Advertisement

ரத்தினம் எழுந்து மனையாளின் அருகில் வந்தார்.

எல்லா சொந்தங்களும் அமைதியாகி, இவர்கள் முகத்தையே பார்த்தது. பிருந்தாவிற்கு, என்ன நடக்குமோ என பீதிதான்.

சுகுமாரி “அண்ணா, எங்கள் பையன் கெளரிக்கு உங்க பெண்ணை கொடுங்க.. கூடவே மித்ரனையும் நாங்க பார்த்துக்கிறோம். சாகம்பரியை ரொம்ப பிடிச்சி கேக்கிறோம். நாங்கள் எந்த பேதமும் காட்டாமல் குழந்தையையும் பார்த்துப்போம்.. என்ன சொல்றீங்க” என்றார்.

எல்லோரும் அமைதியாகினர். யாருக்கும் சட்டென ஏதும் பேசத் தோன்றவில்லை. ரத்தினம் “எனக்கு தெரியும்.. இதுவும் உங்களுக்கு அதிர்ச்சின்னு. ஆனாலும், யோசிச்சி நல்ல பதிலாக சொல்லுங்க” என பொதுவாக எல்லோரையும் பார்த்து கை கூப்பியவர்.. “சாகம்பரிகிட்ட, நல்லதோ கெட்டதோ.. நாம் முடிவெடுத்துவிட்டு அப்புறம் சொல்லிக்கலாம்.. அவசரப்பட வேண்டாம்.. ம்..” என்றவர் விடைபெறும் விதமாக மனைவியை கை கொடுத்து எழுப்பினார்.

சுகுமாரி “அண்ணி, பிருந்தா அண்ணி.. நம்பிக்கையோட போறேன்.. எனக்கு ஈவ்னிங் பதில் சொல்லிடுங்க..” என சந்தோஷமாக..  கொஞ்சம் மிரட்டலாக சொல்லி, விடைபெற்று சென்றார் சுகுமாரி.

அவர்கள் சென்றதும்.. மீண்டும் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டது.

பிருந்தா, கணவரையே பார்த்தார். தனபாலும் அப்படியேதான்.. ‘கூட்டத்தில் என்ன கேட்பது மனைவியிடம்’ என தெரியாமல் அமைதியாக பார்த்தார்.

பிருந்தா எல்லோரையும் உண்ண அழைத்தார். தன் மகளுக்கும் போன் செய்து அழைத்து “வீட்டுக்கு வாடி.. எங்க இருக்க” என புது தெம்போடு அதட்டினார்.

சஹாக்கு, தன் அன்னையின் பேச்சு.. கொஞ்சம் பயத்தை தர மித்ரனோடு வீடு வந்தாள்.

சொந்தங்கள் எல்லோரும் உண்டு கிளம்பியிருந்தனர். யாரும் பெரிதாக யோசனை என ஏதும் சொல்லவில்லை. கிளம்பிவிட்டனர்.

சஹா மித்ரன் இருவரும் வந்தனர். மித்ரனுக்கு உணவு கொடுத்து தானும் உண்டாள். வீடு அமைதியாகத்தான் இருந்தது.. ஆனால், வருத்தமாக களையிழந்து இருக்குமென எண்ணியவளுக்கு.. அப்படி ஏதும் தெரியவில்லை. மதிய நேரத்தில் அன்னையும் தந்தையும் தங்களின் அறையில் தனியே பேசிக் கொண்டிருந்தனர். 

அதுதான் அவளை உறுத்தியது. என்னவாக இருந்தாலும், பெற்றோர்கள் ஹாலில்தான் பேசுவர்.. அறையில் இரவு உறங்க மட்டுமே செல்லுவர்.. இப்படி தனியாக அவர்கள் பேசி இவள் பார்த்ததேயில்லை. எனவே ‘என்னமோ சீக்ரெட் இருக்கு’ என எண்ணிக் கொண்டாள். 

அப்படியே, தானும் மித்ரனோடு உறங்க முற்பட்டாள். ஆனால், உறக்கம் வரவில்லை.. மனமென்ன இயந்திரமா.. பழுதை சரிசெய்துவிட்டோம்.. சுவிட்ச் போடுவோம்.. ஓடும்.. என்பதற்கு. ஆழி பேரலையின் அத்தனை போராட்டத்தையும் கொண்ட.. நடு மையம் அன்றோ இந்த மனம். அமைதியாக தோன்றுகிறது. ஆனால், கண்களை மூடினால்.. ‘ஏன் வரலை.. என்னவாக இருக்கும்.. ஒ.. காதலாம்.. அப்படிதானே சித்தி பேசினார்.. அப்போ எதுக்கு, இன்னிக்கு பொண்ணு பார்க்க வரோம்ன்னு ஒத்துகிட்டாங்க.. பையனுக்கு தெரியாதா இருக்கும்..  நான் ஏன் எதிர்பார்க்கிறேன்.. ஆமாம்!.. நான் ஏன் அவர்களுக்கு சாதகமாக யோசிக்க வேண்டும். இன்னிக்குன்னு பார்த்து புடவையை வேற கட்டியிருக்கேன்..’ என எண்ண அலைகள் மோதி மோதி.. அவளின் மனதின் கரை உடைய காத்திருந்தது.

நல்லவேளை, அந்த நேரம்.. அவளின் அலைபேசியில் ஒரு அழைப்பு. வித்தியாசமான எண். எதோ வெளிநாட்டு அழைப்பு என எண்ணிக் கொண்டே, அழைப்பை ஏற்றாள், சஹா.

கௌரி “ஹாய் சாகம்பரி.. கௌரி பேசுகிறேன்” என்றான். 

தன் முழு பேரையும் கேட்த பெண்ணுக்கு ‘என் முழு பேரையும் சொல்லி அழைக்கும் ஜீவன் இப்போதிக்கு இவன் ஒருவன் மட்டுமே..’ என எண்ணம் வந்தது. ஆனாலும் ‘இவன் எதுக்கு இப்போ கூப்பிடுறான்’ என தோன்ற “ம்.. சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க.. என்னாச்சு, ஆன்ட்டி காலையில் வந்தாங்களே.. ” ‘அவங்க நல்லா இருக்காங்களே, இவன் எதுக்கு கூப்பிடுறான்’ என எண்ணம் அவளுக்கு. எனவே. பாதியில் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.  

கௌரி “அப்படியா.. ஓகே.. ஓகே.. நான் சும்மாதான் கூப்பிட்டேன். என்னமோ பேசணும் போல இருந்தது, அதான் கூப்பிட்டேன். உங்களை டிஸ்டர்ப் பண்ணலையே.. ம்..” என்றான் தயங்கிகே கொண்டே.. திணறிக் கொண்டு.

சஹாவிற்கு, இப்போது.. ஆன்ட்டி நிச்சயம் நின்றதை சொல்லியிருப்பார் என எண்ணிக் கொண்டாள்.

சஹாவிற்கு இப்போது சலிப்பாக இருந்தது “ஒ.. ஆன்ட்டி ஏதாவது சொன்னாங்களா” என்றாள்.

கௌரிக்கு, ‘அவளை பெண் பார்க்க வருகிறார்கள் என சொன்னது தெரியுமே எனவே “ம்.. சொன்னாங்க.. அதான், பேசலாம்ன்னு கூப்பிட்டேன்” என்றான் கொஞ்சம் திணறிக் கொண்டே.

சஹா “ம்.. என்ன பேச, நான், அவங்க யாருன்னு கூட கேட்க்காமல்.. கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னேன். ஆனால், எல்லாம் சொதப்பிடுச்சி, இனி நானே நேரில் போய் விசாரிக்கணும் போல..” என்றாள் வருத்தமான குரலில்.

கெளரியின் மூளை ‘என்ன நடக்குது அங்க’ என சுதாரித்துக் கொண்டது. கௌரி “என்னதான் ஆச்சு” என்றான்.

சஹா, மனம் தளர்ந்து இருந்தாலே.. மேலும், கௌரி முன்போல இல்லையே.. அவளுக்கு உதவினான்.. இலகுவாக. ‘என் அம்மாகிட்ட சொல்லேன்.. ‘ என தன் விஷயங்களை கூட சொல்லி இருந்தானே.. ‘ இப்படி எதோ ஒன்று அவளுள் பரவ.. “என்ன சொல்லணும், அவங்களுக்கு எதோ லவ் இருக்காம்.. இப்போ எல்லாம் கான்செல்.. யாரு கேட்டால் இந்த கல்யாணத்தை..” என சொல்லி அமைதியாகினாள்.

கெளரிக்கு முன்னும் பின்னும் யோசிக்க இரண்டு நிமிடம் ஆனது.. ‘ஆன்ட்டி காலையில் வந்தாங்க.. நானே போய் விசாரிக்கணும்..’ என கோர்த்துக் கொண்டான் அவளின் வார்த்திகளை.. சலிப்பை.. உணர்வுகளை.  இதமான புன்னகை வந்து அமர்ந்துக் கொண்டது.. கெளரிக்கு தன் மனது புரிய.. அமைதியானான்.

சஹா “ஹல்லோ.. நீங்க ஏன் அமைதியாக இருக்கீங்க” என்றாள் சலிப்பாக.

கௌரி “நீங்க ரொம்ப பீல் பண்ணீங்களா, அதான் சைலென்ட் ஆகிட்டேன்” என்றான்.

சஹா “அப்படி எல்லாம் இல்லை.. சரி நீங்க எப்படி இருக்கீங்க.. உங்க அம்மா உங்களுக்கு ஒகே சொல்லிட்டாங்களா” என்றாள்.

கௌரி சிரித்தான்.

சஹா “என்ன ஆச்சு” என்றாள்.

கௌரி “எனக்கு பொதுவா.. பேசத் தெரியாது, ஆனால், உங்ககிட்ட இதை இப்போவே பேசிடனும்ன்னு தோன்றுது. ம்.. எனக்கு என்னமோ எங்க அம்மா கல்யாணம் செய்துக்கன்னு சொல்லும் போதெல்லாம் அது ஒரு கமிட்மெண்டாகவே தோணும். ஆனால், அந்த கமிட்மென்ட் நீங்களகாவும் அந்த குட்டி பையானும் இருக்கும்ன்னா.. எனக்கு ஹாப்பி யா இருக்கும்ன்னு தோணுது.” என சொல்லி அமைதியானான்.

“சாய்கையில் தாங்க தேவை 

ஒருதோள் தானே..

தனிமரம் நானடி 

தோட்டமாய் நீயடி..

வாலிபத்தின் எல்லையில் 

வாசல் வந்த முல்லையே..

போகும் வரை போகலாம் 

என்ன பிழையே..”

பெண்ணவள் அவன் சொல்லுவதை க்ரகிக்கவே இரண்டு பெரிய நொடிகள் தேவையாக இருந்தது. ஏதும் பேச முடியவில்லை.. மனது இன்னும் குழம்பியது.. அவளின் எண்ண அலைகள் கரை தாண்டியது.. ம்.. தவறாகவே அவள் மனதில் அவன் பதிந்துள்ளான்.. எனவே, சட்டென ‘என்ன திமிர்..  என்னிடமே திருமணத்திற்கு கேட்க்கிறாய்.. ம்..’ என தோன்ற “உங்களுக்கு ஒன்னு தெரியுமா கௌரி.. உங்க அம்மாவும் நானும் பேசும் விஷயம் என்னான்னு தெரியுமா?” என்றாள் கேள்வியாக.

கௌரி “நான் என்ன கேட்க்கிறேன், நீ என்ன பேசற.. ம்.. அப்படி என்ன பேசுனீங்க ” என்றான் இதமாகவே.

சஹா வார்த்தை எனும் ஆயுதம் கொண்டு தாக்கினாள் ”அஹ அப்படி கேளுங்க. அந்த விஷயமே நீங்கள் தான். அதிலும், நீங்கள் இருந்த கோலம்.. கொண்ட காட்சி.. நடித்த நாடகம் எல்லாமே எனக்கு தெரியுமே கௌரி. அஹ, எந்த நேரத்தில் நீங்க எப்படி இருந்தீங்கன்னு எனக்கு எல்லாமே.. தெரியுமே. நான் ரொம்ப பாவம் கௌரி. இரண்டாம் தாரம் என்றால் கூட ஒரு நம்பிக்கை இருக்கும்.. ஆனால், உங்களை எதில் சேர்ப்பது.. ஆமாம் எப்படி நீங்க தைரியமா என்கிட்டே கேட்க்குறீங்க.. பா.. என்ன ஒரு தைரியம்.. தப்பு செய்தவங்க எல்லாம் இப்..படி” என அவள் எதோ சொல் வர.

கௌரிக்கு, எப்போதும் தன் கடந்தகாலத்தை பற்றி யார் சொன்னாலும் பிடிக்காது.. அது அன்னையே என்றாலும் கத்துவான், இப்போது “ச்சீ.. நிறுத்து. நான் என்ன தப்பு செய்தேன்.. தைரியம் வர.. அடுத்தவன் கிட்ட இருந்து எதையும் எடுக்கலை.. ஸ்டுப்பிட்.. என்னை பிடித்து.. ம்க்கும்.. ரொம்ப டீசண்டா பேசறேன் பார்த்துக்கோ.. ச்ச.. உன்னை எப்படி நினைச்சிருந்தேன்.. நீ மனத்தால்.. இவ்வளோ மோசமா.. ப்ளீஸ் சாகம்பரி, உன் வாயால் அப்படி பேசாத, இன்னமும் என்னால் நம்ப முடியலை. நீதான் இப்படி பேசினதுன்னு. கல்யாணம்ன்னா.. வெறும் செக்ஸ் மட்டும்தானா.. உன்னை பார்த்தப்புறம் தான், ஸாக்ரிப்பைஸ் எவ்வளோ வால்யூவ்வானதுன்னு எனக்கு அனலைஸ் ஆச்சு.. ஆனால், நீ மோசம்.. எப்படி யோசிக்கிற” என அவளை சாடினான்.  தன் குற்றத்தை ஞாயம் செய்து.

அஹ.. சாகம்பரி.. ஸ்தம்பித்து போனாள். ஏதும் பேச முடியவில்லை அவளால்.. ஏதேதோ திட்டினான் “நீ ஒரு பைத்தியம்.. எங்க அம்மா பேசறத கேட்டு, நீயும் தப்பாக யோசிக்கிற… எல்லாத்தையும். நான் போய் நீ வொர்த்ன்னு.. பீல் பண்ணேன் பாரு.. ஆனா, உனக்காய் இது தோனியிருக்காது. எங்க அம்மாதான் உன்னை இப்படி யோசிக்க வைச்சிருப்பாங்க” என அவளை என்ன என்னமோ பேசினான் காயப்படுத்தினான்.. சமாதானமும் செய்தான்.

அவள் ஒருவார்த்தை பேசவில்லை.

கௌரி “ஹலோ.. சாகம்பரி.. பேசு..” என இருமுறை அமைதியாக பொறுமையாக கேட்டான்.

பேசவில்லை அவள்.

அழைப்பை துண்டித்துவிட்டான். 

Advertisement