Advertisement

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

2

அந்த அறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார் ஐம்பது வயதை கடந்த பெண்மணி. அருகில் இறைந்து கிடந்தது போட்டோஸ்.. சேரில் அவரின் விரல்கள்.. இன்னமும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

இவர் சுகுமாரி. ராஜரத்தினத்தின் மனைவி. மெல்லிய காட்டான் சுடிதார்.. கருப்பும் வெள்ளையும் மின்னிய முடியை பின்னலிட்டுக் கொண்டு.. கருகுமணியும் தங்கமும் கோர்த்த காத்ரமான தாலி செயின் அணிந்துக் கொண்டு.. நெற்றியில் சிவப்பு நிற குங்குமம் பளீச்சென தெரிய.. இன்னமும் காலையில் நடந்த பேச்சு வாரத்தையின் தாக்கத்தில் அமர்ந்திருந்தார்.

சாகம்பரி “ஆன்ட்டி.. சுகு ஆன்ட்டி..” என அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

சுகுமாரி “ம்.. வா சஹா, அங்கிள் உனக்கு கூப்பிட்டுவிட்டாரா..” என்றார் இயல்பான வரவேற்பாக.. ஆனால், அந்த விரல்கள் இன்னமும் தந்தியடித்துக் கொண்டிருந்தது.

சாகம்பரி “இல்ல, எனக்குதான்.. உங்களை பார்க்கலைன்னா வேலை ஓடமாட்டேங்குது.. அதான் வந்தேன்..” என லேசாக புன்னகைத்தவள்.. “போட்டோஸ் பார்க்குறீங்களா.. யாரோடது..” என கேட்டுக் கொண்டே கீழே இருப்பதை அடுக்க தொடங்கினாள்.

சுகுமாரிக்கு தெரியும் இவள் பொய் சொல்லுகிறாள் என, ஆனாலும்.. வந்த பெண்ணிடம் என்ன பேசுவது.. அதனால், அவளின் கேள்விக்கு பதில் சொல்ல தொடங்கினார் “ம்.. அவன்தான், அந்த கருனை இல்லாதவனைதான்.. அவன்கிட்ட நேற்று நைட்டிலிருந்து பேசனும்ன்னு நினைச்சேன். உங்க அங்கிள்தான், அவன் இப்போ எப்படி இருப்பானோ தெரியாது காலையில் பேசலாம்ன்னு சொன்னார்.” என்றார் சின்ன குரலில்.

சாகம்பரி, போட்டோவை பார்த்துக் கொண்டே “ஆன்ட்டி, இது நீங்களா… எவ்வளோ அழகா இருக்கீங்க..” என்றாள்.

இப்போதுதான் அவரின் முகதத்தில் புன்னகையின் சாயல் தெரிய.. சாகம்பரி “நீங்க புடவையில் அழகா இருக்கீங்க..” என்றாள் அந்த புன்னகை சாயலை கண்டுக் கொண்டு.

சுகுமாரி “ம்.. உனக்கு தெரியுமா.. உன் அங்கிளும் அப்படிதான் சொல்லுவார்.. ஆனால், எனக்கு சமைக்கும் போது இந்த சல்வார்தான் ஈசியா இருக்கு. ம்.. என்ன பேச்சு சத்தம் கேட்குது, அஹ.. நீ வந்து எவ்வளோ நேரம் ஆகுது.. உனக்கு சாப்பிட ஏதாவது தரேன் வா..” என்றார் பரபரப்பாக.

சாகம்பரி “இருங்க ஆன்ட்டி, என்ன சொன்னார் உங்க பையன் பேசினாரா” என்றாள்.

சுகுமாரிக்கு கண்ணில் நீர் நிறைந்தது.. “அவன் இன்னமும் அந்த பெண் கூடத்தான் இருக்கான்.. கல்யாணம் செய்துக்கடான்னு சொல்றோம், இப்போவும் வேண்டாம்கிறான். அவங்க சித்தப்பா பெண்ணுக்கு மாப்பிள்ளை அமைஞ்சிடுச்சி.. திருப்பியும் சொந்தகாரங்க எல்லாம் என்கிட்டே கேட்ட போறாங்க.. எப்போ அவனுக்கு கல்யாணம்ன்னு.” என அவரின் கம்பீர தோற்றம்.. கலங்க தொடங்கியது.

சாகம்பரி “ஆன்ட்டி.. ஆன்ட்டி.. என்னை பாருங்க.. அழாதீங்க.. நீங்க ஏன் இன்னொரு குழந்தை பெத்துக்கல..” என்றாள். சம்மந்தமே இல்லாமல்.

சுகுமாரி, முயன்று கண்களை துடைத்துக் கொண்டு.. “எனக்கு தங்கலை.. என்ன செய்யறது.. இவனுக்கு பிறகு ரெண்டு அபாட் ஆகிடுச்சி.. ஏன் கேட்க்கிற” என்றார்.

சாகம்பரி “அப்போ, இவங்க யாரும் பேசலையா” என்றாள்.

சுகுமாரிக்கு, அவள் சொல்ல வருவது புரிகிறது.. எனவே கோவம் வந்தது இப்போது “அ..அது அதுக்கு எதுக்கு நான் கவலை படனும், அது என்னை மீறிய விஷயம். ஆனால், இ..வன் அப்படி இல்லையே.. எனக்கும் ஆசை இருக்காதா.. அவனும் கல்யாணம் குழந்தையின் வாழணும்ன்னு, அவன் விருப்படி பெண் இருக்கட்டும்.. நாங்க ஏதும் சொல்லல.. ஆனால், இப்படி இப்..படி, அவன் சுற்றுவது..” என அமைதியாகினார்.

சாகம்பரி “ஆன்ட்டி, உங்களுக்கு.. ஊர் வாய் அடைக்க.. உங்க பையனுக்கு கல்யாணம் ஆகணும்.. அதான் முக்கியமா, இல்ல, அவங்க விருப்பம் முக்கியமா” என்றாள்.

சுகுமாரி “நீ என்னை டிவிஸ்ட் பண்ணாத.. அவன் எப்படி இருக்கான் தெரியுமா.. நாங்க அவனை அப்படியா வளர்த்தோம்.. படிக்கும் வரை நல்லாத்தான் இருந்தான். எல்லாத்திலயும் டாப்.. எப்போதும் ஸ்கூல் ஃப்ர்ஸ்ட். வெளிநாடு போய் MS டிகிரி.. இப்போது பெரிய கம்பெனியில் வேலை.. வருஷத்தில் ரெண்டும்முறை அப்ரோட். எல்லாம் சரி, ஆனால், அவனின் தனிப்பட்ட வாழ்க்கை.. சசீ.. ச்சீ.. எனக்கே சொல்ல முடியலை.. என்னமோ லிவிங் டூ கேதர்.. நோ மேர்ரேஜ் ஐடியா’வாம்.. கேட்கவே காது கூசுது. நாங்க இங்க வந்து இரண்டு வருஷம் ஆகுது.. வந்து பார்த்தானா?. எவ்வளோ பாசமா இருப்பான் தெரியுமா?.. –அந்த ஊர் பொண்ணு என்னமோ செய்திட்டா..” என அழுதார்.

பின் அவரே தொடர்ந்து “அப்படி சொல்ல கூடாதுதான், ஆனால், கல்யாணம் செய்துக்கட்டுமே.. இதென்ன பாரீனா. குழந்தை பெத்துகட்டுமே.. நான் பார்த்துக்குவேனே.. இந்த சொத்து.. சொந்தம்.. எல்லாத்தையும் அனுபவிக்கட்டுமே. ராஜாவாட்டம் இருக்கலாமே.. இதென்ன பொறுப்பில்லாமல்.. கடமை தட்டி கழிப்பது போல ஒரு லைப்.. ச்ச.. ச்சே.. என் கண்ணில் வேற எல்லாவற்றையும் பார்த்து.. அன்னிக்கு போனேன்.. வீடு.. வீடு இல்ல அது.. குடித்த பிராண்டி பாட்டில்.. அவனுக்கு ஈகுவலாக அவளும் ஊதுவால் போல.. அதான் புகை.. எதோ சின்ன சின்ன ஷார்ட்ஸ்.. டாப்.. நான் ஏன் பையன் தனியா இருக்கானே.. இவர் ரிடையர் ஆகிட்டாரே சமைச்சி போட்டு.. அவனை பார்த்துக்கலாம்ன்னு போனும்.. அவர் சொல்றா மாதிரி சொல்லிட்டு போயிருக்கனும். கொடுமை.. எல்லாத்தையும் கண்ணில் பார்த்துட்டு இன்னும் உயிரோட இருக்கேன்..” என தன் புலம்பலை ஆயிரமாவது முறையாக கொட்டினார் சாகம்பரியிடம்.

சாகம்பரி “நான் இப்படி சொல்றேன்னு கஷ்ட்ட படாதீங்க ஆன்ட்டி. நீங்க கவலை படபட உங்க உடம்புதான் கெடும்.. அவர் அவர், வாழ்க்கையை வாழ.. அவர் அவர்க்கு எல்லா உரிமையும் உண்டு. இதில் சரி தப்பு எல்லாம்.. ஏதுமில்லை. எல்லோருக்கும் ஒரே சரி.. ஒரே தவறு கிடையாது. அவர் அவர் கொள்கைகளுக்கு ஏற்ப.. சரி தவறுகள் மாறுபடும்.” என்றாள்.. அவரின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டு.

பின் அவளே தொடர்ந்து “நீங்க ஒன்னு பண்ணுங்க அவரை மன்னிச்சிடுங்க..” என்றாள்.

சுகுமாரி அப்படியே அவளை பார்க்க.

சாகம்பரி “ம்.. அவர் தப்பு செய்கிறார்ன்னு நீங்க நினைத்தாள்.. மன்னிச்சிடுங்க. தினமும் காலையில் எழுந்து உங்க பையன் பேர் சொல்லி.. டேய், உன்னை மன்னிச்சிட்டேன்.. போடா.. அப்படின்னு சொல்லுங்க. நீங்களும் அடுத்த ஒருவாரம் அவரை தொந்திரவு செய்யாமல் இருங்க.. பார்ப்போம். நீங்க கூல் ஆகுறீங்களான்னு.. ம்..” என்றாள் புன்னகை முகமாக.

சுகுமாரி “ம்.. இது தப்பில்லையா நீயே சொல்லு” என்றார்.

சாகம்பரி “ஆன்ட்டி.. விடுங்க ஆன்ட்டி..” என சிரித்தாள் லேசாக.

அவர் சிரிக்கவில்லை அமைதியாக இருந்தார்.. விரல்கள் நார்மலாக இருந்தது.. கண்கள் இப்போது அவளையே பார்த்தது.. குரலில் முன்பிருந்த படபடப்பு இல்லை.

சாகம்பரி “இன்னும் ஏதாவது சொல்லனுமா ஆன்ட்டி” என்றாள்.

சுகுமாரி “ம்.. இந்த கதையை உங்கிட்ட எத்தனை முறை சொல்லி இருப்பேன்.. எப்படி சலிக்காமல் கேட்டு, அமைதியா இருக்க..” என்றார் சாந்தமான குரலில்.

சாகம்பரி “அஹ.. இதிலென்ன இருக்கு ஆன்ட்டி, சக உயிருக்கு என்னால் முடிந்த ஆறுதல். வாங்க.. மித்ரன் வந்திருக்கான்.. உங்களை பார்த்தால் சந்தோஷப்படுவான்..” என வெளியே வந்தனர் இருவரும்.

இது இரு குடும்பத் தலைவர்களின் பிடிப்பு. ராஜரத்தினமும் தனபாலும்.. ஒன்றாக படித்தவர்கள். ராஜரத்தினம் பேங்க் வேலைக்கு சென்றார், அப்போது தன்னோடு வேலை பார்த்த கன்னட பெண் சுகுமாரியை மணமுடித்துக் கொண்டார். அதனால் பெற்றோருக்கு வருத்தம்.. கொஞ்ச வருடம் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தது. பின் கடித தொடர்பு.. போன் தொடர்பு எல்லாம் தன்பால் மூலமாகத்தான் ரத்தினத்திற்கு அந்த காலத்தில், பெற்றோர் பற்றி தெரிந்தது. எனவே, ரத்தினம் தனபால் நட்பு.. நீண்டகால நட்பு.. இப்போதும் தொடர்கிறது. பின், ரத்தினத்தின் குடும்பத்திற்குள் பிரச்சனை தீர்ந்து.. எல்லாம் சரியாகிற்று. அவ்வபோது ஊருக்கு வரும் போது, ரத்தினம் தனபால் சந்தித்துக் கொள்வர்.

இப்போத்துதான், தன் ஒய்வுகாலத்தை கழிக்க சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் ரத்தினம். எனவே, இவர்களின் நட்பு இப்போது இன்னும் இறுகியது. இந்த இரண்டு வருடத்தில். அடிக்கடி ரத்தினமும் சுகுமாரியும், தனபால் வீடு வருவர்.. இப்போது இந்த எட்டு.. ஆறு மாதமாகதான்.. அதிகம் வருவதில்லை. எனவே, சாகம்பரியிடம் தனி ப்ரியம் ரத்தினத்திற்கு. அதனால் அடிக்கடி அழைத்து பேசுவார். இப்படி வரவைத்து, தன் மனைவியின் தனிமையை போக்குவார்.. குழந்தையோடு விளையாடுவார். இதெல்லாம் இந்த நாட்களில் பழக்கம்தான்.

Advertisement