Advertisement

கௌரி “ம்மா, அதுக்குதான் இந்த ஏற்பாடா, சித்தப்பா.. எனக்கு மேரேஜ் ஐடியா எல்லாம் இல்ல.. நீங்க எங்க அம்மா பேச்சை கேட்டு ஏதும் ப்ளே பண்ணாதீங்க.. “ என்றான்.

அவனின் சித்தி “எப்படி கௌரி.. நீதான் பெரியவன்” என்றார்.

கௌரிசங்கர் “இல்லைங்க, எனக்கு இண்டரஸ்ட் இல்லை..” என்றவன் எழுந்து மேலே சென்றுவிட்டான்.

ரத்தினம் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.. எங்கேனும் மரியாதை இல்லாமல் கத்திவிடுவானோ என எண்ணி இருந்தவருக்கு, எப்படி மரியாதையாக பேசி சென்றது நிம்மதிதான்.

ரத்தினம் “அவன் என்னமோ அப்படியே சொல்லிட்டு இருக்கான்.. என்ன செய்ய முடியும், பார்த்துக்கலாம்” என்றார் பொதுவான குரலில்.

சுகுமாரி “என்னமோ போங்க..” என கண்களை கசக்கினார்.

ரத்தினத்தின் தம்பி மனைவி “ஜாதகம் பார்க்கலாம் அக்கா..” என தொடங்கி சுகுமாரியிடம் பேச தொடங்கினார். நேரம் சென்றது மதியம் விருந்து அமர்க்களப்பட்டது, கௌரி எல்லோருடனும் அமர்ந்து உண்டான்.. வந்திருந்த தன் சித்தப்பா மகனிடம் பேசிக் கொண்டே உண்டான். இயல்பாக இருந்தான். இரவு எல்லோரையும் ஈரோட்டில் உள்ள பெரிய உணவகத்துக்கு அழைத்து சென்றான் கௌரி. அன்னைக்கு சந்தோஷம்.. தன் கணவரை பெருமிதமாக பார்த்துக் கொண்டே அந்த நேரத்தை கடத்தினார் சுகுமாரி. அந்தநாள் இனிமையாக சென்றது.

மறுநாள் சஹா, மித்ரன், தனபால் என மூவரும் வந்தனர்.. ரத்தினம் வீட்டுக்கு.

தனபால், ரத்தினம் இருவரும்  அப்போதே கிளம்பி வெளியே சென்றுவிட்டனர். சஹாவும், மித்துவும் மட்டும் உள்ளே வந்தனர்.

மித்ரனின் கையில் சின்ன கிப்ட் இருந்தது. 

சுகுமாரிக்கு, சஹாவை பார்த்ததும் என்னமோ மனது சுறுசுறுப்பானது. மித்ரனிடம் “என்ன டா கையில்” என்றார்.

மித்ரன் “அண்ணாக்கு கிப்ட்.. சஹா கொடுக்க சொன்னால்” என்றான்.

சுகுமாரி ‘ஓ.. அண்ணாவா’ என மனதில் எண்ணினாலும் என்ன செய்ய முடியும் என அமைதியாக “போ.. மேலேதான் இருக்கான் கௌரி கொடுத்துட்டு வா..” என்றார்.

மித்ரன் “ம்கூம்.. சஹா மேலே போக கூடாதுன்னு சொல்லியிருக்கா.. நான் எதையாவது செய்து, அண்ணாவை டிஸ்டர்ப் செய்வேனாம்” என்றான் பெரிய மனிதனாக.

சாகம்பரி சிரித்தாள்.

சுகுமாரி “ஏன் சஹா” என்றார்.

சாகம்பரி “அவனுக்கு தெரியனுமில்ல.. சொல்லி கொடுக்கலாமே ஆன்ட்டி.. அவங்க கீழ வரட்டும் கொடுப்பான்” என்றாள்.

சுகுமாரி, மித்ரனுக்கு கேக்.. பழசாறு என கொடுத்து.. சாகம்பரிக்கு என்ன வேண்டும் என கேட்டு அவளையும் கவனிக்க தொடங்கினார்.

மித்ரன் அன்று உடைத்த போட்டோவை இரண்டுநாளில் பிரேம் போட்டு கொடுத்திருந்தாள் சஹா. அதை பார்த்த மித்ரன் “சஹா, நம்ம கொடுத்துதானே..” என அந்த புகைபடத்தை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான். 

சாகம்பரி “நீ உடைச்சது.. நம்ம சரி செய்து கொடுத்தது டா” என்றாள்.

மித்ரன் ஏதும் சொல்லாமல் கேட்டுக் கொண்டான்.

சுகுமாரி “எல்லாம் ஞாபகம் இருக்கு உனக்கு” என தன் மகனை பற்றி பேச தொடங்கினார் “ம்.. உன்னை போல்தான்.. கெளரிக்கும் நல்ல ஞாபகம் இருக்கும்.. ஸ்கூலில் அவன்தான் பிர்ஸ்ட் மார்க்.. உன்னை போலவே துருதுருன்னு இருப்பான்.. அவன் டீச்சர் எல்லாம் உங்க பையன் சமத்து..” என சொல்லிட்டே இருப்பாங்க என மித்ரனிடம் பேசிக் கொண்டிருந்தார் சஹாவை பார்த்துக் கொண்டே.

சாகம்பரிக்கு ‘க்கும், இதுவேறயா..’ என எண்ணிக் கொண்டு டிவியில் கவனத்தை செலுத்தினாள்.

கெளரிசங்கர் இறங்கி வந்தான்.. ஏதும் பேசாமல்.. கண்டுக் கொள்ளாமல் கடந்து செல்ல நினைத்தான் அவன்.

ஆனால், சுகுமாரி “கௌரி, இந்த பெரியமனுஷன் உனக்கு கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கான் டா” என்றார்.

கௌரி நின்றான்.

மித்ரன் சோபாவில் அமர்ந்தபடியே, எதோ பதட்டத்தோடு பார்த்தான் கெளரியை.

கௌரி சிரிக்கவில்லை அப்படியே வந்து தன் அன்னையின் அருகே அமர்ந்தான்.

சுகுமாரி தன் மகனிடம் “பேசு கௌரி, அவன்கிட்ட பயப்படுறான் பாரு” என்றார்.

கௌரி இப்போதுதான் சிரித்தான் மித்ரனை பார்த்து.. மித்ரனும் சிரித்தான். கௌரி “ம்.. உன் பேரென்ன” என்றான். அருகில் உள்ள சோபாவில் சஹா அமர்ந்திருக்கிறாள் என கவனமே கொள்ளாமல்.. அவளை கண்டுக் கொள்ளாமல் பேசினான்.

மித்ரன் “மித்து.. மித்ரன்” என்றான்.

கௌரி “ம்.. என்ன படிக்கிற” என்றான்.

மித்ரன் “ம்.. LKG” என்றான்.

சஹா “ம்.. கிப்ட் கொடு” என்றாள்.

டீபாய் மேலிருந்த அந்த கிப்ட் எடுத்து குழந்தை, கெளரியிடம் கொடுத்தது. கௌரி அப்படியே பார்த்தான்.

சஹா என்னவென எண்ணி “விஷ் பண்ணு மித்து” என்றாள்.

மித்ரன் “ஹாப்பி பர்த்டே கௌரி அண்ணா” என்றான் தெளிவான வார்த்தைகளால் அழுத்தி சொன்னான்.

கெளரிக்கு முகம் இதமானது.. “தேங்க்ஸ். ம்.. எல்லாம்.. உங்க ம்மா சொன்னால்தான் ஞாபகம் வருமா உனக்கு” என கேட்டுக் கொண்டே அந்த கிப்ட் வாங்கினான் கௌரி.

மித்ரன் “சஹா என் அம்மா இல்ல..” என்றான், சிரித்துக் கொண்டே எதார்த்தமாக சொன்னான் குழந்தை.

அந்த கிப்ட்’டை பிரித்துக் கொண்டிருந்தவன் கை.. சட்டென அவனையும் அறியாமல் ஸ்தம்பித்தது.. கெளரிக்கு. பின் தன் வேலையை பார்த்தான். அந்த கிப்ட் ஒரு கூலர்.. ப்ரௌன் நிற கூலர். பெரிய ப்ரண்ட் என இல்லை.. ஆனாலும், ஒரு ஆடவனுக்கு கொடுக்க கூடியதாக இருந்தது.. அந்த பரிசு. கெளரியின் கண்கள் அதை பார்த்து மெச்சியது.. மேலும், அந்த சிறுவன் சொன்ன பதிலும் ஒரு ஊகத்தை கொடுக்க.. “என்ன உங்க அப்பா வாங்கி கொடுத்தாரா.. எங்க உங்க அப்பா” என்றான் சிறுவனை பார்த்து.

மித்ரன் “அப்பா… ம்.. அப்பா அம்மா எல்லாம் சாமிகிட்ட போய்ட்டாங்க..” என சொல்லிக் கொண்டே சாகம்பரியிடம் சென்று அமர்ந்துக் கொண்டான்.

சுகுமாரி இப்போது வெளியே வந்தார்.. மகனிடம் கண்ணால் எதோ ஜாடை காட்டினார்.. கௌரி அதை பார்த்துவிட்டு.. அமைதியாகினான். பின், மித்ரனை பார்த்து “ம்..  கிப்ட் சூப்பர். தேங்க்ஸ்” என சொல்லி எழுந்துக் கொண்டான்.

மித்ரன் “வெல்கம்..” என்றான் புன்னகை முகமாக. பின் “நான் பர்த்டே விஷ் பண்ணேன்.. சாக்லேட் கொடுக்கமாடீங்களா” என்றான்.. கெளரியை செங்குத்தாக நிமிர்ந்து பார்த்து.

கெளரிக்கு சிறுவனின் பேச்சில் அனிச்சையாய் சிரிப்பு வந்தது.. “அதான் கேக் கொடுத்தாங்களே எங்க அம்மா” என்றான். பின் கௌரி ‘அம்மா’ என சொன்னதற்கு வருத்தம் கொண்டு “சுகுவை.. நீ எப்படி கூப்பிடுவ” என்றான்.

மித்ரன் “அது பாட்டி கொடுத்தாங்க.. நீங்க” என்றான்.. இன்னும் சாக்லெட் வேண்டும் என பாவனையில்.

சஹா “டேய்.. எக்ஸாம் இன்னும் முடியலை.. இப்போது சாக்கி கிடையாது” என்றாள்.

மித்ரன் இப்போது ஏதும் சொல்லாமல், சஹாவின் போனை வாங்கிக் கொண்டு, கெளரியை நிமிர்ந்து முறைத்து பார்த்தபடி.. மற்றொரு சோபாவில் அமர்ந்து போன் பார்க்க தொடங்கினான்.

கெளரிக்கு, சிறுவனின் பார்வையில் என்னமோ போலானது.. ‘அய்யோ பையனுக்கு, ஒரு சாக்லெட் வாங்கி கொடுக்கணுமோ..’ என தோன்றியது அவனின் பார்வையில்.

கௌரி “சரி வா.. சாக்லேட் வாங்கிட்டு வரலாம்” என்றான்.

சஹா “இல்ல, இல்லைங்க.. அவனுக்கு இப்போதுதான் உடம்பு சரியாகி இருக்கு.. இன்னொருநாள் பார்க்கலாம்” என்றான்.

கௌரி “என்ன மித்ரன் அப்படியா.. இவங்க உன் கார்டியனா, உனக்கு உடம்பு சரியில்லை சொல்றாங்க” என கேள்வி கேட்டான்.

சுகுமாரி “டேய்.. என்ன டா, பேசற” என்றார் அதட்டலாக.

மித்ரன் விசுக்கென நிமிர்ந்து “அவ சஹா.. கார்ட்..டின்.. இல்ல..” என்றான் அழுத்தமான மழலைக் குரலில்..

சுகுமாரி பிரிட்ஜ்ஜில் இருந்து ஒரு சாக்லெட் எடுத்து வந்து மகனின் கையில் கொடுத்து கொடுக்க செய்தார்.

கௌரியும், மித்ரனிடம் கொடுக்க.. மித்ரன் சஹாவை பார்த்தான். சஹா, கண்ணசைக்க.. மித்ரன் வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ்..” என்றான்.

கௌரி, அந்த குழந்தையை கண்ணசைவில் கட்டி வைத்திருப்பவள் எப்படி இருப்பாள் என மனம் குறுகுறுக்க.. பக்கவாட்டில் திரும்பி பார்த்தான் சாகம்பரியை.

சாகம்பரி அவனின் பார்வையில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள்..” என்றாள்.

கௌரி “..ம்.. நன்றி” என ஏற்றுக் கொண்டான்.. சட்டென அவளின் கண்களை பார்த்தான். அவளின் கண்களை பார்க்க முடியவில்லை.. என்னமோ சுடர்தரும் விழிகள் போல மின்னியது.. அதன் ஒளியில், அவளின் பொன் முகமும் மின்னியது. சாந்தமான கருவிழிகள்.. அவனை நேராக நோக்க.. என்னமோ அதில் அமிழ தோன்றியது.. உச்சி குடுமிக்காரனுக்கு.. பேச்சோ.. வேறு பக்கம் பார்வையோ செல்லவில்லை அவனுக்கு.

சஹா, தன் பார்வையை திருப்பிக் கொண்டு.. கிட்சென் சென்றுவிட்டாள்.

கௌரி, சுதாரித்து மேலே சென்றான். ஆனால், ‘யாரிவள்.. இந்த சிறுவன் யார்’ என கேள்வி விழுந்தது அவனுள்.

Advertisement