அந்த அவையே அமைதியில் உறைந்திருந்தது.

தன் விளையாட்டு  தனம் அனைத்தையும் விடுத்து கம்பீரமாக பேச ஆரம்பித்தான் நரேந்திரவர்மன்.

“எமது தந்தை இந்திரவர்மன் தங்களுக்கு என் மூலம் ஓலை அனுப்பி இருக்கிறார் மகாராஜா. அது என்னவென்றால் செங்கல்வராயன் தங்களுடன் போரிட ஆயத்தமாயிருக்கிறான். அந்த செய்தியை தாங்களும்  ஒற்றர் மூலம் இதற்குள் அறிந்திருப்பீர். எமது தந்தை தங்களிடம் கூற சொன்னது  யாதெனில் செங்கல்வராயன் தங்களை படை பலத்தால் முறியடிக்க விரும்பாமல் சூழ்ச்சியால் முறியடிக்க உத்தேசித்திருக்கிறான்”

“என்ன? தாங்கள் என்ன கூறுகிறீர்கள் இளவரசே?”, என்று அதிர்ச்சியாக கேட்டார் மகாராஜா.

“ஆம் மகாராஜா. தாம் உரைத்தது உண்மையே. செங்கல்வராயன் பாம்பை போன்றவன். அவன் விஷம் கக்குவது தங்கள் தேசத்துக்கு உகந்தது அல்ல. எமது தந்தையும் தங்களுக்கு இரண்டு ஆலோசனை கூறியுள்ளார். ஒன்று செங்கல்வராயனுடன் திருமண உறவை ஏற்படுத்துவது. அதை தங்கள் புதல்வி மறுத்த விதத்தை பார்த்ததில் அந்த வழி அடைந்து போனது மகாராஜா”

….

“மற்றொன்று எங்களிடம் தாங்கள் எந்த உதவியும் பெறலாம் என்று கூற சொன்னார். தங்களுடைய தந்தையும், என் தந்தையாரின் தந்தையும் நெருங்கிய நண்பர்களாம். அந்த நட்பின் காரணமாக தான் இந்த ஓலை என்றும் கூற சொன்னார் மகாராஜா”

“என்ன? இந்திர வர்மரே உதவுகிறேன் என்று கூறினாரா?”

“ஆம் மகாராஜா. உதவியாக எத்தனை படைகளையும் அனுப்புவதாக கூறினார். போரில் என்னையும் பங்கேற்க சொன்னார்”

“அந்த கடவுள் தான் தங்களை இங்கே அனுப்பி வைத்துள்ளார் இளவரசே. இது வரை இருந்த கலக்கம் மறைந்தது போல இருக்கிறது”

“நீங்கள் கலக்கம் கொள்ள வேண்டாம் என்று உரைக்கவே தாம் வந்தோம். அது மட்டும் அல்லாமல் எப்படி நாட்டிற்குள் எளிதாக எதிரிகள் நுழைய முடிகிறது என்று பார்ப்பதற்காகவும் தான் தாம் திருட்டு  தனமாய் உள்ளே வந்தோம். கோட்டை காவல் அவ்வளவு கடினமானதாக இல்லை மகாராஜா. அதை பல படுத்த வேண்டும்”

“கண்டிப்பாக செய்கிறேன் இளவரசே”

“இளவரசே என்று தாங்கள் உரைக்க வேண்டாம் மகாராஜா. தாங்கள் என் தகப்பனாரை போன்றவர். நரேந்திரவர்மன் என்றே அழையுங்கள்”

“அது மரியாதையாக இராது இளவரசே”

“இனி தங்கள் விருப்பம்”, என்று அவரை பார்த்து சிரித்தவன் “இன்னொரு செய்தியும் உண்டு மகாராஜா. இன்னும் சில நாள்களில் போர் இருக்கும். வீரர்களை ஆயத்தமாக வைத்து கொள்ளுங்கள். எப்போது செங்கல்வராயன் படை முன்னேறி வருமோ, அப்போது எங்களுடைய படை தங்கள் படையுடன் சேர்ந்து கொள்ளும். அதை செங்கல்வராயன் எதிர்பார்த்திருக்க மாட்டான். அப்படியே அவனுக்கு நயவஞ்சகர்கள் மூலம் தகவல் போனாலும்  நமது படையை அவனால் ஒன்றும் செய்திட முடியாது”, என்றான்.

“ஆம் ஆம் வெற்றி நமக்கே”

“ஆம் மகாராஜா. ஆனால் தாங்கள் தயங்குவது போல பல வீரர்களை நாம் இழக்க வேண்டியது வரும். ஒரு நாட்டின் இளவரசனாக, படை தளபதியாக எனக்கும் அந்த கவலை உண்டு. ஆனால் தங்கள் மகள் கூறியது போல போர் என்பது மரபு மகாராஜா. வீரர்கள் போரில் மடிவது இயற்கை. அது அவர்களின் வீரமும் கூட. அவர்கள் குடும்பமே அவ்வீரனை வணங்குவார்கள். வீரரான தங்களுக்கும், எனக்குமே அதே நிலைமை  தான். அதை நினைத்து கலக்கம் கொள்ள வேண்டாம் மகாராஜா”

“ஆகட்டும் இளவரசே”

“நான் கூற வேண்டிய செய்தியை உரைத்து விட்டேன் மகாராஜா. நானும் என் தகப்பனாரும் புறப்படுகிறோம்”

“தற்போது தானே வந்தீர்கள். தாங்களும் சித்தரும் சில தினங்கள் இங்கே தங்கி இளைப்பாற வேண்டும்”

தகப்பனும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

“தங்கள் விருப்பத்துக்கு மறுப்பேது மகாராஜா. இருவரும் இரண்டு தினம் ஓய்வெடுத்து விட்டே செல்கிறோம்”, என்றார் சித்தர்.

“அது எங்கள் பாக்கியம் சித்தரே. யாரங்கே? இருவரும் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யுங்கள். அதற்கு முன் விருந்து தயாராகட்டும்”, என்று உத்தரவிட்டார் மகாராஜா.

“ஓய்வெடுக்க  நாழிகை குறைவாக இருக்கிறது மகாராஜா. நான் இந்த தேசத்தின் முக்கியமான பகுதிகளை பார்வை இட அனுமதி உண்டா?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

“இனி இது தங்கள் நாடு போல இளவரசரே. தங்களுக்கு  ஏது அனுமதி? தங்கள்  விருப்பம் போல தாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்”

“நன்றி மகாராஜா”, என்று நரேந்திரவர்மன் கூறியதும் “சபை களையலாம். நாளை போரை பற்றிய ஆலோசனை நடை பெறும்”, என்று உத்தரவிட்டார் மகாராஜா.

சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் விருந்து ஆரம்பமானது சித்தருக்கும் நரேந்திரவர்மனுக்கும்.

விருந்தில் மேக வேந்தன் மட்டுமே இருந்தான். நரேந்திரவர்மனின் கைகள் மேகவேந்தனின் தலையை வாஞ்சையுடன் தடவியது.

நரேந்திரவர்மனின் கண்கள் வான்மதியை தேடின. ஆனால் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அமைதி காத்தான்.

ஆனால் அவனையே நோக்கி கொண்டிருந்த சித்தர் “இளவரசியை காணவில்லையே, மகாராஜா?”, என்று கேட்டு விட்டார்.

“வான்மதிக்கு எப்போதும் அவளுடைய நந்தவனம் தான் பொழுது போக்கு. பசி, தூக்கம் மறந்து அங்கேயே தவம் இருப்பாள்”, என்று சிரித்தாள் அருந்ததி தேவி.

“அப்படியா? அந்த நந்தவனத்தில் அப்படி என்ன சிறப்பு? நாங்கள் அதை பார்வை இடலாமா?”

“விருந்து முடிந்த பிறகு  தங்களை  அங்கே அழைத்து போக ஆணை இடுகிறேன் சித்தரே”, என்றார் மகாராஜா.

விருந்து முடிந்து அறைக்குள் வந்தவுடன் “தந்தையே, எனக்கு ஒரு சந்தேகம்”, என்று ஆரம்பித்தான் நரேந்திரவர்மன்.

“உனக்கு சந்தேகமா? ஆச்சரியம் தான். கேள் மகனே”, என்றார் சித்தர்.

“இங்கே வரும் பொழுது தாங்கள் உடனே புறப்படுவதாக தானே என்னிடம் கூறினீர். ஆனால் இப்போது ஏன் இந்த புதிய முடிவு?”

“ஆம் உடனே புறப்பட்டு விடுவதாக தான் உரைத்தோம். நீயும் அதற்கு சரி என்று தானே கூறினாய்? பின் மகாராஜா இளைப்பாற சொல்லும் போது எந்த காரணத்தால் என் பதிலுக்காக என் முகத்தை பார்த்தாய்?”

“அது…அது… தங்கள் முடிவை தெரிந்து கொள்வதற்காக”

“என் முடிவு தான் உனக்கு தெரியுமே?”

“அது… அது…. தாங்களே மகாராஜாவிடம் உரைப்பது தான் மரியாதை என்று நினைத்தேன்”

“அவரை எள்ளி நகையாடும் போது அந்த மரியாதை எங்க போயிற்று நரேந்திரவர்மா?”

“குழப்பாதீர்கள்  தந்தையே. நான் என்ன கேட்கிறேன்? தாங்கள் எதை பற்றி வழக்காடுகிறீர்கள்?”

“சரியாக தான் நான் உரைக்கிறேன் மகனே. மகாராஜாவிடம் நீ உரையாடும் போது இளவரசியை பற்றி அதிகமாக, அதே நேரம் புன்னகையுடன் உரையாடியதை பார்த்தேன். சரி தான் என் மகன் இளவரசியிடம் மையல் கொண்டு விட்டான் என்று புரிந்து கொண்டேன். என்ன நரேந்திரவர்மா நான் உரைத்தது சரியா?”

“அப்படியா? அதெல்லாம் ஒன்றும் இல்லையே”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.

“ஒன்றும் இல்லையா? மேகவேந்தனின் தலையை அவ்வளவு வாஞ்சையுடன் நீ வருட காரணம் என்ன மகனே? சிறுவன் என்று நினைத்தா? மைத்துனன் என்று நினைத்தா?”

“தந்தையே இப்போது புரிகிறது. தங்களை அனைவரும் ஏன்  அரசியல் குரு என்று அழைக்கிறார்கள் என்று. தாங்கள் சாணக்கியர். அனைத்தும் அறிந்தவர் தாங்கள்”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.

“போர் முடிந்த பின் திருமண விழாவை பெரியதாக செய்ய வேண்டும் என்று உன் அப்பனுக்கு நாம் இங்கிருந்து சென்ற உடன் தெரிவிக்க வேண்டும். அவனும் உனக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க துடித்து கொண்டு தான் இருக்கிறான்”

“வேண்டாம் தந்தையே. போர் முடியட்டும். அதன் பின் பார்த்து கொள்ளலாம். என் உயிருக்கு கூட உத்திரவாதம் இல்லாத போது அன்னை, தந்தை மனதில் பொய்யான மகிழ்ச்சியை உருவாக்க இயலாது. அந்த பெண்ணிடமும் தான்”

“சரி தான். வீரனுக்கு உயிர் சொந்தம் அல்ல. பொறுத்திருந்து பார்ப்போம். அனைத்தும் நன்றாக நடக்கும் என்று நம்புவோம்”

அப்போது “ஐயா”, என்று மரியாதையுடன் கூடிய ஒரு வீரனின் குரல் கேட்டது.

என்னவென்று இருவரும் பார்த்தார்கள்.

“நந்தவனத்துக்கு தங்களையும், இளவரசரையும் அழைத்து செல்ல மகாராஜா உத்தரவிட்டுள்ளார்”, என்றான் அவ்வீரன்.

“அப்படியா? எனக்கு அதிகமாக உண்டது மயக்கமாக இருக்கிறதே. இங்கே பார் வீரனே. நான் ஓய்வு எடுக்கிறேன். நீ இளவரசரை மட்டும் அழைத்து செல்”, என்றார் சித்தர்.

“உத்தரவு ஐயா? செல்லலாமா இளவரசே?”

அவன் சித்தரை பார்த்தான்.

“போய் வா மகனே. உன் கண்ணின் தேடலுக்கு விடை கிடைத்தாலும் கிடைக்கலாம்”, என்று சிரித்தார் சித்தர்.

“நீங்கள் இருக்கிறீர்களே. தங்கள் கண்களில் அனைத்தும் சிக்கி விடுகிறது தந்தையே! அது மட்டும் இல்லாமல், சிறிது உணவே உட்கொள்ளும் தங்களுக்கு உண்ட களைப்பா? நம்ப தான் சிரமாக இருக்கிறது”, என்று சிரித்து கொண்டே அவர் காதில் முணுமுணுத்து விட்டு  அந்த வீரனுடன் நடந்தான் நரேந்திரவர்மன்.