Advertisement

கெளரிசங்கர்.

அவனுக்கோ, நிலைகொள்ளா தவிப்பு. கோவம் என இல்லை.. ‘இவள் எப்படி என்னை கேட்க்கலாம். என்னை பற்றி என்ன தெரியும்.. அம்மா சொன்னால் எல்லாம் நம்பிடுவாளா.. அத்தோட.. அது முடிஞ்சி போனது. தவறுனாலும்.. அது இவளை பாதிக்க போகுதா.. நானாக இறங்கி வந்து அவளிடம் ப்ரொபோஸ் செய்ததால் அப்படி பேசினாளா.. தன் குழந்தை அல்லாத ஒரு குழந்தையை வளர்க்கிறவள் மனதில்..  ஏன் இத்தனை காரம். எப்படி வரும்.. ஒருவேளை அவள் அப்படித்தானோ..’ என தவிப்புதான் அவனிற்கு.

என்னமோ அவளை பாதகமாக யோசிக்க.. நினைக்க.. முடியவில்லை அவனால். தன் சிந்தனையை அவளிடமிருந்து தள்ளி நிறுத்த வேண்டும்.. இப்படி பேசுபவளை எப்படி திருமணம் செய்வது என தன்னையே நொந்துக் கொண்டான்தான். ஆனால், ‘இவளை பார்த்துதான் எனக்கு இந்த திருமண ஆசையே வந்தது. அவள், ஏன் அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளுகிறாள்.. தன் தேவையையும் விட்டு.. ம்.. அவள் எதோ தவம் போல அமைதியாக ஏற்று.. முகத்தில் எதோ ஒரு சாந்தத்தோடு செய்கிறாள்.. அதெல்லாம் பார்த்துதான் அவளை மணக்க எண்ணினேன். ஆனால், இப்படி அவள் பேசுவாள் என எனக்கு தெரியாதே. ஏன் அப்படி பேசினாள்.. நானென்ன அவ்வளவு பெரிய தப்பா செய்திருக்கிறேன்.. ம்.. இருக்குமோ.. நான் கொஞ்சம் அப்படிதான் இருகிறேன் போல.. அஹ.. அவள் பேசினாலும் தப்பில்லைதானே.’ என தனக்குதானே சொல்லியும் கொண்டான்.

அதனால் அவள் பேசியது வலித்தாலும்.. கௌரி சிரித்துக் கொண்டான். ‘இருக்கட்டுமே.. வலிக்கட்டுமே.. நான் அன்று பேசலையா?.. ‘குழந்தையோடு இருப்பவளும் திருமணம் என்றால் சமரசம் செய்துதான் ஆகவேண்டும்’ என சொல்லவில்லையா? வலித்திருக்குமே அவளுக்கும்.. ம்..’ என சிரித்துக் கொள்ள பழகிவிட்டான். இப்போது அடுத்து அவளிடம் பேசி பேசி புரியவைப்பது என்ற யோசனைக்கு வந்துவிட்டான்.

அடுத்த நான்கு நாட்களும்.. காலையில் எழுந்ததும் அவளின் எண்ணை போன் திரையில் பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பான்.. அழைக்க கொஞ்சம் தயக்கம்தான். ஆனாலும் அவ்வபோது தோன்றுகிறது அழைத்து பேச ‘இல்ல, இப்போவெல்லாம் அப்படி இல்ல நான்.. நீ என்னை நம்பலாம்.. உன்னை எப்போதும் தனியாக விடமாட்டேன்.. நீ நம்பலாம்’ என கதறியேனும் அவளை தனக்காக என தக்க வைக்க தோன்றுகிறதுதான். ஆனாலும், அவளிடம் பேச அதே அளவு தயக்கமும்.. வந்து நிற்கிறது அவனிடம். ‘ம்..அப்படி என்னை பற்றிதான் எல்லாம் தெரியும் என்கிறாளே.. நான் உன்னை நம்பமாட்டேன் என்கிறாளே’  என இறுதியில் வருத்தத்தில் முடிகிறது அவனின் தவிப்புகள் எல்லாம்.

கெளரிசங்கருக்கு, அடுத்த அடுத்தநாட்களில் வேலைகள் முடிந்தது. ஊர் கிளம்பும் வேலையில் இருந்தான். அந்த நேரத்தில்தான், அன்னைக்கு அழைத்தான் கௌரி. இந்தமுறை சுகுமாரி பேசவில்லை மகனின் அழைப்பை ஏற்று. ம்.. எங்கேனும், மகனிடம் உளறி விடுவோமோ என அமைதியாக இருந்துவிட்டார், கணவரின் சொல்லை கேட்டு, மகனிடம் பேசாமல் இருந்துவிட்டார்.

கெளரிக்கு பெரிதாக யோசிக்க தோன்றவில்லை ‘ஏன் பேசவில்லை அன்னை’ என. அதுதான் நான்குநாளில், வீடு போய்விடுவோமே.. அங்கே போய் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

கௌரிசங்கரும் பெங்களூர் நோக்கி தனது பயணத்தை தொடங்கினான்.

!@!@!@@!@!@!@@!@!@!

நாட்கள் கடக்க கடக்க.. சுகுமாரிக்கு பொறுமையே இல்லை. இரண்டாம் நாளே தனபாலை அழைத்து பேச தொடங்கிவிட்டார் சுகுமாரி. நான்காம் நாள்.. பிருந்தாவிடம் பேசத் தொடங்கிவிட்டார். அதற்கு அடுத்தநாள், நேரே சாகம்பரியை அழைத்துவிட்டார் சுகுமாரி. சஹா போனை வைத்துவிட்டு, மித்ரனோடு பள்ளிக்கு சென்றிருந்தாள். அதனால், அழைப்பை தனபால் ஏற்று பேசினார்.

சுகுமாரி “நீங்களா அண்ணா..” என்றார், வாடிய குரலில்.

தனபால் “ம்.. ஸ்கூல் போயிருக்கா ம்மா.. வந்ததும் கூப்பிட சொல்றேன்” என்றார்.

சுகுமாரி “ஏதாவது சொன்னாளா சஹா. கௌரி நைட் வந்திடுவான். அவன்கிட்ட நாங்க இனிதான் பேசணும். நான் நேரில் வரவா.. கலந்து பேசலாமா” என கிட்டத்தட்ட முடிவான நிலையில் சுகுமாரி பேச தொடங்கிவிட்டார்.

தனபால் “பொறுமையா இரும்மா.. நான் கேட்டுட்டு சொல்லிடுறேன்.. இன்னிக்கு மட்டும் பார்ப்போமே” என்றார்.

சுகுமாரி “சரி அண்ணா” என்றவர் சேர்வாகவே.. போனை வைத்தார்.

கெளரிசங்கர், அன்னூர் வர அடுத்த நான்குநாட்கள் எடுத்தது.

சுகுமாரி, தனபால் சொன்னது போல, அடுத்த இரண்டுநாளும் பொறுமையாகவே இருந்தார்.

பாவம் சாகம்பரிக்கு, இப்போது அன்னையின் பேச்சு, தந்தையின் அமைதி எல்லாம் ‘கெளரியை நீ திருமணம் செய்துக் கொள்ளலாம்..’ என்பதாகவே இருந்தது. அவளும் ஒருவாரத்தை அதிகபடியாக பேசவில்லை. தனபால்தான் பேசவில்லை.. திருமணம் குறித்து. ஆனால், அன்னை பிருந்தா..  மித்ரன் பள்ளிக்கு சென்றதும் ‘குழந்தையையும் பார்த்துக்கிறேன்னு சொல்றாங்க.. நீ கேட்ட மாதிரியான வாழ்க்கை.. உனக்கும் அவங்களை பிடிக்குமே.. இந்த இடத்தை விட்டுவிட்டால், இன்னும் எத்தனை நாள் காத்திருக்கனுமோ..’ என ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பார் அவ்வபோது.

சாகம்பரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

இப்போது பள்ளியில் மித்ரனை விட்டு வந்தாள் வீட்டிற்கு. தந்தை, மகளை பார்த்து “சஹா ம்மா.. சுகுமாரி ஆன்ட்டி கூப்பிட்டாங்க.. ஒருவாரத்திற்கு மேலே ஆகிடுச்சி.. நீ என்ன நினைக்கிற” என்றார்.

சஹாவிற்கு என்ன முடிவெடுப்பது என தெரியவில்லையே எனவே “அப்பா, உண்மையாகவே, எனக்கு என்ன முடிவெடுப்பதுன்னு தெரியலை.. நீங்க என்ன சொல்றீங்களோ.. அதை செய்கிறேன்.. மித்ரன் என்கூட இருப்பான் எப்போதும். அதுமட்டும்தான் எனக்கு முக்கியம்..” என்றாள் திடமாக. அன்று கௌரி பேசியது நினைவில் வந்தது.. ‘ம்.. நீ குழந்தையோடு இருந்தால்.. ஏதேனும் சமரசம் செய்துக் கொண்டால்தான் திருமணம் நடக்கும்’ என அவன் அன்று சொன்னது நினைவில் வந்தது. என்னமோ மனது இறுகிக் கொண்டது. திருமணம் எனும்போது எழும் வெட்கம்.. கனவு. என ஏதும் வரவில்லை அவளுக்கு. தந்தையிடம் பேசியவள்.. டைனிங் டேபிள் நோக்கி சென்றாள். 

பிருந்தா “மித்ரன் உன்கூடதான் இருப்பான். என்னாங்க.. ரொம்ப யோசிக்காதீங்க, சுகுமாரி அண்ணிகிட்ட பேசிடுங்க, அவங்க பையன்கிட்ட பேசனுமில்ல. நீங்க வேலையை தொடங்குங்க.. எதோ நல்ல நேரம் நமக்கு. இனி தாமதிக்க வேண்டாம்” என்றவர். பெண்ணின் அருகில் வந்தார் “இனி, எங்கள் கவலை தீர்ந்திடும் டா.. ரத்தினம் அண்ணா வீட்டில் உன்னை எல்லோரும் நல்லா பார்த்துப்பாங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு.. ம்..“ என்றவர் பூஜை அறைக்கு சென்றுவிட்டார்.

தனபால் மகளின் அருகில் வந்தார்.. “என்ன டா,   யாரு என்னான்னு தெரியாதப்ப  கூட.. நீ இவ்வளவு யோசிக்கலையே டா.. ஏன் தெரிஞ்ச்ச குடும்பம்.. நான் சொல்றேன்.. கௌரி இனி தப்பாக நடக்கமாட்டான்னு அப்பவும் நீ இன்னும் தெளியாமல் இருக்கியே டா” என்றார்.

சாகம்பரி “தெரியலை ப்பா.. அவங்களை எனக்கு தெரியும் என்பதால் எதோ கொஞ்சம் பயமாக இருக்குன்னு நினைக்கிறேன். ம்.. அப்பா, அவங்க சம்மதம் முக்கியம். இதெல்லாம் ஆன்ட்டியும் அங்கிளும்தானே.. ப்ரோசீட் பண்ணாங்க.. ம்.. கேட்டுக்கோங்க” என்றாள்.

தனபால் பெண்ணை பார்த்துக் கொண்டே இருந்தார்.

சஹாக்கு என்னமோ போலிருந்தது.. “அப்பா, எனக்கு முடிவெடுக்கதான் தெரியலை. போனதரம் சொன்னது போல.. யாராக இருந்தாலும் சரிதான். ம்..” என புன்னகைத்தாள் பெண்.

தந்தை ஏதும் அடுத்து கேட்கவில்லை “சாப்பிடு டா..” என்றார்.

சஹா, தனக்கு தானே பரிமாறிக் கொண்டு உண்ணத் தொடங்கினாள். 

சஹா “ப்பா.. ஏன்? பார்த்துட்டே இருக்கீங்க..” என்றாள்.

தனபால் “உன் நல்ல மனசுக்கு.. எல்லாமே நல்லதாக நடக்கணும் வேண்டிட்டு இருக்கேன்” என்றார்.

சஹா, தன் தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். இருவரும் அமைதியாகினர்.

சாகம்பரி, உண்டு முடித்து.. இன்று ஆட்கள் தோட்டத்தில் களைஎடுக்க வந்திருந்தனர்.. எனவே, அங்கு சென்றுவிட்டாள்.

தனபால் பிருந்தா இருவரும்.. அங்கே ரத்தினத்தின் வீட்டிற்கு சென்றனர் பேசுவதற்கு.

மதியம் சஹா வந்தபோது கூட பெற்றோர் வந்திருக்கவில்லை. சஹாவே உண்டு முடித்து.. சற்று நேரம் உறங்கி எழலாம்  என தனதறைக்கு சென்றாள்.

சஹாவின் மனதில் கெளரியிடம் அன்று பேசியது வந்து போனது.. ‘சாரி’ சொல்லிடு என அவளின் மூளை ஆலோசனை சொன்னது அவளுக்கு. ஆனால், அவளின் மனது கேட்கவில்லை ‘அவன்தான் சொன்னானே.. சமரசம் செய்துக்கனும்ன்னு.. அப்போ, நான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டது சமரசம்தான்னு புரியாதா என்ன? புரியும்.. நல்லா புரியும்.. நான் ஏதும் கேட்கமாட்டேன்’ என அவனின் எண்ணை பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டிருந்தாள்.

பெங்களூர் வந்த கெளரிக்கு, சரியாக அந்த நேரத்தில் என்ன தோன்றியதோ.. கௌரி அழைத்தான் அதே நேரத்தில் அவளுக்கு. சஹாவிற்கு ஒரு ஷனம் உடல் சிலிர்த்து அடங்கியது.

கெளரியின் அழைப்பை ஏற்கவில்லை அவள். ஒரு செய்தியை அனுப்பினாள் “சாரி..” என, ஒரு செய்தி அனுப்பினாள்.

பின் “நீங்க சொன்னது போல.. காம்பர்மைஸ் செய்துக் கொள்ள தயாராகிட்டேன். ம்.. ஆல் தி பெஸ்ட்.. ம்.. திரும்ப கூப்பிடாதீங்க. நான் கொஞ்சநாள் நிம்மதியாக இருக்கணும்.” என ஒரு செய்தியை அனுப்பிவிட்டாள்.

பாவம் கௌரி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.. அந்த செய்தியை பார்த்து. 

 

Advertisement