Advertisement

வரம் கொடு தவம் காண்கிறேன்!..

14

மித்ரனை உறங்க வைக்க சொல்லினர் பெரியவர்கள். அதனால், ரத்தினத்தின் அறையில் குழந்தையை உறங்க வைத்துவிட்டாள், சஹா. பின் தயாராகினாள் பெண். 

சாகம்பரிக்கும், தயக்கம் பதைபதைப்பு என எல்லாம் இருந்தாலும் மனதை முடிந்த அளவு தயார் செய்துக் கொண்டே.. மேலே கௌரிசங்கரை சந்திக்க  வந்தாள்.

கௌரி, அறையில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்தான்.  கெளரியின் காத்திருப்பு இப்போதுவரை அவளுக்காக மட்டுமே. இன்று இந்த தருணத்திற்காக மட்டுமே. எதுவுமே தெரியாது அவளை பற்றி தெரிந்து.. அருகில் அவளை பார்க்கத்தான். ‘தன்னை பற்றியாவது அவளுக்கு எல்லாம் தெரியும்’ ஆனால், எனக்கு, எதுவுமே தெரியவில்லை. அவளுக்கு என் கடந்தகாலம் பிடிக்கவில்லைதான்.. அது புரிகிறது.. ஆனால், அப்படியேவா இருந்துவிடுவேன்.. ம்.. அவளிடம் என்ன செய்தால்.. என்னை ஏற்பாள்.. இல்லை எப்படி இருந்தால்.. ம்கூம்.. எப்போது சேர்ந்து வாழலாம்.. எல்லாம் பேசணும்.. அஹ.. மித்ரன் கமிட்மென்ட் பற்றி அவள் கவலையே படவேண்டாம்’ என எப்படி எல்லாம் அவளிடம் பேச வேண்டும் என ஒத்திகை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ம்.. இந்த ஒன்றரை வருடமும்.. தனிமை மட்டும்தான் அவனின் துணை. அதுவும் தனிமை என்பது.. அவனாக எடுத்துக் கொண்ட தனிமைதான். தன் வாழ்க்கைமுறையில் தனக்காக தோன்றிய குற்றயுணர்ச்சியால்.. எனக்கு யாரும் வேண்டாம் என.. அவனாக எடுத்த தவம். 

ஒருகட்டத்தில்.. சாகம்பரியின் வாழ்கையை பார்த்ததும் அனிச்சையாய் அந்த தனிமையை துறக்க நினைத்துவிட்டான். அதனால், அவளிடம் எப்போது பேசுவோம்.. எப்படி இருக்கும் எங்கள் வாழ்வியல்.. என் கடந்தகால தவறுகளை மன்னித்து என்னை ஏற்பாளா.. இல்லை, அதைத்தொட்டு என் காதலை நிராகரிப்பாளா.. இல்லை, இப்போது இருப்பது போல.. கண்களை மூடிக் கொண்டு.. நீ அப்படிதான் என சபித்துவிடுவாளா.. என பெரிய பெரிய கேள்விகள் அவனுள்ளே. அவனுக்கு தன்னை பற்றியே தெரியும் ‘வெளியில்.. சொந்தங்கள் நட்புகள் எதிரில்.. நானென்னமோ பெரிய தர்மம் செய்தது போல மாயை இருந்தாலும்.. அந்த தருமம் செய்தது அவள்தான்’ என எங்கள்.. அதாவது எனக்கு தெரியுமே. ஆக, என்னை எப்படி கையாலுவாள்.. என்னால் அவளின் சின்ன உலகத்து சூரியனாக ஜொலிக்க முடியுமா.. குறைந்தபட்சம் நட்சத்திரமாகவாவது   நிலைத்து நிற்க முடியுமா’ என இத்தனை மாதங்களில் நிறைய கேள்விகள்.. தர்க்கங்கள்.. எல்லாம் அவனுக்குள்ளேதான் இத்தனைநாளும். 

இன்று தனிமையில் அவளை பார்த்து பேசி.. என்னதான் நினைக்கிற என கேட்கும் எண்ணம். ஆக, அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்.

திறந்திருந்த கதவை.. லேசாக தட்டி சத்தம் செய்தபடியே உள்ளே வந்தாள் சாகம்பரி.

சாகம்பரி மேலே சென்றது.. அவளின் அன்னை தந்தை.. மித்ரனோடும் உறவுகளோடும் தங்களின் வீடு சென்றனர்.

சஹா, மெரூன் வண்ண மென்பட்டு.. ஒப்பணை என ஏதும் அவன் கண்களுக்கு தெரியவில்லை.. தலையில் பூ.. நெற்றி குங்குமம்.. கையில் நான்கு வளையல் அதிகமாக.. மேலும் அவளை சல்வாரில்தான் பார்த்திருக்கிறேன். புடவையில் நேற்றிலிருந்து பார்க்கிறேன்தான்.. ஆனால், தனிமையில் பார்க்கிறான் இப்போதுதான்.

இன்னும் கொஞ்ச நேரம் அவளை அதிகமாக பார்க்க வேண்டும் என தோன்றுகிறது.. ஆனால், அப்படி பார்க்காதே.. மேனர்ஸ் இல்ல என அவனின் பொதுஅறிவு திட்ட.. பார்வையை திருப்பிக் கொண்டு போனிலேயே கவனமாக இருப்பது போல அமர்ந்திருந்தான்.

ஆனால், இயலவில்லை அப்படி நடிக்க.. கெளரிக்கு, ‘உள்ளே வந்து  கையிலிருந்த தனது போனையும் டேபிளில் வைக்கிறாள்.. இப்போது திரும்புவாள்’ என எண்ணி கௌரி நிமிர்ந்து பார்த்தான்.

சாகம்பரி அப்படியே நின்றாள்.

கௌரி “வா.. வாங்க.. உட்கார்” என்றான், கலவையான நடையில்.

சஹாவிற்கு, படபடப்பு அதிகமாக.. தன்னை அமைதிப்படுத்திக் கொண்டே அமர்ந்தாள்.

சஹா, அந்த அறையை ஆராயத் தொடங்கினாள். அறையின் நேர் எதிரே பால்கனி. இவன் அறையின் வாசல் தாண்டி சற்று ஹால் போன்ற இடம். அதை தாண்டிதான்.. பால்கனி. அங்கே நிறைய செடிகள் உண்டு.. ஆனாலும், கீழேருந்து அந்த வெற்றிலை கொடி மேலே படர்ந்து வந்திருந்தது. அதை கடந்து உள் நோக்கி பார்வையை சுழற்றினாள்.. ஹால் போன்ற பகுதி.. அங்கே ஒரு இரண்டு பீம்பாக்.. பிஷ் டேங்க்.. அவர்களின் குடும்ப புகைப்படம். அடுத்து இப்போது இருக்கும் தங்களின் அறை, அங்கே.. டேபில் இரண்டு இருந்தது.. அதில் இரண்டு லாப்டாப்.. மோடம்.. ஒரு லேன்ட்லைன் போன்.. சுற்றிலும் ஒயர்கள்.. சார்ஜர்.. ஸ்பீக்கர்.. என ஒரே ECE வாசம்.

அறையின் நடுவே.. கட்டில்.. அறையின் வாசல் அருகே ஒரு சேர்.. ஒரு கலைப்பொருள்.. போட்டோ.. என அலங்கார பொருட்கள் ஒன்றுகூட இல்லை அந்த அறையில். ‘அவ்வளவுதானா.. என இவள் பார்வையை நேராக்கிக் கொள்ள.. கௌரி நின்றிருந்தான்.. ஷாட்ஸ் டி-ஷர்ட் என உடையை மாற்றிக் கொண்டு.

கௌரி, வேட்டி சட்டையில் இருந்தான்.. முன்பு. இப்போது “நீயும்.. உனக்கும் அங்கே இருக்கு.. செஞ் செய்துக்கோ.. ம்..” என்றான்.

சஹா “இல்ல, எனக்கு ஓகேதான் “ என்றாள்.

கௌரி “ம்.. என் ரூம் எப்படி இருக்கு” என்றான்.

சஹா ‘நல்லா இருக்கு’ என்பதாக தலையசைத்தாள்.

கௌரி “சொல்லேன்.. ஏதாவது” என்றான், இதமான குரலில்.

சஹா நிமிர்ந்து பார்த்து “எ..ன்ன சொல்லணும்” என்றாள்.

கௌரி “என்ன படிச்ச..” என்றான்.

சஹா “இங்கதான், அப்போவே ஒருதரம் சொல்லி இருக்கேன்.. மறந்துட்டீங்களா” என்றாள் மென் குரலில்.

கெளரிக்கு உண்மையாகவே மறந்துவிட்டது.. நினைவுபடுத்திக் கொண்டான்.. “ம்.. சைக்காலஜி.. யா.. சொல்லியிருக்க” என்றான்.

சஹா அமைதியானாள்.

கௌரி அவளையே பார்த்தான் இமைக்காமல்.. சஹாவிற்கு வேர்க்க தொடங்கியது. பெண்ணின் மனதில் சட்டென அவனின் இறந்தகாலம் வந்து நின்றது.. முகம் சுருங்க தொடங்கியது.

கௌரிக்கு அவளின் முக மாற்றம் என்னமோ போலாக.. இதுவரை யோசித்து வைத்ததை எல்லாம் தள்ளி வைத்தான்.. “உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்.. அம்மா கூட ஏதும் இதபற்றி சொல்லலை.. எப்போ பெங்களூர் வருவீங்கன்னு.. இல்ல, போகலாம் நாமன்னு.. ஐடியா” என்றான்.

சஹா, அவனை பார்க்காமல் டேபிள்.. தரை.. ஒயர் என பார்த்துக் கொண்டிருந்தவள்.. இப்போது, குனிந்து தன் விரல்களை பார்த்துக் கொண்டாள்.. அவனின் குரலே ஆர்வமாக வந்தது, எனவே நிமிர்ந்து பார்க்கவில்லை, கணவனை. சஹா “இல்ல, மித்துவிற்கு, ஆன்னுவல் எக்ஸாம் முடிந்து வரலாம்ன்னு.. பாவம் இப்போவே மாற்றினால்.. அவன் கஷ்ட்டபடுவான்.” என்றாள், தயக்கமான குரலில்.

கௌரி “ஓகே.. அப்போ எந்த மன்த்.. ஜஸ்ட் அப்ராக்சிமேட்டா சொல்லாமே..” என்றான்.

சஹா இன்னும் நிமிரவேயில்லை.

கெளரிக்கு என்னமோ பொறுமை அவனை விட்டு சென்றது “கொஞ்சம் என்னை நிமிர்ந்துதான் பாரேன்.. என்ன அவ்வளோ கொடூரமாகவே இருக்கிறேன்” என்றான் கிண்டலும் ஆற்றாமையுமாக கேட்டுவிட்டான்.

சஹா சட்டென நிமிர்ந்தாள் “க்கும்.. இல்ல, நான் அப்படியே சும்மா..” என தடுமாறினாள் அவனை பார்த்துக் கொண்டே.

கௌரி “நீ என்னை பற்றி, என்ன நினைக்கிறேன்னு சொல்லிட்ட.. அதை நான் மறந்துட்டேன். ம்.. எனக்கு பிடிச்சவங்கதானே சொன்னாங்க, அதனால் மறந்துட்டேன். என்னை பாரு.. கொஞ்சம் இயல்பாக இரேன்.. ஏனோ.. நீ இப்படி இருந்தால், நான் உன்னை போர்ஸ் பண்ணின பீல் எனக்கு வருது. அப்படியா” என்றான்.

சஹாவிற்கு கண்கள் கலங்கியது. தன் தைரியம் எல்லாம் கரைவதாக தோன்றியது.. மெதுவாக ‘இல்லை’ என தலையசைத்தாள்.

கௌரி அவளின் தலையசைப்பை கவனியாதவன் போல.. “இல்ல, அப்படிதான்னு சொல்றியா” என்றான் வேண்டுமென்றே.

சஹா “இல்ல, அப்படி இல்லை.. எனக்கு எல்லாவற்றையும் பேஸ் பண்ண டைம் வேணுமே.. நீங்க இன்னும் எதையும் மறக்கலைன்னு தெரியுது.. நீங்க சொல்லிக்காட்டும் போதே. ச்ச.. நானும் நடக்காததை சொல்லலை. விடுங்க.. இதுக்குதான் நான் எதையும் பேசறதில்லை.. கொஞ்சநாள் ஆகட்டுமே” என்றாள்.

கெளரிக்கு என்னமோ சுல்லென ஏறியது “என்ன விடறது.. இன்னும் எத்தனைநாள் ஆகணும்.. ரெண்டுமாசம் பொறுமையாகதானே இருந்தேன். மதிச்சு ஒருவார்த்தை பேசினீயா.. எனக்கு புரியலை, எனக்கு மட்டும்தான் தேவையா இந்த மேரேஜ்.. உனக்கு ஏதும் தேவையில்லையா.. எனக்கு புரியலை.” என்றான்.

சஹா அமைதியாக இருந்தாள்.

கௌரிக்கு அந்த அமைதியை பொறுக்க முடியவில்லை “என்ன சைலென்ட்டா இருக்க” என்றான்.

சஹா “எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்.. இப்போது என்னால் பேச முடியாது. ப்ளீஸ்” என்றவள், அவனை பார்க்காமல்.. அமர்ந்திருந்த இடத்தில் தலையணையை நேராக சரி செய்துக் கொண்டு.. சுருண்டு படுத்தாள்.. கண்களை மூடிக் கொண்டாள் இறுக்கமாக.

 

Advertisement