அதற்காக காத்து கொண்டிருந்தவர்கள் அவனை நெருங்கும் முன்னர் “அவன் மீது வாளை யார் முதலில் நீட்டினாலும் அடுத்த நிமிடம் வாளை நீட்டியவனின் சிரம் தரையில் விழும் மகாராஜா”, என்ற மற்றொரு குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.
ஒரு நடுத்தர வயதுடைய துறவி அரண்மனைக்குள்ளே வந்து கொண்டிருந்தார். அவரை துரத்தி கொண்டு காவளாளிகள் இருவர் வந்தனர்.
அந்த துறவியை பார்த்ததும் மகாராஜா முகம் பிரகாசித்தது. சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கி சென்றார். அருந்ததி தேவி, மகாராஜாவே இறங்கி சென்றதால் தன் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்றாள். மற்ற அமைச்சர்களும் எழுந்து நின்றார்கள். ஆனால் மகாராஜாவை தவிர வேற யாருமே அவரை அறியார்கள்.
“வாருங்கள் சித்தரே. தாங்கள் என் தேசத்தில் கால் பதிப்பதற்க்கு நாங்கள் வரம் வாங்கி இருக்க வேண்டும்”, என்று புன்னகையுடன் கை கூப்பினார் மகாராஜா.
“என்னை கண்டு கொண்டீரா மகாராஜா?”, என்று கேட்டார் அந்த சித்தர். இன்று அனைத்துமே விசித்திரமாக நடக்கிறது என்று தங்களுக்குள் புலம்பி கொண்டார்கள் மக்கள்.
“அடியேன் அறிவேன் சித்தரே. தாங்கள் வராக சித்தர். வராகவர்மன் என்பது தங்களது நாமம். இந்திரவர்ம மகாராஜாவின் உடன் பிறந்த
சகோதரன். ஆசையை துறந்து, அரசாட்சியை துறந்து மன்னர் பட்டத்தை தனது இளைய சகோதரனுக்கு விட்டு கொடுத்து துறவறம் பூண்டவர். தங்களுடைய தமையனுக்கு அரசியல் ஆலோசகர். இந்திரவர்ம மகாராஜா போற்றும் உயர்ந்த மனிதர். இந்திரவர்ம மகாராஜாவின் புகழ் எட்டு திக்கும் பரவி கிடக்கிறது. அதற்கு காரணம் அவருடைய கம்பீரமும், வாள் வீசும் சக்தியும் பராக்கிரமமும் மட்டும் காரணம் அன்று. தங்களின் ஆலோசனையும் முக்கிய காரணம் என்று நாங்கள் அறிவோம். தங்களை நான் ஓவியத்தில் மட்டுமே தரிசித்தது உண்டு. தங்களை சேவிக்க பல மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். தங்களை நான் அறியாமல் போவேனா?”, என்று உணர்ச்சி வச பட்டு முடித்தார் வாசுதேவச்சக்கரவர்த்தி.
“தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் தங்கள் வீரர்கள் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார்களே மகாராஜா”, என்று சிரித்தார் சித்தர்.
“தங்களை அவமதித்த வீரர்களை இப்போதே சிறையில் அடைக்கிறேன் சித்தரே”
“அவசரம் வேண்டாம் மகாராஜா. அவர்கள் தங்கள் கடமையையே செய்தார்கள். நான் இங்கு இருக்கிறானே, இவன் எதாவது ஏடாகுடம் செய்து விட கூடாதே என்று நினைத்து தான் வேகமாக வந்தேன். அதனால் தான் காவலர்களிடம் நான் யாரென்று உரைக்க முடிய வில்லை”
“வருந்தவேண்டாம் சித்தரே. தாங்கள் வந்து ஆசனத்தில் அமருங்கள். இங்கே மிக பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இங்கு நிற்கிறானே, இந்த வீரன் தங்களுக்கு உதவியாக தங்களுடன் வந்தானா? இவன் தான் அவையை குழப்பி கொண்டிருக்கிறான்”
அவர் அளித்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டே “அவன் எனக்கு உதவியாக வந்தானா? ஹா ஹா, நான் தான் அவனுக்கு உதவியாக வந்தேன். இங்கு வந்தவுடனே தன் வேலையை காட்டி விட்டானா? இவனோடு இது பெரிய தொல்லை”, என்று சிரித்தார் சித்தர்.
அவரை முறைத்த படியே நின்றிருந்தான் அவன்.
“தாங்கள் கூறுவது எங்களுக்கு விளங்க வில்லையே”, என்றார் மகாராஜா.
“அவன் இந்திரவர்மனிடம் இருந்து உங்களுக்கு செய்தி கொண்டு வந்திருக்கிறான். புரியவில்லையா மகாராஜா? அவன் தூதுவனாக வந்திருக்கிறான். அவனுக்கு துணையாக தான் தாம் வந்தோம்”
“என்ன? எனக்கு இந்திரவர்ம மகாராஜாவிடம் இருந்து தூது வந்திருக்கிறதா? மேற்கு நாடுகள் முழுவதும் கை பற்றி சிங்கமாக விளங்கும் அவர்களிடம் இருந்து தூதா? ஆனால் போயும் போயும் இவனிடமா கொடுத்து விட வேண்டும்?”
“ஏன் அவனுக்கென்ன மகாராஜா?”
“அவனுக்கென்னவா? கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவனாக இருக்கிறானே. வந்ததில் இருந்தே ஒரே சிரிப்பு, அவமதிப்பாக பேச்சு. திமிர் பிடித்தவன் போல? வந்த செய்தியை இது வரை அவன் உரைக்கவே இல்லை சித்தரே”
“திமிர் அரசனுக்கு அழகு தானே மகாராஜா”
“என்ன கூறுகிறீர்கள் சித்தரே?”
“நீங்கள் திமிர் பிடித்தவன் என்று உரைத்தவன் வேறு யாரும் அல்ல. வாளை சுழற்றுவதில் வேங்கை என்று பெயர் பெற்றவன். கண்களிலே தீப்பொறியை வைத்து எதிரிகளை எரிப்பவன். பல நாடுகள் இவனுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்திருக்கின்றன. வீரத்தில் இவன் இந்திரவர்மனை மிஞ்சியவன், விவேகத்தில் என்னை மிஞ்சியவன். அறிவில் நம் அனைவரையும் மிஞ்சியவன். அநீதியை கண்டு கொந்தளிக்கும் சமுத்திரம். அவன் வாள் பல எதிரிகளின் தலைகளை கொய்திருக்கிறது. அழகில் சுந்தரன். எட்டு திக்கிலும் இருக்கும் கன்னி பெண்களின் மனதில் கனவு நாயகன். எவனை திமிர் பிடித்தவன், மரியாதை தெரியாதவன் என்று தாங்கள் உரைத்தீரோ அவன் தான் மேலை நாட்டின் இளவரசன் நரேந்திரவர்மன். நாளை அரியணையில் அமர போகிறவன். இந்திரவர்மனின் தவ புதல்வன்”
“என்ன? நரேந்திர வர்மனா?”
“ஆம் மகாராஜா. நரேந்திரவர்மனே தான். எமது சகோதரன் சிங்கம் என்றால், அவன் பெற்ற மகன் வேங்கை. அவனுக்கு திமிர் இல்லாமல் இருக்காதே மகாராஜா? அந்த திமிர் நாங்கள் எங்கள் புதல்வனிடம் ரசிக்கும் ஒன்று”
“கருணாகரன் படையையே முறியடித்ததாக கேள்வி பட்ட அந்த நரேந்திரவர்மனா? மேலை நாட்டின் நாளைய மகாராஜாவா?”
“ஆம் மகாராஜா. என்ன வாய் மட்டும் கொஞ்சம் அதிகம். அதனால் தான் தங்களிடம் திமிர் பிடித்தவன் என்று பெயர் வாங்கி கொண்டு நிற்கிறான்”, என்று சிரித்தார் வராக சித்தர்.
“சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் இளவரசரே. தங்களை அவமதித்ததுக்கு என்னை மன்னியுங்கள். தாங்கள் யாரென்று தெரியாமல், திமிர் பிடித்தவன் என்று கூறி சிறை செய்ய ஆணையிட்டுவிட்டேன். என் மதியீனத்தை மன்னியுங்கள்”, என்று கை கூப்பினார் மகாராஜா.
“தாங்கள் மதியீனமாக ஒன்றும் செய்ய வில்லை மகாராஜா. என்னுடைய சொல்லே தங்களை கோப மடைய வைத்தது. அதில் தவறு என்ன மகாராஜா? அது மட்டும் இல்லாமல் தாங்கள் தவறாக ஒன்றும் சொல்ல வில்லையே. நான் திமிர் பிடித்தவன் தான். நாணம் எப்படி பெண்களின் அழகோ, அது போல் திமிர் ஆண்களின் அழகு மகாராஜா. அதனால் தாங்கள் எனக்கு அந்த பெயர் அளித்தது எனக்கு ஆனந்தமே”, என்று கூறி சிரித்தான் நரேந்திரவர்மன்.
“தங்களுடைய சிரிப்பு கவர்ச்சியாக இருக்கிறது இளவரசே”, என்றார் மகாராஜா.
“என்னை புகழ்வதை பார்த்து மகாராணி தங்களை முறைக்கிறார்”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.
“ஆம் ஆம்”, என்று மண்டையை ஆட்டினார் மகாராஜா.
“அமருங்கள் இளவரசே”, என்று சொல்லி நரேந்திரவர்மனையும், சித்தர் அருகில் அமர வைத்து விட்டு மறுபடியும் சிம்மாசனம் அருகே சென்று “இவள் தான் என் சாம்ராஜியத்தின் ராணி அருந்ததி தேவி”, என்று அறிமுக படுத்தினார் மகாராஜா.
“வணக்கம்”, என்று கரம் குவித்தாள் அருந்ததி தேவி.
அவளுக்கு வணக்கம் என்று சிரம் தாழ்த்தினார்கள் சித்தரும், நரேந்திரவர்மனும்.
“தங்கள் புதல்வி தங்களையே கேள்வி மேல் கேட்டு ஒரு வழி ஆக்கியத்தையும், தாங்கள் விழி பிதுங்கி நின்றதையும், பல ராணிகள் பற்றிய பேச்சை இளவரசி பேசிய போது மகாராணி தங்களை பார்வையால் பொசுக்கியதையும் யாம் பார்த்து கொண்டு தான் இருந்தோம் மகாராஜா. மகாராஜாவையே பார்வையால் பஸ்பமாக்கிய மகாராணிக்கு என் வந்தனங்கள். சாம்ராஜியத்துக்கே ராஜாவானாலும் மகாராணியிடம் அனைத்து மகாராஜாவுக்கும் பயம் இருக்கிறது என்பது உண்மை தான் போல?”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.
“பல ராணியை கட்டியதுக்கு தங்களுக்கு இந்த பெயர் அவசியம் தான்”, என்று அடிக்குரலில் மகாராஜாவின் காதில் கூறினாள் மகாராணி.
“என்னை காப்பாற்றுங்கள் சித்தரே”, என்னும் விதமாய் பார்த்தார் மகாராஜா.
“நான் கூறவில்லை, இவனுக்கு வாய் அதிகம் என்று? அவன் உரைத்ததை தாங்கள் பெரிதாக எண்ண வேண்டாம் மகாராஜா. என் மகன் எப்போதுமே இப்படி தான். இப்படி ஏதாவது செய்து விட கூடாது என்று தான் நான் இவனுடன் வந்தேன். என் சகோதரனும் தேவை இல்லாத வம்பை இழுக்க கூடாது என்று சொல்லி தான் இவனை அனுப்பி வைத்தான். ஆனால் பிறவி குணத்தை எவரால் மாற்ற முடியும்? நான் உள்ளே வருவதற்குள் திருட்டு தனமாக உள்ளே நுழைந்து தங்கள் புதல்வி பேசியதையும் கேட்டிருக்கிறான். மகனே நரேந்திரவர்மா”, என்று அழைத்தார் சித்தர்.
“கூறுங்கள் தந்தையே”
“வந்த காரியத்தை மறந்து, மற்றொரு நாட்டின் மகாராஜாவையே எள்ளி நகையாடுவது அவ்வளவு சரி இல்லை. தாம் கூறுவது உனக்கு விளங்கியதா?”
“விளங்கியது தந்தையே. இறுக்கமான சூழ்நிலையை கலகலப்பாக்கவே அவ்வாறு தாம் உரைத்தோம். மகாராஜாவை எள்ளி நகையாடுவதற்காக அல்ல. அனைத்து மகாராஜாவின் நிலையும் இது தான். இதில் என் தந்தை உட்பட. இப்போது தாம் வந்த காரியத்தை உரைக்க போகிறோம்”, என்று சொல்லி எழுந்து நின்றான் நரேந்திரவர்மன்.