Advertisement

சஹா “ஆன்ட்டி பர்ஃப்பில என்ன ரோஸ் எசன்ஸ் போட்டீங்களா, வாசனையா நல்லா இருக்கு” என்றாள்.

சுகுமாரி “அட கண்டுபிடிச்சிட்ட.. உங்க அங்கிள்க்கு அது தெரியாமல்.. உன் கையில் எதோ இருக்குன்னு கவிதை சொன்னார்” என்றார் வெட்கமும் கிண்டலுமாக தன் கணவனை பார்த்துக் கொண்டே.

சஹா, ரத்தினத்தை பார்க்க.. ரத்தினம், தன் மனையாளின் வெட்கத்தை ஆசையாக பார்த்தார். 

பின் ரத்தினம் “இது தெரியாம போச்சே எனக்கு..” என அலுத்துக் கொண்டார் ஆசையாக.

சாகம்பரிக்கு அவர்களின் ப்ரியம் புரிய.. அமைதியாக சுகுமாரியோடு சேர்ந்து கீரை பறிக்க தொடங்கினாள்.

அடுத்தடுத்த நாட்கள் சென்றது.

கௌரி, அடுத்தடுத்த வாரங்களில் அன்னூர் வரவில்லை.

சுகுமாரியும் மகனை அழைத்து பேசவில்லை.. அப்படி பேசுவதற்கு ரத்தினம் அனுமதிக்கவில்லை. ‘சொல்லாமல் ஊருக்கு சென்றுவிட்டிருக்கிறான்.. அங்கே சென்று ஒரு போன் செய்து உன்னை விசாரிக்க கூட இல்லை.. அவனை எல்லாம் மாற்ற முடியாது.. அவனாக வரும்வரை நீ பேசாதே..’ என கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார்.

சுகுமாரிக்கு, மகன் மேல் எவ்வளவு பாசமோ அதே அளவு கணவன் மேல் பதிபக்தியும் உண்டு, அதனால்.. கணவனின் பேச்சை மீறவில்லை. ஆனால், தன் கொழுந்தனாரிடம் சொல்லி.. தன் மகனுக்கு போனில் அழைத்து பேசி, திருமணத்திற்கு வரும்படி பேச வைத்துவிட்டார். இப்படியே தன்னுடைய நாத்தனார்.. ஓரகத்தி அவர்களின் பசங்க என எல்லோரிடமும் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் தன் மகனிடம் பேச சொல்லி.. அவனை குடும்பத்தோடு பிணைக்க வைக்கும் முயற்சியை செய்தார் அன்னை.

அந்தவகையில் அந்த அன்னையின் செயல்கள் கைகொடுத்தது.. தன் கொழுந்தனார் மகளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை.. அதாவது தங்கள் வீட்டு மாப்பிள்ளை.. இப்போதுதான் பெங்களூர்க்கு மாற்றலாகி இருந்தார். எனவே, அங்கே.. எங்கே தங்குவது.. வீடு பார்ப்பது எந்த இடம் என ஒன்றிரண்டு முறை.. அவனின் சித்தப்பா அழைத்து பேசினார்.. அவனின் அப்பார்ட்மெண்டிலேயே வீடு பார்க்க சொன்னார். இப்படி வாரம் ஒருமுறை.. எப்படியோ அவனின் உறவுகள் போன் செய்ய தொடங்கியது. கௌரி பெரிதாக அதில் நாட்டாம் காட்டவில்லை. ஆனால், தனக்கு தெரிந்த தகவல்களை பொறுப்பாக சொன்னான்.. வழங்கினான். அத்தோடு நின்றுக் கொண்டான். எடுத்துக்காட்டிக் கொண்டு எந்த வேலையையும் அவன் செய்யவில்லை.. அதற்காக பதில் சொல்லாமலும் இல்லை.. அளவாக பேசினான்.

ஆக, இப்படியே அடுத்த இரண்டுமாதம் செல்ல.. தன் சித்தப்பா பெண்ணின் திருமணத்திற்கு.. கண்டிப்பாக தான் செல்ல வேண்டும் என தோன்றியது கெளரிக்கு. 

கௌரி, இரவு கிளம்பினான் தன் வீடு நோக்கி. இன்னும் ஐந்துநாள் இருக்கிறது அந்த திருமணத்திற்கு.. என்னமோ கெளரிக்கு, மனது சரியாக இல்லை.. எத்தனை நாட்கள்.. விருந்து நண்பர்கள் என பொழுதை கழிப்பது.. ஒருகட்டத்தில் அவனுக்கு சலிப்பு தட்ட.. அம்மாவும் தன்னுடன் பேசாதது எதோ போல நெருட.. இதுதான் சாக்கு என தன் ஊர் நோக்கி வந்தான், நல்லவன்.

இரவு முடித்துக் கொண்டு காரெடுத்தான். இப்போதுதான் அழைத்தான் தன் அன்னைக்கு. சுகுமாரி, அங்கே தன் கொழுந்தனார் வீட்டில் இருந்தார்.. இன்று, இங்கே பந்தக்கால் முகூர்த்தம். அந்த வார இறுதியில் திருமணம். அதனால், விழாவின் மும்முறத்தில் தன் போனை கவனிக்கவில்லை சுகுமாரி. 

இரவு உணவு முடித்துக் கொண்டு.. தன் கணவனோடு காரில் வீடு வரும் போதுதான் போனை பார்த்தார் சுகுமாரி. மகன் அழைத்திருக்கிறான்.. கணவரிடம் “என்னங்க, கௌரி கூப்பிட்டிருக்கான்..” என்றார் பதட்டமாக.

ரத்தினம் அமைதியாகவே இருந்தார்.

சுகுமாரி “பேசிடுறேன்.. என்னான்னு தெரியலை “ என்றார்.

ரத்தினம் ஏதும் சொல்லவில்லை.

சுகுமாரி அழைத்து பேசினார் மகனிடம். மகன் ‘ஊருக்கு வருகிறேன் அதான் கூப்பிட்டேன்’ என்றான். சுகுமாரி, ‘சரி ப்பா.. சாப்பிட்டியா’ என கேட்டு பேச தொடங்கினார். மகனுக்கு மனதில் எதோ தோன்ற இறுதியாக ‘உடம்பு எப்படிம்மா இருக்கு’ என்றான் கௌரி.

சுகுமாரிக்கு இதமாக இருந்தது மகனின் விசாரிப்பு ‘இப்போ பரவாயில்ல ப்பா.. நீ வா பேசிக்கலாம்’ என சொல்லி போனை வைத்தார்.

தன் கணவனிடம் மகன் பேசியதை சொல்லி சொல்லி, அந்த இரவில் சந்தோஷம் கொண்டார் சுகுமாரி.

நடுஇரவில் வந்து சேர்ந்தான். சுகுமாரியே எழுந்து கதவை திறந்தார். மகனோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். கௌரி ஏதும் பேசவில்லை.. ஓரிரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு.. அன்னை கொடுத்த காபியை குடித்துவிட்டு.. மேலே தனதறைக்கு சென்றான்.

காலையில் சுகுமாரி ரத்தினம் இருவரும்.. நேரமாக கிளம்பி, தன் தம்பி  வீட்டோடு குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டனர்.

இன்று மித்ரனின் பிறந்தநாள்.. விடுமுறை தினம். எனவே, குழந்தை பள்ளிக்கு செல்லவில்லை. அக்கம் பக்கத்தில் கேக் கொடுத்துவிட்டு, சுகுமாரியின் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள் சாகம்பரி.

சுகுமாரி வீட்டில் வேலை செய்யும்.. பேபி வந்திருந்தார்.. கௌரி வந்திருப்பதால்.. டிபன் செய்வதற்கு. எனவே, பேபி “வா சஹா.. சுகு அக்காவும் அண்ணனும் வெளியே கிளம்பி போயிட்டாங்களே” என்றார்.

சஹா ரத்தினத்திற்கு அழைத்தாள்.. ரத்தினத்திற்கு சஹாவின் அழைப்பை பார்த்ததும் நினைவு வர.. தன் மனைவியிடம் “இன்னிக்கு மித்துவோட பர்த்டே.. “ என சொல்லிக் கொண்டே போனை எடுத்து பேசினார்.

ரத்தினம் “சொல்லு ம்மா சஹா.. நானே பேசனும்ன்னு நினைச்சேன்..” என்றவர்.. மித்துவிடம் பேசினார்.. அவனை வாழ்த்திவிட்டு.. அவனுக்கு கிப்ட் எங்கே இருக்கிறது என சொல்லிவிட்டு, சாகம்பரியிடம் பேசினார்.. ‘நீ அங்கேயே இரும்மா.. ஒருமணி நேரத்தில் வந்திடுவோம்..’ என்றார். 

சாகம்பரி “சரி அங்கிள்” என சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

மித்ரன், ரத்தினம் தாத்தா சொன்ன இடத்தில் சென்று.. தன் கிப்ட் தேடினான்.

சாகம்பரி, பேபி கொடுத்த ஜூஸ்சுடன் பக்கவாட்டில் உள்ள செடிகளை காண சென்றாள்.

அன்றுபோல இன்றும்.. எதோ ஒவ்வாத வாசம்.. சட்டென அவளை வந்தடைய.. ‘இது என்ன சிகரெட்டா.. என்ன நெடி இது.. எதோ மாதிரி இருக்கு..’ என இவள் எண்ணிக் கொண்டிருக்க.. எதோ கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது ஹாலில். இவளுக்கு நினைவுகள் சட்டென களைய.. ‘என்ன சத்தம்.. ஐயோ! மித்து!’ என இவள் திரும்பும் நேரம்.. சரியாக.. மலையென இவளின் தோளில் எதுவோ இடித்தது.. அவள் அனிச்சையாய் நிமிர்ந்து பார்க்க.. அதில், அவளின் பூவுடல் தள்ளாட.. இடித்த வேகத்தில் எதோ இரும்பு பிடியாய் அவன் தன்னை விழாமல் நிறுத்திவிட்டு.. வேகமாக தன்னை கடந்து சென்றது அவன் உருவம்.

அந்த இரண்டு நொடிகள் சாகம்பரிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவென அவள் உணரும் நேரம்.. கௌரி அவளை கடந்து உள்ளே சென்று விட்டிருந்தான். சாகம்பரி ‘இவனா’ என எண்ணிக் கொண்டு நினைவு வந்தவளாக உள்ளே வந்து பார்க்க.. மித்து பயந்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவனின் எதிரில் கையில் எதோ மெலிதான நீட்டமான சிகெரெட் வைத்துக் கொண்டு.. குழந்தையை முறைத்துக் கொண்டும்.. கீழே சிதறி கிடந்த அவனின் புகைப்படத்தையும் பார்த்துக் கொண்டும்.. நின்றிருந்தான் இப்போது இடித்துவிட்டு வந்தவன்.

சாகம்பரி “மித்து” என்றாள் சின்ன குரலில்.

மித்ரன் “சஹா..” என இப்போதுதான் பெருங்குரலேடுத்து அழுதுக் கொண்டே.. அவளின் அருகில் வந்து.. கட்டிக் கொண்டான்.

கெளரிக்கு, பரிதாபம் எல்லாம் வரவில்லை.. என்னமோ சத்தம் வருகிறதே என பார்க்க வந்தான்.. இப்படி குழந்தை ஒன்று தன் புகைப்படத்தை உடைத்திருக்கும் என நினைக்கவில்லை.. எனவே முறைத்துக் கொண்டு நின்றான்.. ஏதும் திட்டவில்லை கோவப்படவில்லை, அதற்காக சமாதானமும் ஆகவில்லை.

கௌரி “பேபி க்கா..” என்றான் சத்தமாக. அவரும் அங்கேதானே நின்றிருந்தார்.

பேபி “ஏன் தம்பி, நான் கிளீன் பண்ணிடுறேன்” என்றார்.

மித்துவை அணைத்துகொண்டு நின்றிருந்த சாகம்பரி “சாரி..ங்க” என்றாள்.

கௌரி திரும்பி பார்த்தான் அவளை.. ஏனோ இன்னும் அந்த முறைத்த பாவனை மாறவில்லை அவனிடம். கையிலிருந்த மெலிதான  சிகெரெட்டை வாயில் வைத்து இழுத்துக் கொண்டான்.. அந்த புகையை வெளியே விட்டவன்.. சற்றும் அவளையும் அவளின் மன்னிப்பையும் காதில் வாங்காதவன் போல.. நேரே தன் வீட்டின் பக்கவாட்டில் தான் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றுவிட்டான்.

சாகம்பரிக்கு, கெளரியின் அலட்சிய பாவம்.. வலித்தது. அமைதியாக நின்றாள் அங்கேயே. அங்கிருந்து சென்றுவிடதான் ஆசை. ஆனால், வீம்பாக நின்றாள்.. ‘என்ன இப்போ.. குழந்தைதானே.. அதுக்கு முறைப்பானா.. இது ஒன்னும் அவன் வீடில்லை.. இது என ரத்தினம் அங்கிள் வீடு, அவர் ஏதாவது சொன்னால் தான், எங்களுக்கு வலிக்கணும்.. நீயெல்லாம் போடா’ என சொல்லிக் கொண்டு அப்படியே நின்றாள்.

மித்ரன் அவளை இய்ல்பாக்கினான்  “சஹா, நான் கிப்ட் ஓபன் பண்ணேன்.. கார்.. ரிமொர்ட் கார்.. ஆன் செய்தேனா.. அது அந்த போட்டோ மேல மோதி கீழே விழுந்திடுச்சி.. சாரி சஹா..” என்றான்.

சாகம்பரி “சரி டா தங்கம்.. நாம வேற ப்ரேம் செய்து கொடுத்திடலாம்…” என குழந்தையின் தலை கோதி சொன்னாள்.

மித்ரன் “ம்.. நாமளும் தாத்தாக்கு கிப்ட் கொடுத்திடலாம்” என்றான்.

சாகம்பரி சிரித்துக் கொண்டே “ம்.. சூப்பர் ஐடியா!…” என குழந்தையிடம் சொன்னவள்.. “பேபி க்கா, போட்டோவை கொடுங்க.. “ என்றாள்.

மித்ரனிடம் சஹா “அந்த அண்ணாக்கு சாக்லெட் கொடு.. கோவம் போய்டும்.. சாரி சொல்லிடு” என்றாள்.

ஆனால், குழந்தை பயத்தில் போகமாட்டேன் என்றது. அதற்குமேல் சஹாவும் ஏதும் சொல்லவில்லை.

ரத்தினமும் சுகுமாரியும் வரவும் அவர்களை பார்த்துவிட்டு கிளம்பினர் இருவரும். 

 

Advertisement