Advertisement

HARE KRISHNA

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

ஈரோடு அடுத்து அன்னூர்.. அந்த ஊரை கடந்து சென்றால்.. ஒரு சின்ன கிராமம். இப்போதெல்லாம் பண்ணை நிலமாக.. குடியிருப்பு பகுதிகளாக தங்களை உருமாற்றிக் கொண்ட அழகான சின்ன கிராமம். ஆனாலும் இன்னும் பசுமை மாறாத கிராமம்.

அழகாக காலை சூரியன்.. இப்போதுதான் மேலெழுகிறான் போல.. சிவந்தபடி வானில் மின்னத் தொடங்கினான். அந்த பச்சை மரங்களுக்கு நடுவே மெல்ல நுழைந்த அவனின் கதிரொளி.. பொன்னொளியாக மண்ணில் விழ.. அந்த கருவேற்பிலை செடிகளை கொண்ட நிலம்.. கதிரொளியில் சிலிர்த்து அசைய.. அதிலிருந்து புறப்பட காற்று.. கருவேற்பிலை வாசத்தோடு அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் வீச.. அந்த வாசனையை தன் நாசியால் உள்ளிழுத்து.. கொண்டே ஒரு நங்கை நடந்து வந்தாள்.

மனது லேசானது அந்த மங்கைக்கு, இந்த வாசத்தில்.. ‘இந்த காலை நேரமும்.. என் தோட்டமும்.. அஹ.. கோடி நோய்களும் தீருமே.. இந்த வாசனைக்கு.. இதற்கு இணை வேறெங்கும் ஏது!’ என தனக்குள் சொல்லிக் கொண்டே.. எதோ அந்த வாசம் முழுவதையும் தானே வாங்கிக் கொள்பவள் போல.. நாசித் திறந்து முழுதாக அதை தனக்குள் இழுத்துக்  கொண்டபடி.. தோட்டத்தில் காலெடுத்து வைத்தாள், சாகம்பரி.

மங்கைக்கு, நான்கு எட்டு நடந்த பிறகுதான், தான் வந்த வேலை புரிய.. தன் தந்தையை அழைக்க தொடங்கினாள் “அப்பா.. ஓ..வ்வ்… அப்பா.. முருங்கைக்காய் கேட்டு.. வண்டி வாசலில் நிக்குது..” என்றாள் அந்த அமைதியை கிழிக்கும் வகையில்.

அவளின் அழைப்பு.. அந்த தோட்டத்தின் எதிர்மூலையில் நின்றிருந்த தனபால், அவளின் தந்தையை சரியாக தாக்கியது. அவரும் மகளின் சத்தத்தில், தன் இடுப்பில் போன் இல்லையா என தேடினார். மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார், இன்றும். அதனால்.. மகளின் குரல் வந்த திசை நோக்கி அவசர அவசரமாக வந்தார்.. மகளும் வர.. ஓரிடத்தில் இருவரும் பார்த்துக் கொண்டனர்.

தந்தை “சாரி ம்மா… இன்னிக்கும் மறந்து வைச்சிட்டு வந்திட்டேன்.. எங்க போன் எடுத்து வந்தியா” என்றார்.

சாகம்பரி, தான் எடுத்து வந்திருந்த போனை எடுத்து தந்தையிடம் கொடுக்க.. தன்பால் அதை வாங்கிக் கொண்டு.. நடந்தார். போனில் தன் மனையாளுக்கு அழைத்தார்.

சாகம்பரி, தன் தந்தை பறித்துக் கொண்டிருந்த கருவேற்பிலையை இப்போது.. இவள் பறிக்க தொடங்கினாள்.

தனபால், தன் மனைவி பிருந்தாவிடம் “யாரும்மா வந்திருக்காங்க சேகரா.. அவர்கிட்ட கொடு..” என்றார்.

அந்த பக்கம் பிருந்தா “ஆமாங்க” என சொல்லி, போனை அந்த சேகரிடம் கொடுத்தார்.

சேகர் “ஹலோ” என்கவும்.

தனபால் “என்ன சேகர்.. விலை படியாது போலவே.. நான் ஈரோட்டிலேயே கொடுத்துக்கிறேன்.. என்ன இப்போ காரெடுத்தா.. அரைமணி நேரம்.” என்றார் அதிகாரமான குரலில்.

சேகர் “சர்.. சர்.. இத்தனை வருஷமாக நான்தானே எடுக்கிறேன்.. ஐம்பது பைசா எச்சா தரனே.. கொடுங்க சர். அக்காகிட்ட வாங்கிக்கவா” என்றார்.

தனபால் “இல்ல ப்பா.. மொத்தம் 600 காய் இருக்கு, காய் ஒன்னு 6ரூபாய், அப்படின்னா எடு, இல்ல, நீ கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

சேகர் “சர்.. கொஞ்சம்” என ஆரம்பித்து பேசி பேசி.. 5.50ரூபாய்க்கு முடித்தார்.

தன்பால், அதற்குமேல் தர்க்கம் செய்யாமல்.. அந்த காய்களை.. தன் மனைவியிடம் கொடுக்க சொல்லி பணித்தார்.

போன் பேச்சை முடித்துக் கொண்டு திரும்பி பார்த்தார் மகளை, தனபால். 

சாகம்பரி, சின்ன கத்தியால்.. கருவேற்பிலையை வெட்டிக் கொண்டிருந்தாள்.

தனபால் “ஏங்கண்ணு.. நீ போகலை, பூஸ்ட் குடிச்சியா..” என்றார் வாஞ்சையாய். 

தனபால், அங்கிருக்கும் அரசு பள்ளியில் சென்றமாதம் வரை பணியில் இருந்த வரலாற்று ஆசிரியர். சென்ற மாதம்தான் ஓய்வு பெற்றார். 

சாகம்பரி “இன்னும் இல்ல ப்பா, வெய்யில் வந்திடுச்சி.. நீங்களும் வாங்க.. போதும்.. மத்ததை, ஈவ்னிங் அறுத்துக்கலாம்.. எப்போ வந்தீங்க.. ஆளுங்களை வர சொல்லி இருக்கலாமில்ல.. ஏன் நீங்க வரீங்க” என மெல்லிய குரலில் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தாலும்.. அவளின் கைகள், அந்த செடியின் கிளைகளை அறுத்துக் கொண்டிருந்தது.

தனபால் இரண்டு நிமிடம் ஒன்றும் தோன்றாமல் நின்றார்.. பின் தானும்.. நிற்காமல் தன் கைகளாலேயே சின்ன சின்ன கிளைகளை ஒடிக்கத் தொடங்கினார், பதில் சொல்லாமல்.

இருவரும் அடுத்த அரைமணி நேரம் ஏதும் பேசாமல் வேலையை முடித்து சாக்கு பைகளில் அந்த கருவேற்பிலையை கட்டி வைத்தனர்.. ஓரிடத்தில்.

சாகம்பரி “வாங்க ப்பா” எனவும். இருவரும் கிளம்பினர் வீடு நோக்கி.

போகும் வழியில் தனபால் “என்ன, மித்ரன் இன்னும் எழாமல் இருக்கானா? உங்க அம்மா போன் செய்யாமல் இருக்கா இன்னும்” என்றார் ஆராய்ச்சியான குரலில்.

சாகம்பரி “அஹ.. நேத்து நைட் நானும் அவனும் கொஞ்ச நேரம் சோட்ட பீம் படம் பார்த்தோம்.. லேட்டாதான் தூங்கினோம்.. அதான் இன்னும் அவன் எழல போல..” என்றாள்.

அப்படியே பேசிக் கொண்டே வீடு வந்தனர். அந்த தோட்டத்தின் முகப்பில்… ரோட்டை ஒட்டியபடி இருந்த அழகான வீடு இவர்களுடையது. இப்போதுதான், அவர்களின் முதல் பெண்ணின் திருமணத்தின் போது கட்டியிருந்தனர். அந்த கேட்டின் உள்ளே நுழைந்ததும் பெரிய கார் நிறுத்துமிடம் எப்படியும் நான்கு கார்கள் நிறுத்தலாம்.. அதை அடுத்து முகப்பில் விஸ்த்தாரமான போர்ட்டிகோ.. பிள்ளைகள் ஓடியாடி விளையாடும் பின்னாளில் என ஆசிரியர் யோசித்து கட்டிய இடம் இது. உள்ளே வந்தால்,  வரவேற்பறை.. அதில், வாசலுக்கு எதிரே பூஜை அறை. கிழக்கு பார்த்த வாசல்.. அதனால், உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் சமையல் அறை.. அதற்கு அடுத்து உண்ணும் அறை. இதற்கு எதிர்புறம் இரண்டு பெரிய அறைகள்.. அதை தொடந்து.. நிலைவாசலை ஒட்டி மாடிக்கு செல்ல படிகள்.. மேலே ஒருஹால் இரண்டு எதிர் எதிரான அறைகள். பின் மொட்டை மாடி.. சுற்றிலும் கண்ணாடியில் கைபிடிகள் கொண்ட அழகான வீடு.

இந்த வீட்டை கட்டி முடிக்கவும்.. பெரியவள் அக்ஷ்ராவிற்கு, வரன் வந்துவிட்டது. வீட்டின் பால்காய்ச்சும் நிகழ்வும் பெண்பார்க்கும் நிகழ்வும் ஒரே நாளில் நடந்தது. இனிமையான நாட்கள். ம்..

இப்போது பிருந்தா “ஏன் டி, நீ போன் எடுத்து போக மாட்டியா?.. அந்த மைசூர்காரங்க.. கூப்பிட்டாங்க. என்னான்னு கேளு..” என்றவர். தன் கணவருக்கு காபி எடுத்து வர உள்ளே சென்றார்.

அமைதியாக பூனை நடை நடந்து தனதறைக்கு சென்றாள் சாகம்பரி.. தனது போனை சார்ஜ்ஜில் இருந்து எடுத்துக் கொண்டு.. அதே போல அவள் நடக்க.. எப்படியோ கண்டுக் கொண்டான் மித்ரன்.. “சஹா.. ம்..” என தன்னிரு கைகளை மேலே தூக்கி கொண்டு.. கருவண்டு விழிகளை மெல்ல திறந்தபடியே.

சாகம்பரி, திரும்பி பார்த்தாள் பாவமாக.. ‘இப்போலிருந்து ஓடணுமா’ என அவள் மனதுள் ஓட.. “மித்து தூங்கு டா செல்லம்” என சொல்லிக் கொண்டே கட்டிலில் அமர்ந்து.. குழந்தையை தட்டிக் கொடுத்தாள்.

மித்ரன் திரும்பி தன் சஹாவை அணைத்துக் கொண்டான்.. கால் இரண்டாலும் போர்வையை உதைத்து உதைத்து தள்ளிக் கொண்டு, தன் கால்களை வெளியே எடுத்துக் கொண்டவன்.. “மினுக்கி வந்திடும்..” என்றான் மழலையில்.

அதன்பிறகு சாகம்பரியால், அவனை உறங்க வைக்க முடியுமா என்ன? அவனை தூக்கிக் கொண்டாள்.. “எனக்கு குட் மோர்னிங் சொல்லல.. ஆனால், மினுக்கி வந்திடுவான்னு தோணுது.. சரியான ஆளுடா நீ” என்றாள்.. குழந்தையின் தலை கோதி, மடியில் அமர்த்திக் கொண்டு.

மித்ரனும் “எஸ்..” என சொல்லி.. சாகம்பரியின் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைத்தவன்.. “ஹாப்பி மோர்னிங்.. வாழ்..க… வளமுடன்” என மழலையில் மொழிய.. சாகம்பரியும் பதிலுக்கு அவனை வாழ்த்தி.. முத்தமிட்டாள்.

இப்போது “நீ சுச்சா போயிட்டு ஹான்ட் வாஷ் பண்ணிட்டு என்னை கூப்பிடு, நான் வந்து ப்ரஷ் பேஸ்ட் எடுத்து தரேன்.. ம்..” என சொல்லி, குழந்தையின் பேண்ட் நீக்கி.. உள்ளே அனுப்பி வைத்தாள். ஹீட்டர் சுவிட்ச் போட்டு அமர்ந்தாள்.

மித்ரனும், கதவை மூடிக் கொண்டு தன் வேலையை செய்தான்.

சாகம்பரி போனை பார்த்துக் கொண்டிருக்க.. உள்ளிருந்து அழைத்தான் குழந்தை “சஹா கம்” என்றான்.

சாகம்பரி உள்ளே சென்று.. அவனின் தேவைகளை கவனித்து, அப்படியே ஹாட் வாட்டரில் குளிக்க வைத்து கூட்டி வந்தாள்.

மித்ரன், இது வேண்டாம் அது வேண்டாம் என எல்லா உடைகளையும் தவிர்த்து.. எப்போதும் அவன் அணியும் அதே ஸ்பைடர்மேன் படம் போட்ட அந்த சிவப்பு பனியனை அணிந்துக் கொண்டுதான் அவளை விட்டான். பின் அவளை கண்டுக் கொள்ளாமல் ஹாலுக்கு ஓடி வந்தான்.

சாகம்பரி, அவனின் துண்டு.. பவுடர்.. எண்ணை என எல்லாவாற்றையும் எடுத்து வைத்து.. அவன் கலைத்துபோட்ட உடைகளை மீண்டும் அடுக்கி வைத்துவிட்டுத்தான் வெளியே வந்தாள்.

அதற்குள் மித்ரன்.. தன் பாட்டி பிருந்தாவிற்கு முத்தம் கொடுத்து வாழ்க வளமுடன் சொல்லி.. அவர் கொடுத்த சத்துமாவு கஞ்சியை தன் பிஞ்சு விரலால் ஆட்டி ஆட்டி எடுத்துக் கொண்டு தாத்தாவிடம் வந்தான்.

அவரிடமும் வாழ்க வளமுடன் சொல்லி.. “தாத்தா.. நான் எப்போ ஸ்கூல் போகனும்..” என எப்போதும் கேட்கும் கேள்வியை கேட்டத் தொடங்கினான்.

தனபால் “முதல்ல கஞ்சியை குடி சொல்றேன்” என்றார்.

அந்த கஞ்சி குவளையை உதட்டில் வைத்துக் கொண்டு.. தன் கருவிழிகளால்.. தாத்தாவையே பார்த்துக் கொண்டு முடிக்க தொடங்கினான்.

இப்போது சாகம்பரி வெளியே வரவும்.. அவளின் அன்னை அவளுக்கும் கஞ்சியை கொடுத்தார். அவளும் அதை வாங்கிக் கொண்டு, போனில் யாருக்கோ அழைத்தபடியே.. வாசல் சென்றாள்.

சாகம்பரி போனில் பேசி முடிக்கவும்.. அவனின் மினுக்கி வரவும் சரியாக இருந்தது.

அழகான தன் நீண்ட தோகை அசை.. அந்த காலை சூரிய கதிரில்.. அழகாக அது மின்ன.. ஒய்யாரமாக அந்த கேட்டின் மேல் அமர்ந்து கொண்டிருந்தது அந்த மினுக்கி மயில்.

சாகம்பரி “மித்து வா.. புட் எடுத்துட்டு வா, மினுக்கி வந்தாச்சி” என்றாள்.

இப்போதுதான் அரைகப் கஞ்சியை குடித்திருந்தான் குழந்தை.. தன் சஹா அழைத்ததும்.. உற்சாகமாக அந்த குவளையை டீபாய் மேல் வைத்துவிட்டு, குடுகுடுவென ஓட..

தனபால் “மித்ரா..” என்றார் அதட்டலாக.

தன்போல அவனின் கால்கள் நிற்க.. அவனின் தாத்தா “ம்.. குடிச்சிட்டு போகணும்..” என்றார். அவ்வளவுதான்.. அரை டம்பள்ர்க்கு, அரைமணி நேரம் பேசிய குழந்தை.. இப்போது அரைநொடியில் எல்லாவற்றையும் குடித்துவிட்டு “தாத்தா.. பினிஷ்” என்றவன்.. மேலுதட்டில் கஞ்சி, மீசையென ஒட்டிக் கொண்டிருக்க.. பால்பற்கள் எல்லாம் தெரிய புன்னகைத்துக் கொண்டு நின்றான் குழந்தை.

தனபால் “கிட்ட வா” என சொல்லி.. பேரனின் வாய் துடைத்து ‘போ..’ என்பதாக தலையசைத்தார்.

பேரன் சிட்டாக பறந்தான்.. அங்கே வாசலில்.. ஒரு பையில் அந்த மினுக்கிக்கு வைத்திருந்த உணவுகளை எடுத்துக் கொண்டு சஹாவிடம் வந்தான்.

இருவரும் சேர்ந்து மயிலுக்கு கம்பு சோளம் என தங்களின் வாசலில் இறைக்க.. சஹா சின்ன கப்பில் நீர் எடுத்து வந்து ஓரமாக வைத்தவிட்டு.. இருவரும் போர்ட்டிகோவில் நின்றனர்.

அந்த மினுக்கி இவர்களின் செய்கையை பார்த்துவிட்டு, பொறுமையாக கீழே வந்து.. எல்லாவற்றையும் கொத்தி கொத்தி உண்ண தொடங்கியது.

சஹாவும்.. மித்துவும் பார்த்து பேசி அதனை தொடுவதற்கு ஓடி என விளையாடினர் சற்று நேரம்.

பின் சாகம்பரி குளித்து கிளம்பி வர.. மித்ரன் விளையாடிக் கொண்டும்.. டிவி பார்த்துக் கொண்டும்.. இருந்தான்.

தனபால், பேப்பர் படித்துக் கொண்டே, பேரனை பார்த்துக் கொண்டிருந்தார்.

சாகம்பரி B.Se சைக்காலஜி படித்து முடித்தாள்.. கடந்த வருடம். மேலே படிக்க வேண்டும் என ஆசை. ஆனால், ஏதும் நடக்கவில்லை. அதனால், இப்போது தன் சொந்தங்களுக்கு அவள்தான் மருத்துவச்சி.. BP பார்ப்பது, சுகர் டெஸ்ட் செய்வது.. இன்சூலின் ஊசி போடுவது.. ட்ரிப்ஸ் போடுவது.. என இப்படி சின்ன சின்ன வேலைகளை செய்வாள். சுற்று வட்டாரத்தில் அவளின் சொந்தங்கள்.. அக்கம் பக்கம் உள்ளோர் என இவளை அழைக்க தொடங்கினர்.. அது இப்போது வேலையாக ஆகிற்று அவளுக்கு.

காலையிலும் அந்த மைசூர்காரங்க அதற்குதான் அழைத்தனர். எனவே, கிளம்பினாள்.

பிருந்தா பேரனுக்கு தோசை ஊட்டிக் கொண்டிருக்க.. சாகம்பரி உண்டு கிளம்பினாள். 

மித்ரன் “நானும் வரேன் ப்ளீஸ்” என்றான்.

சஹா “குட்டு, நான் பத்து நிமிஷத்தில் வந்திடுவேன்.. நீ சப்பிடறதுக்குள் வந்திடுவேன்..” என்றாள் சமாதானமான குரலில்.

மித்ரன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

பிருந்தா “கூட்டி போ.. அவங்களுக்கு ஒன்னும் பெரிய வியாதி இல்லையே” என்றார்.

சாகம்பரி “ம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்ல.. சும்மா BP செக் பண்ண போறேன்.. அவங்க நல்லா இருக்காங்க.. அதுக்காக இவனை கூட்டிட்டு போகனுமா” என்றாள்.

பிருந்தா “எங்க போறான் இந்த வீட்டை விட்டு குழந்தை.. பாவம், போ.. சும்மா வண்டியில் அழைச்சிட்டு போ” என்றார்.

மித்ரன் இன்னமும் முகத்தை பார்க்காமல் இருக்க.. சாகம்பரி “சீக்கிரம் சாப்பிடு, போலாம்” என்றாள் குழந்தையிடம்.

அவனும் காலையில் போல.. கடகடவென உண்டு கிளம்பினான்.

இருவரும் டூ வ்ஹீலரில் பயணித்து, அந்த மைசூர்காரர்கள் வீட்டை அடைந்தனர்.

காலிங் பெல் அடித்து.. அவர்களை அழைத்தாள் சஹா.

உள்ளிருந்து அவளின் தந்தையை ஒத்த வயதுடைய ஒருவர் வந்தார்.. நல்ல வெளுத்த நிறம்.. முழு வழுக்கை தலை.. கைவைத்த வெள்ளை பனியன் அணிந்துக் கொண்டு.. நெற்றியில் சந்தனம் அணிந்துக் கொண்டு.. சிரித்துக் கொண்டே கதவை திறந்தார்.. “வாங்க டாக்ட்டர்..” என புன்னகை முகமாக அழைத்தார்.

சாகம்பரி “அங்கிள்.. ப்ளீஸ்..” என்றாள், அவர் தன்னை டாக்டர்.. என அழைத்ததில்.

அதற்குள்.. மித்ரனை கண்டவர் “ஹேய்.. பிக்மேன்… நீயும் வந்திருக்கியா, வா.. வா..” என அழைத்தார்.

மித்ரன் “ம்.. வந்துட்டேன்” என்றவன் உள்ளே வேகமாக ஓடினான் எதோ தெரிந்த வீடு போல.. ஓடியவன் சோபாவில் ஏறினான்.. மீண்டும் குதித்து.. “இதென்ன.. அண்ணாவா..” என எதோ போட்டோவை காட்டினான். 

ராஜரத்தினம் “ம்.. அண்ணாதான்.. அவங்ககிட்ட பேசித்தான் பாட்டிக்கு BP தாறுமாறா ஏறிடுச்சி..” என்றார், சிறியவனிடம் ஆரம்பித்த பேச்சு சாகம்பரியிடம் முடிந்தது.

சாகம்பரி “ஓ.. எங்க ஆன்ட்டி” என்றவள்.. BP கிட்டோடு உள்ளே சென்றாள்.

ராஜரத்தினம் “அங்கதான் இருக்கா.. கொஞ்சம் பார்த்து பேசும்மா” என்றார். ம்.. இந்த ஊரில் இவளின் படிப்பை மதிக்க தெரிந்த மனிதர்கள் இவர்கள் மட்டுமே.

உள்ளே சென்றாள் சாகம்பரி.

அதற்குள் மித்ரன் டீபாய் மேலிருந்த பிளவர்வாஷ் பார்த்துக் கொண்டே அமர்ந்தான்.. பின் எழுந்தான், அங்கே ஹாலில் இருந்த புக் ஷெல்ப் சென்றான்.. பின்னால் கையை கட்டிக் கொண்டு.. பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பெரியவர், அந்த குழந்தைக்கு.. பிஸ்கட் கொண்டுத்தார் உண்பதற்கு. என்னமோ அந்த குழந்தையிடம் தன்போல ஒரு கருணை வந்தது.. ம், அந்த நாலுவயது.. பையனின் வாழ்வில்தான் எத்தனை இன்னல்கள்.. இவனை நினைக்கையில் எங்கள் கவலை அப்படி ஒன்றும் பெரிதில்லைதான். இதற்கே, இவள் இப்படி அலட்டுகிறாள் என தன் மனையாளை நினைத்து வருந்தினார் ரத்தினம்.

Advertisement