Advertisement

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..

18

கௌரி, மித்ரனை தூக்கிக் கொண்டு.. லிப்டில் நின்றிருந்தான். அருகில் சாகம்பரி. மனையாள் இப்போது நண்பர்கள் ஏதும் சொல்லவில்லை என சொல்லிவிட்டாள். இத்தனைநாட்கள் நான் என்ன பெரிய தவறு செய்தேன்.. என இருந்தவன்.. இப்போது இந்த நொடியிலிருந்து ஏனோ தளர்ந்தான்.. ‘இவளை நான் கயப்படுத்திவிட்டேனோ..’ என வருத்தம் வந்தது.

வீடு வந்தனர் மூவரும். மித்ரனை பெட்டில் விட்டு, கௌரி நிமிர.. சஹா, மித்ரனின் உடையை தளர்த்த தொடங்கினாள்.. கண்டிப்பாக கழற்றினால் விழித்துக் கொள்வான்.. எனவே, மெதுவாக தளர்த்தினாள்.

கௌரி, வெளியே சென்றான்.. மற்றொரு அறைக்கு சென்று உடை மாற்றி வந்தான். சஹாவும், உடைமாற்றி.. கிட்செனை ஒருமுறை பார்த்து வந்தாள்.. கௌரி “சாகம்பரி” என்றான் ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டு.

சஹா “ம்..” என்றபடி அருகில் வந்தாள்.

கௌரி “ஒரு காம்பரமைஸ்தான் இந்த கல்யாணம்.. இத்தனைநாள் வரை அப்படிதான் நான் நினைச்சிருந்தேன். ஆனால் அப்படி இல்லையோ.. நம்ம இடத்தில் எதோ ஒரு மாற்றம் வந்திருக்கு ம்..” என்றான்.

சஹா “ம்.. வரணுமில்ல.. வாழ்க்கைன்னா அப்படிதானே இருக்கணும்.. “ என்றாள்.

கௌரி “ம்.. அப்போ என்னோட இந்த மாற்றமும் சரிதானே!” என்றான் சிறுபிள்ளையாய் அவளிடம்.

சஹா, கணவனையே இமைக்காமல் பார்த்தாள் இப்போது “நீங்க சரிதான்.. ஆனால், இப்போ நான்தான் தப்பு ” என்றாள் பார்வையை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டு.

கௌரிக்கு புரியவில்லை “ஏன்.. உனக்கு இன்னும் என்னுடைய பாஸ்ட்’டை மறக்க முடியலையா” என்றான் அழமான குரலில்.

சாகம்பரி “அஹ.. எப்படி சொல்றது. இது உண்மையாகவே சமரசத்தில் நடந்த கல்யாணம்தான். அதில் தப்பே இல்லை. இப்பவெல்லாம் குடும்பங்களில் சொத்து வேறிடம் போகாமல் இருக்க.. தொழில் விட்டு போகிடாமல் இருக்க கல்யாணம் நடக்குது. ஆனால், இந்த குட்டி பையனுக்காக நடந்த இந்த திருமணத்தை நாம ஞாயம் செய்துக்கலாம்.. தப்பில்லைன்னு. ம்ம்..” என்றாள்.

கௌரி “ம்… அப்போ ஓகேதானே” என்றான் ஆழ்ந்த குரலில்.

சஹா தொடர்ந்தாள் “ம்… இனி அப்படி ஞாயப்படுத்திக்க  வேண்டாம். ஏன்னா நாம கொஞ்சம் நெருங்கிட்டோம் மனத்தால்” என்றாள் கன்னங்கள் சிவக்க.

கௌரி தன்னவளின் இரண்டு கைகளையும் எடுத்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டான். “அதை தானே சொன்னேன். இன்னும் என்ன.. நீ என்ன தப்பு இப்போ” என்றான்.

சஹா “முதலில் எனக்கு உங்களை நினைத்தாலே என்னமோ போல்தான் இருக்கும். ‘நீங்க இப்படிதான் இருந்தீங்கன்னு’  உங்க பாஸ்ட் தெரியும் எனக்கு.. அதை என்னால் ஏற்க முடியலை என்பது உண்மைதான். ஆனால், இப்போ.. என்னமோ தெரியலை மன்னிக்க முடியுது.. அந்த என்னமோ’ல இருக்கிறது நேசம்ன்னு நினைக்கிறேன்.. நாம நேசிக்கிறவங்களைதானே மன்னிப்போம். ம்.. இன்னிக்கு சரியாகிடுவாங்க.. நாளைக்கு தப்பு பண்ணமாட்டாங்கன்னு தானே மன்னிக்கிறோம்.. மன்னிப்போம். நேசம் தானே மன்னிக்கும்.. நான் நேசிக்கிறேன்.” என்றாள்.

கௌரி அவளின் உள்ளங்கையை எடுத்து.. தன் மீசை உரச அழுந்த முத்தமிட்டான்.

சஹா இப்போது “ஆனால், பயமாவும் இருக்கு” என்றாள் கண்ணில் நீரோடு.

கௌரி “என்ன, திரும்ப ஏதாவது நடந்திடுமோ.. நான் மாறிவிடுவேனோன்னு பயமா” என்றான் சரியாக அவளை கணித்து.

சஹா ஏதும் சொல்லாமல் அமைதியானாள்.

கௌரி ஏதும் பேசவில்லை சற்று நேரம்.. பின் “நான் என்னை உனக்கோ.. நீ எனக்கோ புரியவைக்கவில்லை. இயல்பாக கைகோர்த்து நடக்க தொடங்கியிருக்கிறோம். ம்.. அதனால், அதுவே அப்படியே.. இருக்கட்டும். சீக்கிரமாக உன்னோட இந்த தாட்ஸ்சும் மாறும்.. ம்..” என்றவன் ஏதும் பேசாமல் ஹாலின் ஒருபகுதியாக இருந்த பால்கனிக்கு சென்றுவிட்டான். சிகை முடியாமல் விரிந்து பிடரியில் படர்ந்திருக்க..திரண்ட தோள்கள் ‘இன்னும் தாங்குவேன்’ எனும் வண்ணம் திமிராக பரந்துவிரிந்து நிமிர்ந்து நின்றிருந்தது. ‘அஹ.. என்ன இருக்கிறது வாழ்வில்.. கட்டியவளின் கண்ணில் பயத்தை கண்டபின்.. எங்கே தொடங்க வாழ்க்கையை.. இருக்கட்டும்.. அப்படி என்னை நம்பாமல்..’ என ஒரு வீம்பு வந்ததுவிட்டது அவனுள். அமைதியாக வானை வெறித்துக் கொண்டு நின்றான். 

அழகான நட்சத்திரங்கள் கண்ணில் தெரிந்தது. எத்தனை அழகு என மனது சற்று நேரத்தில் இதமானது.. ‘இருளில்தானே இருந்தேன்.. அவளிடம் கோவித்து.. அவளுக்கு, என்னை பார்த்து பயம்.. நேசிக்கிறேன்னுதானே சொன்னாள்.. என்னை மன்னிச்சிட்டேன்னுதானே சொன்னாள்..’ என இப்போதுதான் அவள் தன்னிடம் பேசியதின் சாரம் புரிந்தது கெளரிக்கு.

திரும்பி பார்த்தான்.. சாகம்பரி, அங்கே இல்லை. கௌரி தங்களின் அறைக்கு சென்றான். எப்போதும் போல மித்ரனும் சஹாவும் பெட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். ம்.. சஹா, ஏசியில் தலைவரை போர்வையை இழுத்து போர்த்தியிருந்தாள். எனவே, உறங்குவதாகதான் தோன்றியது கெளரிக்கு.

அமைதியாக தானும் எப்போதும் உறங்குவது போல கீழே விரித்து உறங்க தொடங்கினான். ‘என்ன! எதிர்கால பயம்தான் அவளுக்கு.. அதுவும் மாறும்.. இதே போல. அமைதியை அவளுக்கு தர வேண்டும்’  என எண்ணிக்கொண்டே உறங்கினான்.

அடுத்தடுத்த நாட்களில்.. கௌரி, சாகம்பரியோடு அதிகாமான நேரத்தை செலவிட முற்பட்டான். எத்தனை மணிக்கு உறங்கினாலும் காலையில் சஹாவோடு எழுந்துக் கொண்டான். கௌரி, முன்பெல்லாம் எப்போது எழுந்தாலும் வொர்க்அவுட்தான் அவனின் முதல் சாய்ஸ். இப்போதெல்லாம், சஹாவோடு நேரம் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கண்களை திறக்கிறான் கௌரி.

எனவே, காலையில் எழுந்ததும்.. ஒரு இருபது நிமிடம்.. காபியோடு அவளிடம் அமர்ந்துக் கொள்வான். முதலில் சஹாவிற்கு, பேச்சே வரவில்லை. அவள் காபியை குடித்துக் கொண்டே உருளை கிழங்கு வேக போடுவாள்.. காய் என்ன என பார்த்து எடுத்து வேலையை தொடங்குவாள். ஆனால் இன்று, கௌரி கிட்சென்னிலேயே நின்றான்.. அவளிடம் பேச்சுக் கொண்டுத்துக் கொண்டு.

சஹா “என்னதான் வேணும்..” என்றாள்.

கௌரி “தெரியலை.. என்னமோ உன்கூட இருக்கணும்.. பேசிகிட்டே இருக்கணும் போல இருக்கு” என்றான்.

சஹா “என்ன இப்போ, இங்கேதானே இருக்கேன்..  பேசுங்க” என்றால்.. 

கௌரி ‘பெப்பே’ எனதான் விழித்தான்.. அதையும் அழகாக சமாளித்தான் “உன்னை போல எனக்கு சட்டதிட்டமாக பேசவெல்லாம் வராது.. இன்னிக்கு டே என்ன.. IPL எந்த டீம் வின் பண்ணிச்சு.. இன்னிக்கு என்ன சமையல்.. அப்படிதான் நோட்ஸ் எடுத்து வைச்சிருக்கேன்.. நீ கண்ணா உருட்டி என்னை பேசுன்னா என்ன பேசறது.. சொல்லு இன்னிக்கு எந்த எந்த டீம் மேட்ச்” என்றான் திணறிக் கொண்டு.

சஹா “எப்படிதான் ரெண்டு பொண்ணுகளை லவ் பண்ணீங்களோ” என முனுமுனுத்துவிட்டாள்.

இது கெளரியின் காதில் கேட்டும் விட்டது “இங்க பார் சும்மா அதையே சொல்லாத.. அது லவ் இல்ல.. லஸ்ட். அதுக்கு பேசவே வேண்டாம். ஜஸ்ட் அப்பியரன்ஸ் பிடிச்சுது.. நானும் அவளும் ஒரே இடத்தில் வேலை பார்த்தோம்.. வேலையை ஷேர் பண்ணினோம்.. அப்படியே வீட்டையும் ஷேர் பண்ணிக்கிட்டோம்.. எங்க நீட்ஸ்யும் ஷேர்..” என விளக்கம் கொடுக்க கொடுக்க.

சஹா “போதும் உங்க எக்ஸ்ப்ளனேஷன்.. அந்த மாதிரி பீலிங் இங்க இப்போ இல்ல.. கிளம்புங்க” என்றாள் அடிக்குரலில் சீறலாக.

கௌரி “நீ தெரிஞ்சிக்க.. எனக்கு, இப்படிதான் பேச வரும்.. நானும் நீயும் நேசிக்கிறோம், திருப்பியும் முதலிருந்து ஆரம்பிக்காத “ என்றான்.

சஹா “நான் உன்கிட்ட பேசவேயில்ல.. எனக்குள்ள பேசினதை நீங்களாக கேட்டுட்டு.. நீங்களாகவே கோவப்படுறீங்க. நீங்க போங்க” என்றாள்.

கௌரிக்கு, சட்டென முதலில் சிரிப்பு வந்தது “நீ ரொம்ப பொசசீவ் ஆகுற..” என்றபடி காபி கப்பை கழுவ தொடங்கினான்.

இப்படி வம்படியாகதான் அவளை நெருங்கினான் கௌரி. காலையில் எதோ ஒரு சண்டை. இரவில் வரும் போது அவள், விழித்துக் கொண்டு எதோ வேலைகளை செய்துக் கொண்டிருப்பாள்.. கெளரிக்கு சொல்ல முடியாத இதத்தை தரும் அந்த தருணம். காலையில் ஏதும் நடக்காதது போல “நீ சாப்பிட்டியா” என்பான்.

சஹாவிற்கும் அப்படியே சண்டையை தொடர விரும்பவில்லை.. ஆனால், சண்டையில்லாமல் பேச்சுகள் இன்னும் வரவில்லை தங்களுக்கு என புரிகிறதே இவளுக்கும் எனவே  “ம்.. “ என்றாள்.

கௌரி “ஏன் என்ன வேலை இவ்வளோ நேரம்.. கழுத்து வலிக்கலையா” என்றான் அக்கறையாக.

சஹா “ம்… தூங்கனும்” என எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். 

கணவனுக்குதான் அவளை அறைக்கு அனுப்ப மனதே வரவில்லை..  “அம்மா பேசினாங்களா..” என்றான்.

சஹா “ம்..” என்றாள்.

அடுத்து என்ன பேசுவது என தெரியாது “இன்னிக்கு கொள்ளுபருப்பு நல்லா இருந்தது..” என்றான். 

சஹா “ம்.. தேங்க்ஸ்” என்றாள். எதோ ஒன்று இப்படியே பேச்சுகள் தொடரும்.

அவளும் சற்று நேரம் படம் முடியும் வரை.. அமர்ந்திருப்பாள். கௌரி துணைக்கு அமர்ந்துக் கொண்டிருப்பான். எப்படியும் மணி 12 நெருங்கிடும் உறங்குவதற்கு. அவளோடு இருப்பது.. அவளின் நளினத்தை உணர்வது.. ஏதாவது படத்தில் வரும் பாடலை அவள் முனுமுனுக்க.. என்னமோ கௌரி அவளையே பார்த்திருப்பான்.

இப்படியே இவர்களின் நாட்கள் ஒரு உணர்தலில்.. கடந்துக் கொண்டிருந்தது.

மித்ரன், பள்ளி செல்ல தொடங்கிவிட்டான். ஊரிலிருந்து, தனபால் பிருந்தா வந்து ஒருவாரம் தங்கினர். பேரனை பள்ளி அனுப்பி மகளுக்கு உதவி கிளம்பினர்.

மித்ரன் பள்ளி செல்ல தொடங்கினான்.. என்னமோ நாட்கள் கரைந்தது.

கௌரி, அடுத்த வாரத்தில் மீண்டும் வெளிநாடு செல்லுகிறான். அதை இப்போதுதான் வீடு வந்ததும் தன்னவளிடம் சொன்னான் “நான் நெக்ஸ்ட் வீக் அப்ராட் போறேன்” என்றான். முன்பெல்லாம் எங்கு போவதையும் யாரிடமும் சொல்லமாட்டான்.. என்னமோ இப்போதெல்லாம் சஹாவிடம் பகிரவே சில அலுவலக நிகழ்வுகளை வைத்திருக்கிறான்.

சஹா அதிர்ச்சி “என்ன அடுத்த ட்ரிப்பா..” என்றாள் நொடியில் அதிர்ச்சி தாங்கிய கண்களோடு.

கெளரிக்கு என்னமோ அந்த கண்களை மிகவும் பிடித்தது “ம்..” என்றான். கீழே அமர்ந்திருந்தவளை பார்த்துக் கொண்டு.

சஹா ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.. 

கௌரி “சாகம்பரி, நீயும் வரியா” என்றான்.

சஹாவிற்கு என்னமோ செய்தது மனது.. கணவன் அப்படி கேட்டதும்.. “என்கிட்டே பாஸ்போர்ட் இல்லையே” என்றாள்.

கெளரிக்குதான் இப்போது கோவமாக வந்தது தன்மீதே. இத்தனை மாதங்களில் கேட்டிருக்க வேண்டாமா என நொந்துக் கொண்டான்.

என்னமோ அந்த இரவு இருவருக்கும் ஒருமாதிரி இருந்தது. சஹா வேண்டுமென்றே அமர்ந்து புதிதாக இரு படத்தை போட்டு அமர்ந்துக் கொண்டாள்.. “எப்போ போகனும்” என பேச்சுக் கொடுத்தாள்.

கெளரிக்கு இப்போதைக்கு இவள் உறங்க செல்லமாட்டாள் என புரிய லாப்டாப் எடுத்து வந்து அமர்ந்துக் கொண்டான்.. பின் தேதியை சொன்னான்.

சஹா “அப்போ மித்ரன் பர்த்டேக்கு நீங்க இங்க இருக்கமாட்டீங்களா” என்றாள் ஆழமான குரலில்.

கௌரி தேதியை கேட்டான்.. “ம்.. வரமுடியுமா தெரியலை.. பிப்டீன் டேய்ஸ் ஆகும் டா” என்றான் ஏதுமில்லா குரலில்.

சஹாவிற்கு என்னமோ போலானது.. அழுகை வரும் போலிருந்தது ‘இதென்ன, அவர் இப்போதானே உன் கூட இருக்கார்.. அதுக்கு முன்னே நீதானே பார்த்த’ என தேற்றிக் கொண்டாள். ஏதும் சொல்லாமல் எதையும் எடுத்து வைக்காமல் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள். கணவன்தான் எல்லாம் எடுத்ஹ்டு வைத்து வந்து உறங்கினான்.

மறுநாள் காலையில் கௌரி சீக்கிரமாக எழுந்துக் கொண்டான்.. தானே காபி கலந்தான் இன்று. தன் மனையாளின் அருகே, கட்டிலின் மேல் அமர்ந்து எழுப்பினான்.. “சஹா, குட் மோர்னிங்” என்றான் கரகரப்பான குரலில்.

சஹாவிற்கு கணவனின் குரலும் நெருக்கமும் அதிகாலையே அழகாக தெரிந்தது. கண்களை விரித்துக் கொண்டு.. கணவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டே சற்று நேரம் படுத்திருந்தாள்.. எங்கேனும் கனவாக இருந்தால் இப்போதே கலைந்துவிடட்டும்’ என. 

ஆனால், கனவில்லையே, பிடரியில் அவனின் பட்டுபோன்ற சிகை.. வழிய, கண்கள் மின்ன தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அழகில்.. மயங்கி, தன்னவளை மீண்டும் ஒருமுறை அழைத்தான் “சஹா.. காபி ஆறிடும்” என்றான் கிசுகிசுப்பாக. அவனின் உயரத்திற்கும் திடகாத்ரமான தேகத்திற்கும் அந்த குரல்.. காதலாகத்தான் அவள் காதில் விழுந்தது.

பெண்ணவள் அருகில் உறங்கும் மித்ரனை திரும்பி பார்க்க.. அவன் நெளிவது தெரிந்தது. சஹா புன்னகை முகமாக “ஷ்” என்றாள் கெளரியை பார்த்து.

இருவரும் சத்தமில்லாமல் வந்தனர் வெளியே. சஹா, பக்கத்து அறைக்கு சென்றாள்.. பிரெஷ்ஷாகி வருவதற்கு.

கௌரி காபியை பார்த்தான் கொஞ்சம் ஆடைபடிந்து இருந்தது.. எனவே, வேறு கலந்தான் மீண்டும் தங்களிருவருக்கும்.

இன்று விடுமுறை தினம். எனவே, மித்ரன் லேட்டாக எழுப்பினால் போதும். எனவே, இருவரும் ஹாலுக்கு வந்தனர்.. இன்னும் விடியவில்லை அந்த பெங்களூரில். 

சஹா “குட் மோர்னிங்” என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.

கௌரி இரு கோப்பையோடு வந்து அமர்ந்தான்.. சஹா “என்ன காபி எல்லாம்” என்றாள், விசாரனையாக.

கௌரி “சண்டை போட்டு போர் ஆகிடுச்சு, அதான்” என்றான் கிண்டலாக.

சஹா “ம்.. பார்றா பேச்சை.. எனக்கு பேச வராதுன்னு ஒருத்தர் டைலாக் அடிச்சாங்க..” என்றாள்.

கௌரி “ம்..” என சொல்லி தான் குடித்து முடித்து.. டீபாய் மீது காபி கோப்பையை வைத்தான். இமைக்காமல் தன்னவளையே பார்த்தவன் தன் நீண்ட கைகளால் அவளை தனக்கென தனக்குள் இழுத்துக்  கொண்டவன்.. அவளின் தோளனைத்து சின்ன குரலில் “ஹாப்பி பர்த்டே.. மை கேர்ள்” என்றான் ரகசிய குரலில்.

சஹா, தன் உதடு மூடிக் சிரித்தாள்.. உதடுகளில் புன்னகையை காணவில்லை ஆனால், கண்ணீர் மிதந்துக் கொண்டு சிரித்தது.. கண்கள்.

நீண்டநாட்கள் ஆகிற்று தனக்கென்ற கொண்டாட்டங்களில் மனம் லயித்து அவளுக்கு.. தன்னை கவனித்து ஒரு ஜீவன், பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிறது என மனம் சந்தோஷித்துக் கொண்டிருந்தது.

பிறந்தநாள் என்பதெல்லாம் எதோ சின்ன வயதில் கொண்டாடினாள், எந்த கவலையும் இல்லாமல். கல்லூரி போனதும்.. கொண்டாட்டங்கள் தோழிகளுக்காக என மட்டும் ஆனது. அதிலும் இந்த மூன்று வருடங்களாக எல்லாம் காணாமல் போனது. இப்போதெல்லாம் மறந்தே போயிருந்தது. சஹா  உண்மையாக எதிர்பார்க்கவில்லை கணவன் வாழ்த்துவான் என. இமை தாழ கணவனின் தோளில் தஞ்சம் புகுந்துக் கொண்டாள்.. அவனின் வாசம் நாசி நுழைய.. மனக்கதவு விரிய திறந்துக் கொண்டது அவளுக்கு.

சஹா, கரகரத்த குரலில் அவனின் தாடையை முட்டிக் கொண்டே செல்லம் கொஞ்சிக் கொண்டே  “தேங்க்ஸ்..ங்க” என்றாள்.

கௌரி “ம்..” என்றான், தன்னவளின் ஸ்பரிசத்தை.. உணர்ந்துக் கொண்டு. பின் “என்ன விஷ் இருக்கு உனக்கு” என்றான் காதலாக.

சஹா “தெரியலையே” என்றாள் மலர்ந்த முகமாக.

கௌரி “ஏதாவது இருக்குமே சொல்லேன்” என்றான், அவள் நெற்றியில் தன் தாடையை தேய்த்துக் கொண்டு.

சஹா “உண்மையாகவே எதுவும் ஞாபகம் வரலை.. எனக்கு கொஞ்ச நாட்களாக எதுவுமே ஞாபகம் இருந்ததில்லை. க்கும்.. மித்ரன் மட்டும்தான். எப்படி அவனை அம்மா ஞபாகம் இல்லாமல் வளர்ப்பது.. என்ன சொல்லி வளர்ப்பதுன்னு கவலை மட்டும்தான். அஹ.. ஒன்னு சொல்லவா” என்றாள்.

கௌரி “ம்.. கண்டிப்பா” என்றான்.

சஹா “என்னமோ இப்பவெல்லாம் மித்ரன் பத்தி ஏதும் பயம் வரதில்ல.. என்னமோ நீங்க இருக்கீங்க.. பார்த்துப்பீங்கன்னு தோணுது.. எனக்கே கொஞ்சம் ஆச்கார்யமாகதான் இருக்கு.” என்றாள்.

கௌரி அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பினான்.. சந்தனம்நிறம் அவளின் தேகம்.. முகம் இப்போது கணவனின் வருடலில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் மின்னியது.. கணவன் “ஹேய்.. அதெல்லாம் பார்த்துக்கலாம்.” என்றான் ஒன்னுமில்லா குரலில்..

சஹா “ம்.. இப்போதுதான் எதோ அழுத்தமெல்லாம் என்னை விட்டு போனது போல இருக்கு.. இதுவே எனக்கு பெரிய விஷ்.. ம்.. தேங்க்ஸ் சஹாசங்கர்.” என்றாள்.

கௌரி “ஓ..கே.. சங்கர் நல்லா இருக்கே.. மையன் மாதிரி சங்கர். ம்..  இன்னிக்கு வெளிய போகனும்… ம்.. கிளம்பு.. ஏதாவது உனக்கு வாங்கணும்.. எங்காவது போகனும்.. நீ கொஞ்சம் ரெலாக்ஸ் ஆகணும் ம்..” என்றான்.

சஹா “வேண்டாமே, எனக்கு பெருசா இப்படி எல்லாம் செலேப்ரடே செய்து பழக்கமில்லைங்க” என்றாள்.

கௌரி “போயிட்டு வரலாமே.. எங்கயும் போகலை.. ப்ளீஸ்.” என்றான்.

சற்று நேரத்தில் மூவரும் கிளம்பி வெளியே சென்றனர்.

 

Advertisement