப் பார்த்தாள். முற்றத்தில் படுத்து சக்தி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

இரண்டு தலையணைகளை கையில் எடுத்துக் கொண்டவள், சத்தமில்லாமல் அவனருகில் சென்றாள். ஒரு தலையணையை போட்டு அவனருகில் படுத்தவள் அவனுக்கும் இவளுக்கும் இடையில் ஒரு தலையணையை போட்டாள். அப்பொழுதும் தூக்கம் வரவில்லை மதுவுக்கு. வானத்தைப் பார்க்க கருத்த வானம் அவளது பயத்தை மேலும் தூண்டியது.

இருவருக்கும் இடையில் இருந்த தலையணையை எடுத்து விட்டு சக்தியை நெருங்கி, ஆனால் அவனை தொடாதவாறு படுத்துக் கொண்டாள். எங்கிருந்தோ ஆந்தை ஒன்று அலற, கண்களை இறுக மூடியவள், ஒருக்களித்துப் படுத்திருந்த சக்தியின் இடுப்பைச் சுற்றிக் கையைப் போட்டு அவனது முதுகில் முகம் புதைத்தாள்.

கோடைகாலம் என்பதால் மேலாடை இன்றி வெறும் வேஷ்டி மட்டும்தான் சக்தி அணிந்திருந்தான். மதுவின் கைபட்ட ஸ்பரிசத்தில் விழித்துக் கொண்டவன் அவள் புறம் திரும்பி “என்னடி?” எனக் கேட்டான். இப்போது அவன் வெற்று மார்பில் முகம் புதைத்து அவனிடம் “பயமாயிருக்கு” என்றாள்.

“நான் இருக்கும் போது என்னடி பயம்?” எனக் கேட்டான் சக்தி.

“எதைப் பார்த்தாலும் பயமா இருக்கு” என்றவள் அவனை இறுக அணைத்துக் கொண்டு, அவளது கால்களை அவன் மீது போட்டுகொண்டு உறங்க முற்பட சக்திக்கு உறக்கம் முழுவதும் கலைந்துவிட்டது.

மதுவை அணைத்துக் கொண்ட சக்தி ஒரு கணவனாய் மாறி அவளிடம் உரிமையாய் தன் கைகளை அலைய விட, “என்ன பண்றீங்க?” என பதறிப்போய் எழுந்தமர்ந்தாள் மது.

வலது முழங்கையை தரையில் ஊன்றி, தன் உள்ளங்கையில் தலையை முட்டுக்கொடுத்து, “நீ தானடி என் பக்கத்துல வந்து படுத்து என்னை என்னென்னமோ செஞ்ச? அதையே நான் செஞ்சா தப்பா?” என்றான்.

“ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க” என ஒரு விரல் காட்டி மிரட்டினாள்.

“என் பக்கத்துல படுக்காதே, போடி, படுத்தா இப்படித்தான் பண்ணுவேன்” என சக்தி கூற, “நான் இங்கதான் படுப்பேன். நீங்க என்னை டச் பண்ணக் கூடாது” என்றாள்.

“நான் உன்னை டச் பண்ண மாட்டேன். ஆனா நீ என்னை தொட்ட… அப்புறம் நீ என்னை தடுக்க கூடாது” என்றான்.

சரி என ஒத்துக்கொண்ட மது அவனருகில், அவனைத் தொடாமல் படுத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் மீண்டும் சக்தி உறங்கி விட, அவன் உறங்கி விட்டான் என்பதை அறிந்து மெதுவாய், மிக மெதுவாய் அவன் மீது கையை போட்ட மது உறங்க முற்பட, அவளை வளைத்து பிடித்து வேகமாய் அவளுக்கு முத்தமிட்டான் சக்தி.

சக்தி எல்லை மீறத் தொடங்க, இருவரையும் காதல் பிசாசு பிடித்துக்கொண்டது. இருவரது உணர்ச்சிகளும் பேயாட்டம் போடத் துவங்கியது. இதழ் முத்தத்தில் ஆரம்பித்தது முடிவடையாமல் தொடர, மதுவின் நினைவில் இப்போது சக்தியைத் தவிர வேறு எதுவும் இல்லை. மதுவின் மனம் கோணாமல் அவளை மொத்தமாய் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான் சக்தி.

இன்ப சாகரத்தில் நீந்திய இருவரும் ஓய்ந்து போய் நெருக்கமாக படுத்திருக்க, “ஃபிராடு, ஃபிராடு…” எனக்கூறி சக்தியின் நெஞ்சில் செல்லமாய் அடித்தாள் மது.

“என்னடி ஃபிராடு? நீதான் ஃபிராடு. நான் வார்த்தை தவற மாட்டேன். நான் தொட மாட்டேன் நீ தொட்டா விட மாட்டேன்னு சொன்னேன்தானே… அப்புறம் ஏன் என்னை தொட்ட?” எனக் கேட்டான்.

அவனை முறைத்தவாறு ஏற்கனவே அணைத்திருந்த அவளது அணைப்பை இன்னும் இறுக்கி அவனோடு ஒண்டிக்கொண்டு “லவ் யூ மாமா” என்றாள்.

“எங்க… எங்க இன்னொரு தடவை சொல்லு” என சக்தி கேட்க “லவ் யூ மாமா” என மீண்டும் கூறினாள்.

சிரித்த சக்தி “சுண்டெலி உன் மாமாவும் லவ் யூ டி” என்றான்.

காலையில் மது கண்விழித்தபோது அவளது அறையில் இருந்தாள். படுக்கையிலிருந்து எழாமலே தன் கணவனுக்கு அழைத்தாள்.

“காலையில கண்ண தொறந்து பார்த்தா ஆளை காணோம். எங்க போயிட்டீங்க?” எனக் கேட்டாள்.

“நான் வெள்ளனவே வயலுக்கு வந்துட்டேன் டி. காலை சாப்பாட்டுக்கு வந்துடுறேன்” எனக் கூறினான்.

“உங்க அத்தை பத்தி ஏதாவது விசாரிச்சீங்களா?” எனக் கேட்டாள்.

“நீ ஆரம்பிச்சுட்டியா?” என்றான்.

“ஏற்கனவே உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. இனிமேல் கேட்கவும் வேண்டாம். அப்படியே விட்டுடாதீங்க. என்னன்னு கொஞ்சம் பாருங்க” என்றாள்.

“ம்.. ம்…” என்றான் சக்தி.

“இன்னும் ஒரு வாரத்துல மெடிக்கல் கேம்ப். ஏற்பாடெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு” எனக் கேட்டாள்.

“சுத்தி இருக்கிற கிராமத்துக்கு எல்லாம் அறிவிக்க ஏற்பாடு பண்ணிட்டேன். நம்ம ஊரு சமுதாயக் கூடத்தில் கேம்ப் போடவும் ஏற்பாடு பண்ண சொல்லிட்டேன்” என்றான்.

“சுகன்யாவுக்கு…” என மது ஆரம்பிக்க,

“அடியே… நைட் நடந்ததை நினைச்சு கொஞ்ச நேரம் என்னை சந்தோஷமா இருக்க விட மாட்டியா? ஃபோன் பண்ணி மாமா, செல்லம், புஜ்ஜின்னு கொஞ்சறதை விட்டுட்டு என்னென்ன பேசுற? நீ மாமாவை மட்டும் பாரு. மத்ததை நான் பார்த்துக்குறேன்” என்றான்.

“எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன், நான் பார்த்துக்குறேன்னு அப்போயிலேருந்து இப்படித்தான் சொல்லிக்கிட்டே இருக்கீங்க. ஒன்னும் பார்க்கத்தான் காணோம்” என்றாள்.

“எல்லாம் பார்க்கிறேன். வெயிட் பண்ணு. இப்போ இழுத்து போத்திகிட்டு மாமாவை நினைச்சுக்கிட்டே இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு” என சொல்லி வைத்தான்.

“என்னடா காலையிலேயே பஞ்சாயத்தா?” எனக் கேட்டான் குரு.

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா. இந்த சுகன்யா கல்யாணத்தை பத்தி உன்கிட்ட சொல்லியிருந்தேனே… எதுவும் பேசினியா இல்லையா?” என குருவிடம் கேட்டான் சக்தி.

“நேத்துதான் சுகன்யாவை பார்த்தேன் டா. தனியா நடந்து போய்க்கிட்டு இருந்துச்சு. என்னன்னு விசாரிச்சேன். காலேஜ்க்கு மார்க் சீட் வாங்கப் போறேன்னு சொல்லிச்சு. சரி வா பஸ் ஏத்தி விடுறேன்னு நானே ஏத்தி விட அழைச்சுட்டுப் போனேன்”

“பஸ்சுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற நேரத்துல, சீக்கிரம் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு சுகன்யா. உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சால்தான் சக்தியும் மதுவும் சந்தோஷமா இருப்பாங்க அப்படின்னு சொன்னேன்”

“இதை வச்சுக்கிட்டு எப்படி மாமா என்னை யாரும் கல்யாணம் பண்ணிப்பாங்க அப்படின்னு கேட்டு, அவ கையில பச்சை குத்தியிருக்கிற உன் பேரை காட்டுறாடா. எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் மாமா, நான் மேல படிக்கப் போறேன்னு சொல்லிட்டு பஸ்ல ஏறி போயிட்டா” என்றான் குரு.

“அவ வேணாம்னு சொல்லிட்டா அப்படியே விட்டுடுறதா? இந்த பச்சையை அழிக்க ஏதாவது வழி இருக்கும். நான் மதுகிட்ட கேட்டு சொல்றேன் டா” என்றான் சக்தி.

“எனக்கும் ஒரே யோசனையா இருக்கு டா. சுகன்யா பத்தி தெரிஞ்சு கல்யாணத்துக்கு அப்புறம் அந்த புள்ளைக்கு எதுவும் பிரச்சனை வந்துச்சுன்னா…? அதனால அவசரப்படாம கொஞ்சம் நல்ல பையனாதான் பார்க்கணும்” என்றான் குரு.

சக்திக்கும் சரியாகவே பட்டது. இந்த விவரங்கள் தெரிந்து சுகன்யாவின் திருமண வாழ்க்கையில் எதுவும் பிரச்சனை என்றால் மது தாங்கமாட்டாள். மது என்ன தன்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாது என நினைத்துக்கொண்டான்.

மது எழுந்து குளித்து தயாராகி சக்திக்காக காத்திருந்தாள். எதேச்சையாக அவளது கண்ணில் சக்தி கொடுத்த மரப்பாச்சி பொம்மை பட்டது. அதை கையில் எடுத்தவள் ரசித்து பார்த்திருந்தாள். அப்படிப் பார்க்கும் பொழுது பொம்மையின் அடியில் ஆங்கில எழுத்துக்களில் ‘டி என்’(T. N) என எழுதப்பட்டிருந்தது. யோசனையுடன் சக்தி வருவதற்காகக் காத்திருந்தாள் மது.