“சபை கலையலாம்”, என்று மகாராஜா உரைத்தவுடன் அங்கிருந்து கிளம்பிய அவளுக்கு மகாராஜா அனைவரையும் நிறுத்தி “இன்று அனைவருக்கும் அரண்மனையில் தான் விருந்து”, என்று உரைத்தது கூட தெரியாது.
அது மட்டும் அல்ல, எதிரே வருபவர் யார்? போகிறவர் யார்? என்று கூட தெரியாமல் தன்னுடைய வீட்டுக்கு ஓடியே போனாள் அவள்.
சபையில் இருந்த அனைவரும் கிளம்பிய பிறகு “நான் உன்னை எதற்காக தூது அனுப்பினால் நீ என்ன காரியம் செய்து கொண்டு வந்திருக்கிறாய் நரேந்திரா?”, என்று புன்னகையுடன் கேட்டார் மகாராஜா.
“இந்த பெரிய தந்தை தானே தங்களிடம் என் காதலை பற்றி பற்ற வைத்தார். கூறுங்கள் தந்தையே”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.
“நான் ஒன்றும் உன் தந்தையிடம் உரைக்க வில்லையப்பா. ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான் கூறினேன். உன் புதல்வனுக்கு வாசுதேவச்சக்கரவர்த்தி நாட்டை விட்டு வர மனதில்லை என்று. அதற்கு இரு காரணம் தானே இருக்க முடியும் என்று என் சகோதரனே யூகித்து விட்டான். ஒன்று மண்ணாசை, மற்றொன்று பெண்ணாசை. உனக்கு மண்ணாசை கிடையாது என்று அனைவருக்கும் தெரியும். அப்போது மற்றது தானே காரணமாக இருக்க முடியும்”, என்று சிரித்தார் வராக சித்தர்.
“என் தந்தையின் புத்தி கூர்மையை தாங்கள் அறியாததா பெரிய தந்தையே? நீங்கள் ஒரு வார்த்தை கூறினாலே அவர் சரித்திரம் படைத்தது விடுவார். இன்று நீங்கள் இவ்வளவு சொன்னால் அதை அவர் கண்டு பிடிக்காமல் போவாரா? உங்கள் அனைவருக்கும் என் செயலில் பிடித்தமின்மை இருக்கிறதா?”, என்று மகாராஜாவிடமும், மகாராணியிடமும் வினவினான் நரேந்திரவர்மன்.
“இந்த சிறு வயதிலே பல தேசங்களை வென்று வெற்றி வாகை சூடியவன் நீ? உன் செயலை நாங்கள் என்றும் ஆதரிப்போமே தவிர எதிர்க்க மாட்டோம் நரேந்திரவர்மா. நட்பு நாடுகளாக இருந்த இரண்டு தேசமும் இனி உங்கள் இருவரின் திருமணம் மூலம் உறவாகட்டும். போர் முடிந்த பிறகு நானே வாசுதேவரிடம் உரைக்கிறேன்”, என்றார் மகாராஜா.
“அவ்வாறே ஆகட்டும் தந்தையே. அன்னையே தாங்கள் ஒன்றுமே கூற வில்லையே? என் மீது எதாவது வருத்தம் இருக்கிறதா?”
“பேர் சொல்லும் பிள்ளையப்பா நீ. உன்னை பெற்றதால் நான் பாக்கியம் பெற்றதாய் நினைத்து கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும் போது உன் சந்தோசம் எனக்கு வருத்தம் தருமா? என் யோசனையே வேறு. நீ சிறுவனாக இப்போது தான் எங்கள் கால்களுக்குள்ளும், கைகளுக்குள்ளும் துள்ளி திரிந்தது போல இருந்தது. இப்போது என்னவென்றால் சிறிது நாளில் உன் புதல்வனே இங்கு எங்களை ஒரு வழி செய்ய போகிறான் என்று நினைத்து பார்த்தேன்”, என்றாள் பாண்டிமாதேவி.
“கேலி செய்யாதீர்கள் அன்னையே”
“வீராதி வீரனின் வெட்கத்தை பார்த்தீர்களா மகாராஜா?”, என்று சிரித்தாள் பாண்டிமாதேவி.
“ஆம் தேவி. சரி உன் மனதை கவர்ந்த பெண் வெகு அழகா நரேந்திரா?”, என்று விசாரித்தார் மகாராஜா.
“என் அன்னையை போன்ற பெண். ஆனால் என் அன்னையை விட கோபமும், வேகமும் கொண்டவள். அழகென்று பார்த்தால் என் அன்னையை விட குறைவு தான் தந்தையே. ஆனால் என் கண்களுக்கு அவளே ரதி. அவளே தேவதை”, என்று கனவில் பேசுவதை போல பேசினான் நரேந்திரவர்மன்.
“நான் கூற வில்லை. மகன் அடிக்கடி கனவுலகுக்கு சென்று விடுகிறான்”, என்று சிரித்தார் வராக சித்தர். அவனை பார்த்து மற்றவர்களும் சிரித்தார்கள்.
“கனவை சிறிது தள்ளி வைத்து விட்டு படையை கவனி நரேந்திரா”, என்றார் மகாராஜா.
“ஆகட்டும் தந்தையே. இப்போது விடை பெறுகிறேன்”, என்று கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
போகும் அவனையே பார்த்த பெரியவர்கள் மூவருக்கும் மனதுக்கு நிறைவாக இருந்தது.
நரேந்திரவர்மன் திருமண செய்தி கேட்டு கண்ணீரை மறைத்து வீட்டுக்கு போனவளோ குமுறி குமுறி அழுதாள். அவள் கண்ணீர் அவளின் மேலாடையை நனைத்தது.
அப்போது “சாந்தா சாந்தா”, என்று ஒரு பெரியவர் அழைக்கும் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அருகில் இருந்த துணியை கொண்டு முகத்தை அழுந்த துடைத்து கொண்டே “இதோ வருகிறேன் தாத்தனாரே”, என்று உரைத்தாள்.
“சரி அம்மா, நான் இந்த திண்ணையில் சிறிது நேரம் அமர்கிறேன்”, என்று கூறி கொண்டே அதில் அமர்ந்து விட்டார் அவர்.
முகத்தை துடைத்து கொண்டு வெளியே வந்தவள் “பசி வந்து விட்டதா தாத்தனாரே? அதனால் தான் என்னை அழைத்தீர்களா?”, என்று புன்னகையுடன் கேட்டாள்.
“பசியா? இன்று தான் அரண்மனையில் நம் மக்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தார்களே தாயி. நம் சக்கரவர்த்தி கொடுத்த விருந்தை உண்டு விட்டு அடுத்த வேளை கூட பசிக்காது”
“என்ன அரண்மனையில் விருந்தா? எதற்காக தாத்தனாரே? இளவரசர் திரும்பி வந்ததாலா?”
“அது அல்ல அம்மா. நீ கவனிக்க மறந்து விட்டாயா? இளவரசருக்கு திருமணம் என்று செய்தி கூறி தான் விருந்து வைத்தார்கள். அருமையான விருந்து. அதனுடன் நம் இளவரசருக்கு திருமணம் என்பது எவ்வளவு பெரிய சுப செய்தி?”, என்று கூறி கொண்டே அவளுடைய வயிற்றில் நெருப்பை பற்ற வைத்தார் அவர்.
கலங்கிய கண்களை மறைக்க முடியாமல், அவருக்கு முதுகு காட்டி எதையோ எடுப்பது போல திரும்பி கொண்டாள்.
“இருந்த மகிழ்ச்சியில் நான் கூற வந்ததை மறந்து போனேன் சாந்தா. நாளையோடு கிழவி இறந்து ஒரு வருடம் முடிகிறது. நாளை மாலை அவளுக்கு படைப்பு வைத்து கும்பிட வேண்டும். நீ வந்து கொஞ்சம் உதவி செய் தாயி”
“நாளை காலையிலே வந்துவிடுகிறேன். இரவு உணவுக்கு வந்து விடுங்கள்”
“சரி அம்மா. நீ இன்று காடு கரையை பாக்க செல்ல வில்லையா?”
“இளவரசர் வருகிறார் என்று இன்று எவருமே வேலைக்கு செல்ல வில்லை தாத்தனாரே”
“ஆமாம் அவரை பார்ப்பதற்காக வேலையை என்ன, உயிரை கூட விடுவோமே. சரி ஆத்தா. நீ ஓய்வு எடு. நான் வீட்டுக்கு போய் செத்த படுக்கிறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து போய் விட்டார்.
அவர் போன பிறகு கதவை அடைத்து விட்டு விரித்திருந்த ஓலை பாயில் படுத்தவள் மறுபடியும் கண்ணீர் விட்டாள்.
தன்னை நினைத்தே கோபம் வந்தது சாந்தாவுக்கு. “நானே சாமானிய பெண். தாய், தந்தை இல்லாத அநாதை. என்னை விட்டு இறந்து போன என் பெற்றோர்கள் சிறிது நகையும்,நிலமும் எனக்கென்று விட்டு விட்டு சென்றதால் இப்போது உழைத்து பிழைக்கிறேன். ஆனால் இளவரசரோ தேரில் பவனி வரும் கடவுளுக்கு நிகரானவர். அவருக்கு திருமணம் என்று மகிழாமல் இப்படி பொறாமையில் அழுகிறேனே”
“என்ன செய்வது அவரையே மணாளனாக மனதில் வடித்து கொண்டேனே. என்னால் அவரை மறக்க இயலவில்லையே. என்னால் அவர் நினைவை அகற்ற இயலவில்லையே. இப்படி ஒருத்தி அவர் நினைவாக இருக்கிறேன் என்பது கூட அவருக்கு தெரியாது. வெகுநாள்கள் கழித்து அவர் திருமுகத்தை தரிசிக்க எத்தனை ஆவலாக சென்றேன். ஆனால் கடைசியில் இடி விழுந்து போனதே”
“கடைசி வரை அவருடைய திருமுகத்தை பார்த்து கொண்டே என் உயிரை மாய்த்து கொள்ள முடியும் தான். ஆனால் அவர் மணந்து கொண்டு வரும் பெண்ணுடன் அவர் வாழ்வதையும், அவளுடன் அவர் பவனி வருவதையும் என்னால் தாங்க இயலுமா? இது என்ன சோதனை? கடவுள் மீது காதல் கொள்ளலாகுமா? அப்படியே கொண்டாலும் நான் என்ன ஆண்டாளா? என் விருப்பம் நிறைவேற?”
“மகாராஜா இளவரசருக்கு பெண்ணை பார்த்து விட்டாரா? அவள் எந்த நாடு? என்னை விட அழகாக இருப்பாளா? இருக்க மாட்டாளா என்ன? நிச்சயமாக அவள் அரச குமரியாக தான் இருப்பாள். அப்போது ரதியாக தானே இருப்பாள்? இளவரசருக்கு அவளை தான் பிடிக்கும். என்னை போன்ற சாமானியர் மீது காதல் கொள்வது என்பது அரண்மனையில் நடவாதே. ஆனால் இளவரசரின் காதலாவது எனக்கு கிடைத்திருக்கலாம்”
“என்ன யோசிக்கிறேன் நான்? எனக்கு புத்தி பேதலித்து விட்டது. அய்யகோ நான் என்ன செய்வேன்? இந்த ஜென்மத்தில் நான் எதாவது ஒரு தேசத்தின் அரச குமாரியாக பிறந்திருக்கலாமே? அப்படி அரச குமரியாக பிறந்திருந்தால் மட்டும் எனக்கு இளவரசர் கிடைத்து விடுவாரா என்ன?”
“நானோ தரித்திரம் பிடித்தவள். எனக்கு எந்த நல்லதும் நடக்காது. நான் அரச குமாரியாக பிறந்திருந்தால் கூட இளவரசரை அடைய முடிந்திருக்காது. ஆதித்த கரிகாலன் மீது காதல் கொண்ட நந்தினி ஒரு அரச குமாரியாக தான் பிறந்தாள். ஆனால் அவள் விதி அந்த உண்மை கடைசியில் தானே அவளுக்கு தெரிந்தது. அவள் யாரென்று தெரிவதுக்கு முன்னே அவள் சாமானிய வம்சத்தை சேர்ந்தவள் என்ற காரணத்தினாலே ஆதித்த காரிகாலனிடம் இருந்து பிரித்து வைக்க பட்டாள்”
“ராணியாக பிறந்த அவள் மட்டும் அவள் காதலை அடைந்து விட்டாளா என்ன? அது போல தான் என் நிலைமையும் ஆகும். நான் அரச குமாரியாக பிறந்தாலும் எனக்கு இளவரசர் கிடைக்க மாட்டாள். அந்த அழகு சுந்தரி நந்தினியை என்னுடன் ஒப்பிடுவதா? அவள் எல்லாவற்றையும் இழந்தாலும் ஆதித்த கரிகாலனின் உண்மையான காதலை பெற்ற புண்ணியவதியாயிற்றே?”
“அவள் கொன்றால் கூட சாவேன் என்று கூறி உயர்ந்த காதலை அவளுக்கு அந்த ஆதித்த கரிகால இளவரசர் கொடுத்தாரே. கடைசியில் அவளை காண சென்று அவள் கண் முன்னே உயிர் நீத்தாரே? அந்த காதல் எனக்கு கிடைக்க வில்லையே. இளவரசர் நரேந்திரவர்மனின் கடைக்கண் பார்வை கூட என் மீது விழ வில்லையே”
“இல்லை என் மீது அவர் பார்வை விழுந்தது. அந்த நொடியில் இருந்து தான் நான் அவரை இப்படி பைத்தியமாக திரிகிறேன்”, என்று சிந்தித்தவளுக்கு அவனை இருமுறை அருகில் பார்த்த காட்சி கண் முன் விரிந்தது.