Advertisement

மூவரும் சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர் அந்த பிறந்தநாள் விழாவிற்கு. ஒரு ஹோட்டலில்  இருந்த ஸ்மால் ஹாலில் நடந்தது விழா. மித்ரனை விட ஒரு வயது பெரியவளாக.. இருந்தாள், நண்பரின் மகள். கேக் செய்து முடித்துவிட்டனர். எனவே, கௌரி குழந்தையை பார்த்து வரலாம் என நேராக, தன் குடும்பத்தை.. அந்த கூட்டத்தின் மத்திக்கு அழைத்து சென்றான்.

கெளரியின் நண்பர் குடும்பம் கெளரியை வரவேற்றது “ஹ.. வா கௌரி சங்கர்.” என்றார். நண்பர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம்.. ஒரே கம்பெனியில் முதலில் வேலை செய்தனர். இப்போது, வேறு கம்பெனியில் இருக்கிறார். அந்த நண்பரின் திருமணத்திற்கு நட்புகள் எல்லோரும் சென்றிருந்தது. இப்போதெல்லாமும் அடிக்கடி இருவரும் வீக் எண்டில் பார்த்துக் கொள்வர். எப்போது கௌரி, குடும்ப விழாக்களுக்கு அதிகம் வரமாட்டான். எத்தனை அழைத்திருக்கிறார், ஆனால் வந்ததில்லை கௌரி. இந்தமுறைதான், ஒரு குழந்தையின் பர்த்டே பார்ட்டிக்கு வருகிறான் கௌரி. 

அந்த சின்ன பெண்ணுக்கு வரும் வழியில் வாங்கிக் கொண்டு வந்த பரிசை மித்ரனை வைத்து கொடுக்க வைத்தான் கௌரி. நண்பனின் மனைவி ‘சங்கர் சர்’ என அழைத்து பேசினார்.. கௌரியும் தன் மனையாளை அறிமுகம் செய்து வைத்தான். ஆக, தமிழ் ஆட்கள்தான் என்பதால் ‘எங்க சொந்த ஊர்’ என தொடங்கி பேச தொடங்கினர்.

சஹாவின் ஊர் எது என தெரிந்ததும்.. அந்த குழுவில் இருந்த.. மற்றொரு நண்பனின் மனைவியை அறிமுகம் செய்தனர்.. அப்படியே பேச்சு சென்றது.

சற்று நேரத்தில் ட்ரிங்க்ஸ் பார்ட்டி என அந்தே ஹோட்டலில் நண்பர்கள் படை பாருக்கு சென்றது. பெண்கள் குழந்தைகள் எல்லோரும் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர். 

மணி ஒன்பதற்கும் மேல். சஹா, மித்ரனுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள். கெளரியை இன்னும் காணோம். மனையாளுக்கோ பயம் ‘எங்கே அதிகமாக ட்ரிங்க்ஸ் செய்திடுவாரோ.. எப்படி வீடு செல்லுவது’ என கொஞ்சம் பயம், எனவே கிளம்பலாம் என எண்ணினாள் பெண். போனில் கணவனை அழைக்க தொடங்கினாள். 

அங்கே என்ன பேச்சு நடந்துக் கொண்டிருந்ததோ.. கெளரி “ம்.. சொல்லு சாகம்பரி” என்றான் திடமான குரலிலேயே.

சகாம்பரிக்கு கொஞ்சம் நிம்மதியானது அந்த குரலில் “சரிங்க, போலாமா” என்றாள். 

கௌரி “அதுக்குள்ளயா.. கண்டிப்பா இன்னும் ஒன் ஹெர்ஸ் ஆகிடும்.. போயிக்கலாம், நாளைக்கு லீவ் தானே.. மித்ரன் சாப்பிட்டானா.. வந்திடுறேன்” என்றவன் போனை வைத்துவிட்டான். நண்பர்களை பார்த்தே பலநாள் ஆகிற்று, அதனால் கொஞ்சம் டைம் எடுத்துக் கொள்ளலாம் என எண்ணினான்.

சஹாவிற்கும் பெரிதாக ஏதும் தோன்றவில்லை.. மித்ரன் உண்டுமுடித்து விளையாட என சென்றான். அப்போதுதான் கிடைத்த தோழிகளோடு, சஹாவும் பேசிக் கொண்டே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள்.. எல்லோரும் உண்டனர். நேரம் போனதே தெரியவில்லை.. ஒருவழியாக ஆண்கள் படை உண்பதற்கு வந்தனர். பேச்சுகள் தொடங்கியது.. பெரிதாக. கணவன்மார் மனைவிமார்களுக்கு இடையே.

சாகம்பரியும், தோழிகளோடு.. அமர்ந்து, தன் கணவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள்.. ‘தெளிவாகத்தான் பேசுகிறாரா’ என ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். பாவம் அவளுக்கு தெரியவில்லை இது தேசிய தொற்று போல.. கல்லூரி முதலே தொடங்கிய பழக்கம் என்பதால்.. கற்று தேர்ந்திருந்தனர் அனைவரும். 

பெண், அந்த கூட்டத்தை  வேடிக்கை பார்த்துக் கொண்ட, அந்த பேச்சுகளை கேட்டுக் கொண்டிருந்தாள் பெண்.

கௌரியும் ஆண்களுக்கு சார்பாக, அவரவர் மனைவிகளிடம் “நீங்க அவனை எங்கள் உடன் ட்ரிப் அனுப்பவில்லை, அன்னிக்கு போனோமே..” என அவ்வபோது எடுத்துக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தான். 

அவர்களின் மனைவி ஒருவர் “நீங்க மட்டும் போகலையே.. உங்க கேர்ள் பிரென்ட் கூடத்தானே போனீங்க.. அப்புறம் அவரை எப்படி அனுப்பறது” என்றாள் சத்தமாக. ம்கூம், அவர் இயல்பான குரலில்தான் பேசினார்.. ஆனால் சட்டென  அந்த இடம் அமைதியாகியதால் அவரின் பேச்சு சத்தமாக கேட்டது.

கூடவே, எல்லோரின் பார்வையும் சட்டென சஹாவையே தீண்டியது. ஏதும் வருத்த வேண்டும் என சொல்லவில்லை. பேச்சு வாக்கில் வந்துவிட்டது.

பேசிய அந்த நண்பரின் மனைவி.. சட்டென சஹாவின் அருகே வந்தார்.. “சாரி சஹா” என்றார்.

சகாம்பரிக்கு.. அந்த முதல் இரண்டு நொடிகள்தான் வலித்தது. அதன்பின் இயல்பாகிக் கொண்டாள் “இட்ஸ் ஓகே.. “ என்றாள் புன்னகை முகமாக. சற்று தூரம் தள்ளி சென்று அமர்ந்துக் கொண்டாள் குழந்தைகளோடு.

என்ன நினைத்தனரோ நண்பர்கள் அமைதியாக உண்டனர். சற்று நேரத்தில் கெளரியின் நண்பன் ஒருவன் வந்தான் சஹாவின் அருகே.. “சாப்பிடீங்களா” என்றான்.

சஹா “ம்..” என்றாள்.

அவளின் அருகில் ஒரு சேர் எடுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தார்.. கூடவே இன்னும் இரண்டு நண்பர்கள் வந்தனர்.. இப்போது முதலாவதாக வந்த நண்பர் “கௌரி, அதிகம் பேசவேமாட்டான். எப்போதும் தன் வட்டத்துக்குள்தான் இருப்பான். அது நல்லதா கெட்டதா அதை பற்றி எல்லாம் கவலைப்படமாட்டான். யார் சொன்னாலும் கேட்கமாட்டான். ஆனால், இப்போ நிறைய மாற்றம். இன்னிக்குதான் பேசறான்.. எங்க மனைவிகளிடம் கூட.. அவனை இப்படி நாங்கள் பார்த்தது இல்லை.. இனி பழைபேச்சுகள் மாறி.. சஹா கெளரின்னுதான், நட்புகளிடம் பேச்சு வரணும். இப்போதான் வெளிய வாரான்.. இந்த பேச்சுகளுக்கு எல்லாம் பயந்து வெளியே வராமல் இருந்திடாதீங்க. ம்.. கொஞ்சநாளில் நாங்க எல்லாத்தையும் மறந்து கௌரி சஹா மட்டும்தான் ஞாபகம் வைச்சிருப்போம்.. அது எதோ தவறுதலாக பேசிட்டாங்க” என சொல்லி நிறுத்தினார்.

சஹா “இல்ல.. அப்படி எல்லாம் இல்ல.. எனக்கு அவரை தெரியும்.” என திமிராக சொல்லினாள் முதலில். பின் “ம்.. கவலை படாதீங்க.. உங்க பிரென்ட்’டை ஒன்னும் சொல்லமாட்டேன்.. ம்..” என்றாள் விளையாட்டான குரலில். 

இப்போது அருகில் இருந்த நண்பர் ஒருவர்.. எழுந்து கெளரியை பார்த்து “கௌரி, மாட்டின இன்னிக்கு நீ” என்றார் விளையாட்டாய்.

கௌரி உண்டு முடித்திருந்தான்.. அந்த கூட்டத்தின் அருகில் வந்தான் “என்ன டா.. போட்டு கொடுத்திட்டீங்களா, ஏற்கனவே முறைப்பாள்.. ம்..” என்றான் கவலையான குரலில்.

சாகம்பரி நின்றிருந்த கணவனை முறைத்தாள் சரியாக. கௌரி, உச்சி குடுமியோடு கீழே குனிந்து அவளை பார்த்தான். சஹாக்கு, கணவனை நிமிர்ந்து பார்த்தே கழுத்து வலிக்கும் போலிருக்க.. எழுந்துக் கொண்டாள்.

நண்பர்கள் எல்லோரும்.. “ம்.. பார்த்துக்கோங்க சஹா..” என்றனர் வில்லங்கமாக. அடுத்து “நீங்க பார்த்து எது செய்தாலும் ஓகே..” என்றார் ஒருவர்.

கௌரி சிரித்தான் இவர்கள் விளையாடுகிறார்கள் என.

பின் “போலாங்க “ என ஒரு நண்பரின் மனைவி சொல்ல.. அப்படியே ஒவ்வொருவராக கிளம்ப தொடங்கினர்.

சாகம்பரி மித்ரன் கௌரி மூவரும் கிளம்பினர். மித்ரன் அழகாக பின் சீட்டில் படுத்து உறங்க தொடங்கினான்.

காரில் வரவர கௌரி “என்ன சொன்னாங்க.. என் பிரெண்ட்ஸ்.. ட்ரீட் கேட்டானுங்க.. நான்தான் முடியாதுன்னு சொன்னேன்.. நீயே கொடுப்ப பாருன்னு சொன்னானுங்க.. உண்மையை சொல்லு ஏன் இப்படி உட்கார்ந்திருக்க.. என்ன சொன்னாங்க” என்றான் கொஞ்சம் தடுமாறிய குரலில்.

சஹா புன்னகைத்தாள்.. சாதரணமாக.

ஆனால், அதை திரும்பி பார்த்த கெளரிக்கு என்னமோ போலிருந்தது. 

சஹா “ஒன்னும் சொல்லலையே.. ஏன் என்ன பயம்.. இனியும் உங்களை பற்றி யார் என்னிடம் என்ன சொல்லிட முடியும்” என்றாள் ஒரு மாதிரி சாதாரண குரலில்.

கௌரிக்கு இப்போது வலித்தது இந்த பதில் “பேசாத.. விட்டிடு” என்றான் கடுகடுப்பாக.

சஹா, திரும்பி பார்த்து “ஏன் கோவம்.. யாரும் பொய் சொல்லலையே” என்றாள்.

கௌரி அமைதியாகிவிட்டான். ஆனால், கார் என்னமோ வேகமாக சென்றது.

சஹா “ட்ரின்க் பண்ணியிருக்கீங்க, பார்த்து போங்க” என்றாள்.

கௌரி காரின் கீயரை செட் செய்ய தொடங்கினான்.. அப்போது சஹா, அவனின் கை மேல் தன் கையை வைத்தாள்.

கௌரி, அவளின் கையை சட்டென தட்டிவிட்டான். பெண்ணவள் அசராமல் கணவனின் முழங்கைகளை பற்றினாள். கௌரி ஏதும் பேசவில்லை.

சஹா அமைதியாக அவனின் விரல்களை தீண்டினாள்.. “நீங்கதான் இன்னும் பழசையே நினைச்ச்கிட்டு இருக்கீங்க.. யாரும் ஏதும் சொல்லல” என்றாள் நிதானமான குரலில்.

கௌரி திரும்பி பார்த்தான் அவள் கண்களை ‘உண்மை சொல்லுகிறாளா’ என.. அதில் என்ன கண்டானோ.. மனையாளின் விரல்களை நிதானமாக பற்றினான்.. “ஏன் என்னை இப்படி படுத்தற” என்றான் ஒருமாதிரி யாசகனின் குரலில்.

சஹா “தோணுது.. இன்னும் படுத்துவேன்.. அஹ.. தெரியலை” என்றாள்.

கௌரி அவளின் கைபிடித்து இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.. “ஆம் ரெடி..” என்றான்.

சாகம்பரி சற்று தள்ளி அமர்ந்து கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் வாகாக.

“தவம் புரியாமலே ஒர் வரம் கேட்க்கிறாய்..

இவள் மடிமீதிலே ஒர் இடம் கேட்க்கிறாய்..

வருவாய் பெறுவாய்.. மெதுவாய்..

தலைவனை நினைந்ததும்.. தலையணை நனைந்தது

அதற்கொரு விடை தருவாய்..” 

 

Advertisement