Advertisement

விக்ரம் “நீங்க ஏன் மாமா இந்த நேரத்திற்கு காரெடுத்தீங்க.. நைட் டைம்.. நான் வேணும்ன்னா.. டிரைவ் பண்ணிட்டு வரவா?.. எப்படி போவீங்க” என்றான்.

சஹாக்கு கோவமாக வந்தது “இல்ல, இல்ல.. ரொம்ப நன்றி விக்ரம் அத்தான்… நாங்க போய்கிறோம். அப்பா சூப்பரா டிரைவ் பண்ணுவார்.. என்ன ப்பா” என்றாள் இறுதியாக தன் தந்தையை பார்த்து.

தனபால் சிரித்துக் கொண்டே “அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்பா.. நீங்க கிளம்புங்க, நாங்க பார்த்துக்குவோம். அம்மா அப்பாவை கேட்டதாக சொல்லுங்க” என்றார்.

பின் தன் மகளை பார்த்து “சஹா, நீ இங்கேயே இரு.. நான் காரெடுத்து வரேன்” என்றவர் கிளம்பினார்.

விக்ரம் அவர் சென்றதும் “சஹா.. அப்படி பார்க்காத.. நாம ப்ரெண்ட்ஸ்.. எனக்கு வேற வழி இல்ல டா..” என்றான் சின்ன குரலில் தலை சாய்த்துக் கொண்டு, அவளுக்கு மட்டும் கேட்க்கும் குரலில்.

சாகம்பரியின் கண்களில் தேக்கி வைத்திருந்த கண்ணீர்.. அவளின் சொல் போச்சு கேட்க்காமல்.. அவனின் பேச்சில் உடைபெடுத்துக் கொண்டு பொங்கிக் கொண்டு வெளியே வந்தது.. குபுகுபுவென.

மித்ரன் சாகம்பரியின் போனை பார்த்துக் கொண்டிருக்க.. சட்டென விக்ரம் பெண்ணவளின் கைபற்றினான்.. “சாரி டா..” என்றான். 

பெண்ணவள் தன் கையை பொறுமையாக அவனிடமிருந்து இழுத்துக் கொண்டாள்.. “போய்டுங்களேன்.. ப்ளீஸ்.. எனக்கு எல்லாம் புரியும் போய்டுங்க ப்ளீஸ்” என்றாள் சின்ன குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் படி.

விக்ரம் “போய்ட்டேன்.. எப்போவோ போய்ட்டேன்..” என்றான்.

இருவருக்கும் அடுத்து பேச்சு வரவில்லை.

ஐந்து நிமிடத்தில் தனபால் காரெடுத்து வந்தார். மித்ரனையும் சாகம்பரியையும் காரில் வழியனுப்பி வைத்துவிட்டுத்தான், விக்ரம் வண்டியை எடுக்க சென்றான்.

இவளும் அவனும் ஆரம்பிக்கும் முன்பே முடித்துக் கொண்டனர்.

!@!@!@!@!@!@!@!@!

அவசர அவசரமாக சாகம்பரி கிளம்பிக் கொண்டிருந்தாள். தனபால் இன்று மதியம் மூன்று மணிக்குதான் மார்கெட் சென்றிருந்தார் முருங்ககாய் எடுத்துக் கொண்டு. எனவே, அவர் வந்து சேரவே நேரம் ஆகியது. 

சாகம்பரி கிளம்பி அமர்ந்திருந்தாள். இன்றுதான் ரத்தினம் அவர்களின் தம்பி பெண்ணின் வரவேற்பு விழா. இவர்களுக்கும் அழைப்பு வந்திருந்தது. எனவே, சஹா கிளம்பி அமர்ந்திருந்தாள்.

மித்ரன் ஹோம் வொர்க் முடித்துவிட்டிருந்தான். எனவே, அவனும் “நானும் வரேன்..” என அடம் செய்துக் கொண்டிருந்தான்.

தனபால் வீடு வந்து அவசர அவசரமாக கிளம்பினார். பேரனையும் அழைத்து போகலாம் என சொன்னார். ஆக, மூவரும் கிளம்பினர் அந்த மண்டபம் நோக்கி.

ரொம்ப நேரம் ஆகியிருந்தது.. சொல்ல போனால் எதோ சாப்பாட்டிற்கு வருவது போல தோன்றியது சஹாக்கு, அவ்வளவு நேரம் ஆகியிருந்தது. எனவே, அவசரமாக இறங்கினாள். மண்டபத்தின் முகப்பிலேயே ரத்தினம் நின்றார். அன்பாக தன் நண்பனின் தோளில் கைபோட்டுக் கொண்டு வரவேற்றார். அப்படியே உள்ளே கூட்டி சென்றார்.

மணமக்கள் மேடையில் இருந்தனர் நல்லவேளை என எண்ணிக் கொண்டே தனபால் மணமக்களை வாழ்த்தி, பரிசை கொடுக்க செய்தார் மகளின் கையால். பேரன் மகளோடு நின்று மணமக்களோடு புகைப்படம்   எடுத்துக் கொண்டார்.

தனபால் அவர்களை பார்த்ததும் ரத்தினத்தின் தம்பி அவர் மனைவி என எல்லோரும் வந்து வரவேற்று சென்றனர்.

கூட்டம் குறையவும்.. இளையவர்கள் dj இசை தொடங்கினர். மணமக்கள் அவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் ஆட தொடங்கினர். நம்ம மித்ரனும் அதில் சிறுவர்களுடன் சேர்ந்து ஆடத் தொடங்கினான்.

சாகம்பரி ரசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள். சுகுமாரி “வா, சஹா, சாப்பிடலாம்.. எங்கையோ இந்த கெளரியை காணோம்..” என கண்களால் தேடியபடியே பேசினார்.

சாகம்பரி “ம்.. அங்கிள் சாப்பிட்டாச்சா.. ஆன்ட்டி” என்றாள்.

சுகுமாரிக்கு மகனை தேடிக் கொண்டிருந்தது கண்கள். அதனால், பெண்ணவளின் பேச்சை காதில் வாங்கவில்லை. இப்போது ரத்தினத்தின் தம்பி வந்தார்.. “சாப்பிட்டியா ம்மா..” என்றார்.

சஹா “இல்ல அங்கிள், இப்போதுதான் ஆன்ட்டி கூப்பிட்டுக் கொண்டு இருந்தாங்க.. மித்து ஜாலியா ஆடிட்டு இருந்தான், அதான் டிஸ்டர்ப் பண்ணாமல் அப்படியே உட்கார்ந்துட்டேன்.

அதை தொடர்ந்து எதோ அவர் பேசிக் கொண்டிருந்தார்.

ரத்தினமும் தனபாலும் வந்தனர். ரத்தினம் “ஏன்மா, நீயும் உங்க ஆன்ட்டியும் ஏன் சாப்பிட வரலை. நாங்க சாப்பிட்டோம்.. போ, நீயும் அவளும் சாப்பிட்டு வாங்க.. அல்மோஸ்ட் எல்லோருக்கும் சாப்பிட்டாச்சு.. எங்க அவ” என்றார்.

சஹா “அங்கிள், உங்க பையனை தேடிட்டு இருந்தாங்க அங்கிள்.. இங்கதான் இருந்தாங்க” என்றாள்.

ரத்தினத்திற்கு கோவமாக வந்தது, தம்பி அமர்ந்திருப்பதையும் மறந்து “அவன் எங்க கல்யாணத்துக்கு வந்தான். அங்க எதோ ரூமில் உட்கார்ந்து கால் பேசிட்டு இருக்கான்.. இவ வேற..” என சலித்துக் கொண்டார்.

எல்லோருக்கும் சங்கடமாக போனது.. அமைதி வந்து சேர்ந்தது.

சுகுமாரி மகனை ஹால் முழுவதும் தேடிவிட்டு களைப்பாக வந்தார் “வா, அவனை காணோம் சஹா.. மணியாச்சு.. அண்ணா வண்டி ஓட்டி போகனும் வா, சாப்பிடலாம்” என்றார்.

ரத்தினம் ஒன்றும் சொல்லாமல் மனைவியோடு சஹாவோடு மித்துவோடு.. சென்றார் உணவு உண்ணும் இடத்திற்கு. அங்கே தனியாக கையில் தட்டோடு சற்று தள்ளி நின்றுக் கொண்டு யாரோ போல உண்டுக் கொண்டிருந்தான் கௌரி, தங்கள் வீட்டு திருமண விழாவில்.

ரத்தினம் தலையில் அடித்துக் கொண்டார் அதை பார்த்து. தன் மனைவியிடமும் அதை காட்டினார். சுகுமாரிக்கு கண்களில் நீர் வந்தது.

அமைதியாக சஹா நகர்ந்துக் கொண்டாள். தானாகவே தனக்கு வேண்டுவதை எடுத்துக் கொண்டு.. மித்ரனுக்கு ஊட்டிவிட தொடங்கினாள்.

அங்கே சுகுமாரி மகனின் அருகில் சென்றார்.. “என்ன ப்பா ஏன் கீழ வரலை.. எல்லோரும் உன்னை கேட்டாங்க.. என்ன வேண்டும் ஸ்வீட் சாப்பிட்டியா” என்றார் வாஞ்சையான குரலில்.

கௌரி “நீ சாப்பிடும்மா.. நான் வீட்டுக்கு போகனும்.. நெட் சரியா இல்லை இங்க.. நான் வீட்டுக்கு போறேன் கார் சாவி வாங்கி கொடு” என்றான், அன்னையின் முகத்தை கூட பார்க்காமல்.

சுகுமாரி “சரி ப்பா.. சாப்பிடு.. என்ன வேண்டும்..” என கேட்டு அவனுக்கு தானே சிலது எடுத்து வந்து கொடுத்தார்.

சாகம்பரி, இதையெல்லாம் மித்துவிற்கு ஊட்டிவிட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் உண்ணும் போதே மித்து உறங்க தொடங்கிவிட்டான். அவனை தூக்கிக் கொண்டே தானும் உண்பதற்கு சென்றாள். கூட்டம் அவ்வளவாக இல்லை.. நடனமாடிய இளவட்ட நண்பர்கள்.. பின் சில பெரியவர்கள்தான். எனவே, மித்துவை மடியில் வைத்துக் கொண்டே  பொறுமையாக உண்டாள். ரத்தினம், அவ்வபோது, என்ன வேண்டும் என கேட்டு பரிமாறினார் அவளுக்கு.

சாகம்பரி உண்டு முடித்தாள். தனபால் பேரனை மடி அமர்ந்தி அமர்ந்திருந்த மகளின் அருகே வந்தார்.. “போலாமா ம்மா.. நான் தூக்கிக்கவ..” என்றார்.

சஹா “வேண்டாம் ப்பா..” என்றாள்.

தனபால் “கௌரி நம்ம கூட வராராம்.. அவங்க கார் எதோ வேலையா போயிருக்காம்.. ம்..” என்றார் தகவல் சொல்லும் குரலில்.

சாகம்பரி “ம்..” என கேட்டுக் கொண்டாள்.

தனபால் “சரி காரெடுத்து வரேன்” என சொல்லி முன்னால் சென்றார்.

சுகுமாரி இப்போது சஹாவிடம் வந்து மகனும் உடன் வருகிறான் என விவரம் சொன்னார்.

தனபால் காரெடுத்து வந்தார்.. அதை சொல்ல பெண்ணுக்கு அழைத்தார், போனில். சஹாவும் பேசிவிட்டு, மித்ரனை தூக்கிக் கொண்டு கிளம்பினாள். சுகுமாரி, இவள் எழவும் மகனை வர சொல்ல உள்ளே சென்றார்.

சஹா, குழந்தையோடு அமர்ந்துக் கொண்டே இருந்ததில் கால்கள் மரத்து போகிற்று.. பொறுமையாக கால் எடுத்து வைத்தாலும்.. கால்கள் குத்தியது.. சட்டென தடுமாறினாள்.. கைகள் பிடிப்பை தேட.. அங்கே இரும்பு கரம் ஒன்று.. நீண்டு.. அந்த தேடிய கைகளை பற்றிக் கொண்டது வாகாக.. கூடவே,  குழந்தையை பின்னிலிருந்து வாங்கிக் கொண்டு.. “உட்கார்..” என சொல்லிவிட்டு.. உச்சிகுடுமி போட்டவன்.. சென்றுவிட்டான், குழந்தையோடு அவளின் கண்ணெதிரில்.

சாகம்பரிக்கு என்ன நடக்குது.. என உணர்வு வரவே.. சற்று அமர வேண்டி இருந்தது. இரண்டு நிமிடம் அமர்ந்து எழுந்து சென்றாள், காருக்கு. 

காரின் பின் சீட்டில் மித்து அழகாக படுக்க வைக்கப்படிருந்தான். தானும் அமர்ந்துக் கொண்டு, குழந்தையின் தலையை எடுத்து.. மடியில் வைத்துக்  கொண்டாள். ‘போகலாம்’ என்பதாக கண்ணாடியை பார்க்க.. அப்பாவின் கண்களுக்கு பதில்.. அன்னிய கண்கள் அவளின் சம்மதத்திற்காக இமைக்காமல் பார்த்திருந்தது அவளையே.. சஹா “போலாம் ப்பா” என்றாள்.

தனபால் “கௌரி, நானே டிரைவ் பண்றேன்னு சொன்னான்.. நம்மை வீட்டில் விட்டுட்டு, அவன் வண்டியை எடுத்துட்டு போறானாம். காலையில் கல்யாணத்துக்கு வரணுமில்ல.. அதான்.” என்றார், தகவலாக.

சாகம்பரி “ம்..” என கேட்டுக் கொண்டாள்.

“சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் 

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்..

நாளை நம் கீதமே.. 

எங்கும் உலாவுமே..” என spb மெல்லிய குரலில் பாட தொடங்க.. அமைதியாக கண்மூடிக் கொண்டாள் சஹா.

 

Advertisement