Advertisement

வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!

8

கெளரிசங்கர் அப்போது மாடி ஏறி சென்றவன்தான் அதன்பின் கீழே வரவேயில்லை. இப்போதே கீழே, மித்ரன் விளையாட தொடங்கினான்.. அவனுக்கு என இங்கே இரண்டு கார்கள் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு.. தோட்டம் வீடு.. என கையில் வைத்துக் கொண்டு சுற்றினான்.

சுகுமாரி, என்னமோ முன்பெல்லாம் மகனை பற்றி குறையாக சொல்லுபவர் இப்போது.. அதுவும் இன்று “கௌரி அப்படி படிப்பான்.. அவனுக்கு சாக்ஸ் தினமும் துவைக்கணும்.. முன்னாடி எல்லாம் மைசூர் அவ்வளோ குளிரும்.. ஆனாலும் ரெண்டு வேளையும் குளிப்பான். அவனுக்கு அவங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும்.. இப்போவெல்லாமும் அப்படிதான், தன் தப்பு புரியவும் அவர்கிட்ட பேச சங்கடப்பட்டு ஒதுங்கி போறான். .ம்..” என்றவர் சின்ன குரலில் சொன்னார் இப்போது, பின்  சுதாரித்து “நான் ரொம்ப பேசுறேனில்ல..” என்றார் வலுவிழந்த புன்னகையோடு.

சாகம்பரி டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.. “அப்படி இல்ல ஆன்ட்டி, நான் உங்க தெரபிஸ்ட்ன்னு நினைச்சிதானே சொல்றீங்க.. சரியாகிடும் ஆன்ட்டி..” என்றாள்.

சுகுமாரி “ஐயோ! அப்படி சொல்லாத சஹா.. நீ இங்க ஒருத்தி எப்போதும் ஞாபகத்தில் வை” என்றார் மற்ற எல்லாவற்றையும் விடுத்து, அதட்டலாக பெண்ணவளை மிரட்டினார்.

சஹா புன்னகைத்தாள்.

சுகுமாரி “சஹா, உண்மை.. நீ.. நீங்க இல்லையென்றால் நானும் அங்கிளிலும் என்னவாகியிருப்போம்னு சொல்லவே முடியாது..” என்றார்.

சஹா “ஆன்ட்டி, விடுங்க.. நான்.. இங்க ஒருத்திதான்” என்றாள் அவரை தேற்றும் விதமாக.

சுகுமாரி “அது.. அப்படி சொல்லு” என்றார். பேபி அக்கா சமைத்துக் கொண்டிருந்தார்.. ரத்தினமும் தனபாலும் வரவில்லை இன்னமும். 

சுகுமாரி, ஜூஸ் கொடுத்தார் மித்ரனுக்கும் சஹாவிற்கும். பேசிக் கொண்டே நேரம் சென்றது இருவருக்கும்.

மதியம் நேரம்.. சுகுமாரி கணவரை அழைத்தார். அவர்கள் வர இன்னும் இரண்டுமணி நேரம் ஆகும் என்றனர். சுகுமாரி “நீங்க எல்லோரும் சாப்பிடுங்க, அவங்க வர லேட் ஆகுமாம்” என விவரம் சொல்லினார்.

தன் மகனை போனில் அழைத்தார் உண்பதற்கு. 

மித்ரனை அழைத்து, உணவை ஊட்ட தொடங்கினாள் சஹா. பள்ளியில் அவனாகவே உண்ணுகிறான்.. என்ன சாப்பிடுகிறானோ என.. இப்படி நேரம் அமையும் போது உணவை ஊட்டி விடுவாள் சஹா. அப்படியே இப்போதும்.

மித்ரன் கதை கதையாக பேசினான்.. ‘மினுக்கி மாதிரி இன்ன நிறைய இருக்கு சஹா.. அப்போ அப்போ கத்துது..’ என்றான். ‘ரயில் பூச்சி பார்த்தேன்..’ என்றான்.

சுகுமாரியும் கதை கேட்டுக் கொண்டிருந்தார்.

மித்ரனுக்கு ஊட்டி முடிக்கவும்.. கௌரி உண்பதற்கு வரவும் சரியாக இருந்தது. மித்ரன் சோட்ட பீம் பார்க்க தொடங்கினான்.

பேபி அக்காவிற்கு உணவு கொடுத்து அனுப்பினர். அவர் இங்கே தோட்டத்து வீட்டில்தான் இருக்கிறார். எனவே, அவர் சென்றதும்.. இவர்கள் பேசியபடியே மூவரும் உண்ணத் தொடங்கினர்.

கௌரி ஏதும் பேசவில்லை.. அம்மாவும் அந்த பெண்ணும் பேசும் ஊர் கதையை காதில் வாங்கிக் கொண்டும்.. போனை பார்த்துக் கொண்டும் உண்டான்.

ஒருகட்டத்தில் கெளரிக்கு நினைவு வர.. “ம்மா, ஏன் ம்மா.. அந்த பையனுக்கு இவங்க அம்மா இல்லையா” என்றான், தன் கேள்வி அன்னையை நோக்கி இருந்தாலும், பார்வையும் சித்தமும் அவளை நோக்கித்தான் இருந்தது.

சஹா, சுகுமாரியை பார்த்தாள்.

சுகுமாரி “அது..” என தொடங்கி நடந்ததை சொல்லினார். முடிவில் “பாவம் குழந்தை.. இப்போதுதான் கொஞ்சம் தெளிந்திருந்தான், அப்படியும் அவனை பாட்டி வீட்டுக்கு கூட்டி போனாங்க.. அதில் அவனுக்கு முடியாமல் போச்சு. என்ன பண்றதுன்னே பெரியவங்க யாருக்கும் புரியலை. இப்போது இவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க.. எல்லோரும் பையனை ஹாஸ்ட்டலில் சேர்த்து பார்த்துக்கலாம்.. அதுதான் எங்களால் செய்ய முடியும் என்கின்றனர். இல்லை, டிவோர்ஸ் ஆனவங்க.. பிள்ளைகளோடு இருப்பவங்க.. எங்கள் பிள்ளைகளையும் சேர்த்து பார்த்துக்கோங்கனு சொல்றாங்க.. வயதும் ஜாஸ்தியா வருது. ஆனால், இவள் எனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்ன்னாலும் பாருங்க.. மித்ரன் என்னுடன்தான் இருப்பான் என பிடிவாதம்.. என்ன செய்யறது புரியலை..” என சொல்லிக் கொண்டிருக்க சஹா உண்டு முடித்து எழுந்து சென்றாள் கை கழுவ.

அவள் எழுந்து சென்றுவிட்டாள் என கண்டவன் “ம்.. சரிதானே.. ஏதாவது காம்ரமைஸ் ஆகித்தானே ஆகணும்” என்றான் தன் அன்னையிடம்.

சுகுமாரி “டேய்.. அவ சின்ன பொண்ணுடா.. பேசாத வாயை மூடு” என்றார் கோவமாக.

சஹா வந்துவிட்டாள், கௌரி பேசியதையும் கேட்டுவிட்டாள் “விடுங்க ஆன்ட்டி, மித்ரனுக்காக காம்ரமைஸ் பண்ணிப்பேன் ஆன்ட்டி. அவர் அதைதானே சொல்றார்.. அதுதானே எதார்த்தம். ஆனால், பயமாக இருக்கு..” என்றாள், தன் மனதில் உள்ளதை.. இதுவரையில் சொல்லாததை சொல்லினாள் பெண்..

சுகுமாரி “சும்மா இரு.. உனக்கு அந்த கஷ்ட்டம் வர நாங்க யாரும் விடமாட்டோம். உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்.. நீ யோசிக்காத” என்றார்.

கௌரி எழுந்து சென்றான் கைகழுவ.

சுகுமாரி “அவனை விடு.. அவனுக்கு இதெல்லாம் புரியாது.” என்றார்.

வந்துவிட்டான் குடுமிக்காரன் “என்ன புரியாது.. இப்போவெல்லாம் கருணை.. காதல்.. ஐயோ பாவமெல்லாம் கிடையாது. இதுதான் உண்மை. அந்த பையன் கூட இருக்கணும்ன்னா.. நீங்களும் அவங்க பையனை பார்க்கணும்.. இதுதான் நிஜம்.. நீங்க அவங்களுக்கு ஒரு கனவு உலகத்தை தரீங்க.. அதை நம்ப வைக்கிறீங்க.“ என சஹாவை முறைத்துக் கொண்டு, காய்ந்தான் தன் அன்னையிடம்.

உண்மைதான் இவன் சொல்லுவது உண்மைதான். ஆனால், அதை பட்டவர்த்தனமாக ஒருவர் சொல்லி கேட்ட்க்கும் போது சஹாவின் மனது வலித்தது ‘ம்.. நிஜம்தான்.. எனக்கான உலகம் என இனி தனியாக ஏதுமில்லை.. காதல் நேசம் என்பதெல்லாம் இனி இரவல்தான் கிடைக்கும்.. உரிமையானது கிடைக்காது..’ என எண்ணம் எழ.. தைரியமானவள் என தன்னை எண்ணிக் கொண்டிருந்தவள் முகம் இறுகியது.

சுகுமாரி “டேய் அமைதியாக இரேன் டா..” என்றார், பெண்ணவளின் இறுக்கம் பார்த்து.

கௌரி ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றுவிட்டான்.

சுகுமாரி “சஹா, அப்படி எல்லாம் ஏதும் நடக்காது. நாங்க இருக்கோம்.. மித்ரன் தூங்கிட்டான் பாரு.. கொண்டு அவனை எங்கள் அறையில் விடு, நீயும் கொஞ்சம் படு.. அவங்க வர நாலுமணியாகும் ம்.. போ ம்மா” என்றார்.

சாகம்பரி ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றாள்.

சாகம்பரி, உறங்கவில்லை யோசனைதான் ‘என்ன எழுதி இருக்கோ நடக்கட்டும். அப்படிதான் கல்யாணமே நடக்கலைன்னா என்ன? எனக்கு மித்து இருக்கான்.. ப்ரீயா இருப்பேன்.. ம்.. அப்புறம் இவன், போடா.. இவன் பெரிய ஒழுங்கு என்னை சொல்ல வந்துட்டான்..’ என தன்னை சமாதானம் செய்துக் கொண்டு உறங்க முற்பட்டாள்.

மாலையில் தனபால் ரத்தினம் இருவரும் வந்து சேர்ந்தனர்.. வேலை முடித்து. அதன்பின் காபி குடித்து கிளம்பினர் மித்து, சஹா தனபால் மூவரும்.

மித்ரனுக்கு முழு ஆண்டு பரிட்சை தொடங்கியது. நேரம் அதில் சென்றது சாகம்பரிக்கு.

அடுத்து தினகரனின் திவசம் வந்தது.. எல்லோரும் கிளம்பி ஈரோடு சென்றனர். அங்கே குழந்தை.. தந்தைக்கு திதி கொடுத்தது. அடுத்த இரண்டுநாட்கள் அங்கே தங்கிவிட்டு மித்ரனை கூட்டிக் கொண்டு வீடு வந்தனர் சாகம்பரி வீட்டார்.

நாட்கள் அமைதியாக கடந்தது. யார் வாழ்விலும் ஏதும் மாற்றமில்லை. அவளும் சுகுமாரி வீட்டு சென்றுக் கொண்டும் வந்து கொண்டும் இருந்தாள். எப்போதாவது கௌரி கண்ணில் படுவதுண்டு.. முன்போல அவனும் முகம் திருப்பாமல் சிரிப்பான்.. கடந்திடுவான்.

ஆனால், அவள்மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்திருக்கிறது கெளரிக்கு. அவனை பெறுத்தவரை.. நடைமுறைக்கு ஒத்துவராத செயலை ஏற்று பொறுப்பாக செய்கிறாள். அதனால், தானும் தனக்கு வருபவன் பற்றி எதிர்பார்க்கிறாள்.. என அவனின் நல்ல மனம் அவளை பார்க்கும் போதெல்லாம் எடுத்து சொல்லும்.. அதனாலோ என்னமோ சின்ன புன்னகையோடு அவளை எதிர்கொள்கிறான் இப்போதெல்லாம்.

ஆகிற்று மித்ரன் UKG. முதல்நாள். ஜிகு ஜிகுவென புது யூனிபோர்ம்.. புது பாக்.. புது பாக்ஸ்.. புது ஷூ.. என எல்லாம் புதிதாக வாங்கிக் கொண்டு.. குழந்தை, தாத்தா பாட்டிக்கு டாட்டா சொல்லிவிட்டு சஹாவோடு வண்டியில் ஏறி கிளம்பினான்.

என்ன நடந்தது என தெரியவில்லை.. சாகம்பரியின் வண்டி நடுவழியில் நின்றுவிட்டது. சஹா இறங்கி நின்று டயரை பார்த்துக் கொண்டிருக்க.. அந்த வழியாக வந்த கெளரியின் கார். மித்ரனை பார்த்ததும்.. வேகத்தை குறைத்துக் கொண்டு.. ஓரமாக நிறுத்தினான், கௌரி. வானை பிளந்துக் கொண்டு வரும் மின்னல் எல்லாம் பூமியை காணத்தானே.. அப்படிதான் சட்டென வந்தான் எங்கிருந்தோ. ஏன் தினமும் வரவில்லை என கேட்க முடியாது.. இந்த மின்னல்காரன் மட்டும்.. கொஞ்சம் வித்யாசமானவன்.. அமைதியாக எதையும் ரசிக்க மாட்டான்.. இப்படி ஆர்பாட்டமாக தான் பார்க்கும் பூமியையும்.. தானிருக்கும் வானத்தையும் ஒரு உலுக்கு உலுக்கி.. தன் நேசத்தை ஊரறிய பிளந்து காட்டி மறைந்திடுவான். அதன்பின் வரும், இந்த இடி.. மழை.. காற்று.. எல்லாம் சாட்சிகள்தான். ஆக மின்னல்தான் காதல்நாயகன் இந்த பூமிக்கு.

கௌரி இறங்கி வந்து “ஹலோ” என்றான்.

சஹா சாதரணமாக திரும்பினாள்.. இவனை பார்த்ததும் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி “அஹ..” என்றாள் அனிச்சையாய்.

கௌரி “என்னாச்சு” என்றான், இயல்பாய்..

சாகம்பரிக்கு ஒரு பெரிய மூச்சு இழுத்துவிட்டு தன்னை சமன்செய்துக் கொள்ளவேண்டி இருந்தது.. பின் “நல்லா.. ஆணி ஏறியிருக்கு.. நானும் எடுக்க ட்ரை பண்றேன் முடியலை” என்றாள்.

கௌரி சிரித்தான். மித்ரனை பார்த்து “ஸ்கூல் போறீங்களா.. டைம் ஆகலை” என்றான்.

சாகம்பரி முறைக்க முடியாயாமல் “அப்பாவை கூப்பிடனும், டைம் ஆச்சே” என வண்டியின் சாவி எடுத்தாள்.

கௌரி “வாங்க நான் ட்ரோப் பண்றேன்” என்றான்.

சாகம்பரி அவன் சும்மா சொல்லுகிறானா.. இல்லை, உண்மையாகவே சொல்லுகிறானா என முகம் பார்த்தாள். 

கௌரி தன் விழிகளை உண்மைதான் என்பது போல.. தன் கருவிழியை.. வலபக்கம் அசைத்து நடுவில் நிறுத்தினான், அசையாது.. அவளை பார்த்து.

சாகம்பரி, நிமிர்ந்து அவனை பார்த்திருந்தவள்.. அவனின் அசையா பார்வையில்.. அசவுகரியமாக புன்னகைத்துக் கொண்டே கீழே குனிந்துக் கொண்டு.. “டைம் ஆச்சு.. உங்களுக்கு ஏதும் வேலை இல்லையே” என்றபடி மித்ரனின் பாக் எடுத்துக் கொண்டு, வண்டியை மர நிழலாக பார்த்து நிறுத்திவிட்டு.. குழந்தையை கையில் பிடித்துக் கொண்டே நகர்ந்தாள். 

கௌரி அவளின் செய்கைகளை பார்த்தபடி நின்றிருந்தான் ‘எத்தனை வேலை நொடியில்..’ என.

பின், அவளின் பேச்சு காதில் விழ கௌரியும் “அதனால்தானே கூப்பிட்டேன்.. இவன் பேரென்ன மறந்துட்டேன்” என்றபடி கார் லாக் எடுத்தான். இருவரும் ஏறி பின்னால் அமர்ந்தனர்.. ஒன்றும் சொல்லவில்லை, வண்டி எடுத்தான்.

சஹா “மித்ரன்.. “ என்றாள்.

கௌரி “என்ன படிக்கிற மித்ரன்” என்றான்.

மித்ரன் பதில் சொன்னான்.  

கௌரி “லெப்ட்டா.. ரைட்டா..” என வழி கேட்டான்.

அதன்பின் சாகம்பரி வழி சொல்ல ஸ்கூல் வந்து சேர்ந்தனர் மூவரும்.

சாகம்பரி மித்ரன் இறங்கிக் கொண்டு.. “இருங்க.. விட்டுட்டு வரேன்.. பத்து நிமிஷத்துக்கு மேல ஆகும்.. நீங்க பார்க் பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க” என்றாள்.

கௌரி “ம்.. அப்போ ஹல்ப் ஹௌர் ஆகும்.. ம்..” என காரின் ரிவேர்ஸ் கீர் போட்டான்.

சாகம்பரி “இல்ல, வந்திடுவேன்” என்றபடி புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றாள், மித்துவோடு.

மித்ரனின் வகுப்பை நோட்டிஸ் போர்டில் பார்த்து.. அந்த வகுப்பு எங்கிருக்கிறது என பார்த்து.. அவனை அங்கே சென்று விட்டாள்.. 

மித்ரன் “சஹா, நீ வெயிட் பண்ணமாட்டியா” என்றான் அழுகைக்கு தயாராணக் குரலில்.

சாகம்பரி “இல்ல இல்ல, வந்திடுவேன்.. உனக்கு இன்னிக்கு ஹல்ப்டே.. நான் போய் நம்ம வண்டியை பஞ்ச்சர் போட்டு வந்திடுவேன்.. பத்து நிமிஷம் அப்புறம், நான் இங்கதான் இருப்பேன்.. ம்.. அழாத.. எங்க சிரி..” என்றாள்.

மித்ரன் “மிஸ் யூ.. எனக்கு கிட்காட் வாங்கிட்டு வா.. ஒருநாள் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது.. மிஸ் யூ..” என சொல்லிக் கொண்டு வகுப்பின் உள் சென்றான் பெரியமனிதன்.

சாகம்பரி சிரித்துக் கொண்டே, அவன் செல்லுவதை பார்த்திருந்தாள்.. அவளுக்கும் சங்கடமாக இருந்தது.. அவனாவது அழுவது போல காட்டிக் கொண்டான்.. மிஸ் யூ.. சொன்னான், நான் என்ன செய்யமுடியும் என பார்த்துக் கொண்டே நின்றாள்.

அவனின் வகுப்பில் இருக்கும் டீச்சர் வெளியே வந்தார்.. அவரிடம் இரண்டொரு வார்த்தை பேசினாள் பெண். மீண்டும் ஒரமாக நின்றுக் கொண்டாள். மித்ரன் இப்போது இயல்பாகிவிட்டான்.. தன் நண்பர்களை பார்தததும்.. என்ன கலர் பாக்.. பாக்ஸ்.. என குழந்தைகள் எல்லாம் எதோ தங்களுக்குள் பேச தொடங்கிவிட்டது.

ஸ்கூல் பெல் ஒலித்தது.. வாட்ச்மேன், டீச்சர்ஸ்.. எல்லோரும், பெற்றோரை அங்கிருந்து கிளம்ப பணித்தனர். பிள்ளைகளின் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக அழுகுரல் கேட்கத்தான் செய்தது. முயன்று கேட்டின் வெளியே நின்றனர் பெற்றோர். 

சாகம்பரி வெளியே வந்தாள்.. கெளரியின் கார் எங்கே என தேடி சென்று.. அவன் பக்கமாக சென்று.. அந்த ஜன்னலை தட்டினால். கௌரி அதுவரை போன் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது காரை அன்லாக் செய்தான்.

சாகம்பரி முன்பக்கம் ஏறி அமர்ந்தாள் “தேங்க்ஸ் ங்க.. கரெக்ட் டைம்க்கு வந்தொட்டோம். உங்களுக்கு ஏதும் லேட் ஆகலையில்ல” என சொல்லிக் கொண்டே ஏறி அமர்ந்தாள்.

கௌரி ஏதும் பேசவில்லை தலையசைத்தான் ‘இல்லை’ என்பதாக. அதை அவளும் உணர்ந்துக் கொண்டாள்.

சாகம்பரி “அப்பாக்கு போன் பண்றேன்” என சொல்லி, தந்தையிடம் பேசினாள் ‘வண்டி இங்கே நிற்கிறது.. சுகு ஆன்ட்டி பையனோடு பள்ளி சென்றேன்..’  என விளக்கி சொல்லிக் கொண்டிருந்தாள்.

தனபால், ‘வண்டி அங்கேயே இருக்கட்டும் மெக்கானிக்கிடம் சொல்லுகிறேன்.. நீ கௌரியோடு வீடு வந்து சேர்’ என சொல்லி போனை வைத்தார்.

இப்போது சாகம்பரி “வீட்டில் விட்டுரீங்களா” என்றாள்.

கௌரி “ம்..சூயூர்..” என்றான்.

பின் இருவருக்கும், தாங்கள் இருவர் மட்டும்தான் இருக்கிறோம் என்ற  உணர்வில் பேச்சு வரவில்லை சற்று நேரம். பின் கௌரி “என்னாச்சு உங்க கல்யாண மேட்டர்” என்றான்.

சாகம்பரி “ம்… அப்படியே போகுது.. என்ன ஆகும்ன்னு தெரியலை” என்றாள்.

கௌரி “நீங்க ஏன் வேலைக்கு போகலை” என்றான்.

சஹா “மித்ரன் இருக்கானே.. அவனை பார்க்கவே டைம் சரியா இருக்கு.. மேல படிக்கனும்ன்னு நினைச்சேன்.. கோயம்புத்தூர் காலேஜ்ஜில் அப்லே பண்ணியிருந்தேன்.. ச்ச.. அக்கா எனக்கு பெரிய பொறுப்பாக கொடுத்துட்டு போயிட்டா” என்றாள் ரோட்டை பார்த்துக் கொண்டு, உயிர்ப்பில்லா குரலில்.

கௌரி “ம்.. யாரும் உங்களை கட்டாயப்படுத்தலையே.. இதெல்லாம் நீங்களாக எடுத்துக் கொண்டதுதானே. அதனால இது தியாகம் எல்லாம் இல்லை.. அவன் ஒன்னும் பச்சை குழந்தையில்லையே..  வளர்ந்துட்டான்.” என்றான் ஒருமாதிரி குரலில்.. இவளை குற்றம் சொல்லுவது போல.

சாகம்பரிக்கு கோவமாக வந்தது.. ‘இப்போதான் கிட்காட் சாக்லேட் கேட்டான் குழந்தை.. அதற்குள் அவன் வளர்ந்துட்டானாம்..’ என சிரிப்பாக வந்தது. பதில் சொல்லவில்லை அமைதியானாள். ‘நான் ஏன் இவனுக்கு விளக்கனும்’ என தோன்றியது. அமைதியகினாள் பெண்.

கௌரியும் ஏதும் பேசவில்லை.

இப்போது அவள் வீடு வந்தது.. கௌரி அவளை இறக்கிவிட்டான். சாகம்பரி “உள்ள வாங்க.. அப்பா கூப்பிட்டார்” என்றாள்.

கௌரி “இல்ல, இன்னொருநாள் வரேன், அப்புறம் நீங்க ஏதும் தப்பா நினைக்காதீங்க.. எனக்கு தெரிஞ்ச்சவங்க அப்படின்றதால கொஞ்சம் பேசிட்டேன்.. நீங்க..” என்றான்.. தயங்கிய குரலில்.

சாகம்பரி “ம்ஹூம்.. இதெல்லாம் கேட்கலைன்னாதான், என்னமோ போல இருக்கும்.. இது என ரொட்டீன் கேள்விகள்.. பரவாயில்ல..” என்றாள் புன்னகை முகமாக.

கெளரிக்கு அந்த புன்னகை வலியை தந்தது “பை..” என்றவன் கிளம்பிவிட்டான் தன் தலையை தேய்த்துக் கொண்டே. அவனுக்கே அவனின் பேச்சு பிடிக்கவில்லை.. என்ன மார்டன் சிந்தனை உன்னுடையது.. என்ன நினைப்பாள் அவள்..’ என தோன்றியது அவனுக்கு. ஒன்றும் புரியவில்லை தன்னுடைய நிலை என்ன என.. கெளரிக்கு. அவளை பார்க்கும் வரை.. அவள் நடைமுறைக்கு ஒத்துவராததை செய்கிறாள்.. என எண்ணினேன். அவளை பார்த்ததும் ஏன் இப்படி கேட்டேன் என அவனுக்கு குழப்பம்.. வீட்டிற்கு அதே குழப்பத்தோடு வந்து சேர்ந்தான்.

 

 

Advertisement