Advertisement

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..

19

மகன் வெளிநாடு செல்லுவதால், ரத்தினம் சுகுமாரி வந்தனர் மருமகளின் துணைக்கு என.. இரண்டுநாள் முன்பே வந்து சேர்ந்தனர் பெங்களூர்க்கு. சுகுமாரிக்கு, மகனின் மாற்றங்கள் எல்லாவற்றையும் அமைதியாக கவனிக்க கவனிக்க அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு. இரவில், மகன் வரும் வரை.. சஹா அமர்ந்திருப்பது. அதற்கெனவே, மகன் நேரமாக வருவது. காலையில் சஹாவிற்கு கிட்செனின் உதவது. மித்ரனுக்கு உடை மாற்றி விடுவது.. அவனை தன் மேலே அமர்ந்திக் கொண்டு உடற்பயிற்சி செய்வது என இதையெல்லாம் பார்க்க பார்க்க.. தன் மகன் குடும்பம் எனும் அமைதிப்பிற்குள் பொருந்திவிட்டதாக ஒரு எண்ணம், அன்னைக்கு.

ரத்தினத்திற்கும் அந்த கருத்தில் மாற்று இல்லை.. எனவே, தன் மருமளிடம் “எப்படி ம்மா இருக்க” என முறையாக கேட்டு தெரிந்துக் கொண்டார் அவ்வளவே. தன் மகன் ‘வாங்க’ என அழைக்கவும் தலையசைத்தார் பெரிதாக ஏதும் பேசவில்லை. ஆக, அவர் இன்னும் மகனிடம் இணக்கமாகவில்லை.

அடுத்த இரண்டு நாளில்.. கௌரி, வெளிநாடு கிளம்பி சென்றான். இந்தமுறை கணவன் மனைவி இருவருக்கும் கண்ணில் நீர் கசிந்தது. சஹா “நான் போன் பண்ணும் போதெல்லாம் எடுக்கனும்” என சொல்லி அனுப்பினாள் கணவனிடம். கெளரிக்கு புன்னகையே வரவில்லை முகத்தில்.. “ம்..” என சொல்லிவிட்டு விமானம் ஏறினான். 

நாட்கள் என்னமோ இவர்கள் இருவருக்கும்  மட்டும் நத்தையாக நகர்ந்தது ஆனால், தினமும் கௌரி போன் செய்து பேசி விடுவான்.. மித்ரனுக்காக ஒருமுறை அழைப்பான்.. பின் தன்னவளுக்காக என மறுமுறை இரவில் அழைப்பான். ஆக, இருவரும் இன்னும் சண்டை போட்டு போட்டு.. தீர்த்துக் கொண்டனர். பின்னர் சமாதானமும் ஆகினர்.

மித்ரனின் பிறந்தநாள் விழா இன்று. சாகம்பரி எல்லோரையும் அழைத்திருந்தாள். கௌரி, தன் தந்தை தாய் ஊரிலிருந்து வரும் போதே.. பேசி இருந்தான்.. நான் மித்ரன் பிறந்தநாளுக்கு அங்க இருப்பேன்.. நீங்க எல்லோரையும் கூப்பிட்டிடுங்க.. என்றிருந்தான். ரத்தினத்திற்கு, தன் மகனின் மாற்றத்தை முற்றிலும் இந்த நிகழ்வில் உணர்ந்துக் கொண்டார். அதனால், மகன் சொல்லியபடியே எல்லோருக்கும் அழைத்து தானே பேசினார். ஆக, குடும்பம் மொத்தமும் மித்ரனின் பிறந்தநாளுக்கு வந்து சேர்ந்தனர் பெங்களூர்க்கு.

ம்.. ஈரோட்டிலிருந்து மித்ரனின் பாட்டி தாத்தா.. தனபால் பிருந்தா என எல்லோரும் வந்திருந்தனர். 

தாத்தா பாட்டி அனைவரும் சேர்ந்து.. மித்ரனை காலையில் கோவிலுக்கு கூட்டி சென்றனர். உடை பரிசு பொருட்கள் என குழந்தைக்கு தேவையானதை வாங்கி தந்ததனர். அவன் கேட்ட சாக்லேட் வாங்கி கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின் எல்லோரிடமும் பேசினார். ரத்தினம் ஒரு பேங்க் அக்கௌன்ட் ஆரம்பித்திருந்தார் மித்ரனுக்கு என. ஏனெனில், குழந்தைக்கு என கௌரி கணக்கிலோ சஹாவின் கணக்கிலோ பணம் செலுத்துவது பெரியவர்களுக்கு சங்கடமாக இருக்கும். எனவே, பொதுவான கணக்காக.. குழந்தையின் பெயரில் ஆரம்பித்தார். பள்ளி சேர்க்கைக்கு, என கௌரி யாரிடமும் பணம் கேட்கவில்லை. ஆனால், சஹாவின் மூலமாக எல்லாம் வந்து சேர்ந்துவிட்டது. ஆனாலும், நாளை கணக்கு என யாரும் கேட்டிடவோ.. பேசிடவோ கூடாது என ரத்தினம், மித்ரன் பெயரில் கணக்கு துவங்கியிருந்தார். எல்லோரிடமும் எண்களை கொடுத்தார். 

ரத்தினம் நல்ல முறையில் “மித்ரன் எல்லோருக்குமானவன்.. அதனால், நீங்க சங்கடப்படும் படி நமக்குள் ஏதேனும் நிகழ்வுகள் வந்திட கூடாது  என்பதற்காகவே இந்த ஏற்பாடு. மற்றபடி காசு பணம் வேண்டும் என நினைக்ககவில்லை. வசதி போல போடுங்க.. அவன் பள்ளிக்கு செலவளிப்பதை.. அவ்வபோது எல்லோரும் அறிந்துக் கொள்ள முடியும், அவனை நல்லபடியாக வளர்க்கும் பொறுப்பு என் மகன் மருமகளை சார்ந்தது. மற்ற பொறுப்புகளை மட்டுமே நாம் பகிர்ந்துக் கொள்ள முடியும். எனவே,  இந்த ஏற்பாடு. இதனை தவறாக நினைக்க கூடாது” என பேசினார். பெரியவர்கள் ஏதும் சொல்லவில்லை ஏற்றுக் கொண்டனர்.

மித்ரன் மாலையில் வீடு வந்து சேர்ந்தான். கொண்டாட்டம் தொடங்கியது.  இந்த குடியிருப்பில் வந்தபின்  பழக்கமான குடும்பங்கள்.. சில கெளரியின் நண்பர்கள் என விழா இனிமையாக தொடங்கியது. கௌரி வீடியோ காலில் வந்து பங்குகொண்டான். மித்ரன், கௌரி இருந்த திரைக்கே நான்கு முத்தம் தந்திருப்பான் “சித்தப்பா நீங்கதான் மிஸ்..” என இப்போதெல்லாம் இயல்பாக குழந்தையாக பேசுகிறான் மித்ரன். குழந்தைகளிடம் குழந்தைதனத்தை கொணர்வதே பெரிய கலைதான் இப்போதெல்லாம்.

சாகம்பரி வேலை காரணமாக கணவனிடம் நின்று பேசவில்லை. சுகுமாரிக்கு, அத்தனை திருப்தி.. மகன், நண்பர்கள் உறவினர்கள் என புடைசூழ இருப்பது. 

ரத்தினம் தன் மருமகளோடு நின்றார்.. கெளரியின் நண்பர்களை கவனித்து, அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். ஆக, விழா முடியவே நேரம் ஆனது. கீழே ஹாலில்தான் விழா. அதனால் எல்லாம் எடுத்து கொடுத்து நேர் செய்து வரவே ரத்தினத்திற்கும் சஹாவிற்கும் பதினொன்றுக்கு மேல் ஆனது. 

எல்லா பெரியவர்களும், மித்ரனை உறங்க வைத்து காத்திருந்தனர். சஹா வந்ததும், கெளரியை வீடியோ காலில் அழைத்து.. உறங்கும் மித்ரனை எழுப்பி.. சஹாவின் மடியில் அமர்த்தி.. அப்போதே சுற்றி போட்டார் பிருந்தா. 

அதன்பிறகுதான் கெளரியின் குடும்பத்தை உறங்கவே விட்டனர் பெரியவர்கள். அன்றையநாள் எல்லோருக்கும் ஒரு நிறைவான நாள். சிலபல யுகங்கள் கடந்து.. கண்டம் கடந்து.. கிடைத்திருக்கும் சிறு நிறைவை எல்லோரும் அசைபோட்டபடி உறங்கினர்.

மறுநாள், சுகுமாரி ரத்தினத்தை தவிர எல்லோரும் கிளம்பினர்.

நாட்கள் நத்தையாக நகர்ந்தது.

கெளரிசங்கர் சொன்ன தேதியிலிருந்து மீண்டும் ஒருவாரம் சென்றுதான் பெங்களூர் வந்து சேர்ந்தான். இந்தமுறை கௌரி எதோ பரிசு பொருட்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தான். ம்.. தன் தந்தைக்கு அன்னைக்கும் இயல்பான ஹெல்த் ட்ரிங்க்ஸ்.. டேபிலேட்ஸ்.. அதை தவிர உடைகள்.. என முதல்முறை வாங்கி வந்திருந்தான். சுகுமாரிக்கு, பெருமை தாங்கவில்லை. மித்ரனுக்கு எதோ உடைகள்.. கண்ணாடிகள்.. ஸ்கூல் பாக் என வாங்கி வந்திருந்தான். தன் மனையாளுக்கு என ரோஸ்கோல்டில் சின்னதாக வாட்ச் வாங்கி வந்திருந்தான். 

அடுத்த ஒருவாரம் ரத்தினமும் சுகுமாரியும் தங்கி இருந்துவிட்டு, ஈரோடு கிளம்பினர்.

மீண்டும் அவர்களின் வாழ்க்கை இயல்பானது. எப்போதும் போல, கௌரி காலையில் கிட்செனில் நின்றான்.. மனையாளுக்கு உதவிக் கொண்டு. இரவில், கணவன் வரும்வரை மனையாளும் காத்திருந்தாள். என்ன பேசுவது என தடுமாற்றம் எழுவதில்லை.. சஹாவிடம் இப்போதும் சண்டை வருகிறது கெளரிக்கு.. சஹா “மித்ரனுக்கு ஸ்விமிங் கிளாஸ் சேர்க்கணும்” என்றாள்.

கௌரி “அது எதுக்கு.. அவன் என்ன கடலில் போய் நீந்தவா போறான்” என்றான், இடக்காக கணவன்.

சஹா “உங்களுக்கு தெரியுமா தெரியாதா ஸ்விமிங்.” என்றாள் முறைத்துக் கொண்டு.

கௌரி “ம்.. எ..னக்கு தெரியும், நானே சொல்லி தரேன். அதுக்கு எதுக்கு அவனுக்கு கிளாஸ். இங்கே இண்டோர்ரில் பூல் இருக்கு.. சண்டே போனால், சரியாச்சு. இதுக்கு எதுக்கு கிளாஸ்” என்றான்.

சஹா “அதுசரி, போன சண்டே எங்க இருந்தீங்க.. ஞாபகம் இருக்கா.. அத்தனை கால்ஸ்.. சண்டே உங்களுக்கு லீவ்வாக இருக்கா என்ன” என்றாள் கோவமாக.

கௌரி புருவத்தை உயர்த்தி தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் ‘ஆமாமில்ல..’ என.

சஹா “ப்ளீஸ்.. உங்களால் முடியாது.. நீங்க கிளாஸ் விசாரிங்க” என்றாள்.

கெளரிக்கு அவள் ஏதாவது சொல்லிவிட்டால்.. கோவம் வந்திடும். அடுத்த இரண்டு மாதத்தில்.. வம்படியாக.. மித்ரனை ஞாயிறு காலையில் நேரமாக எழுப்பிக் கொண்டு போய் நீச்சல் கற்றுக் கொடுக்கிறான் கௌரி.

இப்படியாக சண்டைகள்தான் அதிகம். பேச்சுகள் இயல்பாக வந்தது.. ‘எனக்கு வண்டி வேண்டும்.. ஈரோட்டிலிருக்கிற வண்டியை இங்கே கொண்டு வரணும்’ என தொடங்கி.. மித்ரனுக்கு ஹிந்தி கிளாஸ் பார்க்கணும்’ என  அத்தனை விஷயங்கள் இருக்கிறது பேசுவதற்கு இப்போது. கூடவே, தங்களின் கனவுகளும் இருக்கிறது அவர்களுக்கு.. ஆக, பேச்சு தடைபடுவதே இல்லை. அதே போல அவர்களின் அன்யூனியத்தை.. இந்த பேச்சுகளே அதிகமாக்கியது. இருவருக்கும் ஹால்தான் பள்ளியறை. மித்ரனை அறையில் விட்டு.. இவர்கள் இங்குதான் தங்களின் வாழ்க்கையை தொடங்கினர். 

கெளரிக்கு, அவனின் இறந்தகாலம் சுத்தமாக நினைவில் வரவேயில்லை. சஹாவிற்கும் அப்படியே, எதோ பேச கூடாது என அவர்களாக ஒதுக்கிய நாட்கள் போய்.. இப்போது அதெல்லாம் மறந்து.. முன்ஜென்ம கதை போல ஆனது.. தங்களின் நேசத்தின் முன். எப்போதும் ஒட்டிக் கொண்டே சுற்றினார் என இல்லை.. ஆனால், அழகான தேடலை தங்கள் துணையின் கண்ணில் காணும் போது இருவரும் இசைந்து கலந்தனர். கௌரி கேட்ட நட்சத்திரமாக அவனின் வாழ்வில் கண்சிமிட்ட தொடங்கினாள் பெண். 

சஹாம்பரிக்கு, அவளின் சூரியன் அவன். கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு.. இது வேண்டும்.. இப்படி நடந்துவிட்டது என சொல்லிவிட்டாள் போது, அவளின் ஆசைகளோ.. ஏக்கங்களோ.. கனவுகளோ.. கஷ்ட்டங்களோ..  எல்லாம் சரியாகிவிடும். ம்.. அப்படிதான் உணர்ந்தாள். தன்னை முழுவதுமாக அவனிடம் ஒப்படைத்துவிட்டாள்.. ‘கொஞ்ச தூரம்தான் தூக்கி வந்தேன்.. ஆனால், பாரம் தாள முடியவில்லை’ என அவனின் தோளில் இளைப்பாற தொடங்கிவிட்டாள் பெண். 

கெளரிசங்கருக்கு, அதை ஏற்பதில்தான் ஆனந்தம் போல.. அலுங்காமல் குலுங்காமல் அவளுடைய பாரத்தை எதோ பொக்கிஷமாக மாற்றி ஏற்றுக் கொண்டான். மித்ரனை இருவரும் பொக்கிஷமாகவே பார்க்க தொடங்கினர்.

ஆகிற்று, மாதங்கள் கடந்தது.

மித்ரனின் அன்னை தந்தை திவசத்திற்கு, கௌரி சஹா மித்ரன் எல்லோரும் ஈரோடு வந்தனர். இந்தமுறை, மித்ரன் உடன் கௌரியும் சென்றான் திவசம் கொடுக்க.. அந்த பிஞ்சு கைகளில் பெரியகாரியங்கள்.. எல்லாம் செய்யும் போது பார்க்கவே சங்கடமாக இருந்தது கெளரிக்கு. எத்தனை இருக்கிறது வாழ்வில்.. எதோ அந்த கண்ணை பறிக்கு ஆடம்பரம் மட்டும் வாழ்க்கையல்ல, இப்படி கடமைகளும் கட்டுபாடுகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என கெளரிக்கு புரிந்தது.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!@

ப்பா.. அடுத்த மூன்று மாதத்திற்கு எந்த வெளிநாடும் செல்ல போவதில்லை என எண்ணிக் கொண்டான் கௌரி. அந்த நேரத்தில் தன் மனையாளுக்கும், மித்ரனுக்கும் பாஸ்போர்ட் எடுத்தான். 

தனபால் பிருந்தாவின் சஷ்டியப்த பூர்த்தி(அறுபதாம் கல்யாணம்) வந்தது.. சின்னதாக கோவிலில் செய்துக் கொண்டனர். 

தங்களின் முக்கிய சொந்தங்கள் வரை அழைத்து விழாவை நடத்திக் கொண்டனர். கோவிலில் அதிக கூட்டமில்லை. ஒவ்வொருவராக வர தொடங்கினர். சஹாவும் கௌரியும் முன்னின்று வரவேற்றனர். அப்போதுதான் விக்ரம் தன் குடும்பத்தோடு வந்தான் விழாவிற்கு. சஹா இன்முகமாகவே வரவேற்றாள்.

விழா தொடங்கியது..

தனபாலின் அக்கா தங்கைகள் தம்பிகள் சகஸ்ரதாம்பாளத்தை.. தனபால் பிருந்தா தம்பதியின் உச்சிக்கு மேல் பிடித்துக் கொள்ள.. தனபாலின் அண்ணன் அண்ணி வயதில் பெரியவர்கள் முதலில் கலச நீரை அவர்கள்மேல் வார்த்தனர். அடுத்து கௌரியும் சஹாவும் பட்டு உடுத்தி.. தங்களின் பெற்றோருக்கு கலசநீரை வார்த்தனர். அடுத்து மித்ரன்.. அடுத்து தனபாலின் அக்கா தங்கைகள் என அழகாக நடந்தது அந்த நிகழ்வு.

அடுத்து உடைமாற்றிக் கொண்டு வந்த.. தனபால் பிருந்தா தம்பதி.. எல்லோருக்கும் ஆசீர்வாதம் வழங்கினர். கௌரியும் சஹாவும் முதலில் வணங்க.. பெற்றவர்களுக்கு கண்ணில் நீர் பொங்கியது.. ‘உண்மையாகவே இவள் பஞ்சம் போக்க வந்த சாகம்பரிதான். எங்களின் வாழ்வில்.. மித்ரனின் வாழ்வில்.. இந்த நிறைவை தந்தது இவளும்.. இவளின் கணவனும்தான்’ என மனம் நிறைய ஆசீவதித்தனர் “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என.

விழா ஆசீர்வாதத்தோடு முடிந்தது. உணவிற்கு அருகில் இருந்த ஹோட்டலில் சொல்லி இருந்தனர். பனிரெண்டு மணிக்குதான். எனவே, உறவுகள் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் விக்ரமை பார்த்தாள்.. சாகம்பரி. விக்ரமின் திருமணத்திற்கு இவள் செல்லவில்லை. சஹாவின் திருமணத்திற்கு, அவன் வரவில்லை. இப்போது பார்க்கவும், ஆவலாகவே வந்து பேசினான் விக்ரம். இருவருக்குள்ளும் ஒரே எதிர்பார்ப்பு.. ‘எப்படி இருக்கிறார்கள்’ என. இருவருக்கும் முன்பு எதோ கோவங்கள் காயங்கள் இருந்தாலும்.. இப்போது எஞ்சியது என்னமோ ‘நல்லா இருக்கணும்.. எப்படி இருக்காங்களோ’ என்ற அக்கறையோடு கூடிய வாஞ்சைதான். தாங்கள் விரும்பிய நெஞ்சம் அல்லவா.. எனவே, உரிமையும் உறவும் போய்விட்டிருந்த நிலையில்.. எஞ்சியது இந்த அக்கறை மட்டுமே. எனவே, இருவரும் ஒருசேர கேட்டுக் கொண்டனர் “எப்படி போகுது லைப்” என.

பின் சிரித்து அமைதியாகினர். விக்ரம் தொடங்கினான் “ம்.. ஒரு பெண்ணு.. நாலு மாசம் ஆகுது. நந்தினி, இங்க வா” என சொல்லி தன் மனைவியை அறிமுகம் செய்தான் சஹாவிற்கு.

சாகம்பரி நந்தினியிடம் பேசினாள். அந்த குட்டி பெண்ணை கையில் வாங்கிக் கொண்டாள்.. நந்தினியை உட்காருங்க என சொல்லி அங்கிருந்த சேரில் அமர்த்தினாள்.

அடுத்து,  தன் கணவனை அழைத்தாள்.. சாகம்பரி. கௌரி வந்து சேர்ந்தான்.. சஹா “கெளரிசங்கர்..” என விக்ரமிற்கு அறிமுகம் செய்து.. விக்ரம் யார் என.. தன் கணவருக்கும் அறிமுகம் செய்தாள்.

கௌரி கை கொடுத்து பேச தொடங்கினான். இருவரும் பரஸ்பரம்.. பேச தொடங்கினர். மித்ரன் தன் சித்தப்பாவை தேடி வந்தான் இப்போது.. “சித்தப்பா.. சித்தப்பா.. எனக்கு பலூன் வேண்டும்..” என கெளரியின் கைபிடித்துக் கொண்டு.. இழுத்தான்.

விக்ரம், பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். கௌரி “டூ மினிட்ஸ்.. நீங்க பேசிட்டு இருங்க.. நான் வந்துடுறேன்” என சொல்லி.. மித்ரனோடு வெளியே சென்றான் கௌரி.

விக்ரம், சஹாவையே பார்த்தான் “பார்க்க ரப்ஃபா இருக்காப்படி..” என சட்டென நிறுத்தினான். அருகிலிருந்த மனையாளை பார்த்தான் அனிச்சையாய்.. நந்தினி இப்போது குழந்தைக்கு அமுதுஊட்டிக் கொண்டிருந்தாள்.  எதோ ஆராயும் பார்வை அவனிடம்..

சஹா “ம்.. பார்க்கும் போது ரப்ஃபா தான்.. இருப்பார். ஆனால், மித்ரனிடம் கரைஞ்சி போயிடுவார்.. இப்படிதான் அவர்” என்றாள் ரசனையான குரலில், செல்லும் தன் கணவனை பார்த்துக் கொண்டே.

விக்ரம் என்னமோ கண்ணெடுக்காமல் பார்த்தான் அவளை ‘நல்லா இருக்கா’ என அவனின் மனம் உணர்ந்துக் கொண்டது.. அவளின் வார்த்தையிலும் பார்வையிலும்.

இப்போது அவனின் குழந்தை.. அருகில் அமர்ந்திருந்த தன் மனைவியின் மடியிலிருந்து அழ தொடங்கியது. அவனாக சென்று.. குழந்தையை வாங்கி.. பொறுமையாக.. ஏந்திக் கொண்டு.. தன் நெஞ்சோடு வைத்து தேற்ற தொடங்கினான். சஹாவும் எதையோ உணர்ந்துக் கொண்டாள்.

சஹா “ஒருநிமிஷம்” என சொல்லி அங்கிருந்து கிளம்பி சென்றாள்.

சாகம்பரி, தன் கணவனை தேடினாள். கௌரி, மித்ரனுக்கு பலூனும் சஹாவிற்கு பப்பூள்ஸ்’சும் வாங்கி வந்தான். சஹா அதை பார்த்து சிரித்தாள் “நானென்ன குழந்தையா” என்றாள் புன்னகை முகமாக.

கௌரி “இரேன்.. அதனால் என்ன..” என்றான் கண்கள் மின்ன.

சஹா “ம்.. மித்ரனோட விளையாடி விளையாடி அப்படியே ஆகிடீங்க” என சலித்துக் கொண்டாள் ஆசையாக.

கௌரி “ம்.. உன்னோடவும்தான் விளையாடுறேன்..” என்றான்.

சஹா.. சாமியை காட்டி கன்னத்தில் போட்டுக் கொண்டே.. “நான் அத்தைகிட்ட போறேன்” என சொல்லி கிளம்பினாள், கணவனிடமிருந்து தப்பித்து.

Advertisement