அவனுக்கு நிகரான சிரிப்பை உதிர்த்த வல்லவரையன் “தங்களுடைய இந்த புன்னகை எப்போதுமே தங்கள் முகத்தில் இருக்க வேண்டும் தமையனே”, என்று மனதில் எண்ணி கொண்டான்.
ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த சுதமனை கண் இமைக்காமல் பார்த்த படி இருந்தான் நரேந்திரவர்மன். அவன் கண் விழித்து பார்த்தால் தான் நரேந்திரவர்மனின் பல்லில் பச்சை தண்ணீர் படும்.
வைத்தியர் அளித்த மருந்தினால் நன்கு உறங்கி கொண்டிருந்தான் சுதமன்.
“கண் விழித்து விடு நண்பா. உனக்கு ஒன்று என்றால் என்னால் நிம்மதியாக இருக்க இயலாது. உன் தோழமை எனக்கு கிடைத்த வரம். அதை இழந்து என்னால் எப்படி வாழ இயலும்? எனக்கு ஒரு கை போன்றவன் நீ. உனக்கு ஒன்றுமே நேர கூடாது. ஒரு சேனாதிபதியாக நீ போரில் உயிர் விடுவதை தான் விரும்புவாய். ஆனால் ஒரு நண்பனாக நீ எனக்காக எழுந்து வந்து விடு தோழா. தாய், தந்தை இல்லாமல், எந்த வித சந்தோஷத்தையும் அனுபவிக்காதவன் நீ. நான் அளிக்கும் அனைத்து சொத்துக்களையும் மறுத்து கொண்டிருக்கிறாய். அப்படி பட்ட நீ எழுந்து வந்தால் தான் உன் மனதுக்கு பிடித்த பெண்ணுடன் வாழ முடியும். அவளை கண்டறிந்து உன்னுடன் அவளை சேர்த்து வைக்க வேண்டும். இந்த சலங்கைக்கு சொந்த காரி யாரடா? முதலில் நீ எழுந்து வா. இந்த போர் முடிந்தவுடன் அந்த பெண்ணை பற்றி விசாரித்து அவளுடன் உன்னை சேர்த்து வைத்தே தீருவேன்”, என்று புலம்பி கொண்டிருந்தான் நரேந்திரவர்மன்.
அப்போது “இளவரசே தங்களை காண எனக்கு அனுமதி வேண்டும்”, என்று கூடாரத்துக்கு வெளியே இருந்து ஒரு வீரனின் குரல் கேட்டது.
“என்னவாயிற்று வீரனே? போர்க்களத்தில் இருந்து கொண்டு என்னை சந்திக்க உனக்கு அனுமதி தேவையா? எப்போதும் நீ என்னை அணுகலாம். உள்ளே வா”, என்று குரல் கொடுத்தான் நரேந்திரவர்மன்.
“போர்க்களமாக இருந்தாலும் சரி, மாளிகையாக இருந்தாலும் சரி, ஏன் கானகமாகவே இருந்தாலும் தங்களை காண அனுமதி வேண்டி கொண்டு தான் வருவேன் இளவரசே”
அவனை பார்த்து புன்னகைத்த நரேந்திரவர்மன் “சூரன் தானே உனது பெயர்?”, என்று வினவினான்.
“ஆம் இளவரசே”
“சரி என்ன காரணமாக என்னை காண வந்தாய்?”
“தங்களிடம் ஒரு குழப்பத்தை கூற வேண்டும்”
“குழப்பமா? என்ன நேர்ந்தது? நம் படை வீரர்கள் உணவு உண்டு விட்டு நன்றாக தானே உறங்குகிறார்கள்? மகாராஜாவுக்கும் எந்த ஆபத்தும் இல்லையே?”
“இல்லை இளவரசே. இது வரை நமக்கு எந்த ஆபத்தும் வர வில்லை. ஆனால் இனி வரும் என்று தோன்றுகிறது”
“புதிர் போடாமல் விசயத்தை சொல் சூரா”
“நான் கொல்லைக்கு இப்போது சென்றிருந்த போது ஒரு விபரீதத்தை கண்டேன்”
“என்ன? விபரீதமா? நீ என்ன கூறுகிறாய் சூரா? நீ என்ன கண்டாய்?”
“சற்று நேரத்துக்கு முன்பு இருட்டில் உலாவி கொண்டிருந்த போது சற்று தொலைவில் சிறு ஒளி என் கண்களுக்கு புலப்பட்டது. அங்கே பந்தம் ஏற்றி இருப்பார்கள் என்று எண்ணி கொண்டேன். அப்போது வாசுதேவச்சக்கரவர்த்தி படையை சேர்ந்த ஒருவன் அந்த பந்தம் இருந்த ஒளியை நோக்கி செல்வதை கண்டேன். எதுவோ குழப்பம் என்று ஊகித்து அவன் பின்னே சென்றேன். அங்கே கண்ட கட்சியில் எனக்கு ஐயம் வந்து விட்டது இளவரசே”
“என்ன சந்தேகம் சூரா? யார் இந்த நேரத்தில் அங்கே பந்தம் ஏற்றியது?”
“அங்கே பந்தத்தை ஏந்தி கொண்டிருந்தது வேறு யாரும் அல்ல. செங்கல்வராயனின் சகோதரன் வல்லவரையன்”
“என்ன?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் நரேந்திரவர்மன்.
“ஆம் இளவரசே. மகாராஜா படையை சேர்ந்தவன் அந்த வல்லவரையனை தான் காண சென்றான். இருவரும் சிறிது நேரம் புன்னகையுடன் எதையோ பேசி கொண்டார்கள். ஆனால் தூரத்தில் இருந்து கவனித்ததால் அவர்கள் உரைத்தது என் காதில் விழ வில்லை இளவரசே”
“இதில் ஏதோ சதி இருக்கிறது சூரா”
“ஆம், இளவரசே. எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது. அதனால் தான் தங்களிடம் கூற வந்தேன். சிறிது நேரம் பேசி விட்டு அவரவர் படை பக்கம் சென்று விட்டார்கள்”
“என் தந்தை யூகித்து சொன்னது சரி தான் சூரா. வாசுதேவரின் படையை முறியடிக்க முடியாது என்று எண்ணி தந்திரத்தை பயன்படுத்த போகிறான் அந்த செங்கல்வராயன். அதை நாம் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். நம் படையும் சேர்ந்து போரிடும் போது தோல்வியை தழுவினால் அதை விட அசிங்கம் வேறில்லை. அந்த கயவனை நீ கண்டாயா சூரா?”
“ஆம் இளவரசே. அவன் முகத்தை கண்டேன்”
“சரி வா. அவனை எனக்கு காட்டு”, என்று கூறி சூரனுடன் கிளம்பினான் நரேந்திரவர்மன்.
மகாராஜா படை இருக்கும் பக்கம் நரேந்திரவர்மனை அழைத்து சென்ற சூரன் இருட்டில் நன்கு உறங்கி கொண்டிருந்த வீரர்கள் மத்தியில் அந்த காண்டவன் என்கின்ற வீரனை தேடினான்.
வீரர்கள் மத்தியில் அவனை காணாததால் குழப்பத்துடன் இளவரசரை பார்த்தான் சூரன்.
“அந்த துரோகி இங்கு இல்லை என்றால் எங்கே சென்றிருப்பான் சூரா?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“எனக்கும் தெரியவில்லை இளவரசே”
“சரி, சற்று நேரம் இருந்து கவனித்து பாப்போம். இங்கு எங்காவது தான் சென்றிருப்பான். நம் படை சமையல் காரர்கள் அடுப்பை அணைத்து விட்டார்களா? எரிந்து கொண்டிருந்தால் சூடாக எதாவது அருந்தலாம். எடுத்து வருகிறாயா?”
“தங்களை தவிர அனைவரும் உணவருந்தியதால் தங்களுக்கும் எடுத்து வைத்து விட்டு அப்போதே சமையல் காரன் படுக்க சென்று விட்டான் இளவரசே. நான் வேண்டும் என்றால் அடுப்பை மூட்டி பாணம் கொண்டு வரவா?”
“தேவை இல்லை சூரா. அங்கு பார். மகாராஜா படையில் இன்னும் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அங்கே சென்று வாங்கி வா”
“நல்ல யோசனை இளவரசே. இதோ வருகிறேன்”, என்று சொல்லி சென்ற சூரன் அங்கு சென்று பார்த்து விட்டு அடுத்த நொடி இளவரசனின் அருகில் ஓடி வந்தான்.
பதட்டத்துடன் ஓடி வந்த சூரனை வியப்பாக நோக்கினான் நரேந்திரவர்மன்.
“இளவரசே நான் அவனை கண்டு விட்டேன். அந்த கயவன் தான் அங்கே சமைத்து கொண்டிருக்கிறான்”, என்று பதட்டத்துடன் கூறினான் சூரன்.
“என்ன?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் நரேந்திரவர்மன்.
“ஆம் இளவரசே. அவன் தான் அங்கே நெருப்பை மூட்டி கொண்டிருக்கிறான்”
“அவன் மூலம் தான் சதி திட்டம் தீட்டி இருக்கிறானா அந்த வல்லவரையன்? அப்படி என்றால் அவன் உணவில் தான் தந்திரம் செய்திருக்க வேண்டும். சூரா நம் படையில் இருந்து மகாராஜா படையில் இருந்து எதையாவது வாங்கி அருந்தினார்களா?”
“ஆம் மகாராஜா. அனைவரும் பகிர்ந்து தான் உண்டோம். ஐயோ. இப்போது என்ன செய்வது”
“மகாராஜா மற்றும் நம் படையினர் உணவு உண்ட பிறகு எதாவது உடல் நிலை சரி இல்லாமல் சென்றதா என்று முதலில் அறிய வேண்டும் சூரா. வா யாரையாவது எழுப்பி கேட்கலாம்”, என்று கூறி அவன் படை வீரர்கள் இருவரை எழுப்பினான் நரேந்திரவர்மன்.
எழுந்த அவர்கள் இளவரசரை கண்டதும் திரு திருவென்று விழித்தார்கள். அவர்கள் எழுந்ததே நரேந்திரவர்மனுக்கு நிம்மதியாக இருந்தது.
அவர்களை பார்த்து “மகாராஜா படையில் இருந்து உணவு வாங்கி உண்டீர்களா?”, என்று கேட்டான்.
“ஆம் இளவரசே. தாங்கள் தான் இனி இரண்டு படையும் ஒன்று என்று கூறினீர்களா? அதனால் தான்…. தவறு செய்து விட்டோம். எங்களை மன்னியுங்கள்”, என்றான் ஒருத்தன்.
“நீங்கள் ஒரு தவறும் செய்ய வில்லை. அவர்கள் உணவில் எதிரிகள் எதையோ கலந்து விட்டதாக சந்தேகம் வந்தது. தங்கள் உடல் நிலை சரியாக தானே இருக்கிறது? எதாவது மயக்கம் வாந்தி போன்று எதாவது செய்கிறதா?”
“அப்படி எல்லாம் இல்லை இளவரசே”
“நல்லது. இதற்கு பிறகு மகாராஜா படையில் இருந்து எதுவும் வாங்கி உண்ண வேண்டாம் என்று நம் வீரர்களுக்கு ரகசியமாக கூறி விடுங்கள்”, என்று அவர்களிடம் கூறியவன் சூரனை அழைத்து கொண்டு மகாராஜாவை காண சென்றான்.
நாட்டை நினைத்தும் தன்னுடைய மகளை நினைத்தும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் வாசுதேவச்சக்கரவர்த்தி.
அப்போது “மகாராஜா”, என்று நரேந்திரவர்மனின் குரல் கேட்டது.
அடுத்த நிமிடம் மஞ்சத்தில் இருந்து எழுந்து கூடாரத்துக்கு வெளியே சென்றார். நரேந்திரவர்மனும், சூரனும் நின்றிருந்தார்கள்.