வான்மதி தேவி, அழகின் மொத்த வடிவம் கொண்டவள். நளினம், கம்பீரம் என அனைத்தும் கொண்ட ராஜகுமாரி. அவள் முகத்தில் எப்போதும் ஒரு தேஜஸ் இருக்கும். வீரத்துக்கு பெயர் போன பேரரசர் வாசுதேவ சக்கரவர்த்தியின் மகள். அவருடைய சாம்ராஜ்யத்தின் இளவரசி. அந்த வானத்து நிலவின் ஒளி போன்றவள்.
மகாராஜா வாசுதேவ சக்கரவர்த்தி மற்றும் மகாராணி அருந்ததி தேவியின் தவ புதல்வி தான் இளவரசி வான்மதிதேவி. அடுத்த அரசராக ஆக போகும், இன்றைய இளவரசர் மேகவேந்த சக்கரவர்த்தியின் தமக்கை. அழகே வடிவானவள். அன்பே உருவானவள். அவள் கண்களில் எப்போதும் காருண்யம் குடி கொண்டிருக்கும்.
எல்லாராலும் பேரழகி என்று வர்ணிக்க படும் காரிகை. அந்த வானத்து நிலவு கூட அவள் அழகின் முன் தோற்று தான் போகும். முழங்காலை தொடும் கூந்தல், நீள்வடிவ கண்கள். பலாச்சுளை போன்ற ஈரமான உதடுகள், மென்மையான கன்னங்கள் என்று இருக்கும் வான்மதி தேவி, சுற்றி இருந்த தேசத்தின் அனைத்து இளவரசர்களும் சொந்தம் கொண்டாட துடிக்கும் பருவ மங்கை.
எப்போது அவளை சிறை எடுத்துச் செல்லலாம் என்று கழுகுகள் போல் காத்திருக்கிறார்கள் பல நாட்டு இளவரசர்கள்.
அவளுடன் திருமணத்தை நடத்தி கொள்ள, பல பெரிய அரசர்களிடம் இருந்து ஓலை வந்த வண்ணம் உள்ளது.
ஆனால், அதை பற்றி அவளிடம் பேச கூட யோசித்து தலை வேதனையில் உள்ளார் அந்த தேசத்தின் மகாராஜா, அவளின் தந்தை வாசுதேவ சக்கரவர்த்தி.
தன்னுடைய பராக்கிரமத்தால் பல தேசங்களை வென்று, எதிரிகள் பயப்படும் அளவுக்கு வீரத்துடனும், விவேகத்துடனும் நல்லாட்சி செய்யும் மகாராஜாவுக்கு இந்த சிறு பெண்ணை சரி கட்ட முடியவே இல்லை.
அவரும் தான் என்ன செய்வார். அவள் வைத்திருக்கும் கட்டளை அப்படி. எப்போது திருமணத்தை பற்றி முதன்முதலில் அவளிடம் வாயை திறந்தாரோ, அப்போதே அழுத்தமாக தன்னுடைய கருத்தை முன் வைத்து விட்டாள் வான்மதிதேவி.
அதை மீற முடியாமல், அவரும் அவள் விருப்ப படி இளவரசர் உள்ளாரா என்று விசாரித்து விட்டார்.
அவள் சொல்லும் கட்டளைக்கு பணியும் இளவரசர் கிடைக்காமல் அவரை தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் அவருடைய மகள்.
அந்த தேசமே தங்கள் இளவரசிக்கு திருமணம் எப்போது என்று ஏங்கி தவித்திருக்கிறது. அந்த தேசத்தின் மகாராஜா, தன்னுடைய செல்வ புதல்வியை மற்றொரு தேசத்தின் மகாராணியாக மாற்றி விட காத்திருக்கிறார்.
ஆனால் இதை எதைப் பற்றியும் அறியாமல், தன்னுடைய பஞ்சணையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் வான்மதி தேவி.
அவள் கண்கள் மூடி இருந்தது. அவளுடைய தலை முடி, அந்த பஞ்சணை முழுவதும் படர்ந்திருந்தது. எந்த ஒப்பனையும், எந்த அலங்காரமும் இல்லாமல் தேவதை போல இருந்தாள் அவள். அவள் பட்டாடை அந்த பஞ்சணையில் கசங்கி கொண்டிருந்தது. அவள் மேலாடையோ அவள் அழகை மறைக்க முடியாமல் சரிந்து கிடந்தது.
தன்னுடைய அறைக்கு அன்னையை தவிர வேறு யாரும் வர மாட்டார்கள் என்ற எண்ணம் அவளுக்கு. அதனால் ஆடை விலகி இருப்பதை பற்றியா கவலை பட போகிறாள்?
குக்கூ என்று எங்கோ கூவும் குயிலின் ஓசையில் அவள் கண்கள் மெதுவாக திறந்தன.
கண் விழித்தவள் புன்னகையுடன் அந்த அறையைச் சுற்றி பார்வையை பதித்தாள்.
கண் எதிரே இருந்தது அந்த அழகான ஓவியம். அதை ஆனந்தத்துடன் பார்த்தாள் வான்மதி. அவளுக்கென்று, அந்த நாட்டின் சிறந்த ஓவியர் வரைந்து கொடுத்த ராமன், சீதை ஓவியம் தான் அது.
எல்லா ஓவியங்களிலும், ராமன் சீதையுடன், லக்குவனனும், அனுமனும் இருப்பார்கள். ஆனால் இந்த சிறப்பு ஓவியம் ராமன், சீதையை மட்டும் கொண்டது.
அவள் உதடுகள் ராமா என்று உச்சரித்தது. அந்த உச்சரிப்பே அவளுக்கு ஆழ்ந்த நிம்மதியையும் பரவசத்தையும் கொடுத்தது.
எழுந்து அமர்ந்தவள் விலகி இருந்த மேலாடையை பார்த்து சிரித்து கொண்டாள்.
“அன்னை சொல்வது போல எனக்கு பொறுப்பு என்பது வருவதே இல்லை. ஆடை விலகியதை கூட அறியேனே. நல்ல வேளை அன்னை இன்னும் என்னை தேடி வர வில்லை. இந்த கோலத்தில் என்னை பார்த்திருந்தால், ஒரு உரையே நடத்தியிருப்பார்கள்”, என்று நினைத்து கொண்டே ஆடையை சரி செய்தாள்.
கீழே வரை தொங்கி கொண்டிருந்த கூந்தலை அள்ளி முடிந்தவள், அந்த ஓவியத்தை பார்த்து கொண்டே இருந்தாள்.
“நல்ல காலம், நீ எழுந்து விட்டாய். இன்று எப்படி உன்னை எழுப்ப போகிறேனோ என்ற அச்சத்துடன் வந்தேன் வான்மதி. நீயே எழுந்து அமர்ந்திருக்கிறாய்”, என்ற குரல் கேட்டு அந்த ஓவியத்தில் இருந்து பார்வையை திருப்பினாள் வான்மதி.
அவள் உதடுகள் புன்னகையுடன் “அன்னையே”, என்று உச்சரித்தது.
“ஆம் உன் அன்னையே தான். ஆனால் நான் இந்த நாட்டின் மகாராணியாக இருந்து கூட இந்த அளவுக்கு களைப்படைய வில்லை. ஒவ்வொரு நாளும் உன்னை சமாளிப்பதுக்குள்ளாக நான் அதிகமாக சோர்வடைகிறேன்”, என்று சிரித்து கொண்டே அவள் அருகில் அமர்ந்த அருந்ததி தேவி, வான்மதியின் சிகையை கோதி விட்டாள்.
“நீங்கள் சோர்வடைய வேண்டாம், என்ற நல்ல எண்ணத்தில் குயிலே என்னை எழுப்பி விட்டது அன்னையே”
“என்ன குயிலா?”
“ஆம் அன்னையே, எங்கேயோ கேட்ட குயிலில் ஓசையில் தான் கண் விழித்தேன்”
“என்னை காப்பாத்திய அந்த குயில் யாரென்று தெரிந்தால் அதற்கு அரண்மனையில் பெரிய விருந்தே வைப்பேனே”
“கேலி செய்யாதீர்கள் அன்னையே”
“தெரிகிறதல்லவா? பின்னே ஏன் நீ அவ்வாறு நடந்து கொள்கிறாய்? உனக்கோ திருமண வயது வந்து விட்டது. உன் தந்தையோ மிகுந்த கவலையில் உள்ளார். நானும் தான். ஆனால் நீ சிறு பிள்ளை போல் நடந்து கொள்கிறாய். நடு ராத்திரி வரை உறங்காமல் நிலவு இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி வானத்தை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறாய். விடிந்து இத்தனை தாமதமாக எழுகிறாய்”
“என்ன? இந்த தேசத்தையே ஆண்டு கொண்டிருக்கும் மகாராணிக்கும், மகாராஜாவுக்கும் மனதில் கவலையா? என்னிடம் சொல்லுங்கள் அன்னையே. நான் அந்த கவலைக்கு காரணமானவனை துண்டு துண்டாக்குவேன்”, என்று அவள் வீர வசனம் பேசி கொண்டிருக்கும் போது, அங்கு தங்க கிண்ணத்தில் எதையோ வைத்து கொண்டு உண்டு கொண்டே வந்தான் மேகவேந்தன்.
அவளுக்கு சகோதரனை பார்த்ததும் புன்னகை அரும்பியது.
“இவன் தானே அம்மா தங்கள் கவலைக்கு காரணம்? பாருங்கள் விடிந்தும் விடியாமலும் இருக்கும் இந்த நேரத்தில் வாயில் எதையோ அடைத்து கொண்டு வருகிறான்”, என்று சிரித்தாள் வான்மதிதேவி.
“தமக்கையே, இது விடிந்தும் விடியாத பொழுதா? கண்ணை விரித்து வெளியே பார். சூரியன் உச்சிக்கு வந்து விட்டது. நம் அம்மா சொல்வது போல் உனக்கு பொறுப்பு என்பதே இல்லை தமக்கையே. அப்படி தானே அம்மா?”, என்று சிரித்தான் மேகவேந்தன்.
“இருவரும் உங்கள் வாதத்தை நிறுத்துங்கள். மேகவேந்தா என்ன இது? நடந்து கொண்டே உண்ணுவது? இது தவறு என்று உனக்கு தெரியாதா?”, என்று கேட்டாள் அருந்ததி.
“என்னை மன்னித்து விடுங்கள் அன்னையே. நான் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போது தந்தை தான் தங்களை அழைத்து வர சொன்னார். அதனாலேயே நான் இங்கு வந்தேன்”
“அப்படியா மகாராஜா எதற்காக என்னை அழைத்தார். சரி நான் போய் என்னவென்று பார்க்கிறேன். நீ அமர்ந்து உணவருந்து. வான்மதி எழுந்து போய் நீராடு. யாரங்கே?”, என்று அருந்ததி அழைத்த உடனே அங்கு இரண்டு பணிப்பெண்கள் வந்தார்கள்.
“இளவரசி நீராட ஏற்பாடு செய்யுங்கள்”, என்று சொல்லி விட்டு கம்பீரமாக எழுந்து போனாள் அருந்ததி. அவள் பின்னே மேகவேந்தனும், தமக்கையை ஒரு பார்வை பார்த்து உதடு சுளித்து விட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் செய்கையையை பார்த்து முறுவலித்து விட்டு தனக்காக காத்துக் கொண்டிருந்த பணிபெண்களைப் பார்த்து “நீங்கள் இருவரும் செல்லுங்கள். நான் வருகிறேன்”, என்று சொல்லி எழுந்தாள்.
அனைத்து காரியங்களையும் முடித்தவள், புத்தாடை உடுத்தி அந்த அரண்மனைக்குள் கம்பீரமாக நடந்து சென்றாள். மொத்த அரண்மனையும் அவள் அழகில் திரும்பி பார்த்தது.
அவர்கள் அருகில் சென்றவள் இருவரின் கால்களில் விழுந்து பாதம் பணிந்தாள். இது என்றுமே அவளுடைய வழக்கம் தான்.
“பதினாறு பெற்று பெருவாழ்வு பெறுவாயாக மகளே”, என்று சொன்ன மகாராஜாவுக்கும், மகாராணிக்கும் தங்கள் மகளைப் பார்த்தவுடன் பூரிப்பு ஏற்பட்டது.
“சிறிது கால தாமதமாக எழுந்து விட்டேன். மன்னித்து விடுங்கள் மகாராஜா”, என்றாள் வான்மதி தேவி.
“நீ என்ன செய்தாலும், உன் தந்தையால் கோபித்து கொள்ள முடியுமா கண்மணி? இளவரசரின் அருகே அமர்ந்து கொள்ளம்மா”, என்று பாசமாக சொன்ன வாசுதேவ சக்ரவர்த்தி அடுத்த நொடி கம்பீரமாக “சபை ஆரம்பிக்கட்டும்”, என்று கர்ச்சனை செய்தார்.
“இத்தனை நேரம் மென்மையாக பேசியது, இவரே தானா?”, என்று விழி விரித்தாள் வான்மதி. மகளிடம் பேசும் போது மட்டும் அவர் குரலில் கனிவு இருக்கும்.
அவள் வாயைத் திறந்து தன்னுடைய தந்தையின் கம்பீரத்தை ரசித்துக் கொண்டிருந்த போது “வாயை மூடிகொள் தமக்கையே? நம் நாட்டில் பறக்கும் அனைத்து பட்சிகளும் குகை என்று நினைத்து உன் வாய்க்குள் குடியேறி விட போகிறது”, என்று அடிக்குரலில் சொல்லி சிரித்தான் மேகவேந்தன்.
அவனை முறைத்தவள், அவன் தலையில் ஒரு குட்டு குட்டி விட்டு சபையை கவனித்தாள்.
சிறிது நேரத்தில் ஒற்றர் தலைவன் சோகமான முகத்துடன் மன்னர் முன்பு நின்றான்.
“சொல்லுங்கள் ஒற்றரே? எதாவது செய்தி உண்டா?”, என்று வினவினார் அரசர்.
“ஆம் அரசே, நம் தேசத்துக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு கேடான செய்தியுடன் தங்கள் முன் வந்திருக்கிறேன். அதற்காக வருந்தவும் செய்கிறேன்”, என்றான் ஒற்றன்.
“யாது உரைத்தீர்? கேடான செய்தியா? சொல்லுங்கள் ஒற்றரே, என்ன செய்தி?”
“நம் தேசத்துக்கு ஆபத்து வரஇருக்கிறது மகாராஜா. செங்கல்வராயன் நம் நாட்டின் மீது படை எடுத்து வர போவதாக அறிந்தேன்”
“என்ன?”
“ஆம் மகாராஜா. அங்கே அனைத்து ஏற்பாடும் நடக்கிறதாம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் படை நம்மை நோக்கி படை எடுக்கலாம்”
“அய்யகோ! நான் இப்போது யாது செய்வேன்? திருப்பி போர் புரியலாம் தான். ஆனால் எத்தனை உயிர்களை பலி கொடுக்க வேண்டி இருக்கும்? எல்லார் வீட்டிலும் கதறி அழுவார்களே. அமைச்சரே, தங்கள் யோசனை எதாவது இருந்தால் கூறுங்களேன். போரை தவிர்க்க முடியுமா?”, என்று கேட்ட மகாராஜாவின் முகம் கலங்கி இருந்தது.