Advertisement

சஹா “ஐயோ! எவ்வளோ பெரிய பொய்” என்றாள்.

கௌரி “ம்கூம்.. இப்படி சட்டுன்னு உண்மையை சொல்லிட கூடாது. இது கவிதை” என்றான் தன் டி-ஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு.

சஹா புன்னகைத்தாள்.

அடுத்து என்ன என மீண்டும் அமைதிதான் இருவருக்குள்ளும்.

கௌரி “போலாம் நீ ரொம்ப டயர்டா தெரியுற..” என்றான்.

சஹா தலையசைத்தாள்.

சஹா, நிம்மதியாக அந்த புது கட்டிலில் உறங்கினாள். கௌரி கீழே உறங்கினான். 

மறுநாள் மதியமாக எல்லோரும் ஊருக்கு கிளம்பினர். கௌரி, நடு இரவில் வெளிநாடு கிளம்புகிறான். எனவே, இவர்களை முன்னதாக வழியனுப்பி வைத்தான்.. இரவில் பயணம் வேண்டாம் என.

சஹா, மித்ரனோடு அவனிடம் தலையைத்து கிளம்பினாள். கெளரிக்குதான் மனது வலித்தது. அதன்பின் வேலையே ஓடவில்லை. அப்படியே அமர்ந்து கொண்டான்.. அவள் என்ன நினைத்தாள்.. சந்தோஷமாக இருந்தாளா.. என தனக்குள்ளாக ஆராய்ந்துக் கொண்டே கடத்தினான் அந்த பொழுதை.

சஹா, இருக்கும் போதே தனக்கான உடைகளை.. எடுத்து வைத்துக் கொண்டான். எனவே, வேலை இல்லை.. அப்படியே ஹாலில் உறங்க தொடங்கினான். 

சரியான நேரத்தில், இரவில்.. அவர்கள் சென்று சேர்ந்து விட்டோம் என பேசியிருந்தனர், ம்.. கெளரியை சரியான நேரத்திற்கு எழுப்ப வேண்டும் என. சஹாவும் பேசினாள் ‘மித்ரன் உறங்குகிறான் நான் அப்புறம் பேசுகிறேன்..’ எனறாள், கணவனிடம். உறங்கவும் சென்றுவிட்டாள் சஹா. ஆனால், பாவம் கெளரிக்கு ‘இந்த ஒருநாள் வந்து, வீட்டையே நிறைத்துவிட்டு.. என்னையும் பேச வைத்துவிட்டு.. கிளம்பிவிட்டாள்..’ என தலையை துவட்டிக் கொண்டே கண்ணாடி முன் நின்றிருந்தான். சரியான நேரத்தில் கிளம்பிவிட்டிருந்தான், தனது பயணத்தை நோக்கி.

சாகம்பரி, இந்த பெங்களூர் பயணத்தில்தான் சற்று இயல்பானாள்.. என்ன என்னமோ பேதமும் தயக்கமும் சூழ்ந்திருந்த அவளின் மனதை.. அந்த வீடும்.. அவனின் பேச்சும்.. சற்று மாற்றி ஒன்றுமில்லை என்றாக்கி  இருந்தது. மித்ரனை, கௌரி கவனித்துக் கொண்ட விதம் அவளின் மனதை இதமாக்கி இருந்தது. எனவே, கௌரி அப்படி ஒன்றும் கெட்டவன் இல்லை போல.. என மனையாளின் மனது ஏற்றுக் கொண்டது.

மித்ரனின் எக்ஸாம் நாட்கள் விறுவிறுப்பாக முடிந்தது. மித்ரனுக்கு விடுமுறை விட்டாகிவிட்டது. கௌரி இன்னும் ஊர் வந்தபாடில்லை. அடுத்த நான்குநாட்கள் சென்றுதான் இந்தியா வந்தான். 

அடுத்த பத்து நாளும்.. கெளரிக்கும் சஹாவிற்கும் நிற்க நேரமில்லை. சாகம்பரி மித்ரனோடு.. பெங்களூர் வந்து சேர்ந்தாள். கெளரிக்கு அலுவலக வேலை சரியாக இருந்தது. சஹாவும் பெரியவர்கள் இருப்பதால்.. வீட்டிற்கு தேவையான கிட்சென் பொருட்களை வாங்க.. சமையல் சாமான்கள் வாங்க.. என இருந்தாள். அத்தோடு, கெளரியின் சித்தப்பா பெண் இங்கே பெங்களூரில் இருப்பதால்.. அவள் ஒருநாள் வந்து போனாள். அருகில் இருந்த கோவிலுக்கு சென்று வர.. என எதோ பரபரப்பான நாட்களாக அடுத்து வந்த இரண்டு வாரமும் முடிந்தது. கௌரி இதிலெல்லாம் கலக்கவில்லை. அவனின் நேரம் சொல்லவே முடியாமல் இருந்தது.. காலை பகல் என்ற பாகுபாடில்லாமல் வேலை பார்த்தான்.. உறங்கினான். எனவே, அவனை நம்பாமல் ரத்தினம் எல்லா இடத்திற்கும், தன் சம்பந்தி.. மருமகளை அழைத்து போய் காட்டினார். ஆக, வேகமாக ஓடிவிட்டது அந்த நாட்கள்.

பெரியவர்கள் சஹாவை குடியமர்த்தி தங்கள் இருப்பிடம் வந்தனர்.

சஹாவிற்கு, என்னமோ தனியானதாக தோன்றியது. மித்ரன் அவளும் மட்டுமே இருந்தனர்.. கௌரி வருவதற்கே இரவு பனிரெண்டுக்கும் மேல் ஆனது அன்று.

கௌரி, தனது சாவியை கொண்டு கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான். சஹா, அங்கேயே ஹாலில் அமர்ந்து எதையோ தைத்துக் கொண்டிருந்தாள். 

கதவு திறக்கும் சத்தம் கேட்டு.. டிவி வால்யூம் குறைத்தாள். லாப்டாப் பாக்.. போன்.. தன் அன்னை காலையில் கொடுத்தனுப்பிய லஞ்ச் பாக் என.. ஒரு குடும்பஸ்தனாக உள்ளே வந்தான் கௌரி. இந்த பத்து பதினைந்து நாட்களாக.. இப்படிதான் எதோ பள்ளி செல்லும் குழந்தை போல.. லஞ்ச் பேக் எடுத்து போகிறான். தினமும் அதை வேறு காரிலிருந்து மறக்காமல் எடுத்து வரவேண்டும். 

இப்போது, மனையாள் காத்திருக்கவும் “என்ன.. செய்யற இந்த நேரத்தில்” என புன்னகைத்துக் கொண்டே அந்த லஞ்ச் பாக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தான். புதிதாக வாங்கி இருந்தனர், இந்த டைனிங் டேபிளை. 

சாகம்பரி “ம்.. சும்மாதான், ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஏதாவது தையல் வேலை செய்து. அதான்..” என்றாள்.

கௌரி, உள்ளே தங்களின் அறைக்கு சென்றான். சற்று நேரத்தில் ஷாட்ஸ் டி-ஷர்ட் அணிந்து வெளியே வந்தான்.

சஹா “சாப்பிட ஏதாவது தரவா..” என்றாள்.

கௌரி “நான் சாப்பிட்டாச்சு.. அன் டைமில் நான் சாப்பிட மாட்டேன்..” என்றான்.

சஹா “அன் டைமில் வொர்க் மட்டும் பண்ணலாமோ” என்றாள்.

கௌரி, பதில் ஏதும் பேசவில்லை.. மனையாள் வாயாடுகிறாள் என அமைதியாகிக் கொண்டான் சிரித்துக் கொண்டே.

சஹா விடாமல் “மாதுளை உரிச்சு வைச்சிறுக்கேன், சாப்பிடுங்களேன்” என்றாள்.

கெளரிக்கு கொஞ்சம் சலிப்பு தட்ட “நான் டென்க்கு மேல ஏதும் சாப்பிட மாட்டேன்.. ஓகே.. நீ வேணும்ன்னா சாப்பிடு.. நான் போய் தூங்க போறேன்” என்றான், ஒருமாதிரி எரிச்சல் குரலில்.

சஹா சட்டென்ற அந்த குரலில் அமைதியானாள்.. “ம்.. நான் வரேன்” என்றுவிட்டாள்.

கௌரி “மித்ரனுக்கு பார்த்திருக்க ஸ்கூலில் இருந்து கூப்பிட்டாங்க.. நாளைக்கு வர சொல்லி இருக்காங்க.. சீக்கிரம் படு.. நாளைக்கு அங்கே போகனும்” என்றான்.

சஹாவும் வந்து உறங்கினாள்.

மறுநாள் மூவரும் கிளம்பி பள்ளிக்கு சென்றனர். பள்ளி ட்ரெண்டியாக விசாலமாக இருந்தது. எதோ பெரிய IT நிறுவனத்தில் நுழைந்த பிரமையை தந்தது அந்த பள்ளி.

சஹா, பீஸ் கேட்டு மிரண்டு போனாள்.. முதலாம் வகுப்பிற்கே எதோ சந்திரமண்டலத்தில் சென்று படிக்கும் காசு கேட்டனர்.

பிரின்ஸ்பல் என  யாரையும் பார்க்கவில்லை.. இவர்கள். அலுவலக அறையில் ஒருவரை பார்த்தனர்.. அவர்கள் பள்ளி பற்றி சொல்லி முடித்து.. ”அப்லிகேஷன் ப்ல் செய்து.. பீஸ் கட்டிய சலானோடு நீங்க பள்ளி முதல்வரை பார்க்கலாம்” என்றார், அந்த பெண் புன்னகை முகமாக.

சஹாவிற்கு என்னமோ புதிதாக இருந்தது.. “எங்க ஊரில் எல்லாம்.. பிரின்சிபல் வெளிய வந்து.. எங்களை பார்த்து மித்ரனோடு பேசி.. கூட்டி போனார்.. இதென்ன.. பீஸ் கட்டினால்தான். அவரையே பார்க்க முடியுமாம்.’ என அப்போதே முனகினாள், கணவனிடம்.

கௌரி அந்த பெண்ணிடம் கன்னடம் ஆங்கிலம் என கலந்து பேசி.. தன்னுடைய சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தவன்.. சஹாவின் பேச்சை ஒருகாதில் வாங்கியவன் அருகே இருந்த அவளின் விரல்களை அழுத்தினான்.. கண்ணால் ‘பேசாதே’ என சைகை செய்தான். 

சஹாவிற்கு பொருக்க முடியவில்லை, இப்போது “கௌரி, வேண்டாம்ங்க. க்கும்.. இதென்ன இவ்வளோ பீஸ்.. என்னதான் அப்பா தருவாருன்னாலும்.. இப்படி அந்நியாய செலவு வேண்டாங்க” என அந்த அப்ளிகேஷனை பார்த்துக் கொண்டே சின்ன குரலில் பேசினாள்.

கௌரி “ஷ்..” என்றவன், அலுவலக பெண்ணிடம் “எக்ஸ்கியூஸ்மி..” என கேட்டுக் கொண்டு.. சஹாவை வெளியே கார்டன் பக்கம் கூட்டி வந்தான். வெளியே வந்ததும் சலிப்பான குரலில் “தமிழ் தெரிஞ்சவங்க இருப்பாங்க சாகம்பரி. மெதுவாக பேசு” என்றான்.

கணவன் தனக்கு ஒன்றுமே தெரியாததது போல இங்கே கூட்டி வந்து சொன்ன வார்த்தை கொஞ்சமும் பிடிக்கவில்லை அவளுக்கு. எனவே, கொஞ்சம் கடுகடுப்பாக அவளும் முன்பு சொன்னதையே திரும்ப சொன்னாள்.. கணவனை பார்க்காது.

கௌரி “என் பையனோ.. பெண்ணோ இருந்தால்..” என அவளையே பார்த்துக் கொண்டு சொல்லியவன், இப்போது நிறுத்தி, மீண்டும் தொடர்ந்தான் “நம்ம பையனோ பெண்ணோ இருந்தால், நான் இங்கேதான் சேர்ப்பேன்.. மித்ரனுக்கு அதே போலதான். உங்க அப்பா மட்டும் பே செய்ய வேண்டாம். நானும் சேர்ந்து பீஸ் கட்டுவேன். எல்லோரும் சேர்ந்து.. படிக்க வைப்போம்.. அவன் எல்லோருக்கும் உரியவன். அப்புறம் வேற என்ன சொன்ன.. சந்திரமண்டலம்.. அனுப்புவோம்.. ம்.. அளவாக யோசி போதும்.. இங்கெல்லாம் இப்படிதான். உங்க அப்பா, வாத்தியாரா இருந்தார்.. அதனால் பிரின்ஸ் எழுந்து வந்திருக்கும்(பார்). அப்புறம், இப்படிதான் பீஸ். இந்த ஏரியாவில் இந்த ஸ்கூல் கொஞ்சம் நல்லா இருக்கு.. விசாரிச்சுதான் வந்திருக்கேன்.” என்றான் மிரட்டலாக.

சஹா, அதன்பின் ஏதும் பேசவில்லை.

பள்ளியில் அடுத்த இரண்டு மணி நேரம் வேலை இருந்தது. மூவரும், பள்ளி முதல்வரை பார்த்து.. பேசி.. புக்ஸ் வாங்கிக் கொண்டு.. இருந்தனர். சஹா, அங்கேயே அமர்ந்துக் கொண்டாள். மித்ரன்தான், கிளாஸ் ரூம் பார்க்கனும் என கெளரியை கூப்பிட்டு போய் வகுப்பறை பார்த்து வந்தான்.. சற்று நேரம் ப்ளே ஏரியாவில் விளையாடினான். இப்படி எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு.. வீடு வந்தனர்.

சஹா, கணவனிடம் ஏதும் அதன்பிறகு பேசவில்லை. அமைதியாகவே வந்தாள்.. மித்ரன்தான் பேசிக் கொண்டிருந்தான்.

சஹா, உணவுகளை டேபிளில் எடுத்து வைக்க தொடங்கினாள். மித்ரன் உடை மாற்றி வந்தான் உண்பதற்கு. ஏதும் பேசாமல் உண்டனர் மூவரும். மித்ரன் டிவியில் கவனமாகினான்.

சஹாவின் முகம் என்னமோ போல இருந்தது.. கெளரிக்கு எப்படி பேசுவது என தெரியவில்லை. மித்ரன் மதியத்தில் அப்படியே உறங்கிவிட வீடே அமைதியாக இருந்தது.

Advertisement