Advertisement

இப்போது பெண்கள், எங்கும் ஆண்கள் இருவரையும் காணாமல்.. தோட்டத்திற்கு வர, அங்கே.. அந்த மரத்தில் கட்டியிருந்த கயிற்று ஊஞ்சலில்.. மித்ரனை அமரவைத்து ஆட்டி விட்டுக் கொண்டிருந்தார் ரத்தினம்.

அப்படியே சாகம்பரியும் பேசிக் கொண்டே அமர்ந்தாள் அந்த மரத்தின் நிழலில். 

சுகுமாரி, ஜூஸ்.. குழந்தைக்கு கொஞ்சம் சாக்லெட் என எடுத்து வந்து கொடுத்து பேசிக் கொண்டே அமர்ந்தனர்.

சாகம்பரி கிளம்பும் போது, சுகுமாரிக்கு BP பார்க்க, அது நார்மல் என காட்டியது.. ரத்தினத்திடம் அதை கண்ணால் கட்டிவிட்டு.. மாத்திரையின் அளவு சொல்லி கிளம்பினாள் பெண்.

வீடு வந்து சேர்ந்தனர் சற்று நேரத்தில். பின் மித்ரனுக்கு மதியம் உணவு கொடுத்து.. உறங்க வைக்க சென்றாள்.

மித்ரன் “கதை சொல்லு சஹா” என்றான் சட்ட திட்டமாக.

சஹா “டேய்.. நைட் மட்டும்தான் கதை.. இப்போயும் கதை கேட்டாக நான் எங்க போவேன்” என்றாள்.

மித்ரன் “நீதான் என்னோட அம்மா ஆகிட்டியே.. அப்போ கதை நிறைய சொல்லணும்.. அம்மா நிறைய கதை சொல்லுவா எனக்கும் பாப்பாக்கும்…” என்றான் மழலை மாறா சந்தோஷமான குரலில் சட்டென மனதில் பட்டத்தை குழந்தை பகர்ந்தது..

சாகம்பரி, எப்போதும் போல ஸ்தம்பித்து அவன் அருகில் அப்படியே கிடந்தாள்.

மித்ரன் “சஹா, நீ என் அம்மா ஆகிட்டியா” என்றான்.. அதே மழலை குரலில்.

சாகம்பரி என்ன சொல்லுவது என தெரியாமல் அமைதியாகவே இருந்தாள். 

மித்ரன் “ஆனா, எனக்கு அம்மா அக்ஷராதான்.. ஆமாம்.. பாப்பா, அம்மாவை கூட்டிட்டு எங்க போச்சு” என்றான், கதை கேட்டும் குரலில்.

சாகம்பரி, குழந்தையின் கற்பனையை தடைபோட நினைக்கிறாள் கடந்த ஆறுமாதமாக. ஆனால், ‘இப்படி பேச கூடாது.. கேட்க்க கூடாது’ என எல்லோரும் சொல்லியும்.. அவன் மனதில் என்ன பதிந்தது என தெரியவில்லை.. ‘சஹா அம்மா ஆகிடுவா.. பாப்பா அம்மாவை கூட்டி போச்சு’ போன்ற வார்த்தைகள் ஆழமாக பதிந்துவிட்டது போல.. இந்த நாட்களில் குழந்தைக்கு. எப்படியும் வாரத்தில் ஒருநாள் இப்படி கேட்டுவிடுகிறான் இந்த குழந்தை.

எப்போதும் போல சாகம்பரி அமைதியாகி அமர்ந்தாள்..

மித்ரன் “சரி சஹா இனி பேசலை.. கதை சொல்லு” என்றான்.. ஒன்றுமில்லா குரலில். 

சாகம்பரிக்கு, இந்த குரல் வலித்தது. ‘நான்கு வயது குழந்தை அம்மா வேண்டும் என அழவில்லை.. அப்பாவை கேட்கவில்லை.. பிடிவாதம் செய்யவில்லை.. தான் இப்படி பேசுவது சஹாக்கு பிடிக்காது என மட்டும் தெரிய.. அழகாக புரிந்தவன் போல.. கதை கேட்க்கிறான்..’ என வலித்தது.

சாகம்பரி, சற்று நேரம் எடுத்துக் கொண்டாள்.. அவனுக்கு கதை சொல்ல.. குழந்தை அந்த நேரத்தில்.. அவளின் மேலேறி படுத்துக் கொண்டது வாகாக.. சாகம்பரி முயன்று இயல்பான குரலில் “அந்த மினுக்கி இருக்குல்ல.. அதுக்கு கோவமாக வந்ததாம்.. பட்டாசு சத்தம் கேட்டு, அதனால் என்ன பண்ணிச்சாம் அது..” என கதை சொல்ல ஆரம்பித்தாள் பெண்.

இதுதான் மித்ரன் சஹாவின் தினப்படி வேலைகள் கடந்த ஆறுமாதமாக. ஏன்? ஏதும் மாறவில்லை? என இருவரும் நினைக்கின்றனர். ம்.. மித்ரனுக்கு குழந்தைதனம் இருந்தாலும்.. சிலநேரம் இப்படி பெரியவனாகிவிடுகிறான்.. என்ன செய்வது. ஆனால், பெரியவளுக்கும் விடை கிடைக்கவில்லை.. குழந்தைக்கும் புரியவில்லை.

மித்ரன், இன்றுதான் முதல்நாள் பள்ளி செல்லுகிறான். அதனால் காலையில் நேரமாக வீடு விழித்துக் கொண்டது.. வேலைகள் நடக்க தொடங்கியது. மித்ரன் சாகம்பரி இருவரும் பள்ளிக்கு கிளம்பினர்.. அவனின் தாத்தாவும் பாட்டியும் அழகாக கை அசைத்து பேரனை வழியனுப்பி வைத்தனர்.

மித்ரன் அழாமல் பள்ளி சென்றான் lkg வகுப்பு. முதல்நாள் வகுப்பு.. அதனால் ஒரு இரண்டுமணி நேரம்தான். எனவே, பள்ளியில், சாகம்பரி அமர்ந்து இருந்து அழைத்து வந்துவிட்டாள் மதியமே. மித்ரன் ஸ்கூல் கதைகள் பேசினான்.. கதை கேட்க்காமலே உறங்கிவிட்டான், மதியம்.

மித்ரன் கொஞ்சம் கொஞ்சம் தனக்கான வேளையில் முழ்க தொடங்கினான். சாகம்பரி ‘ஹப்பாடா..’ என தன்னை ஆசுவாசமாகி கொண்டாள்..

அன்றும் அப்படிதான் ஒரு சனி ஞாயிறு விடுமுறை தினம். சாகம்பரிக்கு மைசூர்காரர்களிடமிருந்து போன் அந்த ஞாயிறு காலையிலேயே. மித்ரனையும் அழைத்து வரும்படி உத்தரவு அவளுக்கு. ரத்தினம் பேசி இருந்தார்.

சாகம்பரி மித்ரனோடு கிளம்பினாள். சென்ற வாரம் சென்று வந்தாள்.. சுகுமாரி நன்றாகவே இருந்தார், இப்போது என்னவோ என எண்ணிக் கொண்டே மித்ரனோடு கிளம்பினாள்.

இன்று கதவு திறந்தே இருந்தது.. கேட்டை தாண்டி வீட்டின் உள்ளே நுழையும் இடத்தில்.. எதோ நெருடல்.. எதோ ஒவ்வாத வாசம் காற்றில் லேசாக மிதந்து வந்து.. அவள் நாசியை அடைந்தது.. ‘ம்.. என்ன இது..’ என எண்ணிக் கொண்டு நிலை வாசல் தாண்டி உள்ளே சென்றனர்.. மித்துவும் அவளும்.

மித்ரன் உள்ளே ஓடிவர.. அந்த சத்தத்தில் ரத்தினம் “பிக்மேன்..” என்றபடி வெளியே வந்து சாகம்பரியையும் அவனையும் அழைத்தார், சந்தோஷமாக.

மித்ரன் எப்போதும் போல.. அந்த வீட்டின் மாற்றங்களை பார்க்க தொடங்கினான் “தாத்தா, நான் ஸ்கூல் போறேன்..” என பேசிக் கொண்டே. ரத்தினமும் அவனிடம் பேச தொடங்கினார்.

சுகுமாரி, சிரித்த முகமாக ஹாலுக்கு வந்தார் கிட்சனிலிருந்து.. “சஹா.. ஒரு குட் நியூஸ்.. என் பையன் வந்துட்டான்.. இரண்டு வருஷமா வராதவன் வந்துட்டான்.” என பேச முடியாமல் புன்னகை முகமாக மூச்சு வாங்க.. சாகம்பரியையே பார்த்துக் கொண்டு மூச்சு வாங்கினார்.

சாகம்பரி “ஓ.. பொறுமை பொறுமை..” என்றாள் அவளும் புன்னகைத்தபடி.

மீண்டும் சுகுமாரி “அந்த சந்தோஷத்தை கொண்டாட.. உன்னை, இன்னிக்கு லஞ்ச்க்கு கூப்பிட்டேன்..” என்றார் சந்தோஷமாக.

சாகம்பரிக்கு பதில் சொல்ல தெரியவில்லை. எப்படி எடுத்துக் கொள்வது எனவும் தெரியவில்லை.. சிரித்து வைத்தாள் மையமாக.

இப்போது, ரத்தனம் அவள் அமர்ந்திருந்த சோபாவின் அருகில் வந்து  “அவன் வந்து ரெண்டு நாளாச்சி.. என் பையன் வந்துட்டான் வந்துட்டான்னு.. அந்த மாமரம் தொடங்கி.. மனிப்ளான்ட் வரைக்கும் கத்தி கத்தி சொன்னால்.. அதுவும் போக, என்கிட்டே  பேசி தீர்த்தாள்.. முடியலை.. என்னால். இன்னிக்கு நீ சிக்கிட்ட..” என்றார் மேடை ரகசிய குரலில்.

சுகுமாரி “க்கும்.. அவர் என்னமோ அவன்கிட்ட பேசவேயில்ல.. எனக்கு அப்படி கோவமா இருக்க முடியாதே சஹா, அதான் நான் அவனை மன்னிச்சிட்டேனே.. என்னமோ வந்திருக்கான்.. இப்போ போய் அவன்கிட்ட கோவப்பட முடியுமா” என்றார் கணவனை முறைத்துக் கொண்டே.

சாகம்பரி எல்லாவற்றையும் கேட்டு புன்னகைத்தாள். 

ராஜரத்தினம் “மித்ரனுக்கு பசிக்க போகுது சுகு..” என்றார்.

சுகுமாரி “மறந்துட்டேன்.. குழந்தைக்கு நெய் விட்டு சாதம் தரேன்.. வா சஹா..” என சொல்லிக் கொண்டே.. உள்ளே சென்றார்.

சுகுமாரி “இனி எங்கயும் போகமாட்டான்.. பாரேன்..” என்றார்.

ரத்தினம், குழந்தையோடு வந்து அமர்ந்தார் டைனிங் டேபிளில். தன் மனைவியின் பேச்சை கேட்டுவிட்டு “சுகு இப்போவே சொல்றேன், நீ எதையும் அவனிடமிருந்து எதிர்பார்க்காத.. எதோ வந்திருக்கான், என்ன ஏதுன்னு கேட்க்காத விட்டுடு.. நீ கேட்டு.. அவன் போயிட்டா, எங்ககிட்ட திரும்பவும் வந்து புலம்ப கூடாது சொல்லிட்டேன்..” என்றார் அழுத்தமாக.

சுகுமாரி இப்போது கணவனை முறைத்தார்.. ஏதும் பேசவில்லை.

ரத்தினம் “வா சாகம்பரி நாம சாப்பிடலாம்” என்றார்.

சஹா திருதிருவென விழித்தாள்.

ரத்தினத்திற்கு எதோ புரிய, மெல்லிய குரலில்  “அவன் வந்திருக்கான் அவ்வளவுதான்.. இன்னும் அவங்க அம்மாகிட்ட கூட சரியாக பேசலை.. இவளாக எதோ கற்பனையில் இருக்கா. இது இவளுக்காக.. ரொம்ப வருஷம் கழிச்சி.. அவள் முகம் சந்தோஷமா இருக்கு.. அதுக்காகதான் உன்னை கூப்பிட்டேன்.. அவன் வரமாட்டான் வா.. நாம சாப்பிடலாம், சுகு.. நீயும் வா..” என்றார்.

சாகம்பரிக்கு எந்த எண்ணமும் வரவில்லை.. சைவ உணவுதான் எனவே, அமைதியாக ரத்தனம் அங்கிள்லுடன் பேசிக் கொண்டே உண்டாள். சுகுமாரி உண்ணவில்லை.

மூவரும் உண்டு முடித்து, சாகம்பரி பாத்திரங்களை நேர் செய்துக் கொண்டிருக்க.. ஆண்கள் இருவரும் ஹாலுக்கு வந்தனர்.

இப்போது நெடு நெடுவென ஒரு உருவம் டைனிங் டேபில் அருகே வந்தது. அந்த இடமே சட்டென மணந்தது.. சாகம்பரி அனிச்சையாய் பார்க்க.. சுகுமாரி “கௌரி.. வா வா” என்றார்.

அவளின் எதிரில் ஆறடிக்கு ஒருவன் நின்றான்.. குழந்தை போல உச்சியில் குடுமி போட்டுக் கொண்டு.. பாதி சிகை  பிடரியில் வழிய.. முகம் கொள்ளா தாடியும் மீசையுமாக.. ஷார்ட்ஸ், ரவுண்டு நெக் டி-ஷர்ட்டில் தன் அன்னையை பார்த்துக் கூட சிரிக்காமல் நின்றான்.

சுகுமாரி “கௌரி, இவள் சாகம்பரி அப்பா ப்ரெண்ட்டோட பொண்ணு..” என்றார் அறிமுகம் செய்யும் விதமாக.

அந்த கௌரி ஏதும் சொல்லாமல் சேரை தன்னை நோக்கி இழுத்துவிட்டு தாராளமாக அமர்ந்துக் கொண்டு.. ‘அதுக்கு என்ன பண்ணும்’ எனும் பார்வையை அவளிடம் நிலைக்கவிட்டான்.

சாகம்பரிக்கு, என்னமோ அவன் முறைப்பதாக தோன்றியது.. ஹாய்.. என சொல்ல நினைத்தவள் அமைதியாகினாள்.

சுகுமாரிக்கு, மகனின் அமைதி என்னமோ போலாக “சஹா, இவன் என் பையன்.. கெளரிசங்கர்.. பசி அதான்..” என்றார்.

சாகம்பரி லேசாக புன்னகைத்தாள் “சரி ஆன்ட்டி, நான் கிளம்பறேன்” என்றவள் அங்கிருந்து வெளியே வந்தாள்.

 

Advertisement