Advertisement

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

3

சாகம்பரி, அமர்ந்து ரத்தினத்தோடு பேச தொடங்கினாள்.. ம், சோபாவில் அப்படியே உறங்கியிருந்தான் மித்ரன். எனவே, சற்று நேரம் பொறுத்து போகுமாறு ரத்தினம் சொல்ல.. சஹா அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

கெளரிசங்கரும் சுகுமாரியும் உண்டனர். அன்னை எதோ மகனிடம் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால், மறுபக்கம் எந்த ஆமோதிப்பும் பதிலும் வரவில்லை போல.. எதிர்குரல் அந்த மகனிடமிருந்து வரவேயில்லை.. இவர் மட்டும் பேசிக் கொண்டிருந்தார். 

சாகம்பரி, அந்த கௌரி உண்டு மேலே சென்றதும்.. அப்படியே சோபாவில் சாய்ந்தபடி கண்மூடிக் கொண்டாள். ரத்தினம் சற்று தூரமாக இருந்த பிரஞ்ச்விண்டோ அருகே ஈசி சேரில் அமர்ந்துக் கொண்டு கண்மூடிக் கொண்டார்.

மகன் வந்த பரபரப்பில் சுகுமாரி, ஓய்வெடுக்க நேரமில்லாமல்.. எதோ மாலை சிற்றுண்டிக்கு தானும், வேலை செய்யும் பேபியும் சேர்ந்து தயார் செய்துக் கொண்டிருந்தார்.

ஒருமணி நேரத்தில் சாகம்பரிக்கு போனில் அழைப்பு வந்தது.. ‘பக்கத்து தெருவில்.. யாரோ ஒருவருக்கு.. உடல்நலமில்லை.. நீ வந்து பாக்குறியா ம்மா’ என அழைத்தனர்.

சாகம்பரி, மித்ரன் உறங்குவதால்.. அங்கிளிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பி சென்றாள். 

அரைமணி நேரத்தில் சாகம்பரி வந்துவிட்டாள். 

அதற்குள் மித்ரன் எழுந்து விட்டிருந்தான். மித்ரன் எங்கும் நகராமல் ரத்தினம் தாத்தாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.. ஏதும் குடிக்கவில்லை, அழுத்தமாக அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் போல..  சாகம்பரியை பார்த்ததும் லேசான கேவளோடு வந்து அணைத்துக் கொண்டான், குழந்தை.

சாகம்பரி, மித்ரனை அணைத்து கொண்டாள். உடனே, ரத்தினத்திடம் சொல்லிக் கொண்டு, கிளம்பியும்விட்டாள்.

மித்ரன் வண்டியில் போகும் போது.. சட்டென பெரிய மனிதனாகிவிட்டான் “சஹா, நீ என் அம்மாவாக இன்னும் ஆகலையா.. அதான் விட்டுடு போயிட்டியா.. எங்க போயிட்ட?” என்றான்.. வண்டியில் செல்லும் போது எதிர்காற்று அவன் மேல் மோத.. குழந்தையின் கண்ணின்  ஓரமாக நின்ற கண்ணீர் வழிந்தது கன்னத்தில்.

எத்தனை பொறுமை.. எத்தனை அழுத்தம் இந்த நாலுவயது பையனுக்கு என ஏதும் பேசாமல் சாகம்பரி வண்டியை செலுத்தினாள்.. மனதில் கோவம் வந்தது அந்த இறைவன் மீது.. ‘சந்தோஷமா இரு, அந்த குழந்தையின் மனதில் அன்னை இல்லை என்ற எண்ணம் வந்ததுவிட்டது.. அம்மா அப்பா இரண்டுபேரையும் பறித்துக் கொள்ளும் அளவுக்கா கொடுமைக்காரர் நீ!.. சே.. சே.. நீ இல்லை.. நீ இப்படிதான் கருணையில்லாதவன் என்றால்.. நீ அரக்கன்.. மனமில்லாதவன்.. கல்.. ஜடம்.. ம்.. நீ இல்லை..’ என தனக்குள்ளேயே வெம்பிக் கொண்டே வீடு வந்தாள்.

ஏதும் முகத்தில் காட்டாமல் சாகம்பரி “மித்து, வா.. சுச்சா போயிட்டு பால் குடி..” என்றாள் சிரித்த முகமாக.

மித்ரன் முகம் இன்னும் தெளியவில்லை. ஆனாலும் அமைதியாக உள்ளே செல்ல எத்தனித்தான் சிறுவன். ஆனால், சஹாக்கு தாங்கவில்லை.. கேட்டின் உள்ளே வந்ததும் மித்துவை தூக்கிக் கொண்டாள்.. “சாரி, சாரி டா.. இனி, உன்னை எங்கும் விட்டுட்டு போகமாட்டேன்” என்றாள்.

குழந்தை இப்போது சஹாவை அடிக்க தொடங்கினான் அழுதபடியே. சோகக் கவிதைதான்.. ஆனால், கவிதை என்பதே ரசனைக்குண்டானது தானே.. ரசனையாகத்தான் இருந்தது இந்த கவிதையும்.

ஏதும் மாற்றமில்லை இவர்கள் வாழ்வில்.. பள்ளி.. ஹோமே வொர்க் என நகர்ந்தது நாட்கள்.

ஆனால், சுகுமாரியின் வாழ்க்கையில் மாற்றம் வந்தது. மகன் இரண்டு வாரத்திற்கு ஒருதரம் தன் அன்னை தந்தையை பார்க்க வந்தான்.. வெள்ளி இரவே.

கௌரிசங்கர், வயது 30. எதையும் சட்டென க்ரகித்துக் கொள்ளும் மூளைக்காரன். தான் என்ன படிக்க போகிறேன் என தானே முடிவெடுத்துக் கொண்டான், அவன் புத்திசாலித்தனம் தெரிந்து தந்தை, அவனுக்கு எல்லாம் செய்தார். படிப்பில் கெட்டி.. அதனாலோ என்னமோ, அவனை கவனிக்கவில்லையோ ரத்தினம். 

ரத்தினத்திற்கு, நல்ல வேலை.. ஒரே மகன்.. சுகுமாரி.. மகனை ஏதும் சொல்ல விடமாட்டார். அத்தோடு, சங்கரும் சரியாக இருந்தான்.. பனிரெண்டாம் வகுப்பு வரை.. அதன்பின் கல்லூரி என வெளியூர் சென்றான்.. இரவில் பார்ட்டி கலாசாரம் பழகிக் கொண்டான் அடிக்கடி. அப்போதெல்லாம் பணம் கேட்டுக்கும் போது, தட்ட முடியவில்லை பெற்றோரால்.. நன்றாக படிக்கும் பையன் வார இறுதியில் பார்ட்டிக்கு பணம் கேட்க்க.. கொடுத்தனர்.

அதில் அவனுக்கு, நிறைய நண்பர்கள்.. அவனின் போக்கு மாறியது. ஆனால், படிப்பு சரியாக இருந்தது.. அது அவனுக்கு இயல்பாக வந்தது, படிப்பு. அப்பா அம்மா அன்பு என்பதெல்லாம் மறந்து போக.. கவர்ச்சி மோகம் கெளரியின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டது.

கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான்.. வெளிநாடு சென்றான்.. மேற்படிப்புக்காக. ரத்தினம் சுகுமாரி இருவரும் ஏற்பாடு செய்தனர். அங்கு சென்றதும் சுத்தமாக எல்லாம் மறந்து போனது கெளரிக்கு. முன்பே அன்பு என்ற வார்த்தை மறந்து போக.. இப்போது அன்பு என்பதற்கு அர்த்தம் நாகரீகம் என மாறிப்போனது. கண்ணில் மையல்.. கையில் கோப்பை என்பதுதான் நாகரீகம். அங்கே கிடைப்பதுதான் அன்பு என மாறி போனது.

படிப்பு.. நட்பு.. மது.. என அந்த வாழ்க்கைமுறை அவனை ஈர்த்தது. அந்த சுதந்திரம் அவனுக்கு அவ்வளவு பிடித்தது. படிப்பு என்பதில் அவனுக்கு போதை.. எனவே, அதை நோக்கி அவன் மனம் தன்போல சென்றது. ஆனால், அடுத்து என அவன் யோசிக்கும் போது.. எந்த காம்ரமைஸும் இல்லை அவனுக்கு.. கேள்வி கேட்ப்பார் யாருமில்லாமல்.. எவ்வளவு வேண்டுமாலும் குடிக்கலாம்.. எப்போது வேண்டுமாலும் எழலாம்.. அன்பு என பெயர் சொல்லி யாரும் அவனுக்கு உணவு ஊட்டவில்லை.. குடிக்காதே.. அதிகம் பார்ட்டி போகாதே.. ஸ்மோக் பண்ணாதே.. என  தந்தை போனில் கூட எச்சரிக்கவில்லை.. என்ற  அந்த வாழ்க்கைமுறை அவனுக்கு பிடித்தது. 

ஆனால், எப்போதும் அவனுக்கு எல்லாம் கையில் கிடைத்தே பழக்கம். அவன் பள்ளி இறுதியாண்டு படிக்கும் வரை.. சுகுமாரி மகனுக்கு ஊட்டி விடுவார். அவன் கைகாட்டி ஒரு பொருளை கேட்க்க வேண்டிய அவசியமே இருக்காது.. பார்த்தாலே வாங்கி தருவர் பெற்றோர். அத்தோடு அடுத்த குழந்தையும் இல்லை போட்டி போட.. தான் மட்டுமே என்ற எண்ணம் ஓங்கி வளர்ந்தது அவனுள். அதற்கு தீனீ போட.. இயல்பான அவனின் அறிவு கலை கைகொடுக்க.. தான் என்ற எண்ணம் அவனுக்கு எப்போதும் உண்டு.

அதனாலோ என்னமோ அவன் வெளிநாட்டில் ஏங்கி கிடைக்காத விஷயம் இந்த பெண்கள். ம்.. எப்போதும் அவனின் முகத்தில் புன்னகைக்கு பஞ்சம்தான்.. வார்த்தைக்கு நோஎன்ட்றிதான். எந்த ஜோக்’கும் அவனை வீழ்த்திவிடாது. அவனுக்கு சுலபமாக நான்கு மொழிகள் தெரியும்.. எந்த மொழியும் அந்த புன்னகை விஷயத்தில் கைகொடுக்கவில்லை, அவனுக்கு.

ம்.. எந்த பெண்ணிடமும் நெருங்கி பழக.. அந்த சுதந்திரமான நாட்களில் கூட.. அவனின் ஈகோ இடம் கொடுக்காது.. கொடுக்கவில்லை. பெண்களை பார்த்தான்.. நிறைய. ஆனால், நெருங்கும் வழி தெரியவில்லை. தானாக சென்று பெண்களிடம் பேச பழக.. அவனின் ஈகோ இடம் கொடுக்கவில்லை.

படிப்பு முடித்து நல்ல வேலையோடு இந்தியா வந்தான். புகழ்பெற்ற அந்த IT நிறுவனம் இந்தியாவில் இரண்டு பிரான்ச் இருக்க.. அதில் சீனீயர் ப்ரோக்ராம் அனாலைஸராக தேர்வாகி வந்தான், கௌரி.

அதன்பின் இன்னும் மாறியது கெளரியின் வாழ்க்கைமுறை. பெங்களூரில் வேலை.. எனவே, தனியாக அப்பார்மென்ட் எடுத்துக் கொண்டான். வேலைக்கு சென்றான். முதல் ஆறுமாதம் மட்டுமே.. அவன் தனியாக இருந்தான்.

அவனின் இருபத்து நான்காவது வயது முதல்.. அவனின் உலகம் அவன் ஏங்கிய கனவுகளால் நிறைந்தது. ம்.. அவனோடு பணிபுரிந்த பெண்.. கெளரிசங்கரின் மெனரிஸத்தில் ஈர்க்கப்பட்டாள். கெளரியை அந்த பெண் பின்தொடந்தால் ஒருவாரம்.

கெளரிசங்கர், இரண்டுநாள் கண்டுக்கொள்ளவில்லை.. அதன்பின்தான் அவன் செல்லும் பப்புக்கு அவள் தன்னைத்தான் தொடர்ந்து வந்து கவனிக்கிறாள் என புரிந்தது.. ஒரு இரண்டு நிமிடம் அந்த கண்ணில் பெருமிதம் வந்து சென்றது, அந்த கந்தர்வனுக்கு.

அதுவே போதுமானதாக இருந்தது போல.. அந்த பெண்க்கு. வந்தாள்.. அவனின் அருகில்.. அவனின் அமைதியை கலைத்து பேச தொடங்கினாள் அவனிடம்.

கெளரியின் முகம் அந்த முதல் சந்திப்பில் நிறைந்து போனது. அந்த சந்திப்பில்.. அவளே பில் பே செய்தாள்.. அவனுக்கும் சேர்த்து. அடுத்த ஒர்மாதத்தில், இருவரும் கெளரியின் வீட்டை ஷேர் செய்துக் கொண்டனர்.

வாழ்க்கை, அழகாக சென்றது அவனுக்கு. பெண்ணின் வரவு அவனை கொஞ்சம் தளர்த்தியிருந்தது. படங்களை அதிகம் ரசிக்காதவன், அவளுக்காக சற்று நேரம் படம் பார்க்க தொடங்கினான். அவளின் நண்பர்கள் தோழிகளோடு வெளியே செல்ல தொடங்கினான்.. மாதங்கள் கடந்தது.. மூன்றாவது வருடம்.. என்னமோ ஒரு மாற்றம் அவர்களிடம். அவனுக்கு, என்னமோ தன்னையே இழப்பதாக தோன்றியது. அந்த பெண்ணுக்கு, அவன் தன்னை அடிமையாக வைத்திருப்பதாக தோன்றியது..  சண்டை.. கோவம்.. பிரிவு.. என அந்த வரவு முற்றுபுள்ளி கொண்டது.

அடுத்து நான்கு மாதத்தில் மீண்டும் ஒரு புதுவரவு வந்தது அவன் வாழ்க்கைக்குள். அந்த வரவும் இந்த வருடங்களில் நன்றாகத்தான் சென்றது, போன வாரம் வரை. இந்த வாரம், எதோ கருத்து வேறுபாடு வந்தது போல இருவருக்கும் நடுவில். அதனால், தன் அன்னை அழைத்ததும் எங்கோ இருந்த கோவத்தில்..  மகன் அன்று ‘என்ன வேண்டும் உங்களுக்கு.. எதுக்கு கூப்பிடுறீங்க.. நான் எப்போதும் போலதான் இருக்கேன். அதான், நீ என் பையனே இல்லைன்னு சொல்லிட்டீங்களே.. அப்புறம் எதுக்கு.. கூப்பிட்டு தொந்திரவு பண்றீங்க.. ப்ளீஸ்..” என்றவன் போனை வைத்துவிட்டான்.

அது அன்னைக்கு தாங்க முடியாமல் போக.. சுகுமாரிக்கு மீண்டும் உடல்நலம் கேட்டு போனது. இது மாதத்தில் ஒருமுறை நடப்பதுதான். அதனால் சுகுமாரிக்கு மகன் அடுத்த மாதமே நேரில் வரவும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

கௌரி வந்தான் வாரவிடுமுறைகளில்.. அது தொடரவும் செய்தது. ரத்தினம் ஏதும் மகனிடம் பேசுவதில்லை வாவென கூட சொல்லுவதில்லை. அன்னை சுகுமாரி கணவருக்கும் சேர்த்து மகனை கவனிக்கிறார். 

இரண்டு மாதம் சென்ற நிலையில், சுகுமாரி, தன் கணவர் பேச்சையும் மீறி. கணவர் வெளியே சென்றிருந்த போது மகனிடம் பேசத் தொடங்கினார், இன்று.

சுகுமாரி, சிரமப்பட்டு மாடி ஏறி சென்று மகனுக்கு காலை உணவை கொடுக்க சென்றார். மணி பத்து, மகன் கீழே வருவதாக இல்லை எனவும், மேலே சென்றார் உணவோடு.

கௌரி அப்போதுதான் எழுந்திருந்து குளித்து வந்திருந்தான்.. இடுப்பில் துண்டோடு.. நின்றிருந்தான் கண்ணாடியின் எதிரே.

சுகுமாரி “கௌரிப்பா.. எழுந்துட்டியா டா.. ஏன் பசிக்கலையா” என்றபடி உள்ளே வந்தார், மூச்சு வாங்கிக் கொண்டு.

மகன் திரும்பி பார்த்தான் அன்னையை. பின் திரும்பி கண்ணாடியை பார்த்துக் கொண்டே.. தன் தாடிக்கு தேவையான.. அலங்காரங்களை செய்ய தொடங்கினான். முதலில் தன் தாடியை ஈரம் போக துடைத்தான்.. பின் ஜெல் போல எதோ ஒன்றை தடவினான், அடுத்து எதையோ எடுக்க.. அதவும் க்ரீம் போல இருக்க.. அதை திறந்ததும் மின்ட் வாசனை அந்த இடத்தில் பரவ.. அந்த க்ரீமை விரல்களில் எடுத்துக் கொண்டு.. மீண்டும் தன் தாடியில் விரல்களை நுழைத்து கதை பேசினான், கௌரி. இறுக்கமாக இருக்கும் அவனின் முகம் இந்த நொடிகள் மட்டும் தளர்ந்திருப்பதாக  அன்னைக்கு தெரிய..

சுகுமாரி “கு(பு)ட்டா.. அம்மாக்கு இப்போவெல்லாம் முடியறதே இல்ல.. அதிகமா மூச்சு வாங்குது.. BP அடிக்கடி ஏறி போய்டுது ப்பா” என தொடங்கினார்.

ம்கூம்.. மகன் கண்டுக் கொள்ளவில்லை.

சுகுமாரி “எப்படி ப்பா, இருக்கு வேலை எல்லாம்.. அதே கம்பெனிதானா” என்றார்.

ம்கூம்.. பதிலில்லை.

சுகுமாரி இரண்டாம்முறை கேட்டார்.

அப்போதும் பதிலில்லை.

மூன்றாம் முறை “கௌரி ப்பா, எத்தனை நேரமா கேட்க்கிறேன்.. பதில் சொல்ல கூட முடியாதா உன்னால். அப்பா அம்மாகிட்ட பேச முடியாத பையனை இப்போதான் பார்க்கிறேன்.. என்ன நடந்திருந்தாலும், இந்த இடத்தில் உன்னை நாங்க அனுமதிச்சிருக்கோம்.. அந்த மரியாதை கூட இல்லையா” என தொடர்ந்து எதோ சொல்ல வர.

இப்போதுதான் கௌரி “என்ன நடந்தது.. நீங்க என்னை அனுமதிக்க முடியாத அளவுக்கு..  எனக்கு புரியலை” என கேட்டபடி.. அன்னையை திரும்பி பார்த்து.. நிமிர்ந்து நின்றான் மகன்.

‘இந்த பிள்ளைகள் எவ்வளவு வளர்ந்து விடுகிறார்கள்.. எப்படி முறைக்கிறான் என் பிள்ளை..’ என தோன்றியது அன்னைக்கு.. மகனின் முறைப்பில் அமைதியானார் அன்னை.

இப்போது கௌரி உடைமாற்ற தொடங்கினான்.

சுகுமாரி “அப்பா ரிட்டையராகி இரண்டு வருஷம் ஆகுது. உன்னை வந்து பார்த்தோம்.. நீ எப்படி இருந்த, இன்னமும் அப்படிதான் இருக்கியா.. இது சரியா.. உனக்கு, நாங்க நல்லது கெட்டது காட்டி தரலையா.. இல்லை, இங்க பிறந்தவனுக்கு அது புரியாதா.. அதனால்தான் சொன்னேன்.. உன்னை அனுமதிச்சிருக்கோம் ன்னு” என்றார் வார்த்தைகளை கூர் தீட்டி.

கௌரி “இப்போ என்ன? நான், வெளியில் போய்டவா” என்றான்.

அன்னை “ஏன் பதில் சொல்ல முடியலையா” என்றார்.

அடுத்து அங்கே அமைதி.. மகன் அமர்ந்தான் சேரில். அன்னை உணவு பரிமாறினார் தட்டில். அங்கிருந்த டேபிள் மேல் வைத்துக் கொண்டு உண்ணத் தொடங்கினான், கௌரி.

அன்னை “என்னாச்சு, இன்னமும் யாராவது இருக்காங்களா உன்கூட..” என்றார் ஆத்ரவானக் குரலில்..

மகன் ‘இல்லை’ என்பதாக தலையசைத்தான்.

அன்னைக்கு என்னமோ பலம் வந்தது.. சொல்ல தெரியவில்லை எதனால் என.. ஆனால், எதோ ஒரு பலம் அவருக்கு கிடைத்தது.. அமைதியாக மகனின் அருகில் நெருங்கி.. அவனின் தலையை வருடினார். 

மகன், நிமிர்ந்து பார்க்கவில்லை.. வேகமாக உண்டான்.

அன்னை “சரி, இந்த வாரம் உன் சித்தப்பா பெண்ணுக்கு நிச்சயம். நீ வந்திருக்கேன்னு சொன்னேன்.. சித்தப்பா அத்தையும் பார்க்க வரேன்னு சொன்னாங்க.. ஈவ்னிங் நீ அப்ராட் போயிருந்ததாக எல்லோர்கிட்டவும் சொல்லி இருந்தோம்..” என்றார். 

சற்று நேரம் சென்று அன்னையே “ம்.. முழு பேண்ட் ஏதாவது இருந்தால் போட்டு வா” என்றார்.

மகன் “எதுக்கு.. நீங்க எதுக்கு அதெல்லாம் சொல்றீங்க.. என்னால் கீழ வரமுடியாது. சும்மா இரண்டு வார்த்தை பேசினால், உடனே ஆர்டர் போடறது. எனக்கு வேலை இருக்கு.. இங்க வந்தது தப்பா போச்சு.. நான்சென்ஸ்.. எனக்குன்னு எந்த வேலையும் இல்லையா?” என்றான்.

சுகுமாரி, என்னமோ எல்லாம் சரியாகிவிட்டது என மனநிலையில் இருந்தார்.. அடுத்த ஷனம் மகன்.. பாம்பாக மாறி.. விஷம் கக்க.. சுகுமாரிக்கு.. BP குறையத் தொடங்கியது.. மூச்சு வாங்க தொடங்கியது.

என்னமோ நிற்க முடியாமல் அமர்ந்தார் கட்டிலில். மகன் கவனிக்கவில்லை. என்னமோ அன்னைக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை.. அந்த அறையிலிருந்து வெளியே வந்தார்.

மூச்சு வாங்க. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கீழே வந்து, தான் பயன்படுத்தும் மருந்துகளை எடுத்துக் கொண்டார். ஆனாலும் நடுக்கம் குறையவில்லை. அமைதியாக படுத்தார் உறக்கம் வரவில்லை.. என்னமோ அழுகை வரும் போல இருந்தது.. கத்த வேண்டும் போல இருந்தது..  தன்போல புலம்பத் தொடங்கிவிட்டார் “என்னமா கத்துறான் என்கிட்டே.. பெத்து வளர்த்தவன்னு மரியாதை இல்லை.. வேலை இருக்காம். என்தப்புதான் அளவுக்கு மீறி அவனுக்கு செல்லம் கொடுத்துட்டேன். படிக்கிரானேன்னு. அவனின் எல்லா தவறுகளும் சரியாகிடும்ன்னு நினைச்சிட்டேன்’ என கண்ணில் நீர் வழிய, விரல்கள் நடுங்க அமர்ந்திருந்தார்.

சரியாக அந்தநேரம் ரத்தினம் வந்தார்.. “சுகு..” என அழைத்தபடியே.

மனையாளை காணோம் எனவும் அறைக்கு சென்று பார்த்தார்.. விரல்கள் நடுங்குவது பார்த்து அருகில் வந்தார்.. “மாத்திரை சாப்பிட்டியா, மகனை கவனிக்கிறேன்னு விட்டுட்டியா” என்றார் ரத்தினம்.

சுகுமாரி “ஏங்க, நான் சொல்ல கூடாதா.. கீழ வான்னு, அவனுக்கு வேலை இருக்காம்” என மீண்டும் டெம்பர் ஆகினார் சுகுமாரி.

ரத்தினம் பொறுமையாக மனையாளின் மொழிகளை கேட்டுக் கொண்டே.. மனையாளுக்கு தலை கோத. சற்று நேரத்தில் உறங்கிவிட்டார் சுகுமாரி.

Advertisement