Advertisement

வரம் கொடு! தவம் காண்கிறேன்!

5

மாலையில் பண்ணாரியம்மன் கோவில் சென்றனர்.. சாகம்பரி மித்ரன் தனபால் மூவரும். பிருந்தா வரவில்லை என்றுவிட்டார். அவர் இப்போதெல்லாம் அதாவது, தன் பெரியமகள்.. தங்களைவிட்டு போனதிலிருந்து… அதைவிட கொடுமையாக தங்கள் மாப்பிள்ளையும்  தங்களை விட்டு போனதிலிருந்து வீட்டு படி இறங்குவதில்லை.. அதிலும் தெய்வத்தை தொழ கண்டிப்பாக வருவதில்லை அவர்.

தனபால் தங்களுடைய ப்ளாக் நிற க்விக் காரை எடுத்தார். மித்ரன் முன்னால் தாத்தாவோடு அமர்ந்து “தாத்தா, சஹா என்னை திட்டிட்டா..” என கம்ப்ளைன்ட் சொல்லிக் கொண்டே வந்தான்.

சஹாவும் “எத்தனை சாக்கி சாப்பிடுவா மித்து.. அதான்,” என அவனுக்கு சரியாக தானும் தன் தந்தையோடு பேசிக் கொண்டே வந்தாள்.

தன்பால் “சரி சரி விடு.. ரைம்ஸ் ஏதாவது சொல்லு மித்ரன்” என்றார்.

மித்ரன் “தாத்தா தூக்கம் வருது” என சொல்லி சீட்டில் சாய்ந்துக் கொண்டான் உடனேயே.

சஹா சிரித்தாள்.

தனபாலுக்கும் பேரனின் உடனடி பதிலில் சிரிப்பு வந்தது.. ‘எப்படி எல்லாம் டிமிக்கி அடிக்கிறான் என்கிட்டையே’ என எண்ணிக் கொண்டு.. பேரன் அமைதியானத்தில் தன் மகளை பார்த்து புன்னகைத்துவிட்டு வேகமெடுத்தார் சாலையில்.

தனபால்தான் இப்போது பேரனுக்கு இனையாக வீட்டில் வேலை செய்வது பேசுவது.. என எல்லாம். சிலமாதங்கள் அவரும் சோர்ந்திருந்தார். ஆனால், வளரும் குழந்தை தங்களை ஊன்றி பார்க்கிறது என அவருக்கு புரிய, கொஞ்சம் இயல்பு நிலைக்கு தன்னை தானே முயன்று மாற்றிக் கொண்டார்.

கோவிலில் இருந்து சற்று தூரத்தில்தான் பார்க்கிங்.. எனவே, இவர்களை கோவலில் இறக்கிவிட்டு விட்டு, தான் காரை பார்க் செய்ய சென்றார், தனபால்.

சாகம்பரி, வரும் போதே ஒரு தாம்பாளத்தில் தேங்காய், செவ்வாழை.. பூ.. எலுமிச்சை பழம்.. என எல்லாம் எடுத்து வந்திருந்தாள். அதனால், மித்ரனின் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள். இன்று அம்மாவாசை அதனால் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. தன் அக்கா அக்ஷ்ராவிற்கு இந்த அம்மன் மீது அதீத ப்ரியம். அதான், மித்துவின் பிறந்தநாளுக்கு இங்கே கூட்டி வந்துவிட்டனர் அவளின் தந்தையும் தங்கையும், மித்ரனை.

மித்ரன் இப்போது “தாத்தா எங்க காணோம்.. நாம தொலைஞ்சி போயிட்டோமா” என அவளின் கைபிடித்துக் கொண்டே கேட்டான் குழந்தை.

சாகம்பரிக்கு இவனின் கேள்வியில் சிரிப்பு வந்ததாலும் மனது துக்கத்தில் இருப்பதால்.. கண்ணில் நீர் கசிந்தது.. எனவே, பதில் சொல்லாமல் கூட்டத்தில் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கும் இடத்திற்கு சென்றாள்.

இவள் டிக்கெட் வாங்கிக் கொண்டு, தந்தை வரும் வழி பார்த்தாள். தனபால் வரவும் மூவரும் சென்று சாமி தரிசனம் செய்து அர்ச்சனை செய்துக் கொண்டு வெளியே வந்தனர்.

தனபால் யாரோ தெரிந்தவர்கள் வர.. பேச நின்றார்.

மித்ரனும் சாகம்பரியும் அமருவதற்கு இடம் பார்த்துக் கொண்டு நடந்தனர் கோவில் வளாகத்தில். அப்போது, கரகரப்பான ஆண் குரல் கேட்டது “சஹா.. சாகம்பரி.. நீ எங்க இங்க” என அதிர்ந்து பின் அமைதியான.. கரகரப்பான குரல் ஒன்று கேட்டது, அவளின் காதில்.

சாகம்பரிக்கு உடலின் பலம்மெல்லாம் குறைந்தது போனது அந்த குரலில்.. நிமிர தோன்றவில்லை.. ஆனாலும், நிமிராமல் இருக்க முடியாது என எண்ணிக் கொண்டு தன்னை தேற்றிக் கொண்டவளாக அவள் நிமிர.. இப்போது, குழந்தையிடம் பேசினான், கரகரப்பான குரலுக்கு சொந்தக்காரன் “மித்து..” என்றான் இவளை மட்டுமே பார்த்துக் கொண்டு.

மித்ரன் “சித்தப்பா.. எனக்கு ஹாப்பி பர்த்டே.. “ என்றான் குழந்தை.

சட்டென அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் சாகம்பரியை.. இப்போது குரல் கிண்டலாக மாறி “சொல்லவேயில்லை..” என்றான் அவளை பார்த்து, பின் சிரித்த முகமாக குழந்தையிடம் “ஹாப்பி பர்த்டே மித்ரன்..“ என சொல்லி, தன் பர்ஸிலிருந்து இரண்டு 5௦௦ ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டுத்தான் “கிப்ட் வாங்கிக்க” என்றான், குழந்தையிடம். 

இப்போது, மித்ரன் சாகம்பரியை பார்த்தான். அவள் கண்ணசைக்க குழந்தை அந்த அசைவில், அவரிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டது “தேங்க்ஸ் சித்தப்பா” என்றது.

இப்போது சஹா “மித்து, சித்தப்பா இல்ல, மாமா சொல்லணும்” என்றாள் வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு.

இப்போது அவளின் எதிரே நின்ற விக்ரம் “க்கும்.. நான் உன் அத்தை பையன் அதை மாற்ற முடியாது எப்போதும். புரியுதா..” என்றான்.. அவளை முறைத்தபடி கோவமாக சொன்னான்.

மித்ரன், சட்டென ஒன்றும் புரியாமல் சிரிக்க.

சஹா வேண்டுமென்றே ஒரு புன்னகையை முகத்தில் கொண்டு வந்தவள் “வாயை மூடிக் கொள்ளவும்.. ப்ளீஸ்” என மித்ரனை பார்த்துக் கொண்டே சொன்னாள் சுத்த தமிழில் சொன்னாள்..

அந்த விக்ரம்க்கு அவள்மேல் ஒரு ஈர்ப்பு உண்டு.. அவளிற்கும்தான். எனவே, அவளின் பேச்சு  கோவத்தை தர “என்ன இவ்வளவு கோவம்.. “ என தலையை கோதிக் கொண்டான்.

மித்ரன் “தாத்தா” என தன் தாத்தாவை பார்த்து ஓட..

அந்த விக்ரம் “எப்படி இருக்க..” என சின்ன குரலில் ஆதரவாக கேட்டான்.

சாகம்பரி தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளின் நல்ல நேரம் இப்போது தனபால் வந்தார். விக்ரமை பார்த்தார்.. “வா விக்ரம்.. நீ மட்டும்தான் வந்தியா? அம்மா அப்பா எப்படி இருக்காங்க..“ என பொதுவாக விசாரிக்க தொடங்கினார்.

விக்ரம் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

சாகம்பரி, அவனை நிமிர்ந்து பார்த்திட கூடாது என கீழே குனிந்துக் கொண்டாள். பின், மித்துவோடு, பிரசாத கடை நோக்கி சென்றாள்.

குழந்தைக்கு எதோ வாங்கி கொடுத்து.. இடம் பார்த்து அமர்ந்தாள். மித்ரன் ஆசையாக அந்த லட்டுவை உண்டான்.. ஊட்டிக் விட்டுக் கொண்டிருந்தாள் சாகம்பரி.

தனபால் விக்ரமிடம் அவனின் திருமண ஏற்பாடுகள் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். விக்ரம் தனபாலின் ஒன்றுவிட்ட தங்கை பையன் ஈரோட்டில் இருக்கிறார்கள். விக்ரம் தன் அப்பாவின் தொழிலான டூ வ்ஹீலர் ஷோவ்ரூம் பார்த்துக் கொள்கிறான். அதுபோக நிறைய சொத்துகள் என நல்ல குடும்பம்.

விக்ரமிற்கும் சாகம்பரிக்கும் நடுவில் அத்தை பையன்.. மாமன் மகள் உறவு.. என்பதாலோ என்னமோ ஒரு சொல்லப்படாத ஈர்ப்பு உண்டு. எங்காவது விசேஷங்களில் பார்த்தால்.. இருவரும் தானாகவே ஒன்றாக சுற்றுவார்கள்.. தனியே உண்பார்கள்.. நிறைய கிண்டல் செய்துக் கொள்வார்கள். ஏதாவது முக்கியமான செய்தி என்றால் அவள் அவனிடம் சொல்லிவிடுவாள்.. அவனும் அப்படிதான். சஹா.. ‘தன்னுடைய 1௦th மார்க்.. தனக்கு என்ன படிக்க பிடிக்கும்.. நாங்கள் துணி எடுக்க எப்போது ஈரோடு வருகிறோம்’ என தங்களுக்கே உண்டான விஷயங்களை சொல்லுவாள்.

விக்ரம் கல்லூரி படிக்கும் போது அவள் 12th என்பதால்.. ‘அவனின் கல்லூரி நாட்கள்.. எங்கே டூர் சென்றான்.. அடுத்து, செல் போன் புது மாடல் வாங்கியது.. இன்றிலிருந்து நானே ஆபீஸ் போக போறேன்’ என்பது போன்ற செய்திகளை சொல்லுவான்.. பகிர்ந்து கொள்வார்கள் இருவரும். 

தினமும் போனில் பேசுவர் என இல்லை.. மாதத்தில் இரண்டுநாட்கள்.. எங்கேனும் சந்திக்கும் இடங்களில்.. ஒரு அழகான பார்வையும் பேச்சும் அவர்களிடம் இயல்பாக எழும். அத்தோடு சொந்தம் என்பதால்.. தங்களுக்குள்தான் மணமாகும் என அவர்களாகவே எண்ணிக் கொண்டு எதையும் சொல்லிக் கொள்ளாமல் ஆசையாக பழகுவர்.

பெரியவர்களுக்கு இவர்களின் பழக்கம் தெரியுமா என இதுவரை இருவருக்கும் தெரியாது. விக்ரம் தனக்கு வீட்டில்  வரன் பார்க்கிறார்கள் எனவும் “ஏன், இவ்வளவு அவசரமாக வரன் பார்க்குறீங்க.. அங்க அவ.. அதான், சஹாவை.. எனக்கு கேட்ப்பீங்கன்னு நினைத்தேன்” என தன் வீட்டில் அவளின் பேச்சை எடுத்து, தன் விருப்பத்தை சொன்னான்.

அப்போதே அவனின் தந்தை “இங்க பார்.. முன்னால் எப்படியோ, ஆனால், இப்போது அப்படி முடியாது. என்னிக்காக இருந்தாலும், அந்த குழந்தையின் பொறுப்பு உன்மேல் விழும். நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் சரி வராது. நீ எங்களுக்கு ஒரே பையன். ஒத்து வரலைன்னா விட்டுடனும். பெரியவங்களுக்குள்.. எந்த பேச்சும் அப்படி எழுந்ததில்லை. அதனால், இது சரிவராது. நாமும் யாரையும் கஷ்ட்டபடுத்த வேண்டாம். நம்ம வேலையை நாம பார்ப்போம். எல்லாத்தையும் நம்மால் சரி செய்ய முடியாது, புரியுதா” என பட்டும் படாமல்.. மகனிடம் பேசி முடித்துக் கொண்டார்.

விக்ரம்க்கு அதுதான் சரியென தோன்றுகிறது இப்போது வரை. ம்.. அவனுக்கு நிச்சயம் முடிந்துவிட்டது. இருமாதம் கடந்து திருமணம். எனவே, நிதர்சன வாழ்க்கைக்கு பழகிக் கொண்டான் அவன். ஆனால், அந்த இருபத்தி மூன்று வயது பெண்ணுக்கு என்ன நடக்கிறது.. ஏன் நடக்கிறது.. எதனால் நடக்கிறது.. என தெரியாமல்.. எதையும் உரிமையாய் கேட்கவும் சொல்லவும் முடியாமல்.. அமைதியாக நிற்கிறாள். 

ஒருநாள் விக்ரம் தானாக அழைத்து சாகம்பரிக்கு பேசினான் “நேற்று பெண் பார்க்க போயிருந்தேன்..” என தொடங்கி வீட்டில் நடந்ததை சொன்னான்.

அழுகையாக வந்தது பெண்ணுக்கு.. இறுதியாக “வாழ்த்துக்கள்.. சந்தோஷமா இருங்க..” என கரகரத்த குரலில் சொன்னாள்.

விக்ரம் “சஹா.. க்கும்.. உ..னக்கு, அதாவது” என பேச வர.

சாகம்பரி “விக்கி.. விக்ரம் எல்லாம் சரிதானே.. ம், சரியா தானே நடக்குது” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

விக்ரம் “தெரியலையே” என்றான்.

சாகம்பரி மெல்லிய குரலில் அழுதாள். அந்த சத்தம் அவனை எட்டியது. விக்ரம் “சாரி” என்றான்.

சாகம்பரி “எதுக்கு..” என்றாள்.

விக்ரம் “தெரியலை” என்றான்.

சஹாக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை. போனை வைத்துவிட்டாள். அதன்பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை, பார்த்துக் கொள்ளவில்லை. இன்று இப்போதுதான் பார்க்கிறார்கள்.

இப்போது தனபால் விக்ரம் இருவரும், அமர்ந்திருந்த சஹா மித்ரன் அருகில் வந்தனர். சஹா இருவருக்கும் லட்டுவை கொடுத்தாள். விக்ரம் அமர்ந்துக் கொண்டான் தனபால் கீழே அமராமல் நின்றபடியே உண்டார். 

சற்று நேரம் எழுந்துக் கொண்டனர் நால்வரும்.

Advertisement