Advertisement

கௌரி, அந்த புகைப்படத்தையே சற்று நேரம் பார்த்திருந்தான். என்ன நினைத்தானோ.. அவளுக்கு அழைத்தான் உடனே.

மித்ரனுக்கு, பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. சஹா, போர்ட்டிகோவில் அமர்ந்து. தண்ணீர் வழியும் சத்தம் கேட்டு.. மோட்டார் ஆஃப் செய்ய எழுந்து பின்பக்கம் சென்றாள். பெண்.

அப்போது, சஹாவின் போனில் அழைப்பு வந்தது. கௌரிதான் என தெரியாமல் அழைப்பை ஏற்ற மித்ரன் “ஹலோ..” என்றான், மழலையில்.

கெளரிக்கு, தன் அழைப்பு ஏற்கப்படவுமே சந்தோஷம். இப்போது மழலையின் குரல் கேட்கவும், சற்று வாடினாலும்.. பரவாயில்லை ‘இவனாவது நம்மை மதிக்கிறானே’ என தோன்றியது கெளரிக்கு. 

கௌரி “ஹலோ.. மித்ரன் எப்படி இருக்க, நான் சங்கர்.. கௌரி சங்கர்” என்றான்.

மித்ரன் ஹ..ஹா.. “சங்கர்.. நான் நல்லா இருக்கேன்” என்றவன் போனை காதிலிருந்து எடுத்து சுற்றிலும் பார்வையை திருப்பி பார்த்தான்.

அதற்குள் கௌரி “ஹேய் சோட்ட பாய்.. நீ என்ன பண்ற..” என கேட்டான்.

மித்ரனுக்கு, சஹா வருகிறாளா என பார்த்ததில்.. கௌரி கேட்டது காதில் விழவில்லை. எனவே, குழந்தை போனை எடுத்துக் கொண்டு ரூம் நோக்கி சென்றான்.. பின் “நீ..ங்க என்ன சொன்னீங்க” என்றான் மூச்சு வாங்க.

கௌரி “சோட்டா பாய் சொன்னேன். ஸ்கூல் போயிட்டு வந்தாச்சா” என்றான்.

மித்ரன் “ம்.. “ என்றான்.

கௌரி எதோ கேட்க வர. குழந்தையே பேசினான் “ம்.. ஒன்னு கேட்கனும்..” என்றான் பெரியமனிதனாக.

கௌரி “ம்.. ப்ளாஷர் கேளு..” என்றான் இலகுவான குரலில்.

மித்ரன் “நீ.. இல்ல, நீங்க.. மாம்.. நானு.. ஒண்ணா இருக்க போறோம் சொன்னாங்க அம்மா. ம்.. அப்படியா நீங்க என் ப்ரெண்டாக போறீங்க சொன்னாங்க..” என்றான்.

கௌரிக்கு இந்த கட்டத்தை எதிர்கொள்ளத்தான் அவளிடம் பேச வேண்டும்.. என்ன சொல்ல போற குழந்தையிடம் என கேட்ட்க வேண்டும் என எண்ணியிருந்தான். இப்போது.. ‘பிரென்ட்ன்னு சொல்லியிருக்கா.. ஓகே.. ம்.. நல்லாத்தான் இருக்கு. ஆனால், அதென்ன ஒண்ணா இருக்க போறோம்.. மேரேஜ் அப்படின்னாலே குழந்தைக்கு புரியுமே..’ என எண்ணிக் கொண்டவன்.. “நானும் ஒன்னு சொல்லணும் சொல்லவா..” என்றான் குழந்தையிடம்.

மித்ரன் “ம்ம்.. என்ன..” என்றான்.

கௌரி நிதானமான குரலில் “ம்.. நானும் உன் மாம்.. அம்மாவும் மேரேஜ் செய்துக்க போறோம். அப்போ, நாம எல்லாம் ஒரே வீட்டில்தானே இருக்கணும்” என்றான்.

மித்ரன் “ஹேய்.. ம்.. கல்யாணமா” என்றான் அதிர்ச்சியாய்.

அதற்குள் மித்ரனை சஹா அழைக்கும் சத்தம் கேட்டது. மித்ரன் “சஹா கூப்பிடுறா” என்றான்.

கௌரி “என்கிட்டே பேசிட்டு வரேன்னு சொல்லு..” என்றான்.

மித்ரன் “மாம் திட்டினால்.. ஹோம் வொர்க் செய்யும் போது.. போன் பார்த்தால் திட்டுவா..” என்றான்.

கௌரி “சரிதான். இப்போ சொல்லு.. ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என தைரியம் கொடுத்தான்.

சஹா, குழந்தையை தேடி அறைக்கே வந்துவிட்டிருந்தாள்.. கையில் போனை பார்க்கவும் சஹா “படிக்கும் போது கேம்ஸ் விளையாட கூடாது சொல்லியிருக்கேன்” என சொல்லி போனை வாங்க பார்க்க.

மித்ரன் போன் வைத்திருந்த கையை பின்னால் மறைத்துக் கொண்டு “சங்கர் அங்கிள் கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.. ம்..” என சொல்லி போனை காதில் வைத்தான்.

கெளரிக்கு, குழந்தை பேசியது காதில் விழ.. புன்னகைதான் தோன்றியது. கௌரி “அங்கிள் இல்ல.. சங்கர் மட்டும்தான்” என்றான்.

எதோ பேசும் சத்ஹ்டம் கேட்டு.. மித்ரன் போனை காதில் வைத்து “ம்.. என்ன” என்றான். கௌரி தான் சொன்னதையே திரும்ப சொன்னான்.

அதையே மித்ரன்  “அங்கிள் இல்லை. சங்கர் மட்டும்தான்” என திரும்ப படித்தான்.

அதை கேட்டு, கௌரி சிரித்தான். சஹாவிற்கும் சிரிப்புதான். ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை.

மித்ரன் இப்போது “ஏன் சிரிக்கிறீங்க” என்றான், அன்னை முறைக்கவும்.

அதற்குள் சஹாவிற்கும் சின்ன புன்னகை தோன்றியது முகத்தில்.. இருந்தும் “போதும் அப்புறம் பேசலாம்” என்றாள்.

கௌரி “டூ மினிட்ஸ்தான்ன்னு சொல்லு” என்றான்.

மித்ரன் “டூ மினிட்ஸ்தான்” என்றான் போனில் கவனமாகி.. சஹாவை பார்க்காமல்.

சஹா ஏதும் சொல்லாமல், அறையின் உள் வந்தாள்.. அவனின் விளையாட்டு பொருட்களை ஒதுங்க வைக்க தொடங்கினாள். 

மித்ரன் என்ன பேசுவது என மறந்து போயிருந்தான் இப்போது. அதனால் “நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்” என்றான்.

கெளரிக்கு உண்மையாகவே இவன் பிரிலியன்ட் எனத்தான் தோன்றியது. எனவே, பணிந்த குரலில் “மித்ரன், நானும் சஹாவும் கல்யாணம் செய்துக்க போறோம்.. அப்புறம் நாம் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்க போறோம்” என்றான்.

மித்ரன் “எங்க இருப்போம்..” என்றான்.

கௌரி “பெங்களூர்’லதான்.. இங்கேயே பக்கத்தில் ஸ்கூல் இருக்கே..” என்றான்.

மித்ரன்க்கு கண்கள் கனவில் விரிந்தது “எப்போ மேரேஜ்..” என்றான்.

கௌரி “ம்..” என தேதியை சொன்னான்.

மித்ரன் உடனே “மாம்.. மேரேஜ்க்கு எத்தனை டேய்ஸ் இருக்கு” என்றான்.. அவனுக்கு, தேதி தெரியவில்லை.. எனவே, நாட்கள் கணக்கில் கேட்டான்.

சஹா முறைத்தாள்.

மித்ரன் அமைதியாகிட்டான்.

கெளரிக்கு, அவள் அங்கேதான் இருக்கிறாளா என் தோன்ற “ட்வென்டி டேய்ஸ் இருக்கு.. உங்க அம்மா முறைக்கிறாளா..” என்றான் சின்ன குரலில்.

மித்ரனும் சஹாவையே பார்த்துக் கொண்டு.. போனில் பேசுமிடத்தில்.. வாய்க்கும் போனுக்கும் பாலமாக கையை வைத்துக்கொண்டு “ம்.. டென்ஷன் ஆகுறா..” என்றான்.

சஹாவிற்கு குழந்தையின் செய்கைகள் அத்தனையும் ஆச்சர்யமாக இருந்தது. அப்படியே பார்க்க..

கௌரி இப்போது மித்ரனிடம் “ஸ்பீக்கரில் போடு” என்றான்.

மித்ரன் போனை பார்த்து ஸ்பீக்கர் ஆன் செய்தான்.

கௌரி “சோட்டா பாய்.. நாம தினமும் இந்த நேரம்.. ம்.. 7க்கு பேசலாம். நீ அதுக்குள் ஹோம் வொர்க் முடிச்சிடு.. நான் பிசியாக இருந்தாலும்.. நீ கூப்பீடு.. ம்.. உங்க அம்மா என் நம்பர் சேவ் செய்திருக்காளா..” என்றான்.

மித்ரன்க்கு என்ன புரிந்ததோ  “ம்… “ என்றான்.

கௌரி “அப்போ ஸ்டார்டிங் லெட்டர் பார்த்து.. கூப்பிடு.. நானே கூப்பிடுவேன். ம்.. நாம பேசுவோம்.. உனக்கு ஓகேதானே.” என்றான். 

மித்ரன் சஹாவை பார்த்துக் கொண்டே “ம்.. ஓகே” என்றான்.

கௌரி “பை..ய்.. பேபி.. உங்க அம்மாக்கும் பை சொல்லிடு..” என விடைபெற்று அழைப்பை துண்டித்தான்.

சஹா, கையை கட்டிக் கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மித்ரன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.. வெளியே ஓடி வந்தான்.. நேராக பாட்டியிடம் சென்றான் “பாட்டி, நான் சங்கர் கிட்ட பேசினேன்..” என கதை படிக்க தொடங்கினான் குழந்தை.

தினமும் இப்படிதான் தொடர்ந்தது. கௌரியும் மித்ரனும் பேச தொடங்கிவிட்டனர். ஆனால், கல் மனமாகி போனது சாகம்பரிக்கு. தினமும் கௌரி அழைத்தாலும், ஒரு தரம் கூட அவனின் அழைப்பை ஏற்கவில்லை பெண். பேசவில்லை அவனிடம்.

கடகடவென நாட்கள் கரைந்தது.

திருமணநாளும் அழகாக விடிந்தது. 

காலையிலிருந்து கண்ணில் நீர் நிறைந்து நிற்கிறது சஹாவிற்கு. நேற்று அவனோடு நிச்சயம் முடிந்த போது கூட ஏதும் தெரியவில்லை. ‘எப்படியும் திருமணம் என ஒன்று இவனோடுதான்’ என தெரிந்ததால் உறுதியாக இருந்தாள். 

இப்போது, காலையில் அவளுக்கு அலங்காரம் நடக்க நடக்க.. எதோ சொல்ல முடியாத தவிப்பு.. விக்ரம் வந்து நின்றான் கண்முன்.. ‘இந்த அன்பு நேசம் என்பதெல்லாம் பொய்.. அதெல்லாம் இல்லை இந்த உலகத்தில்.. அப்படி ஒன்று இருந்திருந்தால்.. அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத இவனை எனக்கு கொடுப்பாரா கடவுள்..’ என திட்டிக் கொண்டே கண்கலங்க.. புடவையை கட்டிக் கொண்டிருந்தாள் பெண்.

அங்கே கெளரிக்கோ முற்றிலும் வேறு மனநிலை.. ‘இந்த அன்பு பாசம்.. காதல் தியாகம் இதெல்லாம்தான் உண்மை. அதனால்தான் இந்த உலகம் இன்னும் சுழலுகிறது.. ம்.. என்னையும் என் தனிமையையும்  விரட்ட இரு ஜீவன்கள்.. இனி எங்களுக்கான கூடு.. நன்றி ஆண்டவா’ என எண்ணிக் கொண்டே பட்டு வேட்டி அணிந்து.. தாமரைமாலை அணிந்துக் கொண்டு.. உச்சி குடுமியோடு.. வந்து நின்றான் மணமேடைக்கு.

நேரம் கடந்தது.. நேற்று போல.. அவனருகில் வந்து நின்றனர் இருவரும்.. ம்.. கெளரியின் இடது பக்கம் சாகம்பரியும்.. வலது பக்கம் மித்ரனும் வந்து நின்றனர். 

குழந்தை அழகான பட்டு வேட்டி சட்டையில் இருந்தான்.. கையில் கெளரியின் போன் வைத்திருந்தான். இருவரும் அமர்ந்ததும் “மாம்.. பாருங்க” என சொல்லி நடுவில் நின்று போட்டோ எடுக்க முயன்றான்.

கௌரி சிரித்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தான்.. சஹாவும் அப்படியே. போட்டோக்ராப்பர் உதவியுடன், மித்ரன் இருவரையும் மணமேடையில் புகைப்படம் எடுத்தான்.

அடுத்து, மாங்கள்யதாரணம்.. கெட்டி மேளசத்தத்துடன்.. மித்ரனின் புன்னகையோடும் இனிதாக நடந்தது. சாகம்பரி, கண்ணில் நீர் கசிய ‘எனக்கு தைரியத்தை கொடு.. இவனை கையாள..’ என எண்ணிக் கொண்டே கெளரிசங்கரின் வாழ்வில் நுழைந்தாள் பெண்

கெளரிசங்கர் ‘பெரிதாக ஏதும் வேண்டாம்.. என்னுடன் இனைந்து.. கை கோர்க்கும் நெருக்கத்தில் எப்போதும் எங்களை வைத்திரு ஆண்டவா’ என எண்ணிக் கொண்டே அவளின் வாழ்வில் நுழைந்தான், சஹாயன்.

Advertisement