Advertisement

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

13

சுகுமாரி “கௌரி, இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம்.. நாள் பார்த்தாச்சு” என சொல்லிக் கொண்டேதான் வீட்டினுள் வந்தார் அவனின் அன்னை.

அதன்பின் அங்கு நடந்தவைகளை எல்லாம் கெளரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார், சுகுமாரி. 

ரத்தினம், எப்போதும் போல.. தோட்டம் சென்றுவிட்டார்.

கெளரிக்கு, ‘சஹாவின் பயம்.. அவளின் முகமே சரியில்லை..’ என அன்னை சொல்லவும்.. கெளரியின் முகமும் வாடித்தான் போனது. எனவேதான், இரவில் அவளிடம் பேசுவதற்காக ஒரு செய்தியை அனுப்பினான்.

ஆனால், அதற்கும் பதில் வரவில்லை அவளிடமிருந்து.. எனவே, அவனின் சிந்தனை தறிகெட்டு பறந்தது. தன்னுடைய பழைய நினைவில் கொஞ்சம் கலங்கி போனான். 

இரவில் சரியாக உறங்குவதில்லை… ‘திருமணம் என்பது, என் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளும்.. உண்மையான அன்பை தராது. தீராத கடமை, பொறுப்பில்.. நம்மை நிறுத்திவிடும்’ எனத்தான் அவனின் எண்ணமாக இருந்தது இத்தனை வருடங்களும். அதனாலோ என்னமோ லிவிங் டுகெதர் என்பதில் நாட்டம் கொண்டான்.

‘இது சரி.. இப்படிதான் வாழ வேண்டும்’ என யாரும் யாருக்கும் சட்டம் இயற்ற முடியாதே. அதனால், கெளரியை பொறுத்தவரை.. அவனின் கடந்தகாலம் குறித்து அவனுக்கு எந்த வருத்தமும் இதுவரை இருந்ததில்லை. ம்.. இது என் வாழ்க்கைமுறை.. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால்.. என் முறையை நான் மாற்ற முடியாது என எண்ணம் கொண்டவன். ஆனால், இப்போது அதே முறை.. அவனை யோசிக்க வைத்தது, சாகம்பரியின் அமைதியின் விளைவாள். 

ஆனாலும் ‘நான் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு செய்யவில்லை’ என தனக்குதானே சொல்லிக் கொள்கிறான். அப்படி இருந்தும், இப்போதும் ‘என்னால் ஒரு பெண்ணை பார்க்காமல்.. பேசாமல் இருக்க முடியவில்லையே..’ என இருபக்கமும் யோசித்து திண்டாடியே அடுத்து வந்த நான்கு நாட்களை கடத்தினான், கௌரி.

சுகுமாரி அடிக்கடி “என்ன, நம்பர் கொடுத்தேனே.. சஹாகிட்ட பேசினியா..” கேட்டுக் கொண்டே இருப்பார், மகனை கண்ணில் பார்க்கும் போதெல்லாம்.

கௌரி “இல்ல.. பேசணும்..” என ஏதேனும் சொல்லி சாகம்பரியிடம் எப்படி பேசுவது என எண்ணிக் கொண்டே இருந்தான்.

நாளை விடுமுறை முடிந்து ஊர் கிளம்ப வேண்டும்.. எனவே, அவளை சென்று பார்த்திட வேண்டும் என எண்ணிக் கொண்டே இருந்தான், கெளரிசங்கர்.

‘எப்படி’ என தெரியவில்லை. யோசனையோடு மதிய உணவை முடித்துக் கொண்டு.. காரெடுத்து கிளம்பினான்.. மித்ரனின் பள்ளி நோக்கி. எப்போது ஸ்கூல் விடுவார்கள் என்ற நேர கணக்கெல்லாம் ஓரளவுக்கு தெரிந்திருந்தது. எனவே, அன்று போல ஒரு மரத்தடியில் கார் நிறுத்து நின்றுக் கொண்டான் கெளரிசங்கரர்.

நீண்ட நேரம் சென்று.. சாகம்பரி வந்து சேர்ந்தாள். தனது டூ வ்ஹீலர் நிறுத்தி, அருகில் நின்றிந்த தோழிகளோடு பேசத் தொடங்கிவிட்டாள் பெண். 

எனவே, கௌரி காரிலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தான் ‘எப்படி அவளின் அருகே செல்லுவது.. எல்லோரும் நிற்கிறார்களே’ என பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஸ்கூல் கேட் திறக்கவும்.. எல்லா பெற்றோரும் உள்ளே சென்று.. KG பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வெளியே வர தொடங்கினர். பத்துநிமிடம் சென்று சஹாவும் மித்ரனும் வெளியே வந்தனர்.

கௌரி இப்போது சஹாவின் வண்டியின் அருகே சென்று நின்றுக் கொண்டான். மனதில் ‘அவள் எப்படி என்னை பார்க்கறான்னு பார்க்கணும்.. ‘ என எண்ணிக் கொண்டே நின்றிருந்தான். 

கெளரியை, முதலில் பார்த்து மித்ரன்தான். கெளரியை பார்த்த குழந்தை திருதிருவென விழித்துக் கொண்டே.. “மாம்.. உன் வண்டி இன்னிக்கு ரிப்பேரா..” என்றான்.

சஹா, அனிச்சையாய் வண்டியை பார்த்தபடி “இல்லையே..” என சொல்லி, அங்கே நின்றிருந்த கெளரியை பார்த்ததும்.. அதிர்ந்தது அவள் விழிகள். அதைமறைக்க.. சட்டென விழிகளை மூடித்திறந்தாள்.. பின் நிதானம் கொண்டது.. அவள் உடல்மொழி. ஷன நேரத்தில் உதடுகளை மூடி திறந்தவள்.. தயக்கமான புன்னகையோடு இரண்டுமுறை கண்சிமிட்டி.. “ஹாய்” என சொல்லி வண்டியின் அருகே வந்து நின்றாள்.

கௌரி இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ப்பா பேரழகி தான்.. எந்த மேக்கமும் இல்லை.. ஆனாலும் வில்லென்ற புருவம்.. என்னை இருக்கிறது. சந்தனநிறம்.. தாண்டி.. இப்போது முகம் ரோஜா வண்ணம் கொண்டுவிட்டது.. ‘இவளை எப்படி என்னால் பாக்காமல் இருக்க முடியும்’ என தன்னையே கேட்டுக் கொண்டான்.

பின்தான் சுதாரிப்பு வந்தது அவனுக்கு.. ‘திட்டும் நிலையில் இல்லை.. பார்க்காமல், திருப்பிக் கொண்டு செல்ல மாட்டாள்’ என கணித்தவன்.. “ஹாய்.. எப்படி இருக்கீங்க” என்றான், அவளின் கண்களை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டு.

சஹா “ம்..” என சொல்லி, கீழே குனிந்துக் கொண்டாள் சட்டென.

கௌரி அவளை சங்கடப்படுத்தாமல் “ஹாய் மித்ரன்..” என்றான்.

மித்ரன் “ஹைய்” என்றான் குழந்தை.. பின் தன் சஹாவின் கையை பிடித்துக் கொண்டு.. அவளின் முகத்தை பார்க்க தொடங்கிவிட்டான்.

கெளரிக்கு, சஹா பேசாதது சங்கடமாக இருந்தது.  அவள் ஏதேனும் பேசுவாளா என அவளை பார்த்தான்.

சாகம்பரியும் “எப்படி இருக்கீங்க..” என்றாள்.

கௌரி புன்னகை செய்யாமல் “குட்..” என்றவன் “மித்ரனை பார்க்கலாம்ன்னு வந்தேன்” என்றான்.. ஆழமாக அவளையே பார்த்துக் கொண்டு.

எதிரே நிற்பவளுக்கு தெரியாதா அவன் எதற்கு வந்தான் என. எனவே, ஒன்றும் சொல்லாமல்.. சஹா “ம்.. அவன்கிட்ட சரியாக எதுவும் சொல்லல” என்றாள் சின்ன குரலில்.

கெளரிக்கு அவள் வேகமாகவும்.. சத்தமில்லாமலும் பேசியது கேட்கவில்லை எனவே, “என்ன” என்றான்.

சஹா, லேசாக கழுத்தை நிமிர்த்தி.. அவனின் அருகில் சாய்ந்து “இன்னும் சரியா ஏதும் சொல்லல.. பார்த்து” என விழிவிரித்து.. கவனமாக பேசும்படி எச்சரித்தாள் பெண்.

கெளரிக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. சட்டென அவனின் முகம் இலகு தன்மைக்கு மாறியது போல.. இதமாக “ம்.. சரி..” என்றான்.

இவர்கள் இருவரும் எதோ ரகசியம் பேசுகிறார்கள் என திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே.. காலால் மண்ணை எத்திக் கொண்டே பார்த்திருந்தான் குழந்தை.

கௌரி “மித்ரன், என் பேரு.. கெளரிசங்கர்.. தெரியும்தானே..” என்றான்.

மித்ரன் மண்ணை பார்த்து விளையாடிக் கொண்டே.. “ம்.. “ என சொல்லிய குழந்தை “ஏன் கேர்ள் நேம் வைச்சிருக்கீங்க” என்றான், எதார்த்தமாக.

சாகம்பரி “டேய்..” என்றாள்.

கௌரி அலட்டாமல் “ஆமாம் டா.. எனக்கும் தெரியலை. ரொம்பநாள் டவுட் எனக்கும். நீ சங்கர்ன்னு கூப்பிடு.. அது பாய் நேம் தானே. ” என்றான்.

மித்ரன் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல்.. “மாம் போலாமா” என்றான்.

கௌரி, சஹாவை பார்த்தான். பெண்ணவளுக்கும்.. என்ன சொல்லுவது என தெரியவில்லை. வண்டியில் சாவியை செலுத்தினாள்.

கெளரிக்கு, என்னமோ போலானது.. ‘அதென்ன பேச வந்திருக்கிறேன் என தெரியுது.. இவளும் போனில் பேசமாட்டாள்.. நானாக வந்தாலும் பேசமாட்டாள்.. என்னதான் செய்வது..’ என அப்படியே அமர்த்தலாக பார்த்துக் கொண்டு நின்றான். 

ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால். அப்படியே வண்டியை பின்னில் நகர்ந்த்தினாள்.. 

மித்ரன் “பை..” என கெளரியை பார்த்து கையசைத்தான்.

சஹா, ஓர கண்ணால்.. அவனை பார்த்துக் கொண்டே வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.

கெளரிசங்கருக்கு, கடுப்பாக இருந்தது.. ஆனாலும், நின்றான் மரம்போல, அவள் செல்லுவதை பார்த்துக் கொண்டு. ‘வலிக்கிறது, அவளின் பாராமுகம்.. ஆனாலும், ஓரகண்ணால் என்னைத்தானே பார்த்தாள்.. என்னைத்தானே மணக்கிறேன் என சொல்லியிருக்கிறாள்.. எங்கே போக போகிறாள்..’ என உள்ளுக்குள் ஒருமின்னல் வெட்டுகிறது. அமைதியாக கார் நோக்கி நடந்தான்.

அவ்வளவுதான் அவர்களின் சந்திப்பு.

கௌரி, அதன்பின் ஊருக்கு வரவில்லை. நிச்சயம் என தனியாக இல்லை. அதனால், கௌரியும் சஹாவும் சந்தித்துக் கொள்ளும் நிலையும் வரவில்லை. கெளரிக்கு, பேச வேண்டும் என ஆசைதான்.. அவளை தெரிந்துக் கொள்ள வேண்டும்.. என அலாதி ஆசைதான். ஆனால், அவனின் அழைப்பை ஏற்கவே இல்லை, சஹா. 

ஆனால், இந்த இரண்டு மாதத்தில் ஒருநாள் மித்ரன், கௌரி போனை  அட்டென் செய்து பேசினான். அன்று மித்ரன் பெரியமனிதனாகி இருந்தான்.

சஹாவிற்கு திருமணத்திற்கு என முகூர்த்தபட்டு எடுத்து இருந்தனர் இன்று. எனவே, அதற்கு தோதாக பட்டு ரவிக்கையை.. நல்ல கடையில் தைக்க கொடுத்து.. அதற்கடுத்து சிலபல புடவைகள்.. அதற்கு தேவையானவைகள் என வாங்கிக் கொண்டு வந்ததில்.. சஹா கொஞ்சம் டயர்டாக இருந்தாள். அதனால், இன்று தனபால்தான், மித்ரனை பள்ளியிலிருந்து அழைத்து வந்திருந்தார்.

மாலையில் வேலை முடித்து, கௌரி காரில் வரும் போது சுகுமாரி பேசினார் மகனிடம். என்ன ஷாப்பிங் செய்தோம்.. எப்படி உடைகளை எடுத்தோம்.. என சொல்லிக் கொண்டிருந்தார். அதன் புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.

வீடு வந்து சேர்ந்த கௌரி, அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகூர்த்த புடவையை.. தோளில் போட்டுக் கொண்டு அழகு பார்த்ததை.. அன்னை புகைப்படமாக எடுத்து அனுப்பி இருந்தார். கெளரிக்கு, அவளின் முக மலர்ச்சியே கண்ணில் தெரிந்தது. ‘அன்று பள்ளியில் பார்த்தது போல.. முகம் கடுகடுவென இல்லை.. புன்னகையில்தான் இருக்கிறது’ என எண்ணிக் கொண்டான் முதலில். என்னை பிடித்ததால் இந்த திருமணம் இல்லை.. ஆனால், கண்டிப்பாக என்னை பிடிக்கும்.. பிடிக்க வைக்க வேண்டும் என எண்ணி கொண்டான். ஆனால், ‘எப்படி’ என யோசிக்க.. அவளை பற்றி ஏதும் பிடிபடவில்லை அவனுக்கு. 

Advertisement